மக்களுக்கு எதிராக, நாட்டையே நாசம் செய்யும் அரசுக்கு எதிராக, 1911 ஆம் ஆண்டு புரட்சி செய்ததன் விளைவாகத் தோன்றியது, சன் யாட் சென் புரட்சி.
இந்தப் புரட்சியின் காரணமாக மன்னராட்சி கவிழ்க்கப்பட்டு, சீனா மக்களாட்சி நாடாக மாறியது. நம் இந்தியாவைப் போன்றே மக்கள் தொகை மற்றும் பரப்பளவு அதிகம் கொண்டுள்ளதால் அந்தப் புரட்சியை முன்னெடுத்த தலைவர்களால் சீன அரசியலில் ஒற்றுமையை நிலைநாட்ட முடியவில்லை.
இந்த காரணங்களால் உள்நாட்டுப் பிரச்சினைகள் அதிகமாக எழுந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு அரசு சரியாக அமையாத பட்சத்தில் இன்றளவும் உள்நாட்டுப் பிரச்சினைகள் அதிகமாகவே இருக்கிறது. இது உள்நாட்டுப் போருக்குக் காரணமாக அமையும். இவை அனைத்தையும் 18 வயதான மாவோ கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.
மாவோ 1920 ஆம் ஆண்டு, பொதுவுடைமை கொள்கைகாரராக மாறினார். 4 ஆயிரம் ஆண்டுகளாகப் பிற்போக்குக்காயிருந்த சீனாவைப் புரட்சி சிந்தனைகளால் முற்றிலும் முன்னேற்றம் நோக்கிய திசையில் செலுத்தினார். சீனாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசதி படைத்தவர்கள் மட்டுமே கல்வியைப் பற்றி நினைக்க முடியும்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த மவோவிற்கு கல்வி என்பது தொடமுடியாத தூரத்தில் இருந்தது. கன்புசியஸ், எழுதிய இலக்கிய நூல்களைப் படித்துத் தேர்வு எழுதி வேலைக்குச் செல்வதையே குறிக்கோளாகச் சீன மாணவர்கள் கொண்டிருந்தனர். அவரது தந்தையின் சுயநலம் காரணமாகத் தனது விவசாய கணக்குகளைப் பார்க்க மாவோவை பள்ளியில் சேர்த்தார். பொருத்தமில்லாத கல்வியை வெறுப்புடன் மாவோ கற்று வந்தார்.
ஆனால் மாவோ வகுப்பறையைத் தாண்டி கிடைக்கும் நூல்களை எல்லாம் படித்து தள்ளினார். 12 வயதில் புரட்சிகரமான கருத்துக்களை மாவோ தன் வசம் ஆக்கினார். மனிதர்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே சார்ந்திருக்க வேண்டும். துணிவுடன் செயல்பட வேண்டியது மனிதனின் உள்ளம் மட்டும் தான் போன்ற கருத்துக்களை மாவோ உள்வாங்கினார். வாசிப்பதையே வாழ்க்கை ஆக்கிக் கொண்டார்.
அதன் பிறகு அரசியல் வரலாற்றுப் பாடங்களில் கற்றுத் தெளிந்தார். ஒரு கட்டத்தில் வாசிப்பு ஆர்வத்தின் காரணமாக அவருக்குக் கிடைத்த நூலகர் வேலையை ஆர்வமாகச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் அனைவரும் தனது நீண்ட தலைமுடியை வைத்துக்கொள்வது சட்டமாகவே இருந்தது. அதை மாவோ எதிர்த்து முடிகளை வெட்டினார்.
பல புரட்சி கருத்துக்களை மாணவர்களிடையே பேசினார். அவர் அரசியல் பேசினால் அந்த வட்டத்திற்குள் அனைவரையும் ஈர்க்கும் சக்தி கொண்டவராக மாறினார். ஏகாதிபத்திய வரலாறு, ரஷ்யப் புரட்சி என பல்வேறு புரட்சிகரமான கருத்துக்களை மாணவர்களிடையே விதைத்தார்.
இடதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 12 பேர் இணைந்து, சீனப் பொதுவுடைமைக் கட்சியைத் தோற்றுவித்தனர். 1921 முதல் தன்னுடைய கட்சிப் பணியில் தீவிரம் காட்டினார் மவோ. இந்த நேரத்தில் ஒரு சிறு பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1925 ஆம் ஆண்டு சன்யாட் சென் மறைவிற்குப் பிறகு அந்த இடத்திற்கு வந்த சியாங் கேய்-ஷேக் என்பவர் ஏகாதிபத்தியத்திற்கும் விலைக்குப் போனார்.
1931ஆம் ஆண்டு புரட்சிப் படை எனும் செம்படை ஒன்றைத் தோற்றுவித்து ஆயுதப் பயிற்சிகள், நாட்டின் வளர்ச்சிக்கான பணிகள் ஆகியவற்றை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். சியாங் கேய் ஷேக்கை வீழ்த்த பல யூகங்களை வகுத்தார். ஒரே இடத்தில் இருந்து அரசியல் களத்தில் பணியாற்ற மாவோவிற்குப் பிடிக்கவில்லை.
அடிமையாக இருக்க விரும்பாதவர்கள் அனைவரும் ஒன்று திரளுங்கள், நமது இரத்தத்தால் புதிய சீனாவைக் கட்டமைப்போம் என்ற அறைகூவலுடன் மாவோ தன்னுடைய புரட்சிப் படைகளையும், மக்களையும் ஒன்று திரட்டி 8000 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைவரையும் சந்தித்து நாட்டின் சூழலை விளக்கினார்.
இந்த நடைப்பயணம் சீன வரலாற்றின் தலையெழுத்தையே மாற்றப்போகிறது என்று மக்கள் புரிந்து கொண்டு இணைந்தனர். காலச்சுழல், ஆளும் அரசின் அதிரடி தாக்குதல், வான் தாக்குதல், குண்டுமழைகள், கண்ணீர் வெடிகுண்டுகள், பசி, பஞ்சம் என அனைத்தையும் சந்தித்து முன்னேறிச் சென்றார். மாபெரும் படைகளுடன் மவோ. அந்த நடைப்பயணத்திலும் மக்கள் அனைவருக்கும் அரசியல் வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தார்.
சீனா அரசின் தாக்குதலைச் சமாளித்தும், எத்தனையோ உயிர்களை இழந்தும் தொடர்ந்தது அவரது பயணம். ஒரு கட்டத்தில் செம்படைகள் சீன அரசைத் திருப்பி தாக்கி வெற்றிகண்டது. தற்காப்பு முறையை மீறித் திருப்பி தாக்கும் மரபு மவோவிடம் இருந்தது பிறந்தது என்றால் மிகையாகாது.
தொடர் பயணத்தில் பல மாகாணங்கள் செம்படைகள் வசம் வந்தது. அந்த நெடிய போர் பயணம் முடியும் தறுவாயில் பல்லாயிரக்காண வீரர்கள் உயிர் இழந்திருந்தார்கள். தொன்னுற்று ஐந்தாயிரம் வீரர்களைக் கொண்டு ஆரம்பித்த அந்த பயணம், நாற்பத்து ஐந்தாயிரம் வீரர்களோடு பியூக்கின் என்ற தென் சீன நகரத்திலிருந்து ஷென்சியில் முடிவடைந்தது.
ஏறத்தாழ ஓராண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் இருநூற்று முப்பத்து ஐந்து நாட்கள் நடப்பதில் மட்டுமே செலவு செய்தனர். இறந்த ஐம்பதாயிரம் சீன வீரர்கள் வழிநெடுகிலும் புரட்சி விதைகளைத் தூவிச்சென்றதால் மக்கள் மனதில் மாபெரும் புரட்சி விதைகள் வீழ்ந்து முளைக்கத் தொடங்கியது.
அதுமுதல் சீனா முதலில் அவருடைய செல்வாக்கு பெருகத் தொடங்கியது. 1934 ஆம் ஆண்டு சீனப் பொதுவுடைமை கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது ஒரு புறம் இருக்க ஜப்பானின் ஆக்கிரமிப்பு தொடர்ந்து இறுக்கத் தொடங்கியது. கோமின்டங் எனும் ஆளும் அரசின் அழுத்தம் எனத் திணறினார்கள் சீன மக்கள்.
உள்நாட்டுப் பிரச்சனைகளைத் தாண்டி சீன அரசும், மக்களும், செம்படைகளும் ஜப்பானை வெளியேற்ற ஒற்றைக் குறிக்கோளை வகுத்து விட, மாவோ மேலும் வலுவான தலைவராக உருவெடுத்தார். அந்த நிலையில் ஆளும் அரசான சியாங் கேய்-ஷேக் கட்சித் தலைவர்கள் ஜப்பான் விவகாரம் குறித்து முறையிட்டனர்.
அந்த சூழலில் அக்கறை காட்டாத சியாங் கேய்-ஷேக்கை சொந்த கட்சியிலேயே கைது செய்து, ஜப்பானை விரட்ட மவோதான் சரியான தலைவர் என்று அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அந்த நிலையில் சியாங் கேய்-ஷேக்கை கொலை செய்யுமாறு தூண்டினார்கள். மவோசியாங் கேய்-ஷேக்கை மன்னித்துத் தண்டிக்க, இது சரியான நேரமில்லை என விடுவித்தார்.
உள்நாட்டுக் கலவரங்களை மேலும் தூண்ட நினைத்து ஜப்பானுக்கு இது பெரிய தலைவலியாகவும், சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தார் மவோ. இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்து போது ரஷ்யாவின் படைகள் சீன செம்படைகளுக்கு உதவியது. இதன் விளைவு ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி 1945 ல் ஜப்பான் சீனாவிலிருந்து தூக்கி வீசப்பட்டது. அதே நேரம் கோமின்டங் அரசும் சீன செம்படைகள் வசம் வீழ்ந்தது.
சியாங் கேய்-ஷேக்கை பிடியில் வைத்து அமெரிக்கா தன்னுடைய அதிகாரத்தைச் சீனாவில் செலுத்த விரும்பியது. அமெரிக்காவின் தந்திரங்களும் தவிடு பொடியானது. இந்த சூழலில் ஆளும் அரசான சியாங் கேய்-ஷேக் தாய்வானுக்குத் தப்பினார்.
முப்பது ஆண்டுக் கால அயராத உழைப்பின் காரணமாக 1949 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி குடியரசு சீனா, மக்கள் சீன குடியரசாகவும், கம்யூனிச நாடக அறிவிக்கப்பட்டு முதல் அதிபராகப் பதவி ஏற்றார் மாவோ. பெய்ஜிங்கை தலைநகராகக் கொண்டு புதிய சீன மலர ஆரம்பித்தது.
தனது இரும்புக் கரம் கொண்டு இன்றைய சீனாவின் பெரும் பாய்ச்சலுக்கு அடிக்கோடிட்டு உழைத்தவர் மவோ. கல்வி மற்றும் மருத்துவத்திற்கு பெரும் நிதிகளை ஒதுக்கினார். சீன நாட்டை உருவாக்கிய சிற்பிகளில் மவோ. "சீனத்தந்தை" என்று அழைக்கப்பட்டார். ஏகாதிபத்திய ஒடுக்கு முறைகளைப் பாய்ச்சலாக எதிர்கொள்ளும் துணிவு கொண்டார்.
பல்வேறு பாய்ச்சலோடு நாட்டின் முப்பது ஆண்டுக்கால போரிலும் பின்தங்கியுள்ள சீனாவின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தீவிரமாக உழைத்து வந்த மவோவிற்கு அடுத்த தலைவலி காத்திருந்தது.
தனது அண்டை நாடான கொரியாவை 1950 ஆம் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் சுரண்டுவதைப் பார்த்துப் பொறுக்காமல் செம்படைகளை அமெரிக்காவிற்கு எதிர்ப்பாகத் திருப்பினார். கொரியாவிற்குத் துணை நின்ற போரில் மாவோவின் மகன் இறந்தாலும் அந்த நிலையில் அமெரிக்காவை வெற்றிகண்டது செம்படைகள்.
செம்படைகளுக்குப் பெருத்த அழிவு இருந்தது. தன்னுடைய மகனை மட்டும் சீனாவிற்குக் கொண்டு வரத் தேவையில்லை. உயிரிழந்த வீரர்களோடு புதைத்து விடச்சொல்லி தன் நாட்டுச் செம்படைகளுக்கு உயர்ந்த மரியாதை செலுத்தினார் மாவோ.
இதே போல் தீபத்திற்குள் புகுந்த செம்படை பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு தீபத்தைச் சீனாவோடு இணைக்க உத்தரவிட்டார் மவோ. அதற்கு எதிரான நிலைப்பாட்டில் "சவகர்லால் நேருவின்" குரல் ஒலித்தது. இதனால் இந்திய− சீனப்போர் புள்ளிகள் நீள ஆரம்பித்தது.
இந்திய- சீனப் போர் என்பது 1962ம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட போரைக் குறிக்கும். சீனா லடாக் மற்றும் மெக்மோகன் கோட்டுக்கு அருகே எல்லையைக் கடந்து தாக்குதலை நடத்தியது. சீனா 1962, நவம்பர் 20ல் போர்நிறுத்தம் அறிவித்ததைத் தொடர்ந்து இப்போர் முடிவுக்கு வந்தது.
மேலும் அவர்கள் சிக்கலுக்குரிய கைப்பற்றிய பகுதிகளிலிருந்து பழைய நிலைக்குத் திரும்பினார்கள். ஆனால் மீண்டும் லடாக் எல்லையில் போருக்கான சூழல் நிலவி இன்று வரை நீடிக்கிறது.
1961 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் பஞ்சத்தால் கோடிக்கணக்கான மக்கள் சீனாவில் இறந்தனர். இந்த நிலையில் மக்களுக்குக் கல்வியையும் விவசாய கட்டமைப்புகளையும் வலிமைப்படுத்தும் திட்டங்களை அறிவித்தார். அதிலிருந்து சீனாவின் வளர்ச்சி அபரமாக விரியத் தொடங்கியது. மக்களுக்கான தேவைகளை அறிந்து ஒரு நாட்டை கட்டமைப்பதிலும் இன்று கம்யூனிச நாடக சீனாவைக் கட்டமைத்து வைத்த தலைவர் மவோ என்பது மாபெரும் வரலாறு.
தன்னுடைய உடல் சூழல் காரணமாக முடங்கிய மவோ 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் −9 ஆம் தேதி இறந்தார். உள்நாட்டுப்போர், அண்டைநாடுகளின் ஆக்கிரமிப்பு, ஏகாதிபத்தியத்தின் விளைவு என எதற்கும் அஞ்சாமல் தன்னுடைய நிலைப்பாட்டை மக்களுக்காகவே செலுத்திய மாபெரும் தலைவர் மவோவை நீங்கள் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறீர்கள் என்ற கேள்வியோடு விமர்சனம் எழுந்தபோது. ஆம் இது மக்களாட்சி சர்வாதிகாரம், மக்களுக்கான அதிகாரம் எனப் புன்னகைத்துக் கடந்து சென்றார்.
இது போன்ற தலைவர்கள் அடுத்த தலைமுறை வரலாறு கண்டெடுக்க முடியாமல் நிற்கிறது.
1906 ம் ஆண்டு காந்தியடிகள் ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த போராட்டத்தில் சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினார். இதன் மூலமாக தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றார். 1915 ஆம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் வந்திறங்கிய போது காந்தியடிகள் ஒரு கத்தியவாரி விவசாயி உடையில் காட்சியளித்தார். மாவோ அடிப்படையில் விவசாய வேலைகளில் இருந்து தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டங்களைப் பற்றி மக்கள் தெளிவாக அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது.
1924 ஆம் ஆண்டு இந்தியத் தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகக் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த காலகட்டத்தில் இந்தியாவில் மோகன்தாஸ் காந்தி அவர்களின் நிலைப்பாடு அகிம்சை என்ற கொள்கை ரீதியான போராட்டங்களைக் கையில் எடுத்துக் கொண்டார். பொதுவுடைமை சித்தாந்தங்களையும் போராட்டங்களையும் விரும்பாத ஏகாதிபத்திய அரசுகள், காந்தியைக் கொல்லாமல் காய் நகர்த்தியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் காந்தியை நோக்கி இன்று வரை தொடர்ந்தாலும், அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியை மதச்சார்பின்றி வெகுஜன மக்களுக்கு விடுதலை போராட்டத்தின் வாயிலாகச் சென்று சேர்த்தவர் காந்தி.
அவர் "நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்" அவர்களின் படைகள் மேல் ஆர்வம் காட்டாமல், தன்னை சுதந்திரப் போராட்டத்தின் ஒற்றை தலைவராக அடையாளம் காட்டிக் கொள்வதாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், மக்களுக்கான களத்தில் தொடர்ந்து போராடினார் காந்தி.
காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது கட்டத் தலைவர்களுக்கான சுதந்திரம், மக்களுக்கான எளிய அணுகுமுறை என அனைவரையும் சென்றடைந்தார் காந்தி. அது அனைவரையும் விடுதலைப் போராட்டம் என்ற ஒரே குடையின் கீழ் இணையப் பெரிய பாலமாக உதவியது. சிறுபான்மை மக்கள், இஸ்லாமியர்கள், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் என அனைவருக்காகவும் போராடினார்.
இந்தத்துவா என்ற கொள்கைக்கு எதிராகத் திரும்பினார் காந்தி. கொள்கை முரண்பாட்டின் காரணமாகக் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த பெரியார் பின்னாளில் காந்தியத்தைப் பெரிதும் புகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தியை வட இந்தியாவில் விமர்சித்த பீமா ராவ் அம்பேத்கருக்குப் புரியும் வகையில் தீண்டாமைக்கு எதிரான"அரிசன யாத்திரையை"1933 ஆம் ஆண்டு நவம்பர் 7 ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்.
இதனால் சாதி அமைப்புகள் மற்றும் ஆதிக்க சாதியினர் கடுமையாக விமர்சித்தனர். தாழ்த்தப்பட்ட சாதியினர் மலர் தூவி வரவேற்றது மக்களின் ஏற்றதாழ்வுகளைப் பிரதிபலித்தது. பத்து மாத நீண்ட யாத்திரை அது. ஏர்ல் மவுண்ட்பேட்டன் அவர்கள் இந்த யாத்திரையின் பிரமாண்டத்தைப் பார்த்து "one man army" என்று காந்தியை வர்ணித்தார்.
இந்த யாத்திரையில் காந்தியை ஆதிக்க சாதியினர் கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
நான் மேற்கொள்ளும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவான போராட்டத்தால் இந்து மதம் அழிந்தால் அழியட்டும் என்கிற நிலைப்பாட்டோடு இருந்தார் காந்தி. பூனே ஒப்பந்தத்தில் காந்தியும் அம்பேத்கரும் முரண்பட்டு நின்றனர். தனித்தொகுதி நிலைப்பாட்டில் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித் தொகுதியும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் வாக்குரிமை மற்றும் இரட்டை வாக்குரிமையும் கேட்டுப் போராடும் சமயத்தில், காந்தி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
தாழ்த்தப்பட்டவர் உயர இடஒதுக்கீடு வழியல்ல. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற முரண்பாட்டோடு உண்ணாவிரதம் இருந்த காந்திக்காக அம்பேத்கர் தனித்தொகுதி குறித்த நிலைப்பாட்டைச் சற்று தளர்த்தினார்.
காந்தியோ வரும் காலத்தில் அனைத்து சாதியும் அழிந்துவிடும். இட ஒதுக்கீடு என்ற தேவையே இருக்காது என்ற கனவு எழுபது ஆண்டுகள் தாண்டியும் அதே எல்லையில் இருப்பதால், தாழ்த்தப்பட்டவர்களுக்கான வரலாற்றுப் பிழையாகவே காந்தியின் மேல் குற்றச்சாட்டோடு பூனே ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.
இடது சாரி சிந்தனையாளர்களின் பார்வையிலிருந்து காந்தியால் தப்ப முடியவில்லை.பகவத்சிங் கொலை வழக்கிற்கு எதிராகக் காந்தி, தொடர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் காந்தி ஆதரவாளர்கள் கூறினார்கள். ஆனால் அது மறுக்கப்பட்டது.இப்படிப் பல கட்ட போராட்டங்களைக் கையில் எடுத்த காந்திக்கு மதரீதியான அழுத்தங்களும் அதிகமானது.
முகமது அலி ஜின்னா, காந்தி அவர்கள் இஸ்லாம் மற்றும் இந்து மக்கள் பிரதிநிதியாக நடந்து கொள்வதால் சிக்கல் தீராது என்றும் இந்து மக்களுக்காக மட்டும் அவர் பேசினால், நான் இஸ்லாம் மக்களுக்காகப் பேசலாம் என்று பிரிவினை விவகாரத்திலும் அழுத்தம் கொடுத்தார்.
- ப.தனஞ்ஜெயன்