“உன்னுடைய கருத்தை வரிக்கு வரி நான் மறுக்கின்றேன், ஆனால் அந்தக் கருத்தை நீங்கள் வெளியிடுவதற்கான சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதற்காக எனது உயிரையும் தர ஆயத்தமாக இருக்கிறேன்” என்றார் வால்டேர். ஓர் உண்மையான சனநாயகத்தில் இத்தகைய ஆரோக்கியமான அணுகுமுறைதான் இருக்க வேண்டும். ஆனால் நிலவும் சமூக வெளியில் தனக்கு உவப்பாக இல்லாத கருத்தை ஒருவர் வெளியிடுவதை ஒரு சிறிதும் சகித்துக்கொள்ளமுடியாத அவல நிலைதான் தமிழகத்தில் நடைமுறையாக உள்ளது. இதன் வெளிப்பாடுதான் 2016 ஜூன் 4 ஆம் நாள் சென்னையில் ‘இடது’ காலண்டிதழ் சார்பாக வெளியிடப்படுவதாக இருந்த மனித நேயப் போராளி தோழர் எஸ்.வி.ஆர். என்னும் ஆவணப்படத்திற்குக் காவல்துறையினால் மிக அவசரமாக விதிக்கப்பட்ட தடையாகும்.

svr 230எஸ்.வி.ராஜதுரை எனும் மாமனிதர் தமிழ்ச்சமூகத்திற்கு அளப்பரிய அறிவுக்கொடையை நல்கியவர். ஏறக்குறைய 80-க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுநூல்களை வழங்கியவர். அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல் அகில உலகும் பெரியாரை அறியும் வண்ணம், அவரைப் பற்றி மிக செறிவான அறிமுகத்தை ஆங்கிலத்தில் அளித்தவர். பாரதிதாசன் பலகலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு மையத்தில் தலைவராக இருந்து பல்வேறு ஆய்வு தொடர்பான அரும்பணிகளைத் தொய்வின்றி ஆற்றியவர்.

“சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்னும் தமிழ் கவிஞனின் ஆணைக்கு ஏற்ப மார்க்சியம் குறித்து உலகெங்கும் நிலவக்கூடிய பல்வேறு போக்குகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் தனது எழுத்துகளில் பதிவு செய்தவர். பல்வேறு நாடுகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட கவிஞர்களின் அழகான கவிதைகளைச் சிறப்பான முறையில் தமிழில் அறிமுகம் செய்தவர்.

காவல்துறை அத்துமீறலை எதிர்த்து மக்களைத் திரட்டி போரிட்டவர். தூக்குத்தண்டனை பெற்ற பலரையும் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி அவர்களது உயிரைக் காத்தவர். எங்கெல்லாம் மனித உரிமைகள பாதிக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் இன்றுவரை அவரது குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. அரசு அடக்குமுறைக்கு அஞ்சாமல் அவர் எடுத்த முன்னெடுப்புக்கள் சமூக நலனுக்காகப் போராடுபவர்களுக்கு ஆதர்சத்தையும் உத்வேகத்தையும் அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

இலக்கிய விமர்சனம், இசை, நவீன ஓவியம், திரைப்படம் ஆகிய துறைகளில் ஞானம் மிக்கவர் எஸ்.விஆர். இப்படிப்பட்ட பன்முக ஆளுமை கொண்ட அறிவுஜீவிகள் இன்றைய தமிழ்ச் சமூகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே உள்ளனர்.

எஸ்.வி.ஆர். போன்றவர்களது வாழ்வும் பணியும் இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் அவர்களது செல்நெறியைத் தீர்மானிக்கப் பெரிதும் வழிகாட்டியாக உள்ளன. தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டிய ஓர் அறிவுஜீவி குறித்த ஆவணப்படத்தை வெளியிடக் கூடாது என்று தடை செய்வது சனநாயக மரபுகளுக்கு எதிரானது மட்டுமல்ல அடிப்படை மனித உரிமைக்கே முரணானதாகும். மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழகப் பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்டு மா-லெ (விடுதலை) பொதுச்செயலாளர் பாலசுந்தரம், கவிஞர் இன்குலாப், பேராசிரியர் வீ. அரசு, தலித்முரசு ஆசிரியர் புனிதப் பாண்டியன், ஓவியர் டிராட்ஸ்கி மருது, பத்திரிக்கையாளர் ஞானி, திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன், தீக்கதிர் ஆசிரியர் அ.குமரேசன், தமிழ்நிலம் ஆசிரியர் பொழிலன், தமிழறிஞர் கோவை ஞானி, எழுத்தாளர் வ.கீதா, புதுவிசை ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா, மார்க்ஸ் நூலகப் பொறுப்பாளர் சதீஸ் ஆகியோர் எஸ்.வி.ஆருடைய அறிவு மற்றும் நடைமுறைப் பங்களிப்புக் குறித்து தத்தம் கோணத்தில் இந்த ஆவணப் படத்தில் பதிவு செய்துள்ளனர். இதுதான் அந்த ஆவணப் படம். இவையன்றி ஆட்சேபணைக்குரிய வேறேதும் அதில் இல்லை.

ஆவணப்படம் திரையிடவிருந்த ஒரு மணிநேரத்திற்கு முன்பு சென்னைக் காவல்துறையினர் எனக்கு ஓர் அறிக்கையை அளித்தனர். அதில் கீழ்க்கண்ட சான்றிதழ்களைக் ஒரு மணி நேரத்திற்குள் நேரடியாக வழங்குமாறு அறிவுறுத்தினர்.

  • ஆவணப்படம் திரையிடுவதற்கு மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ்.
  • தமிழ்நாடு திரைப்படப் பிரிவுக் குழுமத்திடம் இந்த ஆவணப்படம் பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ்
  • திரைப்படத் துறை (சினிமாடோகிராபி) சட்டம் 1952 இன் கீழ் பெறப்பட்ட தணிக்கைக்குழுச் சான்றிதழ்
  • அரசியல், மதம், அல்லது பரபரப்பான சமூகப் பிரச்சனைகளை உள்ளடக்கி சட்டம் ஒழுங்கைப் பாதிக்கக் கூடிய எவையும் இந்த ஆவணப்படத்தில் இல்லை என்னும் சான்றிதழ் 

மேற்காண் சான்றிதழ்களை ஒருமணி நேரத்திற்குள் வழங்காவிட்டால் குறுவட்டுக்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை அறிக்கை எச்சரித்தது. காவல்துறையினர் கேட்டிருந்த சான்றிதழ்கள் எந்தச் சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் கேட்கப்பட்டுள்ளன என்ற விவரம் இந்த அறிக்கையில் இல்லை. மேலும் எஸ்.வி.ஆர். குறித்த ஆவணப் படத்தை மிகப் பரவலாக விளம்பரம் செய்து அனைவரையும் திரட்டும் முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எஸ்.வி.ஆர். மீது அன்பும் கரிசனமும் மிக்க அவரது நட்பு வட்டத்தைச் சார்ந்த நண்பர்கள் மட்டுமே இந்த ஆவணப்படத்திற்காக அழைக்கப்பட்டிருந்தனர். இத்தகைய சூழலில் இந்த ஆவணப் படத்தை மிகவும் அவசரமாக சில தொழில்நுட்பக் காரணங்களைக் காட்டி தடை செய்யவேண்டிய தேவை என்ன என்ற கேள்விக்கு பதிலேதும் இல்லை. எனினும் எஸ்.வி.ஆர். மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்த நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க தனிப்பட்ட முறையில் ஓர் உள்ளரங்கில் இப்படம் திரையிடப்பட்டது.

கருத்துக்களைத் தடை செய்வது, அந்தக் கருத்துக்களைக் கூறுபவர்களுக்குக் கடும் தண்டனை வழங்குவது போன்றதுதான். வரலாற்றில் இதைப்போன்ற தடைகள் சனநாயக சக்திகளால் தூக்கியெறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் கருத்துரிமைக்கான வெளி சுருங்கி வருவது ஏற்கத்தக்கதல்ல. அதுமட்டுமல்லாமல் கடும் கண்டனத்திற்கும் உரியதாகும். எஸ்.வி.ஆர். ஆவணப்படத்திற்கான தடை என்பது ஒரு தொடக்கம் தான். இதை தமிழ்ச் சமூகம் அனுமதித்தால் கருத்துரிமையின் குரல்வளை எதிர்காலத்தில் முழுமையாக நசுக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எனவே நெருக்கடியான இத்தருணத்தில் சனநாயக சக்திகள் இத்தடையை எதிர்த்துப் பல்வேறு தளங்களிலும் தங்களது குரலை வலிமையாகப் பதிவு செய்ய வேண்டும். இது ஏதோ எஸ்.வி.ஆர். என்ற தனிநபருக்கு நாம் காட்டக் கூடிய சலுகை அல்ல, மாறாக ஓர் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான எளிய முயற்சியாக இத்தகைய எதிர்ப்புக்கள் பதிவு செய்யப்படும்.

- கண.குறிஞ்சி

Pin It