பாரதிய சனதா கட்சியின் மோடி தலைமையிலான ஆட்சி 2019-இல் அரசமைப்புச் சட்டத்தில் 103ஆம் திருத்தம் செய்து, உயர்சாதி ஏழைகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளிலும் கல்வி நிலையங்களில் சேர்க்கையிலும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு 14.01.2019-இல் அளித்தது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து, அதற்குத் தடைவிதிக்கக் கோரி சமத்துவத்திற்கான இளைஞர் அமைப்பு (Youth for Equality) இல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. ஆனால் தடை விதிக்கப் படவில்லை. இதுபோல் பல அமைப்பினரும் வழக்குத் தொடுத்தனர். மூன்றே முக்கால் ஆண்டுகள் கழித்து 7.11.2022 அன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் தலைமைநீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி எஸ். இரவீந்திர பட் இருவரும் இவ்விட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளனர். நீதிபதிகள் தினேசு மகேசுவரி, பேலா எம். திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகிய மூவரும் இந்த இடஒதுக்கீடு செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ளனர். பெரும்பான்மை மூன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பே இறுதித் தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்பு சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.

இந்திய சமூகத்தை ஆயிரத்து அய்ந்நூறு ஆண்டுகளாகப் பார்ப்பனர்கள் பல ஆயிரம் சாதிகளாகப் பிரித்து வைத்திருந்தனர். இந்து சாத்திரங்களின் அடிப்படை யில் பார்ப்பனர்கள் மன்னர்களைத் தங்கள் வயப்படுத்தி தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டு வந்தனர். சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களாக நடத்தப்பட்ட பட்டியல் வகுப்பினருக்கும் மன்னர்கள் ஆதரவுடன் கல்வியும் அதிகாரத்தில் பங்கும் மறுக்கப்பட்டு வந்தன. ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்ட பின்னர்தான் இம்மக்கள் பொதுக் கல்வி வாயிலாகக் கல்வி பெறும் வாய்ப்பி னையும் வேலை பெறும் வாய்ப்பும் பெற்றனர். உயர்கல்வியிலும் அரசு வேலை வாய்ப்புக்களிலும் பெரும்பகுதியைப் பார்ப்பனர்கள் கைப்பற்றி வந்தனர்.

இந்நிலையில் பார்ப்பனர் அல்லாதார் உரிமைகளையே குறிக்கோளாகக் கொண்ட நீதிக்கட்சி 1920-இல் சென்னை மாகாண ஆட்சியதிகாரத்திற்கு வந்த பின் பார்ப்பனரல்லாதார் கல்வி பெற பல்வேறு வகைகளில் துணைபுரிந்தது. 1927 முதல் கீழ்க்காணும் முறையில் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது.communal representation

1950 சனவரி 26-இல் நடைமுறைக்கு வந்த அரசமைப்புச் சட்டத்தில் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு அரசுவேலைகளில் இடஒதுக்கீடு அளித்திட பிரிவு 16(4)இல் வகை செய்யப்பட்டது. ஆனால் கல்வியில் இடஒதுக்கீடு பெற வழிசெய்யப்படவில்லை. இதனால் செண்பகம் துரைராசன் என்ற பார்ப்பனப் பெண், சென்னை மாகாணத்தில் கல்வியில் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதால் தன்னால் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 7.6.1950-இல் வழக்குத் தொடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று சென்னை
உயர்நீதிமன்றம் கல்வி நிலையங்கள் சேர்க்கையில் இடஒதுக்கீடு செல்லாது எனத் தீர்ப்பளித்தது. சென்னை மாகாண அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது.

இந்தத் தீர்ப்பைக் கண்டித்து தமிழ்நாட்டில் பெரியார் தலைமையில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. இதன் விளைவாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 29.5.1951-இல் முதன்முதலாகத் திருத்தம் செய்து கல்வியில் இடஒதுக்கீடு பெறும் வகையில் பிரிவு 15(4) சேர்க்கப்பட்டது. அதாவது “சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்குத் தனி ஏற்பாடுகள் செய்வதை 29(2) பிரிவோ அல்லது வேறு எந்த பிரிவும் தடுக்காது” என்பதாகும்.

இந்தச் சட்டத் திருத்தத்திற்குப் பின் சென்னை மாகாணத்தில் மட்டும்தான் கல்வியில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதே தவிர பிற மாநிலங்களிலோ ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களிலோ இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் 11.10.1951-இல் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகியபோது இரண்டு காரணங்களைக் காட்டினார். ஒன்று இந்துச் சட்டத் திருத்தம் ஏற்கப்படவில்லை என்பது; மற்றது பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றத்திற்கான திட்டங்களைப் பரிந்துரைப்பதற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்படாததும் ஆகும்.

ஒன்றிய அரசு காகா கலேல்கர் தலைமையில் 11 பேர் அடங்கிய முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை 29.1.1953-இல் அமைத்தது. அவ்வாணையம் அதன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை 20.3.1955 இல் சவகர்லால் நேருவிடம் அளித்தது. நேரு அரசு அவ்வாணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுச் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டது.

1977-இல் நடந்த மக்களவைத் தேர்தலின் போது சனதாக் கட்சி, காகா கலேல்கர் ஆணையப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவோம் எனத் தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்திருந்தது. மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரும் அகில இந்தியப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினர் பேரவையின் புரவலர் தலைவருமான தோழர் வே. ஆனைமுத்து பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்து காகா கலேல்கர் ஆணையப் பரிந்துரைகளை செயல்படுத்துமாறு வலியுறுத்தினார்.

காகா கலேல்கர் பரிந்துரை அறிக்கை அளித்து 10 ஆண்டுகள் கடந்து விட்டதால் அதனை செயல்படுத்த இயலாது என்று பிந்தேசுவரி பிரசாத் மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 01.01.1979-இல் அமைக்கப்பட்டது. அவ்வாணையம் தனது பரிந்துரைகள் அடங்கிய
அறிக்கையை 31.12.1980-இல் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் அளித்தது. மண்டல் ஆணையப் பரிந்துரைகளைச் செயல்படுத்திட இந்திரா காந்தி அக்கறைக் காட்டவில்லை.

பின்னர் சனதா தளக் கட்சிக் கூட்டணியில் அமைந்த ஆட்சியில் பிரதமரான வி.பி. சிங் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு செய்யப்படும் என 7.8.1990-இல் அறிவித்தார். இந்த 27 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு காங்கிரசுக் கட்சியும், பாரதிய சனதா கட்சியும் உயர்சாதியினரும் எதிர்த்ததன் காரணமாக வி.பி. சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

மண்டல் ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு காங்கிரசுக் கட்சித் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், 2005-இல் அரசமைப்புச் சட்டத்தில் 93ஆம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு 2006-இல் உத்தரவிடப்பட்டது (The Central Educational Institutions (Reservation in Admission) Act 2006). இதுவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து 2008-இல் இடஒதுக்கீடு அளிக்கலாம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அப்போது முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

1991-இல் பிரதமராக வந்த பி.வி. நரசிம்மராவ் உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அறிவித்தார். வி.பி.சிங் ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட
வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை எதிர்த்தும், பி.வி.நரசிம்மராவ் அரசின் உயர்சாதி ஏழைகளுக்கான 10 விழுக்காடு அரசாணையை எதிர்த்தும் இந்திரா சகானி மற்றும் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து 16.11.1992-இல் தீர்ப்பு அளித்தது. அத்தீர்ப்பின் முக்கிய கூறுகள் :

1. மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு செல்லும்.

2. பி.வி. நரசிம்மராவ் அரசு பிறப்பித்த உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்தது செல்லாது.

3. மொத்தத்தில் இடஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கு மேல் அளிக்கக்கூடாது.

4. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வளர்ந்த பிரிவினரை நீக்கி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

இந்தத் தீர்ப்புக்குப் பின்னரே 1994 முதல் ஒன்றிய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இப்போது பா.ச.க. அரசு அரசமைப்புச் சட்டத்தில் 103­ஆவது திருத்தம் செய்து, உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் 07.11.2022 அளித்துள்ள தீர்ப்பு அரசமைப்பு பிரிவு 15(4), 16(4)-இல் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பு மக்கள் கல்வியிலும் வேலை வாய்ப் பிலும் போதிய (அவர்களின் மக்கள் தொகை விகிதாசாரத் திற்கு ஏற்ப) அளவு பிரதிநிதித்துவம் பெற்றிருக்கவில்லை என்பதை ஆணையம் அமைத்து ஆய்வு செய்த பின்னரே 15 விழுக்காடு + 7.5 விழுக்காடு + 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்சாதி ஏழைகள் 10 விழுக்காடு இட ஒதுக் கீட்டில் இதுபோல் எந்த ஆய்வோ, அடிப்படையோ இல்லை.

இந்தத் தீர்ப்பில் 5 நீதிபதிகளும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரித்தாலும் வேறு சில கூறுகளில் மாறுபடுகின்றனர்.

இரண்டு நீதிபதிகளுக்கான தீர்ப்பை எழுதியுள்ள நீதிபதி எஸ்.இரவீந்திர பட் 10 விழுக்காடு இடஒதுக் கீட்டிற்குள் பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உள்ள ஏழைகளை சேர்த்திருக்க வேண்டும் என்கின்றார். தீர்ப்பில் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள ஏழ்மைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் விவரத்தைப் பதிவு செய்துள்ளார். அது,

பட்டில் சாதியினர்  -38% 

பட்டியல் பழங்குடியினர்  -45.4% 

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  -31.7%

உயர்சாதியினர்  -5.85%

மோடி அரசு கொண்டு வந்துள்ள இந்த உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பிலும் மற்றும் பலர் வழக்குத் தொடர்ந்தனர். தி.மு.க.வின் சார்பில் நாடாளு மன்ற உறுப்பினர் வில்சன் சிறப்பான வாதங்களை முன்வைத்தார். வி.சி.க.வும் இந்த வழக்கில் இணைத்துக் கொண்டது. 7.11.2022 அன்று உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.

நீதிபதி இரவீந்திரபாட் அவர்களும் தலைமை நீதிபதி யு.யு. லலித் அவர்களும் இது சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பளித்தனர்.

நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, லாலா எம். திரிவேதி, ஜெ.பி. பார்டிவாலா ஆகியோர் மோடி அரசு கொண்டுவந்த உயர்சாதி ஏழைகளுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு அரசியல் சட்டத் திருத்தம் செல்லும் என்று தீர்ப்பளித் துள்ளனர். இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாகும். சமூகநீதிக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைப்பதாகும்.

நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அவர்கள் சுதந்தரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த இடஒதுக்கீடு இன்னும் எவ்வளவு நாள் நீடித்து இருக்க வேண்டும். இதை மறு ஆய்வுச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்திய அரசின் கல்வி வேலை வாய்ப்பில் உயர் சாதியினர் தான் 80 விழுக்காடு ஆக்கிரமித்துள்ளனர் என்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அரசமைப்புச் சட்டம் விதிகள் 15(4), 16(4) கால அளவு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டம் விதி 334-இல் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் நிற்பதற்காக தனித்தொகுதிகளுக்கு இருபது ஆண்டுகள் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அது தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால நீட்டிப்புச் செய்யப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் கல்வியிலும் சமூகத்திலும் பின்தங்கிய இதர பி.வ., ப.வ., ப.பழங்குடி வகுப்பினர் விகிதாச்சார அளவு இடம்பெறும் வரை இந்த இடஒதுக்கீடு நீடிக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் தீர்ப்பு வெளியான அன்றே இது சமூகநீதி வரலாற்றில் ஒரு பின்னடைவு என்றும், தமிழக அரசின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்தார். 12.11.2022 அன்று சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறை வேற்றினார். இச்செயல் பாராட்டுக்குரியது. பா.ச.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் இக்கூட்டத்தைப் புறக்கணிப்புச் செய்தனர். அது கண்டனத்துக்குரியது.

“பட்டியல் சாதியினர் பழங்குடியினர் உள்பட யாருக்கும் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்பது ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் கொள்கை.” (எம்.எஸ்.கோல்வாக்கர் Bunch of Thoughts, பக்.466 விரிவாக்கம் செய்யப்பட்ட இரண்டாம் பதிப்பு 1980) அதை செயல்படுத்துவதே மோடி அரசின் நோக்கம்

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் 100 விழுக்காடு இடங்களையும் வகுப்புவாரியாக பங்கீடு செய்ய வேண்டும் என்பதே வே. ஆனைமுத்து அய்யா அவர்கள் முன்வைத்த கோரிக்கை. இதற்கு ஏற்றத்தன்மையில் மக்கள் திரள் போராட்டங்களையும் அரசியல் கட்சியினரிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இப்போது நம் முன் உள்ள பணியாகும்.

- வாலாசா வல்லவன்

Pin It