Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கடந்த 5ம் தேதி மக்கள் அதிகாரம் அமைப்பினர் அழைப்பு விடுத்த டாஸ்மாக் மூடும் போராட்டத்தில் நடந்த காவல் துறையின் அராஜக நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. சாராய வியாபாரிகளுக்கும் ஆளும் அதிகார கும்பல்களுக்கும் , தான் ஒரு ஏவல் நாயே என மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது காவல் துறை. போராடும் மக்களையும், உரிமைகளைத் தட்டிக் கேட்கும் புரட்சிகர அமைப்புகளையும் வேட்டையாடும் வெறிநாயாகவே அது வலம் வருகிறது.

காவல் துறையின் காட்டுமிராண்டித் தனத்தில் பலர் தாக்கப்பட்டைதையும், கை கால் உள்ளிட்ட இடங்களில் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டதையும் , இரத்தம் சொட்டச் சொட்ட பெண்கள் அலறி ஓடியதையும் மக்கள் பரிதாபத்தோடும், பீதியோடும் ஊடகங்களில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சி ஊடகங்களில் தேர்தல் நேரத்தில் இத்தகு போரட்டம் தேவையா? சகல கட்சிகளும் மது விலக்கை தத்தமது தேர்தல் அறிக்கையில் வைத்திருக்கும் போது, யாருக்கு சாதகமாக இப்போராட்டம் நடத்தப்பட்டது? என்பது போன்ற கேள்விகளை முன்வைத்து விவாதித்து வருகின்றன.

போராட்டமும் சூழலும்:

பொதுவாக ஒரு போராட்டம் என்றால் அதில் அதன் நோக்கம் எவ்வளவு முக்கியமானதோ, அதே போல அது நடத்தப்படும் காலமும், நேரமும் முக்கியமான ஒன்று. மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திய போராட்டமும் அவர்கள் வைத்த முழக்கமும் "காலத்தே பயிர் செய் " என்பது போல் இல்லாமல் ஏதோ ஓர் உள்நோக்கங் கொண்டு நடத்தப்பட்டது என்ற பரவலான விமர்சனங்களை நம்மால் முழுமையாக புறக்கணிக்க இயலவில்லை. ஏற்கனவே வைத்த ஆகஸ்ட் 31 என்ற கெடுவும், அதன்பின்னிட்டு நடந்த போராட்டங்களுக்கும் தற்போது மே 5 ம் தேதி கடைகளை மூடுவோம் என்பதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

தி.மு.க உடனான பு.ஜ குழுவினரின் மென்மையான போக்கு:

மக்கள் அதிகார‌ அமைப்பை பின்னால் இருந்து இயக்கும், நக்கசல் பாரி வழிமுறையை உள்வாங்கிக் கொண்ட மகஇக தோழமை அமைப்புகளும், அடிநாதமான மாநில அமைப்புக் கமிட்டியும், சமீப காலமாக திமுகவின்பால் ஒருசார்பான கருத்தைக் கொண்டுள்ளதோ எனும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பாடகர் கோவன் கைதுக்குப் பிறகு, கைதுக்கு கண்டனம் தெரிவித்த வைகோ, ராமதாஸ் ஆகியோரை சந்திக்காமல் கருணாநிதியை மட்ட்டும் சந்தித்ததிலிருந்து இத்தகு விமர்சனம் தொடங்கியது. மஜஇக போன்ற அமைப்புகள் திமுகவுக்கு துணைபோகாதே எனும் தொனியில் முழக்கங்களை பகிரங்கமாக முன்வைத்தன.

நாமும் கூட தொடக்கத்தில் இது ஒரு மரியாதை நிமித்தமான நல்லெண்ணம் கொண்ட சந்திப்பு என்றேதான் கருதி வந்தோம். ஆனால் புதிய ஜனநாயகம் ஏப்ரல் இதழில் வெளிவந்துள்ள "திமுகவையும் அதிமுகவையும் சமத்துவப் படுத்துபவர்களின் நோக்கம் என்ன" என்ற கட்டுரை மகஇக குழுமத்தின் முழுப் பானையையும் போட்டு உடைத்துள்ளது. திமுகவின் கேவலமான ஊழல் படிந்த முகத்துக்கு பவுடர் பூசி ஒப்பனை செய்யும் பணியை சிரத்தை எடுத்து மேற்கொண்டிருக்கிறது. "எரிகின்ற கொள்ளியில் எந்தக் கொள்ளி " என்ற புதியதொரு ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறது.

கட்டுரை சொல்கிறது....

"பார்ப்பன எதிர்ப்பு , சுயமரியாதை, பகுத்தறிவு, இந்திய சமஸ்கிருத திணிப்புக்கு எதிப்பு ஆகிய திராவிடக் கருத்தாக்கங்கள் தமிழகத்தில் நீறுபூத்த நெருப்பாக இருப்ப‌தற்கு கருணாநிதியையும், திமுகவையும் காரணமாக கருதி வருகிறது பார்ப்பன கும்பல். அதனால்தான் திமுக தீய சக்தி என்று குற்றம் சாட்டுகிறது. திமுகவை அடுத்தடுத்த தேர்தல்களில் தோற்கடிப்பதன் மூலம் வழக்குகளை ஏவி, நிலை குலையச் செய்வதன் மூலம் , இதனையும் கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே செய்து முடிப்பதன் மூலம் அக்கட்சிக்கு மங்களம் பாடி தமிழகத்தை மீண்டும் பார்ப்பன தேசியத்துக்குள் முழுமையாக மூழ்கடித்து விடலாம் என முனைந்து வருகிறது அக்கும்பல்"

மேற்கோளில் உள்ள உண்மைத் தன்மையை ஆய்வு செய்வது ஒருபக்கம் இருக்கட்டும், உண்மையில் தேர்தல் நேரத்தில் ஒரு புரட்சிகர அமைப்பின் இந்த நிலைபாடு எத்தகு பிம்பத்தை உண்டாக்கும் என்பதே முக்கியம். இத்தகு "நரகலில் நல்லது தேடும்" புஜ வின் செயல்பாடு எதைச் சுட்டுகிறது? பாராளுமன்றத்தின் மீதும், மத்திய மாநில அரசமைப்பு முறைகளின் மீதும், பாராளுமன்றவாதக் கட்சிகளின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வரும் இந்தச் சூழலில், அதனைக் கருவாக முன்னெடுத்து தலைமையேற்றுச் செல்லாமல், கருணாநிதிக்கும். திமுகவுக்கும் வக்காலத்து வாங்க விளைவது எதை அடிப்படையாக வைத்து?

"2ஜி விற்பனையில் அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுவது தணிக்தை் துறையின் அனுமானம் தான். அந்த இழப்பு குறித்து இந்தத் தொகையையும் விட குறைவான அனுமானங்களையும் முன்வைத்திருக்கிறது தணிக்கைத் துறை. அவ் விற்பனையில் விதிமுறையை மீறி நடந்து கொண்டு சில நிறுவனங்களுக்கு சாதகமாக செயல் பட்டிருக்கிறார் என்பதுதான் ஆ. ராசா மீதான வழக்கு"

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய, மக்களின் வாழ்வில் கொடூரமாக விளையாடிய இந்த மாபெரும் ஊழலை, கட்டுரை சொல்வது போல இவ்வளவு மென்மையாக யாரும் சொல்லி விட முடியாது. ஜெயாவை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க நீதிபதி குமாரசாமி மெனக்கெட்டதை விடவும், பு.ஜ திமுகவின் பயங்கர ஊழல் கதையை மறைக்க முயலுகிறது. பேசாமல் இவர்களின் வழக்கறிஞர் குழுவை 2ஜி வழக்கில் திமுக சார்பில் ஆஜராகச் சொல்லலாம் போல.

மகஇகவின் திமுக மீதான மென்மையான அணுகுமுறை என்பது இயங்கியல் கண்ணோட்டத்துக்கும், அடிப்படையான வர்க்கப் பார்வைக்கும் அந்நியமானது மட்டுமல்ல, பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒன்றாகும். இந்த அணுகுமுறை என்பது திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்வதை பு.ஜ விரும்புகிறது என்பதையே காட்டுகிறது.

1.சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தது.
2. அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராவதற்கு சட்டம் கொண்டு வந்தது.
3. இந்தி _ சமஸ்கிருத திணிப்புகளை எதிர்ப்பது.
4. பார்ப்ன எதிர்ப்பு, பகுத்தறிவு, சுயமரியாதை, தமிழ், தமிழினக் கொள்கை வாடை வீசுகின்றது.

என திமுகவின் பெருமைகளைப் பட்டியலிடும் மகஇக பேசாமல் தேர்தலில் திமுகவுக்கு வெளிப்படையாகவே வாக்கு சேகரிக்கலாமே? இத்தனை சாதனைகளை செய்த அந்தக் கட்சியை விடுத்து தேர்தல் புறக்கணிப்பு நாடகத்தை ஏன் நடத்தவேண்டும்?

ஆக, இத்தகு பு.ஜ வின் திமுக ஆதரவு நிலையில் இருந்துதான் நாம் மக்கள் அதிகாரம் நடத்திய மே 5 போராட்டத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. தேர்தல் சமயத்தில், பாராளுமன்றவாதக் கட்சிகளின் தேசவிரோத மக்கள் விரோதக் கொள்கைகளை தோலுரிப்பதை விட்டு விட்டு , அதற்கான பிரச்சாரத்தை முன்னெடுப்பதை விட்டுவிட்டு, டாஸ்மாக் பிரச்சனையை முன்னெடுப்பதன் மூலம் அது என்ன சொல்ல வருகிறது? உண்மையில் மதுவை ஒழிக்காத, மக்களின்மீதும், மாணவர்கள் மீதும் கொடூரமாகத் தாக்கிய ஜெயாவை அம்பலப் படுத்துவதன் மூலம், மதுவிலக்குப் பிரச்சனையை பிரதானப்படுத்தி அதை விவாதப் பொருளாக்கி முதல் கையெழுத்து மதுவிலக்கு என முழங்கிவரும் திமுகவின் பக்கம் சாதகமான விளைவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படும் நாடகமோ இந்த டாஸ்மாக் மூடும் பாேராட்டம்? என்ற சந்தேகம் பலமாக எழுகிறது. மேலும் அதே கட்டுரையில் மக்கள் நலக் கூட்டணியை விளாசுவதைப் பார்க்கும்போது சந்தேகம் உறுதியாகிறது.

போராட்ட வடிவங்களும் முழக்கங்களும்:

ஒரு இயக்கத்தின் போராட்ட வழிமுறைகளில் முழக்கங்களின் வடிவங்கள் என்பவை அதி முக்கியமானவை. அந்தப் போராட்டத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதற்கு பெரும் பங்காற்றக் கூடியவை. பு.ஜ வுக்கு முழக்கங்களை குழப்பிக் கொள்வது என்பது ஒன்றும் புதியதல்ல. ஏற்கனவே பல போராட்டங்களில் இத்தகு குழப்பம் அதற்கு இருக்கவே செய்தது. இறால் பண்ணை அழிப்பு போராட்டமும் சரி , கருவறை நுழைவுப் போராட்டமும் சரி இத்தகு முழக்க வடிவத் தடுமாற்றத்தால்தான் அவை பெற்றிருக்க வேண்டிய பிரம்மாண்ட வரவேற்பைப் பெற முடியாமலே போய்விட்டது. உண்மையில் மக்கள் அதிகாரத்தால் முன்வைக்கப்பட்ட டாஸ்மாக் மூடுவோம் எனும் முழக்கம் எத்தகு விளைவுகளை ஏற்படுத்தும்? ஒரு முழக்கத்தின் வடிவங்களைத் தீர்மானிக்க நான்கு வகையான கட்டங்களை மார்ஸிய ஆசான்கள் குறிப்பிடுகிறார்கள்.

1 . propaganda slogan (பிரச்சார முழக்கம்)
2 . agitation slogan(கிளர்ச்சி முழக்கம்)
3.action slogan (நடவடிக்கை முழக்கம)
4.directive (ஆணை)

மேலேகண்ட முழக்கத்தின் நான்கு வடிவங்களில் , சூழல் அறிந்து , மக்களின் மனநிலை அறிந்து, கட்சியின் பலம் அறிந்து குறிப்பிட்ட முழக்கத்தின் வடிவத்தைத் தீர்மானிக்க வேண்டும்.

தோழர் ஸ்டாலின் அவர்கள் சொல்வார்...

"........ 19 ம் நூற்றாண்டின் 80 களில் 'உழைப்பாளர் விடுதலைக் குழு ' வினரால் முதன் முதலில் முன்வைக்கப்பட்ட முழக்கமான " எதேச்சதிகாரம் ஒழிக" என்பது ஒரு பிரச்சார முழக்கமாகும். அதன் நோக்கம் மிகவும் உறுதியான மற்றும் திடமான போராட்டக் குழுக்களையும், தனிமனிதர்களையும் கட்சியின் பால் வென்றெடுப்பதாகும். ரஷ்ய- ஜப்பானிய போர்காலத்தில் எதேச்சதிகாரத்தின் உறுதியற்ற தன்மை தொழிலாளி வர்க்கத்தின் பரந்த பிரிவுகளுக்கு கிட்டதட்ட தெளிவாகத் தெரிந்த காலத்தில் இந்த முழக்கமானது ஒரு கிளர்ச்சி முழக்கமாயிற்று. ஏனெனில் அது இப்போது பரந்துபட்ட உழைப்பாளி மக்கள் திரளினரை வென்றெடுக்க உருவாக்கப் பட்டது. 1917 பிப்ரவரி புரட்சிக்கு சற்றே முந்தைய காலகட்டத்தில் , மக்கள் திரளினரின் கண்களில் ஜாரிஸம் ஏற்கனவே முற்றிலுமாக மதிப்பிழந்து இருந்தபோது எதேச்சதிகாரம் ஒழிக எனும் முழக்கமானது ஒரு கிளர்ச்சி முழக்கம் என்ற நிலையில் இருந்து ஒரு நடவடிக்கை முழக்கமாக மாற்றப்பட்டது. காரணம் அம்முழக்கமானது அப்போது ஜாரிசத்தின்மீது தாக்குதல் தொடுப்பதற்கு பரந்துபட்ட மக்கள் திரளினரை தூண்டுவதற்காக உருவாக்கப்பட்டது. பிப்ரவரி புரட்சியின்போது இம்முழக்கமானது ஒரு கட்சியின் ஆணையாகியது."

ஆக, நாம் எந்த கட்டத்தில் இருக்கிறோம் என்பதைப் பொருத்தே நமது முழக்கங்களை நாம் வகுக்க வேண்டியிருக்கும். டாஸ்மாக்கை மூடுவோம் எனும் முழக்கமானது கிளர்ச்சி கட்டத்தில் வைக்கப்பட வேண்டிய ஒரு முழக்கமாகும். ஸ்தாபனரீதியில் பலம் பெறாமல், திடமான வர்க்க அமைப்புகளைக் கட்டி அமைக்காமல் , காலம் கனிவதற்கு முன்னரே இத்தகு முழக்கங்களை முன்னெடுப்பது என்பது பின்டைவையே ஏற்படுத்தும். இவ்வளவு கொடூரமான தாக்குதல் நடந்தும் தேர்தல் மனநிலையில் இருந்து மக்கள் மீளாததே இதற்கு உதாரணம். முழக்கங்களை குழப்புவது குறித்து ஸ்டாலின் சொல்கிறார்......

"முழக்கங்களை ஆணைகளுடன் சேர்த்து குழப்புவது அல்லது ஒரு கிளர்ச்சி முழக்கத்தை ஒரு நடவடிக்கை முழக்கத்துடன் இணைத்துக் குழப்புவது என்பது காலம் கனிவதற்கு முன்பு அல்லது காலம் கடந்தபிறகு மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கைபோல அபாய கரமானது. அது சில சம‌யங்களில் அழிவு ஏற்படுத்தும்"

காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கும் அதே சமயம் , பு.ஜ வின் பொருள்முதல்வாதப் பார்வையற்ற அணுகுமுறையையும் , நிலைமைகளுக்குப் பொருந்தாத போராட்ட வடிவங்களையும் நாம் விமர்சிப்பது அவசியமே. கருணாநிதி மேலான கரிசனம் போன்ற பலவீனங்கள் பு.ஜ வுக்கு இன்று நேற்று வந்தவை அல்ல. அது அதன் அடிப்படையிலேயே இருக்கிறது. இந்து மதத்துக்கு, சர்வதேச அளவிலான பொதுவான மதம் குறித்த மார்க்ஸிய அணுகுமுறை பொருந்தாது என்பதிலும், பார்ப்பனர் யாரும் ஜனநாயக சக்தியாக வரமுடியாது என்ற வர்க்கப்பார்வையற்ற கருத்து முதல்வாதக் கண்ணோட்டத்திலும் அது அடங்கியிருக்கிறது. இத்தகு பலவீனம்தான் சுயமரியாதை என்றும். பகுத்தறிவு என்றும் சாக்கடைக்கு சந்தனம் பூசும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.

- பாவெல் இன்பன்

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 manivannan 2016-06-18 20:53
பாவெல் இன்பன் சிறப்பாக கட்டுரையை எழுதியுள்ளார் ..... வாழ்த்துகள்... பு.ஜ. வின் தலைப்பு மக்கள் தேர்தலில் நரகலில் நல்லரிசி பொறுக்கக் கூடாதாம் .... ஆனால் இவர்கள் ? தி.மு.க. & அ.தி.மு.க என்ற நரகலில் நல்லதை போருக்குவார்களா ம் ! மக்களுக்கு மட்டும் போதனை " நரகலில் நல்லரிசி போருக்காதீர் "

அதுவும் அந்த தேர்தல் நேர பு. ஜ வின் அட்டைப்படம் தான் எவ்வளவு சந்தர்ப்பவாதமாக வெளியிடப்பட்டது தெரியுமா? வாக்களிக்கும் இயந்திரம் .... அனைத்து தலைவர்களின் படம் ... 100% வாக்களிக்கணும் என்பதையும் விமரிசிக்காமல் .... அரசின் முழக்கத்தையும் அம்பலப்படுத்தாம ல்..... நரகலில் நல்லரிசி porukkaadheernu மக்களுக்கு போதனை இவர்கள் உள்ளே கட்டுரை எழுதுகிறார்கள் தி. மு. க விற்கு ஆதரவாக .... புரட்சிகர அமைப்பாம்... மார்க்சிய அடிப்படையில் எதிரிகளை ஆய்வு செய்யும் " இவர்களின் புதிய ஜனநாயக பார்வை இதுதான் "
மக்கள் அதிகாரம் ?? ? ?
எப்போது பெற முடியும் ? என்ன ஆட்சி வடிவம் ? ( அதை மக்கள் முடிவு செய்வார்களாம்! ) ஒரு தெளிவும் கிடையாது! அது என்ன நாம் தயாரானாலே அமைத்துவிடக் கூடியதா? 35 வருஷம் கட்சி நடத்திவிட்டோம் புரட்சியை கண் முன்னாள் அணிகளுக்கு காட்டவில்லை .... இதோ நாமே மக்கள் அதிகாரத்தை கையில் எடுப்போம் என்று தீவிர கிளர்ச்சி நடவடிக்கையில் இறங்கிவிட்டால் அணிகளை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்ற நப்பாசையா? புரியவில்லை.... டாஸ்மாக் மட்டும் தான் தமிழ் தேசத்தின் தலையாய பிரச்சினையா? டாஸ்மாக் கிற்கும் கருணாநிதிக்கும் சம்மந்தமே இல்லையா? எண்ணற்ற கேள்விகள் ! விடைகான முடியா கேள்விகள்... மக்கள் தரப்பில் இருந்து கேள்விகளே வராது என்பது மக்கள் அதிகாரம் அமைப்பினரின் நம்பிக்கை... உள்ளூர், மாவட்டம், வட்டம், தேசிய அளவில் குழுக்கள் இல்லாத பொது கலைக்குழுவையும் / பத்திரிகைக் குழுவையும் வைத்துக் கொண்டே தமிழகம் முழுதும் அமைப்பு இருப்பதாக காட்டி அதுவும் மக்கள் அதிகாரங்களை கட்டமைக்கப் போகிறோம் எனவும் காட்டுவது என்றால் சும்மாவா? வெறும் பரவச நடவடிக்கையை நம்புபவர்களுக்க ு கருணாநிதியும் நண்பனாவார் ! வெறும் பொருளாதார போராட்டமே புரட்சிப் போர் போல தெரியவும் தெரியும் ..... மார்க்சிய - லெனினியமல்ல இவர்களை வழி நடத்துவது !
எனவேதான் கருணாநிதியும் ஜெ - வும் ஒன்நல்ல என புது சரடு விடுகிறார்கள் ..... ஈழத்திற்கு ஆட்சி கட்டில் இருந்தும் ஒரு ராஜினாமா கடிதம்... கடற்கரையில் காலை உணவை மறுத்த ஜென்டிலான உண்ணாவிரதம் ( ஏ.சி.யோடு ! சரி... சரி... air cooler தான் ! ) ... அப்புறம் தீர்மானம்.... அன்றாடம் கொத்துக் குண்டுகளால் ... பாஸ்பரஸ் குண்டுகளால் ஈழத்தமிழன் கொள்ளப் பட்டபோதுகூட தானை தலைவரு ஒரு துரும்பும் அசைக்காதவரு ... தமிழின தலைவரு... டெல்லிக்கு பறக்காதவரு... போர் முடிஞ்சா பிறகு தன பிள்ளைக்கும்... . பேரனுக்கும் பதவி வாங்க டெல்லிக்கு போன வரலாறு... துரோகம் னு கருணாநிதி ஈழத்திற்க்கும் ... இன்று வரை மாநில சுயாட்சின்னு பேசிகிட்டும் தமிழை ஆட்சி மொழி ஆக்காம/ தமிழ்நாட்டின் கல்விமொழியாக்கா ம ...
தமிழ் மக்கள் ஆங்கிலத்திற்கும ் ... சமர்க்கிருதத்தி ர்க்கும். இந்திக்கும் அடிமைகளா தற்குறிகளா ... வேலைவாய்ப்பு இன்றி வைக்கப்பட்டு கிடக்கும் அவலம்... இதர்க்கெல்லாம் மாறி மாறி 5 முறை ஆட்சி செய்தும் ஒரு துறும்பும் அசைக்காம டெல்லிக்கு கடிதம் எழுதி காலத்த கடத்தி தலைமுறைக்கும் சொத்து சேர்த்துக்கொண்ட கழக உடன்பிறப்புகளுக ்கு வழிவிட்ட கருணாநிதி பற்றி " அவரிடம் நல்ல அம்சங்களை தேடும் இவர்கள் ஒரு மக்கள் அதிகாரம் படைக்கப் போறேன்னு சொல்றாங்க பாருங்க " அதுதாங்க வேடிக்கை !
Report to administrator

Add comment


Security code
Refresh