2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி கர்நாடகாவின் கோலாரில் பரப்புரை செய்த ராகுல் "எப்படி திருடர்கள் அனைவருக்கும் மோதி என்ற குடும்பப் பெயர் இருக்கிறது" என்று நீரவ் மோதி, லலித் மோதி போன்றோரைக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞரும், சூரத் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோதி என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

குறிப்பாக ராகுல் தெரிவித்த கருத்து, மொத்த ‘மோதி’ சமூகத்தையும் அவதூறு செய்வதாகத் தெரிவித்திருந்தார். 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து, தற்போது ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 15000 ரூபாய் அபராதத்தையும் சூரத் நீதிமன்றம் விதித்திருக்கின்றது. இதன் மூலம் எட்டாண்டுகளுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.rahul gandhi 500இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாகும். ராகுல் காந்தியைக் கைது செய்வதன் மூலம் ஏற்படும் இந்தியா முழுவதற்குமான எதிர்ப்பைப் பார்த்து பாஜக அரசு பயந்து கொள்கின்றது. ஆனால் அதே சமயம் 2024 பாராளுமன்றத் தேர்தலில் ராகுல் போட்டியிடாமல் செய்வதன் மூலம் ஏற்கெனவே கலகலத்துப் போய் இருக்கும் காங்கிரஸை நெருக்கடிக்கு உண்டாக்கப் பார்க்கின்றது.

தீர்ப்பளித்த அடுத்த நாளிலேயே அவரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டாலும், அதன் பிறகான எந்த நடவடிக்கையையும் எடுக்க பாஜக தயாராக இல்லை.

இன்று ராகுல்காந்தி பிற்படுத்தப்பட்ட சமூகத்தை அவமதித்து விட்டதாக காட்டுக் கூச்சல் போடும் சங்கிக் கும்பல், உண்மையில் எப்போதாவது வரலாற்றில் அந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொண்டு இருக்கின்றதா எனப் பார்த்தால் துரோகம் மட்டுமே எஞ்சும்.

வி.பி.சிங், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதால், இந்தியா முழுக்க சங்கிக்கும்பல் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியது. வி.பி.சிங் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றதன் மூலம், வி.பி.சிங் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்தது.

இன்று இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட மக்களிலேயே சிலர் தகுதி, திறமை என்று பிதற்றுவதற்கான கருத்தியல் அடிப்படைகளை எல்லாம் உருவாக்கியதே இதே சங்கிக் கும்பல்தான்.

ராகுல் காந்தி பிற்படுத்தப்பட்ட சமூகத்தை கேவலப்படுத்தி விட்டதாக கண்ணீர் வடிக்கும் இதே கும்பல்தான் இன்று ஓ.பி.சிக்கான இட ஒதுக்கீடு 27 சதவீதமாக இருந்தாலும் அதிகபட்சமாக 12 சதவீதத்திற்கு மேல் எந்தத் துறையிலும் நிரப்பாமல் வைத்திருக்கின்றது.

அதே போல பழங்குடியினருக்கு 7.5 சதவீதம் இருந்தாலும் அதில் ஒரு சதவீதம் கூட நிரப்பப்படுவதில்லை. எஸ்.சிக்களைப் பொறுத்தவரை 6-7 சதவீதம்தான் நிரப்புகின்றார்கள்.

ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். போன்ற இடங்களில் உயர் ஜாதிகளின் எண்ணிக்கையைவிட பல பத்து மடங்கு இடங்களை நிரப்புகிறார்கள். ஆனால் ஓ.பி.சி. பேராசிரியர்களே அங்கே கிடையாது. எஸ்.சி., எஸ்.டி ஒன்றிரண்டு பேரே நிரப்புகின்றார்கள்.

அதுமட்டுமல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதி ஏழைகள் என்று சொல்லி, தனியாக இட ஒதுக்கீடு கொடுத்ததன் மூலம் சமூகநீதிக் கொள்கைக்கே தீ வைத்திருக்கின்றார்கள்.

இத்தனையும் செய்துவிட்டு ஓ.பி.சியினரின் நலன் மீது தங்களுக்கு அக்கறை இருப்பதாக சொல்வதெல்லாம் உலகமகா நடிப்பாகும்.

உண்மையில் ஓ.பி.சியினரின் நலன் மீதெல்லாம் மோடி அரசுக்கு அக்கறை கிடையாது. ஓடிப்போன கார்ப்ரேட் ஓடுகாலிகளைப் பற்றி ராகுல் பேசியதுதான் மோடிக்கும், சங்கிக் கும்பலுக்கும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கின்றது

வெளிநாடுகளில் ஹவாலா பணத்தை பதுக்கி வைத்துவிட்டு, அங்கு சுகபோக வாழ்க்கை நடத்தும் நீரவ் மோதி, லலித் மோதி போன்றவர்களையோ, விஜய் மல்லையா போன்றவர்களையே இந்திய கொண்டு வந்து தண்டிக்கத் துப்பில்லாத மோடி அரசு எதற்காக ராகுலின் பேச்சுக்காக கோபம் கொள்ள வேண்டும்?

மோசடி மன்னன் அதானியைப் பற்றியும் பாராளுமன்றத்தில் பேசக்கூடாது; இந்திய மக்களையும் இந்திய வங்கிகளையும் மோசடி செய்துவிட்டு இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளைப் பற்றியும் பேசக்கூடாது என்பது இந்த சங்கிக் கும்பல் எவ்வளவு பெரிய கார்ப்ரேட் அடிமைகள் என்பதைத்தான் காட்டுகின்றது.

மற்றபடி ராகுல் ஓ.பி.சி சமூகத்தை அவமதித்து விட்டார் என்பது நீரவ் மோதி, லலித் மோதி போன்ற திருடர்கள் தங்கள் சாதியில் இருப்பதை அந்த மோடி சமூகமே ஆதரிக்கின்றது என்ற தோற்றத்தை ஏற்படுத்தத்தான் உதவும்.

திருடர்களும் கொலைகாரர்களும் எல்லா சாதியிலும் உள்ளார்கள். ஆனால் அவர்களை புனிதப்படுத்தி எந்த சாதி மக்களும் பேசுவது கிடையாது. விவசாயிகளாகவும், விவசாயக் கூலிகளாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் இருக்கும் பெரும்பான்மை ஓ.பி.சினர் மீது விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம் போன்றவற்றைத் திணித்து அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த மோடி அரசு இரண்டு திருடர்களுக்காக, குற்றவாளிகளுக்காக களத்தில் இறங்கி வேலை பார்ப்பது வெட்கக்கேடான செயலாகும்.

மக்கள் செல்வாக்குள்ள ஒரு கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தியையே நீதிமன்றத்தின் துணையுடன் சங்கி கும்பலால் பழிவாங்க முடிகின்றது என்றால், மாவோயிஸ்ட்களுக்கு உதவினார்கள் என்று கைது செய்யப்பட்ட சுதிர் தவாலே, மகேஷ் ரவுத், சோமா சென், வழக்கறிஞர்கள் அருண் ஃபெரெய்ரா, சுதா பரத்வாஜ், எழுத்தாளர் வரவர ராவ், சமூகப் போராளி வெர்னான் கன்சால்வஸ், மக்கள் உரிமைப் போராளி ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், டெல்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜானி பாபு, கபிர் கலா மஞ்சின் கலைஞர்களான சாகர் கோர்க்கே, ரமேஷ் கைச்சார், ஜோதி ஜக்தப் ,ஸ்டேன் சுவாமி போன்றவர்களை எப்படி பழிவாங்கி இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்!

இந்தியா சட்ட ரீதியான பாசிசத்திற்கு மாறிக் கொண்டு இருக்கின்றது. எந்த சட்டப் புத்தகம் மக்களுக்கு நீதி கிடைக்க உதவும் என நம்ப வைக்கப்பட்டதோ அதே சட்டப் புத்தகத்தின் உதவியுடன் சங்கிக் கும்பல் இந்தியாவை பாசிசத்தை நோக்கி தள்ளிக் கொண்டு இருக்கின்றது.

சங்கிகள் நினைத்தால் நாளையே ஒருவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி, நாளை மறுநாளே தூக்கில் போட்டுவிட முடியும். நீதிமன்றம் என்பதும் நீதிபதி என்பதும் மக்களுக்கு தாங்கள் சட்டப்படியே நடக்கின்றோம் என்பதை காட்டுவதற்காக மட்டுமே இருக்கும்.

ராகுல் போன்ற தலைவர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை பற்றி நாம் யோசிக்கக்கூட முடியாது.

சங்கிக் கும்பல் ராமராஜ்ஜியத்தை நோக்கிய பயணத்தில் மிகத் தெளிவாக திட்டமிட்டு பயணித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் பாசிசத்தை எதிர்ப்போம் என சொல்லிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் பாசிசம் என்றால் என்னவென்றே புரியாத, தெரியாத மனநிலையில்தான் இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

சங்கிகளுக்கு எதிரான, இந்தியா தழுவிய ஒரு மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க கையாலாகாத நிலையில்தான் எதிர்க்கட்சிகள் அனைத்தும் உள்ளன. காரணம் ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கூட்டணி முக்கியமேயொழிய மக்களின் நலன் முக்கியமல்ல.

பாஜக திரும்பத் திரும்ப தேர்தலில் வெல்வதற்கு காரணம் பாஜக மட்டுமே அல்ல; தகுதி இல்லாத எதிர்க்கட்சிகளுக்கும் அதில் முக்கிய பங்குள்ளது.

- செ.கார்கி

Pin It