பாஜக ஆட்சி பொறுப்பிற்கு வந்த 2014 வருடம் முதல் இந்த நிமிடம் வரை தொழிலாளி வர்க்கம் குறிப்பாக விவசாயிகள் அரசை எதிர்த்து கேள்வி கேட்டாலோ, சிரமங்களுக்கு இடையிலும் முன்னேறினாலோ அதைக் கண்டு பொறாமையும் விமர்சனமும் வைப்பதில் தங்களுக்கென்று தனி வழியை மேற்கொண்டு இருப்பதை பல சம்பவங்கள் மூலம் பார்க்க முடிந்தது.

அய்யாக்கண்ணு விவகாரம்

அய்யாக்கண்ணு எனும் விவசாய சங்க நிர்வாகி பல நாட்களாக தலைநகர் தில்லியில் மோடி ஆட்சிக்கு எதிராக அறவழிப் போராட்டங்களைத் தொடரும்போது, அவர் மேலே “ஆடி கார் அய்யாக்கண்ணு. அவர் ஒரு விவசாயியா?” என்று வெளிப்படையாக அன்றைய பாஜகவின் தேசியத் செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட பல பாஜகவினர் விமர்சனமும் தனி மனித தாக்குதல்களில் ஈடுபட்டதோடு, அவர்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்தினார்கள்.

தில்லி விவசாயிகள் போராட்ட விவகாரம்

தில்லியிலே பாஜக கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை எதிர்த்து ஆறு மாத காலங்கள் போராடி வந்தவர்களைப் பார்த்து “இவர்கள் விவசாயிகள் அல்ல. தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள். இவர்கள் வாஷிங் மெஷின், ஹீட்டர், ஏசி போன்ற சகல வசதிகளோடு உல்லாசமாக இருக்கிறார்கள்” என்று அவர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்த்னார்கள்.

ராகுல் காந்தி T-SHIRT விவகாரம்

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ராகுல் காந்தி அவர்களின் ஜோடோ யாத்திரையில் "அவர் அணிந்திருந்த T-SHIRT விலை ரூ. 37,000/-. இளவரசர் இப்படி அணிந்து செல்கிறார்” என்றும் விமர்சனம் செய்து தனி மனிதத் தாக்குதலுக்கு உள்ளாக்கியது பாஜகவினர்.

முதல் இரண்டு சம்பவங்களும் விவசாயிகள் சார்ந்த ஒன்று. இடதுசாரிகளான எங்களைப் பொறுத்தவரை நம் விவசாயிகள் மாட மாளிகையில் சகல வசதிகளோடு வாழ வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். விவசாயிகளை வசதியாக வாழ வைப்பதில் தான் ஓர் அரசுக்கான வெற்றி இருக்கிறது. அப்படி வசதி வாய்ப்போடு வாழ்ந்தால் அதில் என்ன தவறு இருக்கிறது? அது நம் நாட்டிற்கும் நமக்குமான பெருமை தானே. அதேபோல், ராகுல் காந்தி அவரது ஆடைகளை தேர்வு செய்வதில் அவருக்கான உரிமை இருக்கிறது.

இந்த அடிப்படையில் தான் “நான் ஒரு ஏழை விவசாயி. எனக்கு சில ஆடுகளும் கொஞ்சம் நிலமும் இருக்கிறது.” என்று அண்ணாமலை சொன்ன போது அதில் விமர்சிக்க எதுவும் இல்லை. யாரும் விமர்சிக்கவில்லை. அண்ணாமலையின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவருக்கு 20.78 ஏக்கர் புன்செய் நிலமானது இன்றைய சந்தை மதிப்பு படி 1 கோடி இருப்பதாக அறிவித்து இருக்கிறீர்கள். அசையும், அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு 1,21,13,849/- என்று அறிவித்து இருக்கிறீர்கள். இது நடுத்தர வர்க்கத்தின் சொத்து மதிப்பு தான். ஆனால் உங்கள் ஆதரவாளர்கள் மற்றும் சில பத்திரிக்கையாளர்கள் BORN WITH SILVER SPOON என்பதைப் போன்று உங்களை மிகப் பெரிய நிலக்கிழார் என்பது போன்றும், நீங்கள் மிகப்பெரிய பண்ணையார் என்பது போன்றும் பூதாகரமாக உருவகப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள கூடாது என்பதை உங்கள் தேர்தல் பத்திரம் உறுதி செய்து இருக்கிறது.

21 ஏக்கர் புன்செய் நிலம் கொண்டவர் 7 லட்ச ரூபாய் பெறுமானம் உள்ள கைக்கடிகாரத்தை கட்டுவதில் எங்களுக்கு பெருமையும், இப்படி எல்லா விவசாயிகளும் மேன்மை அடைய வேண்டும் என்பதும் தான் எங்கள் கனவும் ஆசையும்.annamalai 670அண்ணாமலை அவர்கள் அணிந்திருக்கும் அந்த கைக்கடிகாரம் பற்றிய விவகாரம் பூதாகரமாக ஆகி இருக்கிறது. இந்த அளவுக்கு சர்ச்சை ஆகி இருப்பதற்குக் காரணம் அண்ணாமலை அவர்களின் தான்தோன்றித்தனமான, முதிர்ச்சி அற்ற பேச்சும், செயல்களும் தான். இந்த கைக்கடிகாரம் பற்றி பேச வேண்டுமானால் RAFALE பற்றியும் பேசி ஆக வேண்டி இருக்கிறது.

ரபேல் நிறுவனம்

RAFALE என்பது DASSAULT AVIATION எனும் பிரெஞ்சு நாட்டின் நிறுவனம் தயாரிக்கும் போர் விமானங்களின் பெயர். இந்த நிறுவனம் nEUROn, Falcon 6X, Falcon 8X எனும் பெயர்களிலும் போர்க் கருவிகளைத் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்த அடிப்படையில் தான் மன்மோகன் சிங் அரசு இந்தியாவுக்கான RAFALE ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசு, 2015 ஆம் ஆண்டு பழைய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு அதை விட அதிக விலைக்கு போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் இட்டது.

ரபேல் ஊழல் குற்றச்சாட்டு

RAFALE போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக சந்தேகம் எழுந்ததால் பாராளுமன்றத்தில் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பாஜக நிராகரித்ததன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இந்த போர் விமானங்கள் வாங்கியது தொடர்பான ஆவணங்களை இந்திய பாதுகாப்புத் துறையில் காணவில்லை, திருடு போய் விட்டதாக நீதிமன்றத்தில் பாஜக அரசு தெரிவித்ததன் அடிப்படையில், சர்ச்சைக்குரிய நீதிபதி ரஞ்சன் கோகோய் ஊழல் நடக்கவில்லை என்று தீர்ப்பு வழங்கினார். அதன் பிறகு அவர் பாராளுமன்ற உறுப்பினராக பாஜகவினரால் பதவியில் அமர்த்தப்பட்டார். இந்தியாவில் இந்த வழக்கு ஒரு விதமாக ஊற்றி மூடப்பட்டு இருந்தாலும், பிரான்சில் இந்தியா வாங்கிய போர்விமானங்களில் ஊழல் நடைபெற்றதற்கு முகாந்திரம் இருப்பதாக கூறி அங்கே வழக்கு நடைபெற்று வருகிறது.

RAFALE கைக்கடிகாரம்

DASSAULT AVIATION நிறுவனம் தனது 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு BR0394-RAFALE-CE எனும் பெயரில் பிரத்தியேகமாக வடிவமைத்து 500 கடிகாரங்களை மட்டும் சந்தைக்கு 2015 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. அதன் அன்றைய விலையாக $6,205/- (1$ = ரூ.59 – 2015ம் ஆண்டு) ரூ. 3.60 லட்சத்திற்கு விற்கப்பட்டது. 500 கைக்கடிகாரங்களும் 2017 ஆம் ஆண்டு விற்றுத் தீர்ந்து விட்டது.

பாஜக அண்ணாமலையும் அறிவற்ற பேச்சுக்களும்

தமிழக பாஜகவில் சமீப காலமாக உட்கட்சிப் பிரச்சினையில் பல்வேறு நபர்கள் மீதான விதவிதமான காணொளிகளும், உரையாடல்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி, திரு அண்ணாமலை அவர்கள் தான் இப்படியான HONEY TRAP செய்கிறார் என்று பாஜகவினர் கூறி வந்த நிலையில், அவர் கையில் இருக்கும் BR0394-RAFALE-CE விலை உயர்ந்த கடிகாரத்தின் மூலமாகவும் பதிவு செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த கைக்கடிகாரத்தை அவர் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார் என்ற தவல்கள் சமூக ஊடகங்களில் கசிந்தது. அந்த அடிப்படையில் தான் இவ்வளவு விலை உயர்ந்த கடிகாரத்தை திரு. அண்ணாமலை அவர்கள் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை என்ற செய்தியும் சமூக ஊடகங்களில் கசியத் துவங்கியது. இந்த கைக்கடிகாரத்தின் ரசீது இருந்தால் அதை சமர்ப்பிக்கச் சொல்லி அமைச்சர் செந்தில் பாலாஜி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

திரு அண்ணாமலை அவர்கள் தனது 18-03-2021 தேதியிட்ட தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இந்த கைக்கடிகாரத்தை பற்றிய தகவல் தாக்கல் செய்யவில்லை என்பது உறுதியானது. அதோடு இந்த கைக்கடிகாரத்தை அவர் பணியில் இருந்த காலத்திலேயே அதை அணிந்து வந்ததாக அவரது நெருங்கிய பெங்களூர் நண்பர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள். அவரது அந்தப் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பரவி வந்தன.

இதற்கிடையில் பத்திரிக்கையாளர்களிடம் திரு அண்ணாமலை அவர்கள், ரபேல் எனும் நிறுவனம் தயாரித்த 500 கடிகாரங்களில் தனது கைக்கடிகாரம் 149 என்றும், இது ரபேல் விமானத்தின் பாகங்களால் செய்யப்பட்டது என்றும், தேசபக்திக்காக வாங்கப்பட்டது என்றும், இது மே – 2021 லே வாங்கப்பட்டது என்றும், இதுவரை யாரும் செய்திடாத வண்ணம் அவர் அரசுப்பணியில் சேர்ந்த நாள் முதல் இன்றைய நாள் வரை தனது வங்கிப் பரிவர்த்தனைகளையும் தன்னை விட 7 மடங்கு வருமானம் ஈட்டும் தனது மனைவியின் வங்கி கணக்கையும் தான் பாத யாத்திரை புறப்படும்போது சமர்ப்பிப்பதாகவும் கூறினார். அதோடு இதே போல ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும் தான் அரசியலுக்கு வந்த பின்னர் தனது மனைவியோடு எங்கும் செல்வதில்லை என்றும், தனது மீது சேறு வீசுபவர்கள் மனைவி மீதும் வீசுவார்கள் என்பதால் அப்படி செல்வதில்லை என்றும் சொல்லி இருந்தார்.

திரு அண்ணாமலை அவர்கள் காவல்துறையில் பணியாற்றியவர். அவரின் இந்தப் பேட்டியின் மூலம் நமக்கு எழும் கேள்விகள்:-

• ஒவ்வொரு அதிகாரியும் வருடா வருடம் தனது வரவு செலவு, தனது மற்றும் தனது குடும்பத்தார் பெயரில் இருக்கும் அசையும், அசையா சொத்துக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி. இது திரு அண்ணாமலை அவர்களுக்குத் தெரியாதா? ஏதோ இதுவரை இல்லாத ஒன்றை இவர் தான் புதிதாக கடைபிடிக்கப் போவதைப் போன்று பிதற்றுவது எதற்காக?

• ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறையில் தனது வருமான விபரங்களை வருமான வரி வரம்புக்கு உட்பட்ட அனைவருமே தாக்கல் செய்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களும் தாக்கல் செய்கிறார்கள். இதுவும் அண்ணாமலைக்குத் தெரியாதா? அப்படி தாக்கல் செய்யும் கணக்கு வழக்குகள் மீள் பரிசோதனைக்கு எட்டு வருட காலம் வரை உட்பட்டது என்பது அண்ணாமலைத் தெரியாதா?

• நாகரீகமான அரசியலில் இருக்கும் தமிழகத்தை, தமிழக மக்களை நோக்கி சேறு வாரி இறைப்பது போல தனது குடும்பத்தார் மீதும் இறைப்பார்கள் என்று பேசி இருப்பது தமிழக மக்களை அவமதிப்பது ஆகாதா? பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கும் பழக்கம் உள்ள தமிழகத்தில் பிற்போக்குத்தனமான வாதங்களை வைப்பது அண்ணாமலைக்கு இழுக்காகத் தெரியவில்லையா?

• யாரும் உங்களது மனைவியின் வருமானத்தைப் பற்றி பேசாத பொழுது, அவர்கள் அனுமதி இன்றி அவர்கள் அண்ணாமலையை விட ஏழு மடங்கு அதிகமாக ஈட்டுவதாக, தங்கள் தேர்தல் பத்திரத்தில் காட்டப்பட்டு இருக்கும் தரவுகளை மீறி பொய்யான தரவுகளைத் தந்திருக்கிறீர்களே.. இது அண்ணாமலைக்கு அவமானமாக இல்லையா? நீங்கள் சொல்லும் 7 மடங்கு வருவாய் என்பது கூட உங்களது தேர்தல் பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் பொய்யானது என்பது நிரூபணம் ஆகிறது.

• கடந்த காலங்களில் தாங்கள் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலே “காயத்ரி ரகுராம், குஷ்பு ஆகியோர் என்னை சந்திக்க வரும்போது, நான் எனது அறைக்கதவுகளை திறந்து வைத்து தான் சந்திப்பேன்” என்பதுவும், “காயத்திரி ரகுராம் துபாய் ஹோட்டல் அறையிலே என்ன செய்தார் என்பது எனக்குத் தெரியும்” என்பதுவும் பெண்களை இழிவுபடுத்துவதாகவும், தனி நபரின் படுக்கை அறைக்குள் எட்டிப் பார்க்கும் அவலமான செயல் என்பதுவும் உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் சேற்றை வாரி மற்றவர்கள் மீது பொதுவெளியில் பூசிவிட்டு, உங்கள் குடும்பத்தாரை இதில் இழுக்கலாமா?

அண்ணாமலையும் ரபேல் கைக்கடிகார சிக்கல்களும்

இந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அண்ணாமலை அவர்கள் 2016லிருந்தே பயன்படுத்தி வந்ததாக அவரது நெருங்கிய நண்பர்கள் காணொளி வாயிலாகவும், புகைப்படங்கள் வாயிலாகவும் ஆதாரங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். அப்படி அண்ணாமலை அவர்கள் இதை வாங்கி இருந்தால் கீழ்க்கண்ட சட்டப்பூர்வமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

1. பணியில் இருக்கும் காலத்தில் அன்பளிப்பாக வாங்கி இருந்தால், அதற்கான அனுமதியை பெற்று இருக்க வேண்டும். அதோடு அவரது ஆண்டு அறிக்கையில் இதற்கான மதிப்பைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

2. பணியில் இருக்கும் காலத்தில் விலைக்கு வாங்கி இருந்தால், அதற்கான இறக்குமதி வரியை கட்டி இருக்க வேண்டும். அந்த ரசீது அவரிடம் இருக்க வேண்டும். அவரிடம் இல்லை.

3. மே மாதம் 2021 தேர்தலுக்குப் பின்னர் தான் வாங்கியதாகச் சொல்லும் அண்ணாமலை, அவர் என்ன விலைக்கு இறக்குமதி செய்தார், இறக்குமதி செய்யும்போது அவர் கட்ட வேண்டிய இறக்குமதி வரி, சுங்க வரி அனைத்தும் கட்டி அதன் இன்றைய மதிப்பீட்டிற்கு அவரது வருமான வரி 31-03-2022 வரைக்குமான அறிக்கையில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அதை அவர் குறிப்பிடவில்லை.

4. இவர் வாங்கியதாகச் சொல்லும் 149 வது கைக்கடிகாரம் விற்கப்பட்ட ஆண்டு 2016. ஐந்து ஆண்டுகள் கழித்து அண்ணாமலை கைகளில் அது எப்படி வந்திருக்கும்? அவர் நேரடியாக வாங்கியதாக அறிக்கை விடுகிறார். இதுவும் சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.

5. இந்த கைக் கடிகாரத்தை யார் வாங்கி இருந்தாலும் அவர்கள் அதற்குரிய பணத்தையும், வரியையும் கட்டிய ரசீதை சமர்ப்பித்தாக வேண்டும். அவை இரண்டும் அண்ணாமலையிடம் இல்லை என்பது நமக்குக் கிடைத்த தகவல்கள்.

தொடர்ந்து உண்மைக்குப் புறம்பாக, பொய்களால் அண்ணாமலை மலிவு அரசியல் செய்வதை தமிழக மக்கள் புரிந்து கொண்டார்கள். தமிழக மக்களை இன்னும் முட்டாள்கள் என்று நினைத்து இதே நடவடிக்கையைத் தொடர்ந்தால் அண்ணாமலை அரசியல் களத்தில் இருந்து தூக்கி எறியப்படுவார். ஆகவே பரிதாபத்திற்கும் பச்சாதாபத்திற்கும் உணர்ச்சி வயப்படுதலுக்கும் தமிழக மக்கள் மயங்கிவிட மாட்டார்கள் என்பதை மனதில் கொண்டு ஆரோக்கியமான பண்பட்ட அரசியலை அண்ணாமலை முன்னெடுக்க வேண்டும். ஆனால் அத்தகைய வரலாறோ, முன்னுதாரணமோ பாஜகவில் இல்லை என்பதுதான் மிகப்பெரிய அவலம்.

- ஆர்.எம்.பாபு, கிளைச் செயலாளர், இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஜீவா நகர் 2வது தெரு கிளை, 78வது வார்டு, மதுரை மாநகர் மாவட்டம்

Pin It