பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அதிகார மறுவரையறை நெருக்கடியை ஒட்டி உருவானதே வட்ட மேசை மாநாடுகள். இதில் இந்தியாவைச்சேர்ந்த பல்வேறு தரப்பினர் தத்தமது பிரதிநிதித்துவம் சார்ந்த தேவைகளோடு அந்த உயர் அரங்கில் இருக்கையைப் பெற்றிருந்தனர். அதில் சுதேச அதிகார முகவர்களும் மக்கள் விடுதலை வேட்கையைக்கொண்ட சிந்தனையாளர்களும் இடம் பெற்று இருந்தனர்.

ஆனால் அவர்களுக்கு அந்த அதிகாரமுகவர்கள் வட்டமேசையில் செயல்படும் போதே அதே கண்ணோட்டத்தெளிவோடு இந்தியாவில் செய்திகளாக மாற்றித்தரும் பத்திரிகை நிறுவனங்கள் இருந்ததைப்போல இவர்களுக்கு இருந்திருக்கவில்லை. பங்கேற்றவர்களே இந்தியா வந்த பிறகு பதிவுசெய்து வெளி யிட்டால்தான் உண்டு (அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு ஏற்பட்ட நிலை) என்ற நிலை இருந்தது. இந்த" சூழமைவில் மக்கள் விடுதலையாளர்களின் உயரிய நோக்கையும் சுதேச அதிகாரமுகவர்களின் சுயநலத் தொலைநோக்கையும் தனது விமரிசனக் கண்ணோட்டத்தோடு இழைந்து எழுத்தறிவு பரவி யிருந்த எட்டுத்திக்கும் பரப்பியது சுயமரியாதை இதழியல். அதில் ஒரு ஆற்றல் வாய்ந்த படைக்கலன் புதுவை முரசு.

ஒருசொல் பாயிரம் : மருணீக்கியார்

மருணீக்கியார் (டாக்டர்) அம்பேத்கரையும் நாங்கள் இழந்தோம், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெருந்தொகையினராகிய எமக்கெல்லாம் தலைவர் நீங்களே ! சார்ந்து கடைத்தேற எண்ணுவோர் நீங்களே! இப்படியல்லவா செதுக்கி முடித்தது ஒரு செப்பேடு! (இளங்கோ, டாக்டர், ச.சு, பதி.1994:114) என்று இதழ்கள் வழி ஒடுக்கப்பட்ட மக்களின் சுயநிர்ணய வாழ்வுக்காய்ப் போராடிய அம்பேத்கரின் இழப்பை உணர்ந்து தனது குயில் ஏட்டின் (குரல்- 1, இசை-39, 3.3. 1959) வாயிலாகப் பாரதிதாசன் ஓங்கி முழங்கினார். பாரதிதாசன் மேற்கண்டவாறு காட்டும் மருணீக்கியார் (மருள் + நீக்கியார்) என்பது மருள் என்றால் மயக்கம், மருள் நீக்கியார் என்றால் மயக்கத்தை நீக்கித் தெளிவைத் தருபவர் என்று பொருள் கொள்ளலாம்.

இந்து மத மயக்கத்தில் ஆழ்ந்திருந்த மக்களின் மருள் நீக்கி, மானுட விடுதலை என்னும் தெளிவைத் தந்தவர் புரட்சியாளர் அம்பேத்கர் என்பதைத்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வலியுறுத்துகிறார். என்றபோதும் அம்பேத்கர் கல்வித்துறை சார்ந்து பெற்ற டாக்டர் பட்டத்திற்கு இணையான தமிழ்"சொல்லாக இதைப்பாவிக்கிறார் எனக்கொள்ள இடமுண்டு (மருட்சி+நீக்குதல்).

இந்தியத் துணைக்கண்டத்துத் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெருந்தொகையினராகிய இந்திய துணைக்கண்டத்து மக்களின் தலைவரான அம்பேத்கரின் செயற்பாட்டை மிக நுணுக்கமாகத் தனது ஆக்கங்களில் பதிவு செய்கிறார். 1.2.1952-இல் தொண்டு இதழில் (புகழ்மலர்கள் எனும் தொகுப்பில் 1978-இல்) அம்பேத்கர் வாழ்க! அவர்வழி செல்க! என்னும் தலைப்பில் தனிப்பாடலாக அம்பேத்கரின் ஆளுமையைப் பாடினார் பாரதிதாசன்.

இந்திய வரலாற்றில் 1930-களில் இருந்தே அம்பேத்கரின் அரசியல் குறித்த செயற்பாட்டை பாரதிதாசன் கவனித்து வந்தார். 'ஸ்வராஜ்யம்' (புதுவை முரசு, 24.11.1930, ப.10-11), காந்தியின் மேல் நம்பிக்கையில்லை, காந்தி பார்ப்பனத் தலைவரே! (பு.மு..5.10.1931, பாவேந்தம்-22, ப.12-14) 'வட்டமேஜையில் காடைக் கூடுகள்' (பு.மு,12.10.1931, பாவேந்தம்-22, ப.12-13) மூளைவைத்யம் (பு.மு.19.10.1937, பாவேந்தம்-22, ப.17-18) ஆதிதிராவிடர்கட்குச் சோதனைக்காலம் (பு.மு.7.12.1931, பாவேந்தம்-22, ப.14 -16) நமது கடமையென்ன? (காந்தியா? சுயமரியாதையா? (பு.மு.18.1.1932, ப.14-17) தோழர் காந்தி கடவுள் அவதாரமா? (பு.மு.25.1.1932, பாவேந்தம்-22, ப.12-13) போன்ற பாரதிதாசனின் கட்டுரைகள் முதன்மையானதாகும்.

ஸ்வராஜ்யம் பற்றிய சுயமரியாதை நோக்கு

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் பிரிட்டிசாரை எதிர்த்து ஸ்வராஜ்யம் என்பதாக காந்தியின் காங்கிரஸ் போராடிய போது சமூக விடுதலையே முதன்மையான முரண் என்பதாக அம்பேத்கர் பேசினார். காந்தியையும் காங்கிரசையும் எதிர்கொண்டார். இந்துதேசீய பார்ப்பன ஏடுகளின் விமரிசனத்தையும் அம்பேத்கர் எதிர்கொண்டார். இசுலாமியருக்கு எதிரான இந்து பெரும்பான்மை வாதத்திற்குத் தலித் மக்களின் எண்ணிக்கை ஓர் இன்றியமையாத சேர்க்கையாக உணரப்பட்டது.ஆகவே, நவ இந்து உருவாக்கத்தில் ஓர் இடராத அங்கமாகத் தலித்துகள் பொருந்தி இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அம்பேத்கரோ சமூகப் பண்பாட்டுத்தளத்திலும் அரசியல் தளத்திலும் தனி வெகுமதி பெற்று (பிரிட்டிசாரிடம் இருந்து ) வரலாற்றில் தனித்ததோர் சமூகமாகப் பயணிக்க சிந்தித்தும்,எழுதியும் கொண்டி ருந்தார். இந்த"சூழலில், வட்டமேசைகள் கூட்டப்பட்டன.

1930-களிலிருந்து (1931, 32) இரண்டு ஆண்டுகள் புதுவை முரசில் பாரதிதாசன் எழுதிய வட்டமேசை மாநாடுகள் பற்றிய கட்டுரைகள் சிறப்பானவையாகும். அதாவது 1930-இல் முதல் வட்டமேசை மாநாட்டிலும் 1931-இல் இரண்டாம் வட்டமேசை மாநாட்டிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் அதிகாரம் தொடர்பான சிக்கல்களில் காந்தி நடந்துகொண்ட நிலையும் அதை எதிர்கொண்ட அம்பேத்கரின் செயற்பாடும் குறித்தே அக்கட்டுரைகள் என்பதை நினைவில் கொள்க.

காந்தி காலத்தில் பேசப்பட்ட 'ஸ்வராஜ்யம்' எனும் நிலைப்பாட்டிற்கெதிரான புள்ளியிலிருந்தே பாரதிதாசனின் விமரிசனம் அமையத் தொடங்கியது. 'ஸ்வராஜ்யம்'. ஒருவர் கொடுப்பதல்ல பேத விரோதபந்தங்கள் அற்று மக்கள் ஒற்றுமையடைவதேயாகும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், என்ற மூன்று கொள்கைக்கும் இடமே இல்லாத மக்களிடம் நாட்டுப்பற்று வராது என்பது பாரதிதாசனின் நிலையாகும். (பாவேந்தம், தொகுதி - 22, ப.15) அம்பேத்கர் பவுத்த நவீனத்துவத்தைக் கையில் ஏந்துவதற்கு முன் (1956) அவர் வெகுகாலம் ஏந்திப்பிடித்தது பிரஞ்சுப் புரட்சியிலிருந்து கிடைத்த ஐரோப்பிய நவீனத்துவமே. இந்த நவீனத்துவத்தை பாரதிதாசன் தன் பிறப்பிடத்தில் (புதுவை) இருந்தே இயல்பாகப் பெற்றார். சுதந்திர உணர்ச்சியுள்ள சிற்சிலர் தமக்குள்ள செல்வாக்கைக் கொண்டு தேச மக்களைத் தம் இலட்சியம் நோக்கி இழுத்துச் செல்ல நினைப்பதால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. (மேலது, ப.15) எனக் காங்கிரசின் தலைவர்களைச் சாடுகிறார். மக்கள் ஒன்று கலக்காதபடி இடையிடையே மதபேதம், சாதிபேதம், மூடத்தனம் என்கிற திரைப் போட்டிருப்பதே காரணம் என்னும் ஆய்வை முன்வைக்கிறார் பாரதிதாசன்.

இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகே சாதி, மத, மூடத்தன ஒழிப்பு என்னும் கருத்தில்பாரதிதாசனுக்கு உடன்பாடில்லை.அரசுகள் எந்த சீர்திருத்தத்தையும் மேற்கொள்வதில்லை. மாறாக, சீர்திருத்தத்தை நிலை நாட்டிய இயக்கமே அரசாளும் தகுதியுடையதாக மாறும். சாதி, மத, மூடத்தன ஒழிப்பே மக்கள் விடுதலை என்பதே கவிஞர் பாரதிதாசனின் பார்வையாகும்.

1930, 31, 32-இல் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகள், அதில் பங்குபெற்ற காந்தியாரின் நிலை, அம்பேத்கரின் செயற்பாடுகள் குறித்து பாரதிதாசன் எடுத்துரைத்த கருத்துக்களைத் திறனாய்வு செய்யும் முன் காந்திய காங்கிரசின் பழமைவாதக் கண்ணோட்டத்தைப் பாவேந்தர் பதிவு செய்துள்ளவற்றை முதலில் உரையாடுவோம்.

காங்கிரசின் ஆங்கிலம் கற்ற பிரிட்டிசாரின் கல்வி நாகரிகம் போன்றவற்றில் அறிவுள்ள நேரு பல வழக்கறிஞர்கள் போன்றோர் அனுப்பப்படாமல் இந்து மதத்தின் வாழ்வா? சாவா? பிரசேனையில் காந்தியே நேரடிப் பிரதிநிதித்துவம் பெற்றது ஆழ்ந்து யோசிக்கத்தக்கது.

நாட்டைச் சுற்றிய ராட்டை

இது குறித்து பாரதிதாசன் புதுவை முரசில் எழுதிய 'தக்ளியும் ராட்டினமும்' (பு.மு.6.4.1931, ப.10-11) 'தூத்துக்குடி, காரைக்குடி மகாநாடுகள்' (பு.மு.20.04.1931, ப.10-11) கதரா? தூக்குக்கயிறா? (பு.மு.21.9.1931, ப.3) திரு.ராமநாதனுக்கு ஜே!. (பு.மு.8.6.1931, ப.10-11) போன்ற கட்டுரைகள் கவனிக்கத்தக்கன. (பாவேந்தம், தொகுதி - 22)

தக்ளி (Drop Spindle) என்பது பஞ்சிலிருந்து நூல் நூற்கப் பயன்பட்ட முதன்மைக் கருவியாகும். கைராட்டை பயன்பாட்டிற்கு முன் இக்கருவி, நடைப்பயணத்திலும் எளிமையாக 'கைநூற்பு நூல்' தயாரிக்கப் பயன்பட்டது. ராட்டினத்தைவிட தக்ளி எனும் மிகவும் வேகமான ஒருமுறையைத் திரு.காந்தியும் அவரது சிஷ்ய கோடிகளும் கண்டுபிடித்தார்கள். பார்ப்பன வசதிக்காய் இம்முறையை கண்டுபிடித்ததாகவும் தக்ளி ராட்டினம் சுற்றவேண்டிய அவசியத்தைப் பரப்புரை செய்த பார்ப்பனர்களாகிய காங்கிரசின் செயற்பாட்டைத் 'தேசீயத் திருவிளையாடல்களில்' ஒன்று என்கிறார் பாரதிதாசன் (பாவேந்தம் தொகுதி - 22)

தக்ளி, கைராட்டை, சாதனங்களின்பொருளியல், பண்பாட்டுப் பின்புலம் குறியீட்டு ரீதியிலான அர்த்தங்கள் பழமைவாதப்பலன்கள் (Claude Markovits) உடையன. வர்ண அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படிசூத்திர, பஞ்சம மக்களின் எண்ணிக்கை மிகுதி எவ்வளவு பின்தங்கிய உற்பத்தி சாதனங்களைப் பயன்படுத்தி எப்பொருளை உற்பத்தி செய்தாலும், அந்த உற்பத்தி அளவு மேலுள்ள வர்ணத்தவரின் சிறிய எண்ணிக்கைக்கு ஏற்ப உயிர்வாழ்க்கைக்குப் போதுமானதே ஆகும். ஆனால் பேரெண்ணிக்கையிலான ஒடுக்கப்பட்ட மக்களின் தேவையைப் பின் தங்கிய உற்பத்தி முறையால் ஈடுசெய்ய முடியாது. அதில் உயர்வர்ணத்தாருக்கு எந்தப் பொறுப்பு கடனும் இல்லை. இயந்திரவகை உற்பத்தியால் மட்டுமே அதை ஈடுசெய்ய முடியும்.பிரிட்டிசு காலனிய நலம்புரி (Welfare state) அரசு அந்த நோக்கையும் உள்ளடக்கிய சந்தை நலனை நோக்கியப் பாதை யிலேயே நடக்கிறது. இயந்திரவகை உற்பத்தியை நோக்கி நகர்கிறது. இந்து மீட்புவாதிகள். அவர்ணர்களின் நலன் பற்றிய அசட்டையோடும், பாராமுகத்தோடும் ஆனால், அதிகார அடையாள வேட்டையோடும். கைராட்டையைப் புனிதப்படுத்தி உச்சி முகர்ந்து கொண்டிருந்தனர்.

ஆசானுக்கும் அப்பால்

பாரதி ஆசானே ஆவார்.பாரதியின் ஆசான்களெல்லாம் ஆசான்களல்ல. (திலகர், லஜபதி, நிவேதிதை, விவேகானந்தர்) அந்த மரபில் புதிதாக அம்பேத்கரே அவருக்கு ஆசானாக உறுப்பெருகிறார். தலைமையின் செல்வாக்கு வீச்சிலிருந்து கட்டப் பெறுவதல்ல தேசியம். குடிமைப்பண்புகள் ஒருமையுற்று அரசியலாக ஓங்குவதில் உள்ளது தேசியம்.(பா.22. பக்.15) பார்ப்பனீய, இந்து மீட்புவாதத் தலைவர்கள், அரசியல் (காலனியத்திடமிருந்து) விடுதலை பெற்று அரசாங்கம் நடத்தும் பொறுப்பு தங்களிடம் வழங்கப்பட்ட பிறகே சாதிய, பால்நிலை, பாகுபாடுகள் ஒழிக்கப்பட முடியும் என்று சட்டம் செய்யும் இறைமை வாதத்திலிருந்து (Sovereignty) வாதிடுகின்றனர். மாறாகக் குடியாட்சி அதிகாரம் இந்தப் பார்ப்பனப் பிரிவினரிடம் வருவதற்கு முன்பே மன்னராட்சி சமஸ்தான ஆட்சியுரிமையை சி.பி. ராமசாமி போல இவர்கள் யாரும் சுவைத்து வரவே செய்தனர். அங்கு சாதியை ஒழிக்கா விட்டால் கூடப் பரவாயில்லை அங்கெல்லாம் சாதியப் பாகுபாட்டு நெறிகளைக் கடுமையாகவே கடைப்பிடித்தது பார்ப்பனியம், சமஸ்தான அதிகாரத்திலிருந்து, காலனிய (குடியாட்சி) கட்டமைப்பில் பேரம் பேசுகிறதே ஒழிய, காலனிய (நாடாளுமன்ற எதிர்க்கட்சிக் கட்டமைப்பிலிருந்து) விடுதலைக்கான உரையாடலை இந்த இந்து மீட்புவாதிகள் மேற்கொண்டதே இல்லை.

நூலின் பின்னுள்ள கண்டு

பருத்தி மூலப்பொருள் இலண்டனுக்கு ஏற்றுமதி ஆவதும் செம்மை செய்த ஆடைகள் இந்தியச் சந்தைக்கு வருவதும், இந்தியர்கள் உற்பத்தியாளர் ஊழியர்கள் என்ற நிலையிலிருந்து கீழிறக்கப்பட்டு உபயோகிப்பாளர் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஏகாதிபத்தியத்தின் துணி அரசியலை இப்படி எதிர் கொண்ட காந்தியார் இரும்பு, நிலக்கரி, மின்சாதனங்கள், நூல் (அச்சுக்காகிதம்) போன்றவற்றை எப்படி மாற்றுகளோடு எதிர்கொள்வார் என்கிற கேலி சுயமரியாதை இயக்கத்தினரிடம் தொடர்ந்து வெளிப்பட்டே வந்தது. இந்த இராட்டை தக்ளி, கதர் அரசியல் உத்திரபிரதேசத்திலோ, வங்கத்திலோ, ஒடிசா, பீகார், மத்தியப்பிரதேசத்து வைதீகச் சமூகங்களிலோ காலூன்ற முடியவில்லை. ஆனால் இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்கு, தெற்கு மாகாணங்களில் காலூன்றியது. இது காந்தியத் தலைமை யிலான இந்தியாவைக் கட்டியெழுப்ப விரும்பியதன் வெளிப்பாடே எனக் கொள்ளலாம்.

ஆட்சிக்கு அச்சாரம்

இந்து தேசியக் கனவை நிர்மாணிப்பதில் காதிக்குப் பொருளியல், தொழிலியல் களத்தில் ஒரு பங்கு இருப்பதைப் போலவே மொழி நிலையில் சமஸ்கிருதமும் இந்தியும் அதற்கு அடிக்கற்களாக விளங்கின கீதை நூல். இந்து தேசிய விடுதலைப் போராளிகளால் உத்வேகம் தரும் நூலாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது. அனைவரும் அறிந்த உண்மை. அம்பேத்கரும்,பாரதிதாசனும் அதைத் தொடர்ந்து சாடி வந்தார்கள்.

State apparatns-களாகிய நாடாளுமன்றம், நீதிமன்றம், ஆட்சித் துறைகள் (அரசு இயந்திரம்) எதற்கும் தயாராகாத ஒரு மொழி அதன் பெரும்பான்மைக்காக ஆட்சி மொழியாக ஏற்கப்பட வேண்டும் என மாற்றுவதை வற்புறுத்துவதன் அபத்தத்தை தொடர்ந்து சாடி வந்தனர்.

காங்கிரசு சட்ட மறுப்பு என்பதையும் அரசோடு ஒத்துழையாமை என்பதையும், மேல் தோற்றத்தில், துணிப் புறக்கணிப்பு, உப்பு உரிமை, வெள்ளையனே வெளியேறு என்று ஒப்பனை செய்தாலும் ஆழத்தில், வருணாசிரம மீளுருவாக்கம், சநாதன மறு நிர்மாணம் பார்ப்பனியத் தலைமை, சாதீயத்தின் இருப்பை வலிறுத்தல் என்பவற்றின் குறியீடாக இராம ராஜ்ஜியம் என்கிற அரசியல் வகைமையை முன் நிறுத்துவதைப் பார்க்கிறோம். அந்த இந்தியக் குறியீட்டை உரித்து உலக நிலைமையில் வைத்துப் பொருள் கொண்டால் மதமும் அரசும் இணைந்திருந்த நவீன மக்களாட்சியத்திற்கு முந்தைய மன்னர், மடத் தலைவர் கூட்டரசையே இந்து தேசியம் வலியுறுத்தியிருப்பதாக பொருள் படுகிறது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய அந்த பழமைவாத ஆட்சியியல் வடிவத்தை மீளுருவாக்கம் செய்யவே, பிரிட்டிஷ் அரசியல் சூழலுக்குத்தக தற்காலிகமாக ஒரு கட்சி என்கிற நவீன வடிவத்தைக் காங்கிரசு எட்டுகிறது.

காங்கிரசின் அந்நியத் துணிப்புறக்கணிப்பும் அந்நிய அரசமைப்பு சார் சிந்தனைகள் புறக்கணிப்பும், அதன் முதன்மை அங்கத்தினர்களான பார்ப்பனர்களால் தீவிரமாக வற்புறுத்தப்படுகின்றன. ஆனால் நீதிமன்றம் என்கிற State apparatus சார்ந்து தொழில் நடத்தி, தேவைகளில் நிறைவெய்தி அரசியல் வாழ்வில் தலைமையைக் கைப்பற்றும் வழக்கறிஞர்கள் (விஜயராகவாசோரியார், வெங்கடரமண அய்யங்கார், இன்னும் பலர்) ஏன் அந்தத் தொழில் களத்தில் அந்நியச் சிந்தனைப் புறக்கணிப்பை மேற்கொள்வதில்லை. பொது வெளியில் மட்டும் குடிமக்களுக்குப் புறக்கணிப்பு அரசியலை திகட்டத் திகட்டப் புகட்டுவதேன் என்பது காந்தியத்துக்கு சுயமரியாதை முகாம் சார்ந்து பாரதிதாசன் எழுப்பும் முதன்மைக் கேள்வியாகும். முன் சொன்னவர்கள் ஏன் அந்த தக்ளி அரசியலை மேற்கொள்வதில்லை.

காங்கிரசு நிர்மாணப்பணிகள் காரணமாகவே தீண்டாமை ஒழிப்பு முன்னேறியதாக காந்தி கோருகிறார். அம்பேத்கர் நோக்கு: வட்ட மேசை கூட்டத்தின் தலையீடு காரணமாகவே காங்கிரசு அந்த நிர்மாணப்பணிகளுக்கு வந்து சேர்ந்தது.மற்றபடி அதன் தத்துவம், தலைமை தொண்டர் படை என அனைத்து அடுக்குகளும் பழமைவாதத்தின் படிவங்களே என்பது பாரதிதாசனின் நோக்காகும்.

மக்கள் கட்சி ஆட்சி மக்களாட்சி

இயக்கங்கள், சமூகத்திலுள்ள பல்வேறு மக்கள் பிரிவினரின் உரிமைக்குரிய அரசியலை ஒரு கட்சியாகத் தன்வயப்படுத்தி ஏகாதிபத்திய எதிர்ப்பாகவோ அல்லது அதற்கு முன் நிபந்தனையான சமூக விடுதலைக்குரிய ஒற்றுமையாகவோ முன்னிறுத்துகின்றன. ஆனால் அப்படி தன் வயப்படுத்திய உரிமை அரசியலை ஒரு கட்சியமைப்பின் உடைமைப் பொருள் போல் பாவித்து, அதன் சமூக வேர்களாகிய குடிகளின் பிணைப்பிலிருந்து அகற்றி விட்டு அந்த கருத்தாக்கத்தைக் (உரிமை அரசியல்) கட்சி நிலைமைகளிலிருந்து மட்டும் பரிசீலித்து நகர்த்திச் செல்வது பொருந்தாது எனவும் காலந்தோறும் அந்த நிலைப்பாட்டில் மேற்கொள்ளப்படும் சிறு சிறு மாற்றங்கள் அதற்குரிய மக்கள் கூட்டத்தாரிடம் ஒப்புதலாகப் பெற வேண்டும் என்றும், அந்த விமர்சனத்தைச் சுயமரியாதை இயக்கத்தின் மீதே பாரதிதாசன் முன்வைப்பதும் அவரின் முதிர்ந்த ஜனநாயக வேட்கைக்கும் இயக்கங்களுக்குரிய மக்கள் உரிமைக் கடப்பாட்டுக்கும் ஆன சான்றாகக் கொள்ளலாம்.

முரண்பட்டோர் அமர்ந்த வட்டமேசை

முதல் உலகப்போரை அடுத்து பிரிட்டிசாருக்கு ஐரோப்பாவிலும் அவர்களது ஆப்பிரிக்கா, ஆசியா காலனிகளிலும் ஏற்பட்ட நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொருட்டும் நீண்டகால அளவில் ஏற்படக்கூடிய இழப்புகளை மட்டுப்படுத்த அதிகாரப் பகிர்வு, இரட்டையாட்சி, வகுப்புவாரி உரிமை, மாகாண மத்திய அரசாங்க உறவுகளை உறுதியாக்கம் செய்வது என்ற நோக்கில் மாண்டேகு செம்ஸ் போர்டு ஒப்பந்தங்கள் வழியாக இரட்டையாட்சி முறையைத் தொடங்கி வைத்தன.

காங்கிரஸ் அந்த வகையில் அரைச் சுதந்திரத்தை ஏற்க இயலாது என வீம்பு பேசிற்று. களத்தில் அவர்களை எதிர்த்த நீதிக்கட்சி போன்றோர்அந்த இரட்டையாட்சி அதிகாரத்தில் பங்கேற்கத் தொடங்கினர். காங்கிரஸ் எதிர்பார்த்தது போலன்றி இந்தப் புதிய அரசதிகாரத்தின் தலையீட்டால் சமூகப் (வர்ணதர்ம சனாதனம்) பொருளியல் (பனியா) நிலைமைகள் ஆட்டம் கண்டன.. காங்கிரசின் தனிப் பிரதிநிதித்துவ வீம்பையும் அசைத்துப் பார்த்தன.

இந்தநிலையில் அந்த ஒப்பந்தத்தின் (மாசெ) நிகழ்வுப் போக்கில் அடுத்ததாக அரங்கேறவிருந்த முதல் வட்ட மேசை மாநாட்டைத் “தானெழுந்த மூப்பாக" மறுத்தது. காங்கிரசிலிருந்த அதிகார வேட்கையுள்ள பார்ப்பனர்கள் காந்தியின் இந்த முடிவின் மீது எரிசேலை வெளிப்படுத்தினர். ஆகவே ஒப்பந்த நிகழ்வுப் போக்கின் அடுத்த அரங்கேற்றமாகவிருந்த இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு நான் வருவேன் என காந்தியும் காங்கிரசும் முண்டியடித்தன. மட்டுமின்றி தானே இந்தியாவின் ஏகப்பிரதிநிதி என்றும் அதையெதிர் தரப்பும் (பிரிட்டிசார்) ஏற்கவேண்டுமென்றும் பிடிவாதமாக நின்றனர்.

இதன் காரணம் இரட்டையாட்சி அதிகாரப் பகிர்வு தொடங்க, வகுப்புவாரி உரிமை என்கிற சமூகநீதிக்கான வெகுமதி வரையிலான நிகழ்வுகள் ஏற்படுத்தி இருக்கிற சனாதன சமூகக் குலைவுகளைத்தடுத்து நிறுத்தும் வேகமும் மூர்க்கமும் அதில் வெளிப்பட்டது.

ஆங்கிலேயர்கள் மலைத்துப் போகும் வண்ணம் பேராற்றலோடு அம்பேத்கர் வாதாடிக் கொண்டிருக்கிறார். காந்தியாரால் அந்தரத்தில் எதிர்கொள்ளவும் முடியவில்லை. ஆங்கிலேய விவாத மன்றத்தின் ஆதரவுமில்லை. சனாதனச் சமூகக் குலைவுகள் பெருகுவதைப் பொறுத்துக் கொள்ளவும் இயலவில்லை. சமூக நீதிதரப்பாளர்களை (அம்பேட்கர், நீதிக்கட்சியினர், முஸ்ஸீம்லீக்) மட்டு மீறிய இழிவு படுத்தும் இழித்துப்பழித்தும் பேசத் தொடங்கினர். இந்த பின்புலத் திலேயே இந்நிகழ்வு போக்கில் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கை தன் கூர்த்தமதி நுட்பத்தோடுத் தனது கட்டுரையை வரையலானார் பாரதிதாசன்.

ஆணவச் சுதந்திரம் அடைந்துவிட்டோர்

ஏகாதிபத்திய எதிர்ப்பில் தனி பிரதிநிதித்துவம் கோருகிற காங்கிரசு, விடுதலை என்னும் தனிக்கோரிக்கையை மட்டும் முன் நிறுத்துகிறது. பல்வேறு தரப்பினரின் விருப்பு வெறுப்புகளையும் பிரதிநிதித்துவம் செய்ய அனுமதிக்கவில்லை. அவை அரசியல் அடையாளமாகவும் திரள அனுமதிக்கவில்லை. இந்தத் தவறான போக்கு காரணமாக விடுதலை தாமதப்பட்டுச் சமூகம் அல்லலுற்றாலும் தனக்குக் கிடைத்திருக்கிற சுதேச மன்னர்களின் சமஸ்தான அதிகாரங்களில் நிறைவடைந்து தொடர்ந்து மூர்க்கனின் பிடிவாதத்தோடு ஒரே பேரத்தைத் தொடர்ந்து பேசி வருகிறது. அதன் உட்கிடை என்னவென்றால் காலனிய எதிர்ப்பு என்கிற நிகழ்கால நெருக்கடிக்கு ஆட்பட்டு (உடன்பட்டு) சனாதன ஒழிப்பு, சாதியொழிப்பு, பெண் விடுதலை, மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற கோரிக்கைகளைப் போராட்ட களத்திற்குள் அனுமதித்துவிட்டால் விடுதலைக்கு (கிடைக்கும் போது) பிறகு அமைக்கவிருக்கிற. தங்களது இலட்சியமான இந்து சனாதன சமூகத்தில் இந்த கோரிக்கைகள் பெரும் வெடிப்புகளை ஏற்படுத்தும் என்று ஊகித்தே தாமதித்தும் சகித்தும் கொண்டும் வந்தனர்.

எந்த வகையிலும் உலகின் புதிய அரசியல் நிலைமைகளின் அழுத்தத்திற்கு ஆட்பட்டுப் புது ஜனநாயக அரசு அமைந்துவிடாமல் சனாதன அரசு வடிவத்தையே புதிய நிலைமைகளுக்கு மாற்றீடு செய்வதில் காங்கிரசு திடசித்தமாக இருந்தது. இதன் அத்தனை அலையடிப்புகளையும் வட்ட மேசை உரையாடல்களில் காங்கிரஸ் வாதுரைகளில் வெளிப்படுவதைக் காணலாம். இதை பிரெஞ்சு விடுதலை மரபின் செழிப்புகளோடு பிறந்து வளர்ந்த புரட்சிக் கவிஞர் ஆழமாக உணர்ந்து நுணுக்கமாக வெளிப்படுத்தத் தொடங்கினார்.

1921இல் இரட்டை ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிக்கட்சி சமூகப் பொருளியல் பண்பாட்டு நிலைமைகளில் வேகமான சமூக அசைவுகளை உருவாக்கத் தொடங்கியது. பெற்றால் முழு விடுதலை என வீராப்பு பேசி புறமொதுக்கிய காங்கிரசு இயக்கம் சமூக நிலைகளில் அரசியல் வாய்ப்பால் ஏற்படும் அசைவுகளைக் கண்டு பதற்றமடைந்தது. காங்கிரசு இயக்கத்தில் திலகர், கோகலே கேம் முடிந்து காந்திகேம் தொடங்கி இருந்த அதே சமயத்தில் முழுமையான பார்ப்பனிய மீட்பு இயக்கங்களான ஆர்எஸ்எஸ் போன்றவை உருவாகியிருந்தன.

காங்கிரசில் புதிதாக உருவாகியிருந்த காந்தி தலைமையில் திலகர் விட்ட இடத்திலிருந்துத் தொடங்கியிருந்த பார்ப்பன மீட்புவாத இயக்கங்களைச் சார்வதாகும் என்று தமிழகப் பார்ப்பனர்கள் தடுமாறி இருந்தனர். இந்த இக்கட்டான தருணத்தில் ராஜாஜி என்ற உள்ளுர்ப் பிரதிநிதி காந்தியே இன்றைய நம் வரலாற்றுத் தேர்வாக இருக்க முடியும் என்று பரிந்துரைத்ததன் பேரிலும், நீதிக்கட்சி ஆட்சியை வீழ்த்திக் காங்கிரசு ஆட்சியை அமர்த்தியதன் (1937) நம்பிக்கையினாலும் காங்கிரசு உற்சாகம் அடைந்திருந்தது.

சென்னையின் பத்திராதிபர்களான பார்ப்பனர்களும் வழக்குரைஞர், நீதிபதிகளான பார்ப்பனர்களும் அரசு உயர் பதவிகளில் இருந்த பார்ப்பனர்களும் இன்னும் சிலரும் கட்டுக்கோப்பாக நலிந்து கொண்டிருந்த நீதிக் கட்சியினரையும் புதுத்தெம்போடு வளர்ந்து கொண்டிருந்த சுயமரியாதைக் கட்சியினைரையும் இதே போல் மக்கள் இயக்கத்திலிருந்து வெடித்த விடுதலையின் பேரோசையான அம்பேத்கரின் குரலையும் கடுமையாகச் சாடத் தொடங்கினர்.

சுதேசமித்ரன், தினமணி, இந்து போன்ற இதழ்கள் மிக அர்ப்பணிப்போடு இந்தக் காரியத்தைச் செய்து வந்தனர். இந்தச் சூழலிலேயே சென்னையின் அறிவியல் தொழிற்நுட்பம் சார்ந்த வளர்ச்சி நவீன தொழிற் நுட்பம் சார்ந்து சுயமரியாதை பண்பாட்டுக்கு" (தொடர்வண்டி, நடைமேடை, உணவு உண்ணும் உரிமை) சாதகமாக இருந்தது போலவே இதழ்கள், நீதிமன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் சார்ந்த பார்ப்பனர்கள் சென்னைக்கு ஒரு எதிர்மறையான பிற்போக்கு அடையாளத்தை வழங்கிவந்தனர்.

இந்த வரலாற்றுப் பின்னணியை உணர்ந்தபடியே பாரதிதாசன் தனது அறிவுப் படைக்கலன்களைப் பாய்ச்சத் தொடங்கினார். சுருக்கமாக உரைப்பதெனில் பழைமைவாதக் கருத்துருவாக்க முகாம் மீது பகுத்தறிவுப் பாசறையின் மீது நின்று அம்புமாரி பொழியத் தொடங்கினார்.

வகுப்புவாரி உரிமையிலிருந்து இரட்டை வாக்குரிமை

ராஜாஜியை முகவராகக் கொண்ட தமிழகக் காங்கிரசு இந்திய தலைமையாகக் காந்தியைக் கொண்டு பிரிட்டிசாரின் அதிகாரப் பகிர்வு உரையாடல் அரங்கில் பெற்றால் முழுவிடுதலை அதுக்கு பிரதிநிதி உயர் வர்ணத்தார் மட்டுமே என்கிற எதிர்ப்புரட்சி அரசியலை மேற்கொண்டு வந்தனர்.

சுயமரியாதை இயக்கத்தின் பெரியாரைத் தூண்டு விசையாகக் கொண்டு உருவான வகுப்புவாரி உரிமை தனித்தொகுதி இந்தியளவிலான தலைவராகப் புரட்சியாளர் அம்பேத்கர் மையங் கொண்டே இயங்கிவந்தது. என்பது சுயமரியாதை இதழியலில் பரவலாகக் காணக்கூடியதே. பாரதிதாசன் ஆக்கங்களில் இன்னும் கூர்மைப்பட்டு அம்பேத்கருக்கு ஆதரவு தெரிவித்து வலியுறுத்திய சுயமரியாதைத் தலைவர்கள் மட்டுமில்லாது பரந்துபட்ட வெகுமக்களின் ஆதரவு அனைத்தையும் திரட்டி ஒர் இயற்றமிழ் ஆவணமாக முன்வைத்தார் பாரதிதாசன். (ப-.243) காந்தியம் பிரிட்டிசு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உருவாக்குகிற உரையாடல் களத்தை அதிலிருந்து விலக்கி ஒதுக்கப்பட்டோர் (தாழ்த்தப்பட்டோர்) சார்பாக வளர்த்தெடுப்பது பாரதிதாசனின் இலக்கியத் தேர்ச்சியையும் அரசியல் உறுதிப் பாட்டையும் காட்டுகிறது. அந்நியத்துணி பகிசுகரிப்பு, சுதேசி கதர் ஆதரவு என்கிற எதிர்மை உயர் வர்ணத்தாரின் நலன் ஒடுக்கப்பட்டோர் நலன் என்கிற எதிர்வின் கருத்துத் தொடர்ச்சியாக அமைப்பதை (Polemics) வளர்த்தெடுப்பதைப் பார்க்கலாம்.

ஐரோப்பிய அறிவொளி மரபின் காரணமாகச் சமூகத் தளத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி ஐரோப்பிய தேசங்களின் அரசமைப்புகளில் தனி ஒருவர் (குடிமகன்/ள்) உரிமையை உறுதிசெய்தது. அம்பேத்கர் இங்கு அரசமைப்பு வாய்ப்பைப் பெற்று அதே முயற்சியைச் செய்தபோது தோல்வியுற்றதை அறிவோம்.

வட்டமேசையில் படர்ந்த சதுர்வருணம் :

காங்கிரசைத் தலைமை அடையாளமாகக் கொண்ட பலவகைப்பட்ட பழமைவாதிகள் உரிமை அளிக்க ஏற்றுக்கொண்ட கடைசி அலகு சாதி, குடும்பம் போன்ற வைதீகச் சமூக அலகுகளே அன்றி தனிநபர் அலகு அல்ல. இந்தப் பிற்காலத்திய விளைவு வட்டமேசை காலத்திலேயே வெளிப்படுவதைப் பாரதிதாசன் அதைமுன் உணர்ந்து வட்டமிட்டுக் காட்டுவதையும் ஆழ்ந்து நோக்க வேண்டும்.

காடைக்கூடுகள் இங்கிலாந்து வட்டமேசைக்குக் கொண்டு போகப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கூட்டிலுள்ள பக்ஷிகளும் தங்கள் கூடுகளில் இருந்தபடியே தமக்கு விடுதலை கேட்கின்றன. நன்றாக ஞாபகமிருக்கட்டும் காடைகள் தம்தம் கூடுகளிலிருந்து வெளிவரவேண்டிய அவசியமில்லாத முறையில் அனுபவிக்கத்தக்க விடுதலை தமக்கா (காடைகட்கா) காடைக்கூடுகட்கா என்பதை நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும். விடுதலை என ஒன்று கிடைக்குமானால் அதன்படி அந்தந்தக் காடைக்கூட்டம் அந்தந்தக் கூடுகளில் உலவமுடியும். விடுதலைக்குமுன் இருந்த நிலையே விடுதலைக்குப் பின்னும் என்பது தவிர இதில் நூதனமென்ன? இப்படிப்பட்ட விடுதலை பெறத்தானா அவைகள் அங்கு சென்றும் முரண்படுகின்றன என்று சிலர் ஆசேரியப்படலாம். மதக்கூடுகளில் அடைப்பட்டுச் சாதி உயர்வு தாழ்வு முதலிய மயக்கத்தை"முடைய பக்ஷிகட்கு அது சகஜம் என்று நாம் கூறுகிறோம்.(பாவேந்தம் தொகுதி- 22, ப-251)

முடிவுரை அல்ல முற்றியமுரண்

தனித்தொகுதித் தீர்வையொட்டிக் காங்கிரசுகாரர்களும் பலவகைப்பட்ட பழமைவாதிகளும் தாழ்த்தப்பட்டோர்க்கு இவ்வுரிமையை மறுக்கக் காரணம் கால ஓட்டத்தில் இந்த நடவடிக்கை தாழ்த்தப்பட்டோர் ஆளுமையை குன்றிபோகச் செய்யும், தனிமைப்படுத்தும் என்பதைக் தவிர்க்கவே இப்படிச் சொல்வதாக வாதிட்டனர். உண்மையில் வரலாற்றின் கடந்த காலத்தில் ஏற்பட்ட குலைவுகளுக்கும் சிதைவுகளுக்கும் இழப்பீடாகவே இந்த உரிமையைக் கோருகிறோம். அதை மறைப்பதற்கு இந்த முறை எதிர்காலத்தைக் காட்டுவது பச்சை மோசடியாகும் என்று சுயமரியாதையாளர் கருதினர். பாரதிதாசன் சில எளிய சான்றுகள் வாயிலாக தனது வாசகர்களுக்கு விளக்கலானார். (பாவேந்தம்- 22,ப.253, 373)

காங்கிரசு என்ற அரசியல் இயக்கம் விடுதலைக்கான முன்னோடி படை என்கிற பொருளில் விடுதலை பற்றிய மாற்றுப் பார்வைகளும் கருத்தும் கொண்ட இந்தியர் பலருக்கும் பதிலளிக்கும் பொறுப்பும் கடப்பாடும் உள்ளதேயாகும். அதைத் தவிர்க்கவும் தாண்டிச் செல்லவும் அந்த முன்னோடி படையின் முதன்மை அலகாகிய பார்ப்பனர்கள் காந்தி என்கிற விசித்திரத் தலைமையை அதன் உன்னதங்களை ஓர் அரசியலற்ற அரசியலாகப் பயன்படுத்தி வந்தனர்.

அப்போது புதிதாக வந்த கிராமப்போன் ரெக்கார்டுகள். இந்தப் பக்த ஜன சேவையில் ஈடுபட்டதை பாரதிதாசன் அம்பலப்படுத்துகிறார். விவாதம் தத்துவத்திலிருந்து சரிந்து தனிநபர் மீது (தலைமை) விழுந்த அவலம் இந்திய அரசியலில் அங்கேதான் அரங்கேறியது.

ஆளுமைமுரண் : அகப்பகை, புறப்பகை

இந்த வரலாற்றுத் தடத்திலேயே தனிவாக்களர் தொகுதி உரிமையை ஆதரித்துத் தீவிரமான நிலைகளை நோக்கிப் பயணித்த பாரதிதாசன் தமிழகத் தாழ்த்தப்பட்டோரான எம்.சி.ராசா அவர்களின் தனிநபர் சார்ந்து ஆளுமை வழிப்பட்ட விலகல்களைக் கண்டிக்கும் எல்லைக்கு முன்னேறினார். அந்த மறுப்புரைகள் நயத்தகு நாகரிகத்தோடு எம்.சி.ராசாவை நகர்த்தி வைத்துவிட்டு காங்கிரசோடு நேரடியாகக் கடுந்தீவிரத்தோடு மோதுவதைக் காணமுடிகிறது. தனித்தொகுதி உரிமையில் மாறுபட்ட கண்ணோட்டங்களை முன்வைப்பதில் பலருக்கும் உரிமை உண்டு. ஆனால் 'இந்துமத நீக்கம்' வேண்டாம் என்கிற முன்முடிவோடு தனித்தொகுதி உரிமையை மறுப்பது வரலாற்றில் தாழ்த்தப்பட்டோரை அழித்தொழிக்கும் காந்தியத்திற்குத்

துணைபோவதாக சுயமரியாதையாளர்கள் எண்ணினர். அதற்குத் தலித் வரலாற்று ஆளுமையாளர் எம்.சி.ராசா, அம்பேத்கர் என்கிற விடுதலையாளரோடு கொண்ட ஆளுமை முரண் ஓரு முக்கியமான பங்கு வகித்திருப்பதை உணர முடிகிறது.

தமிழகத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட தலைவர்கள் பலரும் பாரதிதாசன் முன்வைக்கும் தரப்பையே ஆதரித்தனர் என்பது தெளிவு. தனித்தொகுதி உரிமைக்கு அவர் காரணமில்லை என்றபோதும் எம்.சி ராசாவின் மாறுபட்ட முடிவுகள் தாழ்த்தப்பட்டோர் அரசியலைத் தமிழக நிலைக்களன் சார்ந்துத் தடுமாறச் செய்தது உண்மை.

- பேராசிரியர் மணிகோ. பன்னீர்செல்வம், பாவேந்தர்பாரதிதாசன் ஆய்விருக்கை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை