ஒரு அரசியல் கட்சியையோ, இயக்கத்தையோ தலைமை ஏற்று நடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. குறைந்தபட்சம் தன்னுடைய இருத்தலை நியாயப்படுத்தும் அளவிற்காவது அறிவும், ஆற்றலும் இருக்க வேண்டும். இல்லை என்றால் கூடிய விரைவில் மக்கள் மத்தியில் கோமாளியாக காட்சியளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். 'தமிழக அரசியலை புரட்டிப் போட்டு விடுவேன்' எனப் புறப்பட்ட பல பேர் அப்படித்தான் கோமாளியாகி, தனிமைப்படுத்தப்பட்டு, இறுதியில் அரசியல் களத்தில் சீண்டுவார் யாருமற்ற அநாதைகளாய் மாறிப் போனார்கள்.

vijay seeman and simbuஎல்லாக் கட்சிகளும் மக்களுக்கு நன்மை செய்யவே ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லிக் கொள்கின்றார்கள். ஆனால் ஒவ்வொரு கட்சியும் அதற்கான வர்க்கப் பின்புலத்தை கொண்டே இயங்குகின்றது. முதலாளிகளின் பார்வையில் சாமானிய மக்களுக்கான நன்மை எது என்பதும், பாட்டாளி வர்க்கப் பார்வையில் சாமானிய மக்களுக்கான நன்மை எது என்பதும் வேறு வேறானதாகும். முன்னது தர்மகர்த்தா தனத்தையும், பின்னது உரிமையையும் பறைசாற்றுவதாகும். இந்த இரண்டில் ஒன்றை நிச்சயமாக எல்லாக் கட்சிகளும், இயக்கங்களும் பிரதிபலிக்கும். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட கட்சிகள், இயக்கங்கள் தவிர, மற்றுமுள்ள பெரும்பாலான கட்சிகள் கார்ப்ரேட்களின் ஏஜென்டுகள் என்பதும், தர்மகர்த்தா தனத்தை விதந்தோதுபவை என்பதும் தெரியாத ரகசியமில்லை. ஆனால் அரசியல் தத்துவார்த்த அறிவில்லாதவர்கள், எது தனக்கான கட்சி என்பதைக் கண்டுபிடிப்பதில் எப்போதுமே பின்தங்கியே இருக்கின்றார்கள்.

தங்களையும், தங்கள் மண்ணையும் அழித்து, கார்ப்ரேட்டுகளுக்கு புரோக்கர் வேலை பார்க்கும் கார்ப்ரேட் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் இருக்கும் மரியாதை, இந்த மண்ணையும், மக்களையும் நேசிப்பதையும், அவர்களை சுரண்டலின் பிடியில் இருந்து விடுவிப்பதையும் மட்டுமே செய்து கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் கிடைப்பதில்லை. மக்களின் இந்த அரசியல் பாமரத்தனம்தான் தமிழ்நாட்டில் பல லும்பன் கட்சிகள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்துள்ளது. அப்படி தமிழ்நாட்டில் தோன்றியுள்ள லும்பன் கட்சிகளில் மிக முக்கியமானது நாம் தமிழர் கட்சியாகும்.

எந்தவித சுய அறிவும் அற்ற, அரசியல் ஆய்வுத் திறனற்ற, கள எதார்த்தம் தெரியாத, கள அரசியலையே புறக்கணிக்கும், வாட்ஸ் அப், பேஸ்புக்குகளில் மட்டுமே மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு நான்காம் தர கும்பல் தான் இன்று அந்தக் கட்சியின் பிரதான அடித்தளமாய் இருப்பவர்கள். இவர்களின் முழு நேரப் பணி என்பது சீமானின் பேச்சுக்களை எடிட் செய்து பரப்புவது, வந்தேறிக் கதைகளையும், திருட்டு திராவிடக் கதைகளையும் புனைவது, பார்ப்பனியத்தை தமிழ்மையப்படுத்துவது, சாதியை வைத்து இனவெறிக்கு கொம்பு சீவிவிடுவது, அப்புறம் சீமான் இந்த உலகில் அவதரித்ததற்கான திருஅவதார மகிமைகளையும், அவரது அற்புதங்களையும் கேட்பவரின் ஐம்புலன்களும் நடுங்கும் வகையில் பிரசங்கம் செய்வது.

சரி தம்பிகள்தான் தரம்கெட்டவர்களாக, சொந்த கட்சிக்காரனையே ஏமாற்றி பணம் பிடுங்கும் மோசடிப் பேர்வழியாக, எந்த மாபாதகத்தையும் செய்யத் தயங்காதவர்களாக இருக்கின்றார்கள், ஆனால் அண்ணன் சீமான் பெரிய அறிவுஜீவி, தமிழ் மக்களின் நலம் நாடும் நற்பண்பாளர் என்று பார்த்தால், தம்பிகளைவிட அண்ணன் ஒரு படி மேலே இருக்கின்றார். இதை ஏன் சொல்கின்றோம் என்றால், சில நாட்களுக்கு முன்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பேசிய சீமான், நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தால் அதனைத் தான் வரவேற்பதாகவும், ரஜினிக்கு அடுத்த "சூப்பர் ஸ்டார்" விஜய்தான் எனவும் குறிப்பிட்டார். மேலும் விஜய் போன்றே அசாத்திய திறமை சிம்புவுக்கு உள்ளதென்றும், அவரின் குறைகளை சரி செய்து, அவரை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டிய தேவை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதுதான் சீமான் அவர்களின் உண்மையான அரசியல் முகம். தமிழ்நாட்டில் இருக்கும் எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரிடமும் இது போன்ற பேச்சுக்களை ஒருநாளும் நீங்கள் பார்க்க முடியாது. அது கார்ப்ரேட் கட்சியாக இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் அன்றாட அரசியல் நிகழ்வுகளை அவதானித்து கருத்து சொல்வது, அறிக்கை விடுவது, ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்குத் திட்டமிடுவது என தங்களது வேலையை முறைப்படுத்திக் கொள்வார்கள். கள அரசியல் செய்ய இது எல்லாம் மிக முக்கியமானது. ஆனால் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கு இது எல்லாம் தேவையே இல்லை. அதனால்தான் சீமான் அவர்களால் அல்பத்தனமான காரியங்களின் மீதெல்லாம் கவனத்தைக் குவிக்க முடிகின்றது.

கனிம வளக் கொள்ளை, பெரும் வேலையிழப்புகள், பொருளாதார நெருக்கடி, பண்பாட்டுச் சீரழிவு, உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, மூர்க்கமாகத் திணிக்கப்படும் தனியார்மய, தாராளமய, பார்ப்பனியக் கொள்கைகள் - என பல்வேறு பிரச்சினைகளை நாடு சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. இவற்றுக்கு எதிராக சமூக அக்கறை உள்ள கட்சிகளும், இயக்கங்களும் மக்களை ஒருங்கிணைத்து, களப் போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றன, ஆனால் இவை எதையும் செய்யாமல், செய்யத் திராணியில்லாமல் தமிழ்நாட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என விவாதம் செய்து கொண்டிருக்கின்றார் சீமான் அவர்கள். இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினையா? விஜய் அடுத்த சூப்பர் ஸ்டாராக இருந்தால் என்ன? நாசமாய்ப் போனால்தான் என்ன?

மக்கள் நலன் சார்ந்து இயங்கும் ஒரு கட்சியின் தலைவன் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் சீமான், விஜயின் காலைப் பிடிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? விஜய் கட்சி ஆரம்பித்தால் இவர் ஆதரிப்பாராம்! விஜய் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று தமிழ்நாட்டில் எவன் அழுது கொண்டிருக்கின்றான்? ஒருவேளை விஜயின் ரசிகப் புழுக்கள் வேண்டுமானால் அப்படியான எண்ணவோட்டத்தில் இருக்கலாம். ஆனால் தன்மானமும், சுயமரியாதையும் உள்ள எந்த ஒரு தமிழனும், பல தரங்கெட்ட படங்களில் நடித்து, தமிழ்நாட்டைப் பிடித்த சாபக்கேடாக இருக்கும் இது போன்ற சினிமா கழிசடைகள் தங்களை ஆள வேண்டும் என நினைக்க மாட்டார்கள் - அது ரஜினியாக இருந்தலும் சரி, கமலாக இருந்தாலும் சரி.

ஆனால் என்ன செய்தாலும், எப்படிக் கத்தினாலும் கட்டுத்தொகை வாங்கும் அளவிற்குக் கூட ஒட்டு கிடைக்காது என்பதை உணர்ந்துதான், தற்போது சினிமா நடிகர்களுக்கு சோப்பு போடும் வேலையை சீமான் பார்க்கத் தொடங்கியிருக்கின்றார். அதனால்தான் விஜய் போன்ற காரியவாதக் கழிசடைகளையும், போர்னோ நடிகரான சிம்புவையும் தாஜா செய்து கொண்டு இருக்கின்றார். தன்னை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளர்களையே நடுத் தெருவுக்கு கொண்டு வரும் சிம்பு, சீமானின் ஞானக் கண்ணுக்கு மட்டும் அசாத்திய திறமைசாலியாகத் தெரிகின்றார் என்றால், அவரது தம்பிகளைவிட சீமான் பெரிய லும்பன் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சீமானிடம் இருக்கும் அரசியல் என்பது தமிழ்நாட்டில் சினிமாக் கழிசடைகளாலும், மதுவாலும் சீரழிந்துபோய், பெரும் பண்பாட்டுச் சீரழிவில் மூழ்கிக் கிடக்கும் விட்டேத்தி கும்பலை அடிப்படையாகக் கொண்டது. அதை இன்னும் அதிகப்படுத்தும் உத்திதான் சீமான், விஜயையும், சிம்புவையும் ஆதரிப்பது. ஒரு கார்ப்ரேட் கட்சியாகக் கூட இருக்கத் தகுதியற்ற கட்சியாக நாம் தமிழர் கட்சி இருக்கின்றது. சீமான் முன்னெடுக்கும் அரசியல் என்பது தமிழகத்தை கேவலத்தில் இருந்து கழிசடைக்கு இழுத்துச் செல்லும் அரசியல் என்பது தற்போது அம்பலமாகி இருக்கின்றது. தமிழக அரசியல் களத்தில் சீமான் ஒரு கோமாளியாக மாறியிருக்கின்றார். சீமானின் தமிழ்த் தேசியத்தில் ஒரு பக்கம் விஜய், சிம்பு; இன்னொரு பக்கம் மாயோன், முருகன். நினைத்துப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கின்றது. மானமுள்ள அனைவருக்கும் அப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

- செ.கார்கி