sea 03சமீபத்தில் சமீபத்திய அடிப்படைகள் மீதே சந்தேகம் வரத் தொடங்கி விட்டது. சந்தேகப் படுவதில் இருக்கும் சுகம் கண்டு பழகும் மனதை கொய்யா மரத்தில் தூக்கிலிடத் துடிக்கிறேன். ஆனால் அவை தாண்டிய சிந்தையில்... கொய்யா மரங்கள் எங்குமே இருக்க போவது இல்லை. எல்லாமே கொய்த மரங்கள் தான்.

பேரண்டத்தில்... பெருவெளிச்சம் காதலியின் மூக்குத்தி என்பது சுவை தான். எனினும்... எறும்பு பசிக்கு கூட ஆகாத உவமை.

சாலையில்.. முன்னெப்போதும் இல்லாத அளவு எதிரே வரும் ஆணோ பெண்ணோ முகம் பார்க்கிறார்கள். முகம் கிடைக்காத அருகாமையில் வேறு வழியின்றி கண்களை குடைந்துக் கண்டு செல்கிறார்கள். இன்னொன்றும் நடக்கிறது. பார்ப்போர் யாரென்று தெரியாத கவசம் இருப்பதால் பார்வையில் விடுதலை கிடைத்திருக்கிறது.

வெறி கொண்ட கண்களை காண முடிக்கையில்.... ஒரு முறை பிடிக்காத எதிராளியைப் பார்த்து சிரித்துக் கொள்ளவும் முடிகிறது. முகமூடிக்குள் நடக்கும் திசை நகர்வுகள் தெரியவா போகிறது. தெரிந்தால் தான் இப்போ என்ன. எல்லாவற்றுக்கும் நமக்கு சாக்கு போக்கு இருக்கிறதே. வெட்டிக் கொள்ளவும். ஒட்டிக் கொள்ளவும்.

யாருக்கு எழுதுகிறோம்.

முன்பெல்லாம் எழுதி எழுதி நாட்குறிப்பில் பத்திரப்படுத்தி வைத்திருப்போம். வேறு வழியே இல்லாமல் வாழ்க்கைத் துணையாக வருபவள் படிப்பாள். அதுவும் அந்த முதல் வருடத்தில் நடக்கும்.. கூத்தில் அதுதான் ஹைலைட். பின்பு சுடு காப்பிக்கும் சுரணைக் கெட்ட காப்பிக்கும் வித்தியாசம் தெரியாமல் போய் விடுவது காலத்தின் அனிச்சை செயல். சமீபத்திய சாபம் - முகநூலில் எழுதிக் குவித்து விட்டு திரும்பிப் பார்க்க பெரிதாக யாரும் கண்டு கொள்ளாத நிலையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் அதற்கு காரணம் முகநூல் மற்றும் பொது ஊடகங்களில் பரவலாக இயங்குவோர் படைப்பாளர்களாக இருக்கிறார்கள். வாசகர்களாக இல்லை. இரண்டு நல்ல எழுத்தாளன்களை ஒரு மணி நேரம் அருகருகே அமர்த்தி விட முடியாது. முடியும் என்போருக்கு வாழ்த்துக்கள்.

சமூக கவிதைகள் எழுதுவதே இல்லை என்று நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டு புலம்பும் சூப்பர் சீனியர்களிடம் ஒரு கேள்வி.

என்றாவது நீங்கள் காதல் கவிதை எழுதியது உண்டா. சமூக கவிதைகளுக்கு புற உலகம் காண வேண்டும். அது காணாவிடினும் கண்களில் படும். காதல் கவிதைக்கு அக உலகம் காண வேண்டும். அது கொக்கு போல காத்திருந்தால் தான் காணக் கிடைக்கும். முன்னதை விட பின்னது சிக்கல் நிறைந்தது. So, இனி காதல் கவிதைகளைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

கெட்ட வார்த்தை அல்லது கேட்ட வார்த்தை.. எதுவாக வேண்டுமானாலும் இருந்து தொலையட்டும்.

ஆனால் எதிர் வினைக்கு பால் உறுப்புகளைச் சுழற்றி சுழற்றி பயன்படுத்துவது மிக தட்டையான உவமைக்கு மனிதன் பொருந்தி போவது போல இருக்கிறது. அதுவும் அம்மாவையும் அக்காவையும்.. ஆயாவையும் சேர்த்துக் கொண்டு பூசி மொழுகுகையில்... குமட்டிக் கொண்டு வருகிறது. யூ டியூப்... முகநூல்... என்று சமூக ஊடகத்தில் ஒரு கருத்துக்கு கீழ் மறு கருத்து பேசுவதாக நினைத்துக் கொண்டு பால் உறுப்புகளின் பெயரை வகை வகையாய் இணைத்து குழைத்து... வர்ணம் பூசி கொட்டி ரசிக்கையில்... ஆழ்மன வக்கிரம் தான் வெளிப்படுகிறது.

பேரன்புக்கு ஒன்று கூடும் நாம் பொதுவெளியில்... பெருங்கோபத்தையும் நாகரீமாக்க வேண்டும்.

வெரி சிம்பிள். அவன் செய்த தவறுக்கு அவன் அம்மாவைத் திட்டி என்ன ஆகும். எந்த அம்மா குழந்தையை மோசமான கருத்துக்கு ஆளாக்குவாள். எல்லாமே சமூகம் கற்றுத் தந்தது தான். சமூகமே யாவைக்கும் பொறுப்பு. சமூகம் என்பது ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி இருக்கும் பூடக புதையல் இல்லை.

இதோ எழுதும் நானும்... படிக்கும் நீங்களும்... தலைப்போ தவளையோ... எல்லாவற்றும் சூப்பர்... செம்ம.. தூள் என்று தலையும் புரியாமல் வாலும் புரிந்து கொள்ள முயலாமல்... லைக்கிட்டுக் கொண்டிருக்கும் ஹாப் பாய்ல்களும்... கவிஜி எழுதி விட்டான் என்பதற்காகவே கண்டும் காணாமல் போகும் அந்த அவரும் தான்.

தனிமனித ஒழுக்கம் எப்போதும் கேள்விக்குறி தான். போதாமை அவ்வளவு இருக்கிறது. இருட்டு எல்லாவற்றுக்கும் பதில் தேட விளைகிறது. இருட்டென்று ஒன்று இல்லை என்பதை புரிந்துக் கொள்ளும் நிலையில்... புத்தன் வீட்டை விட்டு வெளியேறத் தேவை இல்லை.

எல்லாமே இங்கிருந்து எடுக்கப்பட்டவையே. சொற்களும்... சொல்லாதவைகளும் கூட. இங்கே invented என்று ஒன்று கிடையாது. எல்லாமே discovered தான்.

வாழ்வில் ஒரு முறையாவது நம்முள் இருக்கும் Mr. Been -ஐ வெளி வர அனுமதிப்போம்.

- கவிஜி

Pin It