பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமத்துவத்தின் பொருளை அதன் உண்மையான, விரிவான உணர்வில் விவரிக்கும் ஒரு தீர்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இங்கு EWS வழக்கின் பெரும்பான்மைத் தீர்ப்பைக் குறிப்பிடவில்லை. ஆனால் நீதிபதிகள் ரவீந்திர பட், யு,யு லலித் ஆகியோர் வழங்கிய சிறுபான்மைத் தீர்ப்பு குறிப்பிடப் படுகிறது. இது ஒரு மாற்றுக் கருத்து கொண்ட, சிறுபான்மைத் தீர்ப்பாக இருக்கலாம், ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தின் மையமாக இருக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்த போராடுவதற்கான வலிமையை அளிக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தில் 15 (6), 16 (6) ஆகிய இரு புதிய உட்பிரிவுகள பிரிவுகளைச் சேர்க்கும் 103 ஆவது திருத்தம், EWS பிரிவினருக்கு கல்வி நிறுவனங்களிலும், பொது வேலைவாய்ப்பிலும் 10% இட ஒதுக்கீடு தருகிறது. EWS இட ஒதுக்கீடு SC, ST, OBC வகுப்பினரை வெளிப்படையாக விலக்குகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம். திரிவேதி, ஜே.பி. பர்திவாலா ஆகியோரின் பெரும்பான்மைத் தீர்ப்பு 103 ஆவது, திருத்தத்தின் அரசியலமைப்பு செல்லுபடித்தன்மையை உறுதிப் படுத்தியது. SC, ST, OBC வகுப்பினருக்கு 15(4), 15(5), 16(4) ஆகிய பிரிவுகளின் கீழ் இட ஒதுக்கீடு இருப்பதால், அத்தகைய விலக்கு நியாயமானது என்று கூறியது.சமத்துவ விதியை வெறுமனே மீறுவது, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாக இல்லை. அம்மீறல் அதிர்ச்சியளிக்கும் வரை, சமநீதியின் மனசாட்சியற்ற அல்லது நேர்மையற்ற கேலிக்கூத்தாக இல்லாதவரை, அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மிதமானதாக மாற்றியமைக்கப்பட்டால், அது அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கொள்கைகளையும், அடிப்படைக் கட்டமைப்பையும் மீறுகிறது என்று கூற முடியாது என்கின்றனர் பெரும்பான்மைத் தீர்ப்பு வழங்கியோர்.
அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமத்துவத்தின் உத்தரவாதத்தை மீற முடியுமா, அப்படி மீறினால் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அடையாளம் நிலைத்திருக்குமா? அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை ஒருபோதும் சீர்குலைக்கவோ அல்லது மாற்றவோ முடியாத அளவுக்கு சமத்துவம் அதன் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இட ஒதுக்கீட்டிற்கான அளவுகோல் வறுமை என்றால், நாட்டிலுள்ள பெரும்பாலான ஏழைகள் SC, ST, OBC சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தான். பல நூற்றாண்டுகளாக அனுபவித்த இழிவுகள், பாகுபாடுகள் ஆகியவற்றின் காரணமாக வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். சாதியின் அடிப்படையில் அவர்களை எப்படி ஒதுக்குவது? மனிதர்கள் தனித்தனியான சூழ்நிலைகளில் இல்லை என்பதை சிறுபான்மைத் தீர்ப்பு அங்கீகரிக்கிறது. ஏழையாக இருக்கும் ஒரு நபர், பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதிப் பின்னணி, சிறுபான்மை மதம், பெண் அல்லது மாற்றுத்திறனாளியாக இருக்கலாம். உண்மையில் இப்படிப்பட்ட பல நிலைமைகள் அவரது வறுமைக்கு காரணமாக இருக்கலாம். பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான ஐ.நா குழு, "வறுமை பாகுபாட்டை ஏற்படுத்துவது போல், பாகுபாடு வறுமையை ஏற்படுத்தக்கூடும்" என்று அங்கீகரிக்கிறது.
பல்வேறு வகையான ஏற்றத்தாழ்வுகள் பெரும்பாலும் ஒன்றாகச் செயல்படுவதையும், ஒன்றையொன்று அதிகப்படுத்துவதையும் பார்க்க இயலும். SC, ST, OBC வகுப்பினர் சாதி எனும் பாகுபாட்டினாலும், ஏழ்மை என்ற பாகுபாட்டினாலும் ஒரே நேரத்தில் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். சாதிப் பாகுபாட்டையும், வறுமையின் கொடுமையையும் எதிர்கொள்ளும் SC, ST, OBC வகுப்பினரின் துயரை அங்கீகரிப்பதற்கு பதிலாக, EWS சட்டத் திருத்தம் அவர்களை தண்டிக்கிறது. EWS இட ஒதுக்கீட்டில் இருந்து SC, ST, OBC வகுப்பினரை விலக்குவதின் மூலம், 103 ஆவது சட்டத்திருத்தம் அவர்களுக்கு எதிராக தீவிர பாகுபாடு காட்டுகிறது.
இட ஒதுக்கீட்டிற்கான அளவுகோல் வறுமை என்றால், EWS அளவுகோலின் கீழ் வரும் ஒரு ஆதிவாசி சிறுமி ஏற்கனவே ST இட ஒதுக்கீட்டின் கீழ் இருப்பதால், அவருக்கு EWS இட ஒதுக்கீடு தர முடியாது என்பதை நியாயப்படுத்த முடியுமா என கேள்வி எழுப்புகின்றனர் நீதிபதிகள் ரவிந்தர் பட், யு.யு. லலித். இது பாலினம், பழங்குடி எனும் அடிப்படையில் அச்சிறுமிக்கு எதிராக பாகுபாடு காட்டவும், EWS இட ஒதுக்கீட்டிற்கான வாய்ப்புகளை மறுப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. மக்களை தனித்தனிக் கூட்டில் வைக்கும் இந்த பாகுபாடான வழி, ஒரு கூட்டுக்குள் இருக்கும் பாதிக்கப்பட்ட தனிநபரைக் கண்டறியத் தவறி விடுகிறது. பிரிவுகள் 15(4), 16(4) ஆகியவற்றின் கீழ் சாதியின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு என்பது சலுகையோ, உதவியோ அல்ல. மாறாக சமூக இழிவுகளை எதிர்கொள்ளும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் இழப்பீட்டு நடவடிக்கைகளாகும். சமூகப் பின்தங்கிய நிலை, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சாதிய இழிவு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள SC, ST, OBC இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி, SC, ST, OBC ஏழைகளுக்கு EWS இட ஒதுக்கீட்டை மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பாகுபாட்டிற்குச் சமம் என்ற பார்வையை சிறுபான்மை தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் வெளிப்படுத்தி உள்ளனர்.
சமத்துவத்தின் சாராம்சம்
சமத்துவம், பாகுபாடு இல்லாமை, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பையும் சிறுபான்மைத் தீர்ப்பு விளக்குகிறது. முதலாவதாக, பிரிவு 15(1) இன் முக்கியத்துவத்தை அல்லது சாதி, இனம், பாலினம், மதம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டாமையை சமத்துவக் குறியீட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கிறது. இது முக்கியமானது, ஏனென்றால் பிரிவு 15(1) அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவக் குறியீட்டில் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும். சட்டப்பிரிவு 15(1) இன் கீழ் தடைசெய்யப்பட்ட எந்தவொரு காரணத்திற்காகவும் பாரபட்சம் இருப்பதைக் கண்டறிய நீதிமன்றங்கள் வரலாற்று ரீதியாக தயக்கம் காட்டுகின்றன.
இரண்டாவதாக, எந்த வடிவத்தில் தீண்டாமை இருந்தாலும் அதை ஒழிக்க வேண்டும் என்பதை சிறுபான்மைத் தீர்ப்பு மீண்டும் வலியுறுத்துகிறது. எல்லா வகை சாதிப் பாகுபாட்டையும் தடைசெய்யும் கடமையை 17வது சட்டப்பிரிவு அரசுக்கு அளிக்கிறது. தீண்டாமை ஒழிப்பு என்பது சமத்துவச் சட்டத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல, உண்மையில் அரசியலமைப்புச் சட்டத்தின் முழுக் கட்டமைப்பும் தீண்டாமை ஒழிப்பின் அவசியதை அங்கீகரிக்கிறது. எனவே, பிரிவுகள் 17, 15(1) இல் உள்ள வெளிப்படையான விதிகளின் காரணமாக SC, ST, OBC சமூகங்களை ஒதுக்கி வைக்கவோ அல்லது பாகுபாடு காட்டவோ கூடாது என்ற கடமை அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சமத்துவ தத்துவத்தின் சாரமாக அமைகிறது, மேலும் இது அரசியலைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும் என்றும் சிறுபான்மைத் தீர்ப்பு கூறுகிறது. சிறுபான்மைத் தீர்ப்பின் மிக முக்கியமான பகுதியாக இது உள்ளது, மேலும் அதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கத் தவறினால், சமத்துவத்திற்கு எதிரான விதிமீறல்கள் தொடரும்.
தீவிர வறுமை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி ஒலிவியர் டி ஷட்டர் தனது சமீபத்திய அறிக்கையில், பாலினம், சாதி, இனம், சாதி, மதம், வயது, உடற்குறைபாடு, பாலியல் நோக்குநிலை (Sexual Orientation) போன்ற அடிப்படையில் ஏற்படும் பாகுபாடுகளை களைவதில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த காரணிகளை கவனமாக ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில் அவை பெரும்பாலும் மாறாதவை. என்று கூறுப்பட்டுள்ளது. ஏனெனில் மேற்கண்ட அடிப்படையில் பாகுபாட்டைச் சந்திப்பவர்கள் அதிகமாக வறுமையில் வாழுகின்றனர்.
வறுமை, பொருளாதார குறைபாடுகள் இட ஒதுக்கீட்டிற்கு பயனுள்ள அளவுகோல்களாக இருக்க இயலுமா? சாதியின் அடிப்படையில் வறுமையில் உழல்பவர்களை விலக்க முடியுமா? அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 15, 16, 17 ஆகியவற்றில் பிண்ணிப் பிணைக்கப்பட்டுள்ள சமத்துவக் கோட்பாடு (Equality Code) சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய கொள்கைளை ஊக்குவிக்கிறது, மேலும் சாதியின் அடிப்படையில் மக்களை விலக்கும் EWS சட்டத்திருத்தம் நமது அரசியலமைப்பு நெறிமுறைகளை அழித்துவிடும் என்று சிறுபான்மைத் தீர்ப்பு குறிப்பிடுகிறது.
வறுமையின் அடிப்படையில் பாதிக்கப்படும் பிரிவினரை, வறுமையை ஒழிக்க இயற்றப்பட்ட EWS இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்குவது அரசியலமைப்புச் சட்டதின் மைய அங்கமான சமத்துவத்தை சீரழிப்பதைக் குறிக்கிறது. இது நமது சமூகத்தில் அதிக ஏற்றத் தாழ்வுகளையும், வேறுபாடுகளையும் உருவாக்குவதற்கான கதவுகளைத் திறக்கும். அரசியலமைப்புச் சட்டத்தின் அடையாளத்தையும் அதன் ஆன்மாவையும் சேதப்படுத்தும்.
- ஜெய்னா கோத்தாரி, இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்.
நன்றி: The Hindu ஆங்கில நாளிதழ் (2022, நவம்பர் 22 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)
தமிழ் மொழியாக்கம்: விஜயபாஸ்கர்