தலையங்கம்

தமிழ்நாட்டில், கடந்த ஒரு வருடத்தில் ஜாதிய வன்கொடுமைத் தாக்குதல்களில் 26 தலித்துகள் கொல்லப்பட்டுள்ளனர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்டோரைத் தாக்குவது நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது. ஆனால், கடந்த சில வருடங்களாக ஒரு புதிய தாக்குதல் வடிவம் வெளிவரத் தொடங்கியுள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளேயே பள்ளர், பறையர், சக்கிலியர்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் தாக்குதல்களாக வெளி வருகின்றன.

பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்குள்ளும் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் கடுமையாக உள்ளன. ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட ஜாதியும், மற்ற அனைத்துப் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளையும் கேவலமாகவும், இழிவாகவும் பார்க்கும் மனநிலையைத்தான் கொண்டுள்ளன. அதன் அடிப்படையில் ஒருவருக்கொருவர் வெட்டு, குத்து, கொலைகளில் இறங்குவதையும் பார்க்கலாம்.  

இவை ‘இந்து மதம் - ஜாதி’ என்பனவற்றின் பண்புகள் தான். இவை இரண்டும் ஒழியும் வரை பிற்படுத்தப்பட்டோருக்குள்ளும் – தாழ்த்தப்பட்டோருக் குள்ளும் - இந்த இரண்டு சமூகங்களுக்கு இடையேயும் தாக்குதல்கள், வன்கொடுமைகள் நடந்துகொண்டு தான் இருக்கும். அந்த இந்து மத அழிப்பு என்ற நிலைக்கு நாம் பயணத்தைத் தொடங்க வேண்டிய நிலையில், நம் காலைப் பிடித்துப் பின்னுக்கு இழுப்பது போல, பறையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருசிலர் சக்கிலியர்களைக் கொலை செய்வது, அவர்களின் சொத்துக்களைக் கொள்ளை இடுவது போன்ற பார்ப்பன - பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பண்புகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

காதல் திருமணம் செய்ததால் விரட்டப்பட்ட புதிரை வண்ணார்கள்

வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம் பாரியமங்கலம் கிராமத்தில் தலித் (இந்து பறையர்) குடியிருப்புப் பகுதியில் புதிரை வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த 11 குடும்பங்கள் வசித்து வருகின்றன. புதிரை வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த பிரசாத் (வயது 22), பறையர் சமூகத்தைச் சேர்ந்த சிவாவின் மகள் சிவசக்தியை (வயது 18)  காதலித்து, 2016 ஜூன் மாதம் 17 ந் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

எனவே, சிவா, அவரது மகன் ரஷ்யா ஆகியோர் பிரசாத்தின் உறவினர்களான புதிரை வண்ணார்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு அவர்களின் வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளனர். குடிநீர், மின் இணைப்புகளைத் துண்டித்தனர். வாழ்வாதாரங்களையும் சிதைத்துள்ளனர். 20 கோழிகளை பறித்து சென்றுள்ளனர். தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இறுதியாக, புதிரைவண்ணார் சமூகத்தைச் சேர்ந்த 11 குடும்பங்களையும் ஊரை விட்டுத் துரத்தியுள்ளனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல்ராஜ் தலைமையில் 11 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் கடந்த 21.02.17 ல் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

தருமக்குடிக்காடு

கடந்த 27.07.2017 ல் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தருமக்குடிக்காட்டில் ஒரு கோவில் நில ஆக்கிரமிப்புத் தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தில் பறையர் சமுதாயத்தைச் சேர்ந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் ஒருவர் முன்னிலையில், சக்கிலியர் சமுதாயத்தைச் சேர்ந்த சிவக்குமார் தாக்கப்பட்டு, மரணமடைந்துவிட்டார்.

இவரையும் சேர்த்து, கடந்த ஓராண்டில் 26 தலித்துகள் கொல்லப்பட்டனர். ஆனால், தலித் விடுதலை, தலித் உரிமைகளுக்காகப் போராடும் பல அமைப்புகள் சிவக்குமாரின் மரணத்தை அந்தப் பட்டியலில் சேர்க்கவே இல்லை. எண்ணிக்கை 25 என்றே மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றன.

ஜாதிஒழிப்பு வீரர்களின் கோரமுகம்

தருமக்குடிக்காடு படுகொலையில் பல ஜாதிஒழிப்புப் போராளிகளின் உண்மைமுகங்களை அவர்களது முகநூல் பக்கங்களே வெளிப்படுத்தின. இது வெறும் தனிப்பட்ட மோதல் தான். நிலத்தை அபகரிப்பதற்காக நடந்த வாய்த்தகராறுதான் என்றெல்லாம் எழுதினர். இதுநாள் வரை இவர்கள் ஜாதி ஒழிப்பு என்பதெல்லாம், தன் ஜாதியைத் தவிர மற்ற ஜாதிகளை ஒழிப்பது என்ற மனநிலையோடுதான் பேசியுள்ளனர் என்பதை சிவக்குமார் அம்பலப்படுத்தினார்.

ஜாதி ஒழிப்புப் போராளி தோழர் இம்மானுவேல் சேகரன் படுகொலையைக்கூட வெறும் தேர்தல் பகை என்று காட்டிவிடலாம். கீழ்வெண்மணி படுகொலைகளைக்கூட வெறும் கூலி உயர்வு விவகாரம் என்று சுருக்கிவிடலாம். அப்படித்தான் அந்தந்தக் காலங்களில் ஜாதிஆதிக்கச் சிந்தனை கொண்டவர்கள் பேசினார்கள். எழுதினார்கள்.

ஏன் தருமபுரி இளவரசன் படுகொலையைக்கூட காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கும் வன்னியர்களுக்கும் தொடர்பில்லை - கோகுல்ராஜ் படுகொலை என்பதுகூட மனநிலை சரியில்லாமல் நடந்த தற்கொலை அதற்கும் கவுண்டர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - விஷ்ணுப்பிரியா பணி அழுத்தத்தின் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டார். என்றெல்லாம் எழுதிய வன்னியர்களும், கவுண்டர்களும் நம்முடன் தான் வாழ்ந்து வருகின்றனர். அப்படி எழுதியவர் களைப் போன்ற சமுதாய விரோதிகளுக்கும், தருமக்குடிக்காடு சிவக்குமார் படுகொலையை, வெறும் நிலஅபகரிப்பு மோதல் என்று எழுதிய ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கும்  என்ன வேறுபாடு?

தலித் ஒற்றுமை அவசியம் - ஜாதி ஒழிப்பு அவசியமில்லைய?

உள்ஜாதி மோதல்களைப் பெரிதுபடுத்துவது தலித் ஒற்றுமைக்கு எதிரானது என்ற நோக்கில் பல தோழர்கள் இதைப் பெரிதுபடுத்தவில்லை எனத் தெரிகிறது. இது சரியான அணுகுமுறை அல்ல. தலித் ஒற்றுமை மட்டுமே ஜாதியை ஒழித்து விடுமா? பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை என்பது அவசிய மில்லாத ஒரு செயலா?

தாழ்த்தப்பட்டோருக்குள் நடக்கும் ஜாதியத் தாக்குதல்களைப் பேசுவது, தலித் ஒற்றுமையைப் பாதிக்கும் என்றால், பிற்படுத்தப்பட்டோர் - தாழ்த்தப்பட்டோர் இடையே நடக்கும் ஜாதியத் தாக்குதல் களைப் பேசுவதும், எழுவதும் பார்ப்பனரல்லாத, தமிழர்களின் - திராவிடர்களின் - உழைக்கும் வர்க்கத்தினரின் ஒற்றுமையைப் பாதிக்காதா? இந்த இரு பெரும் பிரிவு மக்களும் உலகம் உள்ளவரை அடித்துக்கொண்டு சாக வேண்டுமா? ஜாதி ஒழிப்பில் அக்கறை உள்ளவர்கள் யாரும் அப்படி எண்ணிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

அதேசமயம், இரு பிரிவு மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக, பிற்படுத்தப்பட்டோர் நடத்தும் ஜாதிய வன்கொடுமைத் தாக்குதல்களை வேடிக்கை பார்ப்பது மிகப்பெரும் தவறல்லவா? அதுபோலவே, பிற்படுத்தப்பட்டோருக்குள்ளோ, தாழ்த்தப்பட்டோருக்குள்ளோ தாக்குதல்கள் நடக்கும்  பொழுதும் அவற்றை ஜாதிய வன்கொடுமைகள் தான் என்று கூறுவதற்குக்கூடத் தயக்கம் வந்தால், அப்படித் தயங்குபவர்களால் ஜாதியம் வலுப்பெறவே செய்யும்.

பார்ப்பனர் அல்லாதார் ஒற்றுமை கருதி, பார்ப்பான் நேரடியாக வந்து தாக்குவதை மட்டுமே ஜாதிய வன்கொடுமையாகக் கருதுவோம். எழுதுவோம். மற்றபடி, பிற்படுத்தப்பட்டவர் போய் தாழ்த்தப் பட்டவர்களைத் தாக்கினால், ஜாதிய வன்கொடுமைகள் நடந்தால், அவற்றை நமக்குள் வைத்துக் கொள்வோம், நமக்குள் பேசிக்கொள்வோம். பெரிதுபடுத்தவேண்டாம் என்று எவராவது பேசினால் அவரை நாம் எப்படிப் பார்ப்போம்? அப்படித்தான் இந்த தலித் ஒற்றுமை பேசுபவர்களையும் பார்க்க வேண்டி வருகிறது.

முதலில், ஜாதி என்றால் இரண்டு தான் உள்ளது. ஒன்று பி.சி. மற்றொன்று எஸ்.சி. என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள் தங்களது கருத்தை அவசியம் மாற்றிக்கொள்ள வேண்டும். 6000 ஜாதிகள் உள்ளன. 6000 ஜாதியும் ஒன்றுக் கொன்று ஏற்றத்தாழ்வைக் கொண்டவைதான்.

தாழ்த்தப்பட்டோருக்குள்ளேயே ஜாதி அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வுகள் இருப்பது உண்மை. பிற்படுத்தப்பட்டோருக்குள்ளேயும் ஜாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது உண்மை. இந்த இரு பெரும் பிரிவுகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்பதும் உண்மை. இந்த உண்மைகளை ஏற்றுக்கொண்டு, அறிவுப்பூர்வமாகப்புரிந்துகொண்டு, ஜாதி ஒழிப்புக் களத்தில் நிற்பவர்களுக்கு தருமபுரி இளவரசன், கோகுல்ராஜ், கண்ணகி முருகேசன், தருமகுடிக்காடு சிவக்குமார் போன்ற அனைவரும் ஜாதி ஆதிக்கச் சிந்தனை கொண்டவர்களால் கொல்லப்பட்டனர் என்ற உண்மை எளிதில் விளங்கும்.

இந்த அறிவியல் உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் பேசும் ஜாதி ஒழிப்பு மட்டுமே இலக்கு நோக்கிச் செல்லும். இந்தப் புரிதல் இல்லாமல், பிற்படுத்தப்பட்டவர்களுக்குள் தாக்குதல், படுகொலை என்றால் அதை உட்ஜாதிப் பகை, அதை வெளியில் பேசவேண்டியதில்லை என்பதும், தாழ்த்தப் பட்டோருக்குள் தாக்குதல், படுகொலை என்றால் அதுவும் உட்ஜாதிப் பகை அதை வெளியில் பேச வேண்டியதில்லை என்பதும் சரியான அணுகுமுறை ஆகாது.

அந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படும் போலி ஜாதிஒழிப்புப் பணிகள், சமுதாய ஆதிக்கத்தில் பார்ப்பானுக்கு இருக்கும் இடத்தைப் பிற்படுத்தப்பட்டவர் கைப்பற்றிக் கொள்வதற்கும் - பிற்படுத்தப் பட்டவர் இடத்தைத் தாழ்த்தப்பட்டவர் கைப்பற்றிக் கொள்ளவதற்கும் வேண்டுமானால் பயன்படலாம். ஜாதி ஒழிப்புக்கு எள்முனையளவும் பயன்தராது.

தருமக்குடிக்காடு சிவக்குமார் மரணம் என்பது ஜாதிய வன்கொடுமையே! அதற்காக ஒட்டுமொத்தப் பறையர்களையும், தாக்கியவரின் அமைப்பான விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பையும் எதிரியாக நிறுத்துவது  நிரந்தரத் தீர்வைத் தராது. இந்து மத - வேத, சாஸ்திரங்கள், புராணப் புளுகுகள், பண்டிகைகள், கடவுள்கள், இந்துப் பண்பாடுகளின் அழிவே நமக்கு ஒற்றுமையையும் விடுதலையும்  வழங்கும்.