muttiah muralitharan and vijay sethupathiபூங்காக்களில் சுற்றும் காதலர்களைப் பிடித்து ராக்கி கட்ட வேண்டும், இல்லை என்றால் தாலி கட்ட வேண்டும் என மிரட்டும் கலாச்சாரக் காவலர்களைப் போல தங்களை தமிழீழக் காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் “தாங்கள் சொல்லும் படங்களில் நடித்தால் மட்டுமே உன் படத்தை ஓட விடுவோம், இல்லை என்றால் தமிழினத் துரோகி பட்டம் கட்டி உன் படத்தை ஓட விடாமல் செய்வோம்” எனப் பகிரங்கமாகவே நடிகர் விஜய் சேதுபதியை மிரட்டினார்கள். வர்த்தக ரீதியாக நடிக்கும் ஒரு நடிகனாக எது போன்ற திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என முடிவெடிக்கும் முழு உரிமையும் விஜய் சேதுபதிக்கு உள்ளது.

முத்தையா முரளிதரன் இலங்கை அரசின் சார்பாக விளையாடும் விளையாட்டு வீரர் என்பதாலோ, இல்லை இலங்கை அரசை ஆதரிப்பவர் என்பதற்காகவோ எதிர்ப்பது தேவையற்றது என்பதுதான் நம் கருத்து. தமிழ்த் தேசியம் என்ற லட்சியக் கோரிக்கையை வென்றெடுக்கும் நோக்கத்திற்காக அல்லும் பகலும் போராடுபவர்கள் இது போன்ற சிறு பிரச்சினைகளில் தலையிட்டு நேரத்தை வீணடிப்பது தேவையற்றது ஆகும். மேலும் இது போன்ற அற்ப விஷயங்களில் கவனம் குவிக்காமல் இருப்பது தமிழ்த் தேசியக் கோரிக்கையை விரைவில் வென்றெடுக்க உதவும் என்பதுதான் நம்மைப் போன்றவர்களின் அபிலாசையாகும்.

ஈழத்தில் நடந்த ஆயுதப் போராட்டம் முற்றாக அழிக்கப்பட்டு அந்த மக்கள் தமது குறைந்த பட்ச உரிமைகளைக் கூட வென்றெடுக்கப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். பல ஆண்டு காலம் நடந்த போரும் இன அழித்தொழிப்பும், அதைத் தொடர்ந்து சிங்களப் பேரினவாத அரசால் நடத்தப்படும் கடும் ஒடுக்குமுறையும், ஓட்டுக் கட்சிகளின் கையறு நிலையும் அந்த மக்களை வாழ்வா சாவா போராட்டத்தில் தள்ளியிருக்கின்றது. அப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் இருந்து அந்த மக்களை மீட்டெடுக்க வேண்டிய கடமை அனைத்து நாடுகளையும் சார்ந்த பாட்டாளி வர்க்க மக்களுக்கும் உள்ளது.

அதே அடிப்படையில்தான் இலங்கையில் இருக்கும் அனைத்து தமிழ்மக்களும் இலங்கையில் வாழும் சிறுபான்மை தேசிய இன மக்கள் என்ற அடிப்படையில் அவர்கள் மீது சிங்களப் பேரினவாத அரசால் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதியை இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்க்கின்றன. அதே சமயம் அவர்கள் ஒரு தேசிய இனமாக இலங்கையின் குடிமக்கள் தானே ஒழிய இந்தியாவின் குடிமக்கள் அல்ல என்பதிலும் தெளிவாக இருக்கின்றார்கள்.

இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனமாக வாழும் ஈழத்தமிழர்கள் அங்கிருக்கும் சிங்கள ஜனநாயக சத்திகளுடன் இணைந்து தமக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் மார்க்சிய- லெனினிய அமைப்புகளின் விருப்பமாகும். ஆனால் இலங்கையில் வாழும் சிங்களவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லுறவு  ஏற்பட்டுவிடக் கூடாது என்பற்காகவே பல சக்திகள் சிங்களவர்கள் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும் பல ஆண்டுகளாக வேலை செய்து கொண்டு இருக்கின்றன. அது போன்ற சக்திகள்தான் சிங்கள மற்றும் ஈழத்தமிழ் பாட்டாளி வர்க்கத்திற்கு இடையே இணக்கம் ஏற்படாத வகையில் இனவெறியைத் தூண்டிவிடும் அற்ப செயலைச் செய்து வருகின்றது. எப்படி இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், கிருஸ்தவர்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் இந்துமத வெறியர்கள் பரப்புரை செய்கின்றார்களோ அதே பாணியிலான இனவெறி கக்கும் பரப்புரையை செய்து வருகின்றார்கள்.

இவர்கள் கக்கும் இனவெறிதான் விஜய் சேதுபதியின் மகளைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட சிலரைத் தூண்டியிருக்கின்றது. சீமான் கூட சிங்களப் பெண்களை வன்புணர்வு செய்வேன் என்று சில ஆண்டுகளுக்கு முன் பேசியதை நாம் பார்த்தோம்.

எல்லா தமிழ்த்தேசியவாதிகளும் அப்படியான சிந்தனையை தம் அணிகள் மத்தியில் விதைக்கின்றார்கள் என்று நாம் சொல்லவில்லை. ஆனால் தொடர்ச்சியாக இங்கே முன்னெடுக்கப்பட்ட இனவாதப் பரப்புரை இப்படியான பலரை உற்பத்தி செய்திருக்கின்றது என்று நாம் சொல்கின்றோம்.

விஜய் சேதுபதி இந்திய ஒன்றியத்தில் வாழும் ஒரு தமிழனாக அவர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில் நடிப்பதா வேண்டாமா என முடிவு செய்யும் முழு உரிமையும் அவருக்கு உள்ளது. அதே போல முத்தையா முரளிதரன் சிங்களப் பேரினவாதத்தின் கைக்கூலி என்றும், ஈழத் தமிழ் மக்களின் துரோகி என்றும் கூற யாருக்கும் உரிமை உள்ளது. அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் இந்திய ஒன்றியத்தில் வாழும் விஜய் சேதுபதியை முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில் நடிக்கக்கூடாது என மிரட்டவோ கடும் அழுத்தம் கொடுக்கவோ யாருக்கும் உரிமை இல்லை.

தமிழ்நாட்டில் இருக்கும் அனைவருமே பிரபாகரனை தமிழினத் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வதோ, பிரபாகரனை விமர்சிப்பவர்களை எல்லாம் தமிழினத் துரோகிகள் என்று முத்திரை குத்துவதோ தேசிய இனக் கோட்பாடு பற்றிய அடிப்படை புரிதலற்றவர்களின் செயலாகும்.

இனப்படுகொலையில் ஈடுபட்ட பெளத்தப் பேரினவாத குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கவும், ஈழத்தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களைத் திரும்ப அவர்களிடமே கொடுக்கவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை பற்றி விசாரணை நடத்தவும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதில் ஈழ ஆதரவாளர்கள் தீவிரம் காட்ட வேண்டும் என்பதுதான் நமது விருப்பமாகும்.

உண்மையிலேயே நமக்கு ஈழத் தமிழர்கள் மீது பற்று இருக்குமானால் விஜய் சேதுபதியை முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில் நடிக்கக்கூடாது எனச் சொல்வதைவிட, ராஜபக்ஷே குடும்பத்துடன் நேரடியாக நெருக்கமான உறவில் இருக்கும் லைக்கா நிறுவனம் தமிழில் படங்கள் தயாரித்து கோடி கோடியாய் சுருட்டுவதைத் தடுத்து அவர்களை விரட்டி அடிக்கும்வரை போராட வேண்டும்.

தமிழில் லைக்கா நிறுவனம் கத்தி, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, எமன், எந்திரன் 2.0, இப்படை வெல்லும், தியா, கோலமாவு கோகிலா, செக்கச் சிவந்த வானம், வட சென்னை, வந்தா ராஜாவாதான் வருவேன், காப்பான், தர்பார், இந்தியன் 2, பொன்னியின் செல்வன் என பல படங்களைத் தயாரித்தும், விநியோக உரிமையைப் பெற்றும் தமிழ் திரை உலகையே கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றது. திரைத்துறையில் இருக்கும் பச்சைத் தமிழனில் இருந்து அனைத்து வண்ணத் தமிழனும் லைக்காவின் கருப்புப் பணத்தில் குளியல் போட்டுக் கொண்டு இருக்கும்போது, தமிழ்த் தேசியவாதிகள் வெளிப்படையாக கோரிக்கை வைக்கலாம், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் எல்லாம் தமிழினத் துரோகிகள் என்று.

இலங்கையில் செயல்படும் 46 சர்வதேச நிறுவனங்களில் 43 நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை ஆகும். அது மட்டுமல்ல இலங்கையில் 2017-ம் ஆண்டு இந்தியா 181 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இலங்கையின் ஐடியல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, புதிய தொழிலகத்தை, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆரம்பித்திருக்கிறது. அதே போல 2019 ஆம் ஆண்டு இந்திய நிறுவனமான அக்கார்டு குழுமம் மற்றும் ஓமன் நாட்டின் ரூ.26,630 கோடி நிதியுதவியுடன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை இலங்கையில் தொடங்கி இருக்கின்றது. விஜய் சேதுபதிக்கே இந்த நிலைமை என்றால் மேற்கூறிய நிறுவனங்களை எல்லாம் தமிழ்த் தேசியவாதிகள் விட்டு வைப்பார்களா என்றே அச்சமாக உள்ளது.

மேலும் எஸ்.ஆர்.எம். குழுமம் இலங்கையில் ‘எஸ்.ஆர்.எம். லங்கா’’ என்ற பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அம்பலமானபோது தமிழினவாதிகள் அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதால், விஜய் சேதுபதியோடு பிரச்சினையை முடித்துக் கொள்ளாமல் இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே முடக்கும் அளவுக்கு இனி தமிழ்த் தேசியவாதிகள் களம் காணுவர்கள் என நம்புகின்றோம்.

எனவே விஜய் சேதுபதியின் டிஎன்ஏ-வைக் கண்டுபிடித்து வெளியிட முயற்சிப்பதைவிட உண்மையிலேயே தங்களை ஈழ ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இதுவரை ‘தமிழ்த் தேசியக் கோரிக்கையை நிறைவேற்ற நடத்தி வந்த குருதி நிறைந்த போராட்ட வரலாற்றை விஜய் சேதுபதி போன்றவர்களுக்குப் புரிய வைத்து அவர்களின் புத்தி தெளிய வைப்பது முக்கியமானதாகும். இது போன்ற வரலாற்றுத் தகவல்கள் தெரியாத காரணத்தால்தான் விஜய் சேதுபதி போன்றவர்கள் தவறான முடிவுக்கு வருகின்றார்கள்.

நமக்கு சந்தேகமெல்லாம் நாளை கலைஞர் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாராவது நடித்தால் இதே போன்று நடிக்கக்கூடாது எனப் போராடுவார்களா என்பதுதான். காரணம் தமிழ்த் தேசியவாதிகள் வைத்திருக்கும் ஈழத்தமிழ் மக்களின் துரோகிகள் பட்டியலில் அவர் முதலிடத்தில் இருப்பதாக அறிகின்றோம்.

தமிழ்த் தேசியவாதிகள் மிக நேர்மையானவர்கள் என்பதை நாம் அறிவோம் அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் சம்பந்தப்பட்ட பாத்திரத்தில் நடிக்கும் அனைவருக்கும் விஜய் சேதுபதிக்கு கொடுத்த அதே அழுத்தத்தைக் கொடுப்பார்கள் என நாம் உறுதியாக நம்பலாம்.

ஆனால் இவர்களுக்குத் தெரியாமலேயே “போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்றும், “விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வந்து நீதிமன்றத்தில் விசாரணை செய்து, தூக்கிலிட வேண்டும்” என்றும் சொன்ன ஜெயலலிதாவின் கதை ‘குயின்’ என்ற பெயரில் வெப்சீரிஸ் வெளிவந்து விட்டது என்று நாம் நம்புவோம்.

அதே போல தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக அணிசேர்க்கையை நடத்திய ராமதாசின் வாழ்க்கை வரலாறு ஒரு வேளை படமாக்கப்பட்டால் சாதியற்ற தமிழகம் படைக்கப் போராடும் தமிழ்த் தேசியவாதிகள் அதை எதிர்ப்பார்கள் என்றும் நாம் நம்புவோம். எப்படியோ விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலகி விட்டார். தமிழ்த் தேசியவாதிகள் நினைத்ததை சாதித்து விட்டார்கள். நமக்கு பயமெல்லாம் இவர்கள் பற்ற வைத்த நெருப்பு விஜய் சேதுபதியின் குடும்பத்தை ஏதாவது செய்யும் முன் தடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.

- செ.கார்கி

Pin It