தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோயில் எனப்படும் பிரகதீஸ்வரர் கோயிலில் பிப்ரவரி 5 ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டது. குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என நீதிமன்றங்கள் வரை பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு, ஏதோ குறைந்தபட்சம் அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள். ஆனால் கருவறையில் நுழையும் உரிமை என்பது இன்னமும் பார்ப்பனியத்தின் பிடியில்தான் இருக்கின்றது. ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில்களில் ஓர் ஓரமாக நின்று தமிழில் வழிபடவே இன்னும் தமிழர்கள் இறைஞ்ச வேண்டிய இழி நிலையே உள்ளது. நாம் உண்மையில் தமிழனின் உரிமையையும், தமிழின் உரிமையையும் மீட்டெடுக்க வேண்டும் என்றால் உண்மையில் செய்ய வேண்டியது தமிழில் வழிபாடு, தமிழில் குடமுழுக்கு போன்றவற்றுக்காக குரல் கொடுப்பதைவிட அந்தக் கோயில்கள் சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ள சனாதனத்தைத் தகர்ப்பதும், தன்மானத்தையும், சுயமரியாதையும் மீட்டெடுப்பதுதான். அதைச் செய்யாமல் வெறும் மொழி சார்ந்து உணர்வுப் பூர்வமாக மட்டுமே இந்தப் பிரச்சினையை அணுகுவது எந்த வகையிலும் சூத்திரப் பட்டத்தில் இருந்து விடுதலை அடைய உதவாது.
ஆனால் தமிழர்க்கான வழிபாட்டு மரபை மீட்டெடுக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் சிலர், உண்மையில் தமிழர்களின் வழிபாட்டு மரபை மீட்டெடுக்காமல் பார்ப்பனக் கடவுள்களுக்கு தமிழ்முலாம் பூசும் வேலையையே பெரும்பாலும் செய்து வருகின்றார்கள். அப்படி செய்யும் கும்பல்களில் முதன்மையான கும்பல்கள் தமிழ்த் தேசியம் பேசும் கும்பல்கள்தான். இவர்கள்தான் தமிழர்கள் அனைவரும் சுத்த சைவர்கள், அவர்கள் லிங்கத்தை வழிபட்டவர்கள் என்ற புரட்டை தொடர்ச்சியாக செய்து வருகின்றார்கள். ஆனால் ஒருபோதும் லிங்க வழிபாடோ, சிவன் வழிபாடோ தமிழர்களின் தொல்வழிபாட்டு முறையாக இருந்தது இல்லை. கீழடியில் நடந்த அகழாய்வில் எந்த ஒரு கடவுள் உருவங்கள் பொறிக்கப்பட்ட பொருட்களும் கிடைக்கவில்லை என்பதில் இருந்து இதை அறிந்து கொள்ளலாம். மேலும் மரக்கறி உணவைவிட சங்க இலக்கியங்களில் தமிழர்கள் அசைவ உணவையே விரும்பி உண்பவர்களாக காட்சிப்படுத்தப் படுகின்றார்கள். ஆனால் தொடர்ச்சியாக சிலர் சைவம் தமிழர்களின் மதம் என்றும், ஆகமங்கள் தமிழில் இருந்தது என்றும், அவை தமிழர்களுக்கு உரியது என்றும் கதை கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.
சைவம் என்னும் நெறி ஒரு சித்தாந்தமாக காசுமீரத்தில் ஸ்ரீகண்டர் என்பவரால் உருவாக்கப் பெற்றதாகும். பல்லவர்களின் ஆட்சியில் நடுப்பகுதியில் இருந்தே வைதீக மதங்களான சைவமும், வைணவமும் தமிழ்நாட்டில் செல்வாக்குமிக்க மதங்களாக வளரத் தொடங்கியது. பெரும்பாலும் வைதீக சமயத்தின் வளர்ச்சியையும் அந்தக் காலப் பகுதியில் நிலைபெற்றுக் கொண்டிருந்த நிலவுடைமையின் வளர்ச்சியும் ஒன்றாகவே இருந்தது. ஆழ்வார்கள், நாயன்மார்களால் பாடப் பெற்ற கோயில்கள் அனைத்துமே பெரும் நிலவுடைமையைக் கொண்ட கோயில்கள் என்பதையும், மக்களை ஒட்டச் சுரண்டிய ஒரு நிலவுடைமையின் தத்துவமாகவே சைவமும், வைணமும் தமிழகத்தில் வளர்ச்சி பெற்றன என்பதையும் பல வரலாற்று அறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றார்கள்.
சைவத்தின் உயிர் நாடி என்பது வேதங்களும், ஆகமங்களுமே ஆகும். வேதங்கள் என்பது பார்ப்பனர்களுக்கும், சத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் மட்டுமே அதாவது இருபிறப்பாளர்களுக்கு மட்டுமே வேதங்களைப் பயிலும் உரிமையைத் தருகின்றது. நிலவுடைமையின் வளர்ச்சியுடன் தங்களை வளப்படுத்திக் கொண்ட உயர்சாதி சூத்திரர்கள், தங்களுக்கும் பார்ப்பனர்களைப் போலவே உரிமைகள் வேண்டும் என்று போர்க் கொடி உயர்த்திய போது அந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்காக வேதத்தைப் போலவே தனியாக உருவாக்கிக் கொண்டதுதான் ஆகமங்கள் ஆகும்.
ஆகமங்கள் என்பவை முழுக்க முழுக்க வேதத்தின் பார்ப்பனியக் கருத்தியலை உள்வாங்கியவைதான். ஆனால் எப்படி வேதங்கள் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்களாக கருதப்பட்ட ஓட்டுமொத்த சூத்திர்களுக்கும் வேதத்தைப் படிக்கும் உரிமையை மறுத்ததோ, அதே போல இந்தச் சூத்திரர்களும் தங்களை அநுலோமர் அதாவது உயர் வருணத்தினருடைய வைப்பாட்டிகளின் பிள்ளைகளுக்கு ஆகமங்களில் அளித்த உரிமையை முறையாகப் பிறந்த சூத்திர சாதி மக்களுக்குக் கொடுக்க மறுத்தனர். தங்களை ஒட்டுமொத்தமாக சூத்திரர்கள் என்று பார்ப்பனியம் கீழ்நிலையில் வைத்து இழிவு செய்தாலும் சுரணையற்ற இந்தச் சூத்திரக் கூட்டம், சூத்திரர்களையும் சத்சூத்திரர்கள், அசத்சூத்திரர்கள் என்று பிரித்துக் கொண்டு சாதி ஆதிக்கத்தையும், உழைப்புச் சுரண்டலையும் மேற்கொண்டனர். இப்படி உழைப்புச் சுரண்டலையும் சாதிய ஆணவப் போக்கையும் கடைபிடித்த சத்சூத்திரர்களின் படைப்பே ஆகமங்கள் ஆகும்.
நிலவுடைமையைக் கெட்டிப்படுத்த நிறுவனங்களாக மாறிவிட்ட கோயில்களின் நடைமுறையை ஒழுங்குபடுத்தும் சட்டங்களான ஆகமங்கள், தமிழ்நாட்டில் பல்லவர் காலத்திலேயே உருவாக்கப்பட்டன. காரணம் அந்தக் காலப்பகுதியை ஒட்டியே கற்கோயில்கள் தோற்றம் கொள்ள ஆரம்பித்தன. அதற்கு முன்பு தமிழகத்தில் குடைவரைக் கோயில்கள் மட்டுமே இருந்தன. இந்தக் கோயில்கள் அனைத்தும் ஆகம விதிகளுக்கு உட்படாதவை. கட்டுமானக் கோயில்கள் என்பது நிலவுடைமையின் வளர்ச்சியுடன் இணைந்து உருவான ஓர் அமைப்பு ஆகும். இவை அரசு உருவாக்கத்திற்கு துணை நிற்பவை. மேலும் ஆழ்வார்கள், நாயன்மார்கள் யாருமே இந்தக் குடைவரைக் கோயில்களைப் பற்றி பாடவில்லை என்பதில் இருந்து இதைத் தெரிந்து கொள்ள முடியும்.
தமிழில் திருமூலர் என்ற பார்ப்பனரால் எழுதப்பட்ட சதாசிவ ஆகமம் எனப்படும் திருமந்திரம், நிறுவனங்களாக மாறிவிட்ட கோயில்களின் நடைமுறைகளைத் தொகுத்துக் கூறுகின்றது. மேலும் வேதச் சிறப்பு, ஆகமச் சிறப்பு, அந்தணர் ஒழுக்கம் போன்றவற்றைப் பற்றியும் அதிகமாகப் பேசுகின்றது.
“வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளம் உற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே”
என்ற திருமந்திரப் பாடலின் மூலம் இதை அறியலாம். திருமந்திரம் மட்டுமல்லாது அனைத்து ஆகமங்களுமே வர்ணாசிரம தத்துவத்தை தூக்கிப் பிடிப்பவை தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் ஆகம வழிபட்ட பெருந்தெய்வ வழிபாடு என்பது தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருந்த நாட்டார் தெய்வ வழிபாடுகள் அனைத்தையுமே அழித்தது. தமிழரின் நடுகல் வழிபாட்டு முறை போன்றவற்றின் மீது தாக்குதல் தொடுத்து சாதியத்தை உயர்த்திப் பிடிக்கும் சனாதன தர்மத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அத்தோடு தமிழரின் மரபான தாய்த் தெய்வ வழிபாடுகளும், உயிர்ப்பலி கொடுத்து வழிபடும் புராதான மரபுகளுயும் இழிவானது என்ற சிந்தனையையும் விதைத்தது. இதற்கான ஆதாரங்களை சங்க இலக்கியங்களில் நம்மால் பெருமளவு காண முடியும். முருகனுக்கு ஆட்டு ரத்தத்தில் தினை மாவைக் கலந்து படைத்ததாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் முருகனை தமிழ்க் கடவுள் என்று சொல்லும் ஒருவனுக்கும் இந்த வழிபாட்டு முறையை இன்று தூக்கிப் பிடிக்கத் திராணியில்லை. காரணம் தமிழர்கள் சைவர்கள் என்று சொல்லும் கும்பல்கள் அனைத்துமே பார்ப்பனர்கள் மற்றும் சத்சூத்திரர்களின் நலன்களை பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள்தான். இந்தக் கும்பல்கள்தான் சைவம் என்ற பெயரில் இன்று தமிழ்நாட்டில் தலித்துகள் மீது தீவிரமாக தீண்டாமையைக் கடைபிடிக்கும் சாதி வெறியர்களின் குரலாக ஒலித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
இன்று வரையிலும் திருவாடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், குன்றக்குடி போன்ற சைவ மடங்களின் தலைவர்களாக ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களால் மட்டும்தான் வர முடியும். தமிழர்கள் அனைவரும் சைவர்கள் என்று கூச்சமே இல்லாமல் புளுகும் நபர்கள் இதை மாற்ற ஒருபோதும் முயன்றதில்லை.
சிவனை தமிழ்க் கடவுளாக கட்டமைக்கும் வேலையையும் தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டுள்ள சில பார்ப்பன அடிவருடிக் கும்பல்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றன. ஆனால் அடியார்களை எல்லாம் சோதித்து ஏற்றுக் கொள்ள பெரிய புராணத்தில் பார்ப்பன வடிவத்திலேயே சிவன் வருகின்றார். திருநீலகண்ட நாயனாருக்கு “மேனிமேல் தோளோடு மார்பிடைத் துவளு நூலுடன்” காட்சி தந்தார். அதேபோல சுந்தரரை ஆட்கொள்ள பூணூல் மார்பினராய், மறையோதும் வாயினராய், வாயாடும் விருத்த வேதியராய் வந்தார். இயற்பகையாரிடம் அவரது மனைவியை கேட்டுப் பெற “தூய நீறு பொன்மேனியில் விளங்கத் தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய்” வந்தார். இதே போல வேளாளர் குலத்தைச் சேர்ந்த மானக்கஞ்சாற நாயனார் வீடுவந்து, மணக்கோலத்தில் இருந்த அவரின் மகளுடைய கூந்தலை அறுத்துக் கேட்கும் போது "வடப் பூணூம் நூலும்…. அருமறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திரு உடையும்” கோலத்தில் வந்தார்.
சிவனடியார்களில் பல சாதிகள் இருக்கின்றன என்று சொன்னாலும், அப்பருக்கும், சுந்தரருக்கும் இருக்கும் மரியாதை ஒரு நாளும் நந்தன்களுக்கு இருப்பதில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. இன்று பல பேர் சைவம் என்பதை மரக்கறி உணவைத் தின்பது என்றுதான் புரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆனால் ஒரு தலித்தோ அல்லது அசத்சூத்திரர்களோ தாங்களாக விரும்பி புலால் உண்ணுவதை நிறுத்திவிட்டு தங்களை பார்ப்பனிய மயப்படுத்திக் கொண்டாலும், சைவத்தை தங்கள் சாதியின் பிரதான அடையாளம் எனக் கருதும் சத்சூத்திரர்களால் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார்கள்.
முற்போக்குவாதிகளின் பணி என்பது அனைத்து மட்டங்களிலும் தமிழின் உரிமையை நிலைநாட்டுவது என்பதைத் தாண்டி தமிழனின் மீது திணிக்கப்பட்டுள்ள சாதிய இழிவைக் கொண்டாடும் வழிபாட்டு முறையை அம்பலப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். அது பார்ப்பனியமாக இருந்தாலும் சரி, அது பெற்றெடுத்த கள்ளக் குழந்தையான தமிழ்த் தேசியமாக இருந்தாலும் சரி, இரண்டையும் ஒன்று போலவே பாவித்து அதன் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும். நாமும் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கொண்டு, சைவத்தையும், அதை நிறுவனப்படுத்தும் ஆகமங்களையும் கொண்டாடுவது சாதி வெறியர்களுக்கே பயன்படும். ஓட்டுப் பொறுக்கிகள் வேண்டுமென்றால் ஓட்டுக்காக லிங்கத்தையும் கும்பிடுவார்கள், லிங்கத்தை இரண்டாக உடைத்து தனித்தனியாகக் கொடுத்தாலும் கும்பிடுவார்கள். காரணம் அவர்களுக்கு தன்மானம், சுயமரியாதை என்ற சொற்கள் எல்லாம் வெறும் சொற்கள் மட்டுமே, ஆனால் நமக்கோ அதுதான் வாழ்க்கைத் தத்துவம்.
- செ.கார்கி