முந்தைய பகுதி: ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன?

சுலைமானியின் மீதான தாக்குதல் செய்தி வெளியானவுடன், போர் குறித்த அச்சம் உலகெங்கும் பரவியது. ஏனெனில் மத்திய கிழக்கின் எண்ணெய், உலகின் உற்பத்தி மற்றும் வாழ்க்கையின் அச்சாணி. அதில் ஏற்படும் சிறுபாதிப்பும் நாம் வாங்கும் காய்கறி, பலசரக்கு சாமான்கள், வேலைவாய்ப்பு வரை அனைத்தையும் பாதிக்கும் தன்மை கொண்டது. ஆனால் இருவருமே போரில் ஈடுபடும் சூழலில் இல்லை. அப்படி போரில் ஈடுபட்டாலும் யாரும் வெற்றி பெற முடியாது.

அமெரிக்காவின் கடற்படை மற்றும் விமானப் படை உலகின் மிக வலியது. அதனை எதிர்கொள்ளும் ஆற்றல் ஈரான் ராணுவத்திடம் இல்லை. நிமிடத்தில் அதன் போர் விமானங்களும், ஏவுகணைகளும் ஈரானை தரைமட்டமாக்கி விடும். அதன் பொருள் அமெரிக்காவிற்கு எந்த சேதத்தையும் ஈரானால் ஏற்படுத்த முடியாது என்பது அல்ல. அமெரிக்காவின் ராணுவ நிலைகளும், போர்க் கப்பல்களும் ஈரானைச் சுற்றியே உள்ளன. அவை அனைத்தும் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் எல்லைக்குள்ளேயே இருக்கின்றன. ஈரானிடம் குறைந்த (200-400KM) தொலைவு இலக்குகள் முதல் நீண்ட தொலைவு (2000 KM) இலக்குகள் வரை தாக்கும் ஏவுகணைகள் உள்ளன. அதன் துல்லியத் தன்மையையும், நீண்ட தூரம் தாக்கும் திறனையும், ஈரானில் இருந்து சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் நிலைகள் மீது தாக்கி நிரூபித்திருக்கிறது. அதோடு ஈரான் பல அடுக்கு விமான மற்றும் ஏவுகணை எதிப்பு சாதனங்களை (air defense systems) சொந்தமாக உருவாக்கி இருக்கிறது.

us troopsசமீபத்தில் நீண்ட தூரத்தில் இருந்து வரும் இலக்குகளை தாக்கி அழிக்கும் பேவர்373 (Bavar373) புதிய வான் பாதுகாப்பு சாதனத்தை அறிமுகப்படுத்தியது. அது ரசியாவின் மிக நம்பகமான S300 வான் பாதுகாப்பு சாதனத்துடன் ஒப்பிடக் கூடிய திறனைப் பெற்றதாக ஈரானிய ராணுவம் கூறியது. அதோடு ரசியாவின் S300ம் ஈரானிடம் உள்ளது. இதன் பொருள் அமெரிக்கா ஈரானைத் தாக்க எத்தனிக்கும் சமயத்தில் அது குறிப்பிடத்தக்க எதிர்ப்பையும், இழப்பையும் அமெரிக்காவிற்கு ஏற்படுத்தும்.

ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியப் போர்கள், அதிஉயர்ராணுவ விமானம் மற்றும் ஏவுகணைகள் உளவறியும் கருவிகள் மட்டுமே வெற்றியைத் தந்துவிடாது என்பதைக் காட்டி இருக்கின்றன. களத்தில் மிகவும் திறன் வாய்ந்த, போராடும் உறுதி கொண்ட ராணுவ வீரர்கள் இன்றி வெற்றி சாத்தியமில்லை என்பதை ரசிய விமானத் தாக்குதல் துணைகொண்டு சிரியா போரை வென்று ஈரான் நிரூபித்துக் காட்டியது. அதோடு அமெரிக்க மக்கள் ட்ரம்ப்பின் ஈரானியப் போருக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை. அதையும் மீறி அவர் போர் தொடுத்தால் இந்த வருடத் தேர்தலில் அவர் தோற்பது உறுதி. ஆனால் ஈரானைப் பொருத்தவரை மக்கள் அரசின் மீது அதிருப்தியில் இருந்தாலும் ஆக்கிரமிப்பு என வரும்போது அவர்கள் அரசின் பக்கமே நிற்பார்கள். ஆக்கிரப்பு அமெரிக்க ராணுவத்துடன் ஒப்பிடும்போது, ஆக்கிரமிப்புக்கு எதிரான தேசிய உணர்வு கொண்ட ஈரானிய வீரர்கள் மிகுந்த போர் அனுபவமும், போராட்ட குணமும் கொண்டவர்கள். ஆக, ஈரான் தரப்பில் ஆயிரக்கணக்கில் இந்தப் போரில் உயிரிழப்பை சந்தித்தால், அமெரிக்கா தரப்பில் நூற்றுக்கணக்கிலாவது உயிரிழப்பை சந்திப்பது உறுதி. அது வியட்நாம் போரில் அமெரிக்கா சந்தித்த போருக்கு எதிரான உள்நாட்டுப் போராட்டங்கள், சர்வதேச நெருக்கடிகள் போன்ற சூழலை ஈரானியப் போரிலும் சந்திக்க நேரிடும்.

ஈரான் தாக்கப்படுமானால் அமெரிக்கா நிலைகொண்டுள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், சவுதி என அனைத்து நிலைகளும் ஈரானிய ஆதரவு குழுக்களினால் தாக்குதலுக்கு உள்ளாகும். ஈரான் பலமுனைப் போரை மேற்கொள்ளும் போது, மொத்த மத்திய கிழக்கும் போர்க்களமாக மாறும். மொத்த எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்படும். அதோடு முக்கிய நீர்வழிப் பாதையான ஹெர்முஸ் ஈரானினால் முடக்கப்படும். மொத்த உலகின் பொருளாதாரமும் நிலைகுலைந்து போகும். ஏற்கனவே பொருளாதார மந்தத்தின் விளிம்பில் இருக்கும் உலகம் இதனை எதிர்கொள்வது இயலாத காரியம். ஈரானிய எல்லையில் உள்ள ஈராக், துர்க்மேனிஸ்தான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துருக்கி என அனைத்து நாடுகளும் தனது வான் மற்றும் நிலப்பகுதியை ஈரானைத் தாக்க அனுமதிக்க மறுத்து விட்டன. ஆக, தற்போதைய சூழலில் இருவருமே போரில் ஈடுபடும் நிலையிலோ, அப்படியே ஈடுபட்டாலும் ராணுவ ரீதியில் வெற்றி பெறும் சாத்தியமோ இல்லை. அவ்வாறெனில் இந்தத் தாக்குதலின் நோக்கம்தான் என்ன?

சுலைமானி கொலைக்குப் பின் நடந்தது என்ன?

கொலை நடந்த உடன் ஈரானிய அரசியல் தலைவர்களுக்கும், ட்ரம்புக்கும் இடையேயான ட்விட்டர் சொற்போர் மிரட்டல்களால் செய்தி ஊடகங்களில் போர் பற்றிய விவாதங்கள் அனல் பறந்தது. இதனிடையில் ஈரானில் இயங்கும் சுவிஸ் தூதரகத்தின் மூலமாக அமெரிக்கா, பிரச்சனையை மேற்கொண்டு போரை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டாம் எனத் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்க அரசின் செயலர் போம்பேயோ இந்தியா தவிர மற்ற மத்திய கிழக்கு, ஐரோப்பா, பாகிஸ்தான், சீனா நாடுகளுடன் தொலைபேசி மூலம் பேசினார். மத்திய கிழக்கு அமெரிக்க அணிகள் தவிர மற்ற எந்த நாடும் அதன் பக்கம் நிற்க மறுத்து விட்டன. இதனிடையில் IRGC, "ராணுவ ரீதியிலான நடவடிக்கைக்கு ராணுவ ரீதியிலேயே பதிலடி கொடுக்கப்படும். அதோடு அமெரிக்காவை இந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றுவதே சுலைமானியின் கொலைக்கு செய்யும் சரியான பதிலடியாக இருக்கும்" என அறிக்கை வெளியிட்டது.

ஈரானிய ஆதரவு, ஈராக்கிய மற்றும் லெபனான் போராளிக் குழுக்களும் அதையே பிரதிபலித்தனர். இதனிடையில் ஈராக்கிய நாடாளுமன்றம் அமெரிக்க ராணுவத்தை வெளியேற்றும் தீர்மானத்தை நிறைவேற்றியது. அமெரிக்க ராணுவத்தை வெளியேற்றினால் மிகப் பெரும் பொருளாதாரத் தடையை ஈராக் சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதனிடையில் ஈராக்கிய ராணுவ செயல்பாட்டுக்கான அமெரிக்க தலைவர் ஜெனரல் சீலே, அமெரிக்க ராணுவம் ஈராக்கின் முடிவை ஏற்று வெளியேறப் போவதாக ஈராக் காபந்து அரசின் பிரதமருக்கு அனுப்பிய கடிதம் நாளேடுகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தி அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் அதனை மறுத்து, தவறுதலாக அனுப்பப்பட்ட அந்த அறிக்கையில் கையொப்பம் கூட இல்லை என சப்பைக் கட்டு கட்டியது.

ஈராக்கின் பிரதமர், அது தவறுதலாக அனுப்பட்டது இல்லை, இருமொழிகளில் கையொப்பமிட்ட கடிதம் தங்களுக்கு கிடைக்கப் பெற்றதாகக் கூறினார். இது அமெரிக்காவின் ஆளும் வர்க்கதில் ஏற்பட்ட கூச்சல் குழப்பங்களைக் காட்டுவதாக இருந்தது. இந்நிலையில் ஈரானின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரையும் இருக்கையின் நுனியில் அமர்ந்து கவனிக்க வைத்தது. சுலைமானியின் மறைவுக்கு துக்கம் அனுசரித்த மூன்று நாட்களுக்குப் பிறகு ஈரான் ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்காவின் இரு ராணுவ நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப் வழக்கமான வாய்ச்சவடால் அடித்து மேற்கொண்டு இந்தப் பிரச்சனையை வளர்க்காமல் அடக்கி வாசித்தார். இந்த ஏவுகணைத் தாக்குதலில் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. தாக்கப்பட்ட ராணுவ தளத்தின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் இந்த தாக்குதல் உயிர்ச்சேதம் ஏற்படுவதை கவனமாகத் தவிர்த்ததைக் காட்டியது.

பல கட்டிடங்கள் உள்ள அந்த ராணுவத் தளங்களில் குறிப்பாக சில மீட்டர் துல்லியத்துடன் தாக்கும் திறன் ஈரானிடம் இருப்பதை பறைசாற்றியது. மேலும் ஈராக்கின் வழியாக ஈரான் தாக்குதல் குறித்த தகவலை அமெரிக்காவிற்கு தெரியப்படுத்தி, தகுந்த முன் எச்சரிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியானது. குறிப்பாக அந்த ராணுவத் தளங்களில் இருந்த எந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்பும் இந்தத் தாக்குதலுக்கு எதிராக இயக்கப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. இது முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட அடையாளப் பூர்வமான ராணுவ நடவடிக்கை என்பதை இது உறுதி செய்தது. இந்தத் தாக்குதல் அமெரிக்காவின் “முகத்தில் விழுந்த அறை” (slap on the face) என்றார் கொமெய்னி. உண்மைதான், உலகின் எந்த நாடும் நினைத்துப் பார்க்காத, செய்யத் துணியாத, உலகின் மிக வலிமை வாய்ந்த ராணுவம் என்று பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவின் ராணுவத் தளத்தை தாக்குவது என்பது பிரபல ரவுடியை நடுத் தெருவில் நிறுத்தி ஒரு சாதாரண மனிதர் கன்னத்தில் அறைவதற்கு இணையானதுதான். ஆனால், இது சுலைமானியின் இழப்புக்கு ஈடாகுமா என்றால் நிச்சயம் இல்லை. எனில், ஈரான் தனது பழிவாங்கும் நடவடிக்கையை முடித்துக் கொள்ளுமா என்றால், இது வெறும் துவக்கமே என IRGC அறிவித்திருக்கிறது. அதன் பொருள் அமெரிக்கா இந்தப் பகுதியில் இருந்து வெளியேறும் வரை இந்தப் போர் தொடரும். இந்த சம்பவங்கள் எதுவும் சுலைமானியையும், மெஹண்டிசையும் ஏன் தற்போது கொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு விடை அளிப்பதாக இல்லை. அது, ஈராக்கின் பிரதமர் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட, ட்ரம்ப்புக்கும் அவருக்கும் இடையிலான உரையாடல் தொடர்பான தகவல்களில் தங்கி இருக்கிறது.

ஈராக்கை சீனாவிடம் இழப்பதைத் தவிர்க்கவே இந்தத் தாக்குதல்

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அவசரமாக கூட்டப்பட்ட நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய ஈராக்கிய பிரதமர், சுலைமானி மீது தாக்குதல் நடந்த மறுநாள் காலை ஈரான்-சவுதி இடையேயான பிரச்சனைகளை மட்டுப்படுத்தும் சவுதியின் முன்மொழிவைப் பெறவே அவர் அரசுமுறைப் பயணமாக வந்ததாகவும், இந்தத் திட்டதிற்கு ட்ரம்ப் ஆதரவு அளித்ததாகவும், இதற்கு ஈரான் நடுவர் வேலை செய்ததாகவும் கூறினார். அவர் கொல்லப்பட்டதன் மூலம் இந்த முயற்சியை அமெரிக்கா அவரைக் கொல்லும் சதித் திட்டத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. அதோடு தன்னுடனான தொலைபேசி உரையாடலில் ட்ரம்ப் மின்சார விநியோகம் செய்யும் வலைப்பின்னல் (grid) மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை முடிக்க அமெரிக்காவிற்கு ஈராக் தனது எண்ணெய் வருமானத்தில் ஐம்பது சதவீதத்தை தரக் கோரியதாகவும், அதனை தான்ஒப்புக் கொள்ள மறுத்து, 50 பேர் கொண்ட குழுவுடன் சீனாவிற்குச் சென்று, அமெரிக்காவிற்குப் பதிலாக சீனாவை அந்தப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் போட்டதாகவும், பின் மறுபடியும் ட்ரம்ப் தொலைபேசி மூலம் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், இல்லையெனில் அவருக்கு எதிராக ஈராக்கில் போராட்டம் வெடிக்கும் என மிரட்டியதாகவும் கூறினார்.

உண்மையில் அவருக்கு எதிரான போரட்டம் சரியாக அக்டோபர் 1 அன்று - சீனாவில் ஒப்பந்தத்தை எட்டிய அன்றே தொடங்கியது. அது அக்டோபர் 25ல் உச்சத்தை எட்டியது. அதன் பிறகு மீண்டும் தொலைபேசியில் பேசிய ட்ரம்ப், உயரமான கட்டிடத்தில் ராணுவ வீரரை நிறுத்தி இருதரப்பைச் சேர்ந்த போராட்டக்காரர்களையும் சுட்டு பிரச்சனையை பெரிதுபடுத்துவேன் என அழுத்தம் கொடுத்ததாகவும், அதற்கு இணங்கிப் போக மறுத்து தான் பதவி விலகியதாகவும் தெரிவித்தார். உக்ரைனில் நடந்த அந்நாட்டுப் பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வே, அவர் பதவி விலகக் காராணமாய் இருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்தத் தகவலை வெளியிட்டு அமெரிக்க ராணுவத்தை வெளியேறச் சொல்லி தீர்மானம் இயற்றப்பட்ட அன்று, 324 பேர் கொண்ட நாடாளுமன்ற அவையில் ஷியா பிரிவைச் சேர்ந்த 170 உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்று வாக்களித்தார்கள். குர்திய மற்றும் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இது ஈராக் சரிபாதியாக அமெரிக்கா மற்றும் ஈரான் ஆதரவுப் பிரிவாக பிரிந்து கிடப்பதையும், இந்தப் பிரிவினையின் பின்புலத்திலேயே ட்ரம்ப் இந்த அளவு மிரட்டி இருகிறார் என்பதையும் காட்டுகிறது.

ஈராக் பிரதமர் பதவி விலகிய பின் ஆட்சியில் தனக்கு ஆதரவானவர்களை அமர்த்தும் அதிகாரச் சண்டையின் விளைவே பெரும் திரளான போராட்டங்களும், ஈரான் மற்றும் அமெரிக்கத் தூதரகங்களின் மீதான தாக்குதலும் என்பது தெளிவாகிறது. தேர்தல் முடிந்த பின்பு ஷியா பிரிவைச் சேர்ந்தவரை பிரதமாக்குவதில் சுலைமானி மற்றும் மேஹண்டிசின் பங்கு மிகப் பெரியது. அதோடு இவர்கள் இருவருமே அமெரிக்காவிற்கு எதிராக பெரும்பாலோரை ஒருங்கிணைத்து அதன் நலனுக்கு எதிராக கொண்டு செல்கிறார்கள். ஏற்கனவே ரசிய நிறுவனங்கள் எண்ணெய் வளமிக்க எர்பில் பகுதியில் பெரும் ஒப்பந்தம் இட்டு செயல்பட்டு வருகிறது. அதோடு ஈராக் ரசியாவின் ராணுவத் தளவாடங்களை வாங்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்போது உச்ச நிகழ்வாக சீனாவும் களத்தில் இறங்கும்போது அவர்கள் இருவரும் ஈரானுடன் இணைந்து அமெரிக்க நிறுவனங்களையும் ராணுவத்தையும் வெளியேற்றி விடும் சாத்தியம் அதிகம். இந்தப் பின்னணியிலேயே இந்த இருவரையும் பேச்சுவார்த்தை என சதிவலை விரித்துக் கொன்றிருக்கிறார்கள். இதன் மூலம் உருவாகும் வெற்றிடத்தையும் குழப்பத்தையும் பயன்படுத்தி ஈராக்கில் நிலை பெறலாம்; அதோடு எதிர்ப்பியக்கத்தை தலையில்லாத முண்டமாக்கி, அதன் திசைவழியை மாற்றி மத்திய கிழக்கில் ஈரானின் இடையீட்டை நிறுத்தி, அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தலாம் என்பதே அமெரிக்காவின் கணக்காக இருக்க முடியும். இதன் அடிப்படையில் இந்தத் தாக்குதலின் உடனடி நோக்கம் அமெரிக்க நிறுவனங்களையும், ராணுவத்தையும் ஈராக்கில் நிலைநிறுத்துவது எனக் கொண்டால், அந்த நோக்கத்தில் அமெரிக்கா வெற்றி அடைந்திருக்கிறதா?

(தொடரும்…)

- சூறாவளி

Pin It