அந்த குயில் கத்துகிறது
பலம் அனைத்தும் குவித்து
உரக்க.

மரத்தின் மீதும்
மலையின் மீதுமாய்
ஏறி நின்று
கத்துகிறது
யாருக்கும்
கேட்டதாய்த் தெரியவில்லை.

நாம் கத்துகிறோமா
இல்லை வாய் மட்டும்
அசைகிறதா
அதற்கே
சந்தேகம்.

அதன் தலைக்குமேல்
வட்டமடித்த பருந்து
எதற்கெடுத்தாலும்
புலம்பும் சாதியென
எள்ளுகிறது

குயில் விடுவதாயில்லை
உச்சத்தில் நின்று
கூவிட
மாய கையொன்று
அதனைத் தள்ளி
சிரிக்கிறது

கதறலை யாரும்
சட்டை செய்யாததால்
நொந்து
தீயின் நாவையது
தீண்டுகிறது.

அந்த பைத்தியக்கார
குயிலிடம்
எப்படிச்
சொல்வது

உனது கதறலை
ரசிக்கிறது
தள்ளிவிட்ட
மநு
பறவையொன்று...

- அ.கரீம்