நியூஸ் கிளிக் என்ற வலைதள ஊடகத்தின் நிறு வனரும் முதன்மை ஆசிரியருமான பிரபீர் புர்காயஸ் தாவையும் அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி அமித் சக்கரவர்த்தியையும் 03.10.2023 அன்று புதுதில்லியில் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் தில்லி காவல் துறையினர் கைது செய்து, ‘உபா’ (UAPA) உள்பட பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர்.

தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு 2009 முதல் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் செய்திகளைத் திரட்டி, ஆங்கிலத்திலும், இந்தியிலும், மராத்தியிலும் செய்திகளை விமர்சனங்களுடன் வெளியிட்டுக் கொண்டுள்ள வலைதளச் செய்தி ஊடக நிறுவனம் ‘நியூஸ் கிளிக்’ ஆகும். பிரபீர் புர்காயஸ்தாவையும் அமித் சக்கரவர்த்தியையும் 03.10.2023 அன்று கைது செய்த தில்லி காவல் துறையினர் 13.10.2023 வரை கைது செய்த தற்கான காரணத்தை முறைப்படி எழுத்து மூலம் அவர்களுக்குத் தெரிவிக்கவில்லை; முதல் தகவல் அறிக்கையின் நகலையும் அவர்களுக்கு அளிக்கவில்லை. 04.10.2023 அன்று காவல் துறையினர் கோரியபடி தில்லி சிறப்பு நீதிமன்றம் அவர்களைச் சிறையிலிட உத்தரவிட்டது தவறு என தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். ஆனால் 16.10.2023 அன்று உயர்நீதிமன்றம் இதில் தலையிட மறுத்து விட்டது.

எனவே பிரபீர் புர்காயஸ்தாவும் அமித் சக்கரவர்த்தியும் தங்களைச் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்தது தவறு என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இவ்வழக்கு நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் பி.கே. மிஸ்ரா அமர்வு முன்னிலையில் 19.10.2023 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தில்லி காவல் துறையினரால் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் அமித் சக்கரவர்த்தி ஆகிய இருவர் மீதும் சீனாவில் இருந்து நியூஸ் கிளிக் நிறுவனம் நிதி பெற்றது என்றும் சீனாவிற்குச் சார்பாக கருத்துப் பரப்புவதற்காகத்தான் நிதி பெறப்பட்டது என்றும் உபா (UAPA) சட்டத்தின் பிரிவுகள் 13, 16, 17, 18 மற்றும் 22இன்கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்காக நிதி திரட்டியது எனவும் இ.த.ச. பிரிவு 153ஏஇன்படி வேறுபட்ட மதக்குழுவினரிடையே பகைமையை வளர்த்தாகவும், 120பிஇன்படி குற்றவியல் சதித் திட்டம் தீட்டியதாகவும், 2019-20இல் தில்லியில் நடந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரானப் போராட்டத்தையும் 2020-21இல் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தையும் தொடர்ந்து நீடிக்கத் தூண்டியதாகவும் அப்போது இன்றியமையாப் பண்டங்கள் வரத்திற்கு இடைஞ்சல் விளைவித்ததாகவும், நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் விரோதமாகச் செயல்பட்டதாகவும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது. எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் எதுவும் காட்டப்படவில்லை; குற்றச்சாட்டுகளும் திட்டவட்டமாகவோ, தெளிவாகவோ இல்லை.agitation for press freedomமுதலில் சிறையில் தள்ளிவிட வேண்டும்; பின்னர் விசாரணை-தீர்ப்பு என்பதே ஒன்றிய அரசின் நேரடிக் காட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல் துறையினரின் நோக்கம் ஆகும்.

நியூஸ் கிளிக் நிறுவனத்தின் தில்லி அலுவலகத்தில் இருந்த மின்னணு சாதனங்கள் தில்லி காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு அதன் முன்வாயிலை மூடி, முத்திரையிடப்பட்டது. அந்நிறுவனத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் வீடுகள் சோதனையிடப்பட்டன. 46 பேர்களிடமிருந்து கைப்பேசிகள், மடிகணினிகள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிரபீர் புர்காயஸ்தா, காவல் துறையினர் குற்றச் சாட்டுகள் அனைத்தும் பொய்யாக இட்டுக்கட்டப்பட்டவை, போலியானவை, அடிப்படையற்றவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் சீனாவிடமிருந்து ஒரு காசும் பெறவில்லை என்றும் மறுத்துள்ளார்.

பா.ச.க. மோடி அரசின் திறமையற்ற ஆட்சியையும் மோடியின் நண்பர்களாக உள்ள கார்பரேட்டு தொழில்­வணிகக் குழுமங்களுக்குச் சாதகமானச் செயல்பாடுகளையும் இந்துத்துவ சக்திகளின் மேலாதிக்கத்தையும் விமர்சனம் செய்பவர்களை அச்சுறுத்துவதற்காக வகுத்தளிக்கப்பட்ட - கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறை போலீசு இராச்சியத்தின் கயமையான, அறிவற்றச் செயல்களின் வெளிப்பாடே மேற்சொன்ன நடவடிக்கைகளாகும்.

நடந்தது என்னவென்றால், 2018 மார்ச்சில் அமெரிக்காவில் பணக்கார வணிகரான நவெலிராய்சிங்கம் என்பவருக்கு உரிமையான டபுள்யூ.எம்.எச். (World Media Holding) என்ற அமெரிக்க நிறுவனம், நியூஸ் கிளிக் நிறுவனத்தில் முதலீடு செய்தது. அந்த முதலீடு இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டுச் செய்யப்பட்டதாகும். W.M.H. என்ற நிறுவனம் பி.எஸ்.எப். (People’s Support Foundation) என்ற அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

நியூஸ் கிளிக் நிறுவனம் W.M.H. நிறுவனத்திடமிருந்து முதலீடு பெற்றது தொடர்பாக 2021இல் பொருளாதாரச் சட்டச் செயலாக்கத் துறை (E.D.) மற்றும் வருமான வரித் துறையும் சோதனை நடத்திய போது நியூஸ் கிளிக் நிறுவனம் முதலீடு பெற்றது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அளித்தது.

இப்போது நியூயார்க் டைம்ஸ் எனும் அமெரிக்க நாளேட்டில் 05.08.2023 அன்று வெளியிட்டச் செய்தி, நவெலிராய் சீனாவிடமிருந்து நிதி பெற்றிருக்கலாம் என்று கருதும்படியானதாக இருந்தது. ‘நியூயார்க் டைம்ஸ் வேண்டுமென்றே தவறான செய்தி வெளியிட்டுள்ளது’ என நவெலிராய் கூறுகிறார். ‘அந்தச் செய்தியில் உள்ளதை முழுமையாக மறுக்கிறேன்’ என்றும் கூறியுள்ளார். நியூயார்க் டைம்ஸில் வெளியான இந்தச் செய்தியின் அடிப்படையில் தான் தில்லி காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தகர்ப்புக்கு உள்ளாகியுள்ள நான்காவது தூண்

சனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் பத்திரிகைகள் - செய்தி ஊடகங்கள் ஆட்சியா ளர்களின் மிரட்டல்கள், நெருக்குதல்கள் இல்லாமலும் இந்துத்துவ சேனைகளின் அச்சுறுத்தல்கள் இல்லாமலும் சுதந்திரமாக இயங்க முடிகிறதா என்பதே வினா? நேர்மையாகவும் அச்சமின்றியும் செய்திகளையும் அரசியல், பொருளியல், சமூக நடப்புகளைத் திறனாய்வு செய்து, கருத்துகளை வெளியிடும் விரல் விட்டு எண்ணக் கூடிய சில நாளேடுகள், வார-மாதப் பருவ இதழ்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் வலைதள ஊடகங்களை ஆட்சியதிகாரத்தில் உள்ளோர் பகையாகக் கருது கிறார்கள். இத்தகைய சுதந்திரமான ஊடகங்களின் குரல்களை ஒடுக்கிட பல வழிகளில் அச்சுறுத்தப்படுகின்றன.

நியூஸ் கிளிக் நிறுவனத்திற்கு எதிரான ஒன்றிய அரசின் காவல் துறை நடவடிக்கையை இந்தியச் செய்தியாசிரியர்கள் சங்கம் (Editors Guild of India), நியூயார்க்கில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு (Committee to Protect Journalist) முதலான அமைப்புகள் கண்டித்துள்ளன. நியூஸ் கிளிக் ஊடகத்தின் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் அமித் சக்கரவர்த்தி இருவரையும் உபா (UAPA) சட்டத்தின்கீழ் தில்லி காவல் துறை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து இந்தியப் பத்திரிகையாளர் சங்கம் (Press Club of India) 05.10.2023 அன்று புதுதில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தின் போது ‘தி ஒயர்’ செய்தி ஊடகத்தைச் சேர்ந்த சித்தார்த் வரதராசன், 16 ஊடக நிறுவனங்கள்-பத்திரிகையாளர் அமைப்புகள் கூட்டாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தையும் படித்துக் காட்டினார். இடதுசாரி மாணவர்களும் குடிமைச் சமூகத்தினரும் ஆர்ப் பாட்டம் நடத்தினர். 11.10.2023 அன்று சென்னையில் பத்திரிகையாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ரொமிலா தாப்பர் உள்ளிட்ட 700 புகழ்பெற்ற இந்தியக் குடிமக்கள் கூட்டாக சுதந்திரச் செய்தி ஊடகமான நியூஸ் கிளிக் நிறுவனத்திற்கு ஆதரவு தெரிவித்து 16.10.2023 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பத்திரிகைச் சுதந்திரத் தரவரிசையில் இந்தியா

ஆண்டுதோறும் உலகப் பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டுத் தரவரிசை-மொத்தம் 180 நாடுகளின் நிலை நிரல்படுத்தபபட்டு வெளியிடப்படுகிறது. அவற்றுள் இந்தியாவின் நிலை :

ஆண்டு  - தர இடம் 

2002  - 80 

2012  - 131 

2017  - 136 

2018  - 138 

2019  - 140 

2020  - 142 

2022  - 150 

2023  - 161 

2002இல் 80ஆம் இடத்தில் இருந்த இந்தியா 10 ஆண்டுகளில் 2012இல் 51 நாடுகளுக்குக் கீழே இறக்கம் கண்டது. அடுத்த 10 ஆண்டுகளில். 2022இல் 19 நாடு களுக்குப் பின் எனச் சரிந்துள்ளது. கடந்த ஒரே ஆண்டில் 11 நாடுகளுக்குக் கீழே தரவரிசையில் 161ஆம் இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது. அரசியல், பொருளியல், நாடாளுமன்ற, சட்டமன்றச் செயல்பாடுகள், சமூகவியல், பாதுகாப்பு எனப் பல கூறுகளின் அடிப்படையில் கணிக் கப்பட்டு மேற்படித் தரநிலை வரிசைப்படுத்தப்படுகிறது. இதில் தாலிபான்கள் ஆட்சி நடத்தும் ஆப்கனிஸ்தானை

(152) விட இந்தியா 9 இடங்களுக்குக் கீழே உள்ளது. இதுபோல் உலக அளவில் நடத்தப்படும் ஆய்வுகளைப் பொய்யானவை என்று ஒன்றிய அரசு கூறி மழுப்பி வருகிறது.

ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் பா.ச.க. நரேந்திர மோடி அமர்ந்த 2014க்குப் பின் மோடியின் நண்பர் முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் 70 தொலைக் காட்சி ஊடகங்கள் இயங்குகின்றன. இவற்றை 80 கோடி மக்கள் காண்கின்றனர். 1996 முதல் இயங்கி வரும் இந்த ஊடகங்கள் 2014இல்தான் முகேஷ் அம்பானியின் கைக்கு மாறின. என்.டி.டி.வி (நியு டெல்லி டெலிவிஷன்) 1988 முதல் இயங்கி வருகிறது. பல ஊழல்களை வெளிக்கொணர்ந்து, அதற்காக விருது பெற்ற ஊடகம். 2022இல் நரேந்திர மோடியின் அணுக்க நண்பர் கவுதம் அதானிக்குக் கைமாறியது. இந்த ஊடகம் 14.01.2023இல் வெளியான இன்டன்பர்க் ஆய்வறிக்கைப் பற்றி விவாதிக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா?

நியூஸ் கிளிக் போன்ற சில ஊடகங்களே கார்பரேட் ஊடகங்கள் வெளியிடாத பல செய்திகளை மக்களுக்குத் தந்து கொண்டுள்ளன. அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள், வலைதள ஊடகங்களுக்கு மோடி அரசு அரசியல் உள்நோக்கத்துடன் பல கட்டுப்பாடுகளை அதிக அளவில் விதித்து வருகிறது. ஒன்றிய மோடி அரசின் தவறான கொள்கைகளை விமர்சிக்கும் ஊடக வியலாளர்களுக்கு ‘தேச விரோதி’ என முத்திரை குத்தி, தேசத் துரோக வழக்கு, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு, அவதூறு வழக்கு என பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.

பி.பி.சி. நிறுவனம், 2002இல் குசராத்தில் இசுலாமியர் களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத் அமைப்பினர் நடத்திய கொடிய வன்முறையை நரேந்திர மோடி தலைமையில் இருந்த குசராத்து மாநில அரசு தடுத்திட முயலவில்லை என்பது பற்றி ஆவணப் படம் தயாரித்து, India : The Modi Question என்ற பெயரில் முதல் பகுதியை 17.01.2023இலும் அதன் 2ஆம் பகுதியை 24.01.2023இலும் வெளியிட்டது. அதற்கு எதிர்வினையாக நரேந்திர மோடி அரசின் வருமான வரித்துறை யினர் 14.02.2023 அன்று பி.பி.சி.இன் புதுதில்லி, மும்பை அலுவல் இடங்களை வரிஏய்ப்பு நடந்துள்ளதாகச் சோதனை செய்தது.

கொல்லப்படும், சிறையிலிடப்படும் பத்திரிகையாளர்கள் :

2014-19க்கு இடையில் 40 பத்தி ரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 198 பத்திரிகையாளர்கள் மீது கடுமை யானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றுள் 2019இல் மட்டும் 36 தாக்கு

தல்கள் நடத்தப் பட்டுள்ளன. 2019 நாடாளுமன்றத் தேர்தல் நடந்த ஆண்டு ஆகும். வன்முறையை நிகழ்த்திய வர்கள் காவல் துறையினர், அரசியல் குண்டர்கள், குற்றவியல் கும்பல்கள், ஊழலில் திளைக்கும் உள்ளூர் அதிகாரிகள் என்பது வெளிப்படை.

2013ஆம் ஆண்டில் 8 பத்திரிகையாளர்கள் கொல்லப் பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 3 அல்லது 4 ஊடக வியலாளர்கள் கொல்லப்படுகின்றனர். எல்லா கொலை களும் வன்முறைத் தாக்குதல்களும் பத்திரிகையாளர்கள் மேற்கொண்டுள்ள தொழில் காரணமாக நடந்தவை ஆகும். 07.02.2023 அன்று சாக்ஷிகாந்த் வாரிஷி என்பவர், நாக்பூரைச் சேர்ந்த உள்ளூர் மராத்தி நாளேட்டில் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்திற்கு உள்ளூர் மக்களின் எதிர்ப்புப் பற்றி செய்திக் கட்டுரை எழுதினார். அந்த நாளேட்டில் அச்செய்தி வந்த அன்றே, பட்டப் பகலில் ஊர்தி ஏற்றி அவர் கொல்லப்பட்டார்.

உலகத்திலேயே இந்தியா பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு என்று பெயர் பெற்றுள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் மிகவும் அதிகத் தொல் லைக்கு உள்ளாகின்றனர். பத்திரிகையாளரும், கட்டு ரையாளரும், எழுத்தாளருமான சாகரிகா கோஸ், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆலோசனை ஆசிரியர். அவருக்கு இணைய வழியாக கற்பழிப்பு, கொலை மிரட்டல் எனத் துன்புறுத்தல் தரப்படுகிறது.

அரசின் கொள்கைகளை விமர்சித்தவரும் மக்கள் குரலை எதிரொலித்தவருமான பத்திரிகையாளர் இரவீஷ் குமார் 26 ஆண்டுகளாக என்.டி.டி.வி.இல் பணியாற்றிய மூத்த நிர்வாக ஆசிரியர். அப்பொறுப்பிலிருந்து விலகச் செய்யப்பட்டார். 2018 செப்டம்பரில் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ உரிமையாளர் ஷோபனா பார்டியா, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த சிறிது நேரத்தில் அந்த ஏட்டின் ஆசிரியராக இருந்த பாபிகோஷ் பதவி விலகினார்.

2011க்குப் பின் கைது செய்யப்பட்ட 31 பேர்களில் 29 பேர்கள் மீது அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப் பட்டனர். 2021, 2022 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 7 பேர் என சிறையில் தள்ளப்பட்டனர். 2011க்குப் பிறகு கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களில் 93 விழுக்காட்டினருக்கு பேர்களுக்கு எதிராக, அரசுக்கு எதிரானச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளனர். 2021இல் கைது செய்யப்பட்ட 7 பேர்களில் 6 பேர்கள் மீது அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன.

2010-2020 பத்தாண்டில் ‘பேச்சுச் சுதந்திரக் கூட்டகம்’ (Free Speech Collective) அமைப்பும் ‘சிறைக் கம்பிகளுக்குப் பின்னால்’ (Behind Bars) அமைப்பும் நடத்திய ஆய்வுப்படி 154 பத்திரிகையாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். 9 வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

‘காஷ்மீர் செய்திகள்’ ஏட்டின் செய்தியாளர் ஆசிப் சுல்தான் 27.8.2018 முதல் சிறையில் உள்ளார். ‘தி காஷ்மீர் வாலா’ ஏட்டின் ஆசிரியர் பகத்ஷா 04.02.2022 முதல் சிறையில் உள்ளார். மற்றும் ரூபாஷ் குமார், சஜ்ஜத்குல், இர்பான் மெகராஜ், மனன்தர் முதலானோர் காஷ்மீரில் செய்தி சேகரித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சந்தோஷ் யாதவ் என்பவரை 2015இல் கைது செய்து சிறையில் வைத்து 02.01.2020இல் விடுதலை செய்யப்பட்டார்; 16 பேர் ‘உபா’ சட்டத்தில் சிறையில் உள்ளனர்; சித்திக் கப்பன் (உபா) 2 ஆண்டுகள் சிறையில் இருந்த பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்; ‘உபா’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 7 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் சிறையில் உள்ள பத்திரிகையாளர் பட்டியல் நீள்கின்றது. இப்படியாக சிறையில் உள்ளவர்கள், கொல்லப்பட்டவர்கள், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் - யார், யார்? எப்படி, எப்படி துன்புறுத்தப்பட்டனர் என்றுள்ள விவரங்களைத் தொகுத்தால் ஒரு நூல் ஆகிவிடும்.

மோடி அரசு பெரிய செய்தி ஊடகங்களை ஆளுவோ ருக்கு இசைவாக செயல்பட ஏற்பாடு செய்துவிட்டப் பின்னரும் சிறு ஊடகங்களையும், வலைதள ஊடகங் களையும் நசுக்கிட முரட்டுத்தனமானச் செயல்களை ஒளிவுமறைவு இன்றி அரசின் துறைகளை அடக்கு முறை ஆயுதங்களாகப் பயன்படுத்தி வருகிறது.

ஒருமுறை பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்கப் பட்ட ஒரு வினாவிற்கு, “பத்திரிகையாளர்களைச் சமாளிப்பதில் பலவீனமாக உள்ளேன்” என்று தன் கருத்தை மறைக்காமல் வெளிப்படுத்தினார். ஆனால் உண்மையில்-நடப்பில் மோடி அரசுதான் சட்ட விரோதமாக நடந்து கொள்கிறது. பத்திரிகைகள் ­ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் வேறுபட்ட இரு மத, இனக் குழுவினருக்கு இடையில் பகைமையை வளர்த்து, அமைதியைக் குலைப்பதாக அரசு குற்றஞ் சாட்டுகின்றது. மாறாக இந்துத்துவக் குழுக்கள், பா.ச.க.வினர் ஆட்சிப் பதவிகளில் இருப்பவர்கள் ஆகியோரின் வெறுப்புப் பேச்சுகள் அல்லவா பகைமையை மூட்டுகின்றன? அமைதியை குலைக்கின்றன?

சனநாயக நாட்டில் மக்களுக்குச் செய்திகளையும், தகவல்களையும் தரும் தூதுவர்களாக விளங்கும் பத்திரிகையாளர்கள் அச்சமின்றி தங்கள் பணிகளைச் செய்ய முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. ஊடகங்கள் வெளியிடும் செய்திகளின் நம்பகத்தன்மை மிகவும் குறைந்து வருகிறது. 2012 முதல் வளர்ந்து வரும் வலைதள ஊடகங்களே மக்களின் நம்பிக்கையைப் பெற்று வருகின்றன. அரசியல் மற்றும் நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்கும் ஆளுமை வழிபாட்டைப் பேணுவதற்காகவும் மாறுபட்ட கருத்துகளை அடக்கு வதில் மோடி அரசு மிகவும் முனைப்புடன் இருப்பதில் வியப்பில்லை. மோடி அரசு விரைந்து முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை மிகுந்து வருகிறது. “எதிர்காலம் இந்த (மோடி) அரசை மன்னிக்காது” என்று இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பினாய் விசுவம் கூறியுள்ளது உண்மையாக வேண்டும்.

- சா.குப்பன்

Pin It