‘சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையில் பேசியதில் இருந்து நாடு முழுவதும் மீண்டும் காந்தி கொலை தொடர்பான விவாதம் பரவலாக எழுந்திருக்கின்றது. திராவிட இயக்க சிந்தனையாளர்கள் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு பார்ப்பனர் என்பதை சுட்டிக் காட்டாமல் வெறுமனே இந்து என்று பொதுமைப்படுத்தி சொல்வதில் கமல்ஹாசனின் பார்ப்பன சார்பு இருக்கின்றது என்றும், அதனால் அவருக்கு எதிராக முற்போக்குவாதிகள் குரல் கொடுக்கத் தேவையில்லை என்றும், அதே போல காங்கிரஸ், விசிக, சிபிஎம் போன்ற கட்சிகள் கமல்ஹாசனின் கருத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து இருக்கின்றார்கள்.

kamal haasan2வழக்கம் போல பிஜேபி மற்றும் பிஜேபியின் தமிழகக் கிளையாக மாற்றப்பட்டுள்ள அடிமை அதிமுகவும் கமல்ஹாசனின் பேச்சுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் ராஜேந்திர பாலாஜி கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கொதித்திருக்கின்றார். அந்தக் கட்சியின் நாளிதழான நமது புரட்சித்தலைவி அம்மா பத்திரிக்கை, கமல்ஹாசனை கடுமையாகக் கண்டித்து தலையங்கம் வேறு எழுதியிருக்கின்றது. மன்னார்குடி செண்பக மன்னார் ஜீயர் 'கமல்ஹாசனை நடமாடவே விட மாட்டோம்' என சூளுரைத்திருக்கின்றார். 16/05/2019 அன்று வேலாயுதம்பாளையம் மழைவீதிப் பகுதியில் பரப்புரை செய்யும் போது கமல்ஹாசன் மீது முட்டை, கல் போன்றவற்றைக் கொண்டு மூன்று பிஜேபி பொறுக்கிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கமல்ஹாசனுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் பிஜேபி பார்ப்பன அடிமைகள் களத்தில் இறங்கி இருக்கும் சூழ்நிலையில் முற்போக்குவாதிகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் நபர்கள் நிச்சயம் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும், பிற்போக்கு கும்பலுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டியது கட்டாயமாகும். பொதுவான உண்மையைப் பேசுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படும்போது சாதி, மதம், மொழி கடந்து அதற்கு எதிராக அணிதிரள்வதுதான் ஜனநாயக முற்போக்கு சக்திகளின் கடமையாகும். பெரியாரின் மீதும், திராவிடக் கருத்தியலின் மீதும் இன்று தரக்குறைவாக ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கும் சில அயோக்கியர்களுக்கு ஆதரவாகவும் கூட நாம் கடந்த காலங்களில் குரல் கொடுத்து இருக்கின்றோம். சில குறிப்பிட்ட பிரச்சினைகளில் கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகள் முற்போக்காக செயல்படும்போது அதற்கு எதிராக வலதுசாரிக் கும்பலும் அதிகார வர்க்கமும் அவர்களுக்கு எதிராக செயல்படும்போது ஒரு முற்போக்குவாதியின் கடமை பாதிக்கப்பட்ட நபர் பிற்போக்குவாதியா, நம் சித்தாந்தத்திற்கு முழுவதும் உடன்பட்டவரா என்று பார்க்காமல் குரல் கொடுப்பதுதான்.

கமல்ஹாசன் ஏன் கோட்சேவை பார்ப்பனர் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பும் அதே சமயம், நாம் இந்தச் சூழ்நிலையில் கமல்ஹாசனின் பக்கம் நிற்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். கமல்ஹாசன் மட்டுமில்லை, திராவிடக் கருத்தியலை ஏற்றுக் கொண்டவர்கள், மக்கள் அதிகாரம் போன்ற மார்க்சிய லெனினிய அமைப்புகள் தவிர இன்று இந்தியாவில் யாருமே பார்ப்பனர் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. தமிழ்நாட்டில் பார்ப்பனர் என்ற சொல் சங்க இலக்கிய காலத்தில் இருந்தே வழக்கில் இருந்து வருகின்றது. பிராமணர் என்ற சொல் அவ்வாறு வழக்கத்தில் இருந்தது இல்லை. மேலும் பிராமணர் என்ற சொல்லை திராவிட இயக்கத்தார் ஏற்றுக் கொள்ளாமைக்கு காரணம் அது ஒரு வர்ணத்தின் பெயரைக் குறிப்பிடுவதால்தான். ஒருவனை பிராமணன் என்று ஏற்றுக்கொள்ளும் போது நம்மை நாம் சூத்திரன் என்று ஏற்றுக் கொள்வதாகவே பொருள்.

தமிழில் பார்ப்பனர் என்ற சொல் வழக்கு இருப்பது போல இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில முற்போக்கு எழுத்தாளர்களும் கூட பார்ப்பனியம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது கிடையாது. குறிப்பாக CPM, CPI போன்றவற்றைச் சேர்ந்த தோழர்கள் பிராமணியம் என்ற வார்த்தையையே பயன்படுத்துகின்றனர். அவர்கள் பார்ப்பனர், பார்ப்பனியம் என்ற சொல்லை அவமரியாதைக்கு உரிய சொல்லாகவே கருதுகின்றனர். அது பார்ப்பனர்களின் தொழில் பெயரைக் குறிக்கும் சொல்லாக அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. பிராமணர் என்ற சொல்லைப் பயன்படுத்துவதுதன் மூலம் பார்ப்பனர்கள் தவிர்த்துள்ள பெரும்பான்மையான மக்களை மறைமுகமாக அந்தச் சொல் சூத்திரர்கள் என்று இழிவு செய்வதை அவர்கள் உணர்வதில்லை.

அதனால் கமல் கோட்சேவை இந்து தீவிரவாதி என்று சொன்னதை ஏன் பார்ப்பன தீவிரவாதி என்று சொல்லவில்லை என்று நாம் சண்டைக்குப் போகத் தேவையில்லை. பொதுவுடமை சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களே ‘பிராமணியத்தை’ ஏற்றுக் கொள்ளும் போது, கமல் போன்ற குழப்பவாதிகளிடம் இருந்து நாம் அதை எதிர்பார்க்க முடியாது. சாதி ஆணவப் படுகொலைகள் நடக்கும்போதும், சாதிக்கலவரம் நடக்கும் போதும் குற்றத்தில் ஈடுபடும் சாதிவெறியர்களின் சாதிப் பெயரை குறிப்பிட்டுச் சொல்ல மறுக்கும் பிழைப்புவாதம் என்பது தமிழகத்தில் கார்ப்ரேட் கட்சிகளிடமும், பிழைப்புவாத இயக்கங்களிடமும், பெரியாரை ஏற்றுக் கொள்ள மறுக்கும் தமிழ்த் தேசியவாதிகளிடமும், பொருளாதாரவாதம் மட்டுமே பேசும் சில மார்க்சிய அமைப்புகளிடமும் இருக்கத்தான் செய்கின்றது. இது கண்டனத்திற்கு உரியது என்றாலும் அவர்கள் நம்மோடு ஒத்துப் போகும் சில பொதுவான முற்போக்கான நிலைப்பாடுகளில் நாம் அவர்களுக்காக குரல் கொடுப்பது கட்டாயமாகும்.

கமல் இந்து தீவிரவாதம் என்று சொன்னதற்காக அவர் இந்து சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களையும் குற்றவாளி ஆக்கப் பார்க்கின்றார் என்பதெல்லாம் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் செய்வது போல சிண்டு முடிந்துவிடும் செயலாகும். இந்து என்ற வார்த்தையையே ஏற்க மறுக்கும், முற்போக்குவாதிகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் நபர்களும் அதைச் செய்வது அருவருப்பனாது. கமலின் கடந்தகால செயல்பாடுகளும் அவரின் பார்ப்பன சார்பும் யாருக்கும் தெரியாதது அல்ல. ஆனால் நடப்பு சூழ்நிலை என்பது அவருக்கு எதிராக இருக்கும்போது நாம் அவருக்காக குரல் கொடுப்பது தார்மீகக் கடமையாகும். இங்கே கமல் ஒரு பார்ப்பனர் என்பதற்காக குரல் கொடுக்க மறுப்பது பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு தன்னுடைய வன்முறையைச் செலுத்தவே உதவும். இப்போதே தமிழிசை 'கமல் கல்லடிகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்' என்று ஒரு நான்காம் தர அரசியல்வாதியைப் போல பேசும் நிலைக்கு வந்திருக்கின்றார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்காமல் முற்போக்குவாதிகளும், முற்போக்கு இயக்கங்களும் தற்போது கமலுக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும். கமலின் அரசியல், அவரது சித்தாந்தம் என்பதைப் பற்றியெல்லாம் நமக்கிருக்கும் முரண்பாடுகளின் காரணமாக அவரை அம்போ என்று விடுவதும் ஒரு பாசிச நிலைப்பாடே ஆகும். தமிழ்நாட்டில் அது போன்ற பாசிச நிலைப்பாட்டிற்கு ஒரு போதும் இடம் தராத வகையில் முற்போக்குவாதிகளும், முற்போக்கு இயக்கங்களும் நடந்துகொள்ள வேண்டும்.

- செ.கார்கி

Pin It