பொதுவாகவே காற்றானது மனித உயிர்நாடியாக விளங்குகிறது. பிராணவாயு, மனிதனுக்குத் உயிர் வாழத் தேவைப்படுகிறது. அபான வாயு தாவரங்களுக்கு உயிர்வாழ உணவு தயாரிக்கத் தேவைப்படுகிறது என்று பள்ளி செல்லும் சிறார்களுக்குப் புத்தகங்கள் வழியாகக் கற்பிக்கப்படுகின்றது.

காற்று மண்டலத்திலிருந்து வீசும் காற்றைத் திசைவழி வைத்துப் பெயரிட்டனர் நந்தமிழர்கள்! தெற்கிலிருந்து வீசுவது தென்றல். கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல் (உவர்க்காற்று), மேற்கிலிருந்து வீசுவது கோடை. வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை. ஏன் இவ்வாறு பெயரிட வேண்டும்? நோக்கின் ஞாயிற்று (சூரியனுடைய)க் கதிர்கள் கடலலைகளில் உள்ள உப்புக்காற்றை வெப்பக்கடத்தல் மூலம் கொண்டு வருவதால் கொண்டல் (நடுப்பகற்பொழுதின் ஞாயிற்று வெப்பம் மேற்கேயுள்ள மலைகளின் வெப்பக்காற்றைக் கொண்டுவருவதால் கோடைக் காற்று. (கோடு-மலை, அடை-அடைந்து) மாலையில் ஞாயிற்றின் வெப்பங் குறைந்து, மலர்க்காடுகளிலும் சோலைகளிலும் உள்ள பூக்களிலிருந்து தேன் மகரந்தம் நுழைந்து நல்ல நறுமணத்துடன் கூட காற்று வருவதால் தென்றல் என்றும் அழைக்கப் பெறுகின்றது. வடதிசை மாறிய ஞாயிற்றால் வாடி, உருக்குலைந்த இமயப் பனிக்காற்றானது வடக்கிலிருந்து நமக்கு வீசுவதால் வாடை என்றானது. இவ்வாறு, அறிவியல் அறிவோடும் இயற்கை இயைபோடும் வாழும் நம் தமிழரைத் தமிழ் மொழியை நம் சிறார்களுக்கும் உலகோர்க்கும் கற்றுக் கொடுப்பது நம் கடனல்லவா?

“ஊதக் காத்து வீசயிலே குயிலுங்க கூவயில கொஞ்சிடும் வேளயிலே வாடைதான் என்னை வாட்டுது” என்று ஓர் திரையிசைப் பாடல் உண்டு. இதன் பொருள், தென்றல் காற்றானது மகரந்தங்களையும் தேனையும் ஊதி வரும் மாலைப் பொழுதில் குயில்கள் புணரத் தன் இணைகளை அழைக்கும் இனிய பொழுதில் உன் பிரிவானது வாடைபோல் என்னை வாட்டுகின்றதே! என்பதாம்.

நெடுநல்வாடை: கோல நெடுநல் வாடை என்று தமிழ் கூறு நல்லுலகம் புகழும் இந்நூலை நக்கீரர் இயற்றினார். 188 அடிகள் கொண்ட அகவற் பாடல்களால் அமைந்த நூல். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனைப் பாடிய நூலாகும். இந்நூல் அகப்பாடல் நூலா அல்லது புறப்பாடல் நூலா என்று வேறுகாட்ட இயலாநிற்பது. இருப்பினும், “வேம்புதலையாத்த நோன்காழ் எஃகம்” எனப் பாண்டியனது அடையாள மாலையைக் குறிப்பிடுவதால் இஃது புறப்பாடல் நூலானது.

வாடைக்காலத்தில் மனித உடலானது வெப்பத்தை நாடுகிறது. தலைவன் தலைவியர் மெய்யுறு புணர்ச்சியை நாடுகின்றனர். நெடுநல்வாடைத் தலைவன் (பாண்டியன்) போர்ப்பாசறையில் இருக்கிறான். அவனது தலைவி (பாண்டியன் தேவி) பிரிவால் ஓவியப்பாவை போல அரண்மனையில் மிக்குகாமம் மேலிடத் தலையணையில் கண்துஞ்சாது, தலைவனையே நினைந்து வாடைக்கு ஆற்றாது வாடுகின்றாள். குழந்தைகள் முதல் முதியவர்கள் ஈறாக யாவரும் தீக்காய்வார்கள். இதனை வள்ளுவரும் திருக்குறளில்,

“அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்!” (குறள்:691)

என்கிறார். வாடைக்கு கூதிர் என்று மற்றொரு பெயரும் உண்டு. “கூ” என்பது மிக்க குளிர்ச்சி என்பதாகும். நீண்டு காமத்தைத் தூண்டும் வாடை நெடுநல்வாடை.

“வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
வார்கலி முனைஇய கொடுங்கோற் கோவல
ரேறுடை யினநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம் பெயர் புலம்பொடு கலங்கிக் கோட,
னீடிதழ்க் கண்ண நீரலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉநடுங்க
மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை
கன்று கோ ளொழியக் கடியவீசிக்
குன்று குளிரக் கூதிர்ப் பானாட்”
(நெடுநல்-1:12)

இதன்பொருளாவது, ஞாயிறு வடதிசை நோக்கிச் செல்ல இந்நிலம் குளிரப் பனியானது உண்டாகிறது. மழைபொழியாது சும்மா கிடந்த வானம். புதிதாக மழையைப் பெய்தது. ஆடுமாடுகளை மேய்த்துப் பராமரிக்கும் கோவலர்கள் (இடையர்கள்). ஆடுமாடுகளை மேட்டு நிலத்தில் கொண்டுபோய் அடைய வைத்தார்கள். கைகால்கள் நடுங்க கண்களில் நிரம்பிய பீளையைக் கூடக் கழுவாது உடலை வருத்தும் வாடையைத் தணிக்கக் குடலை மாட்டிக் கொண்டு கூதற் காய்ந்தார்கள்.

வாடைக்கு ஆற்றாது ஆடுமாடுகள் மேய்வதை மறந்து நின்றன. பறவைகள் கிளைகளில் படியாமல் கால்கள் விரைத்துத் தடுமாறி வீழ்ந்தன. கன்றுகள் தன்தாயிடம் பாலூட்ட மறந்தன. குன்றுகள் குளிரும்படியாகக் கூதிர்(வாடை) நெடுநாள் நீடித்தது.

aavudaiyaar kovil sculptureமேற்காணும் நெடுந்தூண் சிற்பக்காட்சி இந்நெடுநல் வாடைக்காட்சியை நினைவூட்டுகின்றது. இக்காட்சி ஆவுடையார்கோயில் (திருப்பெருந்துறை) அருள்மிகு ஆளுடைய பரமசாமி திருக்கோயில் தூணில் உள்ளது. பழந்தமிழ்ப் பண்பாடுகளைப் பாதுகாத்தலும் பதிவு செய்தலும் நங்கடனே!

- பனையவயல் முனைவர். கா.காளிதாஸ்