இந்த விளையாட்டு உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊரில் இந்த விளையாட்டு எங்கள் பதின் பருவத்து கால கட்டத்தில் பிரசித்தம். இப்போது இருக்கும் செல்வாசி எவனுக்கும் இந்த விளையாட்டு மட்டும் இல்லை... பெரும்பாலும் எந்த விளையாட்டும் தெரிவதில்லை. தெரிந்து கொள்ள அவர்களுக்கு விருப்பமும் இல்லை. தலையை குனிந்து உட்கார்ந்த இடத்திலேயே உரு போடுவது சுலபம். அதைத்தான் செய்கிறார்கள்.
சரி இந்த விளையாட்டுக்கு வருவோம்.
இந்த விளையாட்டின் பெயர் "பொண்டாட்டி கட்டுவது". அதாவது பசங்க விளையாடுவதால் இந்த பெயர் வந்திருக்க வேண்டும். புள்ளைங்க விளையாடி இருந்தால் "புருஷன் கட்டுவது" என்று ஆகி இருக்கும். ஆக... இது ஆணாதிக்க விளையாட்டு இல்லை என்று உறுதி பட கூறலாம்.
பெரும்பாலும் இந்த விளையாட்டை சனி ஞாயிறில் தான் விளையாடுவோம். ஏனெனில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒரு மணி நேரத்தில்... ரெண்டு மணி நேரத்தில் முடிந்து விடும் சமாச்சாரம் இல்லை. இது ஒரு நாள் முழுக்க கூட இழுத்துக் கொண்டு போய் விடும் தீவிரம்.
காலையில் 10 மணிக்கு கோயில் மைதானத்தில் கூடுவோம். யாரும் யாருக்கும் கூட்டணி கிடையாது. கூடி விளையாடினாலும்.. தனித் திறமை மட்டும் தான் வேலைக்கு ஆகும். அவனவன் வீரம் அவனவனுக்கு மதிப்பெண் பெற்றுக் கொடுக்கும். அடுத்த பத்து நிமிடத்தில் யாரெல்லாம் வந்து சேர்கிறார்களோ... அவர்கள் மட்டும் தான் ஆட்டத்தில். இடையில் வருகிறவர் யாருக்கும் இடமில்லை. ஒருவேளை யாராவது விட்டு கொடுத்து ஒதுங்கினால்.. அந்த இடத்துக்கு புதிதாக வருவோரை சேர்த்துக் கொள்ளலாம். அது தான் ரூல். ஜெயித்து கொண்டிருப்பவன் அப்படி விட்டுக் கொடுக்க மாட்டான். தோற்றுக் கொண்டிருப்பவன் இடத்திற்கு வர... எவனும் முன் வர மாட்டான். இது இயல்பு.
பத்து பேர் இன்று விளையாட கூடி இருக்கிறோம் என்றால்... சரி என்று பத்தோடு லாக் பண்ணி விட்டு... கோயில் சுவர் ஒட்டிய இடத்தில் பத்து குழிகள் ஒரே அளவில் தோண்டுவோம். அடுத்தடுத்து மேலே நான்கு... கீழே நான்கு... கீழே இரண்டு என பார்க்கவே அழகு கூடி குழிகள் காவு வாங்க தயாராக இருக்கும். யாருக்கு எந்த குழி வேண்டுமோ எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு எனக்கு ஐந்தாவது குழி என்றால் என் நம்பர் ஐந்து. இப்படியே ஒவ்வொருவருக்கும் ஒரு குழி. ஒரு நம்பர். இப்போது யார் வேண்டுமானாலும் முதலில் பந்து வீச தயாராகலாம். பெரும்பாலும் முதலில் பந்து வீச முன் வருவோன் கொஞ்சம் அனுபவசாலியாக தான் இருப்பான். அதாவது இந்த பூனைக்கு மணி கட்டும் எலி போல... அவன்.
இப்போது நானே வீசுகிறேன் என்று வைத்துக் கொள்ளலாம்.
எல்லாரும் என்னை சுற்றி பக்கவாட்டில் முன் பின் என்று ஓரடி இடைவெளி விட்டு தயாராக நிற்பார்கள். ஓடுவதற்கும் அதே நேரம் குழிக்குள் விழும் பந்தை அதே நொடியில் எடுப்பதற்கும்.
சரி... நான் பந்து வீசுகிறேன்.
ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து குனிந்து பத்து குழிகளையும் குறி வைப்பேன். எவன் குழி எது என்று எல்லாருக்குமே தெரியும் என்பதால் எனக்கும் தெரியும்தானே. நான் பார்த்து எந்த குழிக்குள் வேண்டுமானாலும் பந்தை உருட்டி விடலாம். நான் எனக்கு பிடிக்காதவனை தான் முதலில் குறி வைப்பேன். 'பாபு' குழிக்கு வீசுவது போல பாவனை காட்டி 'ஜான்' குழிக்குள் வீசி விடுவேன். ஐயோ நம்ம குழி தான் என்று தடுமாறி... ஓடுவதை விட்டு குழி பக்கம் தாவ நினைக்கையில்.. பந்து ஜான் குழிக்குள் விழ.. சொல்லாமல் கொள்ளாமல் மீண்டும் எகிறி ஓட ஆரம்பிப்பான் பாபு. இரண்டு அடி நகர்ந்து விட்டு... ஆனாலும் பார்வை... எந்த குழியில் பந்து விழுகிறது என்று தான் பார்க்கும். உடனே சுதாரித்துக் கொண்டு ஜான் எகிறி மீண்டும் குழி பக்கம் வந்து அவன் குழியில் விழுந்த பந்தை எடுத்து திரும்புவதற்குள் நாங்கள் எல்லாரும் ஓடி ஒளிந்திருப்போம். அல்லது யாராவது ஓட ஓடவே அவன் பார்த்தும் விடுவான். பார்த்த கணம் கையில் இருக்கும் பந்தால் எகிறி வீசுவான். குறி சரியாக இருந்தால் ஓடியவன் முதுகில் விழும். முதுகில் வாங்கியவனுக்கு ஒரு பாய்ண்ட்.
தன் குழிக்குள் விழுந்த பந்தை எடுத்து கண்ணில் படுவோன் மீது எறிவதும் அதில் இருந்து தப்பித்து ஓடி ஒளிவதும் தான் விளையாட்டு.
அரக்க பரக்க அங்கும் இங்கும் நகர தயாராக இருந்தாலும்...ஒவ்வொரு கண்ணுமே அவனவன் குழியைத்தான் உற்று நோக்கும். குழிக்குள் விழுந்த பிறகு தான்... அது நம்ம குழி இல்லை என்று முடிவுக்கு வந்து எகிறி ஓடி ஒளிய பார்க்கும். என் குழியில் விழுந்தது உணராமல் நானும் ஓடி ஒரு கட்டத்துக்கு பிறகு தெரிந்து ஐய்யயோ என ஓடி வந்து எடுத்து திரும்புவதற்குள் அங்கே ஒருவனும் இருக்க மாட்டான். ஆக... பந்து எந்த குழிக்குள் விழுகிறது என்று எல்லாருக்கும் தெரிவது முக்கியம். இருந்து அதை தெரிந்து கொண்டு ஓடுவது தான் பந்து விழுந்த குழிக்காரனுக்கான நேரம். தாக்குவதற்கு.
எல்லாமே நொடிகளின் சூட்சுமத்தில் இயங்க வேண்டிய துரிதம் தான் இந்த விளையாட்டில். அந்த நேர தடுமாற்றத்தில் ஆளாளுக்கு முன்னும் பின்னும் நகர்ந்து முட்டி மோதி தன் குழியில் விழவில்லை என்பதை உறுதி செய்து... அதே நேரம் விழுந்த குழிக்காரன்... ஓடி எடுத்து... அப்பப்பா... அந்த நொடி எறும்பு யுத்த சித்திரம் போல தலைக்கு மேலே நின்று பார்த்தால்.
ஒருவன் முதுகில் வாங்கி விட்டால்... ஆட்டம் முடிந்தது. இப்போது முதுகில் வாங்கியவன் பந்தை போட வேண்டும். மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும். சில நேரத்தில் யாருமே சிக்காமல் குறிப்பிட்ட நேரம் ஓடிவிட்டால்... பந்து வைத்திருப்பவன் தன் மீதே அடித்துக் கொண்டு பாயிண்டை பெற வேண்டும். ஆனால் அத்தனை சீக்கிரம் அது நடக்காது. அவன் வெறி கொண்டு தேடுவான். எங்கெல்லாம் ஒளிவார்கள் என்று அவனும் அறிவான் தானே. தேடி பதுங்கி குறி வைத்து பாய்ந்து இழுத்து... வெச்சு தீர்ப்பான். நேரம் கூட கூட வெறி ஏறிய கோபம் சுளீர் என முதுகு மண்டை முகம் கால் நெஞ்சு டிக்கி என எங்கும் வேணாலும் அடியாய் விழும். முடிந்தளவு விரட்டி விரட்டி அடிப்பதில் தான் விளையாட்டு சூடு பிடிக்கும். ஓடி ஓடி ஒளிவது தான் விளையாட்டின் உச்சம்.
விரட்டிக் கொண்டே துப்பாக்கியில் சுடுகையில் குனிந்து வளைந்து ஒளிந்து விழுந்து மறைந்து தப்பித்து சினிமாவில் ஓடுவது போல தான்... பந்து படாமல் தெறித்து பறந்து ஓடுவதில் நானெல்லாம் கில்லாடி. வளைந்து வளைந்து ஓடி பின்னால் விரட்டுபவனை குழப்பிக் கொண்டே ஓடுவது தான் விளையாட்டின் தேர்ச்சி. எப்போதும் வேகம்... அதோடு விவேகம். புத்தி கூர்மை.. உடல் வலிமை.. உள்ளத்தின் திடம்.. மூச்சு வாங்காமல் ஓடி ஒளிந்து தப்பித்துக் கொண்டே இருக்கும் ஒவ்வொரு கணமும் கனம் வாய்ந்த தீவிரம்.
ஒவ்வொரு முறையும் அதிக பாய்ண்ட் வாங்கி தோற்கும் நிலையில் இருப்பவன் கொலை வெறியில் சுற்றுவான். அவன் ஆட்டத்தின் தீவிர விளிம்பில் வேர்க்க விறுவிறுக்க இமைக்க மறந்து சுற்றுவான். கையில் பந்தோடு மைதானத்தின் நடுவே நின்று சுற்றி சுற்றி பார்க்கையில்... வெறி கொண்ட வேங்கை போல தெரிவான். கிணற்று மேட்டு பின்புறம்... கோயில் திடல் மறைவு... புளிய மர ஒளிவு.. காரை வீட்டு முதுகு.... தண்ணிக்குழி பாறை... என சுற்றிலும் ஒளிந்து இருக்கும் மற்றவர்கள் மூச்சு விடாமல் கவனித்துக் கொண்டிருப்பார்கள். மோரியில் அமர்ந்து... கோயில் திண்ணையில் அமர்ந்து.... ரேடியோ ரூம் வாசலில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் பெருசுகள் சத்தம் காட்டாமல் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சைக்கிளில் அந்த வழியே யார் சென்றாலும்.. பெல் கூட அடிக்காமல் மெதுவாய் கண்களை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே நகர்வார்கள். விளையாட்டு அத்தனை சுவாரஸ்யம் ஆக்கி இருக்கும்.
யாரும் காட்டி கொடுக்க மாட்டார்கள். எப்போதாவது பீடிக்கு ஆசைப்பட்டு கண்ணை காட்டி விடும் ஏதாவதொரு பெருசை... மானங்கெட பேசி... சில நேரம் பந்து அவரை நோக்கியும் பாயும்.
இன்னைக்கு எவன் மாட்ட போறானோ என்று எல்லாருக்குமே ஆர்வம் மேலோங்கும். திக் திக் நொடிகள்.. திடீர் என தில்லாலங்காடி செய்து தன்னை வீரன் என்று காட்டிக் கொள்ள 'லக்கி' எழுந்து ஒரு பக்க மறைவிலிருந்து இன்னொரு பக்கம் கத்திக் கொண்டே ஓட... அவனை விரட்ட பந்துக்காரன் திரும்ப... அதே நேரம் இந்த பக்கம் ஒருவன் வெளியே வந்து கத்திக் கொண்டே இந்த பக்கம் ஓட.. பந்துக்காரன் குழம்பி இப்போது இந்த பக்கம் திரும்ப அதற்குள் இன்னொருவன் அந்த பக்கம் ஓட... பந்துக்காரனை சுற்றி சுற்றி வெறுப்பேற்றி ஓடி ஒளிந்து சத்தமிட்டு.. பந்துக்காரன் இப்போது கிறுக்கேறி கண்ணுக்கு சிக்கியவனை நோக்கி வீசுவான். சில நேரம் படும். பல நேரம் படாது. அவன் குழம்பி இருப்பான். அப்படி குழப்பி விளையாட்டு காட்டுவதும் தான் விளையாட்டு. அதற்குள் மீண்டும் ஒளிந்து அமைதி ஆகி விடுவான்கள். பந்துக்காரன் மீண்டும் ஓடி சென்று பந்தை எடுத்துக் கொண்டு மீண்டும் தேட தொடங்குவான்.
இந்த பக்கம் நகர நகர அங்கிருக்கும் ஒளிந்தோர் அந்த பக்கம் நகர்ந்தபடியே நகரும் விளையாட்டு மதியமெல்லாம் உச்சிக்கு சென்றிருக்கும். திகு திகுவென தீயாய் பற்றி எரியும் விளையாட்டில் எல்லாருமே தீவிரமாய் இயங்குவார்கள். யாரும் மாட்டிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். யாரும் யாரையும் காட்டிக் கொடுக்கவும் மாட்டார்கள். ஆனால் ஓடும் போது ஒருவன் பின்னால் ஒருவன் மறைந்து.... ஓடி.... எப்படியும் தன்னை காத்துக் கொள்ள தான் ஒருவன் முயல்வான். ஒருவேளை அப்படி காட்டிக் கொடுத்தது கண்டுபிடிக்க பட்டால் அதன் பிறகு ஒரு மாசத்துக்கு ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
மதியம் சாப்பாட்டு இடைவேளை. மீண்டும் 3 மணிக்கு ஆட்டம் தொடரும். மாலை ஐந்து மனிதனுக்கு ஆட்டத்தை நிறுத்தி ஒன்று கூடுவார்கள். வேர்த்து நனைத்து.... வெளியே வரும் ஒவ்வொருவரும் அவனளவில் பெரிய ஆட்டக்காரனாய் இருப்பான். ஓர் அடி கூட வாங்காதவன் தான் அன்று தலை சிறந்தவன். அடுத்தடுத்து வாங்கிய அடியை பொறுத்து அடுத்தடுத்து ரேங்க் கொடுக்கப்படும். இருப்பதிலேயே அதிகம் அடி வாங்கியவன் தான் அன்று அடிமாடு. அவன் தான் அன்று பலி கெடா.
எல்லாரும் வீட்டுக்கு சென்று குளித்து வேறு ஆடை அணிந்து 7 மணிக்கு ஒன்று கூட வேண்டும். தோற்றவன்... பவுடர் பூசி... வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்டு பளபளவென வந்து ஆஜராகி விட வேண்டும். அதற்குள் கயிறால் மாலை செய்து தயாராக வைத்திருப்பார்கள். கொட்டு மேளத்துக்கு தகர டின்கள் தயாராக இருக்கும். கையில் கயிறில் தயாரித்த தாலி கூட ரெடியாக இருக்கும். இப்போது தோற்றவன் கையில் தாலியை கொடுத்து வீதிக்குள் ஊர்வலம் கூட்டி போவார்கள். கூட மற்றவர்கள் எல்லாம் டம் சுக் டம் சுக் என மத்தளம் அடித்து வாயாலே பீப்பி ஊதி.... வீதியில் எல்லாரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். விளையாட்டு தான். ஆனால்.. மாப்பிள்ளை உள்ளே தடுமாறி கிட்டத்தட்ட அழுதே விடுவான். கெஞ்சுவான். ம்ஹும். விட மாட்டார்கள். அதான் ஆட்டம் ஆரம்பிக்கும் போதே சொன்னோம்ல.... என்பான் தலைவன். ஊரே வேடிக்கை பார்க்க மாப்பிள்ளை.... கோயில் பக்கம் இருக்கும் ஒரு குத்து கல்லுக்கு தாலி கட்ட வேண்டும். வேறு வழியே இல்லை. கட்டுவான். மறுநாள் ஆளாளுக்கு ஒட்டுவார்கள். மூஞ்சை திருப்பிக் கொண்டு ஓடுவான். சிரிப்பாக இருக்கும். எல்லாமே சிரிப்புக்கும் விளையாட்டுக்கும் தான்.
தோற்று போயி தாலி கட்டி வெறி ஏறியவன் அடுத்த முறை மாட்டிக் கொள்ளவே மாட்டான். கவனம் கூடுதலாய் சேர்ந்து எப்படியும் தன்னை தற்காத்துக் கொள்வான். விளையாட்டிலேயே சீரியஸ் விளையாட்டு. அடிக்கடி மாப்பிள்ளையாகும் லக்கியெல்லாம் போகிற போக்கில் தாலி கட்டி விட்டு சிரித்துக் கொண்டே போவான். ஆரம்பத்தில் சீரியஸாக எடுத்துக் கொள்பவர்கள்.... போக போக... 'என்ன இப்போ தாலி தான.... நான் கட்டறேன்...இப்பவே கட்டி பழகறேன்... என்ன இப்ப குறைஞ்சிருச்சு..." என்று கெத்தாக அவர்களாகவே முன் வருவார்கள். சில பேர் வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்வதும் உண்டு. எல்லாரும் அவர்கள் வீட்டுக்கு போயி... "தோத்துட்டான்ல... வந்து தாலிய கட்டிட்டு போக சொல்லுங்க" என்று பேசி பஞ்சாயத்து பண்ணி கூட்டி போன நாட்களும் உண்டு.
ஒரு நாள் முழுக்க ஜெக ஜோதியாக இருக்கும் இந்த விளையாட்டில்... எல்லா விதமான தற்காப்பும்... புத்திசாலித்தனமும்... விடாமுயற்சியும்... தன்னை தான் தான் காத்துக் கொள்ள வேண்டும் என்ற சுய அக்கறையும்...அப்படியே தோற்று போனாலும் அதை எதிர்கொள்ளும் மன வலிமையும்.. தோல்வியை ஒப்புக்கொள்ளும் தைரியமும் என உடலுக்கும் உள்ளத்துக்கும் மிக பெரிய பயிற்சியாக இருக்கும். அதே நேரம் ஒருவனை வெச்சு செய்ய முடிவெடுத்து விட்டால்... கடலை மிட்டாய்.... கொடுத்து...கூட்டணி பலமாகி விட்டால்... சிக்கியவன் சின்னாபின்னமாகி விடுவான். ஆனால் அது அறம் இல்லை. கண்டு பிடிக்கப்பட்டால்... அந்த பலி எடுக்கும் லஞ்ச பேர் வழியை விலக்கி வைப்பதும் நடக்கும்.
என்னவோ யோசிக்க போயி... இந்த விளையாட்டு நினைவுக்கு வர... இதோ பதிவு செய்து விட்டேன். மனதுள் வந்து வந்து பறக்கும் பந்துகளிடம் இருந்து தப்பிக்கும் நினைப்புக்குள்... வேர்வையும் சூரியனும் கொட்டோ கொட்டென கொட்டுவது நினைத்தாலே இனிக்கிறது.
இன்னும் ஒரு விஷயம் சொல்லணும்.
ஒரே ஒரு முறை நான் தாலி கட்டி இருக்கிறேன். ஆனால் கட்டும் போது எதிரே நின்று சிரித்துக் கொண்டிருந்த மாலினி... யாருக்கும் தெரியாமல்.. என்னை நோக்கி கழுத்தை மெல்ல நீட்டி பின் மெல்ல இழுத்துக் கொண்டது கட்ட இருந்த அந்த கல்லில் பதிந்த அரைநொடி சிற்பம். இப்போதும் கண்களில் ஆசையாய் அசைகிறது.
- கவிஜி