periyar 433கடந்த 08.07.20 புதன்கிழமை ஆதன் வலையொலியில் (Youtube) 'திராவிடமா? தமிழ்த் தேசியமா?' என்கிற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. அதில் திவிக தலைவர் தோழர். கொளத்தூர் மணி அவர்கள் திராவிடம் என்கிற தலைப்பிலும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் அவர்கள் தமிழ்த் தேசியம் என்கிற தலைப்பிலும் பேசினர்.

விவாதத்தின் தலைப்பே முதலில் நமக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. தமிழ்த் தேசியவாதிகள் என சொல்லக் கூடியவர்கள் எந்த ஒரு கூற்றையாவது திராவிடம் எனப் பேசுபவர்களோ, திராவிட இயக்கத்தவரோ, அதன் தலைவர்களோ எதிர்த்துள்ளார்களா? அல்லது அதை அனைத்தையும் பேசாமலோ, அதற்காகப் போராட்டம் நடத்தாமலோ, அதற்காக பிறர் போராட்டம் நடத்தும்போது பங்கேற்காமலோ இருந்துள்ளார்களா? அப்படி இருக்கையில் எப்படி திராவிடமா? தமிழ்தேசியமா? எனத் தலைப்பிட்டார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

மேலும் இதுபோன்ற தலைப்புகள் இரண்டும் நேர் எதிரானது எனப் புதியவர்களிடம் பதிய வைக்கவே செய்யும்.

அந்த விவாதத்தில் கல்யாண சுந்தரம் அவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கும் சொல்லிய சில பொய் தகவல்களுக்கும் விளக்கம் கொடுக்கவே இந்தக் கட்டுரையை எழுத நேரிட்டது.

விவாதத்தின் தொடக்கத்திலேயே தேசியம் என்பதற்கு ஜோசப் ஸ்டாலின் அவர்கள் கொடுத்த விளக்கத்தை இருவரும் பேசினர். உண்மையிலேயே ஜோசப் ஸ்டாலின் கூற்றுப்படி பார்த்தால், ஒரு தேசிய இனம் என்பதற்கு பொது மொழி பேசுவோராக இருக்க வேண்டும் என்பதோடு, பொதுவான நிலப் பரப்பையும் கொண்டிருக்க வேண்டும். வேறு பலவற்றையும் சொல்கிறார். ஆனால் நாம் தமிழர் கட்சி இதை ஏற்றுக் கொண்டால் இலங்கையில் தமிழீழம் கோரி போரிட்ட தமிழர்கள் எப்படி இங்குள்ள தமிழ்த் தேசிய இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அடிப்படையில் இருவேறு தேசிய இனம் என ஆகின்றது தானே?

மேலும் தமிழ்த் தேசியம் என்பதற்கான நாம் தமிழர் கட்சியின் வரையறையை கடைசிவரை ஏனோ விளக்கவேயில்லை. பொத்தாம் பொதுவாக தமிழ்த் தேசிய குடியரசை அமைப்போம் என்பதைத் தாண்டி வேறெதுவும் கூறாதது ஏன்?

திராவிடர்:

விவாதத்தில் திராவிடர், திராவிடம் என்கிற சொல்லுக்கான விளக்கத்தை பல முறை தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் பதில் சொல்லிய பிறகும் புரியாதது போல் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்.

திராவிடம் என்பது தென்னிந்தியாவில் உள்ள நிலப்பரப்பை குறிக்கிறது.

திராவிடர் என்பது ஆரியப் பண்பாட்டை ஏற்றுக் கொள்ளாத பார்ப்பனரல்லாத மக்களை குறிக்கிறது.

திராவிடர் என்பது தமிழ்ச் சொல் அல்ல, மேலும் அது ஆரியர்களால் பார்ப்பனியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் குறித்து கூறப்பட்ட பெயரே ஆகும். ஆதாரம் மனுஸ்மிருதியிலேயே உள்ளது.

திராவிடர் என்ற சொல்லை தந்தை பெரியாரே முதன் முதலில் பயன்படுத்தியது போலவும், அது தமிழரல்லாத மற்றவர்களை இங்கு ஆட்சி புரிய வைக்க நடந்த சதி என்றெல்லாம் கொஞ்சமும் அறிவுநாணயம் இல்லாமல் பேசுகிறார்கள்.

ஆனால் ஒப்பீட்டளவில் இந்தியாவில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருப்பதை மட்டும் இவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

இவர்களே எந்த தெலுங்கனோ, கன்னடனோ, மலையாளியோ தன்னை திராவிடன் என சொல்லிக் கொள்கிறானா எனக் கேட்பதும், அதை தமிழர்கள் மீது வலுக்கட்டாயமாக திராவிட இயக்கத்தினர் திணிக்கிறார்கள் என்று சொல்வதும் அயோக்கியத்தனமாக இல்லையா?

முதன்முதலில் 1885ல் 'திராவிடப் பாண்டியன்' என்ற பெயரில் பத்திரிக்கை நடத்தியவர் அயோத்திதாசர் அவர்கள். 1892ல் திராவிட மகாஜனசபை என தன் இயக்கத்திற்குப் பெயர் வைத்தவரும் அவரே. இரட்டைமலை சீனிவாசனார் திராவிடம் என்கிற அடையாளம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கௌரவத்தை வழங்குவதாக தன்னுடைய வாழ்க்கை வரலாற்றிலேயே (ஜீவித சரிதம்) எழுதியுள்ளார்.

அதன் பின்னால் 1912ல் மெட்ராஸ் யுனைடட் லீக் என்ற அமைப்பு உருவாகிறது. அதன் முதலாவது ஆண்டு விழாவில் பார்ப்பனரல்லாத மக்களின் நலனுக்கான தோற்றுவிக்கப்பட்ட இயக்கத்திற்கு ஆங்கிலத்தில் உள்ள பெயர் சரியில்லை எனக் கூறி மாற்ற முடிவு செய்கிறார்கள். பார்ப்பனரல்லாதார் சங்கம் என வைக்க சிலர் கூறியபோது சமூகத்தில் 3% சதவிகிதமாக உள்ள மக்களை வைத்து 97% சதவிகித மக்களைக் குறிப்பது சரியாக இல்லை என்பதால் 1913 ல் திராவிடர் சங்கம் என டாக்டர்.நடேசனார் பெயர் சூட்டினார். இதன் மூலம் பார்ப்பனரல்லாத மக்களைக் குறிக்கவே திராவிடர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்பது உறுதியாகிறது.

இதற்கு முன்னால் 1856ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை எழுதியுள்ளார். ஆனால் கால்டுவெல் திராவிடர் என்ற சொல்லை மனுஸ்மிருதியில் இருந்து எடுத்ததாகக் கூறி பெ.மணியரன் அவர்கள் மறுக்கிறார். மனுஸ்மிருதியில் ஆரிய பண்பாட்டை ஏற்றுக் கொள்ளாத குடியையே திராவிடர் என குறிப்பிடப்பட்டுள்ளது, அது சமஸ்கிருத சொல் எனக் கூறுகிறார். அதே காரணத்திற்காக தான் நாமும் திராவிடர் என்கிற அடையாளத்தை ஏற்றுக் கொள்கிறோம்.

1956 நவம்பர் 1ல் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு திராவிட நாடு கோரிக்கையை முற்றிலுமாக பெரியார் கைவிட்டு விட்டார். அதன்பிறகு அது குறித்து எங்கேயும் பேசாததோடு மாறாக மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.

குறிச்சொல்:

திராவிடர் என்பதை தான் ரத்தப் பரிசோதனை செய்து கூறவில்லை என்றே பெரியார் கூறினார்.

"திராவிடருக்கு என்று ஏதோ சில தன்மைகளை எடுத்துச் சொல்லி அதைச் சரித்திர ஆதாரப்படி மெய்ப்பித்து சொல்லுவதாய்க் கருதாதீர்கள். இவை எப்படி இருந்தாலும் இவை பிரிக்க முடியாததாய் இருந்தாலும் சரி, நம்மை இன்றைய இழிவிலிருந்து, தாழ்மையிலிருந்து முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டு தாண்டிச் செல்ல நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும்.

சுயராஜ்யம் என்றால் எதை குறிக்கிறது?
பாகிஸ்தான் என்றால் எதை குறிக்கிறது?
மோக்ஷம் என்றால் எதை குறிக்கிறது?

வெள்ளையனே வெளியே போ என்றால் எதைக் குறிக்கிறது என்று பார்த்தால் அவை ஒரு கருத்தை ஒரு விடுதலைத் தன்மையை, ஒரு பயனை அனுபவிப்பதை எப்படி குறிப்பிடுகின்றனவோ அதே போல் நம்மை விடுதலை செய்து ஒரு முற்போக்கை ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியை குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல்லாகும்." (குடிஅரசு 14.07.1945)

மேலும் 1925ல் தந்தை பெரியார் தன்னைக் குறித்து அறிமுகப்படுத்தும் போது "ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தை உலகில் உள்ள மற்ற சமுதாயத்தைப் போல் மானமும் அறிவும் உள்ள மக்களாக மாற்றும் பணியை மேற்போட்டுக்கொண்டு செய்பவன்" எனக் கூறினார்.

ஆக 1925 ல் இருந்து அவர் மறைந்த 1973 வரை, பார்ப்பனிய சனாதனத்திற்கு எதிராக. பார்ப்பனரல்லாத மக்களின் நல்வாழ்வுக்காக பண்பாட்டு ரீதியாக நடத்திய புரட்சிக்கே திராவிடர் என்கிற குறிச்சொல்லைப் பயன்படுத்தினார்.

பண்பாட்டுப் புரட்சியும், போராட்டங்களும்

கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்தார். இந்துமதக் கடவுள்களின் யோக்கியதைகளை பகிரங்கமாக பொது மேடையிலேயே பிரச்சாரம் செய்தார். இந்து மதத்தின் சூழ்ச்சியையும் அதில் நிறுவப்பட்டுள்ள பார்ப்பனிய மேலாண்மையையும் அம்பலப்படுத்தினார். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என பகிரங்கமாகச் சொன்னார். கடவுள் என்பதே கற்பனைவாதம், அதில் நேரம் மற்றும் பணத்தை விரயமாக்க வேண்டாம் என்றார். ஜோதிடத்தில் உள்ள முட்டாள்தனத்தை விளக்கினார். பேய், பிசாசு கதைகளை கிழித்து தொங்கவிட்டார். எதையும் ஏன், எதற்கு, எப்படி என பகுத்தறியும் தன்மை உண்டாகச் செய்தார்.

பார்ப்பனர்களைத் தவிர்த்த சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தினார். தமிழர்கள் வீட்டு நிகழ்வுகளில் பார்ப்பனர்களைப் புறக்கணித்து பிறப்பு முதல் இறப்பு வரை பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு அனைத்து நிகழ்வுகளையும் நடத்த வைத்தார். பெண் விடுதலையையும், ஜாதி ஒழிப்பையும் உயிர் மூச்சாகப் பிரச்சாரம் செய்து தன் வாழ்நாளிலேயே அதன் வெற்றியையும் பார்த்தார்.

தந்தை பெரியாரை குறை சொல்லும் தமிழ்த் தேசியத்திற்கே நாங்கள் தான் அத்தாரிட்டி என கூறும் எவரும் செய்ய நினைக்கக் கூட அஞ்சும் போராட்டங்களை தமிழர்களின் நலனுக்காக செய்தவர் பெரியார்.

தமிழ்நாடு நீங்கலான இந்திய தேசிய வரைபட எரிப்பு, அரசியல் சட்ட எரிப்பு (1957) , இந்திய தேசியக் கொடி எரிப்பு, தனிநாடு பிரகடனம் என அனைத்தையும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்காகவே செய்தார், தன் வாழ்நாள் முழுவதும் தமிழர்களின் நலனுக்காகப் போராடிய தலைவர் பெரியார்.

இதையெல்லாம் பேசாமல், நன்றியுணர்வோடு நினைத்துப் பார்க்காமல் வெறும் திராவிடம் என்கிற சொல்லைப் பிடித்து கொண்டு பெரியார் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதையே வேலையாக செய்து கொண்டிருக்கின்றனர். திராவிட இயக்க எதிர்ப்பு அரசியல் செய்பவர்கள் பார்ப்பனியத்திற்கு சேவை செய்பவர்களேயாவார்கள்.

திருக்குறள்:

விவாதத்தில் தந்தை பெரியார் திருக்குறளை மலம் எனக் குறிப்பிட்டார் என அப்பட்டமான ஒரு பொய்யைக் கூறினார். அறிவு நாணயம் இருந்தால் அதற்கான ஆதாரத்தை நாம் தமிழர் கட்சியினர் வெளியிட வேண்டும்.

திருக்குறள் குறித்து பெரியார் குறிப்பிடும்போது "பிள்ளை இல்லாதவன் ஊமைப்பிள்ளையை வைத்துக் கொஞ்சுவது போல் தான்" எனக் கூறினார்.

திருக்குறளிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து இருந்தாலும், இருப்பதில் சிறந்ததாக பின்பற்றக்கூடியதாக உள்ளது என்றே திருக்குறளை மக்களிடம் பிரச்சாரம் செய்தார். மாநாடு நடத்தினார். குறைந்த விலைக்கு அச்சிட்டு பரப்புரை செய்தார். நல்ல தமிழ் உரை எழுத வைத்தார்.

2000 ஆண்டுகளில் எந்த தமிழ் மன்னனுக்கும் திருக்குறள் இருப்பதே தெரியவில்லையே... இல்லை வேறு எவனாவது திருக்குறளைப் பேசினானா?

இன்றைக்கு வள்ளுவர் கோட்டமும், குமரியில் சிலையும் வள்ளுவருக்கு இருப்பது திராவிட இயக்கத்தின் பணி அல்லவா? இது குறித்தெல்லாம் பேசாமல் இருப்பது அயோக்கியத்தனம் அல்லவா?

உண்மை என்ன?

புராணங்களிலிருந்து தமிழுக்கு இலக்கியம் எடுப்பது மலத்திலிருந்து அரிசி பொறுக்குவது போன்றது எனக் கூறியுள்ளார்.

கம்பராமாயணத்தைத் தான் மலத்தோடு ஒப்பிட்டுள்ளார்.

"கம்பராமாயணம் அரிய இலக்கியமாய் இருப்பதாய் கூறுகிறார்கள். இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவு தான் பசியோடிருந்தாலும் மலத்திலிருந்து அரிசியைப் பொறுக்குவானா?" (26.01.1936 குடிஅரசு)

அயோத்திதாசப் பண்டிதர்

அயோத்திதாசர் அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி பேதமற்ற தமிழர் எனப் பதிவு செய்யச் சொன்னதாக கல்யாண சுந்தரம் இருமுறை கூறினார். அதற்கு திவிக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் ஆதாரத்தோடு அயோத்திதாசர் 'ஜாதிபேதமற்ற திராவிடர்' எனப் பதிவு செய்யச் சொன்னதை தக்க ஆதாரத்தோடு அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுப்பில் பக்கம் 307, 308ல் உள்ளதை சுட்டிக்காட்டி பதிலடி தந்தார். கடைசிவரை அவர் அதை ஏற்கவில்லை. இனிமேலாவது அதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதனோடு சில தகவல்களை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

திராவிடம் என்ற சொல்லை அரசியல் சொல்லாக பொதுச்சமூகத்தில் முதன்முதலாகப் பயன்படுத்தியவர் பண்டிதர் அவர்களே ஆவார். தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களோடு 1891ல் நடத்திய அமைப்பிற்கு வைத்த பெயரே 'திராவிட மகாஜன சபை' என்பதை வசதியாக மறந்துவிட்டார். மேலும் அதற்கும் 6 வருடத்திற்கு முன்னால் ஜான் ரெவ்ரென்ட் ரத்தினம் அவர்களோடு இணைந்து 1885ல் நடத்திய பத்திரிக்கையின் பெயர் 'திராவிடப் பாண்டியன்' என்பதையும் வசதியாக மறைத்து விட்டார். ஆக அயோத்திதாசர் குறித்து அவர் கூறிய செய்தி பொய் என்பது நிரூபணமாகிறது.

கொள்கையை சட்டமாக்கவில்லையா?

தத்துவத்தை மக்களிடம் பரப்பி பிரச்சாரம் செய்து அதன்மூலம் ஆட்சிக்கு வந்து அதிகாரத்தைக் கைப்பற்றும் போது கொள்கைகளை சட்டமாக நடைமுறைப் படுத்துவது தானே நியதி. அப்படி 50 ஆண்டுகால ஆட்சியில் நீங்கள் செய்தது என்ன? என போகிற போக்கில் ஒன்றுமே திராவிட இயக்கம் செய்யாதது போலவும் அது எதுவுமே அவருக்குத் தெரியாதது போலவும் கேட்கிறார்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்ட பின்னால் முதன்முதலாக 1929ல் செங்கல்பட்டில் சுயமரியாதை மாநாடு ஒன்றை நடத்தினார். அந்த மாநாட்டில் பல புரட்சிகரமான விஷயங்களை தீர்மானங்களாகப் போட்டார். அவற்றில் பெரும்பாலானவை பெரியாரை அடியொற்றி ஆட்சிக்கு வந்தவர்களாலே சட்டமாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் பெரியார் பேசிய, நினைத்த பல காரியங்களுமே அரசாங்கத்தால் நடத்தப்பட்டுள்ளது.

அவற்றால் தமிழகம் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே வழிகாட்டக்கூடிய மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.

மகுடத்தில் உள்ள மாணிக்கம் போல ஒரு சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இந்தியாவிலேயே 69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது. பெண்களுக்கு சொத்துரிமை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், நிலச் சீர்திருத்தம், சமத்துவபுரம், இருமொழிக் கொள்கையைக் கொண்டு வந்தது. தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியது. அருந்ததியர் உள்இடஒதுக்கீடு என பலவற்றை திராவிடக் கட்சிகள் செய்துள்ளன. தமிழ்நாடு கல்வி, பொருளாதாரம், சமூக வாழ்க்கையில் இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட பல மடங்கு உயர்ந்தே உள்ளது. இன்னும் தெரிந்து கொள்ள வேண்டுமானால், 03.06.20 அன்று நான் முகநூலில் இட்ட பதிவுகளைப் பார்த்துவிட்டு உண்மையிலேயே திராணியிருந்தால் அவற்றில் ஒன்றுக்காவது நாம் தமிழர் கட்சியினர் மறுப்பு எழுதட்டும்.

தமிழ் காட்டுமிராண்டி மொழி:

தேஞ்ச ரெக்கார்டு போல 'தமிழை காட்டுமிராண்டி மொழி என பெரியார் கூறினார்' என விவாதத்தில் குறிப்பிடுகிறார். அதை யாருமே இன்றுவரை மறுக்கவில்லை. இனிமேலும் மறுக்கப் போவதில்லை. ஏனெனில் அவர் சொன்னது உண்மை. ஆனால் அதே பெரியார் தான் உலகம் முழுவதும் இன்று எழுதப்படும் தமிழை சீர்திருத்தியவர் என்பதை மட்டும் ஒத்துக் கொள்ளவும், சொல்ல மறுப்பதும் வெறும் காழ்ப்புணர்வன்றி வேறென்ன?

"நான் திட்டுவதால் கோபப்பட்டு நல்ல தமிழ் நூலை புலவர்கள் எழுத முன்வந்தால் அதை வரவேற்று சொந்த செலவில் அச்சிட்டுத் தருகிறேன்" என பெரியார் கூறியதை மறைப்பது ஏன்?

தமிழ் வழிக்கல்வியை கலைஞர் ஆட்சியில் 1971ல் கொண்டு வந்தபோது அதை ஆதரித்து எழுதிய பெரியாரை படிக்காதது ஏன்?

வீட்டில் கூட ஆங்கிலம் படியுங்கள் எனச் சொன்னார். அது அவனின் முன்னேற்றத்திற்காக சொன்னாரா? இல்ல தன் முன்னேற்றத்திற்காக சொன்னாரா?

நோக்கத்தைப் பார்க்காமல் வெறும் வார்த்தையை வைத்து குற்றத்தை தேடிக் கண்டுபிடிப்பது அயோக்கியத்தனமாக இல்லையா?

பச்சைத் தமிழர்

ராஜாஜிக்கு (பார்ப்பனர்) எதிராக காமராஜரை பச்சைத்தமிழர் என பெரியார் குறிப்பிட்டதன் மூலம் பார்ப்பனர்களுக்கு எதிரி தமிழே, அதை பெரியார் வார்த்தையிலேயே நிரூபித்து விட்டதாகக் கூறி விவாதத்தில் புளகாங்கிதம் அடைகிறார் கல்யாண சுந்தரம்.

1954ல் ராஜாஜி குலக்கல்வி திட்டம் கொண்டு வந்ததால் பெரியாரால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓடிய பிறகு, குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர் காமரஜர் நிற்கும்போது தான், 'பச்சைத் தமிழர் காமராஜருக்கு வாக்கு செலுத்துங்கள்; என பெரியார் பிரச்சாரம் செய்தார். இந்தத் தேர்தலில் திமுகவும் பெருந்தலைவரை தேர்தலில் ஆதரித்தது.

"குணாளா, குலக்கொழுந்தே சென்று வா குடியாத்தம். வென்று வா கோட்டைக்கு" என அண்ணா எழுதினார்.

காங்கிரஸை ஒழித்தே தீருவது என முடிவு செய்து வெளியேறிய பெரியார் தான் காமராஜரை கடைசி வரை ஆதரித்தார். காரணம் அவரது ஆட்சி அப்படிப்பட்டதாக இருந்தது.

இன்னும் ஒருபடி மேலே போய் திமுகவை ஆதரித்துக் கொண்டிருக்கும் போதே நாகர்கோவிலில் காமராஜருக்குப் பிரச்சாரம் செய்தவர் பெரியார்.

ராஜாஜி தெலுங்கு பார்ப்பனர், ஆகவே பிரச்சாரத்தில் பெரியார் பச்சைத் தமிழர் என்ற வார்த்தையை விவாதத்திற்குப் பயன்படுத்தியதை தத்துவத்தோடு போட்டு குழப்புகிறார் கல்யாணசுந்தரம்.

சூத்திரன் என பெரியார் சொன்னாரா?

"பெரியார், அவரை வேண்டுமானால் சூத்திரன் என சொல்லிக் கொள்ளட்டும். என்னை சூத்திரன் எனச் சொல்ல பெரியார் யார்?" என விவாதத்தில் கேட்கிறார்.

இந்த இடத்தில் கல்யாணசுந்தரம் அவர்கள் எப்படி பேராசிரியர் ஆனார் என்பது நமக்கு சந்தேகத்தைக் கொடுக்கிறது.

ஏனெனில் அரசியல் வாழ்க்கையில் அடிப்படை அறிவு உள்ள அனைவருக்கும் தெரியும். இந்து மதம் தான் பெரும்பாலானவர்களை சூத்திரர்களாக வைத்திருக்கிறது என்பது...

பகவத் கீதையில் கிருஷ்ணணே சொன்னதாக உள்ளது (பார்ப்பான் சூழ்ச்சியாக எழுதியுள்ளது) "சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் குணகர்ம விபாகஸ ; தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்ய்யம்"

இதன் பொருள் "நான்கு வர்ணத்தை நானே படைத்தேன். அதை நானே நினைத்தாலும் மாற்ற முடியாது" என்பதே ஆகும்.

ஒரு வர்ணம் படிக்கவும், அடுத்த வர்ணம் ஆயுதம் ஏந்தவும், மூன்றாம் வர்ணம் பொருள் சேர்க்கவும், நான்காம் வர்ணம் மேல் உள்ள மூன்று வர்ணத்தாருக்கு எவ்விதப் பலனுமின்றி ஊழியம் செய்வதற்கும் என ஏற்படுத்தப்பட்டதே வர்ணாசிரம் தர்மம்.

நாம் எப்படி இன்றளவும் சூத்திரனாக இருக்கிறோம் என்று இந்து லா -வில் உள்ளது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை தடுத்திருப்பதே சூத்திரர்களுக்கு கடவுளிடம் செல்லும் யோக்கியதை இல்லை என்ற காரணத்தை சொல்லியே ஆகும். மேலும் அவன் பேசும் பாஷை கூட நீச மொழியாக உள்ளது. ஆகவே அதற்கும் கடவுளிடத்தில் செல்ல உரிமையில்லை.

சூத்திரன் என்பதற்கு மனுதர்மத்தில் அத்தியாயம் 8 சுலோகம் 415ல் ஏழு விளக்கம் உள்ளது.

1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் 2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன் 3. பிராமணணிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன் 4. விபச்சாரி மகன் 5.விலைக்கு வாங்கப்பட்டவன் 6.ஒருவனால் கொடுக்கப்பட்டவன் 7.தலைமுறை தலைமுறையாய் ஊழியம் செய்கிறவன்.

மேற்குறிப்பிட்ட ஏழு காரணங்களில் விபச்சாரி மகன் என்பதைத் தவிர மற்ற எதுவும் நடைமுறையில் இல்லை.

ஆகவே தான் பெரியார் என்னை எவனாவது பறையனாக இருக்கிறாயா, சூத்திரனாக இருக்கிறாயா எனக் கேட்டால் தேவிடியா மகனாக இருப்பதை விட பறையனாக இருப்பதே மரியாதையானது எனப் பதிலளித்தார்.

இந்து மதத்தில் நடைமுறை வாழ்க்கையில் சூத்திர இழிவு சுமத்தப் பட்டிருப்பதாலும் இந்து மத சாக்கடையில் மூழ்கி இருப்பதாலேயே தங்கள் வீட்டில் நடைபெறும் எல்லா நிகழ்வுகளையும் பார்ப்பானை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கோவிலுக்குச் சென்றால் வெளியே நிற்கிறார்கள். ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்ய மறுக்கிறார்கள் மாறாக யாரேனும் அப்படி செய்தால் கொலை செய்யக்கூட தயாராக இருக்கிறார்கள்.

ஆக சூத்திர இழிவை சுமத்தியது பார்ப்பானும் இந்து மதமுமே ஆகும். அதை தூக்கி சுமப்பது தற்குறி தமிழர் முண்டங்களே ஆகும்.

இந்த இழிவைப் போக்க 94 வயது வரை மூத்திர சட்டியை தூக்கிக் கொண்டு பாடுபட்டவரை, சாகும்போது கூட 'உங்களையெல்லாம் சூத்திரர்களாக விட்டு சாகிறேனே' என மனம் புழுங்கியவரைப் போய் கொஞ்சமும் கூச்ச நாச்சமோ, அறிவு நாணயமோ இல்லாமல் அவர் தான் எங்களை முதன் முதலில் சூத்திரன்னு சொன்னார் என மணியரசன் பாடிய பாட்டையே பாடுவதற்கு வெட்கமாக இல்லையா?

முதன் முதலில் பெரியார் தான் சூத்திரன்னு எங்களைச் சொன்னார் என்று நிரூபித்தால் திவிக-வில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் வந்து சேர்ந்து கொள்கிறேன்.

சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாரா?

- பெரியார் யுவராஜ்