அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. ஜார்ஜ் பிளைட் என்ற கருப்பினத்தவர் 20 டாலர் கள்ள நோட்டுகளை கடையில் பயன்படுத்தியதாக பொது இடத்தில் வைத்து அவரின் தலையின்மீது 8 நிமிடங்கள் முட்டிக்காலை வைத்து அழுத்தி மூச்சு திணறல் உண்டாக்கி காவல்துறை அதிகாரிகளால் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.
ஒருவேளை அவர் குற்றம் செய்திருந்தால் அவர்மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டனை வாங்கி தந்திருக்க முடியும். மாறாக நடுரோட்டில் வைத்து கொலை செய்யக்கூடிய மனநிலை என்பது அதிகாரம் மட்டுமல்ல கருப்பு நிறத்தின் மீது இருக்கும் ஒவ்வாமையும் இனவெறுப்பும் தான். அவர் கடைசியாக உச்சரித்த வார்த்தைகள் இன்று உலகம் முழுக்க அடக்கப்படும் குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கிறது. "ஐ கான்ட் பிரீத்" என்னால் மூச்சு விடமுடியவில்லை.
மேற்படி சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து பிரச்சனையை தணிப்பதற்கு பதிலாக அதிபர் டிரம்ப் கருப்பின மக்களை மேலும் மேலும் போராட்டத்தை நோக்கி மக்களை அணிதிரள வைக்கும் ஏற்பாடாக தொடர்ந்து தூண்டிவிடும் வகையில் பேசிவருகிறார். போராடுபவர்களை நாய்கள் என்றும், கொள்ளை கும்பல் என்றும், ரவுடிகள் என்றும் தொடர்ச்சியாக தனது வெள்ளைநிற இனவெறியை விடாமல் கக்கிக்கொண்டே இருக்கிறார். அவர் ஆட்சிக்கு வரும்போத இனவெறி பேச்சுடனேதான் தனது பயணத்தை தொடங்கினார். அது அவர் மனதில் இனவெறுப்பு எப்போதும் இருக்கும் என்பதற்கு சமீபத்திய அவரின் நடவடிக்கைகள் உதாரணம். ஒரு வேளை இப்படி தொடர்ச்சியாக பேசுவதன் மூலம் கருப்பின மக்களையும் வெள்ளையின மக்களையும் இருபகுதியாக பிரித்து அதன் மூலம் வருகின்ற அதிபர் தேர்தலில் வாக்கு அரசியலுக்கு பயன்படுத்தும் குறுக்கு புத்தியாகவும் டிரம்பின் பேச்சு இருக்கலாம். அதற்கு எல்லா வாய்ப்புகளும் உண்டு. உலகம் முழுக்க பாசிஸ சிந்தனையாளர்களின் குரூர வடிவம் உணர்ச்சிகளை கிளரி அதன்மூலம் அரசியல் ஆதாயமடைவதே.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதான காரணம் கருப்பினத்தவர்கள். ஆப்பிரிக்கா காடுகளில் நிம்மதியாக இருந்த பழங்குடிகளை, மிருகங்களை வேட்டையாடுவதைப் போல மனித வேட்டை நடத்தி இழுத்துக் கொண்டு வந்தவர்களே கருப்பினத்தவர்கள். அப்படி வேட்டையாடி கொண்டு வந்த மனிதர்களை பொது இடத்தில் வைத்து ஏலம் விடுவதும் அதன்பின் அவர்கள் ஏலம் எடுத்தவர்களின் அடிமையாகி அவரின் வாரிசுகள் அனைத்துமே அடிமையாக்கப்பட்டர்கள்.
வெள்ளையர்களின் உழைப்பு சுரண்டலுக்கு அடிபணியாமலிருந்த கருப்பினத்தவர்களை கொலைகளின் மூலம் அச்சுறுத்தி அதற்காக பெரும் நரவேட்டை நடத்தி தங்களது நாட்டின் வளர்ச்சியை உண்டாக்கினார்கள். துவக்கத்தில் கருப்பினத்தவர்களை மனித வகையமைக்குள்ளையே அமெரிக்கர்கள் வைத்துக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் "மிஸ்ஸிங் லைன்" என்ற ஒரு மனிதமிருக கண்காட்சியை நடத்தினார்கள். "ஓடா பெங்கா" என்ற கருப்பினத்தவரை மிருகத்தை போல் கூண்டில் அடைத்து கண்காட்சி நடத்தினார்கள். விலங்கிலிருந்து மனிதனாக பரிணாமம் அடைவதற்கு முன்னத அப்படியே நின்று போனவர் இவர் என்று "ஓடபொங்காவை" அவமானப்படுத்தினார்கள். இதுதான் அமெரிக்கர்கள் கருப்பினத்தவரை கையாலும் முறை. அந்த கண்காட்சியில் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு அப்போது நல்ல வருவாய் கிடைத்தது.
இப்படியான பல்வேறு கொடுமைகளுக்கு எதிராகத்தான் பல ஆண்டுகளாக மார்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ், பிரெடெரிக் டக்ளஸ் போன்ற ஏராளமான தலைவர்கள் போராடி அவர்களின் உயிர் தியாகங்களின் மூலம் சிற்சில உரிமைகளை வென்றெடுத்தார்கள். "எனக்கொரு கனவு இருக்கிறது" என்ற மார்டின் லூதர் கிங்கின் பேச்சானது கருப்பின மக்கள் வெள்ளையின மக்களோடு எந்த வித்தியாசமான மனநிலையும் இல்லாமல் சமமாக வாழ வேண்டும் என்பதே அந்த நீண்ட பேச்சின் மையம். ஆனால் அந்த கனவு பல ஆண்டுகள் கடந்த பின்பும் கூட கனவாகவே நீள்கிறது.
அமெரிக்காவில் வெள்ளையர்கள் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் கருப்பினத்தவர்களின் மீது வன்மத்தோடு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக உலகமே கவனித்து வருகிறது. அதே சமயம் கருப்பினத்திற்கு ஆதரவாக சில வெள்ளையினத்தை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களும் களத்தில் போராடி வருகின்றனர்.
அமெரிக்காவில் வெள்ளை இனவெறிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஏராளம். மிக சாதாரணமாக கருப்பின மக்கள் மீது தாக்குதல் நடத்துவதும் கொலை செய்வதும் கடந்த காலம் முதல் தொடர் கதையாகவே இருந்தது.. 1919 ஆண்டு வில்பிரவுன் என்ற கருப்பினத்தை சேர்ந்தவர் வெள்ளையின பெண்மணியை அடித்ததின் காரணமாக புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார். கைது செய்யப்பட்டவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒமாஹா பகுதியில் பெரும் கூட்டம் கூடி , "ஒரு வெள்ளையனை கருப்பினத்தவன் அடிப்பதா? அது எங்களுக்கு இழிவு " என்று வில்பிரவுனை வைத்திருந்த சிறைமுன்பு ஏராளமான வெள்ளை இனவெறி கும்பல்கள் சேர்ந்து கலவரம் செய்தனர். சமாதானம் பேசவந்த மேயரும் சுடப்பட்டார். இந்த சம்பவத்தில் ஏராளமானவர்கள் கொலை செய்யப்பட்டனர். வேறுவழியின்றி வில்பிரவுன் அந்த கும்பல்களிடம் ஒப்படைக்கப்பட்டு அங்கேயே சுட்டு கொலை செய்தது மட்டுமல்ல எல்லா கருப்பினத்தை சேர்ந்தவர்களையும் அச்சம் கொள்ள வைக்க வேண்டும் என அவனை கட்டி தொங்கவிட்டு உடல் சிதையும் வரையில் சுட்டனர். இந்த இனவெறுப்பு மனநிலை நூற்றாண்டுகள் தாண்டியும் தொடர்கிறது என்பதுதான் அவலம். காலங்கள் மாறினாலும் இன்னும் இனவெறி முகம் அவ்வப்போது மூர்க்கமாக வெளிப்படுவதை கருப்பினத்தவர்கள் கவனித்துக் கொண்டே தான் இருந்தார்கள். ஜார்ஜ் பிளைட் கொலை அவர்களின் போராட்டதற்கு தற்போது விசையாக முன் வந்துள்ளது.
கருப்பினத்தவர்கள் மீது வெள்ளையர்கள் கும்பலாக சேர்ந்து கொலை செய்யும் வழக்கம் இரு நூற்றாண்டுகளாக இருந்தது . இந்த கும்பல் கொலையை தடுக்கும் விதமாக இதுவரை அமெரிக்கா செனட் சபையில் 1918 முதல் இதுவரை 200 முறை "கும்பல் கொலைக்கு எதிரான" சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டும் இதுவரை நிறைவேறவில்லை. முதல் முறையாக கும்பல் கொலைகளுக்கு எதிரான மசோதா 100 ஆண்டுகளுக்கு முன்பு குடியரசுக் கட்சி உறுப்பினர் லியோனிடாஸ் டயர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 2018 ஆண்டு இந்த மசோதாவை மீண்டும் கமலா ஹாரிஸ் என்பவர் கொண்டு வந்தார் நிறைவேறவில்லை. இந்த மசோதா நிறைவேற 60செனட் உறுப்பினர்கள் ஆதரவு தேவை ஆனால் 16மட்டுமே ஆதரவு தெரிவித்ததாக அப்போது குறிப்பிட்டார்.
1882க்கும் 1968க்கும் இடைப்பட்ட காலத்தில் 4,742 பேர் இத்தகைய கும்பல் கொலைகளால் உயிரிழந்ததாகவும், இந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 99 சதவீதம் பேர் தண்டனையில் இருந்து தப்பியதாகவும் இந்த மசோதா வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்தது.
தற்போது அமெரிக்காவில் வாழும் கருப்பினத்தவர்களின் இந்த உக்கிரமான போராட்டம் வெறும் ஜார்ச் பிளைட்டின் கொலைக்கு நியாயம் கேட்டு நடக்கும் போராட்டம் மட்டுமல்ல பல ஆண்டுகளாக நடக்கும் அடக்குமுறைக்கு எதிரான தங்களது சமர்.
அமெரிக்காவில் கருப்பினத்தவர்களை கையாளும் இனவெறுப்புக்கு சிறைக்கைதிகளின் எண்ணிக்கை வைத்தே நிலைமையை உள்வாங்கிட முடியும். 2017 கணக்கெடுப்பின் படி அமெரிக்காவில் வாழும் கருப்பின மக்கள் தொகை எண்ணிக்கை 12% ஆனால் சிறையில் இருக்கும் மொத்த கைதிகளின் எண்ணிக்கையில் 33 சதமானவர்கள் கருப்பினத்தவர்கள்.. ஆனால் 64 % இருக்கின்ற வெள்ளையர்களின் மக்கள் தொகையில் சிறையில் இருக்கும் மொத்த கைதிகளின் எண்ணிக்கையில் 30%மட்டுமே. இந்த வித்தியாசமே அங்குள்ள சூழலை உள்வாங்கிட முடியும்.
இந்த பாகுபாட்டு அணுகுமுறை அமெரிக்காவில் எல்லா துறைகளிலும் இருக்கிறது என்பதே கருப்பின மக்களின் தொடர் குற்றச்சாட்டு. தற்போது கொரனோவில் இறந்தவர்களும் கருப்பின மக்களில் வயதானவர்களே அதிகம் என்று தகவல் வருகிறது. பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையில் இருப்பவர்கள் கருப்பின மக்களே அதனால் தான் கொரனோ காலத்தில் மருத்துவம் பார்க்க முடியாமல் பெரும் அவஸ்த்தைக்கு உள்ளானதாக குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ச்சியாக நடைபெற்று வந்த பாரபட்ச அணுகுமுறையின் உச்ச வடிவமே ஜார்ஜ் பிளைட் கொலையும் அதனை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களும்.
தற்போது டிரம்ப் வெறி நாய்களை விட்டு கடிக்க விடுவேன் என்று சொல்வதும் அதனை காவல்துறை அதிகாரிகளை வைத்து அமுல்படுத்தியதும் அவரின் இனவெறியின் கோர முகம். கலவரம் நிற்க ஒரேவழி "டிரம்ப் கொஞ்சம் வாய மூடுறயா" என்று ஒரு காவல்துறை அதிகாரி ஒலிபெருக்கியில் வெளிப்படையாக சொன்னார். இன்னொரு காவல்துறை அதிகாரி அதிபரின் இனவெறுப்பு குறித்து நீண்ட பேச்சை பதிவு செய்து பொது வெளியில் பகிர்கிறார். இந்த போராட்டம் எங்கு போய் நிற்கும் என கணிக்க முடியாது. ஆனால் இனவெறுப்பின் உச்சத்தில் இருக்கும் டிரம்ப் இதனை பெரும் இரத்த வெள்ளத்தில் தான் முடித்து வைப்பாரோ என்ற அச்சம் எல்லோருக்கும் உண்டு.
இனவெறுப்பு என்பது அமெரிக்காவோடு மட்டுமே வைத்துப்பார்க்க வேண்டியதில்லை. அதனை அப்படியே இந்தியாவோடும் மிக கச்சிதமாக பொருந்தி பார்க்க முடியும். அமெரிக்காவில் நடக்கும் இனவெறுப்பு போல் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய வெறுப்பும் இந்தியாவில் தலைத்தோங்கி உள்ளது. கும்பல் கொலைகளை தினசரி பார்த்து வருகிறோம். அதிகாரத்திலிருந்து அடிமட்டம் வரை இந்த மதவெறுப்பும் கும்பல் கொலையும் நீக்கமற படர்ந்து இருக்கிறது.
1987 மேமாதம் உத்திரப்பிரதேசத்தில் ஹாஷிம்புராவில் வீடுவீடாக சென்று இளம் வயது இஸ்லாமிய இளைஞர்களை மட்டுதேடி அவர்களை மட்டும் தனியாக பிரித்து 42 பேரை அழைத்து சென்று ஏன் எதற்கு என்று எந்த காரணமும் சொல்லாமல் என்கவுண்டர் செய்ததை முன்னாள் காவல்துறை ஐஜி விபூதி நாராயண் ராய் மனசாட்சிக்கு பயந்து 22ஆண்டுகள் கழித்து நடந்த சம்பவங்களை புத்தகமாக பதிவு செய்துள்ளார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த ஒரு நிகழ்வு போதும் இப்படி பல ஆயிரம் சம்பவங்களை இந்தியாவில் குறிப்பிட முடியும். அரசு அதிகாரத்தில் உள்ளவர்கள் முதல் எளிய மனிதர்கள் வரை இஸ்லாமிய வெறுப்பு தண்ணீர் ஊற்றி வளர்க்கப்பட்டு வருகிறது. டெல்லியில் இரயிலில் பயணம் செய்த பதினாறு வயது சிறுவனை அவன் இஸ்லாமியன் என்ற காரணத்துக்காக அடித்து கொலை செய்யப்பட்ட சமூக உளவியல் மிக ஆபத்தானது. . ஒரு சிவில் சமூகமே இப்படியான கொலையில் ஈடுபடுவது வெறுப்பு மனநிலையை இயல்பான செயலாக இந்திய மனிதமனம் தகவமைக்கப்பட்டு வருகிறதை உணரவேண்டும். இந்தியாவில் இஸ்லாமியர்களும் தலித்துகளும் அவமானத்தின் புள்ளிகளாகத்தான் எப்போதும் இந்துமத வெறியர்களுக்கு இருக்கிறார்கள். சாலையில் நடந்து போக்ககூடியவரை நிறுத்தி "ஜெய் ஸ்ரீராம் " என்று சொல்ல சொல்லி அடிப்பதும், மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் எனச்சொல்லி தலித் மற்றும் இஸ்லாமியர்களை கொலை செய்வதும் அமெரிக்கா இனவெறிக்கு இணையான வெறுப்பு மனநிலை கலாச்சாரம்.
இந்திய கலாச்சாரத்தை உலகமே வாய்பிளந்து பார்க்கிறது என்று சொல்வதெல்லாம் தன்னைத்தானே முதுகு சொரிந்து கொள்வது. அவர்கள் சொல்லும் கலாச்சாரம் பார்ப்பின கலச்சாரத்தை மட்டுமே குறிக்கிறது. அதைத்தவிர்த்து இருக்கின்ற பல்வேறு கலாச்சார பண்பாட்டுக் கூறுகளை பார்ப்பனிய பனியா அதிகார மையங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. பார்ப்பினியமே இந்திய தேசிய கலாச்சாரம். வர்ணாசிரமே ஈடில்லா நீதிநெறி என்பதே அவர்களின் நிலைபாடு.
அமெரிக்க சிறைகளில் இருக்கும் கருப்பின மக்கள் இருக்கும் அதே எண்ணிக்கை நிலையில்தான் இந்திய சிறைகளில் இஸ்லாமிய எண்ணிக்கையும் உள்ளது. இஸ்லாமிய மக்கள் தொகைக்கும் சிறைவாசிகளின் எண்ணிக்கைக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையேயான இடைவெளியாக இருக்கும்.
இந்திய சிறைகளில் இஸ்லாமியர்களும் தலித்துகளும் மட்டுமே மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு மேலாக சிறையில் இருப்பவர்கள். பல பத்தாண்டுகளாக வெறும் விசாரணை கைதிகளாக வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை ஏராளம். இஸ்லாமிய வெறுப்பு என்பது மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே சிறைகளில் இருக்கிறது. அது இப்போது இன்னும் கூர்மையடைந்துள்ளது. இங்கு எந்த கட்சி ஆட்சி செய்கிறது என்பது முக்கியம் அல்ல எந்த தத்துவத்தின் கீழ் ஆட்சி செய்யப்படுகிறது என்பதே முக்கியம். அநேகமாக பல ஆண்டுகளாகவே இந்துத்துவ தத்துவமே இந்தியாவில் ஆட்சி செய்து வருகிறது என்பதற்கு ஹாஷிம்புரா சம்பவமே சான்று. அது இந்திய சிறைகளில் கண்கூடாக காணலாம்.
மகாராஷ்டிரா தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை எண்ணிக்கைவிட சிறையில் இருக்கும் மொத்த கைதிகளின் எண்ணிக்கையோடு ஒப்பீடு செய்யும் போது மூன்று மடங்கு அதிகமான இஸ்லாமியர்கள் சிறைக்கைதிகளாக இருப்பதாக தேசிய குற்றப் பதிவேடு ஆவணம் சொல்கிறது.
தேசிய குற்றப் பதிவேடு ஆவணத்தின் அடிப்படையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் வாழும் பத்து மாநிலங்களில் வரிசைப்படுத்திய போது மொத்த இஸ்லாமியரகள் எண்ணிக்கை 14.2% சதம். ஆனால் அந்த பத்து மாநிலங்களில் உள்ள மொத்த சிறை வாசிகளில் 20.9% சதமானவர்கள் இஸ்லாமிய சிறைவாசிகளாக இருக்கிறார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஆறு சதவீதம் அதிகமாக உள்ளார்கள் என்று குறிப்பிடுகிறது.
மகாராஷ்டிராவில் இஸ்லாமிய மக்கள் தொகை 12% ஆனால் சிறைகளில் விசாரணை கைதிகளாக இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கையில் 30% வீதமானோர் இஸ்லாமியர்கள். மேற்கு வங்காளத்தில் 27% இஸ்லாமிய மக்கள் தொகையில் மொத்த சிறைக்கைதிகளில் 47% மானவர்கள் இஸ்லாமியரகள் என்ற அதிர்ச்சி செய்தியையும் குறிப்பிடுகிறது. அதாவது மக்கள் தொகையில் சரிபாதி. இதில் வங்காளத்திலிருந்த வந்த இஸ்லாமியர்களும் சிலர் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 6% இஸ்லாமிய மக்கள் தொகையில் மொத்த விசாரணை சிறைக்கைதிகளில் 16% இஸ்லாமியரகள். இதில் தண்டனை பெற்றவர்கள் மொத்த சிறைவாசிகளில் இஸ்லாமியர்கள் மட்டுமே 17% என்ற அதிர்ச்சியும் உள்ளது. இதுதான் இந்திய சிறைகளில் இருக்கும் இஸ்லாமிய சூழல் அதனை அப்படியே எல்லா இடங்களிலும் பொருத்தி பார்க்கலாம்.
இந்தியாவில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டு சட்டத்திற்கு எதிராக பெரும்பாலும் இஸ்லாயர்களே போராடினார்கள் அது இஸ்லாமியர்களுக்கான பிரச்சனை மட்டுமே அல்ல எல்லோருக்குமானது என்பதை அஸ்ஸாம் முகாமில் 12லட்சம் இந்துக்கள் இருப்பதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும். நாடு முழுக்க அமுல்படுத்தப்பட்டால் உடனடியாக அடக்குமுறைக்கு உள்ளாகுவது இஸ்லாமியர்கள். அவர்களுக்கு குடியுரிமை நிருபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று தனியாக பிரித்து முகாமில் அடைக்கும் ஏற்பாடு நடைபெறும்.. அதனால் தான் அவர்கள் யார் தயவையும் எதிர்பார்க்காமல் களத்திற்கு வந்தனர். இங்கு கொண்டுவரப்பட்ட சட்டமானது ஹிட்லரின் அதே குடியுரிமை முறை. ஆஸ்விட்ச் முகாமில் யூதர்களையும் ஜனநாயகவாதிகளையும் குடியுரிமை நிருபிக்கவில்லை என்று முகாமில் அடைத்து விஷமருந்தை புகைவழியாக கொடுத்து லட்சக்கணக்கான உயிர்களை கொலை செய்தார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொடர்ச்சியாக இந்திய இஸ்லாமியர்கள் மீது தொடுக்கப்பட்ட வன்மத்தின் எதிர்வினையே பலமான சிஏஏ எதிர்ப்பு போராட்டம். அமெரிக்காவிலும் அதேதான் தங்களது அடக்குமுறைக்கு எதிரான அமைதியின் வெடிப்பே ஜார்ஜ் பிளைட்டின் கொலை. இருநாடுகளிலும் தெருவுக்கு வந்தவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகத்தினரே.
இனவெறி மதவெறி இந்தியாவில் சாதிவெறி இம்மூன்றும் மாற்று சமூக நபர்களின் மீது வன்மத்தையே உமிழும். அமெரிக்காவில் நடக்கும் பெரும் போராட்டங்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் ஒரு சமூகத்தின் எதிர் நடவடிக்கையே. இப்படி உலகம் முழுக்க பெரும் வெடிப்புகள் நடந்துள்ளது.
எல்லா உயிரினங்களும் ஒரு கட்டத்தில் அதன்மீது நடத்தப்படும் ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும்,இன்று அமெரிக்கா. நாளை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் எந்த பகுதியில் வேண்டுமானாலும் இப்போராட்டங்கள் நடக்கலாம் என்பதே விஞ்ஞானம். அதற்கு எந்த நாடும் விதிவிலக்கல்ல..
- அ.கரீம்