மன்னர் காலம் போல் - எங்கும் நடக்கிறது சாதிவாத ஆட்சியே!
மக்கள் நாயக ஆட்சி நிலை பெற, மக்கள் அரசியல் அறிவும் பொறுப்புணர்ச்சியும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அப்படி இல்லாவிட்டால், சமுதாய சமுத்துவம் இல்லாத சமூகத்தில் நடப்பது மக்கள் நாயக ஆட்சியாக இருக்க முடியாது.
இந்திய மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேர் தீண்டப் படாத மக்கள். இவர்கள் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய எந்த சமூகத்தோடும் சமத்துவ உரிமையோடு பழக முடியாது; எந்தப் பொது இடத்திலும் மற்ற வகுப்பினருக்குக் கிடைக்கிற சமத்துவ வாய்ப்பு இவர்களுக்கு இன்னும் தரப்படுவதில்லை.
அதேபோல்-இந்து கோவில் கரு அறையில்-கடவுள், கடவுளச்சி சிலை அல்லது பொம்மை உள்ள இடத்தில் அர்ச்சகன் (அ) பூசாரி (அ) படைப்பவன் என்கிற சமயப் பணிக்கு, சத்திரியன், வைசியன், சூத்திரன், தீண்டப்படாதவன் என்கிற எந்த இந்து மதரக்காரனும் உரியவனாக இன்றும் ஆக முடியாது.
ஆட்சிப் பதவிகள் இரண்டு வகைப்படும்.
1. மக்களிடம் வாக்குப் பெற்று ஊராட்சித் தலைவர், ஒன்றியப் பெருந்தலைவர், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர், நாடாளு மன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், இந்திய அரசு அமைச்சர் முதலான அதிகாரமும், செல்வாக்கும் உள்ள மதிப்புறு பதவிகளுக்குத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவோர்.
2. கல்வித்தகுதி மூலம் ஏவலர், காவலர், எழுத்தர், கண் காணிப்பாளர், குறுவட்ட, வட்ட, மண்டல, மாவட்ட, மாநில மட்டத்திலுள்ள மாத ஊதியம், ஓய்வூதியம் பெறக் கூடிய-அரசு அதிகாரம் செலுத்தக்கூடிய பொறுப்புகளுக்குத் தேர்வு மூலம் தெரிந்து எடுக்கப்படுவோர்.
மேலே தேர்தல் மூலம் பதவி பெற்றிட முதலில் தான் சார்ந்த கட்சியில் செல்வாக்கோடு இருக்க வேண்டும். அது பணவசதியாலும், சொந்தச் சாதியினர் பெரும்பான்மையின ராக இருப்பதாலும் முடியும்.
கல்வித் தகுதி வழியாகப் பொறுப்புக்குவர, படித்த குடும்பம் என்கிற பின்புலமும் தகுதியும், உழைக்கும் பண்பும் வேண்டும்.
தேர்தல் மூலம் இந்தியா முழுவதையும் 1946 முதல் 1967 முடிய 21 ஆண்டுக்காலம் “சுதந்தரம் பெற்றுத்தந்த கட்சி-தியாகிகள் கட்சி-காந்தியார் கட்சி” என்கிற பெருமை யோடு காங்கிரசு ஆண்டது.
மேல்சாதிக்காரர்கள், பணக்காரர்கள் காங்கிரசில் பெரிய எண்ணிக்கையினராக இருந்தனர்.
இவர்கள் மாநில மட்டத்தில் தென்னாட்டிலும், வடகிழக்கி லும், செல்வாக்கு இழந்தனர்.
மத்தியில்-இந்திய ஆட்சியில் சனதா என்கிற சனசங்கம் மற்றும் லோகியா-ஜெயப்பிரகாஷ் சோசலிசவாதிகள் இணைந்த கூட்டாட்சி 1977இல் வந்து 1979 வரை நீடித்தது.
பின்னர் மீண்டும் 1980 முதல் 1990 வரை இந்திய அளவில் காங்கிரசு ஆண்டது.
தென்னாட்டில் தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கட்சிகள் 1967 பிப்ரவரி முதல் 2017 வரை 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து மாறி, மாறி ஆட்சி புரிகின்றன.
கேரளாவில் காங்கிரசுக் கூட்டணியும், கம்யூனிஸ்டுக் கூட்டணியும் மாறி மாறி 1957 முதல் ஆட்சி புரிகின்றன.
ஆந்திராவில் 1947 முதல் ரெட்டி-கம்மநாயுடு கட்சிகள் மாறி மாறி ஆட்சி நடத்துகின்றன.
கருநாடகத்தில் காங்கிரசு, பாரதிசய சனதா என மாறி, மாறி, பார்ப்பனர், லிங்காயத்தார், ஒக்களிகர் ஆள்கின்றனர்.
1977 முதல் ஒடிசா, அசாம், மேற்குவங்கம்-இவற்றில் எந்தக் கட்சியின் பேரால் என்றாலும் பார்ப்பனரும், காயஸ்தர் (அ) பட்வாரி (அ) பட்நாயக் (அ) போஸ் என்கிற மேல்சாதிக் காரர்களின் ஆட்சியே நடந்தது-நடக்கிறது.
வடக்கில் பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம்-இவற்றில் 1977 வரையில் பார்ப்பனர் ஆட்சியும், 1977க்குப் பிறகு யாதவ், குர்மி, லோதி, சமார் ஆதிக்கச் சாதிக்காரர்களும் ஆட்சிபுரிகிறார்கள்.
மேற்கு உபி, பஞ்சாப், அரியானா, இராசஸ்தான் பகுதிகளில் இந்து ஜாட் ஆதிக்கக் கட்சிகளும், சீக்கிய ஜாட் ஆதிக்கக் கட்சிகளும் ஆட்சி புரிகின்றன.
மகாராட்டிரம், குஜராத் முதலானவற்றில் பட்டேல் (அ) குர்மி சாதியினரின் ஆதிக்கம் உள்ள கட்சிகளின் ஆட்சிகள் நடை பெறுகின்றன.
கட்டுக்கோப்பாக சாதிவாதம் பேசும் கட்சிகளே இன்று செல்வாக்கோடு திகழ்கின்றன. அவர்களுக்கு முதலாவது வலிமை சொந்த சாதி எண்ணிக்கை வலிமை.
இப்படி சாதிவாத நாயக ஆட்சி நடைபெறுகிறதா, அல்லது மக்கள் நாயக ஆட்சி எல்லா வகுப்பு மக் களுக்கும் பங்கும் அதிகாரப் பதவியும் ஏறக்குறைய சமமாக உள்ள ஆட்சி இந்தியாவில்-எங்காவது நடக்கிறதா என்பதை நாம் எண்ணிப் பார்ப்போம்.