நானெல்லாம் ஒன்பரை மணிக்கே உறங்கிவிடும் ஆளாக்கும். இன்று பன்னிரண்டு மணியை தாண்டி அமர்ந்திருக்கிறேன் என்றால் எல்லாம் அந்த பூனையினால் தான்.

நத்தையாய் நகா்கின்ற நாளின் இறுதி நிமிடங்களில் அன்றைய பொழுதின் வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு படுக்கையில் சாய்ந்து நாளின் துவக்க நிமிடங்களிலிருந்து மனதினுள் மீளக்கொணர்ந்து அசைபோட்டுக்கொண்டிருந்தேன். விழிப்பிற்கும் உறக்கத்தை அடைவதற்குமிடையிலான அந்த நிமிடங்கள் ஒரு வித தியானத்தை போன்றிருந்தது.

பின் மனதுள் ஒரு உவகை எண்ணம். ஆஹா என்ன அதிசயம். இன்று எந்த பிரச்சினையும் இல்லாமல் இந்த நாளானது கழிந்திருக்கிறதே. நம்முள் குடிகொண்டிருந்த சாத்தான் விலகிப்போக துவங்கிவிட்டான் போலும் என்று என்னை நானே மெச்சிக்கொள்ளுகையில் தான், சமையலறையிலிருந்து அந்த பெருஞசத்தம் ஒலித்தது. அவன் தான், அவனே தான், இந்த காம்பவுண்டில் எனக்கொரு எதிரி இருக்கிறானென்றால் அது அவன் தான். தனது பெஞ்சாதி, பிள்ளைகளென ஒரு பட்டாளத்துடன் சமையலறையை நோக்கி படையெடுத்திருக்க வேண்டும். எதை எதையெல்லாம் கொட்டித்தீர்த்தானோ, அலங்கோலப்படுத்தி வைத்தானோ என்று மனதுள் கருவிக்கிகொண்டு சமையலறைக்கு விரைந்தேன்.

அங்கே என் எதிர்பார்ப்பை விடவும் மோசமான சம்பவத்தை நிகழ்த்தியிருந்தான் எனது எதிரியான பூனையன். அன்று அவன் தன் பட்டாளத்துடன் வந்திருக்கவில்லை. தனியாக வந்தவன், சொம்பில் இருந்த பாலை குடிப்பதற்காக தலையை சொம்புக்குள் நுழைத்து குடித்திருக்கிறான். பின் தலையை வெளியே எடுக்க இயலாமல் வசமாக அகப்பட்டுக்கொள்ளவே அடுப்பங்கறையில் கால் போன போக்கிலெல்லாம் ஓடியாடி பண்டபாத்திரங்களை உடைத்து அலங்கோலம் செய்து வைத்திருந்தான். பிள்ளைகளுக்கு புகட்டிவிட்டு ஒரு டம்ளர் பால் தான் சொம்பில் இருந்திருக்கும்.இருந்திருந்து இன்றைக்கென்று பார்த்து நான் சொம்பிலே பாலை வைத்து தொலைவேணா? ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைத்திருந்தால் பாலோடு போயிருக்கும். இப்போது இவன் எனக்கு மும்மடங்கு வேலைகளை உருவாக்கி தந்திருக்கிறான். தலையில் சொம்பினை அணிந்திருந்த பூனையனையும் அலங்கோல நிலையிலிருந்து அடுப்பங்கறையும் பார்க்க சற்று முன் விலகிப்போயிருந்த சாத்தான் மீண்டும் குடிகொண்டு உக்கிரநிலை அடைந்திருந்தான்.

அடேய், உன்னை ஒரே அடியில் கொண்றுவிடுவேன் பார்த்துக்கொள், என்று கூவினான் எனக்குள்ளிருந்த சாத்தான். கொன்று விட்டால் தீர்வு கிடைத்துவிடுமா? கொல்வது வெகு சுலபமாக காரியம் தான். அவனை விடுவிப்பதல்லவா கடினமான காரியமாய் வளா்ந்து நிற்கிறது.

பாலை திருடிக்குடித்ததோடு நில்லாமல் வசமாக தலையை நுழைத்து அகப்பட்டு, இப்போது பரிதாபகரமாக வீட்டுக்குள்ளயே சுற்றிக்கொண்டு சுவா்களில் முட்டிமோதிக்கொண்டும் திரிகிறான். இவ்வளவு நாளாக குழந்தைக்கு வைத்திருந்த பாலை நீதான் குடித்தாயா என்று ஆத்திரப்படவா? அல்லது அரை டம்ளா் பாலுக்காக இப்படி அநியாயமாக மாட்டிக்கிட்டு நிற்கின்றானே என்று இரக்கப்படவா? என்றே தெரியவில்லை. அன்றைக்கு என்று பார்த்து கனவரும் வீட்டில் இல்லை. நான் இந்த பூனையனை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு காத்திருப்பதும் அவருக்காக தான். பழைய துணி ஒன்றை புனையனின் உடலில் சுற்றி அணைத்து மடியில் வைத்து அவன் தலையில் மாட்டியிருந்த சொம்பினை எடுப்பதற்கு என்னால் இயன்ற வரையில் போராடிப் பார்த்துவிட்டேன் . அந்த பயலோ பயத்தில் துள்ளிக்குதித்து அவனது கால் நகங்களை கொண்டு பிராண்டி எனது கைகளிலெல்லாம் காயத்தை ஏற்படுத்திவிட்டான்.

ம்ஹும். இனி தனியே போராடுவது பலன் தராது என்று கனவருக்கு போன் செய்து விசயத்தை தெரிவித்தேன். அதற்கு அவரே பூனை கழுத்துல எண்ணெய் ஊற்றி பிறகு கழட்டி பாரு புள்ள என்றார். இல்ல, இல்ல அந்த திருட்டுப்பய அதற்கெல்லாம் ஒத்துழைக்க மாட்டேங்கிறான், நான் காத்திருக்கிறேன் முடிந்தவரை சீக்கிரம் வர பாருங்க என்றவாறு அந்த திருட்டு பயலை மடியில் தூக்கி வைத்திருந்தேன். பூனையனை மடியில் தூக்கி வைத்திருக்கிறேன் என்றதும் அவன் மீது அதீத பாசமென்று நினைத்துக்கொள்ளாதீர்கள், அந்த பயலை கீழே விட்டால் பயத்தில் ஓடி ஓடி சுவரிலும் தரையிலும் முட்டிமோதிக்கொண்டிருப்பான். அவன் தலையில் மாட்டியிருக்கும் சொம்பு தரையில் பட்டு டமால்,டுமீல் என சத்தமெழுப்பி அதனால் உறங்கிக்கொண்டிருக்கும் என் பிள்ளைகள் விழி்த்துக்கொள்வார்களே என்ற அச்சத்தில் தான் மடியில் தூக்கிவைத்திருந்தேன். துணியால் சுற்றப்பட்ட பூனையன் உருவில் ஒரு பிறந்த சிசுவின் எடையை ஒத்திருந்தான். பிள்ளை போல மடிமீது சுருண்டு கிடந்தான்.

ஆனால் நான் எத்தனை முறை இவனை கையில் கிடைத்த பொருளையெல்லாம் கொண்டு அடிக்க முற்பட்டிருப்பேன் தெரியுமா, குழந்தைக்கு வைத்திருக்கும் பாலை நாக்கை போட்டு துடைத்து காலி செய்துட்டு போயிடுவான், அல்லது பாலை குடிக்கிறேன் என்ற பேரில் பால் பாத்திரத்தை கவிழ்த்தி விட்டு அடுப்பங்கறையையே அலங்கோலப்படுத்திவிட்டு போய்விடுவான். சில நேரங்களில் ஆத்திரம் தலைக்கேறி கொலவெறிய உண்டுபண்ணிடுவான். பலமுறை அவன் என் பார்வையில் அகப்படும் வேளைகளில் கரண்டியோ, சப்பாத்திகட்டையோ, தேங்காய் கீறும் கம்பியை கொண்டும் எறிந்திருக்கிறேன். அவை ரத்தகாயத்தை ஏற்படுத்தாதவிட்டாலும் ஒருசில நேரங்களில் அவன் உடலில் பட்டு வலியை உண்டுபன்னியிருக்கக் கூடும். அதனாலேயே அவன் இதற்கு முன் என் முன்பு வந்து நின்றதே கிடையாது என்றுகூட சொல்லலாம். அவ்வளவு அரக்கத்தனமாக நடந்துகொண்ட என் மடியில் தான் இன்று ஆறுதலாய் தலைசாய்த்து அசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

நாட்டில் பெரும்பொரும் கொலை செய்றவன் கொள்ளையடிப்பவனெல்லாம் உல்லாசமாக திரிகின்ற போது அரை குவளை பாலை குடித்துவிட்டு நீ படும்பாடு இருக்கின்றதே , என்று அவனை எண்ணி பரிதாபப்படுவதை தவிர வேறு வழியொன்றும் தெரியவில்லை. பாவமடா நீ, இவ்வளவு பெரிய தண்டனை உனக்கு கடவுள் கொடுத்திருக்க வேண்டாம் என்றவாறு ரோமங்கள் நிறைந்த அவன் உடலை தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தேன். சொம்புக்குள் அவன் புஷ் புஷ்ஷென்று இழுத்து மூச்சுவிடும் சப்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது.

இவனைப் போலவே ஊரான் பொருளை அபகரிக்கும் மனிதர்களையும் அகப்படவைக்கும் எந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டால். ஏடிஎம்- எந்திரத்தை உடைத்து திருடுபவனின் கைகள் அந்த எந்திரத்தோடு அகப்பட்டுக்கொண்டால், அல்லது ஏடிஎம்-ன் வாயில் கதவுகள் எச்சரிக்கை சமிக்கையால் இறுக மூடி திருடனை உள்ளேயே சிறை வைத்துக்கொண்டால், லஞ்சம் பெறும் அதிகாரியின் கரங்களில் லஞ்சப்பணத்தின் நகல் உருவம் படிமங்களாக அந்த அதிகாரியின் உள்ளங்கைகளில் நிரந்தரமாக பதிந்து விடும்படி ருபாய் நோட்டுக்கள் ரசாயண வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டால், இன்னும் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு, தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு என்று தனித்தனியாக அவா்களை கைதாக்கிவிடும் அல்லது கையும் களவுமாக காண்பித்துவிடும் எந்திரங்களெல்லாம் வடிவமைக்கப்பட்டால் என்று கற்பனைகள் விரியும் போதே தன்னிலைமீறி உறக்கம் கண்களைசொறுகியது. அவனை படுக்க வைத்து பழைய படி அவன் வீட்டுக்குள் ஓடித்திரியாமல் இருப்பதற்காக ஒரு வாளியை கொண்டு அரைகுறையாய் மூடி வைத்தேன். முழுமையாக மூடினால் ஒருவேளை சுவாசப்பிரச்சினை ஏற்படக்கூடும். கொஞ்சம் தூங்கிக்கொள்ளலாமென்று படுக்கையில் தலை சாய்த்து பத்து நிமிடம் கூட இருந்திருக்காது. டமால் என்று ஒரு சத்தம் , இதமாய் நடந்து கொண்டிருந்தவள் பெரும் பள்ளத்தாக்கில் சறுக்கிவிழுந்து விட்டதைப்போன்றதொரு கனவோடு பதறி விழித்துக்கொண்டேன். என்னோடு கைக்குழந்தையும் விழித்துக்கொண்டாள். தொட்டிலை அலைத்துவிட்டு அவளை உறங்க செய்துவிட்டேன். பின்னரும் என் படபடப்பு நின்றபாடில்லை. இதய துடிப்பு ஒவ்வொன்றும் செவிகனில் அதிர்ந்து கொண்டிருந்தது. உன்னை இப்படி போட்டுவிட்டு உறங்க நினைத்த எனக்கு வேணும்தான் என்று நினைத்துக்கொண்டு மீண்டும் பூனையனை மடியில் தூக்கி வைத்துக்கொண்டேன். பூனையன் அழுத்தமாக சுவாசக்காற்றை இழுத்து மூச்சு விடுவதும் முனகுவதுமாய் இருந்தான்.

அப்போதைய நேரத்திற்கு அலமாரியிலிருந்து உலக புகழ்பெற்ற மூக்கு என்ற ஒரு புத்தகத்தை எடுத்தேன். அதன் ஒரு கதையில் பிரசவ வலி முற்றிய நிலையிலிருக்கும் ஐசுக்குட்டி மருத்துவரை அழைத்து வந்த பின்னா் தான் பிரசவித்துக் கொள்வேன் என்று பிடிவாதமாக ”தாக்குட்டர விளிச்சிட்டு வாயோ“ என்று கூப்பாடு போடுவாளாம். எனக்கு என்னவோ சொம்புக்குள்ளிருந்து ஒலிக்கும் பூனையனின் முனகல் சப்தம் ஐசுக்குட்டியின் கூப்பாட்டினை ஒத்திருப்பதாக தோன்றியது. ஐசுக்குட்டி தனது பிரசவத்திற்கு டாக்டர் அழைத்துவரப்படுவதில் தனது அந்தஸ்தும் கவுரவமும் அடங்கியிருப்பதாக எண்ணியிருப்பாள் போலும். கதையில் ஐசுக்குட்டியின் கணவன் அடிச்சு புடிச்சு பணம் புரட்டி டாக்டரை அழைத்து வந்தானாம். நான்இவனுக்கென்று ஒரு பூனை வைத்தியனை அதுவும் இந்த நடுசாமத்தில்எங்கென்று போய் தேடுவது.

இப்போது பூனையனின் முனகல் குறைந்து அழுத்தமாக மூச்சு விடும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அவன் முன்பை விட கூடுதல் ஆறுதலுடன் மடியில் சுருண்டு கிடந்தான். ஒருவேளை அவன் தன் சிரமங்களோடு போராடி களைத்து தூங்கிப்போயிருக்கலாம். அல்லது மயங்கியுமிருக்கலாம். உண்மையிலே அவன் மயங்கிப்போயிருந்தால் இறைவா நீ அவனை இறந்துவிடாமல் பாதுகாத்துக்கொள், அவன் மறித்துப்போவதற்கான பாவக்கணக்கை நான் சுமப்பதிலிருந்து என்னை காத்துக்கொள் ஆண்டவா, என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்த நிமிடங்களில் அவரும் வந்துவிட்டார்.

இருவருமாக உட்கார்ந்து அவனை விடுவிப்பதற்கான பணிகளில் இறங்கினோம். சொம்பு மாட்டியிருந்த கழுத்துப்பகுதியில் நிறைய எண்ணெயை ஊற்றினார். பூனையனின் உடலை நன்றாக பிடிக்கச்சொல்லிவிட்டு ஒரு கையில் மெதுவாக அவனின் கழுத்தை பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் சொம்பினை திருகி சுழற்றி வெளியே எடுக்க முற்பட்டார். நான் அவனது கழுத்து பகுதி தசைகளை மெல்ல இழுத்து விட்டு சிறு சிறு பகுதியாக வெளியேற்ற செய்து இப்போது அவனது காதுமடல் வரைக்கும் சொம்பிற்குள் இருந்து வெளியே கொண்டுவந்திருந்தோம். கி்ட்டத்தட்ட அவன் தலையில் கால்வாசி பகுதியை விடுவித்திருந்தோம்.

ம்.. அவ்வளவு தான். இன்னும் கொஞ்சம் தான். நல்லா புடிச்சிக்க, நான் இழுத்திடுரேன் என்றவாறு அவா் சொம்பினை ஒரு கையால் இழுக்க, கழுத்து வலி ஏற்பட்டிருக்க கூடும். பூனையன் உடலை திமிறி முன்னங்கால் நகங்களால் எங்களது கைகளை பதம் பார்த்துவிட்டான். இப்போது இருவரின் கைகளிலும் பிராண்டியதால் இரத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது. வலியால் சோர்ந்து போன அவா் முடியல புள்ள, இதை இப்படியே விட்டுருவோம், சொம்பு தன்னால கழன்றா தான் உண்டு என்றார்.

முன்பொருமுறை தலையில் பானையை மாட்டிக்கொண்டு திரிந்த புலி ஒன்றை வெவ்வேறு கோணங்களில் புகைப்படமெடுத்து பதிவுசெய்திருந்ததை முகநூலில் கண்டதாக நியாபகம். புலியையே விடாத மக்கள் இந்த பூனையனை விட்டுவிடுவார்களா? போதாக்குறைக்கு நம் சிறுவா்களில் பெரும்பாலானோர் மாட்டு வாலிலே பட்டாசு கட்டுவதிலும், ஊனமுற்ற நாய்குட்டியை கல்லாலடிப்பதில் பிரபல்யமானவா்கள் . சோம்பல் பட்டு இப்படியே விட்டுவிட்டோமென்றால் அதை விட பாவகாரியமென்று ஒன்று இருக்க வாய்ப்பில்லை. அவா் உடனே தன்னுடைய நண்பரை தொடர்புகொண்டு நிலமையை சொல்லி அழைத்தார். அந்ந அண்ணனும் விரைவில் வந்தாயிற்று, பூனையனின் உடலை கழுத்தை எல்லாம் என்னை பிடிக்க சொல்லிவிட்டு அண்ணன் மெதுவாக சொம்பினை திருகி சுழற்றி இழுத்துக்கொண்டிருந்தார். சொம்பு சிறுதுசிறிதாக கழன்று பூனையனின் தாடைப்பகுதியில் வந்து நின்றது. தாடையும் மண்டைஓடும் சொம்பின் வாய்பகுதியில் நிறைவாக அடைத்திருந்ததால் பூனையன் இப்போது சுவாசிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தான். புஸ் புஸ் என்ற சப்தம் குறைந்து லேசான முகனல் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. எனக்கென்னவோ பூனையன் பிரசவ வேதனையில் சிக்கியிருப்பதாகவே பட்டது. இன்னும் சில நிமிடங்கள் தான். விடுதலையோ, மரணமோ இரண்டில் ஒன்று உறுதியாகிவிடும். அண்ணன் தனது முரட்டு பிடியால் சொம்பினை ஒருகையாலும் அவனது கழுத்தினை ஒரு கையாலும் பிடித்து கொண்டு அவனை விடுவிப்பதற்காக போராடிக்கொண்டிருந்தார். கடவுளே இன்னும் சில நிமிடங்களுக்கு அவனுக்கு திடத்தை கொடு. அதற்குள் அவன் சோர்வுற்று மயங்கிவிடக்கூடாது. சுவாசிப்பதை நிறுத்திவிட கூடாது. என்று இறைவனிடத்தில் முறையிட்டுக்கொண்டும், பாவி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பால் வாங்கி வைத்திருந்தால் இத்தனையும் நிகழ்ந்திருக்குமோ என்றும் என்னை நானே நொந்துகொண்டுமிருந்தேன்.

அதுவரையிலும் மௌனமாய் இருந்த குழந்தை தாயின் கா்பப்பையை விட்டு வெளியேறியதும் வீறிட்டு அலறுவதைப்போன்று பூனையனும் அலறினான். அவனுடைய குரல் இன்னும் பரிதாபமாக ஒலித்தது. சொம்பிலிருந்து விடுபட்டு ஒருநொடி கூட அவன் என் மடியில் இருந்திருக்கவில்லை. திமிறி குதித்து எங்களின் பார்வையில் நில்லாமல் மின்னலைப்போல பறந்தோடிவிட்டான்.

இரு தினங்களுக்கு பின் வயது முதிர்ந்த பூனையொன்று வீட்டு வாசலில் வெகுநேரம் நின்று கொண்டிருந்தது. சிறிது நேரம் அதனை உற்று கவனித்தேன். காது பகுதிகளில் இரத்த காயங்களும் தாடை பகுதி வீங்கியுமிருந்தது. ஒருவேளை இது பூனையனாக இருக்கலாம். உடல் மற்றும் கழுத்துப்பகுதியில் எண்ணெய் சிந்திய அடையாளங்களும் இருந்ததை கண்டு உறுதி செய்து கொண்டேன், ஆம் இவன் பூனையனே தான். எனது முன்னாள் விரோதியும் இன்னாள் சிநேகிதனுமான அதே பூனையன் தான். கொஞ்சம் பாலை சிறு தட்டில் ஊற்றி வைத்துவிட்டு தூரத்தில் நின்று கொண்டேன். அவன் அதனை மெதுவாக முகா்ந்து பார்த்துவிட்டு பின் ருசித்து குடித்துக்கொண்டிருந்தான். அதனை தொடர்ந்த நாட்களிலும் அவ்வப்பொழுது வருவதையும் கொடுப்பதை உண்கிறான். உணவு வழங்காத சில நேரங்களில் வீட்டு வாசலிலே உடலை நீட்டி படுத்துக்கொள்வதையும் வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறான் . மேலும் அவன் முன்பு போல சமயலறையில் புகுந்து திருடுவதுமில்லை. அலங்கோலமான வேலைகள் செய்வதுமில்லை. அவன் இப்பொழுது எனது பிரியத்திற்குரிய சிநேகிதனாகி விட்டிருந்தான்.

- எஸ்.ஹஸீனா பேகம்

Pin It