கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி. அவர்களுக்குப் பன்முக அடையாளங்கள் உண்டு. தொழிற்சங்கத் தலைவர், தொல்காப்பியம், திருக்குறள் ஆகியவற்றை ஆய்ந்து உரை எழுதிப் பதிப்பித்தவர், இன்னிலை, சிவஞான போதம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதியவர், ஷேம்ஸ் ஆலனின் நான்கு ஆங்கில நூல்களை மொழி பெயர்த்தவர் என்ற பல சிறப்பு அடையாளங்களைக் கொண்டிருந்த ஓர் ஆளுமை ஆவார். இக்கட்டுரையோ அவரது சமூகப் பார்வை குறித்த சில தகவல்களை முன்வைக்க முயலும் ஒன்றாகும்.

வ உ சி குடும்பத்தில் அவர் மட்டுமின்றி, அவரது தந்தை திரு. உலகநாதம் பிள்ளையும், அவரது பெரியப்பாவும் கூட வழக்கறிஞர்கள்தாம். உப்பளம் வைத்துத் தொழில் நடத்திய குடும்பம். சாதி அடுக்கில் பார்ப்பனருக்கு அடுத்த நிலையினதாகக் கருதப்படும் சைவ வேளாளர் குடும்பம். என்றாலும், வ.உ.சி. அவர்கள் கொண்டிருந்த சமூகப் பார்வை, அதுவும் அந்தக் காலகட்டத்தில் என்பது பெருஞ்சிறப்புக்கு உரியவையாகும். அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

சட்டம் படித்துத் தேறிய பின்னர் 1895ஆம் ஆண்டு முதல் சிறிது காலம் வ.உ.சி அவர்கள் எட்டையபுரத்தில் தொழில் செய்து வந்தார். அதன் பின்னர் 1900ஆம் ஆண்டு முதல் தூத்துகுடியில் தொழில் புரிந்தார்.voc 268எட்டையபுரத்தில் வழக்கறிஞராக அவர் பணியாற்றி வந்தபோது வழக்காடுவதற்கு வந்து போன ஒரு தோழர் மயக்கமுற்றுக் கிடப்பதைப் பார்த்து அவரைத் தேற்றி என்ன ஆனது என்று செய்தியைக் கேட்கிறார். அவர் சொல்கிறார் என் வழக்கு நீண்ட காலமாக நடந்து கொண்டே இருக்கிறது; நானும் வந்து கொண்டே இருக்கிறேன்; முடிந்த பாடில்லை” என்கிறார். அவரிடம் விவரங்களைக் கேட்டறிந்து இனி வராதே என்று கூறி அனுப்புகிறார். வழக்கை நடத்தி வெற்றி பெற்று செய்தியை மட்டுமே அனுப்புகிறார். அதைத் தன்னுடைய ‘தன்வரலாறு’ கவிதையில் கூட எழுதுகிறார்.

“முடிமனில் என்னுடை முன்னோர் நாள்முதல்,

அடிமை புரியும் அறிவினைக் கொண்ட,

வேத நாயகம் எனும் மேம்படு பள்ளனை,

ஏது மில்லாமலே எண்ணிலா வழக்கில்,

அமிழ்த்தனர் போலீசார்; அனைத்தினும் திருப்பினேன்”

என்று குறிப்பிடுகிறார். ஓர் எளிய மனிதனின் மீது, சமூகத்தின் அடிமட்டத்தில் அமுக்கி வைக்கப்பட்டவர் மீது பரிவைக் காட்டும் ஒரு நிகழ்வு அது. அன்று நிலவிய சாதி ஆதிக்கம், வ.உ.சி. அவர்கள் பிறந்த சாதி ஆகியவற்றோடு பொருத்திப் பார்த்தால்தான் அந்நிகழ்வின் சிறப்பினை அறிய முடியும்.

 அதுபோலவே, இரண்டு கண்களையும் இழந்த ஆதரவற்ற சிவப் பொருள் உணர்ந்த இராமையா தேசிகன் என்ற ஒரு ’குலத்தில் குறைந்தவரையும்’ தமது இல்லத்தில் உணவிட்டுப் பாதுகாத்தவர் வ.உ.சி. பார்வையற்ற அவருக்கு வ.உ.சி. அவர்களின் மனைவியே உணவு ஊட்டி வந்துள்ளார் என்பதை அவரது தன் வரலாற்றில் எழுதி உள்ள கீழ்க்கண்ட வரிகளால் அறியலாம்.

சிவப்பொருள் உணர்ந்த தேசிகன் ஒருவனென்

தவப்பயனால் இலம் தங்கப் பெற்றேன்

ஊனக் கண்ணினை ஒழித்தவன் நின்றதால்

தானக் குறையினை தவிர்த்திட ஊட்டினள்

...................................................................................................................

குலத்தில் அன்னோன் குறைந்தவன் என்றென்

தலத்தில் உள்ளோர் சாற்றினர் குற்றம் ......

எனக் குறிப்பிட்டுள்ளார். விருதுநகர் இராமையா தேசிகர் ஒடுக்கப்பட்ட வகுப்பினர்; துறவி; கண்பார்வை இழந்தவர்; வ.உ.சி. குடும்பமோ சைவ வேளாளர் குடும்பம்; அவருக்கு அவரது மனைவியே உணவூட்டினார் என்பது இந்த நாளிலும் நடக்குமா? அய்யமே!

உணவூட்டியதோடு நில்லாமல் அவரது மனைவி வள்ளியம்மை எழுப்பிய கேள்வி, வ.உ.சி தன்னளவோடு சாதி கருதாப் பண்பினை நிறுத்திக் கொள்ளாமல், தன் மனைவியாரும் ஏற்கும் பக்குவத்தை உண்டாக்கி வைத்திருந்தார் என்பதை அறியலாம். அவரது மனைவி வள்ளியம்மையின் கூற்றாக பதிவு செய்துள்ளார் வ.உ.சி.

எல்லாம் உணர்ந்த என் உயிர்நாத!

எல்லாம் கடவுளாய் இருக்கக் கண்டும்

உருவம் முதலிய ஒன்றினும் பேதம்

மருவுதல் இலாமை மலை போல் கண்டும்

கற்பனையாகக் காணும் குலத்தின்

சொற்பிழை கொளல் எனச் சொல்லியே தூய!

துறந்தவர் தமையும் தொடருமோ குலம் இவண்?

இறந்த அம்மொழியினை ஏற்றிடாது ஒழிப்போம்!

எல்லாவற்றிலும் கடவுள் உண்டு என்று கூறுவோர்

ஒடுக்கப்பட்டோரிலும் அவர் இருப்பார் என்பதை அறியாரா?

என்றும் மேலும் அவரோ துறவி; துறவிக்குக் குலம் இல்லை என்று வேறு சொல்லி வைத்திருக்கிறார்கள். பிறகு ஏன் குலம் பற்றிய பேச்சு? என்றும் கேள்வி கேட்கும் பக்குவத்தையும் உருவாக்கி வைத்துள்ளார் வ.உ.சி!

 வள்ளுவ வகுப்பினரான சுவாமி சகஜானந்தர் என்னும் துறவியை தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் வ உ சி. அவரது மனைவியாரோ சகஜானந்தா சாமியை அகம் முகம் மலர வரவேற்று விருந்தோம்பி மகிழ்ந்திருக்கிறார். இந்த சகஜானந்தர் காங்கிரசில் சேர்ந்து தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றியவர்; சிதம்பரம் கோவில் நுழைவு இயக்கத்தில் இறங்கியவர்; அங்கே நந்தனுக்குத் தனி கோயில் எழுப்பியவர்; ஒடுக்கப்பட்ட குடும்பத்துக் குழந்தைகளுக்காகப் பள்ளிகளை நடத்தியவர் ஆவார்.

"தமது பிள்ளை போன்று என்னை வளர்த்தார் அப்பெருந்தொகை வள்ளல்” என்று வ. உ. சி. யைப் பற்றிப் பாராட்டிச் சொல்லி இருப்பது மற்றொரு சான்றாகும்

தமிழக வரலாற்றில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் வீரியம் கொண்டதற்குச் சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் ஒரு காரணம். அந்தச் சேரன்மாதேவி குருகுலத்திற்கு 31 ஏக்கர் நிலத்தைத் தன் சொந்தப் பணத்தில் வாங்கிக் கொடுத்தவர் கானாடுகாத்தான் வை.சு. சண்முகம் ஆவார். ஆனால் குருகுலத்தில் பார்ப்பனரல்லாதார் குழந்தைகளைப் பாகுபடுத்தி நடத்துகிறார்கள் என்ற செய்தி தெரிந்தவுடன் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. வரதராசுலு நாயுடுவும், பெரியாரும் கடுமையாக எதிர்த்தார்கள். வைக்கம் போராட்டமும், சேரன்மாதேவிப் போராட்டமும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் நடந்து கொண்டிருந்தது. அதற்கான கலந்துரையாடல்கள் எல்லாம் கானாடுகாத்தான் சண்முகம் இல்லத்தில்தான் தொடந்து நடைபெற்றது. அவர் சுயமரியாதை இயக்கத்தில் பொருளாளராக விளங்கியவரும்கூட.

1935இல் அவரது மகள் பார்வதி, அவரது திருமண மேடையிலேயே, பெரியாரிடம் நான் தாலிக் கட்டிக் கொள்ளமாட்டேன்; எனக்குக் தாலி கட்டுவதாக இருந்தால் நானும் மாப்பிள்ளைக்குத் தாலிகட்டுவேன் எனக் கூறித் தாலியை மறுத்தவர்.

சேரன்மாதேவி குருகுலத்துக்கு எந்தச் சண்முகம் நிலத்தை வாங்கிக் கொடுத்தாரோ, அவரேதான் சுவாமி சிவானந்த சரஸ்வதி எனும் அறிஞர், வேத, புராண, யாக, பார்ப்பனப் புரட்டுகளை விளக்கி எழுதியிருந்த ‘ஞான சூரியன்’ என்ற ஒரு நூலினையும் தன்செலவில் வெளியிட்டார்.

அந்நூலுக்கு வ.உ.சி அவர்கள் ஒரு முன்னுரையை எழுதியுள்ளார்.

"அவன் (ஞான்சூரியன்) வடமொழி வேதங்களிலும், மனுதர்ம சாஸ்திரங்களிலும், காமிகாகமம் முதலிய ஸ்லோகங்களை எடுத்துக் கூறிப் பொருத்தமான கதைகளைக் கூறியும், ஆரியரின் இழிதகைகளையும், சாதிய வேறுபாடுகளையும் நன்கு விளக்குகின்றான். அவ்வேதம் முதலியவற்றைத் தமவெனக் கொள்வோரும், அவற்றில் மதிப்பேனும் விருப்பேனும் உடையோரும் ஞானசூரியனைப் படிப்பாராயின் அவற்றைத் தமவெனக் கொள்ளார், மதியார், விரும்பார்"

“பிராமணர்களின் யாகங்களிலும் விருந்துகளிலும் பன்றியூன், எருமையூன், பசுவூன் முதலிய பலவகை ஊன்களை உண்டும், பனங்கள் முதலியபலவகைக் கள்களைப் பானஞ் செய்து வந்தவர்களென்றும், சகோதரன் மனைவியிடத்தும், விதவையிடத்தும், குதிரையிடத்தும் குழந்தைகள் பெற்றுச் சந்ததி விருத்தி செய்து வந்தவர்களென்றும், மேற்படி வேதம் முதலியவற்றிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக் காட்டி காட்டி, ருஜ§ செய்திருக்கிறான். தாம் மதிக்கப்படுவதற்குரிய ஒரு சாதியார் என்று சொல்லிக்கொள்ள விரும்புவாராயின், பிராமணர், மேற்படி வேதம் முதலியவற்றை அக்கினி பகவானுக்கு ஆகுதி செய்வது இன்றியமையாதது” என்று எழுதியுள்ளார்.

 பார்ப்பனர்கள் அனைத்தையும் தீயில் போட்டு எரிப்பார்கள், யாகம் என்ற பெயரால். அதைக் குத்தூசி குருசாமி Spirtual Post Office என்பார். யாகத் தீயில் போட்டால் அவையனைத்தும் நேரடியாகக் கடவுளுக்கும், முன்னோருக்கும் போய்ச் சேரும் என்று பார்ப்பனர்கள் கூறுவதால். அதுபோல வடமொழி வேதங்கள், மனுசாஸ்திரம் ஆகியன இரண்டையும் தீயில் போட்டு எரிப்பதே நமது முதல் கடமை என்கிறார் வ.உ.சி.

அவற்றைக் காட்டித்தான் “இந்து சமயம் என்பதன் பொய்களையும் புரட்டுகளையும், ஆபாசங்களையும் நம்பவைப்பதோடு, அச்சமயப் பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாகப் பிராமணரல்லாதார்கள் தாழ்த்தப்படுவதையும் கூறுகிறது” என்றும் எழுதுகிறார்.

 மேலும், “வடமொழி யாகமங்களிற் சிலவற்றைத் தமவெனக் கொண்டு, பிறப்பால் சாதி வேற்றுமைகள் கற்பித்தும், சிவாலயங்களிற் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தும் வணங்கி வருகிற சைவர்களும் ‘ஞான சூரியன்’ கிரகணத்திலிருந்து தப்பவில்லை. தாம் மதிக்கப் படுகிற ஒரு சாதியார் என்று சொல்லிக் கொள்ள விரும்புவாறாயின், அச்சைவர் வடமொழி ஆகமங்களைத் தமவெனக் கொள்ளும் தவறை ஒழித்தலும் சிவாலயங்கள் சிலவற்றில் காணப்படும் சிவலிங்க உருவினை மாற்றலும் இன்றியமையாதவை.” என்கிறார்.

மற்றொரு கருத்தாகச் சாதி பேதமே காணாத திருக்குறள் தமிழ் மக்களிடத்திலும், சிவஞான போத சித்தாந்தச் சைவத் தமிழ் மக்களிடத்திலும் ஞான சூரியன் செல்லாதிருப்பது தகுதியே”என்கிறார். இவ்வணிந்துரையின் வாயிலாக இந்து மதம், வடமொழி வேதங்கள் ஆகியவற்றை மட்டுமின்றி, தாம் பிறந்த சைவ சமயத்தையும் சாடுகிறார் வ.உ.சி.

 சைவர்களுக்கு வ.உ.சி மீது கோபம் இருந்தது. ஏனென்றால் சுயமரியாதைச் சைவர்கள் என்றே சில பேரை அவர்கள் விலக்கி வைத்திருந்தார்கள். பெரியாரோடு தொடர்பு கொண்டிருந்தவர்களை அப்படி விலக்கி வைத்திருந்தார்கள். வ.உ.சியை மட்டுமல்ல; சொ.முருகப்பா, கி.ஆ.பெ.விசுவநாதம், கே.ஆர்.பாலசுப்பிரமணியம், மணி திருநாவுக்கரசு முதலியார், கா.அப்பாதுரை போன்றவர்களையும் ‘சுயமரியாதைச் சைவர்கள்’ என்று சைவர்கள் ஒதுக்கி வைத்திருந்தார்கள். வ.உ.சி.அவர்கள் எழுதிய சிவஞான போத உரையைக் கூட அவர்களெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.

 வ.உ.சி. அவர்கள் 1928இல் தேவக்கோட்டையில் மாணவர் சங்க ஆண்டு விழா ஒன்றில் பேசுகிறார், "மனுநீதி கண்ட சோழனைப் பற்றி கூறியபொழுது இப்போதிருக்கும் மனுஸ்மிருதியை நடத்திக் காட்டியமைக்காகவே ’மனுநீதி கண்ட சோழன்’ என்று பெயர் வந்ததென்ற பொருள்படும்படியே சேக்கிழார் கூறினாரென்று கூறினார்கள். அவர் அப்பொருட்படி கூறியிருப்பாராயின் அவர் மனுஸ்மிருதியைப் படிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். எந்த நூலானாலும் குற்றமிருக்குமானால் அதனைத் தள்ளத் தயங்கக் கூடாது. பிழையிருக்குமானால் ... வள்ளுவரல்ல, சிவபெருமானே கூறினாலும் தள்ள வேண்டியது தான். கடவுளே எழுதினார் என்று கூறப்படும் நூலிலும் பிழை இருக்குமானால் அதனையும் தள்ள வேண்டியதுதான். வேதத்தில் பிழை இருக்குமானால் திருத்த வேண்டியதுதான். சைவத்திலும் அப்படியேதான். எந்த நூலில் பிழைகள் காணப்படுகின்றனவோ இருக்கிறதோ அவைகளைச் சீர்திருத்த வேண்டுவது இன்றியமையாததாகும்" என்று அக்கூட்டத்தில் பேசுகிறார்.

 வேடிக்கையாகவும் சிலவற்றைப் பேசியிருக்கிறார், திருவள்ளுவரைப் பற்றி, ”திருவள்ளுவர் ஒரு கவி, ஒப்பற்ற அறிஞர், நானும் அவரைக் கடவுளென்றே போற்றுகிறேன். அவர் நூலில் வாளென்றும், வில்லென்றும், வேலென்றும் இருக்கிறதேயன்றித் துப்பாக்கியென்றாவது, பீரங்கியென்றாவது இல்லை. இப்பொழுது யுத்தத்திற்குச் சாதனங்களாகத் துப்பாக்கியும், பீரங்கியுமே இருக்கின்றன. யுத்தத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் நேரிடின் என் செய்வது? வள்ளுவர் துப்பாக்கியைப் பற்றியும், பீரங்கியைப் பற்றியும் எதுவும் சொல்லவில்லை. எனவே இச்சாதனங்களைக் கொண்டு போர் புரிய மாட்டேன். வள்ளுவருக்கு என்ன புத்தி இல்லையா? அவரைவிட நாமெல்லாம் மேதாவிகளாகி விட்டோமா! என்று ஒருவன் இப்போது கூறிக்கொண்டு இருப்பானானால் அது எவ்வளவு பெரிய மூடத்தனம் என்பதை நீங்கள் யோசித்துப் பாருங்கள்.” என்று கூறுகிறார். சைவர்களுக்கு ஏன் கோபம் வந்தது என்று புரிகிறதா?

மற்றொன்று, ”தென்புலத்தார் கடன் ஓம்புதல் என்பதற்குப் பிதுர்க்கடன் செய்தல் என்றே பொருள் வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் குறிப்பிட்ட வகுப்பாருக்கு வெள்ளி லோட்டா, தங்கத் தட்டு கொடுக்க வேண்டும் என்று காணப்படவில்லையே? சபிண்டி, திதி முதலியவை செய்ய வேண்டும் என்று சொன்னால், ‘அய்யா, இது எங்கள் அப்பனுக்குப் போகாது; நாங்கள் இப்போது விழித்துக் கொண்டோம்; இனி ஏமாற்றமுடியாது’ என்று கூறி விடுங்கள். கொசு யானையை விழுங்கி விட்டது என்று சொன்னால் அதை நம்ப முடியுமா?” என்று பார்ப்பனச் சடங்குகளை விலக்குங்கள் என்று காரைக்குடி சொற்பொழிவில் பேசுகிறார்.

பார்ப்பனர்கள் நம்மை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று ஒரு எடுத்துக்காட்டையும் கூறுகிறார், “நண்பர் தியாகராஜ செட்டியார் மனைவியுடன் பர்மாவிற்கு சென்று வந்திருக்கிறார். அதற்காக அவரை ஜாதியை விட்டு விலக்க வேண்டும் என்று சில இடங்களில் கூறப்படுகிறதாம். இது எவ்வளவு அறியாமை. மனைவியுடன் கப்பலேறிச் சென்றதற்காக ஒரு வகுப்பாருக்கு 2000 , 3000 கொடுத்துப் பிராயச்சித்தம் செய்து கொள்வதா? பிராயச்சித்தம் என்பதெல்லாம் நமக்குத்தான், அவர்களுக்கென்றால் வேதப் பிரமாணம் இருக்கிறது; அந்த நாயனார் அப்படிச் சொல்லியிருக்கிறார், இந்த நாயனார் இப்படிச் சொல்லியிருக்கிறார்களென்று கூறிவிடுவார்கள். பொதுக்கோயில்களில் அனைவருக்கும் சம உரிமை வேண்டும்; லஞ்சம் வாங்காத நீதிபதியிடம் தரகர்கள் வேண்டாம்” என பார்ப்பனர்களுக்கு எதிராகச் சாட்டையை சுழற்றுகிறார் வ.உ.சி. ( குமரன், ஜனவரி, மார்ச் 1928 )

காங்கிரஸை விட்டு வெளியேறியதன் அடுத்த ஆண்டு 1926 டிசம்பரில் பெரியாரோடு ஒரு மாநாட்டிற்குச் செல்கிறார். பிராமணர் அல்லாதோர் மாநாடு என்று அந்த மாநாடு மதுரையில் கூட்டப்படுகிறது. அதில் வ.உ.சி பங்கேற்கிறார். பெரியார் அப்போது, நீதிக்கட்சியை மட்டுமல்லாமல் காங்கிரசில் இருந்த பார்ப்பனரல்லாதோரையும் வாருங்கள் என்று அழைப்பு கொடுத்திருந்தார். அந்த அழைப்பில், நீதிக் கட்சிக்காரர்களை விமரிசனம் செய்வதைப் போல "நீங்கள், பிராமணரல்லாதார் என்றால் 5 விழுக்காடு கூட இல்லாத இராஜாக்களையும், மிராசுதாரர்களையும், ஜமீன்தார்களையும் நினைத்துக் கொண்டு வராதீர்கள். 95 விழுக்காடு உள்ள ஏழைகளும், உழைப்பாளிகளும், பாமரர்களும் சேர்ந்துதான் பிராமணரல்லாதார். இதனை மனதில் கொண்டு வாருங்கள்; அதற்கான திட்டம் தீட்டுவோம்" என்று அந்த நிகழ்விற்கு முன்பான அறிக்கையில் பெரியார் எழுதுகிறார்.

 அந்த மாநாட்டில், 'இந்து கோவில்களில் இந்துக்கள் என்று சொல்லப்படும் எல்லா வகுப்பாருக்கும் பிரவேசத்திலும், பூஷையிலும், தொழுகையிலும் சம உரிமை உண்டு என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது” என்றும், சென்னை சட்டசபையில் இரண்டு முறை நிறைவேற்றப்பட்ட 'இந்துமத தர்மபரிபாலன' மசோதாவை இம்மாநாடு முழுமனதோடு வரவேற்று ஆதரிப்பதோடு, சட்டப்படிக்குண்டான சம்மதம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று வைசிராய் பிரபுவிற்குத் தெரிவித்துக் கொள்கிறது' என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் படுகின்றன. அதற்கு முன்பே நீதிக்கட்சி 1925இல் மசோதாஒன்றினை நிறைவேற்றி வைத்திருக்கிறது; அதற்கு வைசிராய் ஒப்புதல் அளிக்கவில்லை அதனால் 1926 மாநாட்டில் இவ்வாறான தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள்.

மற்றொரு தீர்மானம், 'தங்களை விட பிறவியில் உயர்ந்த வகுப்பார் என்ற எண்ணத்தின் பேரில் வேறு வகுப்பாரைக் கொண்டு சடங்குகள் செய்து கொண்டிருப்பது, நாமே நம்மை தாழ்ந்த வகுப்பாரென்று ஒப்புக்கொள்வதாய் இருப்பதாலும் இவ்வித மனப்பான்மையே நமது சுயமரியாதையை அழிப்பதற்கு ஆதாரமாய் இருப்பதாலும் இனி இவ்வழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது' என்றும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த மாநாட்டில் தீர்மானங்களை ஆதரித்து விளக்கி வ.உ.சி பேசியுள்ளார்.

 1929 இல் செங்கல்பட்டு முதலாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில் பெரியார் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார், 'வணங்கப்படுவதற்கும், வணங்குபவனுக்கும் இடையில் இடைத்தரகர்களோ, வட மொழியோ தேவையில்லை' என்று ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். அதை ஏற்றுக் கொண்டுதான் வ.உ.சியும் 'இலஞ்சம் வாங்காத நீதிபதியிடம் தரகர் வேண்டாமே' என்று பேசுகிறார். அதனால்தான் சைவர்கள் வ.உ.சி யையும் ஒதுக்கினார்கள். சைவர்கள் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? அவர்களும் கிளர்ந்தெழுந்து வ.உ.சி யை எதிர்க்கிறார்கள்.

அதில், முத்தையாப் பிள்ளை என்ற ஒருவர், “பிடிவாதத்தால் கப்பல் விடப் போய் அதனால் கிடைக்கும் தண்டனையினால் பாடம் கற்காதவர், சர்வ வல்லமை மிக்க பிரிட்டிஜாரின் கட்டளையையே மதிக்காதவர், அதேபோலத்தான் கடவுள் கட்டளையானாலும் எதிர்க்க வேண்டும் என்று பேசுகிறார். அதற்கான துன்பத்தை அவர் அனுபவிப்பார்” என்று எழுதுகிறார்.

மேலும், “இவர்கள் சுதேசிக் கலகத்தின்போது தூத்துக்குடியில் தனக்குத் தோன்றிய யுத்தியே சாலச் சிறந்ததெனக்கூறி ஆரவாஞ்செய்து, அதனால் தானடைந்த பயனையும் மறந்து, உலகத்துள் ஒரு பகுதியிலும் அரசரையும் அவர் கட்டளையையும் மதியாமையால், சில நாள் மிகக் கடுந்துன்பம் அனுபவித்தவாறுபோல, சர்வலோக நாயகராகியக் கடவுளையும், அவர் கட்டளையையும் மதிக்கவில்லையாயின் நீண்டநாள் ஆற்றொணாத் துன்பத்தை அனுபவித்து வருந்துவார் என்பதையும் மறந்தமை வருந்தத்தக்கது” (சிவநேசன், மார்ச் 1928)

இவ்வாறு, தான் பிறந்த சாதியை எதிர்க்கிறார்; அதனால் அவர்களால் சாடப்படுகிறார். சுயசாதி எதிர்ப்பிலிருந்துதானே ஒரு சமத்துவம் விரும்பும் போராளி எழுந்துவர முடியும்!

வ.உ.சி. 1910ஆம் ஆண்டு டிசம்பர் முதல் விடுதலையான 1912 டிசம்பர் வரை கண்ணனூர் சிறையில் இருந்தார். அங்குதான் ‘மெய்யறிவு’ 'மெய்யறம்' எனும் இரு நூல்களை எழுதினார்.

அவற்றுள் ’மெய்யறம்’ எனும் நூலினை “திருக்குறளின் வழி நூல்” என்றே வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார். திருக்குறளை ஒட்டி, ஏழு சீருக்குப் பதிலாக நான்கு சீரில், ஒரு வரியில் எழுதுகிறார். அந்நூலின் வழியே வ.உ.சி அவர்களின் சமூகப் பார்வையையும், எவ்வளவு பக்குவப்பட்டவராக இருந்திருக்கிறார் என்பதையும் அறியமுடியும். அதில் வள்ளுவரின் வாழ்க்கைத் துணைநலம் போல 'உயிர்த்துணை கொளல்' என்ற ஓர் அதிகாரம் வைத்துள்ளார்.

அவ்வதிகாரத்தில் நான்காவது பாடல், 'துணை இழந்தாரை மணப்பது புண்ணியம்' விதவை மறுமணத்தைப் பற்றி அதிகம் பேசப்படாத காலத்தில் மெய்யறத்தில் ஒரு குறளாகவே அதை எழுதுகிறார். அடுத்து, 'விரும்பாதவரை விரும்புதல் பாவம்' என்றும் எழுதுகிறார்.

 அடுத்த அதிகாரத் தலைப்பு 'உயிர்த்துணை ஆளுதல்'. அதில் ‘இருவருள் அறிவிற் பெரியவர்ஆள்க' என்றொரு குறள். குடும்பத்தில் உள்ளவர்களில் யார் அறிவானவரோ அவர், ஆணோ பெண்ணோ குடும்பத் தலைவராக இருக்கட்டும் என்கிறார். அவ்வதிகாரத்திலேயே 'ஆண்பால் உயர்வெனல் வீண் பேச்சென்க' என்பது மற்றொரு குறள்.

 'ஓதலின் அந்தணர்க்கு ஒழுக்கம் நன்றென்ப' மந்திரம் ஓதுவது மட்டும் ஒழுக்கம் அல்ல; ஒழுக்கமாக இருப்பதுதான் உண்மை ஒழுக்கம் என்கிறார்.

 விலைமகளிரைப் பற்றியும் எழுதுகிறார். ’பரத்தையை விலக்கல்’ என்பது அதிகாரத் தலைப்பு. அவ்வதிகாரத்தைத் தொடர்ந்து, ‘பரத்தனை விலக்கல்’ என்றொரு அதிகாரம் வைத்துள்ளார். அதில் ’பரத்தை யினுமிகக் கொடியவன் பரத்தன்’ என்பதொரு குறள். அடுத்து அந்த அறிவிலியால்தான் ஒரு பெண் பரத்தை ஆகிறாள் என்ற பொருளில் ’பொதுமகள் ஆதல் அம்முழுமகனாலே’ என்ற குறளால் ஆண்களுக்குக் கற்பு வேண்டாமா என இன்றைய நாட்களில் எழுப்பும் கேள்வியை அன்றே எழுப்பியுள்ளார் வ.உ.சி.

அடுத்துத் துறவறத்தைப் பற்றிப் பேசுகிறார். 'துணை அழத் துறந்து மெய் இணைதல் அன்பிலா அறம்' என்றுகூறிக் குடும்பத்தைக் கைவிட்டுவிட்டு மெய்யுணர துறவு என்பதை முன்னரே ஒருகுறளில் சாடியுள்ளார்.

'துறவென இவ்வகத் துறவையே மொழிப' மனதளவில் துறப்பதே உண்மைத் துறவாகும். 'புறத்துறவெல்லாம் பொய்த்துறவாமே' ....காவி ஆடை, சடை வளர்த்தல் என்பதெல்லாம் உண்மையான துறவாகாது என்கிறார். அகத்துறவைத்தான் உண்மையான துறவு என்கிறார். ’மழித்தலும் நீட்டலும் வேண்டா’ என்ற குறள் தந்த செய்தியும் இது தானே!

'தமரையே அளியார் பிறரை அளிப்பரோ' தம்மைச் சார்ந்துள்ள உறவினர்களை காப்பாற்றாமல் துறவறம் போய் மற்ற உயிர்களையெல்லாம் காப்பாற்றவா போகிறார்கள் என்று வினவுகிறார்.

 காங்கிரசில் இருந்து ஒதுங்கி இருந்தாலும், நீதிக் கட்சியில் சேராமலும், அதேவேளை சுயமரியாதை இயக்கத்தோடு உறவுகொண்டும், சுயமரியாதைக் கருத்துகளை ஏற்றவராகவும், பரப்பியவராகவும் விளங்கியுள்ளார். தனது பொருளாதார நிலை எவ்வாறு இருப்பினும் தொழிலாளர் சிக்கல்கள் நிகழும் இடங்களில் எல்லாம் தொழிலாளர்களோடு இணைந்து நின்று போராடியும் வந்துள்ளார். தமிழ் இலக்கியப் பணிகளிலும் ஈடுபட்டுக் கொண்டே இருந்துள்ளார்.

 அந்த மாமனிதர் முடிவெய்தியபோது, இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பாய்ச்சல் நடவடிக்கையாக சுதேசிக் கப்பல்களை இயக்கியவர், அதன் தொடர்ச்சியாய்ச் சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுமைகளை அனுபவித்தவர் என்றபோதும் காங்கிரஸ் தரப்பினர் இறுதி மரியாதை செலுத்தக்கூட இல்லை. நமக்கெல்லாம் எப்போதும் ஒரு வருத்தம் உண்டு. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வடவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பார்ப்பனர் அல்லாதார் எனில் பார்ப்பன காங்கிரசார் ஏற்றுக் கொள்வதில்லை.

அந்நிலையில்தான், 1936 நவம்பரில் வ.உ.சி முடிவெதியபோது பெரியார் 'சிதம்பரம் சிதைவு' என்ற தலைப்பில் அக்கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு இரங்கல் செய்தி எழுதியுள்ளார்:

”தோழர் வி.ஓ சிதம்பரம் பிள்ளை அவர்கள் முடிவெய்தி விட்டார். தனக்கு இயங்கும் சக்தி இருந்து ஓடி உசாவித் திரியும் காலமெல்லாம் தனக்கு சரியென்று தோன்றிய வழிகளில் உழைத்துவிட்டு ஒடுக்கம் ஏற்பட்டவுடன் அடக்கமாகிவிட்டார். இது மக்கள் வாழ்க்கையின் நியாயமான நிலையேயாகும்.

மிக்க மந்தமான காலத்தில் அதாவது மனிதன் பொதுநலம் என்றால் மத சம்பந்தமான காரியம் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், அரசியல் என்றால் அது தெய்வீக சம்பந்தமானது என்றும் எப்படி எனில் கூனோ, குருடோ, அயோக்கியனோ, கொள்ளைக்காரனோ ஒருவன் புருஜனாய் அமைந்து விட்டால் பெய்யெனப் பெய்யும் மழை என்பதற்கு இலக்காகவும் பின்தூங்கி முன்னெழுபவள்போலவும் இருப்பதுதான் பெண்ணின் கற்புக்கு குறியென்றும் அக்கூட்டு தெய்வீக சம்மந்தமாய் ஏற்பட்டதென்றும் சொல்வது போல், அரசன் எப்படிப் பட்டவனாக இருந்தாலும், ஆட்சி எப்படிப் பட்டதாய் இருந்தாலும், அரசனை விஷ்ணுவாய் கருதி ஆட்சியை வேதக் கோட்பாடாகவும் கருதி வாழ வேண்டும் என்று இந்த பார்ப்பனீய ஆதிக்க காலத்தில் மற்றும் தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானமாகவும், மகா இழிவாகவும், மகா கொடுமையாகவும், துன்பமாகவும் இருந்த காலத்தில், தென்னாட்டில் முதல் முதல் வெளிவந்து அரசனை எதிர்த்து அரசியலை இகழ்ந்து துச்சமாய் கருதி தண்டனையை அடைந்து சிறைக்கொடுமையை இன்பமாய் ஏற்று கலங்காமல் மனம் மாறாமல் வெளிவந்த வீரர்களின் முதன்மை வரியில் முதன்மை லக்கத்தில் இருந்தவராவார் நமது சிதம்பரம்.

 அதன் பலன் எப்படியோ, ஆனாலும் அவராலேயே அநேக பார்ப்பனரல்லாத மக்கள் உண்மை வீரர்களாகவும் சுய நலமற்றவர்களாகவும் வெளிவர முடிந்தது. தோழர் சிதம்பரம் ஒரு பார்ப்பனராய் இருந்திருப்பாரேயானால் லோக மானியர், முனீந்திரர், சிதம்பரம் கட்டம், சிதம்பரம் உருவச் சிலை, சிதம்பரநாதர் கோயில், சிதம்பரம் பண்டு, காங்கிரஸ் மண்டபங்களில் காங்கிரஸ் பக்தர்கள் வீடுகளில் சிதம்பரம் கழுத்து சிலை, சிதம்பரம் உருவப்படம் இருக்கும்படியான நிலையை அடைந்திருப்பார். ஆனால் அவர் பிள்ளை. அதுவும் சைவப் பிள்ளை ஆனதால் அவர் வாழ்வு அவருக்கே அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்காமல் இருந்தது என்பதோடு, அவருக்காக ஏற்படுத்தப்பட்ட பண்டுகூட வெளியிட யோக்கியதை இல்லாததாய் இருந்து வருகிறது.

 சிதம்பரம் பிள்ளையின் அனுபவத்தை மற்ற தேசாபிமான பார்ப்பனரல்லாதாரும் அறியட்டும் என்பதற்காகவே இதைக் குறிப்பிட்டோம்.

 அரசியல் உலகம் அவர் இறங்கின காலத்தில் ஒரு விதமாகவும் இப்போது ஒருவிதமாகவும் இருக்கிறபடியால் ஓர் அளவுக்கு பார்ப்பனரல்லாத தேச பக்தர்களைப் பற்றி ஆறுதல் அடைகிறோம். எப்படியெனில் பார்ப்பனரல்லாத தேச பக்தர்களை பார்ப்பனர் ஓர் அளவுக்காவது வேஜத்துக்காகவாவது அணைத்துத் தீரவேண்டிய நிலையில் வேறு பல இயக்கங்கள் நிர்பந்தித்துக் கொண்டிருப்பதால் அதிகம் பயப்பட வேண்டியதில்லை. ஆகையால் சிதம்பரம் பிள்ளையை ஓர் உதாரணமாகக் கொண்டு மற்ற தேசபக்தர்கள் அதற்கேற்றபடி நடந்து கொள்வார்களாக. ( 22-.11.-1936 குடிஅரசு )

அதைத் தொடர்ந்து மற்றொரு கட்டுரையும் பெரியார் எழுதுகிறார்,

ஹிந்து, மெயில், மித்திரன், ஜெயபாரதி, தினமணி இடம் கொள்ளுமா? பிறப்புக்கும் பேருக்கும் அடிமையான பித்தலாட்ட தேசம் இதுதானே? என்பது அதன் தலைப்பு.

“ஏ -பி வகுப்பு சிறையில்லாத முப்பதாண்டுகட்கு முன்பு சிறை புகுந்து, வக்கீல் தொழிலிழந்து, தியாகம் பலபுரிந்து, கஷ்டநஷ்டங்கள் அடைந்து, கடைசி வரையில் ஏழையாகவே வாழ்ந்து, சென்ற 18ஆம் தேதியன்று, 65ஆவது வயதில் உயிர் துறந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை பிரம்மா தலையிலிருந்து வெடித்தெழுந்த வ.உ.சிதம்பர அய்யராயிருந்தால், ஹிந்து, சுதேசமித்திரன், ஜெயபாரதி, தினமணி முதலிய பழுப்பு வெள்ளை பத்திரிகைகளிலும், மெயில் போன்ற வெளுப்பு பார்ப்பன பத்திரிகைகளிலும் வேறு விஜயங்களுக்கு இடமிருக்குமா?

இது வரையில் இந்நாட்டில் இறந்த வடநாட்டு படேல்களாயிருந்தாலும் சரி ­தென்னாட்டுப் படேல்களாயிருந்தாலும் சரி - சிதம்பரம் பிள்ளை தியாகத்துக்கு ஒப்பாகுமா?

ஜெயிலிருக்கும் திக்கே தெரியாத கஸ்தூரி ரங்கய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார் முதலியோரின் சேவையும் தியாகமும் பிள்ளை அவர்களின் தியாகம் முன்பு உறை போடவும் கூடுமா? ரவுலட் சட்டத்தில் கையப்பமிட்ட சர்.சி.வி. குமாரசாமி சாஸ்திரிக்கும், பார்ப்பனரல்லாதாரிடமே பத்து லட்சக் கணக்கில் கொள்ளையடித்து, எல்லா சொத்தையும் பார்ப்பனருக்கே உதவ வேண்டுமென்று உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து போன டாக்டர் ரங்காச்சாரிக்கும் கொடுத்த இடத்தில் 100இல் ஒரு பங்குகூட, தேசபக்த சிங்கம் சிதம்பர தங்கத்துக்கு, ஹிந்து முதலிய தேசிய பத்திரிகைகள் கொடுக்கவில்லையென்றால் இந்த வகுப்புவாதமே உருவெடுத்த சண்டாள பத்திரிகைகள் தேசியம் பேசி, பாமர மக்கள் தலையில் எத்தனை காலம் மிளகாய் அரைக்க உத்தேசித்திருக்கின்றனவோ தெரியவில்லையே?

 போதாக்குறைக்கு சிதம்பரம் பிள்ளை காங்கிரஸ் என்று சொல்லியே உயிர் துறந்தாராம்!

 சி. ராஜகோபாலாச்சாரி போன்ற பார்ப்பனத் தலைவர்களின் சூழ்ச்சியை கண்டித்தும், காங்கிரசை விட தேசமே பெரிதென்று கர்ஜித்த சிங்கமா, அக்ரஹாரப் புலிகள் அதிகாரம் செலுத்தும் காங்கிரசைப் பற்றி மகா கவலை கொண்டு இறந்திருப்பார்? ஒரு வேளை காங்கிரசின் பேரால் பாமர மக்கள் தலை மேல் கல் விழப் போகிறதே என்று வேண்டுமானால் கவலைப் பட்டிருக்கலாம். தாலி அறுப்பு, ஜவஹர் கூட்டத்தில் யானையை விட்டது, ருக்மணி லட்சுமிபதியை சுந்தரராவ் குத்தப் போனது - போன்ற தேர்தல் அபாண்டங்களோடுதான், சிதம்பரம் காங்கிரஸ் காங்கிரஸ் என்று உயிர்விட்டார் என்ற அபாண்டத்தையும் சேர்க்க வேண்டும்.

சிதம்பரம் பிள்ளை விஜயத்தில் மவுனம் சாதிக்கும் ஜாதிப் பித்து பிடித்த பார்ப்பன பத்திரிகைகளின் போக்கைக் கண்ட பின்னாவது, பார்ப்பனரல்லாதாருக்கு ஆத்திரம் பொங்குமா? (29.-11.1936, குடிஅரசு)

- கொளத்தூர் மணி

Pin It