இந்தியாவில் உள்ள உயர்சாதியினர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் என்பது முற்றிலும் போலியான கூற்று. அவர்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களல்ல, அதை விரும்புகிறார்கள். பெண்களுக்கான இட ஒதுக்கீடு, விளையாட்டு இட ஒதுக்கீடு, வசிப்பிட இட ஒதுக்கீடு, கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஒன்றிய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான இட ஒதுக்கீடு, இப்போது EWS போன்ற இட ஒதுக்கீடுகளை உயர் சாதியினர் ஆர்வத்துடன் பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு தரப்படும் இட ஒதுக்கீடுகளினால் தகுதி, தரம் குறைவதாக எந்த புகாரும் இல்லை. அதே போல் அவர்களின் இட ஒதுக்கீடுகளுக்கு காலவரையறை வேண்டும் என்று அவர்கள் கோரவில்லை. இட ஒதுக்கீடு என்பது உயர்சாதியினரின் கலாச்சார டிஎன்ஏவின் ஒரு பகுதியாகும். ஏனென்றால் நால்வர்ணம் அமைப்பில் கல்வியும், உயர்பதவிகளும், வாழ்க்கையின் சகல வசதிகளும் பிறப்பால் உயர் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டது. கீழ் சாதிகளுக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் இல்லை. அவ்வகையில் இட ஒதுக்கீடு என்பது உயர் சாதியினரின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் தக்க வைக்க உதவும் கருவி. பல நூற்றாண்டுகளாக இந்திய சமூகத்தில் கல்வியும், உயர்பதவிகளும், அதன் ஊடாக சமூக அந்தஸ்தும் உயர் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டன. மனுதர்மம் அதற்கான ஆதார நூலாக உள்ளது.

எனவே உயர் சாதியினர், சூத்திரர்களுக்கு (SC, ST, OBC) வழங்கப்படும் இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமே எதிரானவர்கள். SC, ST, OBC வகுப்பினருக்கு வேலைவாய்ப்பிலும், கல்வியிலும், சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை உயர்சாதியினர் விரும்புவதில்லை. ஏனெனில் உயசாதியினரின் அதிகாரத்தின் மீதான கட்டுப்பாட்டை அச்சுறுத்தி, பலவீனப்படுத்துகிறது. அவர்களின் ஏகபோக உரிமையை கேள்விக்குள்ளக்குகிறது.brahmins 333என்ன காரணத்திற்காக SC, ST, OBC வகுப்பினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை உயர் சாதியினர் எதிர்க்கிறார்களோ, அதே காரணத்திற்காக, வேலைவாய்ப்பிலும், கல்வியிலும், சட்ட, பாராளுமன்றத்திலும் உரிய பிரதிநிதித்துவம் என்பது SC, ST, OBC வகுப்பினரின் முதன்மையான கோரிக்கையாக ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உள்ளது. 19 ஆம் நூற்றாண்டில், மெட்ராஸ், மைசூர், திருவிதாங்கூர், மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் உருவான பார்ப்பனரல்லாத இயக்கம் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை எழுப்பத் தொடங்கியது. இன்று வரை தொடர்கிறது.

ஜனவரி 19, 1931 அன்று நடந்த முதல் வட்டமேஜை மாநாட்டில் பேசிய டாக்டர் அம்பேத்கர் “பொறுப்புள்ள அரசாங்கத்தை எதிர்க்கவில்லை என்றாலும், உண்மையான பிரதிநிதித்துவம் இல்லாத அரசை அமைக்கவிடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு எனக்கு உள்ளது. நான் எல்லா வடிவத்திலும், அமைப்புகளிலும் குறிப்பிட்ட சமூகத்தின் ஏகபோகத்தை ழித்து, ஜனநாயகத்தை வலுப்படுத்த முயலும் வகுப்பைச் சேர்ந்தவன். அரசியல், பொருளாதாரம், சமூகம் என அனைத்துத் துறைகளிலும் ஒரு மனிதன், ஒரு மதிப்பு என்ற இலட்சியத்தை நடைமுறையில் செயல்படுத்துவதே எங்கள் நோக்கம். பிரதிநிதித்துவ அரசு என்பது அதற்கான ஒரு வழிமுறையாக இருப்பதால்தான், ஒடுக்கப்பட்ட வகுப்பினர் அதற்கு இவ்வளவு பெரிய மதிப்பை தருகிறார்கள். மேலும் அதன் மதிப்பின் காரணமாகவே அதை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை நான் உங்களிடம் வலியுறுத்தினேன்” என்று பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

28 செப்டம்பர் 1931 அன்று நடந்த வட்டமேசை மாநாட்டின் சிறுபான்மையினர் குழுவில் உரையாற்றிய டாக்டர் அம்பேத்கர், ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு அதிகாரத்தை மாற்றினால், அந்த அதிகார மாற்றம் ஆதிக்க வகுப்பினரை உள்ளடக்கிய தன்னலம் மிக்க குழுவின், அக்குழு இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, இந்துக்களாக இருந்தாலும் சரி, கைகளில் சிக்காதது போன்ற விதிகளுடன் இருக்கும். ஆனால் அதிகாரம் அனைத்து சமூகங்களும் அவரவருக்கேற்ற விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும் வகையில் தீர்வு காணப்படும்” என்று அதிகாரப் பரவலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

பிரதிநிதித்துவம் இல்லாத வகுப்பினருக்கு தனித் தேர்தல்களும், நிர்வாகத் துறையிலும், நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையானது பிரதிநிதித்துவ அரசாங்கத்திற்கான கோரிக்கையிலிருந்து உருவாகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவ உரிமையையும் வாய்ப்பையும் மறுத்து, அனைத்து மக்களையும் நாங்கள் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவோம் என்ற உயர் சாதியினரின் கூற்றை நிராகரிப்பதும் பிரதிநிதித்துவ அரசாங்கத்திற்கான கோரிக்கையாகும். பிரதிநிதித்துவத்திற்கான இந்தப் போராட்டமே, 1950 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு தனித்துவமான பிரிவாக 16(4) உருவாகி, அரசுத்துறைகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் போதுமான பிரதிநிதித்துவத்திற்கான அடிப்படை உரிமையை அங்கீகரிக்கிறது. மேலும் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் அதற்கான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்கிறது. 

103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், 10% பொது வேலைவாய்ப்பையும், கல்வி வாய்ப்பையும் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தில் இருந்து தடுத்து, பிரதிநிதித்துவம் இல்லாத நாடாக நிலைநிறுத்தும் முயற்சியை மேற்கொள்கிறது. இந்த சாதிய, ஆதிக்க முயற்சியானது அரசியலமைப்புச் சட்டத்தின் ஜனநாயகத் தன்மையுடன் நேரடியாக முரண்படுகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கட்டமைப்பை தகர்க்கும் நோக்கோடு, தன்னலம் மிக்க ஆதிக்க உணர்வு கொண்ட குழுவால் விதைக்கப்பட்ட விஷ விதையாகும். மேலும் இந்த விஷ விதை துடிப்பான, பன்முகத் தன்மையுடைய, மாறுபட்ட, புதுமையான, ஜனநாயகம் மிக்க பொருளாதார அமைப்பாக மாறுவதற்கான இந்தியாவின் திறனைத் தடுப்பதன் மூலம் வளர்ச்சி வாய்ப்புகளை கடுமையாக சிதைக்கும். பிரதிநிதித்துவம் இல்லாத குழுக்களுக்கான பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வந்து, தனிநபர்களின் பொருளாதார நிலையின் அடிப்படையில் மட்டுமே பிரதிநிதித்துவ எதிர்ப்பு EWS இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவதற்கான கோரிக்கை, பிரதிநிதித்துவமற்ற வர்க்கங்களின் பிரதிநிதித்துவத்திற்கான ஜனநாயகக் கோரிக்கையை எதிர்க்கிறது.

உயர்சாதியினர் மட்டுமே அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்ற கோரிக்கை, நான் மட்டுமே அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்ற காந்திஜியின் குரலை நினைவூட்டுகிறது. EWS இட ஒதுக்கீடு "பொருளாதார அடிப்படையிலான" இட ஒதுக்கீடு என பொய்யாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இது பொருளாதார இட ஒதுக்கீடு அல்ல. EWS இட ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற வேண்டுமெனில், சமூக ரீதியாகவும், கல்வியிலும் முன்னேறிய உயர் சாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பிறப்பால் உயர் சாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதே EWS இட ஒதுக்கீட்டிற்கான ஒரே அளவுகோலாகும். எனவே, EWS என்பது உண்மையில் உயர்சாதிக்கான சமூக இட ஒதுக்கீடு. அதே வேளையில், OBC இட ஒதுக்கீடு என்பது "ஜாதி" இட ஒதுக்கீடு என்று பொய்யான விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது ஜாதி இட ஒதுக்கீடு அல்ல.

OBC இடஒதுக்கீட்டிற்குத் தகுதிபெற, ஒரு நபர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட பட்டியலில் ஒரு வகுப்பை சேர்க்க வேண்டுமெனில்,, அந்த வகுப்பின் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் பிரதிநிதித்துவ நிலை குறித்த 15 க்கும் மேற்பட்ட மதச்சார்பற்ற கணக்கீடுகளுக்கு உட்பட வேண்டும்.எனவே, மதச்சார்பற்ற அளவுகோல்களின்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பு, ஒடுக்கப்பட்ட, பிரதிநிதித்துவம் இல்லாத, அனைத்து வர்ணங்கள், ஜாதிகள், மதங்களைச் சேர்ந்த மக்களை உள்ளடக்கியது. அதன்படி, எடுத்துக்காட்டாக, சில பார்ப்பன சமூகங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளன, மேலும் உச்ச நீதிமன்றம் மாற்றுப்பாலினத்தாரை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இணைத்துள்ளது.

OBC இட ஒதுக்கீடு என்பதே உண்மையான பொருளாதார இட ஒதுக்கீடுஇட ஒதுக்கீடு என்பது பிரதிநிதித்துவத்திற்கான ஒரு கருவி. நூற்றாண்டு காலப் போராட்டம் இட ஒதுக்கீட்டிற்காக அல்ல. அது பிரதிநிதித்துவத்திற்கானது. கேள்வி என்னவென்றால், நாட்டில் உள்ள பெரும்பான்மையான சமூகக் குழுக்களுக்கு பிரதிநிதித்துவம் எவ்வளவு காலம் மறுக்கப்படும்? அனைவரையும் நாங்களே பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்ற கூச்சலை எவ்வளவு காலம் உயர்சாதியினர் எழுப்புவார்கள்? பிரதிநிதித்துவம் இல்லாத ஒவ்வொரு சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கான ஜனநாயக உரிமையை ஏற்பதும், உயர் சாதியினர் மட்டுமே அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற கூச்சலைக் கைவிடுவதுமே ஜனநாயகத்தையும் வளர்ச்சியையும் அடித்தளமாகக் கொண்ட ஒரு பிரதிநிதித்துவ அரசை நிறுவ உதவும். துரதிர்ஷ்டவசமாக உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மைத் தீர்ப்பு இதை புரிந்து கொள்ளத் தவறிவிட்டது.

நன்றி: thenewindianexpress.com இணையதளம் (2022, நவம்பர் 29 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: நவீன் ஜெர்மனி

மோகன் கோபால்

Pin It