20 ஆண்டு கால ஊசலாட்டத்திற்குப் பிறகு, சென்ற ஆண்டின் கடைசி நாளில், தன் அரசியல் நுழைவை நடிகர் ரஜினிகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார். “சாதி மத பேதமற்ற, ஆன்மிக அரசியல்” தன்னுடையது என்று அறிவித்துள்ளார். ஆன்மிக அரசியல் என்னும் தொடர், எதிர்ப்பிற்கு உள்ளானபின், அதற்கு ‘நேர்மையான அரசியல்’ என்றுதான் பொருள் என விளக்கம் கொடுத்துள்ளார். நாம் வைத்திருக்கும் அகராதி எதிலும், ஆன்மிகம் என்றால், நேர்மை என்று பொருள் இல்லை.

rajini in politics cartoon

அவர் அறிவிப்புக்கு முன் அவரைச் சந்தித்து அரசியல் குறித்து உரையாடியதாகச் சொன்னவர்களில் தமிழருவி மணியனும், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தும் முதன்மையானவர்கள். ரஜினியின் உரை, வருணாசிரம தர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் கீதையிலிருந்து தொடங்கிற்று. அவர் விரல்களை உயர்த்திக் காட்டியது பாபாவின் முத்திரை. அறிவிப்புக்கு மறுநாள் அவர் முதலில் ‘ஆசிர்வாதம்‘ வாங்கியது மைலாப்பூர் ராமகிருஷ்ண மடத் தலைவரிடம்!

இத்தனைக்கும் பிறகு, ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு என்ன பொருள் என்பது எவர் ஒருவருக்கும் விளங்கும். இந்த ஆன்மிக அரசியலுக்குப் பின்னால் உள்ளவர்கள் யார் என்பதும் புரியும்.

ஆன்மிக அரசியல் தமிழ்நாட்டில் திராவிட அரசியலை வென்றுவிட முடியாது என்றாலும், அந்த மிதப்பில் நாம் இருந்துவிடக் கூடாது. ரஜினியின் ஆதரவுக்கு வாய்ப்பாக உள்ள சில கூறுகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

“ஐம்பதாண்டு திராவிட ஆட்சியில் நாடே கெட்டுவிட்டது, இனிமேல் திமுக, அதிமுக இரண்டுமே வேண்டாம், ஒரு புதிய மாற்று வேண்டும்“ என்னும் பரப்புரை இங்கு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதில் உள்ள நஞ்சான உள்நோக்கத்தை அறியாமல் அப்படியே இதனை நம்புகிறவர்கள் இங்கு உண்டு. அவர்களின் வாக்குகள் திசை மாறிச் செல்ல வாய்ப்புண்டு.

முதலில் ஐம்பதாண்டு காலத் திராவிட ஆட்சி என்பதே தவறானது. திராவிட இயக்கத்திற்கும், ஜெயலலிதா, எடப்பாடி போன்றவர்களுக்கும் என்ன தொடர்பு? இது திமுக பதவியேற்ற ஐம்பதாவது ஆண்டுதானே தவிர, ஐம்பது ஆண்டு கால ஆட்சி இல்லை. கடந்த ஐம்பது ஆண்டில் தமிழகத்தில் வளர்ச்சியே ஏற்படவில்லை என்பதும் எவ்விதத்திலும் உண்மையில்லை.

மேலும், இரு கட்சிகளையும் சேர்த்துச் சேர்த்துச் சொல்வது, தங்களை நடுநிலை என்று காட்டிக் கொள்வதற்காக மட்டுமே. அவர்களின் உண்மையான நோக்கம் திமுகவை அழிப்பது மட்டுமே. திமுக எதிர்ப்பு என்ற புள்ளியில், மதவாத, சாதிய, தமிழ்த்தேசியக் கட்சிகள் அனைவரும் ஒன்றுபடுகின்றனர்.

அவர்களின் சார்பாளராகவே ரஜினி முன்னிறுத்தப்படுகிறார். அழிக்க நினைக்கிற இடத்துக்கே வந்து ஆசிர்வாதம் கேட்கிறார் ரஜினி.

வேரும் விழுதுகளும் உள்ள இயக்கம் திராவிட இயக்கம் என்பதை அவருக்குக் காலம் உணர்த்தும்!