ஊர் பார்க்க உலகம் தன் மூன்றாம் கண் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கையில் அப்படி ஒரு கொடூரம் நடக்கிறது.

இப்போது நினைத்தாலும் வேடிக்கை பார்க்கும் சமூகத்தின் பின் மண்டையில் சுத்தியல் கொண்டு அடிப்பது போன்ற பிரமையை உணர முடிகிறது.

யாதுமற்று நிற்கும் நிர்வாண தோற்றத்தை ரத்தம் கொண்டு சகதி பூசும் சித்திரத்தை கண் கொண்டு காணா வலியை யாவரையும் போல நானும் உணர்கிறேன்...

சமீபத்தில் கண்ட மூன்று காணொளிகள் என்னை மிகவும் அச்சமூட்டிய நாட்களுக்குள் கொண்டு சென்றவை.

honour killingமுதல் ஒன்று...

ஒரு குட்டை ட்ரவுசர் அணிந்த ஒரு பெண் கீழே கிடக்கிறாள். போகிறவர் வருபவர் சுற்றி நிற்பவர் என்ற ஆளாளுக்கு தோன்றிய கணத்தில் எல்லாம் மிதிக்கிறார்கள். அடிக்கிறார்கள். இருக்கும் வக்கிர நினைவுகளை எல்லாம் ஒன்று திரட்டி கண்களின் வழியே ஒரு கூட்டம் சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த பெண் உயிர் பிச்சை கேட்கிறாள். யாரும் போட முன்வரவில்லை. பட்டென்று ஒருவன் பெட்ரோல் போன்ற ஒரு வஸ்துவை அவள் மீது ஊற்றி விட்டு ஓடுகிறான். அடுத்த கணம் பற்றி எரிய துவங்குகிறது அந்த உயிர். அந்த உடல் துடிக்கிறது. எரிகிறது. கதறுகிறது. கருகுகிறது. எல்லாரும் வேடிக்கை பார்க்கிறார்கள். காரணம் என்ன மண்ணாங்கட்டியாகவும் இருந்து விட்டு போகட்டும்...காதலோ... கல்யாணமோ.....ஒருவேளை குட்டை ட்ரவுசர் போட்டது தான் காரணமோ...!?

குட்டை ட்ரவுசர்க்காரி கருகி கிடக்கிறாள். அத்தனை சுலபமாகி போன ஒரு காட்சியை பதறிக் கொண்டே யோசிக்கையில் அடுத்த காணொளி...

ஒரு நிர்வாணமான பையன் ஒரு நிர்வாணமான பிள்ளையை தூக்கி தோளில் வைத்து கொண்டு நடக்கிறான். நடக்க வைக்கப் படுகிறான். பின்னால் ஒரு கூட்டம் விரட்டிக் கொண்டே வருகிறது. அது கொண்டாட்டத்தை போல இருக்கிறது. அவர்களை உதைக்கிறது. அடிக்கிறது. அசிங்கமாய் திட்டுகிறது. ஒரு வறட்சியான சினிமாவில் செய்வது போல அந்த காட்சி அத்தனை கொடூரமாக இருக்கிறது. காதல் என்ன அத்தனை தவறானதா....தவறால் வருவதா...? ! வயது வந்த ஒரு பெண்ணையும் ஆணையும் அம்மணமாக்கி நடு ரோட்டில் அடித்து உதைத்து விரட்டிக் கொண்டு செல்லும் இந்த சமூகத்தை பார்த்தால் எனக்கு அச்சமாக இருக்கிறது. ஒரு குற்றத்தை, ஒரு நாகரிகமற்ற பண்பாடற்ற செயலை ஒரு கூட்டம் செய்கிறது. அதை ஓர் ஊர் கண் கொட்டி ரசிக்கிறது. இது அச்சத்தின் நிஜங்களை உள் வாங்கவும் முடியாமல் வெளி சொல்லவும் முடியாமல் தடுமாறி நிற்கும் ஓர் இயலாமையின் காட்சி பிழையா? ஒரு மக்கள் போராளி சிலுவையைத் தூக்கிக் கொண்டு போகையில் வேடிக்கை பார்த்த மானுடத்தின் மிச்சம் தானோ.... இந்த வேடிக்கையும்...அடுத்த காணொளி...

ஒரு பெண்ணை ஒரு இளைஞன் அணைத்தபடி ஒரு புகைப்படத்தில் இருக்கிறான். அதைத் தொட்டு நீளும் காணொளியில் அவன் உள்ளாடையோடு வெட்டவெளி நடுவில் கிடக்கிறான். அவனை சுற்றி வழக்கம் போல கூட்டம் நிற்கிறது. படம் பிடிக்கிறது. முணுமுணுக்கிறது. கண்கள் விரிய அலசுகிறது. சாதாரணமாக போகிற போக்கில் பார்க்கும் கண்களும் அங்கே உலவுகிறது. ஒருவன் ஒரு கட்டையைக் கொண்டு குறி பார்த்து அவன் பின் மண்டையில் படீர் படீர் என்று அடிக்கிறான். டம் டம்மென்று இறங்குகிறது பயம். நெஞ்சு நெஞ்சாக மம்பட்டியை திருப்பிக் கொண்டு அடிக்கிறான் ஒருவன். கண்களில் சுளீர் என வலிக்கிறது எனக்கு. அவன் முகத்தில் தொடர்ந்து ஆயுதத்தை இறக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். ஒவ்வொரு அடிக்கும் அவன் உடல் பூமியை விட்டு மேலெழும்பி மேலெழும்பி கீழே விழுகிறது. எலும்பும் நரம்பும் உடைபடும் அறுபடும் சப்தங்களில் நடு நடுங்கும்...... வெடவெடுக்கும்......படபடக்கும் கொலையின் வழிதலைக் காண முடிகிறது. நான் மூச்சு முட்டி சில கணம் என்னை நானென்று உணரவே சில கணங்கள் தேவைப்பட்டது. அத்தனை கனமான காட்சி பொருள் அவை.

என்ன நடக்கிறது.....இங்கே.....? என்ன செய்து கொண்டிருக்கிறோம்......நாம்!

பிணத்தின் நரம்புகள் கொண்டுதான் இவ்வரிகள் கட்டமைக்கப்படுகின்றன. காலம் காலமாக தொடரும் இத்தகைய கொடு நிலையைக் கண்டும் காணாமலே கடந்து போகும் நாமும்.. அங்கே சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டமும் ஒன்று தானோ என்று ஒரு வகை சூடு என்னை சுற்றிலும் இடுகிறது. இருள் சார்ந்த துக்கத்தின் வீழ்ச்சியை நான் திறக்கும் எல்லா வார்தைகளிலும் காண்கிறேன். திறக்காத கதவுகளை யார்தான் உடைப்பது. திறக்காத மனங்களை எதுதான் திறப்பது..?

இந்த மூன்று சம்பவங்களை உற்று யோசிக்கிறேன்.. பெரிதாக என்ன காரணம் இருந்து விட முடியும். அறியாமை புரையோடிக் கிடக்கும் இச்சமூகத்தில்... காதலை உயிர்கொல்லியாக மாற்றிய சில மானுட எச்சங்களை எந்த சிலுவையில் ஏற்றுவது. எந்த பூக்குழியில் இட்டு நிரப்புவது. எந்த கூட்ட நெரிசலில் சிக்க விட்டு கொல்வது. காதல் அத்தனை கொடுமையான குற்றமா என்ன......? எனக்கு தெரிந்து அதுதான் வலிமை. அதுதான் தீர்க்கம். அதுதான் இந்த உலகம் சுற்றுவதற்கான அச்சாணி. அதுவே நிரந்தரம். அதுதான்... கடவுளின் வழிகாட்டி. காதல் என்றாலே அன்புதானே. அதை இன்னார் மீது இப்படித்தான் வைக்க வேண்டும் என்று வட்டம் போடுவது எத்தனை குதர்க்கமானது. வயது வந்த இருவர் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் காதல் சட்ட ரீதியாகவும்... உணர்வு ரீதியாகவும் ஒப்புக் கொள்ளப் பட வேண்டிய ஒன்று தானே தவிர.... கௌரவம் என்ற பெயரில்... கழுத்தறுப்பது அல்ல. அது மூடத்தனத்தின் உச்சம். இயலாமையின் அருவருப்பு. இன்னும் கொஞ்சம் உற்று நோக்கி உள் சென்றால் தனக்கு கிடைக்காத காதல் தன் பிள்ளைக்கோ பையனுக்கோ கிடைத்து விட்டதே என்ற ஆழ் மன குறுகுறுப்பு. போகிற போக்கில் சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா.. பிராய்டின் கூற்றுக்குள் சற்று இறங்கி பாருங்கள். வாழ்வின் கட்டமைப்பே கலவியில்தான் கட்டமைக்கப் படுவது புரியும். அதுவும் தனக்கான இணையை தானே தேர்ந்தெடுக்கும் வழி ஒன்றில் காதல் டொபமைனுடன் காத்திருப்பது தெரியும்.

நம் பிள்ளைகள் நம் மூலமாக வருகிறார்களே தவிர நம்மிடம் இருந்து வருவதில்லை. நம்புங்கள். எச்சத்தின் மிச்சமென எச்சமே நிரம்பும் மிச்சம்தான் இவ்வாழ்வு. அதில் மீண்டும் உங்கள் எச்சம் கலக்கும் சாதியை எதைக் கொண்டாவது விரட்டி விடுங்கள். அருவருப்பின் எச்சமெனவே இருக்கிறது... பெற்ற பிள்ளைகளை கொன்று விட்டு நீங்கள் நடக்கும் ராஜநடை. நீங்கள் சுமக்கும் கௌரவத்தில் ஒரு துளியில் கூட உங்கள் நிகர் சமன் படுவதில்லை. அத்தனையும் நீங்களே கற்பனித்துக் கொள்ளும் மனநலம் சரி இல்லாத போக்கு. உங்கள் குழந்தை என்ற இசத்தில் விஷம் வைக்கும் கோரம் சத்தியமாக பொருள் கொண்டவையாக இருக்க முடியாது. பொருளற்ற பாண்டத்தின் ஈக்கள் மொய்க்கும் பிணத்தின் வழிபாடே உங்கள் தட்டையான அன்பும் அரவணைப்பும்.

எந்த உயிரையும் உரிமை கொண்டாட எவருக்கும் உரிமை இல்லை. அந்த உயிர் தானாக இன்னோர் உயிருடன் சேர்வதுதான் காதலாகிறது. காதலே... வாழ்வாகிறது. அதுதான் உலகத்தின் மூன்றாம் கண்ணாகிறது.

ஏன் பூமி உயிர் வாழும் தகவமைப்பை பெற்றிருக்கிறது. இங்கே காற்றும் நீரும் மட்டுமல்ல... காதலும் இருக்கிறது.

மதத்தாலும்.. சாதியாலும்.. இங்கு நடக்கும் அத்தனை குளறுபடிகளுக்கும் காதலே மருந்தென்றால்.......அட நம்புங்கள்... வேறு வழி இல்லை.

ஆணவக் கொலை என்பது நாகரிகத்தின் பின்னடைவாகவே இருக்கிறது. அது மல்லாக்க படுத்துக் கொண்டு வானம் நோக்கி துப்புவது போல பார்க்கவே சகிக்க முடியாதவையாக இருக்கிறது. ஒருவேளை காதல் கசந்து விட்டால் கூட வாழ்வு மிச்சமிருக்கும். வாழ்வே செத்து போனால் எதுதான் மிச்சமிருக்கும். என்ன விதமான போதை இது. நான் பெரியவன்.. நான்தான் ஆண்டவன். மற்றவர்களெல்லாம் இங்கு எனக்கு அடிமை.....என்று கூறும், நினைக்கும் மானுட பிழை. இது ஒரு வித மனோவியாதி. யாருக்கும் யாரும் கீழே இல்லை. எல்லாமே அவனவன் செய்யும் வேலையை பொறுத்தது. இரண்டு நாக்கோடு ஒருவன் பிறந்திருந்தால் அவன் ஏதோ வகையில் பெரியவன் என்று மார்தட்டிக் கொள்ளலாம். அல்லது மார்வெட்ட கூலிப்படை ஏவி கொல்லலாம். அப்படி எல்லாம் ஒன்றுமில்லையே....! ஒற்றை நாக்கு...ஒன்பது ஓட்டை.

நடந்தால் மனிதன் கிடந்தால் பிணம். இதுதானே வட்டம். சிருஷ்டிக்கு ஆணும் பெண்ணும் நிர்வாணம் போர்த்த வேண்டும். இது தானே குறியீடு. இதைத்தாண்டி இந்த மானுட குலம் தன்னை திருத்திக் கொண்டு கொண்டு தன்னை அடுத்த கட்டம் நோக்கி முன்னெடுப்பதுதானே பண்பட்ட மனதின் முன்னேற்றமாக இருக்கும். இன்னும் எத்தனை காலத்துக்கு தான் நான் மேல் சாதி அவன் கீழ்சாதி என்று சொல்லி சொல்லி.. மீசையை முறுக்கிக் கொண்டு.. திரிவது. பெற்ற பிள்ளையை கொன்று விட்டு முகம் பார்க்கும் கண்ணாடியை எப்படி பார்க்க முடியும். அது ஞானத்தின் மீது கல்லெறிந்து விட்டு தலை மேல் விழும் காலத்தை பொறுக்க முடியாமல் தத்தளிப்பது ஆகாதா?!.

ஆணவக் கொலை என்பது அபத்த நாடகம். கபட வீராப்பு. எதுவாக இருந்தாலும் பேசி தீர்க்க முடியும். இதுவரை தீராத எதுவும் பேசப்படவில்லை. அவ்வளவே. எதற்கும் கொலை தீர்வல்ல. சமீபத்திய ஆணவக் கொலை தீர்ப்பு மரண தண்டனையும் தீர்வல்ல. இது ஒரு சங்கிலித் தொடர். இது இன மாற்றத்தின் கரம் பற்றுபவை அல்ல. இது மனமாற்றத்தின் தொடர்புடையவை. தங்களை கடவுளுக்கு அருகாமையில் வைத்து கொள்வோரெல்லாம் யோசிக்க. இந்த வாழ்க்கையின் ஆரம்பமும்.. இந்த மனித குலத்தின் டி என் ஏவும்... எப்படி எங்கிருந்து வந்தது என்று. மீனுக்கும் மனிதனுக்கும் உள்ள பயணம் பற்றி சிந்திக்கவும். குரங்கை உற்றுப்பார்த்து சிரிக்க கற்றுக் கொள்ளுங்கள். அது நம்மை பார்த்து சிரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

நாம் எல்லாம் தமிழர்கள் என்று தானே வாய் கிழிய தொண்டை கிழிய கத்துகிறோம். நாமெல்லாம் தமிழர்கள். உலகத்துக்கே மூத்த குடி வேறு. பிறகு எங்கிருந்து இதற்குள் சாதி வந்தது. ஒன்று சாதியை விடுவோம். அல்லது நாங்கள் தமிழர்கள் என்று கத்தி கூப்பாடு போடுவதை விடுவோம். ஆணவக் கொலையில் சாகிறவனும் தமிழன் தான். வெட்டுகிறவனும் தமிழன்தான். கூலிப்படையும் தமிழ் கூட்டம் தான்.(மீறினால் இந்திய கூட்டம். அமெரிக்கால இருந்தா வர போறான்) இத்தனை முரண்பாடுகளோடு இருப்பதில்தான் அந்நிய சக்தி... நுகர்வு கலாச்சாரத்தோடு... அலைபேசி சந்தையோடு நாட்டுக்குள் வருகிறது. இப்படித்தான் முன்பொரு காலத்தில் ஆங்கிலேயனும்.. பிரெஞ்சுக்காரனும் வந்தான். இது தொடர்ந்தால் இனியும் வருவான். நாம் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டே மீசையை முறுக்கியபடி ஆலமரத்தினடியில் வெட்டிக் குறைகள் செய்வதைத் தவிர வேறு ஒரு ஆணியும் பிடுங்கப் போவதில்லை.

எவனோ செஞ்ச அரிசி... எவனோ செஞ்ச துணி... எவனோ செஞ்ச செருப்பு..... எவனோ செஞ்ச உள்ளாடை.... எவனோ செஞ்ச டிவி... எவனோ செஞ்ச போனு.....எவனோ செஞ்ச கம்பியூட்டர்.. எவனோ செஞ்ச காண்டம்.....எல்லாவற்றையும் வாங்கி கொண்டு இந்த உலகில் நாங்கள் தான் பெரியவர்கள் என்றால் இது என்ன மாதிரி டிசைன்....? மாற வேண்டிய காலம் வந்து விட்டது தோழர்களே... இனி ஆண்டிராய்டுகாரன் தான் ஆட்சி செய்வான்... உங்க அண்டராயர் இல்லை. காதல் அடுத்த வீட்டுக்கு பெண்ணுக்கு மட்டுமல்ல. நம் வீட்டு பெண்ணுக்கும் வரும் உரிமை இருக்கிறது என்று எல்லாரும் உணர வேண்டும். காதலும் காமமும் பொது. தேவையும் கூட. அதை அழித்து விட்டு நீங்கள் நட்டும் எந்த கொடியும் காற்றில் பறக்குமே தவிர காலத்தில் பறக்காது.

- கவிஜி

Pin It