கே.சி. வசந்த் குமார் (1985) வழக்கில் நீதிபதி சின்னப்ப ரெட்டி, “இட ஒதுக்கீடு வறுமை ஒழிப்பு திட்டமல்ல. சமத்துவத்தை நோக்கமாகக் கொண்டது” என்று கூறியது புகழ் பெற்றதாகும். அவருடைய தீர்ப்பு இந்தியாவில் இட ஒதுக்கீடு திட்டங்களின் சமூகநீதிக் குறிக்கோள்களை தெளிவுடனும், உணர்வெழுச்சியையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறது. நெடுங்காலமாக இத்தகைய சமூகநீதிக் கருத்துக்களுக்கு எதிராக இருந்த நீதித் துறை ஒரு வழியாக சமத்துவ இந்தியாவை உருவாக்குவதற்கு இட ஒதுக்கீடுகளின் தேவையைப் பற்றி அரசியல்வாதிகளும், பரவலான இந்தியச் சமூகமும் புரிந்து கொண்டிருந்ததை ஏற்றுக் கொண்டதற்கான திசைகாட்டியாக இது திகழ்கிறது.

EWS இட ஒதுக்கீட்டு (2022) வழக்கில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினரின் (EWS) இட ஒதுக்கீடு தொடர்பான 103 ஆவது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தை உறுதி செய்யும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவில் சாதி ரீதியான இட ஒதுக்கீட்டின் சமூகநீதி இலக்குக்களை பின்னோக்கித் தள்ளுகிறது. 103 ஆவது திருத்தத்தை உறுதி செய்ததின் மூலம் நீதிமன்றம் இட ஒதுக்கீடு சமத்துவத்தை அல்லாமல் வறுமை ஒழிப்புத் திட்டத்தை நோக்கமாகக் கொண்டது என்ற கருத்தை உள்ளபடியே ஆமோதித்திருக்கிறது. பெரும்பான்மை தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகளும், தாங்கள் வழங்கிய தீர்ப்பில், 103 ஆவது சட்டத்திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானதல்ல என்பதில் உடன்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக பேலா திரிவேதியும், பர்ஜோர் பர்திவாலாவும் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டு திட்டத்தின் மீதான வெறுப்பையும் காட்டி இட ஒதுக்கீடு கூடிய விரைவில் முடிவுக்கு வந்து சாதியற்ற சமூகத்தை உருவாக்கிவிடும் என்ற தங்கள் உள்ளக்கிடக்கை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.constituion bench for ews reservationபெரும்பான்மை தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகளும் வேலைவாய்ப்புகளிலும், கல்வியிலும் இட ஒதுக்கீடு வழங்க பொருளாதாரக் காரணிகளைப் பயன்படுத்தலாம் என்றும், அதிலிருந்து SC, ST, OBC வகுப்பினரைய விலக்குவதில் ஆட்சேபிக்க எதுவுமில்லை என்றும், இட ஒதுக்கீட்டிற்கு நீதிமன்றங்கள் முன்னர் வரையறுத்த 50% உச்சவரம்பு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் முக்கியக் கூறு அல்ல என்றும் ஒப்புக் கொள்கிறார்கள். இதில் கடைசியில் சொல்லப்பட்டிருப்பது ஆட்சேபணைக்கு உரியதல்ல என்றாலும், அதே பெருந்தன்மையை பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் இட ஒதுக்கீடு 50% க்கு மேலே செல்லும்போது நீதிமன்றம் காட்டுமா என்பதை எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை.

நீதிபதி இரவீந்திர பட் எழுதிய மாறுபட்ட தீர்ப்பும் கூட பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தின் படி செல்லும் என்பதை உள்ளபடியே மறுக்கவில்லை. இருப்பினும், EWS இட ஒதுக்கீட்டின் வரையரையிலிருந்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை விலக்கியதால் 103 ஆவது சட்டத்திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்னும் கருத்தினைக் கொண்டிருக்கிறார்கள். சமூகத்தில் சமத்துவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட சமத்துவ நெறியை வலியுறுத்தும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளை (Equality Code: Articles 14 to 17) அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட முடிவுக்கு ரவிந்தர் பட்டும், யு.யு. லலித்தும் வந்திருக்கிறார்கள். ரவீந்தர் பட் வழங்கிய மாறுபட்டத் தீர்ப்பின்படி, ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்கிடையே சாதியின் அடிப்படையில் ஒரு செயற்கையான எல்லையை வரைவதால் EWS இட ஒத்க்கீட்டிலிருந்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை விலக்குவது அரசிலயமைப்புச் சட்டத்தின் சமத்துவ நெறிக்கு (Equality Code: Articles 14 to 17) முரணானது. இந்த முடிவுக்கு வந்தடைந்த அளவில், பெரும்பான்மை நீதிபதிகள் மூவரின் தீர்ப்புகளை விட சிறுபான்மைத் தீர்ப்பு மிகத் தீர்க்கமாக அரசியலமைப்பு அடித்தளத்தை பற்றி இருக்கிறது எனக் கூற இயலும்.

இருப்பினும், அவர்களிடையே பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், பெரும்பான்மைத் தீர்ப்பும், சிறுபான்மைத் தீர்ப்பும் குறைவுபட்ட புரிதலுடனேயே சமூகநீதியை உறுதிசெய்யும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அணுகுகின்றன. இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றி தவறான புரிதலுடனே EWS சிக்கலை ஆய்வு செய்திருக்கிறார்கள்.

103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் சாராம்சப் பிரச்சினையை நீதிபதி ரவிந்தர் பட்டின் மாறுபட்டத் தீர்ப்பும் முழுமையாக உள்வாங்கவில்லை. 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தில் SC, ST, OBC வகுப்பினரைச் சேர்த்து, தற்போதுள்ள SC, ST, OBC வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை சீர்ப்படுத்தும் நடமுறை சாத்தியமுள்ளத் தீர்வைக் கண்டுபிடித்திருந்தாலுமே, அப்படியானச் சேர்க்கை SC, ST, OBC வகுப்பினர்களில் உள்ள பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு EWS இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற்றுத் தர வாய்ப்பில்லை. ஏனென்றால், இச்சமூகங்களிருந்து வரும் போட்டியாளர்கள் அதே ஒடுக்கப்பட்ட வகுப்பினர்களுடன் தாம் போட்டியிட வேண்டுமேயன்றி தங்களைப் போன்றே ஏழ்மையில் உள்ள உயர் சாதியினர் எனச் சொல்லப்படுபவர்களோடு அல்ல. இரண்டையும் சமமாக்கி, பொருளாதார ரீதியாக நலிந்தவர்களாக இருக்கும் காரணத்தால் இருசாராரும் இட ஒதுக்கீடுகளைப் பெறுவதற்குச் சமமானத் தகுதியுடையவர்கள் எனக் கருதும் பகுப்பாய்வு முறை ஏழ்மையின் காரணமாகவோ அல்லது சமூக ஒடுக்குமுறை காரணமாகவோ உண்மையிலேயே வாழ்ந்துபெற்ற அனுபவத்தை கணக்கிலெடுக்கவில்லை.

வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதாரக் காரணிகளை போதுமான அடிப்படையாக ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளது இட ஒதுக்கீடுகளின் நோக்கத்தைப் பற்றி நீதிபதிகளின் மோசமானப் புரிதலைக் காட்டுகின்றது. முதலாவதாக அடிப்படையில் ஏழ்மையை உருவாக்கும் ஆழமானக் கட்டமைப்புச் சமத்துவமின்மைகளைப் புரிந்து கொள்ளாமல், இட ஒதுக்கீடு ஏழ்மையைப் போக்க தேவையானவர்களுக்குக் கையளிக்கப்படும் இன்னுமொரு திட்டமாகப் பார்க்கப்படுகிறது. சமூக நீதி அல்லது உண்மையான சாதியற்ற சமூகத்தை உருவாக்கும் தேவை, நீதிமன்றத் தீர்ப்புகளில் அரிதினும் அரிதாகவே இடம் பெறுகிறது. நீதிபதி திரிவேதியின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ”சாதியின்மை” என்கிற கருத்தும், உயர்சாதியனரின் கருத்தாக்கமேயாகும். அதாவது சாதியின் அப்பட்டமான சாதக பாதகங்கள் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும்போது, அவற்றை மறுத்துவிட்டு, வெளியில் தெரியும் சாதியின் சில குறியீடுகளை மட்டும் மறுப்பது அல்லது புறந்தள்ளுவது எனும் உயர்சாதியினரின் கருத்தை நீதிபதி திரிவேதி தனது தீர்ப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.

இட ஒதுக்கீடு சமத்துவத்திற்கானது அல்ல, மாறாக வறுமை ஒழிப்புத் திட்டமே என்னும் இந்த அணுகுமுறை EWS இட ஒதுக்கீட்டைத் தாண்டியும் சமூகத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இந்த அணுகுமுறை பதவி உயர்வு, பழங்குடிகள் வாழும் பகுதிகளில் பழங்குடியின ஆசிரியர் பணிசேர்க்கை போன்ற சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் தாக்கம் செலுத்தியிருக்கிறது. மேலும், உள் இட ஒதுக்கீடு தொடர்பான சூழ்நிலைகளிலும் பிரச்சினைக்குரிய முன்மாதிரியை உருவாக்கும் வாய்ப்புக்களைக் கொண்டுள்ளது.

- அலோக் பிரசன்ன குமார் (பெங்களூரில் அமைந்துள்ள Vidhi Centre for Legal Policy நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக இருக்கிறார்.) 

நன்றி: EPW இதழ் (2022, நவம்பர் 19 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: முனைவர் சுந்தரமூர்த்தி

Pin It