தமிழக அரசு சில நாட்களுக்கு முன்னால் 'நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' என்ற புதிய திட்டத்தை அறிவித்திருக்கின்றது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் தனியார் தொழில் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை நேரடியாகத் தத்தெடுக்கலாம் என்பதும், பல்வேறு கட்டுமான அமைப்புகளை ஏற்படுத்தித் தரலாம் என்பதும், அதற்கு முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு உதவலாம் என்பதும்தான்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தனியார் நிதிப் பங்களிப்பின் உதவியுடன் அரசுப் பள்ளிகளின் கட்டுமானத்தை பலப்படுத்த முடியும், மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்க முடியும் என்ற தோற்றத்தை அரசு ஏற்படுத்துகின்றது.
இந்தத் திட்டத்திற்கு முன்பும் கூட பலபேர் அரசுப் பள்ளிகளுக்கு தேவையான விளையாட்டுப் பொருட்கள், பெஞ்ச், டேபுள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, ஏன் சில கட்டிடங்கள் கூட கட்டிக் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் அவை எல்லாம் அரசின் அனுமதி பெற்றே செய்ய முடியும் என்பதோடு எந்த தனிநபரும் அரசுப் பள்ளியின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது.ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளின் சாவி தனியார் முதலாளிகளிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
1990களில் கொண்டு வரப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம் (SSA) உள்ளிட்டவை பொது மற்றும் தனியார் பங்களிப்பு (Public Private Partnership - PPP) என்ற பெயரில் அரசுப் பள்ளிகளை படிப்படியாகத் தனியார் வசம் ஒப்படைக்க ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தன
தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் 'நம்ம கல்வி பவுண்டேசன்' திட்டம் கூட தேசிய கல்விக் கொள்கை 2020 இல் கூறப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக தனியார் சமூக பங்களிப்பு (Corporate Social Responsibility) என்ற வகையில் அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கலாம் மற்றும் அதற்கு முன்னாள் மாணவர்கள் நிதி உதவி செய்யலாம் என்பதையே செயல்படுத்தியுள்ளது.
ஒருபக்கம் தேசிய கல்விக் கொள்கை 2020யை தாங்கள் எதிர்க்கின்றோம் என்று தமிழக அரசு சொன்னாலும் மறைமுகமாக அதைத் தீவிரமாக செயல்படுத்தியே வருகின்றது.
ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தும் அந்தப் பணிக்கு நிரந்த ஆசிரியர்களை நியமிக்காமல் அற்ப ஊதியத்திற்கு ஒப்பந்த முறையில் ஆசிரியர்களை நியமனம் செய்யும் அரசு ‘இல்லம் தேடி கல்வி’ போன்ற திட்டங்கள் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு தன்னார்வளர்கள் மூலம் பாடம் எடுக்கின்றேன் என்று ஒட்டுமொத்தமாக ஆசிரியர் சமூகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருகின்றது. இவை எல்லாம் தனியார்மயக் கொள்கைகளை அப்பட்டமாக திணிக்கும் செயல்பாடாகும்.
அரசுப் பள்ளிகளுக்காக செலவிடப்படும் தொகையை தேவையற்றதாகவும், அரசுப் பள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக நாசமடையச் செய்து முழுவதுமாக கல்வியை சந்தையில் காசு கொடுத்து பெற்றுக் கொள்ளவுமான திட்டத்தோடு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகின்றது.
'நம்ம ஸ்கூல் பவுண்டேசன்' திட்டத்தின் மூலம் நிச்சயமாக அரசுப் பள்ளிகளின் தரம் மேம்படாது என்பது குறைந்தபட்சமாக மூளை சிந்திக்கும் திறன் உள்ள அனைவருக்குமே தெரியும். காரணம் எந்த ஒரு முதலாளியும் தன்வர்க்கத்தை கட்டிக் காப்பாற்ற போராடுவானே தவிர தனது வர்க்க எதிரியைக் காப்பாற்ற போராட மாட்டான்.
தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் படிக்கும் மாணவர்களின் மனங்களில் தாங்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள் கொடுக்கும் பிச்சைக் காசில் படிக்கும் பிச்சைக்காரக் குழந்தைகள் என்ற தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தவே இந்தத் திட்டம் உதவும்.
2020 நிதியாண்டில், கல்வித் துறையின் சந்தை மதிப்பு இந்தியா முழுவதும் சுமார் 117 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இந்த சந்தை மதிப்பு 2025 நிதியாண்டில் 225 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படி கொழுத்த லாபத்தைக் கொடுக்கும் தனியார் கல்வியை எவனாவது ஒழித்துக் கட்ட துணிவானா?
அதுவும் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளி, கல்லூரிகளை நடத்தும் அரசியல்வாதிகள் மனச்சுத்தியோடு அரசுப் பள்ளிகளை மேம்படுத்த உதவுவார்கள் என்றுதான் நாம் நம்ப முடியுமா?
இன்று அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் சேர்வதற்கான காரணம் அரசுப் பள்ளிகளின் உள் கட்டமைப்பு மிக மோசமாக இருப்பதே ஆகும்.
37579 அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவர்களும் 8328 தனியார் பள்ளிகளில் 64,15,398 மாணவர்களும் படிக்கின்றார்கள். அரசுப் பள்ளிகளைவிட நான்கு மடங்கு குறைவாக இருக்கும் தனியார் பள்ளிகளில் அரசுப் பள்ளிகளைவிட அதிகம் மாணவர்கள் படிக்கின்றார்கள். இது எப்படி சாத்தியமானது?
2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் படி தமிழகத்தில் 2,391 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்ற தகவலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறையிடம் சமர்ப்பித்துள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறை அரசாணை நிலை எண் படி, 20 மாணவர்களுக்கு 1 சிறுநீர் கழிவறையும், 50 மாணவர்களுக்கு 1 மலக் கழிவறையும் இருக்க வேண்டும். ஆனால் நடப்பிலோ அப்படி இருப்பதில்லை என்பதோடு பயன்படுத்துவதற்கே தகுதியற்ற சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் நிலையில்தான் அரசுப் பள்ளிகளின் கழிப்பறைகள் உள்ளன.
மேலும் 1,000 - 2,000 பேர் பயிலும் பள்ளிகளில் கூட வெறும் ஒன்றிரண்டு தூய்மைப் பணியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பள்ளிக் கழிப்பறை பராமரிப்புத் திட்டத்தின் கீழ் பஞ்சாயத்து ஒன்றியப் பள்ளிகள், கிராமப்புறப் பள்ளிகளுக்கு மாதந்தோறும் ஒதுக்கப்பட்டு வந்த நிதியை அரசுகள் முறையாக வழங்காததுதான்.
இதனால் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களின் மேல்நிலைப் படிப்புக்கு செல்வது குறைந்துள்ளதோடு இடைநிற்றல் விகிதமும் அதிகரித்திருக்கின்றது. அதாவது, 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது. இவர்கள் 9, 10-ம் வகுப்போடு தங்களின் பள்ளிக் கனவையே இழக்கின்றனர். 2019-20ல் தமிழ்நாட்டின் மொத்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 9.6% ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளிகளில், மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 16% ஆக உள்ளது. இப்படி பல மாணவ, மாணவியர் இடைநிற்றலுக்கு உள்ளாவதால், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது
மாணவர்களுக்கான கழிவறை வசதியைப் பொறுத்தவரை 99.74% பெற்று மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான 99.92% கழிவறை வசதியுள்ளது. தமிழ்நாடு அதன் அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் கேரளாவுடன் ஒப்பிடுகையில் சற்று பின்தங்கி 97.33% சதவீதமே உள்ளது.
பெரிய திராவிட மாடல், வெங்காய மாடல் என்று உருட்டினால் மட்டும் போதாது என்பதை தமிழ்நாடு அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏற்கெனவே கல்விக்கென மக்கள் தனியாக செஸ் வரியை வேறு அழுதுகொண்டுதான் இருக்கின்றார்கள். தற்போது மத்திய அரசு 27.9 சதவீதம் செஸ் வரியை வசூலிக்கின்றது. இந்த வரியை மொத்தமாக மத்திய அரசே சுருட்டிக் கொள்கின்றது என்பது உண்மைதான். ஆனால் அதைப் போராடி வாங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு இருக்கின்றது.
மேலும் பள்ளிக்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை பன்மடங்கு அதிகரிப்பதும், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும், மிகச் சிறந்த ஆய்வக வசதி, நவீன தொழில்நுட்பங்களை கற்றலுக்குப் பயன்படுத்துதல், நிரந்தர ஆசிரியர்களை நியமித்தல், மாணவர்கள் பள்ளிக்கு வந்துபோக தனியாக பேருந்து வசதிகளை செய்து கொடுத்தல், கழிப்பறை வசதியைக் கட்டாயமாக்குதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆனால் இன்று தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் நம்ம கல்வித் திட்டமும் அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கும் வேணு சீனிவாசன் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்கள் யார்? இதுவரை இவர்களின் சமூக பங்களிப்பு என்னவாக இருந்தது?
குறிப்பாக டிவிஎஸ் குழுமத் தலைவரான வேணு சீனிவாசன் யோக்கியமான நபரா? இவர் மீது எத்தனை குற்றப் பின்னணி உள்ளன! ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழக கோவில்களை புனரமைப்பதாகச் சொல்லி அதற்கு பொறுப்பேற்று முழு அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டு இவர் ஆடிய ஆட்டங்கள் கொஞ்சமா? நஞ்சமா?
எந்தக் கோவிலை இவர் புனரமைப்பதாக பொறுப்பு ஏற்றாலும், அந்தக் கோவிலில் அறநிலையத் துறையின் அதிகாரம் செல்லாக் காசாகிவிடும். கோவிலையும், அர்ச்சகர்களையும் தன் கண்ட்ரோலில் கொண்டு வந்த வேணு சீனிவாசன், அந்தந்த கோவில்களில் உள்ள அரும்பெரும் சிலைகளை அபகரித்து வந்ததாக குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்தன. இவர் மீது ரங்கராஜன் நரசிம்மன் என்ற பெருமாள் பக்தர் பல திருட்டு வழக்குகளை போட்டுள்ளாரே, அது எல்லாம் விடியல் அரசுக்குத் தெரியாதா?.
ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதும், அவர்கள் வசிக்கும் பகுதியில் கழிப்பறைகள் கட்டிக் கொடுப்பதும், மின் விளக்குகள் அமைத்துக் கொடுப்பதும், கோயில் உண்டியலில் பணம் போடுவதும், கோயில் திருப்பணிகள் செய்து தருவதும் ஒருவனை நேர்மையானவனாகக் காட்ட போதுமானது என்றால், இந்தியாவில் இருக்கும் சாராயம் காய்ச்சுபவன், கள்ளக்கடத்தல் செய்பவன், விபச்சாரத் தொழில் செய்பவன், கல்வி வியாபாரம் செய்பவன், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் என அனைவருமே உத்தமர்கள் வரிசையில் வந்துவிடுவார்களே!.
குறைந்தபட்ச நேர்மையும் நாணயமும் உள்ள யாரும் இதுபோன்ற நபர்களுக்கு யோக்கியன் என்ற சான்றிதழைக் கொடுத்து அவர்களிடம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் வாழ்க்கையை ஒப்படைக்கத் துணிய மாட்டார்கள்.
பல ஆயிரம் பேரை வைத்து ஒரு தொழிற்நிறுவனம் நடத்தி உற்பத்தியை உலக சந்தையில் கொண்டுபோய் விற்று, பணம் சம்பாதிப்பதைவிட பஞ்சலோக சிலைகளையும், ஐம்பொன் சிலைகளையும், சோழர், பல்லவர் கால கற்சிலைகளையும் திருடி விற்பது மிகவும் லாபகரமான தொழில் என்று குறுக்கு வழியில் கல்லா கட்ட விரும்பிய நபர் பவுண்டேசனுக்கு வரும் நிதியை சரியாகக் கையாள்வார் என்று விடியல் அரசு நினைத்தது ஒன்றும் சாதாரணமானதல்ல.
அடுத்து விஸ்வநாதன் ஆனந்த என்ற அம்மாஞ்சியை எதற்காக பொறுப்பில் போட்டார்கள். இதுவரை அவர் எத்தனை அரசுப் பள்ளிகளுக்கு போய் அங்கிருக்கும் மாணவர்களுக்கு செஸ் பயிற்சியைக் கொடுத்திருக்கின்றார். அல்லது குறைந்த பட்சம் அரசுப் பள்ளியில் அவரது காலடியாவது பட்டிருக்கின்றதா?
ஒருபக்கம் சங்கிகளை எதிர்ப்பதாக நாடகமாடும் விடியல் அரசு, மற்றொரு பக்கம் சங்கிகளை திருப்திபடுத்தவே பார்ப்பனர்களை அதுவும் துப்புகெட்ட பார்ப்பனர்களை நியமித்திருக்கின்றது.
எல்லா வகையிலுமே மோசடியான செயல்பாடுகள் மூலம் இந்த‘நம்ம ஸ்கூல் பவுண்டேசன்’ திட்டம் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது. நாளையே அரசு மருத்துவமனைகளை நடத்தவும், அரசுக் கல்லூரிகளை நடத்தவும் ஏன் அரசு அலுவலகங்களை நடத்தவும்கூட இந்த அரசு தனியாரிடம் பிச்சை எடுக்கும் நிலைக்குச் செல்லலாம்.
தனியார்மய, உலகமயக் கொள்கைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவு செய்வதில் இருந்து விலக்கி பணக்காரர்களின் அடியாளாக செயல்பட மட்டுமே அனுமதிக்கும் என்பதற்கும், எளிய மக்களின் வாழ்க்கையை பணக்காரர்களே முடிவு செய்யும் நிலையை அதுபோன்ற அரசுகள் ஏற்படுத்தும் என்பதற்கும் விடியல் அரசு கொண்டு வந்திருக்கும் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேசன்’ திட்டமே ஒரு பெரிய சான்று.
- செ.கார்கி