தோழர் சீமானின் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தோழர் மணி செந்தில் அவர்கள், தி.வி.க. தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களுக்கு ஒரு திறந்த மடலை எழுதியுள்ளார். தனது தலைவரைப் போலவே எவ்வித சான்றுகளும் இன்றி ஒரு முழுநீள மடலைத் தயாரித்துள்ளார். சில முக்கியமான பொய்களுக்கு மட்டும் பதில் தர வேண்டியுள்ளது.
இலை மலர்ந்தால் ஈழம் மலருமா?
“இனம் அழிந்தபோது காங்கிரசை வீழ்த்த, அந்த காலகட்டத்தில் ஈழம் பெற்றுத் தருவேன் என்று உறுதியளித்த ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்கிற முடிவினை நீங்கள் தானே எடுத்தீர்கள்..?? இந்த நொடி வரை அண்ணன் சீமான் மீது ஒரு விமர்சனமாக வைக்கப்படுகிற அந்த முக்கிய முடிவினை எடுத்தது நீங்கள் தானே..??”
2009 நாடாளுமன்றத் தேர்தலில், பெரியார் திராவிடர் கழகம், காங்சிரசுக் கூட்டணியை எதிர்த்துத் தேர்தலைச் சந்தித்தது உண்மை. தேர்தல் குறித்து முடிவெடுக்க, 29.03.2009 அன்று சேலத்தில் பெ.தி.க.வின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் கூடியது. நானும் அக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன். அக்கூட்டம் நடைபெறும் போது, தலைவர் கொளத்தூர் மணி சிறையில் இருந்தார். தோழர் சீமானும் கூட அப்போது சிறையில் தான் இருந்தார்.
அப்போது, காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் மட்டும், காங்கிரசைத் தோற்கடிக்க, அதற்கு எதிராகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்வது என்றும், மற்ற தொகுதிகளில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் தீவிரமான எதிர்ப் பிரச்சாரம் - தி.மு.க. போட்டியிடும் இடங்களில் எதிர்த்து வாக்களிப்பது மட்டும் என்ற நிலைப்பாடு தான் அன்று அறிவிக்கப்பட்டது. அதாவது தி.மு.க.வையும், காங்கிரசையும் ஒரே தளத்தில் வைத்து முடிவெடுக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்தச் செயற்குழு நடந்த நாளில் பொதுச் செயலாளர்கள் கோவை இராமக்கிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது,
“தேர்தல் முடிவுக்குப் பிறகு இப்போதைய கூட்டணியில் இருப்பவர்கள் அப்படியே நீடிப்பார்களா என்பது சந்தேகம்தான் என்றாலும், இன்றைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே இந்த முடிவுகளை எடுத்துள்ளோம்” - பெரியார் முழக்கம் 02.04.2009
என்று கூறியுள்ளனர். மிகத் தெளிவாக, “இன்றைய சூழ்நிலையில்” என்று தான் அறிவித்துள்ளனர். தலைமுறை தலைமுறையாக நாங்கள் இதே போன்ற முடிவைத்தான் எடுப்போம் என பெ.தி.க. எந்த இடத்திலும் அறிவிக்கவில்லை.
பெ.தி.க.வின் மாநிலச் செயற்குழு முடிவுகளுக்குப் பிறகு, தோழர் கொளத்தூர் மணி அவர்களிடம் குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் ஒரு நேர்காணலை எடுத்து வெளியிட்டது. அதில் அவர் மிகத் தெளிவான ஒரு பதிலைக் கூறியுள்ளார். மணிசெந்திலுக்கும், அவரது தலைவருக்கும் அதிலேயே பதில் உள்ளது.
“ஜெயலலிதா எப்போதுமே புலிகளுக்கு எதிராக இருப்பவர். தேர்தலுக்காக ஈழ ஆதரவு வேஷம் போடுகிறார் என்ற பேச்சு உண்டே?
உண்மைதான். விடுதலைப் புலிகளை கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பவர் ஜெயலலிதா. எதிர்காலத்தில் அவர் எப்படியிருப்பார் என்றும் சொல்ல முடியாது. ஆனால், தேர்தலுக்காகவாவது தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கு இணக்கமாக - வேஷத்துக்காகவாவது ‘தனி ஈழம்’ என்று பேசுகிறார்.
இந்தத் தேர்தல் வெற்றியால் ஏற்படும் ஆட்சி மாற்றம் ஈழத் தமிழர்களின் எல்லா உரிமைகளையும் மீட்டுக் கொடுத்துவிடும் என்று நாங்கள் நம்பவில்லை. ஆனால், ‘கருப்பனைக் கட்டி வைத்து அடிக்கிற அடியில், வேலன் வேலியை முறித்துக் கொண்டு ஓட வேண்டும்’ என நாட்டுப்புற சொலவடை உண்டு. அதுபோல இந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு விழுகின்ற அடி, தமிழின உணர்வுகளை மதிக்காத எல்லோருக்கும் நல்ல புத்தி கற்பிக்கும் என்றே கருதுகிறோம்.
மேலும் நாங்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் எனக் கோரவில்லை. எங்களுக்கு காங்கிரசை ஒழிப்பதுதான் நோக்கமே தவிர மற்றவர்களை ஆதரிப்பது என்பது அல்ல”
- கொளத்தூர் மணி, - குமுதம் ரிப்போர்ட்டர் 16.04.2009
பெ.தி.க. பொதுச் செயலாளர்களோ, தலைவரோ “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்ற தவறான அரசியல் மூடநம்பிக்கைகளை எப்போதும், யாரிடமும் விதைத்ததில்லை. “ஜெயலலிதா வேசம் போடுகிறார்” என்றும், “ஆட்சி மாற்றத்தால் ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைத்து விடாது” என்றும் பதிவு செய்துள்ளனர். அதே காலகட்டத்தில், சீமான் பேசிய பேச்சுக்களையும், பெ.தி.க.வின் நிலைப்பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு மணி செந்திலுக்குரிய கட்டுக்கதை தயாரிக்கும் திறன் புரியவரும்.
மேலும் வெறும் ஈழவிடுதலை என்று தமிழ்த் தேசிய அடிப்படையிலோ, தமிழீழ தேசிய அடிப்படையிலோ பெ.தி.க. அப்போது முடிவெடுக்கவில்லை. ஆரிய பார்ப்பன எதிர்ப்பின் ஒரு வடிவமாகத்தான் ஈழ விடுதலை ஆதரவு என்பதும், காங்கிரஸ் எதிர்ப்பு என்பதும் இருந்தது. தேர்தல் முடிவுகள் எடுக்கப்பட்ட காலத்தில், பெரியார் முழக்கம் வார இதழில் வெளியான சில தலையங்கங்கள், செய்திகளின் தலைப்புகளைக் கவனியுங்கள்.
“பார்ப்பனர்களின் பூணுால் இறுமாப்பு” “ஆனந்தக் கடலில் அவாள் கூட்டம்” பெரியார் முழக்கம் 30.1.2009
“தமிழீழம் கிடைச்சுட்டா நம்மளவா கதி என்னவாகும்?” பெரியார் முழக்கம் 26.02.2009.
“அயர்லாந்து அன்னிபெசண்ட் முதல் இத்தாலி சோனியா வரை, காங்கிரசின் கறைபடிந்த அத்தியாயங்கள்” 09.04.2009
இதழ்ச் செய்திகள் மட்டுமல்ல; அதே ஆண்டு தேர்தல் நேரத்தில் “ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி” என்ற நூலின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. தோழர் விடுதலை இராசேந்திரன் எழுதிய அந்நூலில் ஈழத்திற்கு எதிரான உளவுத் துறை, வெளியுறவுத் துறை சார்ந்த பார்ப்பனர்களின் செயல்பாடுகள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.
2009 இல் பார்ப்பன இனம் விடுதலைப் புலிகளை அழிக்கத் துடித்தது. 2019 இல் அதே பார்ப்பன இனம் திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்கத் துடிக்கிறது. நாம் என்ன ஆயுதத்தைக் கையில் எடுப்பது என்பதைப் பார்ப்பனர்கள் தான் முடிவு செய்கின்றனர். அவர்கள் மாறி மாறி நிலைப்பாடு எடுக்கும் போது, நாமும் மாறித் தான் ஆக வேண்டும்.
இவற்றை எல்லாம் விட்டுவிடுவோம். ஒரு வாதத்திற்காக, “மணி அண்ணன் தான் முடிவெடுத்தார்” என்றே வைத்துக் கொண்டாலும், அந்த அண்ணனே இப்போது தி.மு.க.வை ஆதரிக்கின்ற போது நீங்கள் ஏன் மாறுபடுகிறீர்கள்? அப்படியானால் 2009 இல் மணி அண்ணனுக்காக, நீங்கள் அ.தி.மு.க.வை ஆதரிக்க வில்லை; வேறு ஏதோ காரணம் இருந்திருக்கிறது என்பது உறுதி.
நாம் தமிழர் தொடக்கத்திலேயே கொளத்தூர் மணி எதிர்ப்பு
மதுரையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அறுத்தெறியும் வாரீர் என்கின்ற நாம் தமிழரின் முதல் நிகழ்ச்சிக்கு பனியன் அச்சிட்டு தந்தது, மேடை வடிவமைப்பை கண்காணித்தது, உள்ளிட்ட அனைத்தையும் நீங்கள் தானே அண்ணா செய்தீர்கள்..??
என்ற மணிசெந்திலின் அடுத்த பொய்யைப் பற்றிப் பார்ப்போம்.
2009 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஈழ விடுதலை தொடர்பான ஓரிரு போராட்டங்களில் பெ.தி.கவும், சீமானும் ஒன்றாகப் பங்கேற்றனர். ஆனால் அப்போதே தோழர் சீமான் பெரியாரைப் பற்றியும், திராவிடம் எனும் கருத்தியல் பற்றியும் எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். அதனால் பெ.தி.க.வுக்குள் என்னைப் போன்ற பல பொறுப்பாளர்கள் சீமானைக் கூட்டங்களுக்கு அழைக்க வேண்டாம் என்று சக பொறுப்பாளர்களிடம் பரப்புரை செய்தோம். வலைத்தளங்களில் தோழர் சீமானுக்கு எதிராகக் கடுமையாக பதில் கட்டுரைகளை எழுதியுள்ளோம். இன்றும் அவை தேதியுடன் இணையதளங்களில் உள்ளன. அவற்றில் ஒரு கட்டுரை பெ.தி.க.வின் அதிகாரப்பூர்வ இதழான பெரியார் முழக்கத்திலேயே வெளியானது. அப்போதே பெ.தி.க.வுக்கும், தோழர் சீமானுக்கும் இடையே கொள்கை - கருத்து ரீதியிலான முரண்பாடு வெளிப்படையாகி விட்டது.
“விரல் ரேகைப் பதிவுச் சட்டம்: சில வரலாற்றுத் தகவல்கள்” 31.12.2009 பெரியார் முழக்கத்தில் வெளியிடப்பட்டது. தோழர் சீமானின் கருத்துக்களுக்கு எதிர்வினையாக அக்கட்டுரை எழுதப்பட்டது. இவையெல்லாம் நாம் தமிழர் கட்சி தொடங்குவதற்கு முன்பு நடந்தவை. நாம் தமிழர் எனும் அமைப்பு தொடங்கப்படுவதாக அறிவிப்பு வந்த உடனேயே கொளத்தூர் மணி அவர்கள், பெரியார் முழக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை...
“‘நாம் தமிழர்’ என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சி 18.5.2010 அன்று மதுரையில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான பரப்புரைகளும், விளம்பரங்களும், அறிக்கைகளும் அவ்வியக்கத் தோழர்களால் முனைப்புடன் பரப்பப்படுகின்றன. அவர்களோடு சேர்ந்து விளம்பரப்படுத்த அல்ல நாம் இதை எழுதுவது! பின் எதற்கு?
விளம்பர அறிக்கை தாங்கி நிற்கும் சில செய்திகளைப் பற்றிய நமது கருத்துகளைத் தெரியப்படுத்த, தெளிவுபடுத்தத்தான் இதை எழுத நேர்ந்தது.
தோழர் சீமான் நமது பெரியார் திராவிடர் கழக மேடைகளில் பெரியாரின் கருத்துகளை சிறப்பாக, அழுத்தமாகப் பேசி வந்தவர்தான். ஈழ விடுதலையில் அவர் கொண்டுள்ள அக்கறையும், ஆர்வமும் போற்றத்தக்கதுதான். நமது இயக்கத் தோழர்களிடம் நல்லுறவும், இயக்க முன்னணியினரிடம் பெரு மதிப்பும் கொண்டவர்தான். ஆனாலும், தங்க ஊசி என்பதற்காக கண்ணைக் குத்தும்போதும் நாம் அமைதியாக இருந்துவிட முடியாது; இருந்துவிடக் கூடாது.
அதுவும் குறிப்பாக “அறிஞர்” குணாவின் பாதையில் ‘தமிழர் - தமிழரல்லாதவர்’; ‘திராவிடர் - திராவிடம்’ பற்றி அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற கருத்துக்களை நாம் உரிய வகையில் விளக்கவும், அப்பொய்மைகளை அம்பலப்படுத்தவுமான கடமை நமக்கு உண்டு; நமக்கு மட்டுமே உண்டு. எனவேதான் இதை நாம் எழுதலானோம்.
புதிதாக புறப்பட இருக்கிற ‘நாம் தமிழர்’ தமிழர்களை ஆரிய எதிர்ப்பாளர்களாக அடையாளப்படுத்திய பெரியாரின் பார்வையைத் தூக்கி எறிந்துவிட்டு, திராவிடர் எதிர்ப்பாளராக அடையாளப் படுத்துவதில் முனைப்புக் காட்டத் தொடங்கிவிட்டது.
பெரியார் முன்னிறுத்திய ‘திராவிடர்’ என்பது தமிழர்களுக்கான - தமிழர்களை பார்ப்பனிய அடிமைப் பண்பாட்டிலிருந்து மீட்டெடுக்கும் குறிச்சொல் என்ற அடிப்படை உண்மையையே திசை திருப்பி, அது ஏதோ கேரளா, கர்நாடக, ஆந்திர மாநிலத்தில் வாழும் இனங்களிடம் தமிழர்களை அடிமைப் படுத்துவதாக ஒரு சித்திரத்தை தீட்டிக் காட்ட படாதபாடு படுகிறார்கள். இதில் அளவில்லாத மகிழ்ச்சி ஆரியத்துக்குத் தான்.
‘அப்பாடா, நாம் தமிழர் வந்துவிட்டது; இனி நமக்கு ஆபத்தில்லை’ என்று அவாள் கூட்டம், மகிழ்ச்சியில் கூத்தாடக் கூடும். தமிழருக்கு அன்றும் இன்றும் என்றும் கேடானது ஆரியம். அதற்கு அரண் அமைத்துக் கொண்டிருப்பது இந்தியம்; உண்மையில் தமிழர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஒட்டு மொத்த அடிமைத் தனங்களுக்கும் எதிரான பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுக்கும் வலிமையான போர்வாள் திராவிடர் - திராவிடம் என்ற லட்சியச் சொல்; ஆனால், ‘நாம் தமிழருக்கு’ அவைகள் கசக்கின்றன.
...இன்னும் விரிவாக எழுதலாம்; திராவிடர் எதிர்ப்பை அவர்கள் தொடரும்போது அதற்கான விளக்கங்களும் பதில்களும் வரத்தானே செய்யும்? அவைகளுக்கெல்லாம் இந்த விளக்கம் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே!
- கொளத்தூர் தா.செ. மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம், 19.4.2010 பெரியார் முழக்கம் 22.04.2010
நாம் தமிழர் இயக்கம் தொடர்பாக முதல் அறிவிப்பு வந்த உடனேயே தோழர் கொளத்தூர் மணி உங்களைப் பார்ப்பன அடிமைகளாக வரையறுத்து அம்பலப்படுத்தி விட்டார். நாம் தமிழரின் வருகையானது, பார்ப்பனர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்று பட்டவர்த்தனமாகக் கூறிவிட்டார்.
இவற்றையெல்லாம் பெரியாரிஸ்ட்டுகள் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில், இப்போது 10 ஆண்டுகள் கழித்து “பனியன் அடித்துக் கொடுத்தார்; மேடையை அழகு பார்த்தார்” என்றெல்லாம் ஆமைக்கறி பாணி சீரியல்களைத் தொடங்குகிறார் மணி செந்தில்.
பெரியார் திராவிடர் கழகம் பிரிவுக் காலம்
“உங்களிடமிருந்து அண்ணன் கோவை ராமகிருஷ்ணன் அவர்கள் பிரிந்தபோது ஏற்பட்ட சர்ச்சைகளில் எதுவெல்லாம் விவாதப் பொருளானது என்பது குறித்து இன்று நீங்கள் நினைத்து பார்க்க முடியுமா..??
அந்தக் காலகட்டத்தில் உங்களோடு அரணாக இருந்து தெருத்தெருவாக உங்களோடு அலைந்து, தொண்டை வலிக்க வலிக்க பேசி, வழக்கு செலவுகளுக்காக துண்டேந்தி எல்லோரிடம் வசூலித்து உங்களின் உடன்பிறந்தவனாக நின்றவர் இதே சீமான் தானே..??”
பெரியார் திராவிடர் கழகம் 2012 ஆகஸ்ட் 12 இல், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் என இரண்டாகப் பிரிந்தது. தி.வி.க. தொடங்கிய பிறகு 3 ஆண்டுகள் வரை நடந்த தமிழ்நாடு முழுவதும் நடந்த அனைத்து நிகழ்வுகள், போராட்டங்களின் வரவு செலவுகள், நிதிதிரட்டல், நன்கொடைப் பட்டியல் என அனைத்தும் தலைமைச் செயற்குழுக்களில் பார்வைக்கு வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டவைதான். அவை பெரும்பாலும் பெரியார் முழக்கத்திலும் வெளியாகியுள்ளன. அவை எவற்றிலும் தோழர் சீமான் துண்டேந்தி வசூலித்ததாக எந்தத் தகவலும் கிடையாது. குறிப்பாக, நிகழ்வுகளை நடத்திய தோழர்கள் அனைவரும் இளைஞர்கள் தான். இன்னும் உயிருடன் தான் உள்ளனர். யாராவது ஒருவர் சீமான் துண்டேந்தி வசூலித்துக் கொடுத்ததாகக் கூறினால் அதை ஏற்கலாம்.
சரி, ஒரு வாதத்திற்காக, தோழர் சீமான் அவர்கள் இரகசியமாக தி.வி.க.வுக்கு நன்கொடை கொடுத்திருப்பார் என்று கூடக் கூறலாம். அப்படியானால் மேலும் ஒரு கேள்வி எழுகிறது. தோழர் கொளத்தூர் மணி அவர்கள், தி.வி.க.வின் தோற்றம் குறித்தும், அதன் செயல்பாடுகள், இலக்குகள் பற்றியும் ஜூனியர் விகடன் இதழுக்கு ஒரு நேர்காணல் கொடுத்துள்ளார். அந்த நேர்காணலைப் பார்ப்போம்.
“ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை ஆகியவையே பெரியாரியலின் முக்கிய அம்சங்கள். தமிழர் நலன்கூட இவற்றின் மூலமாக வரும் தமிழர் நலன்தானே தவிர, வெறும் தமிழர் நலன் என்பது பெரியாரியலின் அஜென்டாவில் இல்லை. அப்படி இருக்கையில் ஈழத்தமிழர் நலன் என்பது இன்னமும் குறைந்த சதவிகிதமே. தமிழர் நலனுக்கு 20% என்றால் ஈழத்தமிழர் நலனுக்கு 5% இடம் தரலாம். முழுமையான இடத்தை அதற்குத் தர இயலாது” தோழர் கொளத்தூர் மணி, ஜூனியர் விகடன், 08.08.12
தி.வி.க வின் செயல்திட்டங்களில் “தமிழீழத் தமிழர் நலன்” என்பதற்கு வெறும் 5 விழுக்காடு தான் இடமளிக்க முடியும் எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடந்த தி.வி.க. தொடக்க விழாவிலும் அதை விளக்கமாகப் பேசியுள்ளார்.
“தமிழீழ விடுதலையை நான் தான் பெற்றுக் கொடுக்கப் போகிறேன்” என்று களமாடிக் கொண்டிருக்கும் தோழர் சீமான், அந்த ஈழத்தமிழர் நலனுக்கு வெறும் 5 விழுக்காடு தான் இடம் தர முடியும் என்று கூறிய தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்குத் தெருத்தெருவாக அலைந்து, தொண்டை வலிக்க வலிக்கக் கத்தி, துண்டேந்தி நிதி திரட்டிக் கொடுத்தது ஏன்? தமிழீழ விடுதலையில் அவருக்கு அவ்வளவு தான் அக்கறையா? ஒருபக்கம் ஈழத்தமிழர் நலனுக்காக உழைப்பதாகச் சொல்லிக் கொண்டு, மறுபக்கம் 5 விழுக்காடு மட்டுமே இயங்கும் அமைப்புக்கு நன்கொடை தந்ததாகக் கூறிக் கொள்வது யாரை ஏமாற்ற?
2012 லேயே வெளிவந்துவிட்ட ஒரு அறிக்கையை - அதன் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்புத் தலைவரை அரைகுறையாகப் புரிந்து கொண்டு கதை எழுதினால் இப்படித்தான் லாஜிக் இடிக்கும். அடுத்த கதையைப் படிப்போம்.
“அண்ணன் சீமான் வெகுஜன அரசியல் களத்தில், தமிழக நலன் சார்ந்த போராட்ட களங்களில் தொடர்ச்சியாக பங்கேற்று மக்களோடு மக்களாக நின்று கொண்டிருக்கிறார். அவருக்கென தனிப்பட்ட விளம்பரம் எதுவும் தேவை இல்லை. ஆனால் நீங்கள் கடைசியாக செய்த போராட்டம் என்ன அண்ணா..?? காஷ்மீரிகளுக்காக, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து, பாஜக அரசின் இந்துத்துவ திணிப்பை எதிர்த்து, தமிழக நலன் சார்ந்த போராட்டங்கள் ஏதாவது நீங்கள் கடைசியாக செய்த போராட்டம் என்ன அண்ணா..??”
கடந்த 10 ஆண்டுகளாக பார்ப்பன பா.ஜ.க. அரசு, மிகத் தீவிரமாக பார்ப்பன ஆதிக்க வாழ்க்கை முறையைத் திணித்து வருகிறது. அது, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, சமஸ்கிருதப் பண்பாட்டுத் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை, புதிய பொருளாதாரக் கொள்கை என பல வடிவங்களில் நடந்து வருகிறது. இவற்றுக்கு எதிரான சரியான போராட்டம் என்றால், அது இந்து மத அழிப்பு, இந்து மத சாஸ்திரங்களின் அடிப்படையிலான பண்பாடு, பழக்க வழக்கங்களுக்கு எதிராகப் போராடுவது என்பது தான்.
அந்தத் தொடர் போராட்டத்தை தி.க, தி.வி.க, த.பெ.தி.க. தோழர்கள் அனைவதும் மிகச் சிறப்பாகவே நடத்தி வருகின்றனர். தினந்தோறும் தங்களது வீடுகளிலிருந்தே, தங்களது உறவினர், நண்பர்களிடமிருந்தே - அவர்களை எதிர்த்தே அந்தப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அமைப்பு ரீதியாக வாய்ப்புள்ள நேரங்களில் பல போராட்டங்களை அனைத்து அமைப்புகளுமே நடத்தி வருகின்றன.
ஆனால், அந்த இந்து மத இழிவுகளுக்கு தமிழ்த் தேசியச் சாயம் பூசி, ஆரியப் பார்ப்பனர்களுக்குக் காவடி தூக்கும் இழிவான வேலையை ஒரு கருப்புச் சட்டைக்காரன்கூடச் செய்ததில்லை. மாயோன் பெருவிழா, முருகனுக்குக் காவடி தூக்குவது, வேல்கம்பைத் தூக்கிக் கொண்டு பழனிக்குப் பாத யாத்திரை செல்வது, கோவில் கும்பாபிசேகம் எனும் இழிவுகளுக்கு விளம்பரம் வைப்பது, ஜாதி, பாலின, தீண்டாமைக் கொடுமைகளுக்குப் பயிற்சி மய்யங்களாக இருக்கும் கிராமக் கோவில்கள் - சிறு, பெரு தெய்வ விழாக்கள், நாட்டார் தெய்வ - குல தெய்வ வழிபாடுகளுக்குத் தமிழர் பண்பாட்டு மீட்பு என்ற பெயரில் இந்து மத இழிவுகளைத் திணிப்பது - என்பது போன்ற ஆரிய அடிமைச் சேவையை எந்தக் கருப்புச் சட்டைக்காரனும் செய்ததில்லை.
இந்துத்துவத்திற்கு எதிராகப் போராடுகிறார்களோ இல்லையோ, அந்த இந்து மதப் பண்பாடுகளை நடைமுறைப்படுத்தத் துடிக்கும் பார்ப்பனர்களுக்குப் பல்லக்குத் தூக்கும் வேலையை திராவிடர் இயக்கத்துக்காரர்கள் செய்வதே இல்லை.
திராவிடர் கழகச் செயல்வீரர் தோழர் சாக்ரடீஸ் நினைவு நாளில், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் தோழர் சுபவீ, கவிஞர் அறிவுமதி போன்றோரின் முயற்சிக்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவர் தோழர் கி.வீரமணி அவர்கள் திராவிடர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புக்குப் பச்சைக் கொடி காட்டினார். இளந்திராவிடர் எனும் பெயரில் சமூக வலைத்தளங்களில் இயங்கும் திராவிடர் இயக்கத் தோழர்கள் ஒன்றிணைந்தனர். இதன் தொடர்ச்சியாக, பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பு எனும் பெயரில் அனைத்து திராவிடர் இயக்கங்களும், பல தமிழ்த் தேசிய இயக்கங்களும் ஒன்றிணைந்து இயங்குகின்றன.
இந்தக் கூட்டமைப்பின் செயல்பாடுகள் மீது நமக்குப் பல மாற்றுக் கருத்துக்களும், முரண்களும் உள்ளன. இருந்தாலும் தோழர்கள் திருமுருகன், பொழிலன் ஆகியோர், நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் “இயக்க அரசியல்” எனும் தளத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்கள். அதற்காகவே அவர்களைப் பாராட்ட வேண்டும்.
இயக்க அரசியல் தளத்திலிருந்து தனிமைப்பட்டுப் போன நாம் தமிழர் கட்சி இப்போது, இந்த ஒருங்கிணைப்பை ஒழிக்க நினைக்கிறது. தி.மு.க. பெற்றுள்ள கொள்கை ரீதியான - அழுத்தமான ஆதரவுத் தளத்தைச் சிதைக்கப் பார்க்கிறது. அதன் வெளிப்பாடாகத் தான் இத்தகைய பேச்சுக்களும் மடல்களும் வெளிவருகின்றன.
இறுதியாக, திராவிடர் இயக்கத் தலைவர்களுக்கு எனது ஒரே வேண்டுகோள்.
தோழர் சீமான் போன்றவர்களை இன்னும் விரைவாக அடையாளம் கண்டு, அவர்களைப் புறக்கணிக்க வேண்டும். ஒருவர் பெரியாரை வாழ்த்திப் பேசுவதை மட்டுமே அடிப்படையாக வைக்காமல், அவரது செயல்பாடுகள், அவரது அமைப்புத் திட்டங்களில் நமக்குள்ள முரண்பாடுகள் ஆகியவற்றை அவ்வப்போது இயக்கத் தோழர்களிடம் தெரிவிக்க வேண்டும். பயிற்சி வகுப்புகளிலோ, கலந்துரையாடல் கூட்டங்களிலோ, நமது தோழமை அமைப்புகளோடு நமக்குள்ள நட்பு முரண்களை விளக்க வேண்டும். பெரியாரியலைத் துளியும் விட்டுக் கொடுக்காமல், முரண்களோடு இணைந்து இயங்கும் முறை பற்றி விளக்க வேண்டும். அது எதிர்காலத்தில் சீமான்கள் உருவாவதைத் தடுக்கும். ஒருவேளை அப்படிப்பட்ட அறிவுறுத்தல்கள் நடந்து கொண்டிருந்தால் அதற்காக எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.
- அதிஅசுரன்