புரட்சிகர பண்பாட்டுப் பணியின் உள்ளடக்கத்தையும் வடிவங்களையும் மறுவார்ப்பு செய்வதற்கான தேவை, குறிப்பாக தற்போது இந்தியத் துணைக் கண்டத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் புதிய பாசிசக் கொடு நெறியினை வீழ்த்த புரட்சிகரப் பண்பாட்டு பணியினை புதிதாய் வார்த்தெடுப்போம்.
கோவையிலிருந்து செயற்படும் பாசிச எதிர்ப்புப் பள்ளியின் சார்பாக தோழர் பொன்.சந்திரன் அவர்களால் செப்டம்பர் 2019ல் அய்திராபாத்தில் நடைபெற்ற பாசிச எதிர்ப்பு மாநாட்டில் முன் வைக்கப்பட்ட நிலைப்பாட்டு அறிக்கை.
பாசிசத்திற்கு எதிரான பண்பாட்டு இயக்கத்திற்கான அரங்கு
இந்தியத் துணைக் கண்டத்தில், காஷ்மீர் முதல் குமரி வரை விரவிக் கிடக்கும் உழைக்கும் மக்கள் சார்பாக, இந்த முக்கியமான விவாத அரங்கை ஏற்பாடு செய்திருக்கும் தோழர்களுக்கு எனது மனமார்ந்த புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்தை சூறையாடும் புதுக் காலனியச் சுரண்டல் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், புதிய பாசிசக் கொடு நெறி ஆட்சியில் இத்துணைக் கண்டம் ஆட்படுத்தப்பட்டுள்ள சூழலில் இந்த விவாத அரங்கினை ஏற்பாடு செய்துள்ள தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்தப் பின்னணியில் புரட்சிகர பண்பாட்டுப் பணியின் இலக்கு மற்றும் அதற்கான வழிமுறைகள் பற்றிய மறு வாசிப்பு, மறு ஆய்வு உறுதியாகத் தேவை.
இந்த அரங்கு நமது சமூகத்தை சோசலிச, சமதர்ம சமூக மாற்றத்திற்கு உட்படுத்த தம்மை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அதே நேரத்தில் சமூக மாற்றம் என்பது மூன்று தளங்களில் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டிருக்கிறோம் என்றும் நம்புகிறேன். அதாவது,
1. அரசியல் தளம் - அரசியல் போராட்டம்
2. கருத்தியல் மற்றும் மெய்யியல் தளம் - போராட்டம்
3. பொருளியல் போராட்டம்
இவற்றில் அரசியல் போராட்டத்தின் இலக்கு என்பது உழைக்கும் பெருந்திரள் மக்கள் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் உள்ள பொதுவுடைமைக் கட்சியின் தலைமையிலான அரசியல் போராட்டத்தின் வழியே அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதே என்பதை நாமெல்லோரும் அறிவோம்.
பொருளாதாரப் போராட்டங்கள் என்பது அடித்தட்டு வர்க்கங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான / மாற்றுவதற்கான இலக்கைக் கொண்டு நிகழ்த்தப் படுகின்றன.
தொழிற்சங்க இயக்கங்களைக் கட்டமைப்பது “உழுபவருக்கே நிலம்” போன்ற முழக்கங்களை முன் வைத்து நடத்தப்படும் போராட்டங்கள் பொருளாதாரப் போராட்டத்தில் அடங்கும்.
ஆனால் சமூக மாற்ற வரலாற்றில் பொருளாதாரப் போராட்டங்கள் காலப் போக்கில் பொருளாதார வாதமாக சீரழிந்தது என்பதை மறுப்பதற்கில்லை. புரட்சிக்கான பள்ளியாகத் திகழ வேண்டிய தொழிற்சங்க இயக்கங்கள் தொழில் நடத்தும் சங்கங்களாக சீரழிந்ததும் வரலாறு.
ஆகவே, இந்த சீரழிவிலிருந்து பாட்டாளி வர்க்க இயக்கத்தை மீட்டெடுப்பது வரலாற்றுத் தேவையானது அதனால் “அரசியலை ஆணையில் ஏற்றுவோம்” என்ற முழக்கம் வலியுறுத்தப் பட்டது.
ஆனால் அரசியல் போராட்டங்களும் நிலை தடுமாறின. சமூக சனநாயகவாதிகளில் சிலர் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற பாராளுமன்றப் பாதையை ஒற்றை வழியாக முன் வைத்த போது அரசியல் போராட்டங்களும் சீரழியத் தொடங்கின.
இந்தப் பின்னணியில் தான் 1960 களில் நக்சல்பாரி இயக்கம் பாராளுமன்றப் பாதையை புறக்கணித்து கிளர்ந்தெழுந்தது. இந்த கிளர்ச்சியை தோழர் மாவோ அவர்களும், சீனப் பொதுவுடைமைக் கட்சியும் “வசந்தத்தின் இடிமுழக்கம்” என்று போற்றி வாழ்த்தியது.
உலகப் பொதுவுடைமை இயக்கத்தில் நிகழ்ந்த “மாபெரும் விவாதத்தைத்” தொடர்ந்து நக்சல் பாரி இயக்கத்தின் தொடர்ச்சியாக, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற ஆயுதப் போராட்டம் முன்வைக்கப் பட்டது.
துப்பாக்கியிலிருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், ஆயுதத்தை அரசியல் வழிநடத்த வேண்டுமேயன்றி அரசியலை ஆயுதம் வழி நடத்தலாகாது என்ற தெளிவும் வலியுறுத்தப் பட்டது.
அரசியல் போராட்டங்களின் இலக்கு மற்றும் வழிமுறைகள் பற்றிய தெளிவு பொதுவுடைமை இயக்கத்தில் காத்திரமான முறையில் விவாதிக்கப் பட்டுள்ளது. அதேபோல் பொருளாதார போராட்டத்திற்கான இலக்கு மற்றும் களங்கள் பற்றிய தெளிவும், அவற்றின் சீரழிவை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய தெளிவும் நமக்கு ஓரளவு இருந்த போதிலும்,
கருத்தியல் அல்லது மெய்யியல் போராட்டத்தை பொதுவுடைமைக் கட்சிகளின் வகுப்பறைகளில் இவற்றை சுருக்கிக் கொண்டோம்.
கட்சி வகுப்பறைகளில் மட்டுமே நிகழ்ந்த கருத்தியல் விவாதங்களில் சில கருத்தியல் அல்லது மெய்யியல் நிலைப் பாடுகளை கருத்து முதலியல் என்றும் பொருள் முதலியல் என்றும் இயங்கியல் பொருள் முதலியல் என்றும் கொச்சை பொருள் முதலியல் என்றும் சில கருத்தியல் மெய்யியல் கோட்பாடுகளை, வரையறுப்பதோடு (அ) வகைப்படுத்துவதோடு நமது கருத்தியல் / மெய்யியல் போராட்டம் சுருங்கியது.
அதேபோல் அரசியல் போராட்டமாக இருந்தாலும் பொருளியல் போராட்டமாக இருந்தாலும் அதற்குத் தக்க போராடும் களம் என்ன அதற்கான அமைப்பு முறை என்ன என்பதைப் பற்றிய தெளிவு புரட்சிப்பாணி நடைமுறையாக இருந்தாலும் சரி, அல்லது சீர்திருத்த நடைமுறையாக இருந்தாலும் சரி, அதில் நல்ல தெளிவு இருந்தது என்று சொல்லலாம்.
ஆனால் கருத்தியல் / மெய்யியல் போராட்டங்களுக்கான இலக்கு என்ன என்பதைப் பற்றியோ அதற்கான களம் என்ன என்பதைப் பற்றியோ போதுமான தெளிவு நம்மிடம் (புரட்சிகரப் பொதுவுடைமையாளர்களிடம்) இல்லை என்றே கூற வேண்டும்.
பண்பாட்டுத் தளத்தில் எனக்குள்ள சிறிய பட்டறிவின் அடிப்படையில் ஒரு முழு சமூக மாற்றத்தை நோக்கியப் பயணத்தில் கருத்தியல் மற்றும் மெய்யியல் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான தலையாயக் களம் பண்பாட்டுப் பணியே என்பதை உறுதியாக நம்புகிறேன்.
புரட்சிகர பண்பாட்டுப் பணி என்பது அரசியல் அதிகாரத்தை புரட்சிகரமான முறையில் கைப்பற்றுவதை பிரச்சாரமாக எடுத்துச் செல்வதுதான் என்ற தவறான கண்ணோட்டம் நம்மில் சிலருக்கு இருக்கிறது.
ஆகவே, அத்தகைய கண்ணோட்டத்திலிருந்து முன்னெடுக்கப்படும் எத்தகைய பண்பாட்டு நடவடிக்கையாக இருந்தாலும், அது ஒரு பாடலாக இருக்கலாம் அல்லது ஒரு முழு நீள நாடகமாக இருக்கலாம் அல்லது ஒரு தெரு நாடகமாகவோ குறு நாடகமாக இருந்தாலும் அந்நிகழ்வின் இறுதியில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதை ஒரு செயலாகவோ அல்லது குறைந்தது குறிப்பாகவோ வலியுறுத்துவது மட்டுமே புரட்சிப் பண்பாட்டுச் செயல் என்றும் நம்புகிறோம்.
ஆனால் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை இலக்காகக் கொண்ட எந்த செயலும் நடைமுறையும் அரசியல் பணி என்ற வரையறைக்குள் வருமே ஒழிய அவை பண்பாட்டுப் பணியாகாது. இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை புரியாமல் குழப்பிக் கொண்டால் பண்பாட்டுத் தளத்தில் நாம் செய்ய வேண்டிய பணியினைச் செவ்வனே செய்ய இயலாமல் போகும்.
கருத்தியல் / மெய்யியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான முதன்மையான களம் பண்பாட்டுப் பணி என்ற கருத்தியல் ஊன்றி நிற்பவர்கள் சமூக மாற்றத்தை இலகுவாக்கும் சிந்தனை மற்றும் பண்பாட்டு விழுமியங்களை மக்களிடையே வளர்த்தெடுப்பதை தமது இலக்காக கொள்ள வேண்டும்.
இந்த தருணத்தில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியாரின் கருத்தியல் நிலைப்பாடுகளைப் பற்றி இங்கே சுட்டிக் காட்டுவது பொறுத்தமென கருதுகிறேன்.
இவ்விருவரும் சாதியம் மண்டிக் கிடக்கின்ற நமது சமூகத்தில் சாதி ஆதிக்கம் நிலைக் கொண்டிருக்கிற சூழலில் சமூகப் பண்பாட்டு மாற்றம் நிகழாமல் வெற்று அரசியல் மாற்றம் என்பது பலன் தராது என்பதில் ஊன்றி நின்றனர். மேலும் சமூக பண்பாட்டு மாற்றத்தினோடே நிகழ்த்தப்படும் அரசியல் மாற்றம் என்பதுதான் நீடித்து நிலைக்கத் தக்கதாக அமையும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தினர்.
அதன் காரணத்தினாலே நீடித்த அரசியல் மாற்றத்திற்கு முன்னோட்டமாக சமூகப் பண்பாட்டு மாற்றம் ஒரு முன் தேவை என்பதையும் அழுத்தமாக பறை சாற்றினர்.
அடிக்கட்டுமானம் - மேல்கட்டுமானம்
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் கண்களை மறைத்த மற்றொரு கூறு பொருளாதார அடித்தளம் மற்றும் பண்பாடு மெய்யியல், கருத்தியல் போன்ற மேலடுக்குகள் பற்றிய உறவு பற்றியது. பொருளாதார அடித்தளம் மாறினால் மேலடுக்கில் உள்ள அனைத்தும் தானாக மாறும் என்ற எந்திரவியல் நிலைப்பாடு ஆதிக்கம் செலுத்தியது.
ஆகவே நிலக்கிழமைப் பொருளாதார அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள மேலடுக்கான சாதியம் நிலக்கிழமையின் பொருளாதார அடித்தளம் மாறும் போது சாதிய மேலடுக்கும் தகர்ந்து விடும் என்று நம்பினார்கள்.
ஆகவே, அடித்தளத்தில் ஏற்படக் கூடிய முதலாளிய மாற்றம் சாதிய மேலடுக்கில் மாற்றம் நிகழ்த்த வல்லது என்றும், அதனால் சாதிய கட்டமைப்பை கடக்க முதலாளியத்தை வலுப்படுத்தினால் போதும் என்றும் கருதினர்.
1960கள் வரையில் இதுபற்றிய தெளிவு நமக்கு இல்லை என்றே கூறலாம். அடித்தளம் மேலடுக்குகளை தீர்மானிப்பதும் மேலடுக்குகள் அடித்தளம் மீது செல்வாக்கு செலுத்துகிறது என்ற இயங்கியல் உறவினை புரிந்து கொள்ள தோழர் மாவோவின் வழிகாட்டுதல் நமக்கு தேவையானது.
இதனால் பொருளாதார அடித்தளம் மேல் கட்டுமானத்தைத் தீர்மானிக்கிறது என்ற அடிப்படை வரையறையை மறுப்பதாகக் கொள்ளலாகாது.
தமிழகத்தில் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப் பற்றி இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
சமூகத்தில் மூன்று விழுக்காட்டிற்கும் குறைவாக மக்கள் தொகையினை கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் பொதுச் சமூகத்தில் இருந்த அதிகாரப் பீடங்களில் 95%ற்கு மேலான அதிகார இடத்தை ஆக்கிரமித்து இருந்த நிலையில் பார்ப்பனரல்லாதவருக்கு நீதி கிடைக்காது என்று எழுந்ததுதான் பார்ப்பனரல்லாதோர் இயக்கம்.
சாதிய அடுக்கில் ஓரளவுக்கு வசதி படைத்த, படித்த பார்ப்பனரல்லாத உயர் சாதி இந்துக்களின் தலைமையில் இந்த இயக்கம் எல்லோருக்கும் சம வாய்ப்பு என்ற முறையில் சமூக நீதி முழக்கத்தை முன்வைத்தது.
இவ்வியக்கம், பார்ப்பனரல்லாத பெருந்திரள் மக்களிடம் ஆழ்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பிறகு, தந்தை பெரியார் தலைமையில் சுய மரியாதை இயக்கமாகவும், அரசியல் தளத்தில் நீதிக் கட்சியாகவும் பரிணமித்ததும் வரலாறு.
அதேபோல் சாதி மறுப்பு, மூட நம்பிக்கைகள் மறுப்பு, மத மறுப்பு, இந்தி ஆதிக்க எதிர்ப்பு, கடவுள் மறுப்பு என விரிந்த பண்பாட்டு இயக்கமாகவும் மலர்ந்து, திராவிட அதிகார அரசியலுக்கும் வித்திட்டது என்பதையும் பார்க்கிறோம்.
அதிகாரத்தை கைப்பற்றிய பிறகும் தொடர்ச்சியான பண்பாட்டு மாற்றத்தை வலியுறுத்தி இன்றளவும் தொடர்வதை நாம் மறுப்பதற்கில்லை. விதைப்பதற்கு முன் மண்ணை பக்குவப் படுத்துவது போல அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு உகந்த பண்பாட்டு மாற்றத்தை முன்னெடுத்த ஏனைய அரசியல் வரலாறு நமக்கு பாடமாக அமைகிறது.
அதே போல கைப்பற்றிய அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள நீடித்த பண்பாட்டு மாற்றத்தை புரட்சியை வலியுறுத்தும் வரலாற்றையும் நாம் பார்த்திருக்கிறோம்.
சுருக்கமாக சொல்வதெனில் பண்பாட்டு மாற்றம் என்பதை அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்பும், அதற்கு பின்பும் முன்னெடுப்பது மிகவும் தேவையாகிறது.
குறிப்பாக, தற்போது இந்திய துணைக் கண்டத்தை பிடித்துள்ள பாசிசக் கொடு நெறி ஆட்சியின் கொட்டத்தை அடக்க, ஆட்சியை வீழ்த்த புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் பொறுப்பு பன்மடங்கு அதிகமாகிறது .
பன்முகத் தன்மைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தின் இருப்பை தகர்க்கக் கூடிய இந்த கொடு நெறி ஆதிக்கத்திற்கு எதிரான இயக்கத்தை பண்பாட்டுத் தளத்திலிருந்து தொடங்குவதும், தொடர்வதும் இன்றியமையாதது.
தற்போதுள்ள கொடு நெறி அரசின் ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைக் கல்வி, ஒற்றை வரி, ஒற்றை நாடு என்ற கட்டமைப்பிற்கு எதிராக பன்முகத் தன்மையை, சமூக நீதியை வலியுறுத்தும் பண்பாட்டு மாற்றத்தை மக்களிடையே வளர்த்தெடுப்பதின் மூலம் மட்டுமே கொடு நெறி அரசின் ஆதிக்கத்தை வீழ்த்துவதற்கானத் தடத்தை அமைக்க முடியும்.
ஆகவே, தோழர்களே கருத்தியல் மற்றும் மெய்யியல் போராட்டங்களை மேலும் மேலும் கூர்மைப் படுத்தும் வகையில் நமது புரட்சிகரப் பண்பாட்டுப் பணிகளை முன்னெடுப்போம்.
மார்க்சிய – லெனினிய மற்றும் மாவோ சிந்தனைகளை உயர்த்திப் பிடிக்கும் அதே நேரத்தில் நமது சமூகத்தில் நிலவி வரும் பிற்போக்கு கருத்தியல் மற்றும் மெய்யியல் கோட்பாடுகளை எதிர்த்த, சிந்தனையாளர்களான அம்பேத்கர், பெரியார், ஃபூலே, அயோத்திதாசர், நாராயண குரு போன்றவர்களின் சிந்தனகளை நாம் செரித்து தன் வயமாக்கிக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.
இறுதியாக என் உரையை முடிப்பதற்கு முன், இந்த அரங்கில் மற்றொரு முக்கியச் செய்தியை முன் வைத்தாக வேண்டும்.
அரசியல் புரட்சியை வழி நடத்திச் செல்வதற்கு புரட்சியை நம் மூச்சாகவும், வாழ்க்கையாகவும் கொண்ட புரட்சியை தம் தலையாயத் தொழிலாகக் கொண்டவர்களின் தலைமையில் நடந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று மாமேதை தோழர் லெனின் வரையறுத்தார்.
அதேபோல், பண்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும் ஒரு தொழில்முறை அணுகுமுறை அவசியமாகும்.
சமூக நீதியற்ற சமத்துவமற்ற தற்போதைய சமூகக் கட்டமைப்பை காப்பதற்குப் பண்பாட்டு பணியாளர்கள் தொழில் ரீதியாக ஈடுபடும்போது இச்சமூகத்தை அடியோடு மாற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்குபவர்கள் ஏனோ தானோ என இதில் ஈடுபட முடியாது.
ஆழ்ந்த பண்பாட்டு மாற்றத்திற்கான ஏந்துகளை, திறன்களை முறையான பயிற்சிகளை மேற்கொண்டு வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாற்று நாடக அரங்கை ஏற்படுத்த வேண்டும் என விரும்புபவர்கள் ஒற்றை நாள் பயிற்சிப் பட்டறைகள் மூலம் அதை சாதித்து விடலாம் என்று எண்ணுவது மடமையாகும்.
சமூக அக்கறையோடு தொழில் ரீதியாக செயல்படுவோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முறையான பயிற்சிகளை பெற்று அதில் முழுமையாக ஈடுபட வேண்டும். இல்லையென்றால் நமது முயற்சிகள் அனைத்தும் கேலிக்குரியதாக அமைந்து விடும்.
"எதிரியிடமிருந்து கற்றுக்கொள்" என்ற மாவோவின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோம். எதிரியை வீழ்த்த நம்மை நாம் அணியப் படுத்திக் கொள்வோம்.
பொருளாதாரப் போராட்டம் பொருளாதார வாதமாக சீரழிந்த நிலையில் "அரசியலை ஆணையில் வைப்போம்" என்ற முழக்கம் வலியுறுத்தப் பட்டது என்பதை நாம் பார்த்தோம். ஆனால் இன்றைய சூழலில் "தத்துவத்தை ஆணையில் வைப்போம்" என்ற முழக்கத்தை முன்வைப்பது தேவையாகிறது.
ஆயுதப் போராட்டத்தில் கொரில்லா உத்தி எப்படி இன்றியமையாததோ அதே போல் பண்பாட்டுத் தளத்தில் ஈடுபட வல்ல கொரில்லா பண்பாட்டுப் படையினை கட்டமைக்க தயாராவோம். அரை குறைப் பயிற்சியுடன் இதனை செய்யலாகாது.
இந்த உரையானது கோவையிலிருந்து இயங்கி வரும் பாசிச எதிர்ப்புப் பள்ளியின் சார்பாக முன் மொழியப் படுகிறது.
(பி.கு.அய்திராபாத்தில் செப்டம்பர் 2019 இல் நடந்த அனைத்திந்திய மாநாட்டில் முன் வைக்கப்பட்டது. இந்த உரையின் ஆங்கிலச் சுருக்கம் Frontier Weekly என்னும் ஆங்கில வார இதழில் வெளி வந்துள்ளது.
கட்டுரையாளர் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் பண்பாட்டு அரங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர். மூன்றாம் நாடக அரங்கின் தந்தை என அழைக்கப்படும் "பாதல் சர்கார்" அவர்களின் நாடக பயிற்சிப் பட்டறையில் பயின்றவர். வெங்காலூரில் (பெங்களூர்) இருந்து செயல்பட்டு வந்த மக்கள் சமூக பண்பாட்டுக் கழகத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்து பல ஆண்டுகள் செயலாற்றியவர்.)
- பொன்.சந்திரன்