உலகில் பல அறிவியல் அறிஞர்கள் அரசியல் தலைவர்கள் தங்களுடைய பங்களிப்பால் மானுட வரலாற்றில் முன்னேற்றத்திற்கான தடயங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தங்களுடைய அரும் பெரும் பணிகளால் மக்கள் நலனிற்காகப் பயன்படுத்திப் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளனர். குறிப்பாக 15ஆம் நூற்றாண்டு முதல் வரலாற்றுப் பக்கங்களை நோக்கினால் இன்று உலகம் காணும் அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் மக்களாட்சிக் கருத்துகளும் பல சிந்தனையாளர்களால் அரசியல் தலைவர்களால் உருவானது என்பது புலப்படுகிறது.

அவ்வரிசையில் இந்தியாவின் முதல் பிரதமரான நேரு பெரும் சாதனையாளராக என்றும் இந்திய வரலாற்றில் வலம் வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளங்களைப் பல அரிய வேளாண் தொழில் கட்டமைப்புகளைத் தனது ஆட்சிக்காலத்தில் உருவாக்கினார். அறிவியல் துறை, பொருளாதாரத்துறை, கல்வித் துறை ஆகியன நேரு காலத்தில் பொதுத்துறையின் வழியாக வளர்த்தெடுக்கப்பட்டன. நேரு பின்பற்றிய பொதுத் துறை சார்ந்த அறிவியல் வளர்ச்சிதான் உலகளவில் இன்று இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் பெற்று வரும் வெற்றிகளுக்குக் காரணமாக அமைகிறது.

காங்கிரசுக் கட்சியில் பயணித்த காலத்திலும் சரி அதற்குப் பின்பும் நேரு மீது தந்தை பெரியார் பல விமர்சனங்களை வைத்ததுண்டு. ஆனால் தந்தை பெரியார் நேரு மறைந்த போது ஆற்றிய இரங்கல் உரை நேருவின் ஆளுமையின் பன்முகத் தன்மையை விளக்குகிறது. 27.5.1964இல் சேலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் (அவர்) நேரு அடிச்சுவட்டைப் பின்பற்ற எல்லோரும் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். நேரு அவர்கள் அருமையான திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டது அவருடைய திறமை என்றோ அல்லது அவருக்கு இருந்த செல்வாக்குக் கருதி வாய்ப்பு காரணமாக என்றோ மாத்திரம் கூறமாட்டேன். இவை எல்லாவற்றையும்விட அவர் ஒரு சிறந்த தியாகி. தனக்கென்று எதையும் செய்து கொள்ளாதவர்.தியாகம் என்று சொல்வதற்கே பொருள் தனக்கென்று எதையும் செய்து கொள்ளாமல் தொண்டாற்றுவதுதான். தியாகத்தைக்கூறிப் பலன் பெறப் பார்ப்பது வெறும் கூலித்தொண்டாகும். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் முதல் வரிசை தொகுதி 6 பக்.3130 பதிப்பாசிரியர் வே.ஆனைமுத்து).

இத்தகைய மாபெரும் தலைவரை ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரங்கள் வெறித்தனமாகத் தொடர்ந்து தாக்கி வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக நேருவின் சாதனைகளை மறைத்தும் நேரு உருவாக்கிய ஒன்றிய அரசின் திட்டக்குழுவைக் கலைத்தும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நேருவின் படமோ சிலையோ இடம் பெறாமல் செய்து ஆர்.எஸ்.எஸின் அடியாளாக பிரதமர் நரேந்திரர் நேருவின் அழியாப் புகழைச் சீர் குலைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பாஜக ஒன்றிய அரசின் தேர்தல் பத்திர ஊழல் இன்றைக்கு வெடித்துக் கிளம்பியுள்ளது. நேரு எங்கே? நரேந்திரர் எங்கே? என்று அரசியல் தளத்தில் இன்று கேள்வி எழுப்பப்படுகிறது. தந்தை பெரியாரின் உரையில் உள்ள நேருவைப் பற்றிய கருத்து கலங்கரை விளக்கத்தின் ஒளியாக அரசியல் கடலில் ஒளிர்கிறது. அன்றைய பிரதமர் நேரு தனது உறுதியளிப்புகளை வாரி இறைத்ததில்லை. ஆனால். விடுதலைப் போராட்டக் காலத்தில் கண்ட பட்டறிவைக் கொண்டு பல முன்னோடியான திட்டங்களை இந்தியாவிற்கு வழங்கியவர்.modi promisesஆனால் பிரதமர் நரேந்திரர் கடந்த பத்தாண்டுகளில் அளித்த உறுதியளிப்புகளும் அவற்றை நிறைவேற்றாமல் திசை திருப்பும் திட்டங்களை வகுத்து இந்தியாவின் சமூகம் பொருளாதாரம் உட்பட அனைத்துத் தளங்களையும் சீரழித்து வருவதால் நரேந்திரர் அளித்த உறுதியளிப்பு என்பது திட்டமும் அல்ல அரசியலும் அல்ல மோசடி ஒன்றேதான் என்பதை இன்று மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். ஊடகங்கள் நரேந்திரருக்குப் பயந்து கொண்டு விளம்பரப் பணத்திற்காக உண்மைகளை மறைத்து நரேந்திரர் செய்யும் பொய் பரப்புரைகளை முன்னிறுத்தலாம். ஆனால். இந்த ஊடகங்களும் தங்களின் செயல்களால் உண்மைச் செய்திகளை மறைத்து நரேந்திரரின் மோசடிகளுக்குச் சிறிதும் வெட்கமின்றி துணை போகின்றன.

ஊடகங்கள் எப்படி மூடி மறைத்தாலும் 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பணப்பத்திர (Electoral Bonds) ஊழல் இன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் முடைநாற்றம் வீசும் சாக்கடையாக பாஜகவின் அரசியல் மாறி விட்டதைத் தெளிவுபடுத்துகிறது. நரேந்திரர் ஆட்சியில் ஒன்றிய அரசினுடைய நிருவாகக் கருவிகளான வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, புலனாய்வுத் துறை ஆகிய அமைப்புகள் நடுநிலை தவறி அரசின் விதிகளை மீறி பாஜகவிற்கு நிதித் திரட்டும் அடியாட்களாக மாற்றப்பட்டமை ஜனநாயகத்தின் மீது விழுந்த பெருத்த அடியாகும். உலகின் எந்த ஜனநாயக நாட்டிலும் நடந்திராத அடாத செயலாகும். உள்ளத்திலே மோசடி, நடைமுறையில் நடிப்பு, உண்மைக்கு எதிரான உரைகள், கொடுத்த வாக்குறுதிகளை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகள் மீதான அடாவடி நடவடிக் கைகள் ஆகியனதான் நரேந்திரரின் ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட காட்சிகள்.

பிரதமர் நரேந்திரரின் மற்றொரு ஊழல் எப்போது வெடிக்கும்? என்ற வினா பல சமூக ஆர்வலர்களால் எழுப்பப்படுகிறது. அதுதான் பிரதமரின் நலப் பாதுகாப்பு நிதியம்; (The Prime Minsiter Care Fund- The Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund). இந்த நிதியத்தின் கணக்கு வழக்குகளும் கமுக்கமாக பரம இரகசியமாகப் பாதுகாக்கப்படுகின்றன. யார் நிதி அளித்தார்கள் என்ன பயனைப் பெற்றார்கள் என்பதை மக்கள் அறிய ஆவலாக உள்ளனர். இங்கும் நீதியின் கண்கள் திறக்கப்பட வேண்டும் என்பது நல்லோர்களின் வேட்கையாக உள்ளது.

2014 ஆம் ஆண்டிலும் 2019 ஆம் ஆண்டிலும் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் போது நரேந்திரர் அளித்த உறுதியளிப்புகள் பலபல. அளித்த உறுதியளிப்புகள் நிறைவேற்றப்பட்டனவா? நாட்டின் நடப்புகளும் புள்ளி விவரங்களும் அளிக்கும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும் முன்பு தேர்தல் பரப்புரைகளில் நரேந்திரர் முழங்கிய ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு அளிப்பேன் என்கிற உறுதியளிப்புதான் முதல் மோசடி. ஆதற்கு மாறாக பல இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றித் தவிக்கின்றனர். பல பொருளாதார வல்லுநர்கள் வேலையற்ற வளர்ச்சி (Jobless growth), வேலையிழந்த வளர்ச்சி (Jobloss growth) என்று நரேந்திரரின் ஆட்சியின் வேதனைகளைப் பற்றி வெளியிட்டு வருகின்றனர்.

கள்ளப் பணத்தை ஒழிப்பேன். வெளிநாட்டு வங்கிகளில் கள்ளத்தனமாக வைக்கப்பட்டுள்ள பணத்தொகையை எடுத்து வருவேன் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 இலட்சம் வரவு வைப்பேன் என்று வாய் கூசாமல் பேசிய மற்றொரு உறுதியளிப்பு என்னவாயிற்று?

இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது புதிதல்ல. 1946இல் பிரித்தானியப் பேரரசு இந்தியாவை ஆண்ட போது ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று முதன்முதலாக அறிவித்து, கள்ளப்பணத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசி உயர்வையும் தடுத்தது.

1977இல் ஜனதா அரசு அமைந்து பிரதமராக மொரார்ஜி தேசாய் பணியாற்றிய காலத்தில் 1978ஆம் ஆண்டு ரூ.1000 ரூ.5000 ரூ.10000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். ஆனால் ஒன்றிய அரசு இந்த அறிவிப்பால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிவிடக்கூடாது என்பதில் பெரும் அக்கறை செலுத்தப் பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி மேற்குறிப்பிட்ட பணத்தாள்களை வைத்திருப்பவர்கள் முறையாகக் கணக்குக் காட்டி ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகள் வழியாகத் தங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்து அதற்குரியக் காலஅட்ட வணையையும் வெளியிட்டது.

எவ்வித, பதட்டமும் பயமும் இல்லாமல் முறையான வகையில் பணத்தை வைத்திருந்தவர்கள் மும்பை சென்னை கல்கத்தா போன்ற பெரு நகரங்களில் வரிசையில் நின்று தங்களுக்கு உரியப் பணத்தைத் திரும்பப் பெற்றனர். கணக்கில் வராத சில ஆயிரம் கோடி பணம் அரசிற்கு உரிய முறையில் சேர்ந்தது. இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அன்று நடுத்தர சாமானிய மக்களைச் சிறிதளவும் பாதிக்கவில்லை.

ஆனால் 2016ஆம் ஆண்டு ரூ.500 ரூ.1000 பணத்தாள் மதிப்பிழப்பு நடவடிக்கையை ஒன்றிய பாஜக அரசு இரவோடு இரவாக அறிவித்தது. தனது அமைச்சரவையைக் கலந்து ஆலோசிக்காமல், குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜிக்குத் தெரிவிக்காமல், இந்திய மைய வங்கிக்கும் தெரிவிக்காமல் தான்தோன்றித்தனமாக இரவு நேரத்தில் தொலைக்காட்சி வழியாக அறிவிப்பை வெளியிட்டார். இந்த அதிரடி நடவடிக்கை பல இலட்சக்கணக்கான குடும்பங்களின் சேமிப்பைச் சிதைத்தது. எளிய மக்கள் கையிலே ரூ.500 வைத்திருந்தாலும் அந்தப் பணத்தை அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்த முடியவில்லை. வங்கிகளில் நீண்ட வரிசைகளில் நாள் முழுவதும் நின்றும் தங்களின் உழைப்பால் வந்த பணத்தை மாற்ற முடியவில்லை. பல நூற்றுக்கணக்கான ஏழை எளியோர் வங்கிகளின் வாசல்களிலும் சாலைகளிலும் மடிந்தனர். எந்த நாட்டிலும் நடக்காத ஒரு கொடுமையை நிறைவேற்றியவர் நரேந்திரர். 50 நாட்களில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்புகள் சீரமைக்கப்படும் இல்லையென்றால் என்னைத் தூக்கிலிடுங்கள் என்று நரேந்திரர் சூளுரைத்தார். கயிறு இங்கே நரேந்திரர் எங்கே? என்று பலர் சமூக வலைத்தளங்களில் எள்ளல் செய்ததுதான் மிச்சம்.

இந்த நடவடிக்கையிலும் பெரும் ஊழலைச் சங்கிகள் செய்தனர். சான்றாக குஜராத்தில் அமித்ஷா இயக்குந ராக இருந்த அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் 5 நாட் களில் 745 கோடி ரூபாய் மாற்றப்பட்டது. அதே போன்று குஜராத்திலுள்ள 11 வங்கிகளில் 3115 கோடி ரூபாய் பணம் மாற்றப்பட்டது. இந்த இரு செய்திக ளும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாகப் பெறப்பட்டன.

நாட்டிற்கு நல்லதைச் செய்வேன் என்று நரேந்திரர் அளித்த உறுதியளிப்புகள் ஒவ்வொன்றாகச் சிதையத் தொடங்கின. இதற்கு மாறாக பணம் பதுக்கும் நடவடிக்கைகளும் பல குஜராத்திய முதலாளிகளின் கொட்டங்களும் பெருகின. பாஜக ஆட்சியில் பல பெரும் முதலாளிகள் வங்கிகளில் பல்லாயிரம் கோடிகளை மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றனர். இன்று வரை ஒருவரைக் கூட உரியச் சட்ட நடவடிக் கைகளை மேற்கொண்டு இந்தியாவிற்குக் கொண்டுவர முடியவில்லை.

பங்குச் சந்தைதான் இந்தியாவினுடைய மூலதனச் சந்தையாகப் பலரால் போற்றப்படுகிறது. தேசியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் தனிநபரும் பயன்பெறுவர். தொழில்களும் பெருகும், நாடும் வளரும் என்று நம்பிக்கை அளிக்கப்பட்டது. ஆனால் நரேந்திரர் ஆட்சியில் பங்குச் சந்தை அமைப்பிலேயே ஊழல் வெடிக்கத் தொடங்கியது. சான்றாக பங்குச் சந்தை அமைப்பில் பணியாற்றிய சித்ரா இராமகிருஷ்ணா பல இலட்சம் கோடிக்கு ஊழல் செய்தார் என்று தாமதமாகக் கைது செய்யப்பட்டார்.

2013 ஆம் ஆண்டு சித்ரா இராமகிருஷ்ணா தேசியப் பங்குச்சந்தையின் மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலராகப் பதவி ஏற்றதிலிருந்து அவர் வைத்ததே சட்டம் என்ற நிலை உருவானது. தனக்கு ஆன்மிக குரு சிரோன்மணி என்றும் இவர் இமயமலையில் தவம் புரிகிறார் என்றும் அவரின் அறிவுறுத்தலின்படியே செயல்பட்டதாகவும் பல முடிவுகளை எடுத்ததாகவும் தெரிவித்தார். அவர் பயன்படுத்திய கணினி அமைப்புகளுக்கு ரிக் வேதம், சாம வேதம் என்றும் பெயரிட்டு மின்னஞ்சல் வழியாகச் சித்து விளையாட்டுகளை இமயமலை சித்தபுருஷ் யோகியுடன் விளையாடியுள்ளார். போதிய கல்வித் தகுதியும் நிதி நிறுவனங்களில் பணியாற்றிய முன்னனுபவமும் இல்லாத ஆண்டு ஊதியம் சில இலட்ச ரூபாயாகப் பெற்ற ஆனந்த் சுப்ரமணியத்தைக் கோடிக்கணக்கில் ஆண்டு ஊதியம் அளித்துத் தனக்குத் துணை உயர் அலுவலராக நியமித்துக் கொண்டார்.

கணினி வழியாகப் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள் இரகசியங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார் என்று சிங்கப்பூரைச் சேர்ந்த பங்குச் சந்தையில் ஈடுபட்ட ஒருவர் குறிப்பிட்டதைத் தொடர்ந்து இரு பத்திரிக்கையாளர்கள் ஆய்வு மேற்கொண்டு ஊழல்களை வெளியிட்டபிறகுதான் செபி மற்றும் ஒன்றிய அரசின் புலனாய்வுத் துறை மெல்ல மெல்ல தங்களின் கவனத்தைத் தேசியப் பங்குச்சந்தையின் மீது திருப்பியது. ஒன்றிய புலனாய்வுத் துறை ஆனந்த் சுப்ரமணியத்திடம் கடுமையான முறையில் விசாரணையை மேற்கொண்ட பிறகுதான் அந்த இமயமலை யோகி ஆனந்த சுப்ரமணியம் தான் என்பது ஊடகங்களில் வெளி வந்தது. இதற்குப் பிறகு பல நாட்கள் கழித்துத்தான் சித்ரா இராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டார். இதே நாடகத்தைத்தான் இன்றும் நமது நரேந்திரர் ஆடி வருகிறார். கடலுக்கு அடியில் கிருஷ்ணரைத் தேடுகிறார்.

நரேந்திரரின் நண்பர் அதானி செய்த மோசடிகளை ஊழல்களை அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கை அம்பலப்படுத்தியது. இந்த ஊழல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஒன்றிய அரசு என்ன செய்திருக்க வேண்டும்? உச்ச நீதிமன்றத்தின் பார்வையில் விசாரணைக்குழு ஒன்று அமைத்து விசாரணை செய்வதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பும் தருவோம் என்றல்லவா கூறியிருக்க வேண்டும். இறுதியில் உச்ச நீதிமன்றமே அதானி பங்குச் சந்தை மோசடிகளை செபி அமைப்பே விசாரிக்கும் என்ற ஒரு தீர்ப்பை அளித்தது. சித்ரா இராமகிருஷ்ணா ஊழல் சித்து விளையாடிய அமைப்பு எப்படி அதானி செய்த ஊழல்களை விசாரித்து உண்மையைக் கொண்டு வர முடியும் என்ற கேள்வி இன்றும் பலரால் எழுப்பப்பட்டு வருகிறது.

நரேந்திரர் குஜராத் முதலமைச்சராக இருந்த போது மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு ஒவ்வொன்றாகப் பறித்து வருகிறது என்று நீட்டி முழங்கினார். நரேந்திரர் மாநிலச் சுயாட்சிக்காக இட்ட முழக்கங்கள் இன்றும் சமூக வலைத் தளங்களில் உலா வருகின்றன. ஆனால் நநேரந்திரர் பிரதமர் ஆன பிறகு மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றன.

மாநிலங்களின் வரி உரிமைகளைப் பறித்துச் சரக்கு சேவை வரி விதிப்பு முறையை 2017இல் பாஜக அரசு நடைமுறைப் படுத்தியது. இந்த வரி விதிப்பு சிறுகுறு நடுத்தர உற்பத்தி நிறுவனங்களை வீழ்ச்சியடைச் செய்தது. மேலும் ஏழை நடுத்தர மக்களின் மீது தாங்க முடியாத அளவிற்கு வரிச் சுமை ஏற்றப்பட்டது. அவர்களின் சிறிய அளவிலான குடும்பச் சேமிப்பு மீது கூட வரி விதிக்கப்பட்டது. இந்திய மக்கள் அனைவரும் வங்கிக் கணக்குகள் தொடங்க வேண்டும் என்று பிரதமர் பல முறை வேண்டுகோள் விடுத்தார். அரசின் பல நலத்திட்டங்கள் இந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைநம்பிப் பலஇலட்சம் ஏழை மக்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்கினர். ஆனால் குறைந்த அளவு வைப்புத் தொகை இந்த ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளில் இல்லாத காரணத்தால் கடந்த நிதியாண்டில் ஏழை எளியோர்க்குத் தண்டமாக 21000 கோடி ரூபாயை விதித்துப் பொதுத்துறை, தனியார்த் துறை வங்கிகள் இந்த மக்களின் பணத்தைச் சூறையாடியுள்ளன.

1960களில் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் குடும்பச் சேமிப்பு 20 விழுக்காடாக இருந்து 2021இல் 17 விழுக்காடாகச் சரிந்தது. 2022இல் நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 5.5 விழுக்காடாக குடும்பச் சேமிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாய் மதிப்பில் குறிப்பிட வேண்டுமென்றால் 2021இல் குடும்பச் சேமிப்பு 34 இலட்சம் கோடியாக இருந்தது. 2022-23இல் 17 இலட்சம் கோடியாகச் சரிந்துள்ளது. கடந்த 50 ஆண்டு களில் காணாத சரிவாக இது உள்ளது. மேலும் நடுத்தரக் குடும்பத்தினரின் கடன்சுமை பெருமளவில் பெருகியுள்ளது. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் குடும்பப் பிரிவினர் (household sector) ஜூலை 2022 வரை 36 இலட்சம் கோடிகளைக் கடனாகப் பெற்றுள்ளனர். ஜூலை 2022 முதல் ஜூலை 23 வரை இந்தக் கடன் எண்ணிக்கை 47 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மேற்குறிப்பிட்ட குடும்பச் சேமிப்பு வீழ்ச்சிக்கும் குடும்பக் கடனுக்கும் உள்ள தொடர்பை ஆய்ந்து பார்த்தால் ஏழை நடுத்தரப் பிரிவினர் பொருளாதார வீழ்ச்சியில் சரிந்து வருகின்றனர் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். அதே நேரத்தில் பொதுத் துறை வங்கிகளிடமிருந்து பெரு முதலாளிகள் கடனாகப் பெற்ற ரூபாய் 10 இலட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் ஒன்றிய அரசால் மாநிலங்களின் நிதி பங்களிப்போடு நிறைவேற்றப்படும் பல திட்டங்கள் எவ்வகையில் செயல்படுகின்றன என்பதை மதிப்பீடு செய்து பரிந்துரை செய்ய ஒன்றியத் திட்டக்குழு உறுப்பினரான பி.கே. சதுர்வேதி தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கையில் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்படும் பல திட்டங்களைச் செயல்படுத்தும் போது உள்ள குறைகள் சுட்டிக் காட்டப்பட்டன. 1967ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்ட இவ்வகை ஒன்றிய மாநில அரசுகள் இணைந்து அளிக்கும் திட்டங்கள் பெருமளவில் பெருகி வருவதைக் குறைக்க வேண்டும் என்று பல மாநில முதல்வர்கள் தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் குறிப்பிட்டுள் ளனர். ஆனால் நரேந்திரர் 2022லிருந்து தேர்தல் கண்ணோட்டத்தோடு ஒன்றிய அரசு நேரடியாக நடைமுறைப்படுத்தும் 73 திட்டங்களை அறிவித்தார். அவற்றில் 10 முதன்மையான திட்டங்களுக்கு 1.5 இலட்சம் கோடி அளவிற்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகின்றன என்பது மாநில அரசுகளுக்கு அறிவிப்பதும் இல்லை. தெரிவிப்பதும் இல்லை. இது மாநில அரசுகள் மீது தொடுக்கப்பட்ட பெரும் தாக்குதலாகும்.

ஏற்கெனவே நிதிச்சுமையால் பாதிக்கப்பட்டு வரும் மாநிலங்கள் தங்களின் மக்கள் நலத்திட்டங்களை நிறை வேற்றுவதில் பல இடையூறு களையும் பின்னடைவுகளையும் சந்தித்து வருகின்றன. ஆனால் நேரடியாக ஒன்றிய அரசு நிறைவேற்றும் திட்டங்கள் சரி வரக் கண்காணிப்பில்லாமல் பெரும் நிர்வாகச் சீர்கேடுகளும் ஊழல்களும் இத்திட்டங்களில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு ஒன்றிய அரசு அளிக்கும் நிதி உதவிகள் எந்தெந்த மாவட்டங்கள் பள்ளிகள் கல்லூரிகளுக்குச் சென்றன போன்ற தகவல்கள் மாநிலஅரசிற்குத் தெரிவிக்கப்படுவதில்லை. ஏற்கெனவே சதுர்வேதி குழு மாநில ஒன்றிய அரசுகள் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களின் அளவையும் குறைக்க வேண்டும் என்ற பரிந்துரையை மீறி ஒன்றிய அரசு மாநில அரசுகளின் திட்டமிடல் கொள்கையையும் நிதி ஒதுக்கீடு கூறுகளையும் சிதைத்து வருகிறது. சான்றாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது நடைமுறைப் படுத்தப்பட்ட காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு நிதி உதவி தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலமான மேற்கு வங்கத்தில் கடந்த இரண்டாண்டுகளாக இத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதை அண்மையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டிருந்தார். தமிழ் நாட்டிலும் இத்திட்டத்திற்கான நிதியுதவி குறைக்கப்பட்டு வருகிறது. கல்விக்காக ஒன்றிய அரசு நேரடியாக அளிக்கும் நிதியுதவி தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்ட மாநிலத்திற்கு மட்டுமே நிதியுதவி செய்யப்படுகிறது.

ஆனால் ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்களில் எவ்வளவு ஊழல்கள் பெருகி வருகின்றன என்பதை 2023ஆண்டு இந்தியத் தலைமைக் கணக்குஉயர் அலுவலரின் அறிக்கை சுட்டுகின்றது. எடுத்துக்காட்டாக தேசிய நெடுஞ்சாலை களைக் கட்டமைக்கும் பணிகளில் நடைபெற்ற பெரும் ஊழலை வெளிப்படுத்தியது. பாரத்மாலா திட்டத்தின் கீழ் துவாரக விரைவு நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கான செலவு ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 18 கோடி என்று கணக்கிடப்பட்டுத் திட்டம் தொடங்கியது. ஆனால் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்கும் பணிக்கு 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டர் சாலையில் மட்டும் 232 கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம் சூறையாடப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்த அதானி ஊழலை விஞ்சியது பாரத்மாலா திட்டத்தில் நடைபெற்ற மாபெரும் ஊழல்.

பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நடைபெற்ற மோசடியும் ஊழலும் இதுவரை இந்தியா கண்டிராதது. 7,50,000 நபர்கள் ஒரேயொரு அலைபேசி எண்ணில் பதிவு செய்யப் பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான இறந்தவர்களை உயிரோடு இருந்து இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் வழியாக மருத்துவச் சிகிச்சை பெற்றுப் பயன் பெற்றார்கள் என்று போலிக் கணக்குக் காட்டிப் பெரும் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. 88,760 நோயாளிகள் சிகிச்சை பெற்றார்கள் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

வடக்கு வாழ்கிறது; தெற்கு சுரண்டப்படுகிறது

தென் மாநிலங்களில் இருந்து அதிக வரி வருவாயை எடுத்துக் கொண்டு குறைந்த நிதியைத் தென் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளித்து வருகிறது. 2023ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் உள்ள புள்ளிவிவரப்படி வருமான வரி வழியாக வருகின்ற வருமானம் 11.9 விழுக் காட்டிலிருந்து 16.4 விழுக்காடு கடந்த ஆறாண்டுகளில் உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா, தில்லி, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்கள் வருமான வரி வழியாக ஒன்றிய அரசிற்குக் கிடைக்கும் வருவாயில் 5இல் 4 பங்கினை அளிக்கின்றன. மற்ற மாநிலங்கள் ஒரு பங்கினை மட்டுமே அளிக்கின்றன. இதைத் தென்மாநில முதல்வர்கள் கேட்டால் வடக்கு தெற்கு என்று பிரிக்கிறார்கள் என்று நரேந்திரர் பதறுகிறார்.

நரேந்திரர் அரசியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் 1983ஆம் ஆண்டி லேயே நிதிக் குழுக்களின் பரிந்துரையால் தென்இந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று கர்நாடக மாநிலத்தின் அன்றைய முதல்வராக இருந்த இராமகிருஷ்ண ஹெக்டே தென்னக முதல்வர்கள் மாநாட்டைக் கூட்டினார். தமிழ்நாட்டு முதல்வர் எம்.ஜி.ஆர். ஆந்திர முதல்வர் என்.டி.ஆர். பாண்டிச்சேரி முதல்வர் இராமச்சந்திரன் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். 9ஆவது நிதிக்குழுத் தனது பரிந்துரையில் தென் மாநிலங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால் எல்லா நிலைகளிலும் நரேந்திரர் ஆட்சியில் ஒன்றிய அரசு தூய்மை இந்தியா திட்டம், சீர்மிகு நகர் திட்டம், திறன் வளர்ப்பு திட்டம் போன்ற பல திட்டங்களை அறிவித்து அதற்குரிய நிதியை ஒதுக்காமல் முறையாகக் கண்காணிக்காமல் பல இலட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் பெரும் ஊழல்களிலும் தோல்வியிலும் முடிந்துள்ளன.

கடந்த பத்தாண்டுகளில் பெரும் முதலாளிகளுக்கு வங்கி கடன் முதல் வரிச்சலுகை வரை எல்லா அரசுத் துறைகளிலும் வழங்கியது காரணமாக நரேந்திரர் ஆட்சியில் அதானி அம்பானிகள்தான் பெரும் பணக்காரர்களாக மாறி உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்று வருகின்றனர்.

ஏற்றத்தாழ்வுகள் நிலை பற்றிய புள்ளி விவரங்களின்படி இந்தியாவின் ஒரு விழுக்காட்டுப் பணக்காரர்களிடம் நாட்டின் 40 விழுக்காட்டுச் சொத்துகள் குவிந்துள்ளன. 60 விழுக்காட்டு அடித்தட்டு மக்களிடம் 3 விழுக்காடு சொத்துகள் மட்டுமே உள்ளன. அதே நேரத்தில் 50 விழுக்காட்டு அடித்தட்டு மக்களின் சரக்கு சேவை வரி பங்களிப்பு 64 விழுக்காடாகும். 10 விழுக்காட்டுப் பணக்காரர்களின் சரக்கு சேவை வரி பங்களிப்பு 3 விழுக்காடே உள்ளது.

சமூக நீதி பொருளாதார நீதி முற்றிலுமாக நரேந்திரர் ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

நரேந்திரரின் உறுதியளிப்புகள் ஏழைகளின் வாழ்க்கையில் ஏற்றங்களை அளிக்கவில்லை. ஏமாற்றங்களையே அளித் துள்ளன. நரேந்திரரின் உறுதியளிப்புகள் மோசடியில்தான் முடிவுறுகின்றன (Narendra Modi’s promises  end in fraud) என்பதைப் புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன.

- பேராசிரியர் மு.நாகநாதன்

Pin It