அவ்வப்போது ஏதாவது லீக்ஸ் வெளியாகி மக்களை பரபரப்புக்கு ஆட்படுத்தி விடுகின்றன. பனாமா லீக்ஸ், பாரடைஸ் பேப்பர்ஸ் லீக்ஸ் போன்ற உலக மோசடிப் பேர்வழிகளை அம்பலப்படுத்திய லீக்ஸ் முதல் சில்லரைத் தனமான சுசி லீக்ஸ் வரை இதைச் செய்துள்ளன. ஆனால் இவை எல்லாம் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தைவிட தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட, ஜெயலலிதா மருத்துவமனையில் பழச்சாறு குடிப்பது போன்று 20 நிமிடங்கள் ஓடும் வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த வீடியோ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மனதில் வைத்து வெளியிடப்பட்டு இருந்தாலும், இல்லை கபடதாரிகள் ஓபிஎஸ், இபிஎஸ்சை அம்பலப்படுத்த வெளியிடப்பட்டு இருந்தாலும், ஏறக்குறைய ஒரு ஆண்டாக மக்கள் மத்தியில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக இருந்து வந்த சந்தேகங்கள், பரப்பப்பட்ட பொய்யுரைகள் போன்றவற்றைத் தீர்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஜெயலலிதா இறந்தே மருத்துமனைக்குக் கொண்டுவரப்பட்டார், அவரது கால்கள் அகற்றப்பட்டன, அவரை சசிகலாதான் அடித்துக் கொன்றுவிட்டார் போன்று ஆளாளுக்கு பரப்பிவிட்ட எல்லா திட்டமிட்ட ஊகங்களையும் வீடியோ பொய் என்று நிரூபித்துள்ளது.

jayalalitha in hospitalஇது மட்டும் அல்லாமல் இன்னும் சில வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாக தினகரன் தரப்பு தெரிவிக்கின்றது. அந்த வீடியோக்களும் வெளியிடப்படும் பட்சத்தில் ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து பிஜேபி பொய்யர்களும், அவர்களின் கைக்கூலியான இன்றைய அதிமுகவில் இருக்கும் அனைத்து அயோக்கியர்களின் யோக்கியதையும் நிச்சயம் அம்பலமாகும் என நாம் எதிர்ப்பார்க்கலாம். ஆளுநர் வித்தியாசாகர் ராவ், வெங்கையா நாயுடு, எய்ம்ஸ் மருத்துவர்கள் என அனைவருமே இந்தக் கூட்டுச்சதியில் பங்குதாரர்களாக இருந்துள்ளனர். ஜெயலலிதா நோயின் தீவிரத்தால்தான் உயிர் இழந்தார் என தெரிந்தும், திட்டமிட்டு ஆட்சியை மன்னார்குடி மாஃபியாவின் பிடியில் இருந்து தங்களது நிரந்தர அடிமைகளாக என்றுமே இருக்க ஒப்புக்கொண்ட கூட்டத்திற்கு மீட்டுத் தர இந்தப் பிஜேபி குற்றக்கும்பல் உடந்தையாக இருந்துள்ளது. எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட பிடிக்கத் துப்பில்லாத இந்தக் கூட்டம் பினாமிகள் மூலம் ஆட்சியை நடத்த செய்த சதியே ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவர்கள் கட்டிவிட்டி கட்டுக்கதைகள்.

வீடியோ வெளியானதில் இருந்து பார்ப்பன கழிசடைகளும், அவர்களை அண்டிப் பிழைக்கும் சூத்திர கழிகடைகளும் ஒன்றாக சேர்ந்துகொண்டு இந்த வீடியோ பொய்யானது, மார்பிங் செய்யப்பட்டது என கத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் சில பிழைப்புவாதிகள் தங்களுக்கு ஓட்டு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் வீடியோ வெளியிட்டது கீழ்த்தரமானது என உளறிக் கொட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். இப்போது ஓட்டுப்பொறுக்கிகளுக்கு இருக்கும் பயத்தைவிட தேர்தல் ஆணையம் தான் இந்த வீடியோவைப் பார்த்து நடுங்கிப் போய் கிடக்கின்றது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஏற்கெனவே மோடிக்காக தள்ளிவைத்த தேர்தல் ஆணையம், இந்த முறை எப்படியாவது தங்களது அடிமைகளை வெற்றிபெற வைத்து, தமிழக மக்களின் ஆதரவு தங்களது அடிமைகளுக்குகே நிரந்தரமாக உண்டு என்று காட்ட கட்சியையும், சின்னத்தையும் ஒதுக்கி, தேர்தலில் வெற்றி பெற போட்ட திட்டத்தில் இந்த வீடியோ திடீரென பெரிய விரிசலை ஏற்படுத்தி இருக்கின்றது. அதைச் சகித்துக் கொள்ள முடியாமல் தான் வெற்றிவேல் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.

வீடியோவில் எந்த இடத்திலும் ஜெயலலிதா மரணத்திற்கு நாங்கள் காரணமில்லை, எனவே உண்மையாக ஜெயலலிதாவின் விசுவாசிகளாய் இருந்த எங்களுக்கு ஓட்டு போடுங்கள் எனப் பிரச்சாரம் செய்யவில்லை. அப்படி இருக்கும் போது எந்த அடிப்படையில் வெற்றிவேல் மீது வழக்கு பதிய முடியும் எனத் தெரியவில்லை. இதில் இருந்தே தேர்தல் ஆணையம் மோடியின் கைக்கூலி அமைப்பு என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகின்றது. ஆனால் இதில் பாராட்டப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், ஊடகங்களில் தங்க.தமிழ்ச்செல்வன் தேர்தல் ஆணையத்தையும், பிஜேபியின் பினாமிகளையும் போட்டு புரட்டி எடுத்தது. இதனால் எங்கே ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு 6000 கொடுத்த பணம் வீணாகிப் போய்விடுமோ என்ற நடுக்கத்தால் ஒட்டுமொத்த பிஜேபி அடிமைகளும் வீடியோ நம்பத்தகுந்ததாக இல்லை என ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துவிட்டன.

இந்த வீடியோ பொய்யானது என பிரச்சாரம் செய்யும் நபர்களைக் கவனித்தால் ஒரு விடயம் நன்றாகத் தெரியும் - ஒன்று அவர்கள் பிஜேபிக்கோ இல்லை, அதன் அடிமைகளின் கட்சிக்கோ தீவிர ஆதரவாளர்களாக இருப்பார்கள். இல்லை என்றால் பார்ப்பன ஊடகங்களில் காசுக்குக் குரைப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் தான் இந்த வீடியோ வெளியானதில் இருந்து மிகப் பதற்றமாக இருக்கின்றார்கள். எந்த வகையிலும் பிஜேபியின் பினாமிகள் தோற்றுவிடக்கூடாது என்பதை மனதில் வைத்து கண்ணும், கருத்துமாக ஊடகங்களில் ஜெயலலிதா தொடர்பாக அவதூறான செய்திகளை ரூம் போட்டு யோசித்து எழுதிக் கொடுத்த கழிசடைகளும் இவர்கள்தான்.

இந்த வீடியோ வெளியிட்டதை ஆதரிப்பதால் நாம் மன்னார்குடி மாஃபியா கும்பல் யோக்கியமானவர்கள் என்றோ, சசிகலாவும், ஜெயலலிதாவும் ஊழல்கறை படியாத உத்தமிகள் என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் இந்தப் பிராடு கும்பலை விட இப்போது அதிமுகவை கைப்பற்றி இருக்கும் கும்பல் மிக அபாயகரமானவர்கள், தமிழ்நாட்டையே அழித்து நாசமாக்கத் துடிக்கும் நாசகாரப் பேர்வழிகள் என்றுதான் சொல்கின்றோம். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை எதிர்த்து வந்து, மாநில சுயாட்சியைப் பாதிக்கும் நீட், ஜிஎஸ்டி, இந்தி திணிப்பு போன்ற பல விடயங்களை இந்தக் கும்பல் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக்கொண்டு தமிழக மக்களுக்கு அப்பட்டமான துரோகத்தைச் செய்தது. ஊழல் பேர்வழி ஜெயலலிதா மாநில சுயாட்சி நிலைப்பாட்டில் கடைபிடித்த குறைந்த பட்ச நேர்மையைக் கூட இந்தப் பிஜேபி அடிமைகளிடம் இல்லை என்பதுதான் உண்மை.

நாம் மன்னார்குடி மாஃபியா கும்பலை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கும் அதே வேளையில் இந்தப் பிஜேபின் பினாமிகளையும் அரசியல் களத்தில் இருந்து துடைத்தெறியப் போராட வேண்டும். இந்த வீடியோ வெளியீடு ஒரு கழுத்தறுப்பு நடவடிக்கையாக இருந்தாலும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ஓட்டுப்பொறுக்கிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை இது வெளிச்சம் போட்டு காட்டி இருக்கின்றது. சவப்பெட்டியை வைத்து ஓட்டுக்கேட்ட பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை ஆணையம் அமைத்த பழனிசாமி என அனைவருமே ஒரு தேர்ந்த குற்றக்கும்பல் என்பது இன்னும் ஆணித்தரமாக தமிழ்நாட்டு மக்களுக்கு இப்போது தெரிய வந்திருக்கின்றது.

இந்த வீடியோவைப் பார்த்து ஜெயலலிதாவிற்காக மொட்டை போட்டுக்கொண்ட, மீசையை மழித்துக்கொண்ட, காவடி தூக்கிய, மண்சோறு தின்ற, அலகு குத்திக்கொண்ட உண்மைத் தொண்டர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஜெயலலிதா என்ற ஊழல் பேர்வழியை கடவுளுக்கு நிகராக வைத்து வணங்கும் அதன் தொண்டர்கள் அந்தக் கடவுளை சசிகலா தான் கொன்றுவிட்டார் என்ற தீராத கோபத்தில் இருந்து இனி மீண்டு விடுவார்கள். சிறையில் இருந்து சசிகலா விடுதலையானவுடன் அவரின் முகத்தில் ஜெயலலிதாவை தரிசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இது எல்லாம் நடக்கலாம், நாம் நடக்காது என்று மறுக்க முடியாது. ஊரை அடித்து உலையில் போட்டவர்களுக்கு எப்போதுமே தமிழக மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருந்துகொண்டுதான் இருக்கின்றது. இருப்பினும் இது நடக்காமல் போக வேண்டும் என்பதுதான் நம் விருப்பம். வெறும் விருப்பத்தோடு மட்டும் நில்லாமல் அப்படியான சிந்தனையை மக்கள் மத்தியில் உருவாக்கிட நாம் தீவிரமாக பணியாற்றவும் வேண்டி இருக்கின்றது.

- செ.கார்கி

Pin It