ambedkar 237‘செய்தித்தாள்கள் வெளியிடும் செய்திகள் அறம் சார்ந்து உண்மையை வெளியிடுபவையாக குரலற்ற எளிய மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக இருக்க வேண்டும். வணிக ரீதியாக இருக்க கூடாது”.

- அண்ணல் அம்பேத்கர்.

பத்திரிக்கைச்செய்தி:

“தமிழ்நாடு முழுவதும் பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் அதிக அளவில் நிலுவையிலுள்ளது எனவும், அதனை நிலுவையின்றி முடிவு செய்யாதது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாண்பமை நீதிமன்றம் உத்தரவு”.

மேற்கண்ட பத்திரிக்கை செய்தியில் பொதுமக்களுக்கு பட்டா வழங்க தாமதமின்றி நடவடிக்கை எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தோ, போதுமான பணியாளர்கள் இன்றி, தமிழ்நாடு முழுவதிலும் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள முக்கிய பிரச்சனையை பற்றியோ கருத்தில் கொள்ளாமல் மாண்பமை நீதிமன்றத்தால் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது.

படித்து பட்டம் பெற்று மாண்பமை நீதிமன்றங்களில் அமர்ந்து நீதிபரிபாலனை செய்யும் மாண்பமை நீதிபதிகளான திரு.சந்துரு, அரிபரந்தாமன் போன்றவர்கள் நீதிபதிகளாக பணியாற்றிய காலத்தில் சமூக சிந்தனையோடு உத்தரவுகளை பிறப்பித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களின் வாசிப்பு உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கள அனுபவ எதார்த்தங்களைப்பற்றியதாக இருந்ததால் அவர்களால் மக்கள் நலன் சார்ந்து தொழிலாளர் வர்க்கம் சார்ந்து உத்தரவுகளை பிறப்பிக்க முடிந்தது என்பதே யாராலும் மறுக்க முடியாத உண்மை.

டிஜிட்டல் இந்தியாவில், 21 ஆம் நூற்றாண்டில் நூற்றுக்கணக்கான செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும் இதர ஊடகங்களும் நம்மிடையே உலாவருகின்றன. தினசரி பத்திரிக்கைகள், வார இதழ், மாத இதழ், கல்வி இதழ், வேலைவாய்ப்பு பற்றிய வார இதழ், அரசியல் இதழ்கள், விளையாட்டு இதழ்கள் என ஏராளம் ஏராளமாய் அச்சு வடிவிலும் டிஜிட்டல் வடிவிலும் ஏகப்பட்ட ஊடகங்கள் இந்தியாவில் வெளியாகின்றன.

இன்றைய இளம் சமூகத்தினரையும் உழைக்கும் வர்க்கத்தினரையும், இன்றைய சமூக நிலை குறித்து சிந்திக்க இடம் தராத வகையில், ஆளும் அரசாங்க முதலாளித்துவ ஆதரவு செய்திகளை வெளியிட்டு, நம் சிந்தனைகளை சிதறடிக்கும் பணியை இந்த ஊடகங்கள் செய்து வருகின்றன. இத்தகைய பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் பெரும்பணக்கார முதலாளிகளால் நடத்தப்படுபவை.

அத்தகைய செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகள் ஏதோ போகிற போக்கில் ஏழை உழைக்கும் மக்களைப்பற்றி சில செய்திகளை வெளியிட்டு அனுதாபம் காட்டிக்கொள்கின்றன அவ்வளவுதான். அவர்களின் முக்கிய நோக்கமே வருவாய் தரும் விளம்பரம் மற்றும் முதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகள் மற்றும் செய்திகளை வெளியிடுவதுதான்.

நமது மனநிலையில் முதலாளிகளுக்கு ஆதரவான உளவியலைக்கட்டமைக்கும் பணியை முதலாளித்துவ பத்திரிக்கைகளில் பணியாற்றும் அறிவுஜீவிகள் செய்தி மற்றும் கட்டுரைகள், தலையங்கம் என்ற பெயரில் எழுதி வெளியிடுகின்றனர்.

பெரும்பான்மை உழைக்கும் மக்களைக் கொண்ட டிஜிட்டல் இந்தியாவில், கிராமங்களைப் பற்றியும், உழைக்கும் வர்க்க மக்களைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும், தற்போதைய விவசாய மசோதா பற்றியும், இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள மாதவன்குறிச்சி கிராமத்தில் காணாமல் போன கருமேனி ஆறு பற்றியோ, அந்த ஆற்றில் மணல் மாபியாக்கள் மணல் திருட்டு நடத்தி, எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என கொள்ளையடிப்பதைப் பற்றியோ உண்மையான தெளிவான செய்திகளை வெளியிட ஒருசில உழைக்கும் வர்க்க தினசரி பத்திரிக்கைகளும், இணைய இதழ்களும் மட்டுமே உள்ளது என்பதே முற்றிலும் உண்மை.

தமிழகத்தில் தீக்கதிர் போன்ற உழைக்கும் வர்க்க தினசரி பத்திரிக்கையும், செம்மலர் மற்றும் மார்க்சிஸ்ட் (உழைக்கும் மக்களுக்கான அறம் சார்ந்த கட்டுரைத் தொகுப்பு) ஆகிய மாத இதழ்களும் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையால் வெளியிடப்படுகிறது.

டிஜிட்டல் உலகில், கீற்று, வினவு போன்ற இணைய இதழ்களும் தினசரி இணையத்தில் அனைத்து தரப்பு எழுத்தாளர்களின் கட்டுரை மற்றும் சிற்றிதழ்களை இணைய வழியில் வெளியிட்டு வருகின்றனர். இத்தகைய பத்திரிக்கைகள் உழைக்கும் மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைகுறித்த சிந்தனையை வாசிப்பு பழக்கம் உள்ள இளம் மாணவர்கள் மற்றும் வாலிபர்களின் மனதில் அழுத்தமாக விதைக்கின்றன. ஆளும் அரசுகளின் தவறான சட்டதிட்டங்களை மக்களுக்கு சுட்டிக் காட்டுகின்றன.

சமூக சிந்தனையற்ற, மேம்போக்கான வெறும் போட்டித் தேர்வுக்கான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகளை மட்டும் படித்து வேலைக்கு செல்லும் இளம் தலைமுறை ‘வெறுமனே படித்த பட்டதாரி கூட்டமாகவே செயல்படும்” என்பது நம் கண்முன்னால் உள்ள உண்மை. போட்டித் தேர்வுக்கு மட்டுமல்லாமல் நாம் வாழும் சமூகம் மற்றும் உழைக்கும் மக்களின் நிலைகுறித்த அன்றாட நிலை தெரியாமல் வளரும் இளைஞர்கள் உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கு எதிர்மறையான செயல்பாடுகளிலேயே அதிகம் நாட்டம் கொண்டிருப்பது இயல்பு.

நாம் வாழும் சமூகத்தையும் கைதூக்கிவிடும் மனித இயல்பு இளைஞர்களிடையே உருவாக உழைக்கும் வர்க்க பத்திரிக்கைகளில் வெளியாகும் உண்மைச் செய்திகளை படித்து வாசித்து கள அனுபவங்களில் கற்றுணர்வது அவசியம்.

தான் வாழும் வீட்டின் நிலை, சுற்றியுள்ள சொந்த மக்களின் வாழ்வாதாரம் பற்றி எதுவும் தெரியாமல் அமெரிக்காவில் செட்டிலாகி, அமெரிக்கா வாழ் இந்தியர் என்று பெயர்பெற்ற பொருளாதார நிபுணர்களால் இந்திய பொருளாதாரம் (இந்திய மக்களின் பொருளாதாரம் ) படுபாதாளத்திற்கு சென்றுள்ளதை இந்த உலகமே அறியும்.

அது போல் தான் நல்ல வீடு, நல்ல வேலை, நல்ல சம்பளம், ஆளும் அரசாங்க உதவி என்று வாழும் பல படித்த அறிவுஜீவிகள் எழுதி, பிரபல பத்திரிக்கைகள் வெளியிடும் நடுப்பக்க கட்டுரைகள் மற்றும் செய்திகளை மட்டும் படித்தால் நம் உள்ளத்தின் சிந்தனையும் மேம்படாமல், நம் மனதுக்குள் அடிமை எண்ணம் மேலோங்கி படுபாதாளத்திற்கே நம்மை அழைத்து செல்லும்.

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் வணிக ரீதியிலான ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான செய்திகளையும், அரசாங்கங்களின் மோசமான சட்டங்களையும் ஆதரித்து வெளியிடும் செய்தித்தாள்களும் ஏனைய ஊடகங்களும் அதிக அளவில் உள்ளன.

உழைக்கும் மக்களுக்கான, பெண்களுக்கான, சமூக மாற்றத்திற்கான செய்திளை அறம்சார்ந்து வெளியிடும் உழைக்கும் வர்க்க பத்திரிக்கைகளும், இணைய இதழ்களும் பெரும்பாலான மக்களை சென்றடைவதில் இன்றளவும் பொருளாதார ரீதியிலான சிரமம் நீடிக்கிறது. பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளைக்கடந்தே இந்த பத்திரிக்கைகள் மக்களின் கைகளில் வாசிக்க கிடைக்கிறது.

தன்னைச் சுற்றியுள்ள சமூகம் சார்ந்த சூழல் மற்றும் பிரச்சனைகளைப் பற்றியும், மக்களின் வாழ்வாதார நிலைபற்றியும் அறிந்துகொண்டு, அத்தகைய சூழ்நிலைகளை மாற்றியமைக்கும் எண்ணங்களை வளர்த்தெடுக்க, அண்ணல் அம்பேத்கரின் கருத்தின்படி அறம்சார்ந்து செய்தி வெளியிடும் பத்திரிக்கைகளை படித்து இந்திய மக்களின் வாழ்நிலை குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.

‘படித்த பட்டதாரி கூட்டமானது, தன் சொந்த தேவைகளை பூர்த்தி செய்வதில் மட்டும் கவனம் கொள்ளாமல், தான் வாழ்ந்த, வளர்ந்த சமூகத்தில் நிலவும் வறுமை மற்றும் அறியாமையை நீக்கவும், தன்னைப்போல முன்னேற்றம் காண விரும்பும் இளைஞர்களை கைதூக்கி விடவும் முன்வர வேண்டும்”.

வெறுமனே, வேலைவாய்ப்பு பெறுதல் என்ற மனநிலையில், வணிகம் சார்ந்த பத்திரிக்கைகள் வெளியிடும் போட்டித்தேர்வு குறிப்புகளை படித்து, தேர்ச்சி பெற்ற பட்டதாரி கூட்டமானது சமூகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் தன்மை உடையதாகவே இன்றைய இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள்.

தான் வாழும் சமூகம், அதன் பிரச்சனைகள், அதனை தீர்க்கும் வழிமுறைகள் சார்ந்த செய்திகளை வாசிக்கும் பழக்கம் இல்லாததால், பத்திரிக்கைகளிலும், சமூக ஊடகங்களிலும் வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை பகுத்தறிய முடியாமல், ஆளும் அரசுகள் செய்யும் அத்தனை தவறுகளுக்கும், தலையாட்டி பொம்மைகளாய் மாறிவிடுகிறது படித்த பட்டதாரிக்கூட்டம்.

இப்போதே இப்படி என்றால், சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்னால், அண்ணல் அம்பேத்கர் நம் எளிய உழைக்கும் மக்களுக்கு செய்தித்தாள்கள் மூலம் விடுதலை உணர்வு, சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்த என்ன பாடுபட்டிருப்பார் என்று எண்ணும்போதே மலைப்பாக உள்ளது.

இப்போது, மெத்த படித்த மேதாவிகள், ஆளும் அரசாங்கங்களுக்கு சிங்கி தட்டுபவர்களாக இருப்பதை நாம் தொலைக்காட்சி விவாதங்களிலும், பிரபல செய்தித்தாள்களின் நடுப்பக்க கட்டுரைகளிலும் காண முடிகிறது.

அதைப்போலவே, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும், ஆங்கிலம் படித்த குமாஸ்தாக்களாக, ஆங்கிலேய ஆளும் அரசுக்கு சிங்கி தட்டும் வேலையை, படித்த பட்டதாரி கூட்டமும், ஏனைய பத்திரிக்கைகளும் செய்துவந்த காலமது (20 ஆம் நூற்றாண்டின் துவக்க காலம்).

அத்தகைய காலகட்டத்தில், 1920 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி ‘மூக்நாயக்” என்ற பத்திரிக்கையின் முதல் பதிப்பினை வெளியிட்டார் அண்ணல். அன்றைய காலகட்டத்தில் பத்திரிக்கை ஆசிரியராகவும் பணியாற்றினார் அண்ணல் அம்பேத்கர்.

‘மூக்நாயக்” என்பதற்கு குரல் எழுப்ப முடியாதவர்களின் தலைவர் என்பதே அர்த்தம். இன்றைய இந்தியாவின் மனித சமூகத்தையும், இங்குள்ள அரசாங்க அமைப்பு முறைகளையும், உற்றுநோக்கினால், ‘அநீதிகளின் இருப்பிடமாக” இந்திய நாடு இருப்பதை நாம் அறிய முடியும் என தனது முதல் கட்டுரையை எழுதினார் அண்ணல். இன்றுவரை அதுவே இந்திய நாட்டின் நிலை என்பது மறைக்க முடியாத உண்மை.

‘மூக்நாயக்“ பத்திரிக்கையை துவங்கி அதன் ஆசிரியராகப் பணியாற்றினார் அண்ணல் அம்பேத்கர்.

மற்ற பத்திரிக்கைகள் அண்ணலைப் பற்றிய செய்திகளை எழுதிக் கொண்டிருந்த காலத்தில், மூக்நாயக் இதழில், பெண்கள் மற்றும் உழைக்கும் மக்களின் அடிமைத் தளையை உடைத்தெறியும் விதமாக விழிப்புணர்வு கட்டுரைகளை வெளியிட்டார் அண்ணல். தான் வாழ்ந்த காலகட்டத்தில், தந்தை பெரியாரைப்போல, மக்களை சந்திப்பதற்காக அதிக பயணம் செய்தவராவார் அண்ணல் அம்பேத்கர்.

பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களே, அண்ணலின் பத்திரிக்கை வாசகர்களாக இருந்தனர். பெண்கள் மற்றும் ஏழை மக்களுக்கான வாசிப்பு, உழைக்கும் மக்களின் வாழ்வாதார நிலை பற்றிய விழிப்புணர்வை மட்டுமே நோக்கமாகக் கொண்டு பத்திரிக்கையை வழிநடத்தினார் அண்ணல் அம்பேத்கர்.

பத்திரிக்கை நடத்துவதற்கான பொருளாதார ஆதரவு ஏதுமின்றி அனைத்து செலவுகளையும் தன் தோள்களில் சுமந்தார் அண்ணல். இந்நிலை மற்ற பத்திரிக்கையாளர்களின் கவனிப்புக்கு உரியதாக இருந்தது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களில் அண்ணல் அம்பேத்கரின் மக்கட்பணி குறித்து செய்திகள் எழுதப்பட்டாலும், அண்ணலின் பரவலான பத்திரிக்கை எழுத்துக்கள் பெரும்பாலும் வெளியே தெரியாத ஒன்றாகவே வரலாற்றில் மறைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் கம்யூனிச, சோசலிஸ்டுகளால் நடத்தப்பட்ட சமூக மாற்றத்திற்கான தீண்டாமை எதிர்ப்பு பிரச்சாரத்தை (இன்றளவும் டிஜிட்டல் இந்தியாவில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னெடுத்து வருகிறது), இலண்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் பத்திரிக்கை, ஆஸ்திரேலிய நாட்டின் டெய்லி மெர்க்குரி பத்திரிக்கை, நியூயார்க் டைம்ஸ், ஆம்ஸ்டர்டாம் நியூஸ், பால்டிமோர் ஆப்ரோ அமெரிக்கன், தி நோர்போல்க் ஜர்னல் போன்ற பத்திரிக்கைகள் அக்காலத்தில் தொடர்ந்து சர்வதேச அளவில் வெளியிட்டன.

இவை அனைத்தும் நமது சகோதரர்களான ‘கறுப்பினத்தவர்கள்” என்று வெளிநாட்டவரால் அழைக்கப்பட்டவர்களால் அக்காலகட்டத்தில் நடத்தப்பட்ட சர்வதேச பத்திரிக்கைகள் ஆகும்.

இந்தியாவில் தனது சமூக நல விழிப்புணர்வு இயக்கத்தின் கருத்துக்களை, பத்திரிக்கைகளின் மூலம் அண்ணல் அம்பேத்கர் எளிய மக்களிடம் கொண்டுசேர்த்தார். அதற்காகவே, குரல் எழுப்ப முடியாதவர்களின் தலைவர் - ‘மூக்நாயக்” என்ற பத்திரிக்கையை மராத்தி மொழியில் அண்ணல் துவங்கினார்.

இந்தியாவில் அரசியல் அதிகாரமின்றி வாழும், சமூக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும், விவசாயிகளுக்காகவும் போராட ‘மூக்நாயக்” பத்திரிக்கையை அம்பேத்கர் பயன்படுத்தினார்.

சில ஆண்டுகளில், அண்ணல் அம்பேத்கர் வெளிநாடு சென்று, சர்வதேச அளவில், உழைக்கும் மக்களின் வாழ்நிலை மேம்பட அந்நாட்டவர்களால் எடுக்கப்படும் முன்னெடுப்புகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். அண்ணலின் அமெரிக்க பயணம் குறித்து, ‘கருப்பு அமெரிக்காவில் அம்பேத்கர்” என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு. சூரஜ் யெங்டே எழுதியுள்ள புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்படிப்புக்காகவும், கள ஆய்வுக்காகவும், அண்ணல் அம்பேத்கர் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில், சந்தா வருவாய் இன்றி ‘மூக்நாயக்” பத்திரிக்கை வெளிவருவது 1923 -ல் நிறுத்தப்பட்டது.

‘மூக்நாயக்” பத்திரிக்கை வெளியீடு நிறுத்தத்திற்குப்பிறகு ‘பகிஸ்கிரித் பாரத்” என்ற பெயரில் இன்னொரு இதழை 1927 ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ல் துவங்கினார்.

பகிஸ்கிரித் பாரத் என்பதற்கு ‘நிராகரிக்கப்பட்டவர்களின் இந்தியா” என்பது அர்த்தம் ஆகும்.

மகாராஷ்டிரா மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் உள்ள ‘மகர்” என்ற இடத்தில் பொது குளத்தில் தண்ணீர் எடுக்க அனைத்து உழைக்கும் மக்களையும் அனுமதிக்க கோரி போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த காலத்தில் ‘பகிஸ்கிரித் பாரத்” என்ற பத்திரிக்கை துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பத்திரிக்கையும், 1929 ஆம் ஆண்டு நவம்பர் 15-ம் நாள் வரை மட்டுமே வெளியானது.

‘மூக்நாயக்” மற்றும் ‘பகிஸ்கிரித் பாரத்” பத்திரிக்கைகள் வெளியான காலத்தில் அதன் விற்பனை விலை ‘ஒன்றரை அனா” மட்டுமே ஆகும். வருட சந்தா 3 ரூபாய் மட்டுமே ஆகும்.

பகிஸ்கிரித் பாரத் என்ற பெயரை மாற்றி ‘ஜனதா” என்ற புதிய பெயரில் பத்திரிக்கை அண்ணல் அம்பேத்கரால் வெளியிடப்பட்டது. அண்ணலின் புதிய இயக்கத்தின் செயல் வடிவங்களின்படி, 1956 ஆம் ஆண்டில் ‘ஜனதா” என்ற பெயர் ‘பிரபுத்தா பாரத்” என மாற்றம் செய்யப்பட்டு அதே பெயரில் 1961 வரை பத்திரிக்கை வெளியானது.

பெண்கள் உரிமை, சமூக மற்றும் பொருளாதார அளவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரமாக நீண்டகாலம் மூன்று பெயர் மாற்றங்களுடன் வெளியான பத்திரிக்கை ‘பகிஸ்கிரித் பாரத்” ஆகும்.

‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பத்திரிக்கைகள்” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்ட ‘அப்பாசாகேப் ரன்பிசே” என்பார் அண்ணலின் பத்திரிக்கை மற்றும் எழுத்துப்பணிகளை தொகுத்தவர் ஆவார்.

அம்பேத்கரின் ஊடகப்பணிகள் குறித்து, முனைவர் பட்ட ஆய்வுக்காக ஆராய்ச்சி மேற்கொண்டு 1987 -ல் ஆய்வறிக்கை வெளியிட்டவர் ‘கங்காதர் பண்டவானே” என்பவர் ஆவார்.

அம்பேத்கரின் சுதந்திரமான இதழியல் பணிகள் குறித்த ஆய்வுகள் இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் நமது மாணவர்களால் எடுத்தாளப்பட்டு வருகின்றன.

அதிகார அரசியலை நோக்கி கேள்வியெழுப்பும் வகையிலும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு எதிரான சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகளுக்கு பதிலடி தரும் வகையில், அரசியல் விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கும் கட்டுரைகளாக அம்பேத்கரின் எழுத்துக்கள் அமைந்துள்ளன.

சமூகம் என்றால் மக்கள், ஆக மக்களின் மேம்பாட்டில் ஆளும் அரசின் நடவடிக்கைகள் பற்றி சுதந்திரமான கருத்துக்களை வெளியிட்டு வந்தார் அண்ணல்.

கல்வியில் பின்தங்கிய மக்கள் உரிய பிரதிநிதித்துவம் பெற முடியாத அளவிலேயே அன்றைய ஆங்கிலேய அரசின் கொள்கைகள் இருந்ததை, 1927 ஜீலை 25-ல் வெளியான பகிஸ்கிரித் பாரத் இதழில் வெளிப்படுத்தினார் அண்ணல் அம்பேத்கர். (இன்றளவும் ஆங்கிலேய மனோபாவம் கொண்ட ஆட்சியாளர்களால் கல்வியானது சந்தைக்கான சரக்கு போல விற்பனைப் பொருளாக வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளது).

அண்ணலின் எழுத்து மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் கலை அனைத்து நவீன இந்திய எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு முன்னுதாரணம் ஆகும். உழைக்கும் மக்களின் எண்ணங்களை சரியாக எழுத்துக்களில் கொண்டுவரும் திறன் அம்பேத்கரின் பார்வையில் கிராமங்களிலிருந்து வெளிப்படுகிறது.

கிராம மக்களிடமும் அரசியல் விழிப்புணர்வை கொண்டுசேர்க்கும் நோக்கிலேயே அண்ணல் அம்பேத்கர் பிராந்திய அல்லது மாநில மொழியான மராத்தியில் பத்திரிக்கையினை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமம், உழைக்கும் மக்கள், தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய மசோதா (விவசாயிகளை அடிமை கூலிகளாக மாற்றும் மசோதா) பற்றிய எழுத்துக்கள் யாவும் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லப்பட வேண்டிய பத்திரிக்கை தர்மம் ஆகும்.

மூலப்பொருட்கள் விலையேற்றத்தால், அனைத்து பத்திரிக்கைகளும் தினசரி செய்தித்தாளின் பக்கங்களைக் குறைத்துவிட்ட நிலையில், வெளிவரும் பக்கங்களில் ஒருசில பக்கமாவது, ஆளும் வர்க்கத்தின் தவறுகளை தவறு என்று சுட்டிக்காட்டியும், சரியானவற்றை அதாவது பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் தோழர்களின் போராட்டங்களை பிரசுரம் செய்தும், மாதர் சங்க நடைபயணத்தை மறைக்காமல், இன்றைய உழைக்கும் பெண்களின் நிலையை உலக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் தீர்க்கமாக மக்களுக்கு எடுத்துரைக்க கூடிய விதத்தில் அமைய வேண்டும். அதுவே அண்ணல் அம்பேத்கரின் பார்வையும் கூட.

பத்திரிக்கையாளர் அம்பேத்கர் மதம், சாதியம் மற்றும் அடிமை முறையிலிருந்து இந்திய உழைக்கும் மக்களை விடுவித்து, புதிய அரசியல் விழிப்புணர்வுமிக்க சுதந்திர மக்களை உருவாக்க பாடுபட்டார்.

அம்பேத்கரின் இதழியல் தரம், மதிப்பு மற்றும் செய்திகள் வெளியிடும் நேர்த்தி ஆகியவை மக்களுக்கானவை.

அண்ணலின் பத்திரிக்கை தர்மம்:

1951 ஆம் ஆண்டு, செப்டம்பர் 27-ல் மத்திய சட்ட அமைச்சர் பதவியிலிருந்து தாமாக விலகியபின், தமது பதவி விலகல் முடிவைப்பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் மூன்று முக்கிய காரணங்கள் விவரிக்கப்பட்டிருந்தது.

அதில் ஒரு முக்கிய காரணம், ‘எனது மக்களுக்காக போராட எங்கள் செய்தித்தாள்கள் உள்ளது (we have our newspapers) என்பது ஆகும். உழைக்கும் மக்களுக்காக சட்ட அமைச்சர் பதவி மூலம் சட்டப்போராட்டம் நடத்திய அண்ணல், பதவி விலகிய பின் தன் எழுத்துக்களின் மூலமாக போராடினார்.

இந்திய நாட்டின் செய்தித்தாள்கள் பிற்போக்கான பழைய கருத்துக்களை கைவிட்டு (age old bias of newspapers) முற்போக்கான கருத்துக்களையும், மக்கள் மேம்பாடு சார்ந்த செய்திகளையும் வெளியிட முன்வரவேண்டும் என தனது கருத்துக்களை வெளியிட்டார் அண்ணல் அம்பேத்கர்.

பத்திரிக்கை தர்மமானது, ஒரு இலக்கை நோக்கியதாக இருக்க வேண்டும். அது ஒரு வர்த்தகமாக மாறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் அண்ணல் அம்பேத்கர்.

அரசியல் சார்பின்றியும், பயமின்றியும், சுதந்திரமான எண்ணத்துடன் மக்களுக்கானவர்களாக பத்திரிக்கையாளர்கள் பயணிக்க வேண்டும்.

இன்றைய இந்தியாவில், காசுகொடுத்து வாங்கிப்படிக்கும் மக்களுக்கு விசுவாசமாக பத்திரிக்கை நடத்தும் முதலாளிகள் நடந்துகொள்வார்கள் என்று நாம் நம்புவது முட்டாள்தனமானது. ஏனெனில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பத்தரிக்கை வியாபாரம் குறைந்து விட்டதாகக்கூறி, தம் பத்திரிக்கை நிறுவன முன்னேற்றத்திற்காக உழைத்த பணியாளர்களையே பணிநீக்கம் செய்தவர்கள் பெரும் பணக்கார முதலாளிகள்.

இத்தகைய லாப நோக்கம் கொண்ட முதலாளித்துவ பத்திரிக்கைகளை புறக்கணித்து, உழைக்கும் மக்களின் செய்தித்தாள்களை மக்கள் வாங்கிப்படித்தால் மட்டுமே சமூக மாற்றம் அதாவது மக்களின் அரசியல் பார்வையில் மாற்றம் ஏற்படும், உழைக்கும் மக்களின் தலைமையில் நாட்டை ஆளும் அரசு அமைய வழிபிறக்கும்.

வெறுமனே பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே பேசாமல் பிரச்சனைகளுக்கு சட்ட பூர்வமாக தீர்வு சொல்லும் அண்ணல் அம்பேத்கரின் வழியில் நடைபோடும் உழைக்கும் மக்கள் நடத்தும் செய்தித்தாள்களை வாசிப்பதும், போராட்டக் களத்தில் முன்நிற்பதும் இன்றைய சூழலின் அவசியமாகும்.

சினிமா ஹீரோக்களை போன்று ஒத்தையாளாக நின்று இன்றைய இந்தியாவில் எதையும் சாதிக்க இயலாது என்பதை உணர்ந்து, உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பயணிக்க வேண்டும். அதற்கான ஒருங்கிணைப்புத் தளமாக செய்தித்தாள் வாசிப்பினை அனைவரும் கைக்கொள்ள வேண்டும்.

100 ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணல் அம்பேத்கர் கைக்கொண்ட அறம் சார்ந்த பத்திரிக்கை வெளியீடுகளே இந்திய மக்களின் இன்றைய அறிவு தேவையாகும்.

 - சுதேசி தோழன்

Pin It