இதுவரை ஆங்காங்கே கனத்த சொட்டுகளாய் விழுந்த துளிகள், 'சட்'டென பேய் மழையாய் உருப்பெற்ற நிகழ்வை ஒத்திருக்கிறது, ஒரிசாவின் நிலை! மழைவிட்ட பின்பான தூவானம் தான், வழக்கமானது. இங்கே தூறலுக்குப் பின்பு ரத்தமழை பொழிந்திருக்கிறது!
அப்போது மணி இரவு. 8.30. அந்த ஆசிரமத்துக்குள் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று ஆவேசமாய் நுழைகிறது. அங்கே தங்கி ஓய்வெடுத்துக் கொண் டிருந்த லக்கன் என்ற சுவாமி லட்சுமானந்த சரஸ்வதி மீதும், அவருடன் இருந்தவர்கள் மீதும் குண்டுகளை வீசியும் துப்பாக்கியாலும் சுடுகிறது. அந்த சம்பவத்தில் 85 வயதான லட்சுமானந்தா, அம்ருதானந்தா என்ற போ¢ளம் பெண், ஒரு சிறுவன் மற்றும் இருவர் உயிரிழக்கிறார்கள்.
கந்தமால் மாவட்டத்திலுள்ள துமுடிபந்த் எனும் கிராமத்தையடுத்துள்ள ஐலேஸ்பதாவில், இந்தச் சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 -ம் தேதி சனிக்கிழமையன்று நடந்தேறியது.
லக்கன் எனும் இயற்பெயரைக் கொண்டு, சலவைத் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த அவர், சுவாமி லட்சுமானந்த சரஸ்வதி என்ற புது அவதாரத் தில் காவி தா¢த்து, ஐலேஸ்பதாவில் ஆசிரமம் அமைத்து, இந்துவாக இருந்து வேறு மதங்களுக்கு மாறிச்செல்லும் ஆதி திராவிட, பழங்குடி மக்களை தாய் மதத்துக்குத் திரும்ப அழைக்கும் பணியைத் தீவிரமாகச் செய்துவந்தார். இளம் வயதிலிருந்தே இப்பணியில் மும்முரம் காட்டிய அவர், வாயில் தீ நாக் கை வைத்தவராகவும் இருந்துள்ளார்.
தாய் மதத்துக்குத் திரும்பியவர்களிடமும், தனது பேச்சைக் கேட்காதவர்களிடமும், மாற்று மதத்தினா¢டமும் அக்னி வார்த்தைகளைக் கொட்டுவதை கைக்கொண்ட அவர் எங்கு, எப்போது, எது பேசினாலும் அது, சிறுபான்மையினக் கிறிஸ்தவர்களை, 'மத மாற்றம் செய்வதை நிறுத்து. அல்லது மாநிலத்தை விட்டு ஓடி விடு' என்று வறுத்தெடுப்பதைத்தான், இலக்காகக் கொண்டிருந்தது!
லட்சுமானந்தா கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மாநிலக் காவல்துறைத் தலைவர் கோபால் சந்திர நந்தா, ''இந்தச் செயலை மாவோயிஸ்ட்டுகள் செய்திருக்கலாம்!" என்று பத்திரிகையாளர்களிடம் நேர்காணலில் சொல்கிறார். அந்த இடத்திலிருந்து, காகிதக் குறிப்பு ஒன்றும் கண்டெடுக்கப்படுகிறது. அதிலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டிருக்கிறது. சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர் ஆஸாத், வெளிப்படையாகவே அறிவிப்பையும் வெளியிடுகிறார்.
ஆனால், காவல்துறைத் தலைவரின் அனுமானம், வன்செயலில் ஈடுபட்ட அமைப்பின் தலைவர் வெளியிட்ட அறிக்கை ஆகியவற்றை, விஸ்வ ஹிந்த் பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட சங் பரிவாரத்தினரும், அம் மாநிலத்தில் வெறி கொண்டு செயல்பட்டு வரும் 'குய் சமாஜ்', ஹிந்து ஜக்ரான் சமுக்யா ஆகிய காவி அமைப்புகளும் திட்ட மிட்டுப் புறக்கணித்து, 'கிறிஸ்துவ மதத்தினர் தான் சுவாமி லட்சுமானந்தாவை கொன்றது!' என்ற புரளியைக் கிளப்பி, தகித்துக் கொண்டிருந்த பிரச்சனையை கொழுந்துவிட்டு எரியச் செய்தன.
கிறிஸ்தவ மக்களின் வழிபாட்டுத் தளங்கள், வீடுகள், வயல்கள், தோப்புகள் என்று தேடித்தேடி தீவைத்தும், அடித்து நொறுக்கி நாசப்படுத்தியும், வன் செயலில் ஈடுபட்ட இந்து மத வெறியர்கள், கிறிஸ்தவர்களை அடையாளம் கண்டு அடித்தும், தீ வைத்து எரித்தும் கொன்றனர். இந்து மத வெறியர்களால் கிறிஸ்தவ மக்கள் கொல்லப்படுவது தொ¢ய வந்ததும், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் உயிர் பிழைத்துக் கொள்ள உடமைகளை அப்படியப்படியே போட்டுவிட்டு, மலைப்பகுதிகளுக்கு தஞ்சம் பிழைக்க ஒளிந்தனர். கால்களில் செருப்பில்லாமல், ஏறத்தாழ 200 கிலோ மீட்டர் தூரம் வரை அவர்கள் நடந்தே சென்றுள்ளனர்.
கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையை தடுக்கும் முயற்சிகள் எதுவும் இல்லாததால், காவி அமைப்புகளுக்கு வழக்கம்போல கொண்டாட்டம் ஆகிப்போனது.
மேலும் லட்சுமானந்தா கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தொ¢வித்து, பந்த் அறிவித்தும் வன்முறையைத் தொடர்ந்தன அந்த அமைப்புகள். இதில் கந்தமால், பர் கார்ஜ், கோரா புட், ராய கடா, கஜபதி, போவுத், சுந்தர் கார்க், ஜஜ்பூர் ஆகிய மாவட்டங்களிலும் பாலிகுடா, ஜி.உதய்கிரி, ராய்கா, திகாபாலி, சாரங்கடா, பிரிங்கியா ஆகிய இடங்களிலும் உள்ள தேவாலயங்கள், பிரார்த்தனைக் கூடங்கள், கிறிஸ்தவர்கள் நடத்திவந்த நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின.
அதற்குத் தூபம் போடுவது போல, விஸ்வ ஹிந்த் பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா, 'ஒரிசாவில் செயல்பட்டுவரும் கிறிஸ்தவ மிஷனா¢ அமைப்புகளின் செயல்பாடுகளை புலனாய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க வேண்டும். மத மாற்றத் தடைச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதற்கு மலைவாழ் மக்களுக்கும், இந்துக்களில் அடித்தட்டிலுள்ள சாதி அமைப்பினரை ஏமாற்றியோ அல்லது பணம் கொடுத்தோ கிறிஸ்தவத்துக்கு மதமாற்றம் செய்யப்படுகிறது. இதன் விளைவே சுவாமி லட்சுமானந்த சரஸ்வதி கொலையானது. இதில் சம்பந்தப் பட்டவர்களை உடனடியாக கைது செய்யாவிட்டால், செப்டம்பர் 7 ம் தேதி, தேசிய அளவில் இப் பிரச்சனையை விரிவு படுத்துவோம்' என்று காவி அமைப்புகளை உசுப்பேற்றி வைத்தார். இது அரசுகளுக்கு விடப்பட்ட மறைமுக நெருக்கடி! இதுவும் நாளுக்கு நாள் வன்முறையின் நெடியை அதிகா¢த்தது.
இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சம்பவ இடங்களைப் பார்வையிட கந்தமால் மாவட்டத்துக்கு வந்து சேர்ந்தார். ஆனால் நிலவரம் கலவரமாகிக் கிடப்பதை அவருக்கு உணர்த்திய மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் அவரைப் பார்வையிடச் செய்யாமலேயே திருப்பியனுப்பி வைத்தது. விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசிய அவர், "கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், மாநில நிர்வாகம் திணறுகிறது!'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.
சம்பவம் துவங்கி உச்சத்திற்குப் போய், ஒரு வாரத்திற்குப் பின் மாநில முதல்வர் நவின் பட்நாயக்கும், அரசு தலைமைச் செயலாளர் அஜித் குமார் திரிபாதியும் அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். அதில், மாநில முதல்வர் நவின் பட்நாயக், கந்தமால் மாவட்ட வன்முறையில் நடந்த அரசு கணக்குப்படி 16 கொலைகள் தொடர்பாக, பல்வேறு காவல் நிலையங்களில் 11 கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 85 வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் 167 பேர் கைதாகி இருப்பதாகவும் தொ¢வித்த அவர், பாதிக்கப்பட்ட மக்கள், முகாம்களில் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதாகவும் சொல்லி, அரசு செயல்படுவதைக் காட்டிக் கொண்டார்.
முன்னவர் சொல்லி முடித்ததும் பின்னவர், கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான 543 வீடுகள் எரிக்கப்பட்டதாகவும், கஜபதி மாவட்டத்தில் 15 வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் சொல்கிறார். மேலும், இச்சம்பவத்தில் 35 பேர் மட்டுமே காயம் அடைந்ததாகவும் சொல்லி வைக்கிறார். ஒரிசாவின் கிழக்குப் பகுதியில் செயல்பட்டுவந்த கிறிஸ்தவ அமைப்பின் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரமத்தில் பணியாற்றிய 21 வயது இளம் பெண் ரஜ்னி மஹ்ஷி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், இந்து மத வெறியர்களால் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, கிறிஸ்தவத்தைக் கைவிட்டுவிட்டு, இந்து மதத்துக்குத் திரும்ப மறுத்த ஏழுமாதக் கர்ப்பிணி பெண் கமலினி நாயக்கும், அவரது ஒருவயது மகனும் துண்டுதுண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சங்கதிகளெல்லாம் முதல்வரின் அறிக்கையிலோ, தலைமைச் செயலா¢ன் குறிப்பிலோ இடம் பெறவில்லை! அதே வேளையில் அவரது ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, சட்டமன்ற நடவடிக்கைகளை முடக்கியும், லட்சுமானந்தாவைக் கொன்றவர்களை கைது செய்யச்சொல்லி அமளியிலும் ஈடுபட்டது.
மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ், முதல்வரை ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியதுடன் கலைந்து போய்விட்டது. சம்பவங்களுக்குப் பின்பு, போலிஸ் மற்றும் அதிரடிப்படையின் கொடி அணிவகுப்பு, துணை ராணுவத்தினா¢ன் பாதுகாப்பு என்று விரிவுபடுத்தப் பட்டிருந்தாலும் கலவரத்தின் வெம்மை அங்கு தணியவே இல்லை. மலைப் பகுதிகளுக்கு ஓடி ஒளிந்த கிறிஸ்தவ மக்கள் உணவு, தண்ணீர் எதுவுமில்லாமலும், அங்கிருந்து, திரும்பி வர முடியாத அவஸ்தையிலும் அல்லாடுகின்றனர்.
கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான இந்து மத வெறியர்களின் வன்முறைச் செயல்களை பிரதமர் மன்மோகன் சிங், "தேசிய அவமானம்" என்று வர்ணிக்க, உச்ச நீதிமன்றம், "ஒரிசாவில் நடப்பது என்ன?" என்பது குறித்த விளக்கத்தை, மாநில அரசிடம் கேட்டுள்ளது.
கிழக்கு மலைத்தொடர்ச்சியின் பெரும்பகுதியை உள்ளடக்கிய ஒரிசா மாநிலம் 1,55,707 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் 3,67,06,920 மக்கள் தொகையைக் கொண்டது. தென் வடலாக அமைந்துள்ள இந்த மலைப்பகுதியல் வரும் கோரா புட், சுந்தர் கார்க், மயூர் பஞ்ச் ஆகிய மாவட்டங்கள் மலைகளாகவே உள்ளன. இத்தனை பொ¢ய மக்கள் தொகையில் இந்து, ஜெயின், புத்த, இஸ்லாமிய மதங்களின் வரிசையைத் தாண்டி, கிறிஸ்தவ மதம் வெறும் 2.4 சதவிதம் தான் உள்ளது.
ஒரிய மொழி, மாநிலத்தின் முக்கிய மொழியாக இருக்கிறது. ஆனால் மாநிலத்தின் பெரும்பான்மை இந்துக்கள், ஆதி திராவிடர்களாகவும், பழங்குடியினராகவுமே உள்ளனர். 62 வகையான அக்குடியினர் உணவு சேகா¢ப்பு, வேட்டையாடுதல், மீன்பிடித் தொழில், காடு சார் வாழ்க்கையை மேற்கொண்டு உள்ளனர். அவர்களில் சந்தால், முண்டா, ஓரான், கோண்ட் ஆகிய பிரிவினர் ஓரளவு விவசாயத்திலும், பெருமளவு காடுகளில் உணவு சேகா¢த்தல், வேட்டையாடுதல் ஆகிய தொழில்களிலும், ஜூவாங்கா, பரியான், சவோரா, துருவா, போண்டா ஆகிய பிரிவினர், 'போடு சாஸ்' எனும் முறையான காட்டைத் தீ வைத்து அழித்து, அதனால் உருவாகும் சாம்பலில் விவசாயம் செய்யும் பழைய முறையையே இன்னும் செய்து வருகின்றனர்.
கோயா எனும் பிரிவினர் கால்நடை வளர்ப்பவர்களாகவும், மொகாலி, லொஹராக்கள் கூடை முடைதல், கருவிகள் செய்யும் தொழில் என்று வயிற்றை வளர்க்கும் ஜீவனங்களில் ஈடுபட்டுள்ளனர். என்றபோதும் மலைவாழ் மக்களின் வளமைகள், தொன்மங்கள், பழக்க வழக்கங்கள், பாரம்பரிய முறைகள் கடந்த 15 ம் நூற்றாண்டின் இறுதிவரை மாநிலத்தின் மிக முக்கிய அம்சங்களாகப் போற்றப்பட்டு வந்துள்ளது. அதன் பின்பு, முதலில் மூக்கை நுழைத்து, பின்பு உடலை நுழைத்து முற்றிலுமாக ஆக்கிரமிப்பு செய்யும் பிராமணிய விதை அங்கே ஊன்றப்பட்டதும், மலைவாழ் மக்களின் நிலை பிற பகுதிகளைப் போலவே மிகவும் பின்னுக்குத் தள்ளப் பட்டுவிட்டது.
பிராமணியத்தால் கடும் பின்னடைவுக்கும், தீண்டத் தகாதவர்களாகவும் ஆக்கப்பட்டனர், ஆதிவாசிகளில் பானா எனும் பிரிவினர். அவர்களை ஆங்கிலேய அரசு பிராமணியத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு, குற்றப் பரம்பரையினர் என்று முத்திரைக் குத்தி, அடக்குமுறைக்கு உள்ளாக்கியது. அந்தக் கால கட்டத்தில் பாதுகாப்பையும், மேன்மையையும் தேடி பெரும்பாதிப்புக்கு உள்ளான பானா பிரிவினர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்கள். மிகவும் தாழ்நிலையில் இருந்தவர்கள் - பெயரளவுக்கு இந்துக்கள் என்று கூறப்பட்டு வந்தவர்கள் - கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதை கெளரவமாகவே உணர்ந்தார்கள். மக்களின் மேம்பாடு எனும் பெயா¢ல், அதை கிறிஸ்தவ மதம் செய்துவந்தது!
இப்படியான மத மாற்றம், கந்தமால் மாவட்டத்தில் கொஞ்சம் அதிகம். இந்து ஆதி திராவிடர்கள், மலைவாழ் மக்கள் மதம் மாறுவதைத் தடுக்க இந்துத் துவ அமைப்புகள் நெடுங்காலமாகவே பற்பல வேலைகளை அங்கு செய்து வருகின்றன. சங் பரிவாரத்தினர் கந்தமால் மாவட்டத்தில் மட்டும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளிகள் எனும் பெயா¢ல், 391 அமைப்புக் கிளைகளை நடத்தி வருகின்றனர். அப்பள்ளிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகின்றன. அதுதவிர, சேவா பாரதி, வனவாசி கல்யாண் பரிஷத், ஏகல் வித்யாலயா, விவேகாநந்தா கேந்திரா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் ஆதரவு நிறுவனங்களும், தீவிர இந்து மதக் கல்விப்பணியில் ஈடுபட்டுள்ளன. வால்களே இத்தனை நிறுவனங்களை நடத்தும்போது, அதன் தலையான ஆர்.எஸ்.எஸ்., சும்மா இருக்குமா?
குழுவுக்கு 25 பேரைக் கொண்ட ஆறாயிரம் ஷாகாக்கள் மூலம், மாநிலம் முழுவதும் முழுநேரத் தொண்டர்களை களமிறக்கிவிட்டிருக்கிறது. ஒரிசாவில் மதவெறியை ஏற்படுத்துவது ஒன்றே அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் வேலை. இயற்கையை மட்டுமே தொழுதுவரும் ஆதிவாசிகளை, இந்துக்களாக மாற வைப்பது அவர்கள் மேற்கொண்டிருக்கும் மிக முக்கிய பணி! ஆர்.எஸ்.எஸ்., அளித்திருக்கும் களப்பணியை, பரிவார அமைப்புகள் கந்தா எனும் பிரிவான ஆதிவாசிகளிடம் இந்துக்களாய் மூளைச்சலவை செய்து, அவர்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பானாக்களுக்கு எதிராகத் திரும்ப வைப்பது, அடுத்தப் பணி!
ஆதிவாசி இனமான பானாக்கள் மீது, அதே ஆதிவாசி இனமான கந்தாக்களை ஏவிவிட்டு, தங்களின் மதவெறித் தீயை அணைய விடாமல் சங் பரிவார அமைப்புகள் குளிர் காய்ந்து வருகின்றன. பன்னெடுங்காலமாக நடந்து வரும் இச்செய்கைகளை, லக்கன் என்ற சுவாமி லட்சுமானந்த சரஸ்வதி கையிலெடுத்து கடந்த 40 ஆண்டுகளாக கந்தா'க் களின் ரட்சகர் போல காட்டி வந்தார். 'குய் சமாஜ்'ஜின் ஆதரவுடன் விஸ்வ ஹிந்த் பரிஷத்தின் முக்கியத் தலைவராக இந்தப் பகுதியில் வலம் வந்த அவருக்கு கொலை மிரட்டல்கள் இருந்துவந்தன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், நரேந்திரமோடி வெற்றி பெற்றார். நாட்டின் மேற்குப்பகுதியில் கிடைத்த தேர்தல் வெற்றிக்கு, சங் பரிவாரங்கள் தேசத்தின் கிழக்குப்பகுதியிலும் பெரும் விழாக்களை எடுத்தன. குறிப்பாக, ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் இந்த விழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன. இதில் முக்கிய பங்கு லக்கன் என்ற லட்சுமானந்தா வகித்தார்.
நரேந்திர மோடி வெற்றி பெற்றது, டிசம்பர் 23 ம் தேதி. அப்போது, கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலம். கந்தமால் மாவட்டத்தின் மக்கள் தொகையில் 16 சதவிதத்தினர் கிறிஸ்தவர்கள். அவர்கள், கிறிஸ்துமஸ் விழாக்களில் ஈடுபட்டிருந்த நேரத்தில், சங் பரிவாரத்தினர் திட்டமிட்டே கலவரங்களில் ஈடு பட்டனர். கிறிஸ்துமஸ்க்காக தேவாலயங்களில் செய்யப்பட்டிருந்த அலங்காரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பந்தல்கள் எரிக்கப்பட்டன. முக்கிய தேவாலயங்கள் திட்டமிட்டுக் கொளுத்தப்பட்டன. ஐம்பதுக்கும் அதிகமான சர்ச்சுகள் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டன. கன்னியாஸ்திரிகள் நடத்திய கான்வெண்ட்கள், ஹாஸ்டல்கள் தீயின் நாவுக்கு இரையாகிப் போயின. சில இடங்களில், பாதிரியார்கள் தாக்கப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும், நிர்வாணமாக்கப்பட்டு தெருவில் ஊர்வலமும் விடப்பட்டனர். அந்த மகிழ்ச்சி கரைபுரண்டோட துப்பாக்கியால் சங்பரிவாரத்தினர் சுட்டதில், இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்து நீண்ட நாட்கள் சிகிச்கையில் இருந்தனர்.
கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாக நடந்த இந்த வன்முறையை, மாநில அரசு இப்போது போலவே அப்போதும் கட்டுப்படுத்தவில்லை. ஆளும் கூட்டணியிலிருந்த பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுக்காக வாய் மூடி மெளனம் சாதித்தது. அன்று கிறிஸ்தவர்கள் மட்டுமே பாதிப்புக்குள்ளானதால், இன்று கொந்தளிக்கும் பாரதிய ஜனதா கட்சி, அன்று வாய்மூடி மெளனமாகவே இருந்தது.
அதே காலகட்டத்தில், நவின் பட்நாயக் அமைச்சரவையில் சுரங்கத்துறைக்குப் பொறுப்பேற்றிருந்த பானா கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த பத்மநாவ் பெஹைராவை, இந்துத்துவ சக்திகளும், 'குய் சமாஜ்' அமைப்பும் கடும் நெருக்கடி கொடுத்து, அவரை பதவி விலக வைத்துவிட்டுத்தான் ஓய்ந்தன. 2002 -ல் குஜராத்தில் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் நடந்தது போலவே 2007-ல் ஒரிசா மாநிலத்தில் நவின் பட்நாயக்கின் அரசு இயந்திரமும் காவிகளுக்கு ஆதரவாகக் களம் இறங்கி, மனிதத்தையும் இறையாண்மையையும் கறைப்படுத்தியது. அதன் ருசியை அனுபவித்தவர்கள், மாவோயிஸ்ட்டுகள் நடத்திய சம்பவத்துக்கு, கிறிஸ்தவர்களைப் பொறுப்பாக்கி மறுபடியும் களம் இறங்கியிருக்கிறார்கள்.
50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடிழந்தும், நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தும், மலைப்பகுதிகளில் உயிர் பயத்துடன் தஞ்சம் புகுந்துள்ளனர். இதுபோல ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் முற்றிலும் புனைந்துரைக்கப்பட்டவையாக உள்ளன. கலவரத்தில் பலியான கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, நூறைத் தொட்டிருக்கலாம் என்றும், ஒரு லட்சத் துக்கும் அதிகமானோர் வீடிழந்திருக்கலாம் என்றும், 3 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் தீக்கு இரையாகி இருக்கும் என்றும், 115 தேவாலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டதாகவும் கத்தோலிக்கத் திருச்சபை தனது குறிப்பில் வெளியிட்டுள்ளது.
கடந்த 8 ம் தேதி பிரகுல் சிராக் எனும் பாதிரியாரைக் கொண்டு இயங்கும், 'கோஸ்பல் •பார் ஆசியா மெஷினா¢' ஆலயம், முற்றிலும் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது. அங்கிருந்த மூன்று பாதிரியார்களை வன்முறைக் கும்பல் உயிரோடு கொளுத்த முயற்சித்ததில், உயிர் பிழைக்கத் தப்பி ஓடிய அவர்கள், இதுவரை ஊர்த் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கச் செய்தியாகிவிட்டது. இந்த ஆலயம் சமீபத்தில் தான் புதிதாகக் கட்டப்பட்டது! இந்திய ராணுவத்தில் பணியாற்றி, காயத்துடன் சொந்த மண்ணுக்குத் திரும்பி, மலைப்பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவரான ரவீந்திர பிரஹான், போரில் காயம் உண்டானபோது ஏற்பட்ட அதிர்வைக் காட்டிலும் கூடுதல் அதிர்வுடன் சொல்கிறார். "நாங்கள் எங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு திரும்பினால் மட்டுமே போக முடியுமாம். We can never go back!"
தீக் காயங்களுடன் உயிர் பிழைத்த 8 வயது சிறுமி நம்ரதா, 8 ஆயிரம் பேர் தங்கியிருக்கும் ராய்கா மாவட்ட முகாமில், சொந்த மண்ணிலேயே அகதிபோல தங்கியிருக்கிறாள். "இந்துக்கள் எனது வீட்டை தீ வைத்துக் கொளுத்தினார்கள். என் முகம் தீயில் வெந்து விட்டது. என்னால் தூங்க முடியவில்லை. கெட்ட கனவுகளாக வருகிறது. யாரோ என்னைத் துரத்துகிறார்கள். வீட்டுக்குப் போக பயமாக இருக்கிறது" என்று நடுங்குகிறாள்.
முகாம்களில் இருக்கும் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு, ஆறுதல் சொல்லவும் சம்பவத்தை மதிப்பீடு செய்யவும் வந்திருந்த கத்தோலிக்க மத குரு ரேமண்ட்.ஜே.டி செளசா, ''இந்தியாவில் இந்துத்துவ தேசியவாதம் என்பது, ஜனநாயக அரசியல் தடத்திலும், பயங்கரவாதக் கும்பல் தடத்திலும் இரட்டைப் போக்காய் அதிகா¢த்துள்ளது. இது, தேசத்தை பிரிவினை, பிரச்சனை, சச்சரவு போன்ற அழிவுப் பாதையிலேயே அழைத்துச் செல்லும். இந்தியாவின் மதச்சார்பின்மை தத்துவத்தை, தீவிர இந்தத்துவ வாதிகள் சிதைத்து அழித்து வருகின்றனர். அழிப்பைத் தங்கள் அடையாளமாக வைத்துக் கொண்டுள்ளனர். இதுபோன்ற நிலை இந்தியாவில் பொது வாழ்க்கைக்கும், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கும் பொ¢ய அளவில் பாதிப்பையே ஏற்படுத்தும்!" என்ற வருந்திச் சொல்லியிருக்கிறார்.
அகில இந்தியக் கிறிஸ்தவக் கவுன்சிலின் தேசியச் செயலாளர் சாம் பால், பத்திரிக்கையாளர் சந்திப்பில்,''இந்தக் கிராமத்தில் வசிக்க வேண்டுமென்றால், இந்துமத்துக்கு திரும்பினால் தான் முடியும். இந்த நிலை பல கிராமங்களில் நீடிக்கிறது. பிரச்சனை தீரவில்லை. மாறாக வலுவடைந்தே வருகிறது. பல பாதிரியார்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 30க்கும் அதிகமான பாதிரியார்கள், உயிருக்குப் பயந்து ஒளிந்து கொண்டுள்ளனர்!"என்று குறிப்பிட்டு, தங்களின் நிலைமையை வெளிப்படுத்துகிறார். ஒரிசா சம்பவத்துக்கு, வாடிகன் கண்டனமும் வருத்தமும் தொ¢வித்துள்ளது.
தற்போது நிலைமை சீரடைந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள், அவரவர் வீடுகளுக்கு ஓரிரு நாட்களில் திரும்பி விடுவார்கள் என்று அம்மாநில ஆளுநர் முரளிதர் சந்திரகாந்த் பண்டாரி கூறியிருந்தாலும், Melting pot of religion ஆக இருக்கும் ஒரிசாவில், பாதிப்புக்குள்ளான கிறிஸ்தவ மக்கள், அவர்களது வீடுகளுக்கு சுதந்திரமாகத் திரும்ப முடியவில்லை என்பது தான் உண்மை! இதைவிடக் கொடுமை, வன்முறையாளர்களை விட உள்ளூர் போலிஸ் நடந்துகொண்ட விதம், மிகவும் கேவலமாக இருந்துள்ளது. வன்முறையாளர்களின் எண்ணிக்கையும், அவர்கள் காட்டிய வெறியும் உள்ளூர் அதிகாரிகளையும், காவல்துறையையும் மிரட்சிக்கு உள்ளாக்கிவிட்டதாக பொதுவானக் கருத்து, பாதிப்புக்குள்ளான மாவட்டங்கள் முழுவதிலுமே இருக்கிறது.
இந்நிலையில் மாநில அரசு, ஓய்வு பெற்று இரண்டு நாட்களே ஆன ஒரிசா உயர்நீதிமன்ற நீதிபதி சரத் சந்திர மகோபத்ரா தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை நியமித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்கு நியமிக்கப்படும் விசாரணைக் கமிஷன்கள், இதுவரை என்ன சொல்லியிருக்கின்றன என்பதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்குவதாக உறுதியளித்துள்ளார், பிரதமர் மன்மோகன் சிங். தற்போது, லக்கன் என்ற லட்சுமானந்தாவால், இந்து மதத்துக்கு மதம் மாற்றப்பட்டவர்களும், அழைத்துச் செல்லப்பட்டவர்களும், இச் சம்பவங்களுக்குப் பின்பு, பழையபடி இயற்கை வழிபாட்டுக்குத் திரும்பியவண்ணம் இருக்கிறார்கள். அப்படி இயற்கை மதத்துக்குத் திரும்பியவர்களில் ஒருவர், கந்தா இன ஆதிவாசியான கந்தாரு திகால். "கட்டாயப்படுத்தப்பட்டுத்தான் நாங்கள், இயற்கை வழிபாட்டிலிருந்து இந்து மதத்திற்கு மாறினோம். அங்கு போன பின்பு தான் தொ¢ந்தது, இயற்கை மதத்தை விட உயா¢யது வேறெதுவுமில்லை என்று. அதனால் திரும்ப இயற்கைக்கே வந்துவிட்டோம்!"
ஒரிசாவில், தற்போது பிஜூ ஜனதா தளம் - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டமன்றத் துக்கான தேர்தல் அம்மாநிலத்தில் நடக்கவுள்ளது. சமீபத்தில், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெற்ற இந்தத்துவாவுக்கான வெற்றியை(!) அகண்ட பாரதம் முழுமைக்கும் கொண்டுசெல்லும் யுக்தியாகவே, தேர்தலுக்கு முன்பான கலவரங்களைத் திட்டமிட்டு சங்பரிவாரங்கள் நடத்துகின்றன. அதேபோல், கூட்டணி ஆட்சி செய்யும் ஒரிசாவிலும் வெற்றிக்கான •பார்முலாவை அரங்கேற்றும் திட்டமாகத்தான் இச்சம்பவங்கள் நடந்தேறுகிறது என்பதை, தீவிர இந்துத்துவ வாதிகள் தவிர, மற்ற யாருமே மறுக்கப் போவதில்லை!
இந்துத்துவாவுக்கு, நடுநிலை நாளேடுகள் என்று சொல்லிக் கொள்ளும் முக்கிய தேசிய இதழ்களும் கூட ஆதரவாகச் செயல்படும் நிலையை எடுத்துவிட்டன போலுமே செய்திகளை வெளியிட்டு, மதச் சார்பின்மையை பின்னுக்குத் தள்ளும் நிலையை கைக் கொண்டுள்ளதாகவே படுகிறது. கிழக்கு ஒரிசாவில் ஆதரவற்றோருக்கான ஒரிசாவின் கிழக்குப் பகுதியில் செயல்பட்டுவந்த கிறிஸ்தவ அமைப்பின் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரமத்தில் பணியாற்றிய 21 வயது இளம் பெண் ரஜ்னி மஹ்ஷி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், இந்து மத வெறியர்களால் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, கிறிஸ்தவத்தைக் கைவிட்டுவிட்டு, இந்து மதத்துக்குத் திரும்ப மறுத்த ஏழுமாதக் கர்ப்பிணி பெண் கமலினி நாயக்கும், அவரது ஒருவயது மகனும் துண்டுதுண்டாக வெட்டிக் கொல் லப் பட்ட சங்கதிகளெல்லாம் அம் மாநில முதல்வரின் அறிக்கையிலோ, தலைமைச் செயலா¢ன் குறிப்பிலோ இடம் பெறாதது போலவே முண்ணனிப் பத்திரிகைகளிலும் இடம்பெறவில்லை என்பது வருத்தத்திற்குரியது!
அதேவேளையில் அரசியல் நையாண்டிப் பத்திரிக்கை மனசாட்சியுடன், கிறிஸ்தவர்களுக்கு எதிரான இச்சம்பவத்தை அச்சிட்டிருந்தாலும் அதில், 'சம்பவம் நடந்த அரை மணிநேரத்துக்குள் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டது மாவோயிஸ்டடுகள் தான் என்பது எப்படி கண்டறிய முடிந்தது?' என்று கேள்வி எழுப்பி நியாயத்தைக் கேட்டிருக்கிறது.
நல்ல கேள்வி! இதற்கு முன் நடந்த பல்வேறு தாக்குதல் சம்பவங்களில், அவை நடப்பதற்கு முன்பே, 'முஸ்லிம் பயங்கரவாதிகள்தான் இதை செய்தார்கள்' என்று அறுதியிட்டுக் கூறப்பட்டிருக்கும்போது, சம்பவத்துக்குப் பின்பான அனுமானம் குறித்தக் கேள்வி கொஞ்சம் வியப்பாகத்தான் இருககிறது. ஏனென்றால் தமிழின் முதல் புலனாய்வு இதழே, அந்த நையாண்டிப் பத்திரிகைதான்!
பத்தாண்டுகளுக்கு முன் ஒரிசாவின் மயூர் பஞ்ச் கிராமத்தில் தங்கியிருந்து, தொழு நோயாளிகளுக்கு சேவை செய்துவந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ், தனது இரண்டு மகன்களுடன் கியோஞ்சர் மாவட்டத்தில் 1999 ஜனவரி 22 ல் நடந்த காடுகளின் திருவிழாவுக்கு, ஆதிவாசியின மக்களின் அழைப்பை ஏற்றுச் சென்றிருந்தபோது, 'ஆண்டுதோறும் மதமாற்றம் செய்வதற்காக வருபவர்' என்று குற்றம் சாட்டி, தாராசிங் என்ற மதவெறி குண்டனின் தலைமையில் அனுப்பப்பட்ட சங் பரிவாரக் கும்பல், மூவரும் தூங்கிக் கொண்டிருந்த ஜீப்பை தீவைத்துக் கொளுத்தி உயிருடன் கொன்றது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச் சம்பவத்தில் கணவனையும், பிலிப், திமோத்தி என்ற இரண்டு மகன்களையும் மதவெறித் தீக்கு பறி கொடுத்த ஸ்டெயின்ஸின் மனைவி கிளாடிஸ், தனது மகள் எஸ்தரை கட்டிக்கொண்டு சொன்னது. "ஸ்டெயின்ஸ், ஒருபோதும் மத மாற்றத்தில் ஈடுபடவில்லை. அவர் இறைவனின் கருத்துகளை பரப்ப மட்டுமே செய்தார். அதில் ஒரு வழி, அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட தொழு நோயாளிகளுக்கான சிகிச்சை முறை. at the same time, I have no hatred against the killers. but have forgiven them just like jesus will. The path cross is painful and it can be walked only with love!''
ஆனால், உயிரிழந்த ஒருவரின் சடலத்தை வைத்துக்கொண்டு, இந்துத்துவ பரிவாரங்கள் ஆட்சி அதிகாரத்துக்காக, அழிச்சாட்டிய அரசியலை செய்து வருகின்றன. கலிங்கப்போரில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்ததும், அதைப் பார்த்து கண்ணீர் வடித்து, மனம் மாறி அகிம்சை வழியை உலகுக்கு போதித்த மாமன்னன் அசோகர் ஆண்ட பூமி ஒரிசா என்று சொல்லிக் கொள்வதற்கு, இவர்களுக்கு வெட்கமாக இல்லை போலும்!
- எஸ். அர்ஷியா
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
WORRY......சா!
- விவரங்கள்
- எஸ்.அர்ஷியா
- பிரிவு: கட்டுரைகள்