‘வாஸ்து’ நம்பிக்கை, இப்போது படித்தவர்கள்,அரசியல்வாதிகள், மேல்மட்டத்தினரிடம்வேகமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.அரசியல் கட்சித்தலைவர்கள்,இப்போதெல்லாம்மக்களை நம்புவதைவிட யாகங்களையும் வாஸ்துக்களையும், சோதிடர்களையும் நம்பத்துவங்கிவிட்டனர். இந்த ஆலோசகர்களின்ஆலோசனையைப் பின்பற்றினால், மக்கள்ஆதரவு கிடைத்துவிடும் என்று நம்புகிறார்கள்.சென்னை கடற்கரைச் சாலையில் கையில்சிலம்புடன் ஆவேசத்துடன் நீதி கேட்கும் கண்ணகிசலை, கடந்தகால அ.இ.அ.தி.மு.க. ஆட்சியால்2002இல் அகற்றப்பட்டது.

போக்குவரத்துப் பிரச்சினைதான் காரணம் என்று பொருந்தாத ஒருசமாதானம் சொல்லப்பட்டாலும், ‘வாஸ்து’நம்பிக்கையின்படிதான் அது அகற்றப்பட்டது என்றுசெய்திகள் வந்தன. தமிழக முதலமைச்சர் அந்தவழியாகக் கோட்டைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.

வாஸ்து சாஸ்திரத்தின்படி இப்படி ஒரு சிலைநிற்பது முதலமைச்சருக்கு நல்லது அல்ல என்று சிலவாஸ்து பண்டிதர்கள் கூறியதால், சிலை அகற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தியாவில் பிரதமர்கள்,முதலமைச்சர்கள், தலைவர்கள், உயர் அதிகாரிகள், இந்த வாஸ்து மூடநம்பிக்கையில் மூழ்கிப் போய்மக்கள் வரிப் பணத்தைப் பாழாக்கி, தங்கள்அலுவலகக் கட்டிடங்களை இடித்து, மாற்றிக் கட்டி வருகிறார்கள்.

மறைந்த என்.டி.ராமாராவ், ஆந்திரமுதலமைச்சராக இருந்தபோது ஒரு சம்பவம்நடந்தது. அதுவும் இதேபோல் முதலமைச்சர் கடந்துசெல்லும் பாதை தொடர்பானதுதான். வாஸ்துசோதிடக்காரர்கள் முதலமைச்சர் என்.டி.ராமாராவுக்கு சொன்ன ஆலோசனைப்படி, அவர் அலுவலகத்துக்குச் செல்லும் வடக்குப் பகுதிசாலையின் நீளம் நீட்டிக்கப்பட்டது.

இந்தச் சாலைநீட்டிப்புக்காக, அப்பகுதிகளில் குடிசைப் போட்டு வாழ்ந்து கொண்டிருந்த ஏழை மக்களுக்கு, பல கோடிரூபாய்இழப்பீட்டுத் தொகை வழங்கிக் காலி செய்யவைத்தது. ‘வாஸ்து சாஸ்திரப்படி’ ஒரு குறிப்பிட்டமீட்டர் எண்ணிக்கையில் சாலை உருவாக்கப்பட்டது.விளைவு என்ன? என்.டி.ராமாராவ் ஆட்சி கவிழ்க்கப்பட்டதுதான்.தேவகவுடா பிரதமராக இருந்தபோது ஒருசம்பவம். அவரது பிரதமர் வீடு, அப்போதுதான் பல இலட்சம் ரூபாய்செலவில் புதுப்பிக்கப்பட்டுஇருந்தது.

ஆனாலும், வாஸ்து சோதிடர்கள், அவரது வீட்டின்நுழைவு வாயிலில் இரண்டு படிக்கட்டுகள் மட்டுமேஇருப்பதை மாற்ற வேண்டும் என்றும், இல்லையேல்,அவர் பதவிக் காலம் முழுவதிலும் பதவியில் இருக்கமுடியாது என்றும் யோசனை தெரிவித்தனர். அவசரஅவசரமாக, வாயிற்பாதை உடைக்கப்பட்டு,மூன்றாவது படியுடன் புதிய வாசல் வழிஅமைக்கப்பட்டது. ஆனால், தேவகவுடாதான் பதவியில் நீடிக்க முடியவில்லை.மனிதன் முதலில் குகையில் வாழ்ந்தான். பிறகுமரங்களையும், தழைகளையும் பயன்படுத்தி குடியிருப்புகளை உருவாக்கினான். பிறகு கல், மண்,மரங்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டான்.இப்போது நவீன கட்டுமானங்கள் வந்துவிட்டன.

செங்கல், இரும்பு, மரம், பளிங்கு, கல் போன்றவைபயன்பாட்டுக்கு வந்துவிட்டன. தான் வாழ்கிற தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப, வீடுகள் கட்டப்பட்டுவருகின்றன. வாஸ்து சாஸ்திரம் பற்றி மத்ஸ்யபுராணம், கந்தபுராணம், அக்னி புராணம் போன்றபல்வேறு புராணங்களிலும் பேசப்படுகின்றன.வேதங்களிலும் இது பற்றிய செய்திகள் வருகின்றன.

விஞ்ஞானம் முழுமையாக வளர்ச்சி அடையாதகாலகட்டத்தில், அவை மதங்களைச் சார்ந்தே நிற்கவேண்டியிருந்தது. வளர்ந்து கொண்டிருக்கிற விஞ்ஞானம், இப்போது மதங்களைச் சார்ந்து நிற்கவேண்டிய அவசியமற்ற நிலைக்கு வந்துவிட்டது. மதநம்பிக்கைகள் பலவும் விஞ்ஞானத்தால் மூடநம்பிக்கைகள் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டன.கட்டுமானத் துறையிலும், விஞ்ஞானம் வந்துவிட்டபிறகு, ‘வாஸ்து’ நம்பிக்கைகளைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.வாஸ்துவில் ‘வர்ணாஸ்ரமம்’ நுழைந்திருக்கிறதுஎன்பது பலருக்கும் வியப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை.

விஷ்வகர்மா பிரகாஷிக்கா எனும் சாஸ்திரநூல், வீட்டு மனைகளை வெள்ளை, சிவப்பு, மஞ்சள்,கருப்பு என்று மண்ணின் அடிப்படையிலும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கிறது. இதில் வெள்ளை‘பிராமணர்’களுக்கும் சிவப்பு சத்திரியர்களுக்கும்,மஞ்சள் வைசியர்களுக்கும், கருப்பு சூத்திரர்களுக்கும் நல்லது என்று பரிந்துரைக்கிறது. வேத வியாஸ் என்றஒரு பார்ப்பன அய்.ஏ.எஸ். அதிகாரி, ‘வாஸ்து’வைப்பற்றி எழுதிய ஒரு நூலில், இந்த வர்ணாஸ்ரமப்பிரிவை நியாயப்படுத்தி எழுதியிருக்கிறார். இத்தகைய மனநிலையில் உள்ள அதிகாரிகள், மக்களுக்குஎப்படிநியாயம் வழங்குவார்கள்?

வாஸ்துவின் பலன் - வீட்டின் உரிமையாளர்க்குப்போய்ச் சேருமா? அல்லது குடியிருப்போருக்குப்போய்ச் சேருமா என்பதில் வாஸ்து பண்டிதர்களுக்குள்ளே ஒருமித்த கருத்து கிடையாது. இந்தக்குழப்பத்துக்குக் காரணம் உண்டு. வாஸ்து சாஸ்திரம்எழுதப்பட்ட காலங்களில் வீடுகளை வாடகைக்கு விடும் வழக்கமே கிடையாது. வீட்டின் உரிமையாளர்கள்தான் வீடுகளில் இருந்தார்கள். எனவே,வாஸ்துகளின் பலன் உரிமையாளர்களுக்குத்தான் சொல்லப்பட்டது. இப்போத வீடுகள் வாடகைக்குவிடப்படும் காலம்.

இப்போது வாஸ்து பண்டிதர்கள்தங்கள் பிழைப்பை விரிவுபடுத்த, குடியிருப்போருக்கும் அதன் தாக்கம் இருக்கும் என்கிறார்கள்.வேறு சிலர் இதை மறுக்கிறார்கள். வாஸ்துசாஸ்திரத்துக்கு எதிரானதாகக் கட்டப்பட்டவீடுகளில்குடியிருப்போருக்கு பல சங்கடங்கள்ஏற்படுவதாக, ஒரு சில சம்பவங்களைச் சுட்டிக் காட்டி, வாஸ்துவை விஞ்ஞானம் என்று பரப்பமுயற்சிக்கிறார்கள். இந்த வாஸ்து சாத்திரங்கள்காலத்துக்கு ஒவ்வாதவை என்பதற்கு சில இதோ சில உதாரணங்கள்:$நேசமணி $ராம சாஸ்திரி என்ற பிரபல வாஸ்துபண்டிதர் ‘கிரஹவாஸ்து’ என்று தெலுங்கில் ஒருநூல் எழுதியிருக்கிறார்.

வீட்டின் முன் வாசலுக்குஎதிரே நீர் ஓட்டம் இருந்தால், அந்த வீட்டில் பணச்செலவு மிகஅதிகமாக இருக்கும். உணவுப்பொருள்கள் வீண்விரயமாகும் என்றும் எழுதியிருக்கிறார்.இப்போது நவீன குடியிருப்புகளிலும் வீட்டுக்குமுன் தான் - பூமிக்கடியில் தண்ணீர் குழாயும்,சாக்கடை ஓடுவதற்கான குழாய்களும் அமைக்கப்படுகின்றன.

இந்த வீடுகள் எல்லாவற்றிலுமே, வீண்விரயச்செலவுகளும், உணவுப் பொருள்கள் நாசமும்நடப்பதாக நாம் முடிவுக்கு வந்துவிட முடியுமா?அதேபோல் வீட்டு வாசல் கதவுக்கு முன்னால் தூண்களோ, கம்பமோ இருந்தால், வீட்டில் உள்ளபெண் கெட்டவளாகவோ அல்லது நன்னடத்தைஇல்லாதவளாகவோ இருப்பாள் என்றும் அந்நூல் கூறுகிறது. இதற்காக வீட்டின் முன் மின்சாரத்துறையோ, தொலைபேசித் துறையோ அமைக்கும்மின் கம்பங்களை எல்லாம் அகற்றிட வேண்டும் என்று சொல்ல முடியுமா?அப்படிப்பட்ட வீடுகளில் உள்ள பெண்கள் எல்லாம் நடத்தைக் கெட்டவர்கள் என்று கூறிடமுடியுமா? அந்தப் பெண்கள், இந்த நூலின் மீது இந்தஅவமதிப்புக்காக நீதிமன்றத்தில் வழக்குக்கூட தொடர முடியும்.

வீட்டுக்கு முன் மரம் நிற்பதுகூட மகனின்மரணத்துக்கும், பல் வலிக்கும் காரணமாகிவிடும்என்கிறது இந்நூல். சாலை ஓர மரங்களை எல்லாம்வெட்டிவிட வேண்டியதுதானா? இந்த மரங்களால்எவ்வளவோ பயன் கிடைக்கிறதே! வீட்டுக்கு எதிரேமரங்கள் நிற்பதால் ஏற்படக் கூடிய 16 கேடுகளைஇந்நூல் பட்டியலிட்டுள்ளது. இதுதான் வாஸ்துசாஸ்திரம் என்றால் இதைவிட வேறு அபத்தம்இருக்க முடியுமா?1981ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதிஅய்தராபாத் நகரத்தில் பஞ்சக்குட்டா எனும் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடம்சரிந்து விழுந்தது. அப்போது யாரும் குடிவரவில்லை.எனவே உயிர்ச்சேதம் இல்லாமல் போய்விட்டது.

பொறியாளர்கள் சரியாகக் கட்டவில்லை என்று சிலர்கூறினார்கள். இன்னும் சிலர் கட்டிடம், வாஸ்துசாஸ்திரப்படி அமையாததுதான் காரணம்என்றார்கள். பத்திரிகையாளர்கள் விசாரித்த போதுதான், ஒரு அதிர்ச்சியான உண்மை வெளி வந்தது.‘வாஸ்து சாஸ்திரத்தில்’ சர்வதேச புகழ்வாய்ந்தவராக சொல்லப்படும் பி.என்.ரெட்டிஎன்பவர்தான் இந்த கட்டிடத்துக்கு திட்டமிட்டு, வரைபடம் தயாரித்திருக்கிறார்.

வாஸ்து சாஸ்திரத்தில்ஊறிப் போன சர்வதேச புகழ் பெற்ற நிபுணரால்உருவாக்கப்பட்ட கட்டிடமே, கட்டியவுடன் இடிந்துவிழுந்து விட்டதற்குக் காரணம். என்ன? இதுதான்வாஸ்துவின் மகிமையா? சக்தியா?வாஸ்து சாஸ்திரம் - உலகம் முழுமைக்கும் பொருந்தக் கூடியது என்றும், எல்லா நாட்டினரும்ஏற்றுக் கொள்கிறார்கள் என்றும் வாஸ்து பண்டிதர்கள்கூறுகிறார்கள்.

இது உண்மையல்ல. உலகின் பலநாடுகளில் கட்டப்படும் பல அடுக்குக் கட்டிடங்கள்வாஸ்து சாஸ்திரத்துக்கு எதிராகவே கட்டப்பட்டுள்ளன. அவைகள் எல்லாம் உறுதியான கட்டிடங்களாகவே இருக்கின்றன. மக்களும் மகிழ்ச்சியோடு அனைத்து அடிப்படை வசதிகளோடு தான்வாழ்கிறார்கள். இவை எல்லாம் தெரிந்தும்கூட,வாஸ்து பண்டிதர்கள், உலக நாடுகளைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, பொய்யைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

சென்னை நகரில் கடந்த ஆண்டுசெம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதால் பலபகுதிகளில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. ‘வாஸ்து’பார்த்து கட்டிய வீடுகளும் அதில் ஏராளம் உண்டு.அந்த வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது; தப்பவில்லை. குஜராத் பூகம்பத்தில் வீடுகள் பகுதிபகுதியாக சரிந்து வீழ்ந்தன. வாஸ்து பார்த்து கட்டியவீடுகள் தப்பிவிடவில்லை.

சென்னை‘மவுலிவாக்கம்’ அடுக்குமாடி குடியிருப்பு இடிந்தவிழுந்தது அல்லவா? அந்த வீடுகளும் வாஸ்துபார்த்து கட்டியவைதான்.வீடுகள் பயன் கருதி கட்டப்பட வேண்டும்.வாஸ்து சாஸ்திரம் கழிவறைகள் கட்டுவதையேஅனுமதிக்கவில்லை. அறைகளுக்குள்ளே கழிவறைவசதியுடன் (அட்டாச்சிடு பாத்ரூம்) வீடு கட்டுவதற்குஎந்த வாஸ்து சாஸ்திரம் அனுமதிக்கிறது?

Pin It