சமீபத்தில் ZEE5 OTT தளத்தில் இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள அயலி வெப் தொடர் பெரும்பாலான முற்ப்போக்காளர்கள் பெரிதும் பார்த்து வெகுவாக பாராட்டப்பட்டிருந்தது.
ஆகவே நானும் 8 பாகங்களாக வந்திருக்கும் அந்த தொடரை நேற்று பார்த்தேன். உண்மையிலேயே தொடர் மிகச் சிறப்பாக தமிழ்சமூகத்தை முன்னோக்கி நகர்த்தும் வகையில் இருக்கிறது. இயக்குனர் முத்துக்குமார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
வீரப்பண்ணை என்றொரு கிராமம் அங்கு அயலி சாமியை கும்பிடும் மக்கள். கலாச்சாரம், பண்பாடு கட்டுப்பாடு, பாரம்பரியம் என்று பெண் குழந்தைகளை வயதுக்கு வந்தவுடன் படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொடுப்பதையும், அந்த ஊரைவிட்டு நகரத்திற்கு கூட பெண்களை அனுப்பாத மிகுந்த பிற்போக்குத்தனத்தை வழக்கமாகவும் அதை தங்கள் பெருமையாகவும் கருதுகிற ஊர் ஆண்கள். அந்த கிராமத்திலிருந்து தான் வயதுக்கு வந்ததை மறைத்து, படித்து டாக்டராகத் துடிக்கும் ஒரு மாணவி என்பது தான் கதை சுருக்கம்.
தமிழ்நாட்டில் இன்றைக்கு வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்து கொடுப்பது, பெண்கள் நகரத்திற்கு கூட பயணிக்காதது, பழைய கால பஞ்சாயத்து முறைகள் எல்லாம் வெகுவாக கிடையாது என்றே சொல்லலாம். வடமாநிலங்களுக்கு வேண்டுமானாலும் இது பொருந்தும்.ஆனால் கதையின் வழியாக தொடர் பேசும் சமூகநீதி கருத்துகள் அனைத்து சமூகத்திற்கும் பொருந்தத் தக்கதாகவே உள்ளது. வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்து கொடுக்காமல் தமிழ்சமூகம் இருக்கலாம். இருந்தாலும் பெண் குழந்தைளை திருமணம் செய்து கொடுக்கும் வரை படிக்க வைப்போம் என்றும் குறைந்தபட்சம் டிகிரி படித்தால் வீட்டிற்கும் பெருமை மாப்பிள்ளை கிடைப்பதிலும் சிக்கல் இருக்காது என்பது தான் கிராமப்புற தமிழ் சமுதாயத்தின் நிலையாக இருக்கிறது.
கல்வி என்பது அறிவை பெறவும், பெருக்கி கொள்ளவும், சுயசிந்தனையை வளர்ப்பதற்கும் தங்களது சுயமரியாதை காப்பதற்கான ஆயுதம் என்றோ, எக்காலத்திலும் எவரையும் நாடாமல் வாழக்கூடிய வாய்ப்பினை வழங்கக் கூடியது என்றோ அதற்கு நம் பிள்ளைக்கு கல்வி கொடுப்பது அவசியம் என்ற கோணத்தில் படிக்க வைப்போர் மிக குறைவு என்கிற எதார்த்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
தன் மார்பு பெரிதாக இருப்பதை மறைத்து கொள்ள துணி கட்டிவிடும் தாய் மூச்சுக்கூட விட முடியாது எனும்போது "எதற்கெல்லாம் நம்மை சிந்திக்க வைக்கிறாங்க இல்ல" என்று கேட்டுவிட்டு "எனக்கு எது தேவையோ அதுதான் வசதி" என்று கூறும்போது பொது சமூகம் பெண்களின் உடையில் கலாச்சாரத்தை வைத்திருப்பதை நோக்கி கேள்வி எழுப்புகிறது.
பல தடைகளை மீறி மாவட்டத்தில் முதலிடம் பெற்றதற்கான பாராட்டு விழாவில் யார் சொன்னாலும் சரி, உங்களுக்கு சரின்னு பட்டதை மட்டும் செய்யுங்க எனும் போது யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே எனும் தந்தை பெரியாரின் கருத்துகளை அப்படியே பிரதிபலிப்பதாக இருந்தது.
மீண்டும் மீண்டும் பெண்களை கல்வியற்றவர்களாக ஆக்குவதுதான் அவர்களை அடக்கி ஆள்வதற்கான மூலம் என்பதையும் வெப் தொடர் வெகுசிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறது. வயதுக்கு வந்தவுடன் படிக்க வைக்கக் கூடாது என்பதும், பத்தாவதுக்கு மேல் பள்ளிக்கூடம் வேண்டாம் என MLA வை பார்த்து கோரிக்கை வைப்பதும், இறுதி பெண்கள் கோவிலுக்கு செல்வது பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கே என பள்ளியை அடித்து நொறுக்கி தீ வைக்கும் காட்சிகள் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.
சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை கொடுக்காதே என்பதே மனுதர்மம், அந்த மனுதர்மத்தின் படி பெண்களும் சூத்திரர்கள் தான். ஆக சூத்திர்கள் கல்வியைப் பெறுவது பார்ப்பனிய மேலாதிக்கத்தை தகர்க்கும் என மன்னர்கள் மூலமாக மனுவை சட்டமாக்கி நமக்கு 2000 ஆண்டுகளாக கல்வி எதற்காக மறுக்கப்பட்டது என்பதை மறைமுகமாக இந்த தொடர் சொல்கிறது.
பெண்கள் சுதந்திரமான ராணி ஆகனும் என்ற பெரியார், ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அந்த சமூகத்தின் பெண்களின் வளர்ச்சியை கொண்டே கணக்கிட முடியும் என்ற அம்பேத்கரும் நம் சிந்தனைக்கு தானாக வருகிறார்கள்.
நம்ம உள்ள போகும் போது கடவுளை தூக்கி வெளிய வச்சிடுவான் என்ற வசனமும் எந்த கடவுளும் ஆண்களை வா, பெண்களை வராதே என்று சொல்லவில்லை என்று கூறவில்லை என சொல்லிவிட்டு அப்படி சொல்லியிருந்தால் அது கடவுளே இல்லை என்று சொல்வதும் தீப்பொறியாக நாத்திகம் வசனங்களாக இருக்கிறது.
இறுதிக் காட்சியில் அத்தனை பெண்களும் கூடி கோவிலுக்கு உள்ளே நின்று கவுரத்தை பெண்களின் தொடைக்கு நடுவில் ஏன் தேடுகிறீர்கள் என கேட்பதும், கவுரவத்தை காப்பாத்த ஒன்னு நீ சாகனும், இல்ல பொண்ண கொல்லனுமா என கேட்பதும், உன்னோட கவுரவுத்துக்காக என்ன பெத்துட்டு, உன்னோட கவுரவத்த காப்பாத்த சொத்து சேத்துட்டு, இப்போ உன்னோட கவுரவத்த காப்பாத்த அருவாள தூக்கிகிட்டு என்ன கொலை பண்ண நிக்குறியே? நீ யா என்ன பாசமா வளர்த்த எனும் பேசும் போது ஆட்டுக்கு கசாப் கடைக்காரன் இலை தழையும், தண்ணியும் நல்லா கொடுத்து தன்னோட தேவைக்கு கழுத்தை வெட்டுவது போல தான் அப்பாக்கள் பெண் குழந்தைகள் மீது வைத்திருக்கும் பாசமாக இருக்கிறது என எனக்கு தோன்றியது. ஜாதி ஆணவக்கொலைகளை மறைமுகமாக கடுமையாக இயக்குனர் சாடியிருக்கிறார்.
ஜாதியாக அணிதிரட்டுவதையும், தங்களது கட்டளைக்கு அடிபணிபவர்களாகவும், பிற்ப்போக்குத்தனத்திலிருந்து வெளியே வந்துவிட்டால் நமக்கு ஆபத்து என மக்களை வைத்திருக்கும் வில்லன் கதாபாத்திரத்தை குரங்கு கூட்டம் என வர்ணித்து இவர்கள் பின்னால் செல்லாமல் இருந்தாலே நாம் நன்றாக இருக்கலாம் என கூறும்போது இந்துத்துவா கும்பல்கள் பின்னால் செல்ல வேண்டாம் என இயக்குனர் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.
மொத்தத்தில் ஜாதி ஒழிப்பு, பிற்ப்போக்குத்தனம், பெண்கல்வி, ஆணவக் கொலைகள், இந்துத்துவா கும்பல்களுக்கு எதிரான ஒரு ஆகச் சிறந்த படைப்பாகவும், அதேநேரம் திரைப்படமாகவும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களோடும் ரசிக்கும் வகையிலும் மிகச் சிறப்பாக எடுத்துள்ள இயக்குனர் முத்துக்குமார் அவர்களுக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்.
இதுபோன்ற தொடர்களை தமிழ்ச் சமூகம் கொண்டாடி ஆதரவளிக்க வேண்டும்.
- பெரியார் யுவராஜ்