இருபத்து ஐந்து ஆண்டுகால உள்ளாட்சி பற்றிய சிந்தனை, ஆராய்ச்சி, வாசிப்புக்கள், அனுபவங்கள் என அத்தனையும் இன்று ஒரு புதிய கருத்தாக்கத்தை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு நகரமும் மக்களின் ஒத்துழைப்போடும் பங்கேற்போடும் குட்டிக்குடியரசாக வளர்வதற்குப் பதில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் ஒப்பந்தக்காரர் சாம்ராஜ்யமாக மாறி அதிகாரிகளின் பிடிக்குள் அகப்பட்டு பரிதவிப்பதைத் தான் பெரும்பாலான இடங்களில் பார்க்க முடிகிறது. உள்ளாட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆளுகை செய்ய வேண்டுமேயன்றி, ஒப்பந்தக்காரர்கள்போல் அரசுப்பணிகளை எடுத்து நடைமுறைப்படுத்துவதில் தங்கள் காலங்களைக் கழித்து வருகின்றனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சித் தலைவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு, சமூகத்தை மாற்றுவதற்குப் பணியாற்றும் மாற்றுத்தலைவர்கள். இதுவரை மத்திய மாநில அரசாங்கங்களால் சமூகத்தில் கொண்டுவர முடியாத சமூகப் பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வர உருவாக்கப்பட்ட அமைப்பை செயல்படுத்து வதற்குத் தேவையான அறிவையும், ஆற்றலையும், சக்தியையும் இந்த உள்ளாட்சித் தலைவர்கள் பெற்று தங்களின் பார்வை, சிந்தனை, நடத்தை, செயல்பாடு இவை அனைத்தையும் மாற்றியவர்களாக மக்களுக்குக் காட்சி தந்து, மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்ற ஒரு தலைவராக அனைவரும் வந்திருக்க வேண்டும், அதுதான் இலக்கு. ஆனால் அந்த இலக்கை அடைய தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அனைவரையும் மாற்றம் செய்யத்தக்க வல்லமை படைத்த மாற்றுத் தலைவராக உருவாக்கத் தேவையான பயிற்சியை அவர் களுக்குத் தர இயலவில்லை. அதற்கான முயற்சியில் எந்த பயிற்சி நிறுவனமும் ஈடுபடவில்லை.

ஆளுகை என்பது அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி அல்லது உள்ளாட்சி அமைப்பாக இருந்தாலும் சரி இந்தியாவைப் பொருத்த வகையில் ஒரு சிலந்தி வலை போன்றது. அதைப் பற்றித் தெரிந்து கொண்டவர்கள் சிலந்தி வலையில் நீந்தி வெளிவந்துவிடுவார்கள், மற்றவர்கள் அகப்பட்டுக் கொள்வார்கள். அவ்வளவு சிக்கல் நிறைந்தது. எனவே நம் பஞ்சாயத்துத் தலைவர்கள் ஆளுகை பற்றியோ, நிர்வாக நுணுக்கங்கள் பற்றியோ தெரிந்துகொள்வதும் இல்லை, அதற்கு ஆர்வம் காட்டுவதும் இல்லை. அப்படியே ஆர்வம் காட்டி னாலும் அதற்கான பயிற்சியளிக்கக்கூடிய நிறுவனங் களும் இல்லை. பொதுவாக நம் பஞ்சாயத்துத் தலை வர்கள் நம் கிராமத்தைத் தொட்டு பணி செய்யும் துறைகளைக் கண்டு, அவைகள் எவ்வளவு நிதியைத் திட்டங்களில் பெற்று வேலை செய்கின்றன, அந்த வேலைகளை அந்தத் துறைகள் முறையாகச் செய்கிறதா என்பதைக் கண்காணிக்கத் தெரிவது இல்லை.

அது கல்வியாக இருந்தாலும், விவசாயமாக இருந்தாலும், பொதுப்பணித்துறையாக இருந்தாலும் அல்லது மருத்துவத் துறையாக இருந்தாலும் இவைகளெல்லாம் ஆகாயத்தில் பணிகள் செய்வதில்லை, மக்களுக்காகத் தான் பணிகள் செய்கின்றன. அதுவும் தமிழகம்போல் நலத்திட்டங்கள் உள்ள மாநிலம் வேறு எந்த மாநிலமும் இல்லை. எனவே இந்தத் துறைகளெல்லாம் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றுகின்றன என்பதைக் கண் காணிக்க ஆரம்பித்தாலே சிறப்பான அரசுத்துறைப் பணிகள் மக்களுக்குக் கிடைத்துவிடும்.

அதேபோல் மத்திய அரசின் நிதிக்குழு (இப்பொழுது) பதினான்காவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி ஒவ்வொரு பஞ்சாயத் திற்கும் வரும் நிதி எவ்வளவு? அதைப் பெறுவதற்கு அரசு தந்திருக்கும் வழிமுறைகள் என்னென்ன? அதேபோல் மாநிலத் திட்டக்குழு பரிந்துரைத்த நிதி எவ்வளவு? இந்த இரண்டு நிதிகளைத் தாண்டி மத்திய மாநில அரசுத் திட்டங்களின் மூலம் மக்களுக்கு வர வேண்டிய அனைத்து வசதிகளும் கிடைக்கிறதா? அவை களுக்கான நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா? உள்ளாட்சி நிர்வாகத்தால் மக்களிடமிருந்து திரட்டக் கூடிய நிதி எவ்வளவு? அதைப் பெருக்க என்னென்ன வழிமுறைகள் உள்ளன போன்ற நிதி நிர்வாகம் பற்றி நம் தலைவர்களுக்கு எந்தப் புரிதலும் கிடையாது.

எதாவது நிதியை தங்களிடம் தந்தால் பணி செய்வது, இல்லையேல் பணம் இல்லை என்று சொல்லி ஆளுகை என்ற ஒன்று தங்களிடம் இருக்கின்றது, அதன் மூலம் அரசுத் துறைகளை வேலை வாங்க முடியும் என்ற சிந்தனைப் போக்கு பெரும்பாலான தலைவர்களிடம் காண முடியவில்லை. இந்த நிதி நிர்வாகத்தில் எங்கிருந்து நிதி வருகிறது, எப்போது வருகிறது, யார் மூலம் வருகிறது, யாருக்காகச் செலவழிக்கப்படுகிறது என்பதை நம் தலைவர்கள் தெரிந்துகொண்டுவிட்டால், அவர்கள் உண்மையிலேயே ஆற்றல்மிக்கவர்கள்.

இந்த வித்தையைத் தான் பயிற்சியில் சொல்லித்தர வேண்டும். அதை யாரும் அவர்களுக்குச் சொல்லித் தருவதும் இல்லை. அவர் களும் இதைப்பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டுவதும் கிடையாது. மத்திய அரசும் மாநில அரசும் பல வாய்ப்புக்களை உள்ளாட்சிகளுக்கு உருவாக்கித் தருகின்றன. சிறப்பாக செயல்படுவதற்கு, அவைகளைப் பற்றிப்பிடித்து எதிர்பார்ப்பைத்தாண்டி பணியாற்றிட நம் தலைவர்கள் இப்பொழுது பெரும்பாலானவர்கள் முயல்வதில்லை. இந்த 14-ஆவது மத்திய நிதிக்குழுவின் நிதியைப் பயன் படுத்த கிராமத்திற்கு ஒரு திட்டம் தயாரிக்க வேண்டும் என ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

மாநில அரசு அந்தத் திட்டத்தை எப்படி உருவாக்குவது என்பதற்கான விதிகளை வகுத்து ஆணையாக வெளி யிட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி மக்களின் தேவை களை உணர்ந்து நிறைவேற்ற ஒரு கிராம மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கி, மத்திய மாநில அரசுகளின் திட்டப் பணிகளையெல்லாம் இதனுடன் இணைத்து எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும். இதற்கு மத்திய நிதிக்குழுவின் நிதியை நான்கு சேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல் தாய்த் திட்டத்தையும் இதனுடன் இணைத்துக்கொள்ளமுடியும். இந்தப் புரிதலை நம் தலைவர்களிடம் ஏற்படுத்துவதுதான் இன்றைய முக்கியமான கடமையாகும்.

அடுத்து நம் தலைவர்களுக்கு பஞ்சாயத்து மன்றக்கூட்டம் நடத்துதல், விவாதம் செய்தல், கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளல் போன்ற மக்களாட்சிப் பண்புகளை வளர்க்கும் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தப் பணிகளைச் செய்வதற்கு நம் தலைவர்களுக்கு பெரும் ஆற்றல் இருக்க வேண்டும். கிராம மேம்பாடு, வளர்ச்சி போன்றவைகளைப் பற்றி விவாதம் செய்ய கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள முதலில் தலைவர் களுக்குத் திறன் இருக்க வேண்டும்.

அதேபோல் கிராம சபையில் பொதுமக்களுடன் உரையாட, கருத்துக்களை பரிமாற, குறைகளைக் கேட்க, கேட்டவைகளுக்குப் பதில் கூற, சபையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கருத்துச் சொல்ல வாய்ப்பளிக்க, பேசுகிறவர்களின் கருத்துக்களை மற்றவர்களைக் கேட்க வைக்க, சபையின் கண்ணியங்களை மக்களுக்குப் புரியவைக்க நம் தலைவர் களுக்கு ஆற்றலும், புரிதலும், சக்தியும் வேண்டும். அது இன்று இல்லாத காரணத்தால்தான் இன்று கிராமசபை பெயருக்கென பல இடங்களில் நடைபெறுகின்றன.

இன்றைக்குப் பணம் என்பது பிரச்சினையே அல்ல. பணத்தைக் கொண்டு வருவதற்கும், உருவாக்குவதற்கும், முறைப்படுத்தி செலவழிப்பதற்கும் தேவையான ஆற்றலை வளர்த்துக்கொள்ளாமல் பதவி வேண்டி எப்படியாவது நம் மக்கள் பதவிகளை தேர்தலின்மூலம் பிடித்துவிடுகின்றனர். அந்தப் பதவிக்கு உள்ள பொறுப்புக்கள், கடமைகள், சேவை செய்ய உள்ள வாய்ப்புக்கள், அதிகாரங்கள் இவைகள் பற்றிய ஓர் புரிதலை நம் தலைவர்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை, அதை உருவாக்கவும் யாரும் முயற்சிக்கவில்லை. மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்தவுடன் இவர்கள் தலைவர்களாக மாறுவதில்லை, மக்கள் பிரதிநிதிகள், தலைவர் களாக மாற வேண்டும். அந்த மாற்றம் என்பது இவர்களின் சிந்தனைப்போக்கில், நடத்தையில், செயல்பாட்டில், பார்வையில் வர வேண்டும்.

அது அவ்வளவு எளிதானது அல்ல. இதை ஒரு கடினமான பயிற்சியின் மூலம்தான் கொண்டுவர முடியும். அப்படிப் பட்ட தலைமைத்துவப் பயிற்சியை வடிவமைத்து நடத்தி, அந்தத் தலைவர்களுக்குத் தொடர்ந்து வழிகாட்ட ஒரு வித்தியாசமான தலைமைத்துவக் கல்லூரி ஒன்று தேவை. இன்றைய கிராமங்களில் இருக்கும் பிரச்சினைகளைப் புரிந்து, மக்களாட்சி முறையில் மக்களுடன் சேர்ந்து, மாநில அரசைப் பயன்படுத்தி அதிகாரிகளின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெற்று தங்கள் கடமைகளை ஆற்றுவதற்கு ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் இருக்க வேண்டிய ஆற்றல் இருக்க வேண்டும்.

அந்த அளவிற்கு ஆற்றல் பெருக்கத்திற்கும், தன்நிலை மாற்றத் திற்கும் நம் தலைவர்கள் தயாராக வேண்டும். முதலில் தலைவர் என்பவர் மக்களாட்சியில், மக்களுடன் தன்னை இணைத்து, மக்களுக்கு வழிகாட்டும் தன்னலமற்ற ஒரு வழிகாட்டி. அதுமட்டுமல்ல, மாற்றத்தை உள்வாங்கி அதை மேலாண்மை செய்பவராக உருவாக்கப்படல் வேண்டும். அப்படிப்பட்ட தலைமைத்துவப் பயிற்சியும் அதற்கான பயிற்சிப் பள்ளியும்தான் இன்றைய தேவை.

Pin It