socialbwமுற்போக்குச் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுத்து, அதனை திரைப்படம் மூலம் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர் திரு. எஸ். பி. ஜனநாதன். இயற்கை என்ற தேசிய விருது பெற்ற திரைப்படத்தையும், ‘ஈ” , பேராண்மை போன்ற கருத்தாழம்மிக்க திரைப்படங்களையும் மக்களின் பார்வையில் வழங்கியவர்.

அவர் இயக்கியும், தயாரித்தும் வெளியிட்ட தமிழ் திரைப்படம் புறம்போக்கு (எ) பொதுவுடைமை. 2015 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

புறம்போக்கு (எ) பொதுவுடைமை இது என்ன? தலைப்பே விசித்திரமாய் உள்ளது.

புறம்போக்கு என்பதற்கும், பொதுவுடைமை என்பதற்கும் என்ன சம்பந்தம். எல்லோர் மனதிலும் ஓர் கேள்வி எழுவது இயல்புதானே.

ஆனால், உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பிரிவும், அரசுப் பணியாளர்களுமான நில அளவைத்துறையினர் இதற்கு தெளிவான விளக்கத்தினை அளித்தனர்.

‘புறம்போக்கு என்றால் பொதுப்பயன்பாட்டிற்கான நிலம்' என்பது பொருள்.

பொதுப் பயன்பாடு என்பது அனைவருக்கும் பொதுவுடைமையாக உள்ளவற்றைக் குறிக்கும்.

ஓர் ஊரில், ஒவ்வொரு நிலஉடைமைதாரருக்கும் சொந்தமாக உள்ள அரசாங்கத்தால் பட்டா வழங்கப்பட்ட நிலங்கள் தவிர்த்து, ஊரின் மத்தியிலுள்ள விளையாட்டுத் திடல், பூங்கா, சாலை போன்றவை அமைந்துள்ள இடமும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மேய்ச்சல் நிலம், தரிசுநிலம், இடுகாடு போன்றவையும், வேளாண்மை செய்யப்படும் நிலங்களில் உள்ள ஓடை, வாய்க்கால், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளும் பயன்படுத்தும் அனைத்து பொது மக்களுக்குமான பொதுவுடைமையாகும்.

இவையே வருவாய்த்துறையின் ஆவணங்களில் அரசு புறம்போக்கு என பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இன்றைய சூழலில் அதாவது போதாதக் காலத்தில் பலரும் புறம்போக்கு என்ற பெயர்ச் சொல்லை, எவருக்கும் / எதற்கும் பயன்படாத நபர்களை ‘போடா புறம்போக்கு” என திட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர்.

புறம்போக்கு என்பதன் உண்மை அர்த்தத்தை புரிந்துகொண்ட நாம், இனிமேல் இவ்வகைப்பேச்சு வழக்குகளை தவிர்ப்போமாக.

ஆதிபொதுவுடைமைச் சமூகத்தில், அனைத்தும் அனைவருக்கும் பொதுவானதாக இருந்ததை, ‘ அரசியல் எனக்குப் பிடிக்கும்” என்ற புத்தகத்தில் அழகாக பாமரனுக்கும் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார் தோழர் ச.தமிழ்ச்செல்வன். குடும்பம் - தனிச்சொத்து - அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற புத்தகம் சமூகத்தை பற்றிய அறிவு தாகம் கொண்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

இப்போது உச்சரியுங்கள், பொதுவுடைமை காலம் முதல் இன்றைய போதாத காலம்வரை ‘புறம்போக்கு (எ) பொதுவுடைமை” என்பது எவ்வளவு அர்த்தமும், மதிப்பும் மிகுந்த வார்த்தை அல்லவா...

- சுதேசி தோழன்

Pin It