சீமான் - செல்வச் செழிப்பில் அல்ல; கொள்கைப்பிடிப்பில்! இவரது மேடை முழக்கங்கள் தமிழக இளைஞர்களுக்கு விருந்து.
பாஞ்சாலங்குறிச்சி, பசும்பொன், வீரநடை என பலப் படங்களை படைத்தாலும் நீண்ட இடைவெளிக்குப்பிறகு இவர் ‘தம்பி'யாய் அவதாரம் எடுத்திருக்கிறார். பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன், புரட்சி செய், ரௌத்ரம் பழகு, நையப்புடை, நினைத்தது முடியும், வெந்து தணியும் காடு போன்ற எரிமலை வாக்கியங்கள் தாங்கி நகரெங்கும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது தம்பி படத்தின் விளம்பரங்கள். சீமான் என்ன சொல்கிறார்...
தம்பி படத்தின் கரு, மனித நேயம். மகாத்மாவும் சுபாஷ் சந்திரபோசும் கலந்த கலவைதான் அவன். அவன் ஒரு போராளி. தோழர் மாவோ, லெனின் போன்றோர்கள் செய்தது ஒருவிதப் புரட்சி என்றால் அய்யா பெரியார் சொன்னது போல், கட்டை வண்டியில் போய்க் கொண்டிருந்த நாம் ஆகாய விமானத்தில் பறப்பதும் ஒருவிதப் புரட்சிதான். குப்பையாய் கிடக்கும் தெருவை சுத்தம் செய்வது ஒருவிதப் புரட்சி தான். ஒரு சாதாரண மனிதன் தன் தெருவில் இருந்து தொடங்கும் புரட்சிதான் இப் படத்தின் கதை.
உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் வன்முறையை எதிர்த்து தம்பி குரல் கொடுக்கிறான். எது வன்முறை? அதன் அளவுகோல் என்ன? ஒரு இனம் அல்லது ஒரு தனி மனிதன் தன்னை தற்காத்துக்கொள்ளும் போராட்டத்தை வன்முறையாகப் பார்க்க இயலாது. தன்னைத் திருப்பித் தாக்கும் வலிமை இல்லையெனத் தெரிந்துகொண்டு ஒருவனைத் தாக்குவதுதான் உலகிலேயே கொடுமையான வன்முறை. அது போன்ற வன்முறையை எதிர்த்துப் போராடும் ஒரு போராளிதான் தம்பி. இந்தத் தம்பியிடம் ஆயுதம் இல்லை. ஆனால் அவன் வார்த்தைகள் துப்பாக்கியிலிருந்து சீறும் தோட்டாக்களைவிட வலிமையானது! ‘மானைச் சுடுபவனுக்கெல்லாம் சிறை, மனிதனைச் சுடுபவனுக்கு தண்டனை இல்லை. என்னடா நாடு இது', போன்ற அனல் பறக்கும் வசனங்களை தம்பி பேசுவான். வன்முறையால் எற்படும் வலி எத்தகையது, அதில் ஏற்படும் இழப்பு எப்பேற்பட்டது என்பதை இப்படத்தில் விவாதிக்கிறேன்.
மரணம் என்பது ஈடில்லா இழப்புதானே. அது நல்லவனாக இருந்தாலும் சரி, ஆட்டோ சங்கர், வீரமணி போன்ற சமூக குற்றவாளிகளாக இருந்தாலும் சரி அவர்களைக் கொன்றபோது கட்டிக்கொண்டு அழ நாலு ஜீவன் இருந்தது. அவர்களின் அழுகை நம்மை பாதித்தது. இதுபோன்ற கொலையையோ அல்லது மரணத்தையோ நியாயப்படுத்த முடியாது என்பதைதான் தம்பியின் கதை வலியுறுத்துகிறது.
மாதவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பா? என்று சிலர் கேட்கிறார்கள். தமிழ் தமிழ் என்று உருகும் எந்த நடிகரும் இப்பாத்திரத்தை ஏற்க முன்வராத நிலையில் மாதவன் ஏற்றார். அவர் எனக்கு கிடைத்த பெரும் பேரு. அவரை ஒரு கருவியாக நான் பயன்படுத்தியிருக்கிறேன். அவரது ஒத்துழைப்பு என்பது அளவிடமுடியாதது. ‘அ' என்ற எழுத்தை கழுத்தில் தொங்கவிடுவதற்கும், சேகுவேரா படம் பொறித்த சட்டையை அணிவதற்கும் தமிழ் நடிகர்களில் எவனுக்கும் தைரியம் இல்லை, மாதவனைத் தவிர.
இது வழக்கமான தமிழ்படம் அல்ல. ஒவ்வொரு காட்சியிலும் நீங்கள் வித்தியாசத்தை உணரலாம். திரைக்கதையே முற்றிலும் வித்தியாசமானது. படம் முழுக்க கோபம் நிறைந்திருக்கும், ஆனால் இறைச்சல் இருக்காது. மாதவன் படம் முழுவதும் கண் இமைக்காமல் நடித்திருப்பார். அப்படி ஒரு கோபம் அவர் கண்களில் எரியும்.
சீமான் என்பவன் முழுக்க முழுக்க கொள்கைகளாலும் லட்சியங்களாலும் செய்யப்பட்டவன். எனக்கு லட்சியங்களை விதைத்தவர்கள் இப்படம் முழுவதும் முகம்காட்டியிருப்பார்கள். மாவோ, லெனின், சேகுவேரா, பெரியார், அம்பேத்கர், பிடல் காஸ்ட்ரோ என அவர்கள் படம் முழுவதும் பரவியிருப்பார்கள்.
தம்பி - கட்டிலறை காட்சியை ரசிக்கும் ரசிகர்களுக்கான படம் அல்ல. சமூக களத்தில் போராடத் துடிக்கும் இளைஞர்களுக்கான படம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன் ‘தம்பி’
- விவரங்கள்
- சீமான்
- பிரிவு: கட்டுரைகள்