103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை உருவாக்கிய இரண்டு நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒன்றிய பாஜக அரசால் கிட்டத்தட்ட ஒருமனதாக நிறைவேற்ற முடிந்தது. அதன் பின்னர் சில நாட்களுக்குள் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டது.
உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு என பாஜக அரசாங்கத்தாலும், ஊடகங்களாலும் அழைக்கப்படும் இந்த சட்டம் நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஜூன் மாதம் (2019) தொடங்கும் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிர்காஷ் ஜவ்டேகர் அறிவித்தார்.
இந்திரா காந்தி அரசின் அவசர நிலை பிரகடனத்திற்குப் பின்னர் இந்திய நாடு கண்டிராத இழிவான செயல்களில் ஒன்றான EWS இட ஒதுக்கீடு மிக எளிதாக மேற்சொன்ன வேகத்தில் நிறைவேற்றப் பட்டது.
தேர்தல் கணக்கீடுகளின் அடிப்படையில் ஆளும் பாஜக அரசின் உள்நோக்கம் வெளிப்படையானது என்றாலும், ஏழைகளுக்கு எதிரானவர்கள் என்று பாஜகவால் முத்திரை குத்தப்படுவோம் என்ற அச்சத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் (திமுக, ஆர்ஜேடி, ஓவேசி உள்ளிட்டோர் தவிர்த்து) இந்த வெட்கக்கேடான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பவர்கள் அனைவரும் பல குறைபாடுள்ள இச் சட்டத்திருத்தம் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்படும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.
EWS இட ஒதுக்கீட்டுச் சட்டத் திருத்தத்தில் என்ன உள்ளது?
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 15, 16 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைத் தவிர பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகள் என புதிய வகுப்பை இப்புதிய சட்டத் திருத்தம் அறிமுகப் படுத்துகிறது.இந்தச் சட்டத்தின் மூலம், அத்தகைய பிரிவினரின் முன்னேற்றத்திற்காக, தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவன இடங்களிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும், ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டுடன் சேர்த்து கூடுதலாக 10% (அதிகபட்சம்) வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இச்சட்டத் திருத்தத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள "பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு" என்ற புதிய வகுப்பினர் ஒன்றிய, மாநில அரசுகளால் குடும்ப வருமானம் உள்ளிட்ட பொருளாதார அளவுகோல்கள் அடிப்படையில் காலத்திற்கு ஏற்ப அடையாளம் காணப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளின் (15, 16) கீழ் தரப்படும் கல்வி நிறுவன இட ஒதுக்கீடுகளும், வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடுகளும், "வகுப்புகள்" என்ற அழைக்கப்படும் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதாவது, பாரபட்சமும்ம், ஒடுக்குமுறையும் நிறைந்த இந்திய சாதிய சமூகத்தின் நீண்ட வரலாறு காரணமாக சமூக, கலாச்சார, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட அனைத்து சாதி குழுக்களுக்கும் சொந்தமான கூட்டு உரிமைகள்.
வகுப்பு என அழைக்கப்படும் இந்தப் பட்டியலில் புதிய பெயர்கள் (சாதிகள் அல்லது குழுக்கள்) சேர்க்கப்பட வேண்டுமானால், அரசு ஒரு குழுவை அமைத்து, அக்குழுவின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், சமூக, கலாச்சார, கல்வி ரீதியான பாதிப்புகளைக் கண்டறிந்து அதற்கேற்ப அரசாங்கம் செயல்படுவது வழக்கமான நடைமுறையாகும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வழங்கப்பட்ட 27% இட ஒதுக்கீடு இவ்வாறு தான் நடந்தது.
தனிப்பட்ட சூழ்நிலைகளில் அந்த குழு அல்லது சாதியைச் சேர்ந்தோர்கள் சிலவேறுபட்டாலும் கூட, அச்சாதிக் குழுவைச் சேர்ந்த அனைவரும் அந்த குழுவிற்குச் சொந்தமான இட ஒதுக்கீட்டு உரிமையைப் பெறத் தகுதியுடையவர்கள். இது வரை இந்தியாவில் இட ஒதுக்கீடுகள் செயல்படும் விதம் இதுவே. இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கை உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திரா சஹானி (1992) வழக்கில் பொருளாதார அளவுகோலை மட்டும் அடிப்படையாக வைத்து இட ஒதுக்கீடு தர முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
தற்போதைய 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் பொருளாதார நிலை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. இதை இரு வழிகளில் செயல்படுத்தலாம்.
முதலாவதாக, பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்படாத சாதிக் குழுக்களுக்கு புதிய 10% இட ஒதுக்கீட்டு உரிமையைத் தரலாம். இதுவரை இப்படியான விவாதங்கள் நடக்கவில்லை என்றாலும், இச் சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீட்டிற்குத் தகுதியான "பிரிவுகளாக" குஜராத்தின் படிதார், வட இந்தியாவின் ஜாட், மகராஷ்டிராவின் மராத்தாக்களைச் சேர்க்கத் தடை எதுவும் புதிய சட்டத்தில் இல்லை. இந்தச் சட்டத் திருத்தத்தின் பின்னணியில், மேற்சொன்ன படிதார்,, ஜாட், மராத்தா சாதியினரின் தீவிர இட ஒதுக்கீட்டுப் போராட்டங்களும் அடங்கும். இவ்வழியில் இவர்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டுமெனில், பொருளாதார பின் தங்கிய நிலை ஒட்டுமொத்த குழுவிற்கும் பொருந்த வேண்டும். வேறு சொற்களில் கூறுவதானால், மேற்சொன்ன சாதிகளின் பொருளாதாரப் பின் தங்கிய நிலை அச்சாதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் சராசரி அளவீடாக இருக்க வேண்டும். அவ்வகையில், முழு குழுவையும் (சாதியையும்) பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் என வகைப்படுத்த இயலும்.
இருப்பினும், இது குறித்து எழும் கேள்வி என்னவென்றால், சாதிய ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாகுபாட்டையும் ஒடுக்குமுறையையும் எதிர்கொள்ளாத உயர் சாதியினர் மத்தியில் இருக்கும் பொருளாதார நிலையில் (தனி நபர்) ஏற்றத்தாழ்வுகளை மட்டும் அடிப்படையாக கொண்டு, ஒட்டுமொத்த குழுவும் (சாதியும்) இட ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையதானது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள இயலுமா?
கிரிமிலேயர் எனச் சொல்லி, OBC வகுப்பினருக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதைப் போன்று, உயர்சாதியிலும் கிரிமிலேயர் பிரிவினரைத் தவிர்த்து விட்டு, மற்ற அனைத்து உயர்சாதி பிரிவினருக்கும் ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீடு கோருவதை பார்ப்ப்னர் உள்ளிட்ட உயர்சாதியினர் எப்படி நியாயப்படுத்துவார்கள்?
பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்கள், அரசின் அறிவிப்புகள், அதிகாரப் பூர்வ ஆதாரங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தால், மேற்சொன்ன முதலாவது வழியை நோக்கி பாஜக அரசு நகரவில்லை. மாறாக, தற்போது இட ஒதுக்கீடு பெறும் SC, ST, OBC வகுப்பினரைத் தவிர்த்துவிட்டு, பொருளாதார நிலை அடிப்படையில் பின் தங்கி இருக்கும் அனைத்து பிரிவினரும் "பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர்" என்று குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திசை நோக்கியே பாஜக அரசு செல்கிறது.
"பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர்" என்ற கருத்தாக்கம், அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் (பிரிவு 46) பயன்படுத்தப்பட்ட மொழியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறையின் பிரிவு 46 "பின் தங்கிய பிரிவினரின் கல்வி-பொருளாதார நலன்களை" மேம்படுத்துவது பற்றி பேசுகிறது. ஆனால் பாஜக அரசின் 103 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் "பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள்" என மாற்றுகிறது. இரண்டும் ஒன்றல்ல.
அதுமட்டுமல்லாமல், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்ட “வகுப்புகள்” என்று குறிப்பிடுவதைப் போல், பொருளாதார ரீதியாக பின்தங்கிய “பிரிவு” என எந்த ஒரு உயர் சாதியையும் அதன் சமூகப் பெயரால் அழைக்க வழி இல்லை. ஏனெனில், SC, ST, OBC சாதிக் குழுக்களைப் போல், பொருளாதார ரீதியாக பின் தங்கியதாகச் சொல்லப்படும் உயர்சாதிப் "பிரிவினருக்கு" வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட பின் தங்கிய சமூக அடையாளம் எதுவும் இல்லை.
எனவே, சமூக ரீதியான ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு இணையாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் என உயர்சாதியினரைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முயற்சி தவறானதும் வெறுக்கத்தக்கதும் ஆகும். ஏனெனில் அவை இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை. இருந்தபோதிலும், EWS இட ஒதுக்கீட்டை ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேசும் பாஜக அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் ஆண்டுக்கு 8 லட்சத்தை விட கூடுதலான குடும்ப வருமானம் கொண்ட, ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள நில உரிமை உள்ள உயர் சாதிப்பிரிவினரிடையே உள்ள பணக்காரர்கள் EWS இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கப் படுவார்கள் என்பதைக் குறிப்பிடுகின்றனர்.
EWS இட ஒதுக்கீட்டு ஆதரவுப் படையின் மேற்சொன்ன 8 இலட்ச ரூபாய் புள்ளி விவரத்தின் வெளிப்படைக் காரணம் என்னவென்றால், ஒன்றிய அரசு விதிகளின்படி, ஆண்டுக்கு 8 இலட்சத்திற்கு அதிகமான குடும்ப வருமானம் கொண்ட OBC சாதியினர் "கிரீமி லேயர்" என்று அடையாளம் காணப்பட்டு இட ஒதுக்கீட்டிற்கு தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுகின்றனர். அதாவது ஆண்டுக்கு 8 இலட்சத்திற்கு குறைவான குடும்ப வருமானம் கொண்ட OBC சாதியினர் இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்கள். அதே அளவுகோல் உயர்சாதிக்கும் பொருந்தும் என்பது பாஜக அரசின் கணக்கு. ஆனால் இரண்டும் சமமாக ஒப்பிடத்தக்கவை அல்ல. ஏனெனில், ஆண்டுக்கு 8 இலட்சத்திற்கு அதிகமான குடும்ப வருமானம் கொண்டவர்களைத் தவிர்த்து விட்டால், ஒவ்வொரு OBC சாதியும் ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீடு உரிமை கொண்டவர்கள். ஆனால், SC, ST, OBC அல்லாத உயர்சாதியினர், ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டிற்கு உரிமையுள்ளவர்கள் அல்ல. எனவே, உயர்சாதியினரைப் பொறுத்தவரையில், "கிரீமி லேயர்" என்ற அடையாளம் அர்த்தமற்றது.
கல்வி உரிமைச் சட்டமும் (RTE Act - 2009) EWS இட ஒதுக்கீடும்
கல்வி உரிமைச் சட்ட (2009) விதிகளின் மூலம் "பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர்" (EWS) வகை ஏற்கனவே சட்டத்தில் நன்கு நிறுவப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் ஏழைக்குழந்தைகளுக்கு அவர்களின் வீட்டருகில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு வழங்குகிறது. ஆனால் ஆழமாக ஆராய்ந்தால், கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள "பலவீனமான பிரிவினர் அல்லது பின்தங்கிய குழுவுக்கும் (Weaker Section or Disadvantaged Group)" 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ள "பொருளாதார ரீதியாக பின் தங்கிய பிரிவினருக்கும்” பெரிய வேறுபாடுகள் உள்ளன.
கல்வி உரிமைச் சட்டத்தில், "பின்தங்கிய குழு (Disadvantaged Group) " என்பது "பட்டியலின, பழங்குடியின, சமூக ரீதியாகவும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அல்லது சமூக, கலாச்சார, பொருளாதார, புவியியல், மொழியியல், பாலினம் உள்ளிட்ட காரணங்களால் பிற்படுத்தப்பட்ட குழுவாக வரையறுக்கப்படுகிறது. "பலவீனமான பிரிவு (Weaker Section)" என்பது அரசால் வரையறுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வருமான வரம்பை விட குறைந்த ஆண்டு வருமானம் கொண்ட பெற்றோருக்குச் சொந்தமான குழந்தைகள்" என வரையறுக்கப்பட்டுள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்தில் "பலவீனமான பிரிவினர்" என்பது, சாதி உள்ளிட்ட எந்த சமூக அடையாளத்தையும் குறிப்பிடாமல், வறுமையைக் குறிக்கும் ஒரு குறிப்பிட்ட வருமான வரம்புக்கு கீழே இருப்பதாகக் கருதப்படும் ஒரு தனிநபருடன் தொடர்புடையது. ஒவ்வொரு மாநில அரசும் வேவ்வேறு வகையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களில் பலவீனமான பிரிவினருக்கான வரம்புகளை நிர்ணயித்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் வரையறுத்துள்ள தகுதிகளுக்கு தகுந்த காரணங்கள் உள்ளன. அதற்கும் கூட்டு இட ஒதுக்கீட்டு உரிமை கொண்ட சாதியில் உள்ள கிரீமிலேயரை அடையாளம் காண்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. உதாரணமாக ஆந்திரப் பிரதேசத்தில் அறுபது ஆயிரத்தை (60, 000) விட குறைந்த ஆண்டு வருமானம் கொண்டவர்களும், டெல்லியில் 1 இலட்சத்தை விட குறைந்த ஆண்டு வருமானம் கொண்டவர்களும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அருகாமைப் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்கள். பாஜக அரசு அறிவித்துள்ள புதிய வகை 10% EWS ஒதுக்கீட்டுக்கு பரிந்துரைக்கப்பட்ட 8 லட்ச ரூபாய் ஆண்டு வருமானத்தை கல்வி உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச வருமானத்தோடு ஒப்பிடவே இயலாது. மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டைக் கொண்டது இரண்டும்.
இருப்பினும், கல்வி உரிமைச் சட்டம் குறித்து நடைபெற்ற அடுத்தடுத்த விவாதங்கள் இரண்டு வேறுபட்ட பிரிவுகளான பின்தங்கிய பிரிவினரையும் (Disadvantaged Group), பலவீனமான பிரிவினரையும் (Weaker Section) ஒன்றாக இணைத்து EWS எனப்படும “பொருளாதாரத்தில் பின்தங்கிய” ஒரே பிரிவாக மாற்ற உதவின.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரைக் கண்டறிய பயன்படுத்தப்படும் அளவுகோல் மாறினாலும், கல்வி உரிமைச் சட்டத்திற்குப் பின்னர் செயல்படுத்தப் பட்ட பலவேறு வறுமை நீக்கத் திட்டங்களுக்கு EWS எனும் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
பாராளுமன்றம் உருவாக்கிய புதிய சட்டத்தின் ஒரு பகுதியாக கல்வி உரிமைச் சட்டம் இருந்தாலும், தற்போதைய 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் போல, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளை (15, 16) மாற்ற முயலவில்லை. அதன் விளைவாக, முற்றிலும் வேறுபட்ட இரண்டு பிரிவினரை ஒரே சட்டத்தில் உள்ளடக்கும் வகையில் உருவாக்கப் பட்டாலும், எவ்வித சட்டக் குழப்பத்தையும் கல்வி உரிமைச் சட்டம் உருவாக்கவில்லை. 103 ஆவது சட்டத் திருத்தத்தின் நிலைமையோ வேறுவிதமாக உள்ளது.
2019 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைமையிலான அரசால் செய்யப்பட்ட இந்தச் சட்டத் திருத்தத்தின் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கம் என்னவெனில், EWS பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு நீதிமன்றங்களால் முன்பு போடப்பட்ட (50% இட ஒதுக்கீடு உச்ச வரம்பு, பொருளாதார அளவுகோல் போன்ற) தடைகளை மீறி உயர்சாதியினருக்கு ஆதரவாக ஒரு சட்டத்தை இயற்றுகிறோம் என்பதே. எனவே தற்போது நடைமுறையில் உள்ள SC, ST, OBC வகுப்பு இட ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தில் புதிய பிரிவுகள் 15(6), 16(6) சேர்க்கப்பட வேண்டிய தேவை இருந்தது. அதையும் பாஜக அரசு செய்து முடித்துள்ளது.
அவ்வகையில் உயர்சாதியைச் சார்ந்த சில தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் வரையறையை ஒட்டுமொத்த உயர் சாதியினருக்கும் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பாக, பாஜக அரசு பயன்படுத்தும் EWS எனும் அரசியல் சொல்லாடலின் உள்ளார்ந்த துல்லியமற்ற தன்மையும், வஞ்சகமும் மாற்றியுள்ளன.
தனிநபர் உரிமையை ஏன் சட்டமாக்கவில்லை?
கல்வி உரிமைச் சட்டம் (2009) போன்று, EWS இட ஒதுக்கீடும் தனிமனித உரிமையாக ஏன் சட்டமாக்கப்படவில்லை?
SC, ST, OBC அல்லாத, பொருளாதார ரீதியாக பின்தங்கிய தனிநபர்களுக்கு வேலைவாய்ப்பிலும் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கென அரசியலமைப்புச் சட்டத்தின் பொருத்தமான இடத்தில் புதிய பிரிவுகள் உருவாக்கபட்டு இருக்கலாம். எந்தெந்த தனி நபர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்பதைத் தீர்மானிக்கக் வரையறைகளை பின்னர் அறிவித்திருக்கலாம். அந்த வரையறைகளுக்கும் சாதிக் குழுக்களிடையே உள்ள "கிரீமி லேயரை" அடையாளம் காண்பதில் எந்த தொடர்பும் இருக்க வேண்டியதில்லை, ஏனெனில் EWS இட ஒதுக்கீடு ஒட்டுமொத்த மக்களுக்கும் அல்ல. மாறாக தனி நபர்களுக்கானது. ஆனால் அத்தகைய கட்-ஆஃப் வரையறைகளை பகிரங்கமாக அறிவிக்க மொத்த மக்கள் தொகையின் வறுமை நிலை குறித்த நம்பகமான சான்றுகள் தேவைப்படும். அத்தகைய புள்ளிவிவர தரவு பொது களத்தில் இல்லை. சாதிகளின் விரிவான சமூக-பொருளாதாரக் கணக்கெடுப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது, ஆனால் முடிவுகள் வெளியிடப்படவில்லை,
ஏனெனில் அவை அரசியல் ரீதியாக பல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை. அப்படிப்பட்ட ஆதாரமான தரவுகள் இல்லாத நிலையில், ஒரு தன்னிச்சையான வரையறை (Cut Off) சர்ச்சையைக் கிளப்பியிருக்கும். ஏனெனில் அப்படி அறிவிக்கப்படும் வரையறைக்கு (Cut Off) அருகில் இருப்பவர்கள் உடனடியாக வரையறையை (Cut Off) அதிகப்படுத்த கோருவார்கள்.
அதே வேளையில், EWS இட ஒதுக்கீட்டிற்கென தன்னிச்சையான தனிநபர் வரையறையை அறிவித்தால், இந்த EWS இட ஒதுக்கீடு உயர் சாதியினருக்கு தரப்படும் வரம் என விளம்பரப்படுத்துவதற்கான அரசியல் சாத்தியத்தை பறித்திருக்கும். மண்டல் குழு அறிக்கை பரிந்துரையின் பேரில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய தொடங்கிய உயர் சாதியினரின் அதிருப்தியை, கோபத்தை போக்க, எதேனும் ஒரு மருந்து தர வேண்டியிருந்தது. எனவெ அரிய வகை ஏழைகளின் அரிய வகை நோயை குணப்படுத்தும் அருமருந்தாக EWS இட ஒதுக்கீட்டை, பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டைப் போலவே, அரசியலமைப்புச் சட்டத்தின் 15, 16 ஆகிய இரு பிரிவுகளைத் திருத்தி உயர் சாதியினருக்கு வழங்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.
இதன் விளைவாக, உயர் சாதியினரில் 85-90 விழுக்காட்டினர், "பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர்" என்று வரையறுக்கப்பட்டு, 10% EWS இட ஒதுக்கீட்டிற்குத் தகுதியானவர்கள் என்ற அபத்தம் இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் வறுமையிலும், சமூகப் பாகுபாட்டிற்கும் பெயர் பெற்ற மிகக் கொடூரமான உதாரணங்களைக் கொண்ட இந்திய நாட்டில், வருமான வரி செலுத்துவோரையும் வசதி படைத்தோரையும், கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்று சொல்வதற்கு பாஜக அரசும் EWS இட ஒதுக்கீட்டின் ஏனைய ஆதரவாளர்களும் சங்கடப்படவில்லை. வெட்கப்படவும் இல்லை.
இனி என்ன நடக்கும்?
மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் தாராளவாத அரசியலமைப்பு கோட்பாட்டில் தனிநபர் உரிமைகளுக்கும் குழு உரிமைகளுக்கும் இடையிலான கருத்தியல் வேறுபாடு மிகக் கூடுதலாக விவாதிக்கப்படுகிற தலைப்பாக உள்ளது. அமெரிக்காவில் இனச் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பழங்குடியினரின் உரிமைகள், ஐரோப்பாவில் பன்முகக் கலாச்சாரம் தொடர்பாக கருத்தாக்கங்கள் அண்மைக்காலத்தில் அதிகமாக விவாதிக்கப்படுகின்றன.
அம்பேத்கர் தன் வாழ்நாளை தியாகம் செய்து நடத்திய அறிவுசார், அரசியல் போராட்டங்களின் விளைவாக, ஆண்டாண்டு காலமாக சமூகப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியினரின் ஒட்டுமொத்த உரிமைகளை ஒருங்கிணைத்த கோட்பாடு, நமது தாராளவாத அரசியலமைப்புச் சட்டத்தில் நன்கு நிறுவப்பட்டுள்ளது.
குறிப்பாக, சமூக ரீதியாக பின்தங்கிய சாதியினருக்கு வேலைவாய்ப்பிலும், கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கருத்தை நீதித்துறை தீர்ப்புகள் அங்கீகரித்துள்ளன. இது நமது இந்திய அரசியலமைப்புச் சட்டவியல் வரலாற்றில் மாபெரும் சாதனையாகும்.
103 ஆவது திருத்தத்தில் உள்ள சிக்கல் என்னவென்றால், சாதிய குழுக்களுக்கு சொந்தமான கூட்டு உரிமையை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கான அரசியலமைப்புச் சட்ட விதிக்குள் தனி மனித உரிமையை உயர்சாதியின் ஒட்டு மொத்த குழு உரிமையாக மாற்றும் கொள்கையை வஞ்சகமாக திணித்தது தான். இதனால் மென்மேலும் குழப்பமும் சமூக மோதல்களும் உருவாக வாய்ப்புள்ளது.
உச்ச நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்ட 50% இட ஒதுக்கீட்டு உச்ச் வரம்பு அரசியலமைப்புச் சட்டத்தின் வெளிப்படையான விதியால் மீறப்பட்டுள்ளது. இதனால் உயர்சாதியினர் அனைவரும் பொருளாதார அடிப்படையில் குழு இட ஒதுக்கீட்டிற்கான கோரிக்கையை தீவிரப்படுத்துவதற்கான எல்லா வாய்ப்புகளும் இப்போது உள்ளன. சாதிகளின் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு (வகுப்புவாரி பிரதிநிதித்துவம்) வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான கோரிக்கையை தீவிரப்படுத்தும்.
மேலும், இட ஒதுக்கீட்டிற்கான 50 விழுக்காடு உச்ச வரம்பு நீக்கப்பட்டுவிட்டால், அம்பேத்கர் முன்வைத்த வரலாற்று ரீதியாக பாகுபடுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு சமூக நீதி வழங்கும் நோக்கத்தை கொண்ட இட ஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையும் மாற்றப்படும். மாறாக பெரும்பான்மையினரின் ஏழ்மையைச் சரி செய்யும் பொருளாதார நடவடிக்கையாக மாறிவிடும். பெரும்பான்மையினரிடம் இந்த வாதம் வலுப்பெறுமானால், ஒடுக்கப்பட்ட சாதியினர் வரலாறு நெடுக எதிர்கொள்ளும் கூட்டு சமூகப் பாகுபாட்டைப் போக்குவதற்கான கருவியாக பயன்படுத்தப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கம் சிதைக்கப்படும். அதன் விளைவாக சாதி ரீதியாக இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக அகற்றப்பட்டு தனிநபர் பொருளாதார நிலை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் பொது விதியை இந்தியாவில் நிறுவுவதற்குப் பயன்படுத்தப்படலாம்.
சாதி ரீதியான இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக எப்போதும் நின்று, தனி நபரின் பொருளாதார் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டவர்கள், தற்போதை EWS இட ஒதுக்கீட்டை விமர்சிக்காமல், அதை வரவேற்றதற்கும் இதுவே காரணமாக உள்ளது.
புதிய 10% EWS இட ஒதுக்கீட்டுக்கு வழங்க எந்த வேலை வாய்ப்பும் அரசிடம் துறையில் இல்லை என்பது வேறு விஷயம். அதனால் தான் உயர்கல்வியில் கூடுதல் இட ஒதுக்கீட்டிற்கு பாஜக அரசு அழுத்தம் கொடுக்கிறது. இது ஒப்பீட்டளவில் செலவில்லாத ஜனரஞ்சகத் திட்டமாகப் பார்க்கப்படுகிறது. புதிய EWS இட ஒதுக்கீட்டுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படுமென ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது. அரசு முதலீடு செய்து கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தினால் மட்டுமே இப்படியான கூடுதல் இடங்களை உருவாக்க முடியும். அதற்கு தேவைப்படும் பணத்தை சரிசெய்ய, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை நிறுத்தவும், கல்விக் கடன்களை குறைக்கவும் அரசு முயற்சிக்கும். உயர் சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கூடுதல் இடமளிக்க தேவைப்படும் உள்கட்டமைப்புக்கு பட்ஜெட்டில் மேற்சொன்ன வகையில் வழிவகை செய்யப்படலாம்.
நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக விவாதித்து, ஆழமான சிந்தித்து, நன்கு ஆய்வு செய்து, வாதிட்டு சட்டம் இயற்றிய காலம் ஒன்று இருந்தது. இந்த விஷயத்தில் அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் நமக்கு முன்னுதாரணமாக உள்ளன. அதைப்போன்ற சமீப காலங்களில் கூட நாடாளுமன்றமும் நாடாளுமன்றக் குழுக்களும் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள்ளன.
தற்போதைய சூழ்நிலையில், தேர்தலில் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்ற கற்பனாவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோய்ந்து போய், மிகவும் பரிதாபகரமான முறையில் ஆளும் பாஜக அரசின் தேர்தல் சூழ்ச்சிக்கு அடிபணிந்தது வருத்தமளிக்கிறது. மாறாக தங்கள் கடமையை நீதித்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இது இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
- பார்த்தா சாட்டர்ஜி
நன்றி: thewire.in இணையதளம் (2019, ஜனவரி 18 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)
தமிழ் மொழியாக்கம்: நவீன் ஜெர்மனி