பிள்ளையார்

நாடெங்கும் பிள்ளையார் கொண்டாட்டங்கள் ஆர்ப்பாட்டமாக நடந்து முடிந்துள்ளன. இந்த ஆண்டின் தனித்தன்மை, பிள்ளையார் பிறப்பு அன்றுதான் பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை படைத்த நரேந்திர மோடியின் பிறந்த நாளும். பிள்ளையாரை நடுத்தெருவில் போட்டு உடைத்த பெரியாரின் பிறந்தநாளும் இணைந்து வந்துள்ளன. மற்ற கடவுளர்களின் கதை களைப் போன்றே ஆனைமுகனின் கதையும் அரு வருப்பானதுதான்.

ஆனாலும், நம்மவர்களின் மரமண் டையில் அது ஏறவில்லையே! குளிக்கப் போன பார்வதி, தன் உடம்பில் இருந்து உருட்டித் திரட்டிய அழுக்கு உருண்டைதான் ஓர் ஆண்பிள்ளை ஆனதாம்! காவ லுக்கு நின்ற அந்த அழுக்கு உருண்டைக் கணபதி, பார்வதியின் குளியல் அறையில் நுழைந்த சிவபெரு மானைத் தடுத்தான். அதனால் சிவபெருமான் கடுஞ்சினம் கொண்டு, பிள்ளையின் தலையைத் துண்டித்தானாம். அதைப் பார்த்துப் பதறினாள், பார்வதி. அந்த முண்டத்துக்கு அறுவை மூலம் ஒட்டவைக்கப்பட்டதே ஆனைமுகன் தலை. அன்றே இத்தகைய ஒட்டு அறுவை வைத்தியம் இருந்ததென உச்சிமோந்து மெச்சுகிறார் நம் மோசடிப் பேர்வழி மோடி!

ஒரு காட்டில் ஆண், பெண் யானைகள் கலவி செய்யும் போது, சிவனும் பார்வதியும் அதைக்கண்டு கலவி ஞாபகமேற்பட்டுக் கலந்ததால், யானைமுகத் துடன் குழந்தை பிறந்தது எனப், பெரியார் மற்றொரு பித்தலாட்டக் கதையையும் சுட்டுகிறார்.

பெரியார் சொல்லும் மூன்றாவது கதையானது ஓர் ஆபாசக் குப்பை : “ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும், அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர் களையெல்லாம் அந்தக் கடவுள் கொன்று கொண்டே வந்ததும், தன்னால் கொல்லமுடியாத அளவுக்கு அசுரர்கள் ஓர் அசுரப் பெண்ணின் பிள்ளைபெறும் குறியிலிருந்து ‘புற்றிலிருந்து ஈசல் புறப்படுவதுபோல்’ பல இலட்சக்கணக்காய் வந்துகொண்டே இருந்ததாகவும், அதை அறிந்த அந்தக் கடவுள், பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும், உடனே பிள்ளையாரவர்கள் ‘ஈசல் புற்றிலிருந்து கரடி, ஈசல் களை உறிஞ்சுவதுபோல்’ தனது துதிக்கையை அந்தப் பெண்ணின் பெண் குறிக்குள் விட்டு, அங்கிருந்த அசுரர் களையெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சிவிட்டதாகவும்” சொல்லப்படுகின்றது.

எனவே, இம்மாதிரியான காட்டு மிராண்டித்தன்மையான ஆபாசங்களுக்கு - கண்டவை களையெல்லாம் கடவுள் என்று சொல்லும்ஆத்திகர்கள் என்ன பதில் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம் (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுதி 4, பகுதி 1, பக்.2212).

அறியாமையில் மூழ்கித் திளைக்கும் மக்களின் தொகை இன்று பல்கிப் பெருகி வருகிறது. களிமண் பிள்ளையாராகக் காட்சியளித்தவர், இன்று வண்ண வண்ணப் பிள்ளையாராய் மின்னுகிறார். ஆண்டுக் காண்டு அவருடைய உயரமும் வடிவமும் கூடிக் கொண்டே வருகிறது.

ஆந்திர மாநிலம் விசயவாடாவில் ‘அஷ்டலட்சுமி மகா கணபதி’ என்ற பெயரில் இவ்வாண்டு 63 அடி பிள்ளையார் சிலை அமைக்கப்பட்டள்ளது. 63 அடி பிள்ளையாருக்குத் தின்னத் தீனி வேண்டாமா? ஏற்கெனவே அவர் பானை வயிறன். கொழுக்கட்டை, அப்பம், வடை, சுண்டல், தானியங்கள் எது கிடைத்த hலும் தின்று மேய்ந்துவிடுவார். எனவே 63 அடி பிள்ளை யாருக்கு உணவாக 6,300 கிலோ எடையுள்ள இலட்டு செய்து எடுத்துக் கொண்டு போனார்கள். எப்படி? பிள்ளையாரின் எலி வாகனத்திலா? இல்லையே! அதைத் தூக்கு வதற்கென்றே சிறப்பு கிரேன் ஏற்பாடு செய்யப்பட்டது. கடவுளே துணை என்பவர்களுக்கு, இப்போது கிரேனே துணை!

‘கிரேனால்’ விளைந்த கேடு

‘கிரேன்’ என்ற உடன் இன்னொரு செய்தியையும் இங்குச் சொல்லியாக வேண்டும். “சிவாய நமவென்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை அய்யனே!” என்பது பக்தர்களின் கூப்பாடு. சிவன் மட்டுமல்ல, திருமால், முருகன், முண்டக்கண்ணியம் மாள் என எந்தக் கடவுளைச் சிந்தித்துக் கொண்டிருந்தாலும், நாமாக நம்மை விழிப்புடன் காத்துக்கொள்ளவில்லை யானால், வரவேண்டிய ஆபத்து வந்தே தீரும் என்ப தற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு கடந்த மாதம் மெக்கா வில் நேரிட்ட ஒரு நெஞ்சை உலுக்கும் நேர்ச்சி! மெக்கா, உலகெங்கிலும் உள்ள இசுலாமியர்களுக்கான புனித இடம் என்று சொல்லப்படுகிறது. ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதை அவர்கள் தங்கள் வாழ்நாள் கடமையாக மேற்கொள்கிறார்கள்.

ஆண்டுதோறும் இலட்சக் கணக்கான மக்கள் மெக்காவில் கூடுகிறார்கள். இவ் வாண்டும் மெக்கா பெரிய மசூதியில் பெரும் எண்ணிக் கையினாலான மக்கள் திரண்டார்கள். அந்தோ! பலத்தக் காற்றுடன் வீசிய பெருமழையில் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனமான ராட்சத கிரேன்களில் ஒன்று சரிந்து விழுந்துவிட்டது. அதனால், மசூதியின் மேற்கூரை உடைந்து கீழே விழுந்தது.

அதன் அடியில் சிக்கி 107 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தார்கள். 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். 24-9-15 அன்று சவுதி நாட்டில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் சடங்கில் ஹஜ் கூட்ட நெரிசலில் மிதிபட்டு 750 இ°லாமிய பயணிகள் மாண்டனர். அந்தோ! பக்தியின் பேரால் நடைபெறும் உயிரிழப்புகள் நம்மை அஞ்ச வைக்கின்றன. ஆபத்தில் சிக்கிய மனிதர் களைக் காப்பாற்ற எந்த “ஆண்டவனும்” அங்கே ஓடி வரவில்லை! கடவுளை நம்பிப் பயனில்லை! விழிப்புடன் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டியது தான்.

‘அம்மா’வைக் கைவிட்ட திருவரங்கத்தில் ஆலயக் குடமுழுக்கு

கடந்த 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் ‘அம்மா’ போட்டியிடத் தேர்ந்தெடுத்த இடம் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்). தேர்தலில் போட்டியிட்டு அவர் வென்றாலும், அரங்கநாதப் பெருமான் அவரை அங்கே இருக்கவிடவில்லை.

பல்வேறு இன்னல்கள் தந்து சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு அவருக்கு இடமாறுதல் தந்துவிட்டார். அப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்த அந்த திருவரங்கக் கோயிலில், அண்மையில் பதினெட்டு கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் கோயில் குட முழுக்கு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கோயிலைச் சுற்றி 43 உப சன்னதிகள், 21 கோபுரங்கள் உள்ளன. 43 உப சன்னதிகளில் அருள்பாலிக்கின்ற சில நாதமுனிகளின் பெயர்களாவன : ஹயக்ரீவர் சன்னதி, தன்வந்திரி சன்னதி, சிறீ வேணுகோபாலன் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி. இப்படிப் பெயர் தெரியாத ஆள்கள் பேரில் பூசை, புனஸ்காரம் நடை பெற்றது.

அங்கு அக்னி பிரதிஷ்டை யாகசாலை சகல ஹோமங்களுடன் தொடங்கப்பட்டு, இரண்டாம் காலயாக பூசை, மாலையில் மூன்றாம் காலயாக பூசை, இரவு நான்காம் காலயாக பூசை மற்றும் மகா பூர்ணா ஹுதி, யாத்ராதானம்... என்ன இது? ஒரு எழவும் புரியவில்லை என்கிறீர்களா? எல்லாமே பார்ப்பன எழவுக்குத்தானே! சும்மாவா சொன்னார் பெரியார், “அதிகாரி பொறுக்கித் தின்ன ஆபீசு; அர்ச்சகன் பொறுக்கித் தின்ன ஆலயம்!” என்று.

Pin It