online conversation"அரசியல் ரீதியான பேச்சை விவாதத்தைத் தவிர்க்கவும், தேர்தல் வரை எவனுக்காகவோ நாம் சண்ட போட்டுக்கக் கூடாது" போன்ற வசனங்களைப் பேசி அரசியலிலிருந்து விலகி இருக்க வலியுறுத்தும் மேம்போக்குவாதிகளுக்கு வலுசேர்க்கும் விதமாக இன்றைக்கு பலர் சமூக வலைதளங்களில் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

கருத்தியல் ரீதியான வாத எதிர்வாதங்கள் இன்று நேற்றல்ல, எப்போதும் இருந்துக் கொண்டேதான் இருக்கிறது. இனிமேலும் அது எப்போதும் இருக்கும் மற்றும் அது எப்போதும் தேவைதான். ஆனால் அது ஆரோக்கியமானதாக இருக்க வாதிக்கும் இருபுறமும் கருத்து வளமும், சமூக அக்கறையும், சமூகப் பொருளாதார வரலாற்று அறிவியல் பார்வையும் அவசியம்.

இத்தகைய வளங்களில் பார்வைகளில் புரிதல்களில் குறைபாடு இருக்கும்போது, என்ன செய்வது என்ன பேசுவது என்ற தடுமாற்றம் ஏற்படுகிறது. அந்தத் தடுமாற்றம் ஏற்படுத்தும் ஆற்றாமை எப்படியாவது பொதுத் தளங்களில் வாதத்தில் நாம் வெற்றிபெற வேண்டும் என்கிற வெறியை ஏற்படுத்துகிறது. அந்த வெறியே அடுத்தகட்டமாகத் தனி மனிதத் தாக்குதலில் போய் முடிகிறது.

அதேநேரத்தில் அரசியலில் ஈடுபட்டிருக்கும் மனிதர்கள் பொது மனிதர்கள். அவர்கள் தனி மனிதர்கள் இல்லை என்கிற புரிதலும் இங்கு அவசியம். அவர்களைத் தோலுரித்துக் காட்டுகிற அவர்களின் அரசியலின் தன்மையை எடுத்துக்காட்டுகிற போக்கெல்லாம் தனிமனித தாக்குதலில் அடங்காது.

அது வழியாகத்தான் அவர்களின் அரசியலை நாம் உணர்ந்து கொள்ள முடியும். நமது அரசியலின் திசை வழியைத் தேர்வு செய்ய இத்தகைய விவாதங்கள் மிகமிக அவசியமானவை ஆகின்றன.

ஆனால் அந்தப் பொது மனிதர்களுக்காகக் கொடுக்கும் முட்டு எந்த நிலையிலும் விவாதிக்கும் தனி மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே கூர் தீட்டிக் கொள்ளும் ஆப்பாக மாறிவிடக் கூடாது. இதனால் ஏற்படும் உறவுச் சிக்கலால் ஆகப் போவது என்ன? யாராவது யாரையாவது மாற்றிவிட முடிகிறதா என்ன? பெரும்பாலும் அவ்வாறு நிகழ்வதில்லை.

மாறாக விவாதங்களும் கருத்து மோதல்களும் அவசியமாக நடக்க வேண்டும். அவை வலுவான கருத்தியல் தெளிவுடனும், ஆழமான தத்துவார்த்தப் புரிதலுடனும், அடுக்கடுக்கான சரியானத் தரவுகளுடனும், ஆக்கப்பூர்வமாகவும் கட்டுக்கோப்பாகவும், நிதானம் இழக்காமல் அறிவுப்பூர்வமாக நிகழ வேண்டும்.

எந்த ஆட்சியில் எந்தத் தவறு நடந்து இருந்தாலும் அந்தத் தவறு தவறுதான் என்கிற புரிதல் அனைவருக்கும் தேவையான ஒன்று.

வெகு மக்களின் நலன்களுக்கு விரோதமாக நடக்கும் எந்தச் செயலையும் அது யார் செய்தாலும் அவர்களுக்காக முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இங்கு யாருக்கும் இல்லை. ஆனாலும் தொடர்ந்து முட்டுக் கொடுக்கிறோமே அது எதனால் என்று சிந்தித்தாலே பாதிப் பிரச்சனை முடிந்துவிடும்.

ஆனால் அத்தகைய பொதுவான சிந்தனை இங்கு பொதுவாகவே பாதிக்கும் மேலானவர்களிடம் இல்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.

என்னுடைய கல்வியையும், சுகாதாரத்தையும், வேலைவாய்ப்பையும், என்னுடைய அமைதியான நலமான வாழ்வையும், என்னுடைய வளமான நிலத்தையும், நீரையும் எங்கோ இருந்து வருகிற ஒரு கூட்டம் பறிக்கிறது. என் மூதாதையர் காலங்காலமாக கட்டமைத்த அறிவுக் கருவூலத்தைத் தன்னுடையதுபோல கபட வேடம் போட்டு திரிக்கிறது.

வடநாட்டோடு ஒப்பிடும்போது ஓரளவுக்காவது இங்குள்ள இணக்கமான உறவுகளை அது கெடுக்கிறது. அரும்பாடுபட்டு இங்கு உருவாக்கி நெறிப்படுத்திவைத்துள்ள சமூக நீதிக் கோட்பாட்டை அது தகர்க்கிறது.

ஆனாலும் என்னுடைய மதத்திற்காகவும், என்னுடைய சாதிக்காகவும், அவற்றைக் தூக்கிப் பிடிக்கும் அல்லது அவற்றுக்கு சொம்பு தூக்கும் அரசியலுக்காகவும்தான் நான் குரல் கொடுப்பேன் என வரிந்துகட்டிக் கொண்டு நிற்கும் நபர்களிடம் முன் சொன்ன இழப்புகள் எவையும் காதில் விழுவதில்லை. அப்படியே இவை புரிந்தாலும் செலக்டிவ் அம்னீஷியா உள்ளவர்களைப்போல் இவற்றை அவர்கள் கண்டுகொள்வதில்லை.

இந்த ஆட்டோ ஸ்டார்ட் ஆகாததற்கு பக்கத்து ஆட்டோவின் கண்ணாடி ஒழுங்காக இல்லாததுதான் என வரும் அஜித் படக் காமெடியைப் போல, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

சாதிய மத அமைப்புகள் வழியாக அவர்கள் கூட்டம் கூட்டமாக இவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். இதற்காகவே பயிற்சி எடுத்த நபர்கள் வழியாக பெரும்பாலும் மறைமுகமாகவும், சில போது நேரடியாகவும், வெறியேற்றவும், வெறியேற்றிக் கொள்ளவும் படிப்படியாகப் பயிற்றுவிக்கப் படுகின்றனர்.

மத ரீதியாகவோ சாதி ரீதியாகவோ பாழ் சிந்தனையால் பாதிக்கப்பட்டு இவ்வாறு பாகுபாட்டு உணர்வைப் பெறுவது சுலபம். மாறாக அவற்றை மாற்றிக்கொள்வது கடினம். சூது போலத்தான், பழகுவது சுலபம். மறப்பது கடினம். அதிலும் இத்தகைய பயிற்றுவிப்பு மிகத்தீவிரமடைந்துள்ள இன்றைய நாட்களில் அவற்றுக்கு எதிராகக் களமாடுவது எவ்வளவு சவாலானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நம்முடன் பழகும், படிக்கும், வேலை செய்யும் ஒருவனுக்கோ ஒருத்திக்கோ தக்க சமயத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாமையால் நேரும் இத்தகைய விபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கிறோம் என்கிற கரிசன உணர்வுதான் நமக்கான முதல் தேவை. அவர்களுக்குள் புதிதாக செல்ல வாய்ப்புள்ளவர்களிடம் அறிவின்பாற்பட்ட புரிதலை அன்பாக ஏற்படுத்த முயற்சிப்பதுதான் அடுத்த முக்கிய செயல்.

நோயுற்றவர்களுக்கு மருந்து கொடுப்பது எப்படியோ அப்படித்தான் மெல்லமெல்ல மீட்க வேண்டும். இந்த நோயைப் பொறுத்தளவில் மருந்து கொடுப்பதைக் காட்டிலும் நோய் பாதிப்பு தென்படும் நபர்களுக்கு மருந்து கொடுப்பது அதி முக்கியமாகக் கருதப்பட வேண்டும். எரிகிற புத்தகத்தில் எரியாத பக்கங்களைக் காப்பது அதிமுக்கியம் தானே.

அதேநேரத்தில் எதிர்ப்படும் எல்லாரிடமும் இவ்வாறு மோதிக்கொள்வது என்பது, மீன் மார்க்கெட்டுக்குப் போய் ஜாமீன் வாங்க முடியாமல் திரும்பியவர்களை முட்ட நினைத்து கம்பியில் முட்டிக்கொண்ட வடிவேலுவின் கதையாகவே போகும்.

- மாணிக்கமுனிராஜ்

Pin It