உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை உட்பட தேவர் சாதி வெறியன்கள் ஆறு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதும், கவுசல்யாவின் தாய், அவரது தாய்மாமன் உட்பட மூன்று பேருக்கு விடுதலை கொடுக்கப்பட்டதும் அனைவருக்கும் தெரியும். பல பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய அமைப்புகள் எல்லாம் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். அதே சமயம் இந்த வழக்கில் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தம்முடைய கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர். ஆறு பேருக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை ஏற்றுக் கொள்ள முடியாமல் அச்சத்தில் அதை எதிர்த்த அனைவரும் ஆதிக்க சாதிவெறிக் கட்சிகளைச் சேர்ந்த கழிசடைகள்தான். மற்ற யாரும் இந்தத் தீர்ப்புக்கு எதிராக பொதுவெளியில் வந்து கருத்து சொல்லவில்லை. அதற்காக கருத்துச் சொல்லாத அனைவரும் சாதிவெறியை கண்டிக்கின்றார்கள் என்பது பொருளல்ல. சொன்னால் தனக்குள் மறைத்து வைத்திற்கும் சாதிவெறியை சமூகம் கண்டுகொண்டு, காறித் துப்பிவிடும் என்ற பயம்தான் பொதுவெளியில் வந்து வெளிப்படையாக கருத்து சொல்ல அவர்களைத் தடுத்து வைத்திருக்கின்றது.

அப்படி கருத்து சொல்லாத சாதிவெறியர்கள் ஒரு பக்கம் கடைசி வரைக்கும் கருத்து சொல்லாமலேயே இருந்துவிடவும் வாய்ப்புள்ளது. இல்லை என்றால் தகுந்த சந்தர்ப்ப சூழ்நிலை ஏற்படும்போது அதை வெளிக்காட்டி விடவும் வாய்ப்பு இருக்கின்றது. இவர்களைக் கூட ஒரு வகையில் நம்மால் நம்பிவிடமுடியும். ஏன் திருத்தி விடக்கூட வாய்ப்புள்ளது. ஆனால் ஒரே சமயத்தில் சாதியை எதிர்ப்பதும், அதே நேரத்தில் தம்முடைய சாதி எதிர்ப்புக்காக சாதிவெறியர்களின் கோபத்திக்கு ஆளாகாமல் இருக்க, அதே சாதிவெறியர்களின் காலை பகிரங்கமாகவும் நக்கும் ஒருவனை எந்தக் காலத்திலும் திருத்தவோ, சீர்படுத்துவோ நிச்சயம் முடியாது. இதுபோன்ற கீழ்த்தரமான குணம் சூத்திரசாதி மக்களிடம் இருப்பதைக் காட்டிலும் பார்ப்பனர்களிடம் தான் மிகுதியாகக் காணப்படுகின்றது. அதிலும் முற்போக்கு பேசும் பார்ப்பனர்களிடம்தான் இந்தப் போக்கு மிகுதியாகக் காணப்படுவது. அதிலும் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கும் தொழில்முறை முற்போக்கு பார்ப்பான்களிடம் இந்தக் கபடவேடம் போடும் போக்கு எந்தவித வெட்க மானமுமற்ற முறையில் காணப்படுகின்றது.

17/12/2017 அன்று வெளியான தமிழ் தி இந்துவில் ‘வருமானம் இல்லாமல் குடும்பமே திண்டாடுகின்றது, தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு இல்லை, உடுமலை கவுசல்யாவின் சகோதரர் விரக்தி’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. இது போன்ற ஒரு கட்டுரையை வெளியிட வேண்டிய என்ன தேவை தமிழ் இந்துவுக்கு வந்தது என்பதைப் புரிந்துகொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமான காரியமில்லை. ஆனால் எவ்வளவு பார்ப்பனக் கொழுப்பும், சாதிவெறியர்கள் மீது கரிசனமும் பார்ப்பான்களிடம் இருக்கின்றது என்பதை இன்னும் தமிழ் தி இந்துக்கு பங்களிப்பு செய்து, தனது வயிற்றை கழுவிக்கொண்டு இருக்கும் முற்போக்கு பேசும் கபடதாரிகளை அடையாளம் கண்டுகொள்ள இந்தக் கட்டுரை பயன்பட்டிருக்கின்றது.

கட்டுரையாளர் நேரடியாகவே கவுசல்யாவின் சொந்த ஊரான குப்பம்பாளையத்துக்கு நேரடியாக சென்று சாதிவெறியர்களின் மீதான தனது கரிசனத்தை கண்ணீர் மல்க பதிவு செய்திருக்கின்றார். கவுசல்யாவின் தந்தையின் தயாளக் குணத்தை பற்றியும், அவர் தன்னுடைய மகளுக்காக செய்துகொண்ட தியாகங்கள் பற்றியும், குண்டாங்கல்லு மாதிரி இருக்கும் சின்னசாமியின் மகன் கவுதம் சோத்துக்கு வழியற்று பிச்சை எடுத்து சோறு தின்ன வேண்டிய அவல நிலையில் இருப்பதைப் பற்றியும், மிக நேர்த்தியாக படிப்பவர்கள் கைக்குட்டை இல்லாமல் இந்தக் கட்டுரையை படிக்க முடியாதபடிக்கு எழுதி, தேவர் சாதி வெறியன்கள் மீது ஒட்டுமொத்த தமிழகமே பெரும் கருணையை சொரிய வைத்திருக்கின்றார். இந்தக் கட்டுரையைப் படிக்கும் எவரும் சின்னச்சாமி போன்ற ஒரு உத்தமனை தந்தை என்றும் பாராமல் தூக்குதண்டனை வாங்கிக் கொடுத்த கவுசல்யாவின் கல்நெஞ்சம் பற்றியும், அத்தோடு நிற்காமல் தன்னை ஆசை, ஆசையாய் வளர்த்து ஆளாக்கிய அவரின் தாயாரையும் தண்டிக்காமல் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் கவுசல்யாவின் இரக்கமற்ற நிலையும் கடிந்துகொள்ளாமல் இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பார்ப்பன தமிழ் தி இந்துவின் ஒரே நோக்கம்.

இந்தக் கட்டுரை அப்பட்டமாக சாதிவெறியர்கள் மீது பொதுச்சமூகத்தில் பச்சாதாபத்தை ஏற்படுத்துவதற்கென்றே திட்டமிட்டு எழுதப்பட்ட கட்டுரை. இதன் மூலம் துள்ளத் துடிக்க பட்டப்பகலில் மிகக் கொடூரமாக சங்கரை வெட்டிக் கொள்ள துணைநின்ற சின்னசாமியின் மீதான அருவருப்பு நிறைந்த பார்வையையும், சாதிவெறியர்கள் எல்லாம் இயல்பிலேயே நல்லவர்கள் என்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயன்றிருக்கின்றார்கள். ஒரு பக்கம் சாதி ஆணவக் கொலைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் என்றும் பேசும் தமிழ் தி இந்து, இன்னொரு பக்கம் இப்படி தன்னுடைய நிலைப்பாட்டுக்கு சம்மந்தமே இல்லாமல் சாதிவெறியர்களின் காலை நக்குவதற்கு அடிப்படை காரணம் என்ன? தேவர் சாதி வெறியர்கள் மத்தியில் பத்திரிக்கை விற்பனை குறைந்துவிடக்கூடாது என்பது காரணமா? இல்லை சாதிவெறியர்களை தன்னுடைய வரலாற்று நண்பனாகக் கருதும் பார்ப்பன கபட எண்ணமா? இந்தச் சமூகத்தில் உயிர்வாழ எல்லா உரிமையும், அதிகாரமும் உள்ள ஒரு மனிதனை தன்னுடைய சாதிவெறியைக் காப்பாற்றுவதற்காக வெட்டி சாய்த்த கும்பலின் குடும்பம் எக்கேடு கெட்டு நாசமாய் போனால் இந்தச் சமூகத்திற்கு என்ன? அதைப் பற்றி ஏன் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பார்ப்பன தமிழ் தி இந்து விரும்புகின்றது. சின்னசாமியின் மகனுக்கு உழைத்து வயிறு வளர்க்கத் துப்பில்லை என்றால், குடும்பத்துடன் பிச்சை எடுத்துச் சோறு தின்னட்டும். அதைப் பற்றி பார்ப்பன தமிழ் தி இந்துவுக்கு என்ன கவலை வந்தது?

சின்னசாமியின் மகன் குறிப்பிடுகின்றார் “தந்தைக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, மேல்முறையீடு செய்யக் கூட பண வசதி இல்லை. தந்தை சிறைக்குச் சென்றதால் கட்டணம் செலுத்த முடியாமல், எனது படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்கள் குடும்பமே தந்தையின் வருவாயை நம்பித்தான் இருந்தது. அவர் சிறையில் இருந்ததால் ஓராண்டுக்கும் மேலாக எந்த வருமானமும் எங்களுக்கு இல்லை. சாப்பாட்டுக்கே வசதி இல்லாமல் திண்டாடுகின்றோம். இந்த நிலையில் பணமின்றி தூக்கு தண்டனையை எதிர்த்து எப்படி மேல்முறையீடு செய்ய முடியும். இனி நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட வேண்டிய நிலையில்தான் நானும் அம்மாவும் உள்ளோம்”.

இதைப் படிக்கும் போதே இதை வேறு எங்கேயோ படித்த மாதிரியான நினைப்பு உங்களுக்கு நிச்சயம் வரும். ஆம் இது பேருந்துகளில் பிச்சை எடுக்கும் வடநாட்டுக் கும்பல் நமது கைகளில் முதலில் ஒரு துண்டுப் பிரசுரத்தை கொடுப்பார்கள், அதைப் படித்தால் ‘அதில் என் அம்மாவுக்கு இதயத்தில் ஓட்டை, அப்பா செத்துவிட்டார், அண்ணன் ஊமை, கை கால் வராது, தங்கச்சி குருடு, தம்பிக்கு பக்கவாதம் எனது குடும்பமே மிக வறுமையில் உள்ளது, சோத்துக்கே திண்டாடுகின்றோம் எனவே உதவிசெய்யுங்கள்’ என்பது மாதிரி வேண்டுகோள் வைத்திருப்பார்கள். அதை வாங்கிப் படித்துவிட்டு சில இரக்க மனமுடையவர்கள் ஐந்து, பத்து என முடிந்ததை அளிப்பார்கள். கவுல்சாவின் சகோதரரின் பேச்சைப் பார்க்கும் போது நிச்சயமாக இது அவர் சொன்ன மாதிரி தெரியவில்லை. இந்தக் கட்டுரையை எழுதிய நபர் இந்தப் பேட்டி எடுக்கச் செல்லும் போது நிச்சயமாக இந்தத் துண்டுப் பிரசுரத்தை படித்துவிட்டு சென்றிருப்பார் என்று தோன்றுகின்றது. அதன் பாதிப்பில் இருந்துதான் இதை அவரே எழுதியிருக்க வேண்டும். பேருந்தில் இருக்கும் ஒரு முப்பது, நாற்பது பேரை ஏமாற்ற சக்தி படைத்த அந்த துண்டுப் பிரசுரத்தின் சாராம்சமான கருத்தை அப்படியே கொஞ்சம் மாற்றி ஏன் நம்மால் கோடிக்கணக்கான தமிழ்மக்களை ஏமாற்ற முடியாது என்று கட்டுரையாளர் சிந்தித்ததன் விளைவுதான் இந்தக் கட்டுரை.

தோழர் கவுசல்யா அவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் மேல் முறையீடு செய்யாமல் இருந்துவிடக்கூடாது. இது போன்ற கட்டுரைகள் எல்லாம் சமூகத்தில் கவுசல்யாவுக்கு எதிராகவும் ,சாதி வெறியர்களுக்கு ஆதரவாகவும் கருத்துருவாக்க திட்டமிட்டு எழுதப்படுபவை. அக்கிரகாரத்து மாமாக்களின் உண்மையான நிலைப்பாடு என்பதே சூத்திர சாதி வெறியர்களை எப்போதுமே தன்னுடைய கைக்குள் போட்டுக் கொள்வதுதான். இப்படி ஒரு கட்டுரை எழுதிதான் வயிறு வளர்க்க வேண்டும் என்ற ஒரு நிலை கட்டுரையாளருக்கு இருந்தால் அவர் பார்ப்பன இந்துவில் வேலை செய்து பிழைப்பதற்கு மாறாக, அவரும் அந்த வடநாட்டு கும்பலைப் போல துண்டுப் பிரசுரம் போட்டு தினம் ஒரு பத்து பேருந்துகளில் ஏறி இறங்கி கொடுத்தால் அதைவிட அதிகமாக சம்பாதிக்கலாம் என்பது நம்முடைய தாழ்மையான கருத்து.

- செ.கார்கி

Pin It