seeman 359தன்னை தமிழகத்தின் அதிபராக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் சீமான் அவர்கள் இன்னும் ஒருபடி முன்னேறி, தன்னை ஒரு ஆண்டவனாக நினைக்கத் தொடங்கியுள்ளார். இன்று முப்பாட்டன் முருகன் எப்படி தமிழ்க் கடவுளாகக் கொண்டாடப்படுகின்றானோ அதே போல நாளைய தலைமுறை சீமானைத் தமிழினத்தின் தனிப்பெரும் கடவுளாக வணங்கப் போகின்றது. அன்று சீமான் “நம் முப்பாட்டனான முருகன் முறுக்கேறிய தசைகளை உடையவன். அதனால் அவனை முறுக்கன் என்று அழைத்தனர். நாளடைவில் அதுவே முருகனாக மாறியது” என்று உருட்டியது போலவே, நாளை ஒரு தம்பி, "கட்சியிலும் வாழ்க்கையிலும் ஒரு சீமானைப் போல வாழ்ந்ததால் எனது முப்பாட்டன் சீமான் என அழைக்கப்பட்டான்" என ஹை டெசிபலில் கேட்பவர்களது காதுகள் கிழியும் வண்ணம் உருட்டிக் கொண்டிப்பான். முப்பாட்டன் சீமானின் திரு அவதார விழாவில் ஆமைக்கறி, கறி இட்லி போன்ற பிரசாதங்கள் கூட வழங்கப்படலாம்.

இவை எல்லாம் நடக்கும் என நிச்சயமாக அண்ணனது தத்துவ எதிரிகளான நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் அண்ணன் அப்படித்தான் தன்னைப் பற்றி நினைத்து இரவு பகல் பாராமல் பரவச மனநிலையிலேயே வாழ்வதாக அவரது முன்னாள் தம்பிகளே முணுமுணுக்கின்றார்கள். அதற்குப் பெயர் சீமானிசம் என்று கூட சொல்கின்றார்கள். ஆனால் அண்ணனோ கூச்சத்தோடு அது ஒன்றும் தவறல்ல என்று புன்னகை பூக்கின்றார்.  

அண்ணனுக்கு நன்றாகவே தெரியும் நாளை ஏதாவது ஒரு தம்பி வந்து “மார்க்சியம், லெனினியம், பெரியாரியம், அம்பேத்கரியம் போன்று தமிழ்க்குடிகளான நமக்கும் ஏதாவது இயம் இருக்கின்றதா அண்ணா?” என்று கேட்பார்கள் என்று. எனவே  தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து தான் மேடையில் பேசிய விட்லாச்சாரியா கதைகளை எல்லாம் வருங்காலத் தமிழ்ப் பிள்ளைகளுக்காக சீமானிசம் என்ற பெயரில் உருட்டுமாறு உத்திரவிட்டுள்ளார்.   

அண்ணனின் இந்தச் சீமானிசப் பெருங்கனவு நிறைவேறுமா இல்லையா என்ற தத்துவார்த்தக் கேள்வி ஒருபுறமிருக்க, அதற்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி மாறி மாறி வேட்டியை உருவிக் கொள்ளும் குழாயடிச் சண்டையில் அது முடிந்திருக்கின்றது. நாதகவில் இருந்து அந்தக் கட்சியின் முகங்களாக அறியப்பட்ட பேராசிரியர் கல்யாண சுந்தரம், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி போன்றோர் வெளியேறியுள்ளனர். இவர்கள் வெளியேறியதால் நாதக வீழ்ந்து விடும் என்று நாம் நம்பவில்லை. ஆனால் அவர்கள் வெளியேறிய நிகழ்வு என்பது நாதகவில் நடக்கும் அதிகாரப் போட்டியை முச்சந்திக்குக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது.

சில தோழர்கள் கல்யாண சுந்தரமும், ராஜீவ் காந்தியும் வெளியேறியதை வைத்து சீமானை மட்டும் தனியே பிரித்து விமர்சிக்கின்றார்கள். ஆனால் அதில் நமக்கு உடன்பாடில்லை. சீமானுக்கு எந்த வகையிலும் திராவிட எதிர்ப்பு, சாதியைப் பின்புலமாக வைத்து இன அரசியல் பேசுவதில் இவர்கள் சளைத்தவர்கள் இல்லை. இன்று கட்சிக்குள் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டியில் இவர்கள் வெளியேறி இருந்தாலும் கோட்பாட்டு ரீதியில் இவர்கள் சீமானோடு முற்று முழுக்காக ஒத்துப் போகக்கூடிய நபர்கள்தான்.

இவர்கள் மட்டுமல்ல இதற்கு முன் நாதகவில் இருந்து வெளியேறிய பல பேர் வேறு எந்த அமைப்பிலும் சேரவில்லை என்பதும் அப்படியே ஒரு சிலர் சேர்ந்திருந்தாலும் அவர்கள் அதே திராவிட, பெரியாரிய எதிர்ப்பு கொண்ட சாதியவாத தமிழ்த்தேசிய அமைப்புகளில்தான் தன்னை இணைத்துக் கொண்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

கட்சியில் இருந்து வெளியேறிய, வெளியேற்றப்பட்ட ஒவ்வொருவரும் சீமானோடு தத்துவச் சண்டை போட்டு வெளியேறவில்லை, அதிகாரப் போட்டி, சீமானின் வஞ்சகம் போன்றவற்றால் மட்டுமே வெளியேறி, வெளியேற்றப்பட்டு இருக்கின்றார்கள்.

2015 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அக்கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளராக இருந்த அய்யநாதன்  நீக்கப்பட்டார். ஆனால் சீமானைப் பற்றி அய்யநாதன் கூறிய "தமிழ் நாட்டை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதையும் மீறி காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீத்தேன் ஆய்விற்காகத் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப் போராடி, அந்தக் குழாய்களை பிடுங்கி எரிந்த சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்காக சீமான் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. அதேபோல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் சிறை சென்ற ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கவி. இளங்கோ கைது செய்யப்பட்டதற்கும் ஒரு கண்டன அறிக்கை கூட சீமான் வெளியிடவில்லை. மாறாக தமிழர் நலனுக்காகப் போராடிய இவர்களைத் தொடர்ந்து கண்டித்து இவர்கள் இல்லாமல் புதிய நபர்களை வைத்து பொதுக்குழுவை நடத்தியுள்ளார். தமிழ் உணர்வு அற்றவர்களுக்கு பொறுப்பு வழங்கியுள்ளார். இவர்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடுகிறார்..." என்ற குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல.

அதே போல 2019 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த அ. வியனரசு கட்சியை விட்டு நீக்கப்பட்டபோது கூறிய குற்றச்சாட்டுகளும் சாதாரணமானவை அல்ல. "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இரண்டாம் கட்டப் போராட்டத்தை முதலில் தொடங்கியது நாம் தமிழர் கட்சிதான். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நான் உட்பட கட்சியைச் சேர்ந்த 13 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. ஆனால், கட்சி சார்பில் எங்களைப் பிணையில் எடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சீமானும் எங்களைக் கண்டு கொள்ளவில்லை. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட குழுவைச் சந்தித்து மனு அளிக்க நான் கேட்டுக் கொண்டும், என்னுடன் கட்சியினரை அனுப்பி வைக்காதது ஏன்? ஏதாவது ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்து சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக கட்சி சார்பில் மாதம் ஒரு போராட்டம் நடத்தும் சீமான், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சென்னையில் ஒரு போராட்டம்கூட நடத்தவில்லையே ஏன்? மக்கள் புரட்சி எனச் சொல்லிவிட்டு போரட்டத்துக்கு நேரடியாக வராமல் அவர் ஓடி ஒளிந்ததால், ஒருவேளை ஸ்டெர்லைட் ஆலையுடன் சமரசம் ஆகிவிட்டாரா என எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது இந்தச் செயலால் அவர் ஸ்டெர்லைட் ஆலையிடம் பணம் பெற்றதாகவே மக்களும் நினைக்கிறார்கள்” என்று கூறியிருந்தார். மேலும் கட்சிக்குள் ஒரு குறிப்பிட்ட சாதியின் (நாடார்) ஆதிக்கத்தையும், ஜனநாயக மறுப்பையும் கேள்வி கேட்டதற்காகவே அவர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார்.

அய்யநாதன் மற்றும் வியனரசு இருவரும் தெரிவித்த குற்றச்சாட்டுகளில் முக்கியமானது சீமான் நாதகவின் சார்பில் போராட்டங்களில் பங்கேற்றுச் சிறை சென்றவர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை என்பதுதான். கட்சியின் வளர்ச்சிக்காக உண்மையிலேயே பாடுபட்டவர்களை, கட்சிக்காகப் போராடி சிறை சென்றவர்களை சீமான் இப்படித்தான் கைகழுவி இருக்கின்றார். அதற்குப் பின்னுள்ள காரணம் கட்சியில் தன்னைத் தவிர யாரும் தங்களுடைய உழைப்பின் மூலமோ தியாகத்தின் மூலமோ தனக்கான பிம்பத்தைக் கட்டியமைத்து விடக்கூடாது என்ற ‘நல்ல’ எண்ணம்தான்.

என்னதான் சீமான் தன்னை கோட்பாட்டு ரீதியாக செயல்படும் நபராக முன்னிருத்திக் கொண்டாலும் தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்த பிறகு முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கே உரிய தனிநபர் துதியில் அது மூழ்கித்தான் ஆக வேண்டும். ஓட்டுபோடும் நபர்களிடம் கோட்பாட்டைவிட தனிநபர் கவர்ச்சி என்பதுதான் எப்போதுமே இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகின்றது. இதை உணர்ந்துதான் கட்சியின் ஒட்டுமொத்த முகமாக தன்னை மட்டுமே முன்னிறுத்த சீமான் முயற்சிக்கின்றார். ஆனால் தன்னுடைய இந்தப் பிம்ப அரசியலுக்கு கல்யாணசுந்தரமும், ராஜீவ் காந்தியும் இடையூறாக இருப்பதாக அஞ்சுகின்றார். மூலதெய்வமான தன்னை வணங்கவிடாமல் உப தெய்வங்கள் தடுப்பதாக விசனப்படுகின்றார்.

சமீபத்தில் இருவரின் கட்சி விரோத நடவடிக்கைகள் பற்றி அண்ணன் கொடுத்த நேர்காணல் இதைத்தான் தெளிவாகத் தெரிவிக்கின்றது. அந்தப் பேட்டியில், தன்னைப் பற்றியும், கட்சியைப் பற்றியும் கிண்டல் செய்யும் வகையில் சமூக வலைத்தளங்களில் கல்யாண சுந்தரம் எழுத வைத்துள்ளார் என்றும், குறிப்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதரவாளர்களைச் சேர்த்துக் கொண்டு இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவதாகவும், ஊடகங்களில் பேசும்போது மிகவும் கண்ணியமாகப் பேசுகின்றார், ஆனால் கட்சிக்குள் செய்யும் வேலைகள் எல்லாம் மிகவும் கேவலமாக இருக்கிறது என்றும், நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் நிதி வந்து கொண்டிருக்கிறது, அதை அனுபவித்துக் கொண்டிருப்பதாக கல்யாண சுந்தரமும், ராஜீவ் காந்தியும் பரப்பியதாக குற்றம்சாட்டினார்.

மேலும் தம்பிகள் இப்படி பேசியது மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தன் சாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நடந்தால் கட்சியை கைப்பற்றிக் கொள்ளலாம் என்று ராஜீவ் காந்தியும், கல்யாண சுந்தரமும் நினைக்கிறார்கள் என்றும் புலம்பித் தள்ளியிருந்தார்.

ஆனால் கல்யாணசுந்தரம் இதை எல்லாம் மறுத்திருக்கின்றார். கட்சியைப் பிளக்க சதி செய்யவில்லை என்றும், கட்சிக்கு எதிராகவோ சீமானுக்கு எதிராகவோ சமூக வலைத்தளங்களில் யாரையும் வைத்து எழுத வைக்கவில்லை என்றும், விளக்கம் தரக்கூட தான் அனுமதிக்கப்படவில்லை என்றும், கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்றும் குற்றம் சாட்டி இருக்கின்றார்.

இந்தப் பிரச்சினையில் சீமான் சொல்வது உண்மையா, இல்லை கல்யாணசுந்தரமோ, ராஜீவ் காந்தியோ சொல்வது உண்மையா என்று தீவிரமாக யாரும் மூளையை கசக்கிக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. தேர்தல் பாதையில் நிற்கும் ஒரு கட்சியில் உறுப்பினராக இருந்து கொண்டு அதன் வரம்புகள் என்ன, குணாதிசியங்கள் என்ன என்பதை உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும்.

திமுகவிலோ, அதிமுகவிலோ பல பேச்சாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் வரம்பு எது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தான் பேசுவதற்கு எல்லோரும் கைதட்டுகின்றார்கள் என்று யாரும் கட்சியே தன்னை நம்பித்தான் இருக்கின்றது, தான் இல்லை என்றால் கட்சியே அழிந்துவிடும் என்று கனவு காண மாட்டார்கள். கல்யாணசுந்தரமோ, ராஜீவ் காந்தியோ அப்படி கனவு கண்டார்கள் என்று நாம் சொல்ல வரவிலை. ஆனால் நாதகவை தனது பிடியில் முழுமையாக வைத்திருக்கும் சீமான் அப்படி நினைத்துத்தான் அவர்களை வெளியேற்றி இருக்கின்றார்.

சீமான் சொன்னால் போஸ்டர் ஒட்ட வேண்டும், உண்டியல் குலுக்க வேண்டும், பரப்புரை செய்ய வேண்டும் - அதுதான் ஒரு உண்மையான தொண்டனின் கடமை. கட்சியை வளர்க்க எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும். ஜெயிலுக்கு போனால்கூட சொந்தக் காசில் ஜாமீனில் வெளியே வந்து கொள்ள வேண்டும். அண்ணன் வந்து நம்மைக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்காத அர்ப்பணிப்புணர்வு கொண்டவராக இருக்க வேண்டும். அந்தப் பிரச்சினைக்கு ஏன் போராடவில்லை, இந்தப் பிரச்சினைக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை, அப்படி செய்யலாமா, இப்படி செய்யலாமா என கருத்து சொல்லும் கருத்துப்புலி வேலை எல்லாம் பார்க்கக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை அதிபராக மட்டுமல்ல ஆண்டவனாக ஏற்றுக் கொண்டு சதா சர்வகாலமும் புகழ்பாட வேண்டும்.

இதை எல்லாம் யாரால் செய்ய முடியும்? அனைத்து கார்ப்ரேட் கட்சிகளின் தொண்டர்களும் இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். சீமானும் அதைத்தான் தனது தம்பிப் பிள்ளைகளிடம் மனமுவந்து எதிர்பார்க்கின்றார். நிச்சயம் சீமானிசம் அதைச் செய்ய வைக்கும். காரணம் அது தம்பிகளின் தரம் அறிந்து கட்டப் பெற்றதல்லவா!

- செ.கார்கி

Pin It