கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

jallikattu rally marina

2017 ஜனவரி மாதம் 7 ஆம் தேதியிலிருந்து கிட்டத்தட்ட 24 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடெங்கும் நிகழ்ந்த போராட்டம் பற்றி நாம் அதிகமாக விவரிக்கத் தேவையில்லை. ஏற்கெனவே எல்லா ஊடகங்களும் போதும் போதும் என்கிற அளவுக்கு அதைப் பற்றி செய்தி மழை பொழிந்து தீர்த்துவிட்டார்கள். நாளிதழ்களில் பக்கம் பக்கமாக படங்களை வெளியிட்டு அதைப் பற்றிய செய்திகளைப் பற்றியெரிய வைத்துவிட்டார்கள். அதற்கும் மேலாக, எல்லா வீடுகளிலும் இருந்து வீட்டுக்கு ஒருவராவது அந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களாகவோ, அல்லது வெறும் பார்வையாளர்களாகவோ இருந்திருக்கிறார்கள். இவை தவிர சமூக ஊடகங்களான வாட்ஸ் அப், பேஸ் புக் எல்லாவற்றிலும ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் பற்றிதான் செய்திகள்... செய்திகள்... இதில் நாம் புதிதாக விவரிக்க எதுவுமில்லை.

 போராட்டம் நடந்தபோதும், நடந்து முடிந்த பிறகும் அதைப் பற்றி மாத, வார இதழ்களில், நாளிதழ்களில் தங்களுடைய கருத்துகளை பலர் பதிவு செய்து வருகின்றனர் அந்த கருத்துகள், அதை வெளியிட்டவர்களின் அரசியல் பார்வையை வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன.

 இதற்கு நமது தமிழ்ச் சிற்றிதழ்களும் விதிவிலக்கல்ல. ‘உயிர்மை’ மாத இதழ் தமிழ் வசந்தம் 2017 என்ற பெயரில் இதற்காகவே ஒரு சிறப்பிதழையே கொண்டு வந்திருக்கிறது. காலச்சுவடு இதழ் மூன்று கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. தடம் இதழ் ரவிக்குமாரின் ‘ஜல்லிக்கட்டு என்னும் கலாசார மூலதனம்’ என்னும் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. தி இந்து - தமிழ் நாளிதழ் இது தொடர்பான கட்டுரைகள் பலவற்றை வெளியிட்டிருக்கிறது. அவற்றில் சமஸ், அரவிந்தன், அப்பணசாமி ஆகியோரின் கட்டுரைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

 இவை தவிர, புரட்சிகர அமைப்புகளாக, இடதுசாரி அமைப்புகளாகக் கருதப்படும் பல அமைப்புகளின் இதழ்களில் வெளிவந்த கருத்துகள் ஜல்லிக்கட்டை முற்றிலும் எதிர்ப்பனவாக இல்லை. மா.லெ. தீப்பொறி இதழ்களில் வெளிவந்த சில கட்டுரைகளைத் தவிர.

 தி இந்து - தமிழ்நாளிதழில் அரவிந்தன், தடம் இதழில் ரவிக்குமார் எழுதிய கட்டுரைகள், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை பின் நவீனத்துவ நோக்கில் பார்க்கின்றன.

 அவை என்ன சொல்கின்றன?

 1. இன்றைய அமைப்புகளும் திட்டமிடல்களும் அடிப்படையிலேயே பன்முகத்தன்மையை மறுத்து ஒற்றைப்படைத் தன்மையை முன்னிறுத்துபவை. ‘­­­­ஒரு கொள்கை, ஒரு கோஷம், ஒரு கூட்டம்’ என்பதே அமைப்பு சார்ந்த சிந்தனைகளின் அடிப்படையாக மாறிவரும் நிலையில், இந்தப் போராட்டம் எல்லாவிதங்களிலும் இந்த அடிப்படையைத் தகர்க்கிறது. பின்நவீனத்துவ யுகத்தின் அசலான வெளிப்பாடாகப் பன்முகத்தன்மை கொண்டு பல குரல்களும் ஒலித்தன. பல்வேறு உணர்ச்சிகளும் அலைமோதின.

 இந்தப் போராட்டம் பின் நவீனத்துவத் தன்மை கொண்டது. ஒற்றை மையம் இல்லை. ஒற்றைத் தன்மை இல்லை. ஒரு பிரிவினரின் திரளாக அது இல்லை. ஒரே குறிக்கோள் என்பதும் இல்லை.

 2. ஆளுமை சார்ந்த எந்தப் பிம்பங்களும் முன்னிறுத்தப்படவில்லை. ஏற்கெனவே பிம்பங்களாக உலா வருபவர்களும் தங்கள் பிம்பங்களைத் துறந்த நிலையிலேயே போராட்டத்தில் இடம் பெற்றார்கள்.... பிம்பங்களைக் கட்டுடைப்பது பின் நவீனத்துவத்தின் கூறுகளில் ஒன்று.

 3. பெரும் கொண்டாட்டமாக இந்தப் போராட்டம் நடைபெற்றது, இதன் பின் நவீனத்தன்மைக்கு மற்றுமொரு சான்று. எந்தத் திட்டமும் ஒத்திசைவும் அற்ற கொண்டாட்டம் பெருகும் கூட்டம். மேலும் மேலும் மக்களை ஈர்த்தபடி இருக்க, கொண்டாட்டங்களும், பன்முகத்தன்மை கொண்டதாக அமைந்தன.

 (‘மையங்களையும் பிம்பங்களையும் தகர்த்த போராட்டம்’ - அரவிந்தன் - தி இந்து - 30.1.2017)

 ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு பெரும் கொண்டாட்டமாக நிகழ்ந்தது என்ற அடிப்படையில் ரவிக்குமார் ரஷ்ய சிந்தனையாளர் மிகைல் பக்தீனின் கருத்துகளை முன் வைத்து தனது ‘ஜல்லிக்கட்டு என்னும் கலாசார மூலதனம்’ என்ற தடம் இதழ் பிப்ரவரி 1 - 2017 கட்டுரையில் விளக்குகிறார்.

 ‘திருவிழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பவர்கள் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், தயக்கம் இல்லாமல் தமது விருப்பங்களை எண்ணங்களை வெளிப்படுத்துவார்கள் எனக் கூறுகிறார் பக்தீன். ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் அரசியல் தலைவர்களை விமர்சித்தது அப்படியான மனநிலையில்தான்.’

 ‘சாதாரண நேரங்களில் ஏற்கப்படாத விஷயங்கள் கூட ஏற்கப்படாத விஷயங்கள் கூட திருவிழாக் கொண்டாட்டத்தின்போது ஏற்கப்படும் என்கிறார் பக்தீன். மற்ற நேரங்களில் பிரிவினை வாதம், தேசவிரோதம் எனவும் கண்டனத்துக்கு உள்ளாகிற முழக்கங்கள் ஜல்லிக்கட்டுக்காரர்களால் எழுப்பப்பட்டபோது அவை கேலிகளாக, கிண்டல்களாக, பகடிகளாகவே பார்க்கப்பட்டு, சிரித்துப் பாராட்டப்பட்டன.’

 ‘புனிதங்கள் கவிழ்க்கப்படுவதை திருவிழாக் கொண்டாட்டத்தின் ஓர் அம்சம் என்கிறார் பக்தீன். ஜல்லிக்கட்டுப் போராட்டங்களின் போது முதலமைச்சர், பிரதமர் என்ற அதிகாரக் குறியீடுகள் அப்படித்தான் புனிதநீக்கம் செய்யப்பட்டன.’

‘திருவிழாக் கொண்டாட்டத்தைப் பற்றி ஆய்வு செய்த பக்தீன் அதற்கும் கலகத்துக்கும் இடையேயான இடைவெளி மிகவும் குறுகியது. எப்போது வேண்டுமானாலும் ஒரு திருவிழாக் கொண்டாட்டம் கலகமாக உருமாறிவிடும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

ஜல்லிக்கட்டு கொண்டாட்டம் கலகமாக உருமாறிவிடுமோ என்ற அச்சத்தில்தான், மத்திய அரசின் கடைக்கண் பார்வை அருளோடு, தமிழக காவல்துறை அதன்மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, இப்போது ஒரு ரத்தக் களறியோடு அதை முடித்து வைத்திருக்கிறது.’

ஜல்லிக்கட்டுத் தொடர்பான இந்தப் பார்வைகளை ஆராய்வோம்.

 முதலில் இந்தப் போராட்டம் ஒரு கொள்கை, ஒரு கோஷ்டி, ஒரு கூட்டம் என்ற ஒற்றைதன்மையோடு இல்லை. பன்முகத்தன்மை கொண்டிருந்தது என்ற சொல்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பன்முகத்தன்மைகள் இருந்தன என்பது உண்மைதான். வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமாக மட்டும் அது இல்லை. அந்த ஒற்றைத்தன்மையோடு மட்டும் இல்லை. அந்த ஒற்றைத்தன்மை மட்டுமே இருந்திருந்தால், இன்னும் 100 நாட்கள் அந்தப் போராட்டத்தை நடத்த ஆளும் வர்க்கங்கள் அனுமதித்திருப்பார்கள். பல்வேறு அரசியல், பொருளாதார கோரிக்கைகளும், முழக்கங்களும் ஆளும் வர்க்கத்துக்கு எதிராக ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வெளிப்பட்டன.

 ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழ் இன உணர்வின் அடிப்படையில் இருந்தது. தமிழ்க்கலைகள் முக்கியத்துவம் பெற்றன. பறை இசை, சிலம்பம், நான் தமிழன்டா என்பன போன்ற முழக்கங்கள் இருந்தன. தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மத்திய அரசும், நீதிமன்றமும் தடை செய்துவிட்டதாக மக்கள் கருதினார்கள். அங்கே தமிழ் உணர்வின் அடிப்படையில் ஒன்று கூடியவர்கள் இருந்தார்கள்.

ஆனால் அப்படி ஒன்று கூடியவர்கள், மத்திய அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளுக்கு எதிராகவும் இருந்தார்கள். அதாவது, ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் என்ற ஒரே ஒரு தன்மையில் எழுந்த அந்தப் போராட்டம், மத்திய, மாநில அரசுகளின் ஆளும் வர்க்கச் சார்புக் கொள்கைகளை எதிர்ப்பதால், அந்த ஆளும் வர்க்கச் சார்பு என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கானதாக இருப்பதால், பன்னாட்டு நிறுவனங்களை - ஆளும் வர்க்கத்தை எதிர்த்த போராட்டத்தின் ஒரு கூறாக வெளிப்பட்டது. நுண்மையானது, பேரளவிலானதுடன் இணைந்த நிகழ்வாக அது அமைந்தது. பேரளவிலானது நுண்மையானதின் மூலம் வெளிப்பட்டது.

 உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி, ஜல்லிக்கட்டு நடத்தத் தடை என்றால், அதே உச்சநீதி மன்றம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டபோது, அதை கர்நாடக அரசு மதிக்கவில்லை. அப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைத்துப்படுத்து என ஏன் மத்திய அரசு கர்நாடக அரசிடம் சொல்லவில்லை? ஏன் கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற மத்திய அரசுக்கு எதிரான கேள்வி ஜல்லிக்கட்டையட்டி மக்களின் மனதில் எழுந்தது.

அதற்கு முன்பு முல்லைப் பெரியாறு அணை விவகாரம், காவிரிப் படுகையின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உதவுவதற்காக அரசு கொண்டு வந்திருக்கிற மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான திட்டங்கள்... அதன் ஒரு பகுதியாக காவிரி நதி நீர் பாயும் பகுதிகளை வறண்ட பகுதியாக மாற்றி, விவசாயத்தை ஒழித்துக்கட்ட நினைப்பது, பல விவசாயிகளைத் தற்கொலை செய்ய வைத்தது, இன்னும் கொங்குமண்டலப் பகுதியில் கெயில் குழாய் பதிப்பது, தேனி மாவட்டத்தில் மலையைக் குடைந்து நியூட்ரினோ திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைவது... மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் கூடங்குளம் அணுமின்நிலையத்தைத் தொடங்கி நடத்தியது - இப்படி ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தை ஒட்டி மத்திய அரசின் பல அரசியல், பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் கோபம் வெளிப்பட்டது.

அதுமட்டுமல்ல, கள்ளப் பணம், கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகச் சொல்லி, 1000 - 500 ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக்கி, உழைக்கும் மக்களை ஏடிஎம் வாசல்களில் மணிக்கணக்கில் காத்து நிற்க வைத்தது, பணமில்லாப் பரிவர்த்தனை என்று சொல்லி சிறு வணிகர்களை, சிறுதொழில் செய்பவர்களை அழித்துவிட்டு, அந்த இடத்தில் பெரிய கார்ப்பரேட் முதலாளிகளை உட்கார வைக்க முயற்சி செய்வது, வங்கிக் கடன்களை அடைக்க முடியாத விவசாயிகளும், மாணவர்களும் ஒருபுறம் தற்கொலை செய்து மடியும்போது, இன்னொருபுறம் அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்வது ஆகிய கொடுமைகளுக்கு எதிராகவும் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தில் மக்களின் கோபம் வெளிப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து, நாட்டு காளை மாடுகளை ஒழித்து, வெளிநாட்டு கலப்பின மாடுகளை இறக்குமதி செய்து, பால் உற்பத்தி, வினியோகம் ஆகியவற்றின் அடிப்படைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதோடு, வெளிநாட்டு மாட்டுத் தீவன நிறுவனங்கள், மருந்து நிறுவனங்களின் சுரண்டலுக்கும் வாடிவாசலைத் திறந்துவிடும் மத்திய அரசின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் உருமாறியது.

நவீன வேளாண்மை என்கிற பெயரில் இந்நாட்டு விளைநிலங்களைச் சுடுகாடாக்கி, பிடி கத்தரிக்காய், பிடி பருத்தி உள்ளிட்ட மரபணு மாற்று பயிர்களைக் கொண்டு வந்து, விதையையும் விவசாயி காசு கொடுத்து வாங்கச் செய்து, விவசாயத்தை நாசம் செய்த மத்திய அரசின் பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு ஆதரவான கொள்கைக்கு எதிராக இயற்கை வேளாண்மையை ஆதரித்து ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தில் பேசப்பட்டது.

 வெளிநாட்டில் இருந்து வந்துள்ள பீட்டா போன்ற அமைப்புகள் இந்நாட்டு மக்களின் உணவுப் பழக்கம், பண்பாடு ஆகியவற்றில் தலையிடுவதை எதிர்த்து, ‘பீட்டாவை தடை செய்’ என்ற முழக்கத்தோடு, அன்னிய நாட்டு குளிர்பானங்களை எதிர்த்த போராட்டமாகவும் அது விரிவடைந்தது.

 இந்துத்துவா கொள்கையின் அடிப்படையில் ஒரு மொழியை, ஒரு பண்பாட்டை, ஒரு மதத்தை இந்திய முழுமைக்கும் கொண்டு வர நினைக்கிற பாரதிய ஜனதாவின் முயற்சிகளுக்கு எதிரான முழக்கங்களும் எழுப்பப்பட்டன. பசுவைத் தெய்வமாக வணங்கும், அசைவ உணவை மறுக்கும் இந்துத்துவப் பண்பாட்டை அனைத்து மக்களின் மீதும் திணிக்கும் முயற்சியாகவே இந்த பீட்டாவும் மத்திய அரசின் விலங்குகள் நல வாரியமும் கைகோர்த்துச் செயல்படுவதாக மக்கள் கருதினார்கள். எனவே மத்திய அரசின் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகவும் இந்த ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் இருந்தது.

இவ்வாறு, இன உணர்வு, நதிநீர்ப் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, பண மதிப்பு நீக்க நடவடிக்கை, பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம், சுரண்டலுக்கு ஆதரவான மத்திய, மாநில அரசின் கொள்கைகளை எதிர்ப்பது என பன்முகத்தன்மை கொண்டதாக - இந்தப் போராட்டம் இருந்தது. ஆனால் இந்தப் பன்முகத்தன்மைகள் எல்லாம் - உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு ஆதரவான, அவர்களின் சுரண்டலுக்கு வழி செய்து கொடுக்கிற, சுரண்டலைப் பாதுகாக்கிற மத்திய மாநில சர்வாதிகார அரசுகளை எதிர்ப்பது என்ற ஒற்றைத் தன்மையிலிருந்துதான் பீறிட்டுக் கிளம்பின. மத்திய, மாநில அரசுகளின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளை எதிர்ப்பது என்ற அடிப்படையில் இருந்துதான் இந்தப் பெரும் போராட்டம் வெடித்தது.

 விவசாயி தற்கொலை செய்யாத போது போராடாதவர்கள், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது போராடாதவர்கள், காவிரிப் பிரச்னையின் போது போராடாதவர்கள். முல்லைப் பெரியாறுக்காகப் போராடாதவர்கள் இதற்கு மட்டும் எப்படிப் போராட வந்தார்கள்? என்று மாணவர்களை, இளைஞர்களை நோக்கி எழுப்பப்படுகிற விமர்சனக் குரல்களுக்குப் பதிலாக, இந்த எல்லாப் போராட்டங்களையும் ஒருங்கிணைத்த மாதிரி இந்த ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தை நாங்கள் நடத்தினோம் என்று இளைஞர்கள் சொன்னார்கள். இப்போது சொல்லுங்கள், இந்தப் போராட்டம் எதை நோக்கி என்று? அதை மத்திய மாநில அரசுகளின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பதற்காகத்தானே? பன்மைத்தன்மையுள்ள இந்தப் போராட்டங்கள் பலவிதமாகச் சிதறிவிடவில்லை. அது மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளை எதிர்க்கிற போராட்டமாக ஒற்றைத் தன்மையுடன் நடத்தப்பட்டது. ஒற்றைத்தன்மையை எதிர்க்கிற பின்நவீனத்துவப் புரிதல் இந்தப் போராட்டத்தில் அடிபட்டு வீழ்கிறது.

 இந்தப் போராட்டம் வெறும் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் நடந்திருந்தால், மோடிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் கோபம் வந்திருக்காது. போராட்டத்தில் தீவிரவாதிகள் புகுந்துவிட்டார்கள், தேசவிரோதிகள் ஊடுருவிவிட்டார்கள் என்று பொய்யாய்க் கதைத்துபோராட்டத்தை வன்முறையின் மூலம் அடக்க அவர்கள் முயற்சித்திருக்கமாட்டார்கள்.

 இந்தப் போராட்டத்தை ஓர் அமைப்பு திட்டமிட்டு நடத்தவில்லை - ஒற்றைத்தன்மையில்லை என்கிறார்கள். போராட்டத்தின் வெளிப்பாட்டுத்தன்மை என்கிற அளவில் அது உண்மைதான், இப்படிப்பட்ட பெருந்திரளான எழுச்சி மிக்க போராட்டங்களுக்கு அறைகூவல் விடும் அளவுக்கு இன்னும் ஒரு புரட்சிகர அமைப்பு வலுப்பெறவில்லை. ஆனால் அதன் தேவையை இந்தப் போராட்டம் உணரச் செய்திருக்கிறது. இவர்கள் சொல்கிற பின் நவீனத்துவ அளவுகோல்படியிலான ஒற்றைத்தன்மையின்மையினால் அல்ல.

 அடுத்து, இந்தப் போராட்டத்தில் ஏற்கெனவே உள்ள ஆளுமை சார்ந்த எந்தப் பிம்பங்களும் முன்னிறுத்தப்படவில்லை. ஏற்கெனவே தனி ஒளிவட்ட பிம்பங்களாக உலா வருபவர்களும் தங்கள் பிம்பங்களைத் துறந்த நிலையிலேயே போராட்டத்தில் இடம் பெற்றார்கள். பிம்பங்களைக் கட்டுடைப்பது பின் நவீனத்துவத்தின் கூறுகளில் ஒன்று என்கிறார்கள்.

 உண்மைதான். எந்தத் தனிப்பட்ட தலைவரையோ, நடிகரையோ இந்தப் போராட்டத்தைத் தலைமை தாங்க, வழி நடத்த இளைஞர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் இந்த ஆளும் வர்க்க அரசியல் கட்சித் தலைவர்களின் ஆளுமை சார்ந்த பிம்பங்களை கட்டுடைத்தது இந்தப் போராட்டம் இல்லை. அவர்களின் பல ஆண்டு கால நடவடிக்கைகள் ஏற்கெனவே அவர்களின் மீதிருந்த எல்லாப் பிம்பங்களையும் அழித்து ஒழித்துவிட்டன. ‘யாருக்கும் எந்தக் கொள்கையும் கிடையாது. மக்களுக்கு உழைப்பதாகப் பொய் சொல்லி, கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்காகத்தான் அரசியல் கட்சிகளை அவர்கள் நடத்துகிறார்கள்’ என மக்களுக்கு ஏற்கெனவே தெரியும். ‘இருக்கிற திருடனில் நல்ல திருடனைத் தேர்ந்தெடுக்கவே தேர்தல்’ என்று அதிகம் படிக்காத மக்களே தங்களுடைய மனதில் இருந்த தலைவர்களின் பிம்பங்களை ஏற்கெனவே உடைத்தெறிந்துவிட்டார்கள். எனவே புதிதாக எந்த பிம்பமும் கட்டுடையவில்லை. மக்கள் இந்தப் போராட்டத்தின் கரைகளில் அரசியல் தலைவர்களை ஒதுங்கவிடாமல் விரட்டியடித்ததன் மூலம், பிம்பங்கள் உடைந்து நொறுங்கியதை இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டது. அதுபோலவே எந்தச் சமூக அக்கறையும் இல்லாமல் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே உயிர் வாழ்ந்து - ஏதோ சமூக அக்கறையிருப்பதைப் போல நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களைப் பற்றி ஏற்கெனவே அவர்களுக்குத் தெரியும். இங்கே புதிதாக எந்த பிம்பம் உடைந்து நொறுங்கி, பின் நவீனத்துவம் வாழ்க என்று கூக்குரலிடுகிறது?

 ‘திருவிழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பவர்கள் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், தயக்கம் இல்லாமல் தமது விருப்பங்களை எண்ணங்களை வெளிப்படுத்துவார்கள் என்று கூறுகிறார் பக்தீன். ஜல்லிக்காட்டு போராட்டக்காரர்கள் அரசியல் தலைவர்களை விமர்சித்தது இத்தகைய மனநிலையில்தான்.’ என்று ரவிக்குமார் சொல்வது, ஏதோ ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது மட்டும்தான் இப்படி விமர்சிப்பார்கள். அதற்கப்புறம் பழையபடி பிம்பங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் என்று கூறுவதைப் போல இருக்கிறது. உண்மையில் மக்களுக்கு நன்றாகவே தெரியும், இந்தத் தலைவர்கள் யார் என்று? எவ்வாறு ஆளும் வர்க்கங்களின் நலனுக்கு உழைக்கிறார்கள் என்று.

 அடுத்து, ‘பெரும் கொண்டாட்டமாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதன் பின் நவீனத்தன்மைக்கு மற்றுமொரு சான்று. எந்தத் திட்டமும் ஒத்திசைவும் அற்ற கொண்டாட்டம் பெருகும் கூட்டம். மேலும் மேலும் மக்களை ஈர்த்தபடி இருக்க, கொண்டாட்டங்களும், பன்முகத்தன்மை கொண்டதாக இருந்தது’ என்கிறார் அரவிந்தன் தனது கட்டுரையில்.

 எந்தத் திட்டமும் இல்லாமல், ஒத்திசைவும் இல்லாமலா இந்தப் போராட்டம் நடைபெற்றது? ஜல்லிக்கட்டை ஆதரிப்பது, மத்திய, மாநில அரசுகளின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பது என்ற திட்டம் இந்தப் போராட்டத்துக்கு இருந்தது.

 அதுபோல ஒத்திசைவு இல்லாமலா பிழைப்புவாத ஆளும்வர்க்க அரசியல்கட்சிகளை எல்லாரும் விரட்டி அடித்தார்கள்? எந்த ஒத்திசைவும் இல்லாமலா மோடியையும் பன்னீர் செல்வத்தையும் சசிகலாவையும் எதிர்த்த முழக்கங்கள் எல்லாம் தமிழ்நாடு முழுக்க போராட்டக் களங்களில் ஒலித்தன?

 கொண்டாட்டமாக இருந்தது உண்மை. பெருந்தி\ரளான மக்கள்- ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் திரளாத பலவிதமான பண்புகளைக் கொண்ட மக்கள் - ஒரு போராட்டத்தில் திரளும்போது அவரவர்களுக்குத் தெரிந்த, அவரவர்கள் ரசனைக்கு, பழக்கத்துக்கு உகந்த நடைமுறைகளை மேற்கொள்வது இயல்பு. சிலர் ஆடிப் பாடினார்கள். சிலர் சிலம்பு சுற்றினார்கள். சிலர் முழக்கங்கள் இட்டார்கள். சிலர் மணற் சிற்பங்களை உருவாக்கினார்கள். சிலர் சொற்பொழிவாற்றினார்கள். பீட்டா அமைப்பு அடிபட்டுச் சாக கிடப்பதைப் போல சிலர் நடித்துக் காட்டினார்கள். சிலர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள். சிலர் இடத்தைச் சுத்தம் செய்தார்கள். சிலர் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்தார்கள். யாருக்கு என்ன முடியுமோ அவற்றை எல்லாம் செய்தார்கள். குடியரசு தின ராணுவ அணிவகுப்பு போல இயந்திரத்தனமாக இந்தப் போராட்டம் இருக்காது என்பதே உண்மை. அந்த வகையில் இந்தப் போராட்டம் ஒரு கொண்டாட்டம்தான்.

 கொண்டாட்டத்தின் பண்பாக இந்த பின் நவீனத்துவவாதிகள் சொல்கிற பிற கருத்துகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 ‘‘புனிதங்கள் கவிழ்க்கப்படுவதை திருவிழாக் கொண்டாட்டத்தின் ஓர் அம்சம் என்கிறார் பக்தீன். ஜல்லிக்கட்டுப் போராட்டங்களின் போது முதலமைச்சர், பிரதமர் என்ற அதிகாரக் குறியீடுகள் அப்படித்தான் புனிதநீக்கம் செய்யப்பட்டன’’ என்கிறார் ரவிக்குமார். முதலமைச்சர், பிரதமர் பதவிகளையெல்லாம் புனிதமானதாக மக்கள் ஒரு போதும் கருதுவதில்லை. அது ஜல்லிக்கட்டுப் போராட்டத்தால் ஏற்பட்டதல்ல. அதற்கு முன்பே அவர்களை உயர்ந்தவர்களாக மக்கள் கருதவில்லை.

‘‘ஒரு விழாக் கொண்டாட்டத்தைப் பற்றி ஆய்வு செய்த பக்தீன் அதற்கும் கலகத்துக்கும் இடையேயான இடைவெளி மிகவும் குறுகியது. எப்போது வேண்டுமானாலும் கலகமாக உருமாறிவிடும் என்பதையும் சுட்டிக் காட்டினார். ஜல்லிக்கட்டு கொண்டாட்டம் கலகமாக உருமாறிவிடுமோ என்ற அச்சத்தில்தான், தமிழக காவல்துறை அதன்மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, இப்போது ஒரு ரத்தக் களறியோடு அதை முடித்து வைத்திருக்கிறது’’

போராட்டம் ஆரம்பித்த பல நாள்களாகத் தோன்றாத கலகம், போராட்டத்தின் இறுதியில் தோன்றியதா? அப்படி கலகம் செய்ததால்தான் போராடியவர்களை, போராடியவர்களுக்கு உதவிய மக்களை காவல்துறை தாக்கியதா? வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதா? காவல்துறையே மக்களின் குடிசைகளை, வாகனங்களைத் தீ வைத்துக் கொளுத்தியதா? ‘ஒரு ரத்தக் களறியோடு அதை முடித்து வைத்ததா?’

‘‘மக்கள் கலகம் செய்வார்கள் என்ற அச்சத்தில்தான் காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது’’ என்று ரவிக்குமார் சார்ந்திருக்கிற கட்சியின் தலைவர் திருமாவளவனே சொல்லமாட்டார்.

பின்நவீனத்துவச் சிந்தனைமுறை சொல்லும் அடிப்படையான பல கூறுகள் இந்த ஜல்லிக்கட்டுக்குப் போராட்டத்துக்குப் பொருந்தும் என எதற்காக அவர்கள் வலிந்து கூறுகிறார்கள்?

‘ஒரு கொள்கை, ஒரு கோஷம், ஒரு கூட்டம்’ என்ற அமைப்புசார்ந்த சிந்தனைகள் இந்தப் போராட்டத்தில் இல்லை என்று ஏன் அழுத்தந்திருத்தமாகப் பேசுகிறார்கள்?

சமூக மாறுதலுக்கான வர்க்கப் போராட்டத்தை நடத்தும் புரட்சிகரக் கொள்கை, அந்தக் கொள்கையின் அடிப்படையில் செயல்படும் கட்சி, அதன் திட்டம், செயல்பாடுகள் எல்லாம் ஒற்றைத்தன்மை உள்ளவை, எனவே அவற்றால் மாபெரும் பன்முகத்தன்மை உள்ள மக்கள் திரள் போராட்டங்களை நடத்த முடியாது என்று கூறுகிறார்களா?

 ஆளும் வர்க்கம் அரசு, ராணுவம், காவல்துறை, நீதித்துறை, நிர்வாகம் என மிகுந்த திட்டமிடலுடன், அமைப்புசார்ந்த ஒருங்கிணைப்புடன், அதாவது, தனக்காக வேலை செய்யும் கட்சிகளின் துணையுடன் - அவர்களுடைய அரசாங்கத்தின் மூலமாக - மக்களின் போராட்டங்களை ஒடுக்கும்போது, அதை எதிர்த்த புரட்சிகர மக்களின் செயல்கள் மட்டும் ஒருங்கிணைக்கப்படாமல், ஒற்றை மையம் இல்லாமல், ஒரே குறிக்கோள் இல்லாமல் இருக்க வேண்டும் எனக் கூறுவது, ஆளும் வர்க்க நலனைக் காப்பதற்காக அல்லாமல் வேறெதற்கு? இவ்வாறு ஆளும் வர்க்க நலனுக்கான - ஆளும் வர்க்க சிந்தனையாக - பின் நவீனத்துவம் உள்ளது என்பதை அதை ஆதரித்துப் பேசும் - பின்நவீனத்துவ மயக்கத்தில் இருக்கும் - நண்பர்கள் அவசியம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

 ஆனால் அவர்கள் சொல்கிற இந்தவிதமான பலவிதமான தன்மைகளும் ஏதேனும் ஓர் ஒற்றைத்தன்மையின் அடிப்படையில் இருந்தே இயங்குகின்றன. உலகம் தழுவிய பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கும்- உலகம் முழுக்க அவற்றின் சுரண்டலுக்கு உள்ளாகும் உழைக்கும் மக்களுக்குமான முரண்பாடே - உலகின் பல பகுதி மக்களின் வாழ்க்கையையும், சிந்தனையையும், போராட்டங்களையும் தீர்மானிப்பதாக உள்ளன. அந்தந்த பகுதியின் தன்மைகேற்ப, குறிப்பிட்ட சூழ்நிலைக்கேற்ப வெளிப்படுகின்றன. இந்தியாவில் அது ஒரு மாதிரியாகவும், பிரான்சில் வேறு மாதிரியாகவும் வெளிப்படுகின்றன. இந்தியாவிலேயே கர்நாடகாவில் ஒருமாதிரியாகவும், தமிழ்நாட்டில் வேறு மாதிரியாகவும் வெளிப்படுகின்றன. ஓர் ஒருமையிலிருந்து அதாவது அடிப்படை முரண்பாட்டிலிருந்து, பல பன்மைகள் தோன்றுகின்றன. பலவிதமாக போராட்டங்கள் வெடிக்கின்றன.

 இவ்வாறு பலவிதங்களில் வெளிப்படும் போராட்டங்களையும், பிரச்னைகளையும் தீர்க்க ஒரு புரட்சிகர அமைப்பு, அதற்கான ஒரு புரட்சிகரத் திட்டம் தேவைப்படுகிறது. அந்த ஒற்றைத் தன்மையுள்ள அமைப்பு, பலவிதங்களில் போராடி - அதாவது பன்முகத்தன்மையுடன் போராடி, பிரச்னைகளைத் தீர்க்க முனைகிறது. எனவே ஒற்றைத்தன்மையும் பன்முகத்தன்மைக்கும் இடையில் பிரிக்க முடியாத தடுப்புச் சுவர் எதுவுமில்லை. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானதோ, முரண்பட்டதோ இல்லை.

ஒரு நாட்டு எல்லையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடைபெறும் பலவிதமான போராட்டங்களையும் ஒருங்கிணைத்து நடத்த உலகம் தழுவிய புரட்சிகர அமைப்பின் மையம் தவிர்க்க முடியாமல் வேர் விடும் சூழல் இப்போது உருவாகி வருகிறது. ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்ற முழக்கம் உலகத்துக்குப் புதிதான ஒன்று அல்ல.

 இவ்வாறு ஒற்றைத்தன்மையிலிருந்து பன்முகத்தன்மையும், பன்முகத்தன்மையிலிருந்து ஒற்றைத்தன்மையும் தோன்றுகின்றன. செயல்படுகின்றன. எனவே பின்நவீனத்துவவாதிகளின் ஒற்றைத்தன்மை எதிர்ப்பு, ஆளும் வர்க்கத்தை எதிர்த்து அமைப்புரீதியாகத் திரண்டு ஒன்றுபட்டு போராடக் கூடாது என்ற எண்ணத்திலிருந்துதான் வருகிறது.

பன்முகத்தன்மையை ஆதரிக்கும் பின் நவீனத்துவவாதிகள் ‘சகல அதிகாரத்தையும்’ எதிர்ப்பவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், உலகம் தழுவிய அளவில் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்த முனையும் பன்னாட்டு நிறுவனங்களின் - அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அரசுகளின் - அதிகாரத்தை இதுவரை அவர்கள் எதிர்த்துப் போராடியதாகத் தெரியவில்லை. ஒருவேளை அப்படிப் போராட வேண்டுமானால், ‘ஒரு கொள்கை, ஓர் அமைப்பு, ஒரு திட்டம்’ என்று அவர்கள் சொல்லியதற்கு மாறாக செயல்பட வேண்டியிருக்குமே? இதிலிருந்து தெரிவதென்ன? இருக்கும் சுரண்டல் அமைப்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த பன்முகத்தன்மை பாதுகாக்கும் அல்லவா?

 எனவே பின்நவீனத்துவ அடிப்படையில் வாழ்க்கையைப் பார்ப்பவர்கள், நடைமுறையில் எந்த அளவுக்கு அது பொருந்தி வருகிறது என்று சோதித்துப் பார்க்க வேண்டும். சாதாரணமாக யாருமே பயன்படுத்தாத புதுமொழியில் பேசுவதோ, பழைய ஒன்றை புதிய முறையில் அழைப்பதோ, அறிவியல்பூர்வமான, உண்மையான புரிதலைவிட்டு விலகி, புதிதான முறையில் ஒன்றை விளக்குவதோ, வாழ்க்கையின் துன்ப, துயரங்களை, அடக்குமுறைகளை ஒருபோதும் ஒழிப்பதில்லை. நாம் செய்ய வேண்டியது புதிய மொழியில் பேசுவது, ஒரு விஷயத்தை விளக்குவது அல்ல. மக்களின் நலன் என்கிற அடிப்படையில் உலகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியதே.

*************

அடுத்து மாலெ தீப்பொறி சொல்லும் கருத்துகளைப் பார்ப்போம்.

 * உச்சநீதிமன்றத்திற்கும் மத்திய அரசுக்கும் சில உரசல்கள் இருக்கும் பின்னணியில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்குத் தடை வழங்கி உள்ள பின்னணியில், அரசியல்ரீதியாக விவரம் அறிந்த அனைவர்க்கும், மத்திய அரசு அவசரச் சட்டம் போட வாய்ப்பில்லை என்றும், அப்படி ஒருவேளை போட்டால் திரும்பவும் தடை வழங்கப்படும் என்றும் நன்றாகவே தெரிந்து இருந்தும் ஜல்லிக்கட்டு பிரச்னை மேல் எழுந்து வந்தது.

* தமிழ்நாட்டில், ஆளும் கட்சியில், ஆட்சியில், எண்ணிக்கை பெரும்பான்மை சாதியினரே செல்வாக்கு செலுத்துகின்றனர். அமைச்சர் பதவிகளில், கட்சிப் பொறுப்புக்களில், முக்குலத்தோர், கவுண்டர், வன்னியர் சாதியினரே பெருமளவில் உள்ளனர் என்பதும் நன்கறியப்பட்ட செய்தி. இந்த எண்ணிக்கை சாதிப் பெரும் பான்மையினரின் மீது சாதிய அரசியல் மூலம் செல்வாக்கு செலுத்த விரும்புபவர்கள், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற விஷயத்தை விவாதத்தில் முதன்மை நிலைக்குக் கொண்டு வந்தனர்.

* தமிழ்நாட்டிலும், கவுண்டர், முக்குலத்தோர், வன்னியர் சமூகத்தில் கணிசமான எண்ணிக்கையினர் பாடுபட்டு உழைப்பவர்கள். வளர்ச்சி முன்னேற்றம், அவர்களுக்கும் கைகூடவில்லை. அவர்களது கோபத்தை, தலித்துகள் மீது வெறுப்பு, தமிழர் பண்பாடு ஆகியவற்றில் வெளிப்படுத்த வடிகால் அமைக்கப்படுகிறது. நாகரிக நவீன சமூக ஊடகங்களில், சாதியாதிக்க நஞ்சும் குப்பைகளும் நிறைந்து வழிகின்றன. இந்தப் பின்னணியில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கருத்துருவாக்கத்தைக் காண வேண்டியுள்ளது.

* மிருக வதை தடை அமைப்புக்கள், மனிதர்களைக் காட்டிலும் மிருகங்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தி மனிதர்களையும் மிருகங்களையும் எதிர் எதிராய் நிறுத்தலாம். அவர்களில் சிலருக்கு மேல் நாட்டுப் பணம் கிடைக்கலாம். மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருக்கலாம். இருந்தும், அவர்களது கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாத்திட வேண்டும்தானே.

 * பன்மைத்துவத்தை நாம் எப்போதும் உயர்த்திப் பிடிக்க வேண்டும். பசு எனக்கு வழிபாட்டுக்குரியது என்று சொல்பவர்களுக்கு அக்கம்பக்கமாக, பசு மாட்டு இறைச்சி எங்க ளுக்கு உணவு எனச் சொல்லும் பல கோடி பேரும் வாழ்ந்து வருகின்றனர். இந்துத்துவா பசுவை முன்நிறுத்துவது போல், தமிழ் பண்பாடு என்று சொல்லி காளையை முன்னிறுத்துவது ஏற்கத் தக்கதல்ல.

(மாலெ தீப்பொறி ஜனவரி 16 -31, 2017)

* தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமைகள் பாழாய்ப் போய்க் கொண்டிருந்தன. ரூ.1000, ரூ.500 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு, கிராமப்புற நகர்ப்புற ஏழைகளின் வருமானத்தை வாழ்வைப் பறித்து வந்தது. முற்றி வந்த விவசாய நெருக்கடி, விளை நிலங்களை கொலைக் களமாக்கி வந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் வந்த, பன்னீர்செல்வம் - சசிகலா தலைமை மக்கள் மத்தியில் வெகுவாக அந்நியப்பட்டுக் கிடந்தது. இந்த பிரச்சனைகள் எல்லாம் பின்னே போய் ஜல்லிக்கட்டு பிரச்சனை மட்டுமே அந்த சில நாட்களின் முன்னே நின்றது என்பது அனைவரும் அறிந்ததே.

* அரசும் காவல்துறையும் மக்கள் கூடுவதை, திரள்வதைத் தடுக்கவில்லை, உதவினார்கள் என்பதையும், கவனிக்காமல் இருந்துவிட முடியாது. சமீபத்தில்தான் ரூ.1,000, ரூ.500 செல்லாது எனப் போராடியவர்கள் மண்டையை உடைத்தது காவல்துறை; சேலத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறேன் என ஓர் இளைஞர் சாவுக்குக் காரணம் ஆனது காவல்துறை. எதிர்த்தவர்கள் மூர்க்கமாய்த் தாக்கப்பட்டனர். சிறை செய்யப்பட்டனர். அதே காவல்துறை, திடீரெனத் தன் அணுகுமுறையை அரசுகள் அனுமதியின்றி மாற்றிக் கொள்ளாது என்பது, அரசியல் அரிச்சுவடி தெரிந்தவர்களுக்கும் புரியும்.

* அதே போல், இந்தப் போராட்டத்தைத் துவக்கத்தில் ஒருங்கிணைத்தவர்கள், ஆர்எஸ்எஸ் ஆதரவு மற்றும் ஆதிக்க சாதியினரின் சில சக்திகள்தான் என்பதும், சுலபமாகச் சரி பார்த்துக் கொள்ளக் கூடிய விவரங்களே. தென்கொரிய ஹ§ண்டாய், வடஇந்திய தலைமையகங்கள் கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழில் வர்த்தக நிறுவனங்கள், (அரசு சொன்னபடி) தங்கள் ஊழியர்களுக்கு விடுப்பு அளித்தன; போராட்டத்திற்குச் செல்ல உதவின. கல்விக் கொள்ளையர்கள் பலரும் தங்கள் மாணவர்கள், போராட்டம் நடக்கும் இடம் செல்ல உதவினர். சமீபத்தில் எந்த அரசியல் சமூக நிறுவனமோ சக்தியோ, இந்தப் போராட்டத்திற்கு எதிராக இல்லை. மாணவர்களுக்கு அரசியல் கூடவே கூடாது, ஆகவே ஆகாது என்றவர்கள் எல்லாம், மாணவர்கள் பங்களிப்பைச் சிலாகித்தனர். அடங்க மறுக்க, அத்துமீற, எந்த அவசியமும் அவர்களுக்கு எழவில்லை. இந்தப் போராட்டத்தில் மேல் கீழாக பிளவுண்டுள்ள சமூகத்தை, தலைகீழாகப் புரட்டிப் போடும் எந்த கோரிக்கையும் முன்வந்ததாகத் தெரியவில்லை. இந்தப் பின்னணியில், மிகப் பெரிய எண்ணிக்கையில் இளைஞர்கள் அணி திரண்டிருந்தாலும், அந்த ஒன்றுகூடுதலை, புரட்சி, தமிழ் வசந்தம் என்றெல்லாம் சொல்வது பொருத்தமானதா என யோசிக்க வேண்டும்.

* பெண்களுக்கு எந்த பங்கும் இல்லாத ஜல்லிக்கட்டை, தமிழ்நாட்டின் 5ல் 4 பங்கு பகுதிகளோடு தொடர்பு இல்லாத ஜல்லிக்கட்டை, சாதி ஆதிக்கத்திலிருந்து பிரிக்க முடியாத ஜல்லிக்கட்டை, தமிழர் பாரம்பரியம் என்று சொல்வது, தமிழர் கலாச்சாரம் என்று சொல்வது நிச்சயம் பொருத்தமற்றது.

(மாலெ தீப்பொறி 2017 பிப்ரவரி 01 - 15)

மாலெ தீப்பொறி இதழ்களில் வெளிவந்த கருத்துகளின் சாராம்சமாகக் கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்.

 1. மக்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பவே இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நடத்தினார்கள். அதற்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஆதிக்க சாதியினர் தொடக்கத்தில் ஒருங்கிணைத்தார்கள்.

 எனவே போராட்டத்தை நடத்த அரசே உதவியாக இருந்தது. காவல்துறை தாக்குதல் தொடுக்கவில்லை. பள்ளி, கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக விடுமுறை விட்டதே இதற்குச் சான்று.

 2. ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஆதிக்க சாதியினருக்கானது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதில் பங்கில்லை. ஆட்சி அதிகாரத்தில் ஆதிக்க சாதியினர் பெரும்பான்மையாக உள்ளதால் அவர்களைத் திருப்திபடுத்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை முன்னுக்குக் கொண்டு வந்தார்கள்.

 பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆதிக்க சாதியில் உள்ள உழைக்கும் மக்களுடைய கோபத்தை, தலித்துகள் மீது வெறுப்பு, தமிழர் பண்பாடு ஆகியவற்றில் வெளிப்படுத்த வடிகால் அமைக்கப்படுகிறது. அந்த வடிகால்களில் ஒன்றுதான் ஜல்லிக்கட்டுப் போராட்டம். சாதி ஆதிக்கத்திலிருந்து பிரிக்க முடியாத ஜல்லிக்கட்டை, தமிழர் பாரம்பரியம் என்று சொல்வது, தமிழர் கலாச்சாரம் என்று சொல்வது நிச்சயம் பொருத்தமற்றது.

 3. மிருக வதை தடை அமைப்புக்கள், மனிதர்களைக் காட்டிலும் மிருகங்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தி மனிதர்களையும் மிருகங்களையும் எதிர் எதிராய் நிறுத்தலாம். இருந்தாலும் அவர்களது கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாத்திட வேண்டும்.

மாலெ தீப்பொறியின் கருத்துகளை ஒவ்வொன்றாகப் பரிசீலனை செய்வோம்.

 முதலில் மக்கள் பல்வேறு பிரச்னைகளில் பாதிக்கப்பட்டுக் கிடந்தபோது, மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் போராடத் தயாராக இருந்தபோது, அதைத் திசை திருப்புவதற்காக இந்த ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தை நடத்தினார்கள். அதற்கு அரசே உதவி செய்தது என்ற கருத்தைப் பார்ப்போம்.

 ஆர்.எஸ்.எஸ்.ஸ§ம், மத்திய, மாநில அரசுகளும் இந்தப் போராட்டத்தைத் தூண்டிவிட்டார்கள், தொடங்கினார்கள் என்றால், போராட்டத்தின்போது மோடியின் பாஜக அரசுக்கு எதிராக, பணமதிப்பகற்றல் நடவடிக்கைக்கு எதிராக , பீட்டாவுக்கு எதிராக, பன்னீர் - சசிகலாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், இளைஞிகள் எழுப்பிய முழுக்கங்கள், பேசிய பேச்சுகள், நிகழ்த்திய போராட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பொய்யா?

அவர்களோடு சேர்ந்து குடும்பம் குடும்பமாக ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் எல்லாரும் இரவும், பகலும் நடுக்கும் குளிரில், கொட்டும் பனிப்பொழிவில், வெயிலில் போராட்டங்களில் பங்கு கொண்டு மத்திய, மாநில அரசுகளின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக முழங்கினார்களே, அவை எல்லாம் பொய்யா?

ஆளும் வர்க்கம் தனது நலனுக்காக, திசை திருப்பும் நோக்கில் மறைமுக ஜல்லிக்கட்டு

ஆதரவுப் போராட்டத்தை ஆதரித்தாக மாலெ தீப்பொறி சொல்லும் இந்தப் போராட்டத்தில், எங்கேனும் ஓர் இடத்தில், ஒரு நொடியில், மோடிக்கு ஆதரவாக, அதிமுக அரசுக்கு ஆதரவாக, போராட்டக்களத்தில் ஒரு விரலாவாது அசைந்ததுண்டா? ஒரு குரலாவது முழுங்கியதுண்டா? ஒரு முணுமுணுப்பேனும் கேட்டதுண்டா?

 அப்படியானால் மாலெ தீப்பொறி சொன்ன கருத்து தவறுதானே?

யதார்த்தமான உண்மைகளிலிருந்து முடிவுக்கு வந்தோமானால், மோடி - அ.தி.மு.க.வின் தூண்டுதல், மறைமுக ஆதரவு எல்லாம் உண்மையல்ல என்பது தெரியவரும். உண்மைகளைக் காண மாட்டேன் - உண்மைகள் உறுத்தினாலும் முன் வைத்த கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் - சுயவிமர்சனம் செய்து கொள்ளமாட்டேன் என்று எந்த உண்மையான மார்க்சியவாதியும் சொல்லமாட்டான்.

 அப்படியானால் இந்தப் போராட்டத்தைக் காவல்துறை அனுமதித்தது ஏன்? மாணவர்களை தொடக்கத்திலேயே தாக்காதது ஏன்? ஆளும் வர்க்கம் எப்போதாவது போராட்டத்தை அனுமதிக்குமா? என்று கேட்கலாம்.

 சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வேறு வழியின்றி விதிவிலக்காக இப்படி நிகழ்ந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

 அப்படி என்ன சூழ்நிலை?

 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அரசதிகாரத்தை - அதன் ஒடுக்குமுறையை - உறுதியாகச் செயல்படுத்த தமிழ்நாட்டில் உறுதியான அரசாங்கம் ஏற்படவில்லை என்பது முக்கியமான காரணம் -

 ஏராளமான கறுப்புப் பணத்தை ஆளும் வர்க்கக் கட்சிகள், அரசியல்வாதிகள் மறைமுகமாக மாற்றி வைத்துக் கொண்டதன்பின் - மத்திய அரசுக்கு எதிராக மூச்சை விட்டால் ‘வருமானவரித்துறை நடவடிக்கை’ உறுதி என்பதால், பணமதிப்பகற்றுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கு எதிராக எந்தவிதத்திலும் போராடத் தயாராக இல்லாத நிலை -

 ஏற்கெனவே காவிரி நதிநீர்ப் பிரச்னையில், பணமதிப்பகற்றல் பிரச்னையில் முகம் கிழிந்து போன மோடியின் மத்திய பாஜக அரசு, ஜல்லிக்கட்டுப் பிரச்னையில் தமிழின எதிரி என்று பெயர் வாங்க வேண்டுமா? என்று யோசித்துக் கொண்டிருந்த வேளை -

 மாலெ தீப்பொறி சொன்னபடி, ‘இது ஒரு திசை திருப்பலாக இருந்துவிட்டுப் போகட்டுமே’ என்று ஆளும் கட்சிகள் நினைத்த சூழ்நிலை - அதாவது, வருங்காலத்தில் வர்க்கப் போராட்டத்தைத் திசை திருப்பி, வெறும் இனப்போராட்டமாக நடத்த இந்தப் போராட்டம் விதையூன்றுமே என்று நினைத்த சூழ்நிலை -

முக்கியமாக, மக்களின் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க ஜெயலலிதா இல்லாத சூழ்நிலை -

இவைதான் மாணவர்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஆரம்பத்தில் மூர்க்கத்தனமாக ஆளும் வர்க்கக் கட்சிகள் எதிர்க்காததற்கு காரணங்கள்.

 பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் போன்றவர்கள் எல்லாரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் ‘பேசியது’ எல்லாம், அவர்கள் தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதைக் காட்டிக் கொள்வதற்காகத்தான்.

மத்திய பாஜக அரசின் இந்துத்துவாக் கொள்கையின் ஒரு பகுதியே ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு தடை விதித்தது என்பதை மறைப்பதற்காகத்தான், ஆர்எஸ்எஸ்ஸின் ஆதரவுக் குரல்கள் இந்துத்துவாக் குரல்வளையிலிருந்து பொய்யாக எழும்பின என்பது மார்க்சியப் பார்வையுடன் வாழ்க்கையைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

 மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் போராட மக்கள் தயாராகி வந்தார்கள் என்று சொல்வது நமது நம்பிக்கையாக - விருப்பமாக இருக்கலாம். ஆனால் மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு, ஏடிஎம் வாசல்களில் முணுமுணுப்புடன் காத்துக் கிடப்பதைத் தவிர, மக்களுக்கு வேறு வழியில்லை என்பதாகத்தான் நிலைமை இருந்தது. மக்களைப் பெரிய அளவில் திரட்டிப் போராடக் கூடிய வலு, புரட்சிகர சக்திகள் சிதறிய நிலையில் உள்ளதால், ஒருங்கிணைந்த போராட்டங்களை நடத்துவதற்கான முயற்சிகளும் குறைவே.

 மக்கள் பெரிய அளவில் சார்ந்திருக்கக் கூடிய ஆளும் வர்க்கக் கட்சித் தலைவர்களின் வாய்கள், கறுப்புப் பண நடவடிக்கை பாய்ந்துவிடும் என்ற காரணத்தால், திறக்கப்படாமல் மூடியே கிடந்தன. எனவே மக்கள் வேறு வழியின்றி தங்களுடைய துன்பங்களைப் பிறரிடம் புலம்பித் தீர்த்தார்களே தவிர, போராடுவதற்கு முன்வரவில்லை. அப்படியிருக்க போராடத் தயாராகி வந்த மக்களின் போராட்டத்தைத் திசை திருப்ப ஆளும் கட்சியினர் மறைமுக ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தைத் தூண்டிவிட்டார்கள், ஆரம்பத்தில் தொடங்கி வைத்தார்கள் என்பதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை?

 அடுத்து, ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஆதிக்க சாதியினருக்கானது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதில் பங்கில்லை. சாதி ஆதிக்கத்திலிருந்து பிரிக்க முடியாத ஜல்லிக்கட்டை, தமிழர் பாரம்பரியம் என்று சொல்வது, தமிழர் கலாச்சாரம் என்று சொல்வது நிச்சயம் பொருத்தமற்றது என்ற மாலெ தீப்பொறியின் கருத்தைப் பார்ப்போம்.

 ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஆதிக்க சாதியினருக்கானது என்ற மாலெ தீப்பொறியின் கருத்தில் சிறிது உண்மையுள்ளது.

 ஜல்லிக்கட்டு சிற்றூர்களில் நடக்கும்போது அது ஆதிக்க சாதியினருக்கானதாகவே உள்ளது. ஆதிக்க சாதியினரின் காளைகளைத் தாழ்த்தப்பட்ட மக்கள் பிடிக்க முடியாது. கூடாது. மீறிப் பிடித்தால் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவர்கள். ஏனெனில் சிற்றூர்களில் அவிழ்த்துவிடப்படும் காளைகள் யாருக்குச் சொந்தமானது என்று எல்லாருக்கும் தெரியும். அப்படியே தெரியவில்லை என்றாலும் மைக்கில் அறிவிப்பார்கள். அதுபோல மாடுகளைப் பிடிக்கும் வீரர்களும் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று எல்லாருக்கும் தெரியும். எனவே சிற்றூர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் ஆதிக்க சாதியினரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதாகவே உள்ளன.

 மாணவர்களின், இளைஞர்களின் மகத்தான ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தின் விளைவாக, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபும் ஆகிய ஊர்களில் பெரிய அளவுக்கு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட்டன.

 5.2.17 இல் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 327 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 620 மாடு பிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

9.2.17 இல் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் 354 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 1465 மாடுபிடி வீரர்கள் மாடுகளைப் பிடித்தனர்.

 10.2.17 இல் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் 600 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 1500 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர்.

 இந்த ஜல்லிக்கட்டுகளில் மாடு பிடிக்க வந்த வீரர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ந்த இடத்தில் இருந்து சுமார் 200 கி.மீ. சுற்றளவு உள்ள ஊர்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் என்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்று யாருக்கும் தெரியாது. அதுபோல அவிழ்த்துவிடப்படும் காளைகளின் உரிமையாளர்கள் யார்? அவருடைய ஜாதி என்ன என்று மாடுபிடி வீரர்களுக்குத் தெரியாது. அதனால் எந்தச் சாதிப்பாகுபாடும் இல்லாமல், எல்லாச் சாதியைச் சேர்ந்த மாடு பிடி வீரர்களும் இந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டில் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

 இதிலிருந்து தெரிவதென்ன? ஜல்லிக்கட்டு விளையாட்டின் சாதி ஆதிக்கத்தன்மை மாறிவருகிறது என்பதே. பெரிய அளவில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளில் சாதிப்பாகுபாடுகள் இல்லாமல் போய்விடுகிறது. அல்லது மிகவும் குறைந்துவிட்டது என்பதே.

jallikattu 360

 மேலும் தமிழ்நாட்டில் 50 - 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சாதிய ஜல்லிக்கட்டு இப்போது இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டுகளில் ஆதிக்கசாதியைச் சேர்ந்த சிலரின் காளைகளை தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் அல்ல - ஆதிக்க சாதியினரே கூட பிடிக்க முடியாது. கூடாது. அதாவது, அவர்களுக்குச் சொந்தமான காளைகளை யாருமே பிடிக்கக் கூடாது. அவை யாராலும் பிடிக்கப்படாத வீரக்காளைகளாகவே இருக்க வேண்டும். அப்படி யாராவது பிடித்துவிட்டால், ‘‘என் மாட்டைப் பிடிக்க உனக்கு எவ்வளவு தைரியம்? ‘‘ என்று கம்புகளைச் சுழற்றிக் கொண்டு அடிக்க வந்துவிடுவார்கள். ஆனால் இப்போது நிலைமை எவ்வளவு மாறியிருக்கிறது?

 கிரிக்கெட் விளையாட்டைப் போல ஜல்லிக்கட்டு விளையாட்டையும் கார்பரேட் நிறுவனங்கள் ஒருவேளை கையிலெடுத்துக் கொண்டு, போட்டிகளை நடத்தி காசு சம்பாதிக்க நினைத்தால், இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழ்ப் பண்பாடு என்பதில் இருந்து மாறி, கார்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்கு உதவும் கருவியாக மாறிவிடாதா? எனவே எந்தவொரு விஷயத்தையும் ஒரு குறிப்பிட்ட காலத்தின், ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிப் போக்கின், ஒரு குறிப்பிட்ட தன்மையில் இருந்தே ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

 நமது வாழ்வில் ஜாதி ஆதிக்கம் என்பது இறுகிப் போன ஒன்றல்ல. அது பல மாற்றங்களுக்கு உட்பட்டே வந்திருக்கிறது. முற்றிலும் ஜாதி ஆதிக்கத்தை ஒழிக்க இன்னும் நீண்டகாலம் போராட வேண்டியுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஜாதி ஆதிக்கத்தன்மையை எல்லா இடங்களிலும் நடக்கும் ஜல்லிக்கட்டுகளுக்கு ஒரே மாதிரி பொருத்திப் பார்க்க முடியாது. அதையே அளவுகோலாகக் கொண்டு முற்றிலும் ஜல்லிக்கட்டை எதிர்க்கவும் முடியாது. ஒதுக்கவும் முடியாது. அப்படிச் செய்வது இயக்கமறுப்புக் கண்ணோட்டம் ஆகும். மார்க்சியப் பார்வை ஆகாது.

 ஜல்லிக்கட்டு ஆதிக்க சாதியினருக்கானது என்ற கருத்தின் அடிப்படையில் இருந்து கிளம்பிய, ‘ஆட்சி அதிகாரத்தில் ஆதிக்க சாதியினர் பெரும்பான்மையாக உள்ளதால் அவர்களைத் திருப்திபடுத்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை முன்னுக்குக் கொண்டு வந்தார்கள். பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆதிக்க சாதியில் உள்ள உழைக்கும் மக்களுடைய கோபத்தை, தலித்துகள் மீது வெறுப்பு, தமிழர் பண்பாடு ஆகியவற்றில் வெளிப்படுத்த வடிகால் அமைக்கப்படுகிறது. அந்த வடிகால்களில் ஒன்றுதான் ஜல்லிக்கட்டுப் போராட்டம்’ என்பன போன்ற பல கருத்துகளை மாலெ தீப்பொறி மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

 உண்மையில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்த போராட்டம். அந்தக் கொள்கைகளால் பலவிதங்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் குமுறலை வெளிக்காட்ட இந்தப் போராட்டம் உதவியது. இந்தக் கண்ணோட்டத்திலிருந்து இந்தப் போரட்டத்தைப் புரிந்து கொள்ள முடிந்தால், புரட்சியாளர்களுக்கு இந்தப் போராட்டம் கற்றுக் கொடுப்பவை ஏராளமாக இருக்கின்றன.

அடுத்து மாலெ தீப்பொறி மிருகவதை தடை அமைப்புகள் பற்றி கூறியுள்ள கருத்துகளைப் பார்ப்போம்.

 ‘மிருக வதை தடை அமைப்புக்கள், மனிதர்களைக் காட்டிலும் மிருகங்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தி மனிதர்களையும் மிருகங்களையும் எதிர் எதிராய் நிறுத்தலாம். அவர்களில் சிலருக்கு மேல் நாட்டுப் பணம் கிடைக்கலாம். மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருக்கலாம். இருந்தும், அவர்களது கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாத்திட வேண்டும்தானே?’ என்று மாலெ தீப்பொறி கேட்கிறது.

 என்ன மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் என்பது பற்றிய விளக்கம் எதுவுமில்லை. மனிதர்களையும் மிருகங்களையும் எதிர் எதிராக நிறுத்துவதால் ஏற்படும் விளைவுகள் எவை என்ற விளக்கமும் இல்லை. ஆனால் அவர்களுடைய கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும். அதாவது, பீட்டாவைத் தடை செய் என்று முழங்கக் கூடாது. அதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதுதானே?

சரி, இந்த பீட்டா அமைப்பின் செயல்கள் எதை நோக்கி? அதைப் பற்றிய பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் என்ன? என்ற விளக்கங்கள் எதுவுமில்லாமல் கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுகிறது மாலெ தீப்பொறி.

 ‘ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்களில் முக்கியமானது, பீட்டாவை தடை செய் என்பதாகும். 1980 இல் றிமீஷீஜீறீமீ யீஷீக்ஷீ tலீமீ ணிtலீவீநீணீறீ ஜிக்ஷீமீணீtனீமீஸீt ஷீயீ கிஸீவீனீணீறீs (றிணிஜிகி) கைவிடப்படும் வளர்ப்புப் பிராணிகளுக்கு ஆதரவு தரும் அமைப்பாக அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் தொடங்கினார்கள்.

 ஆனால் பிராணிகளுக்கு ஆதரவு தர ஒரு காப்பகமோ ஒரு சிறு அறையோ கூட மொத்த அமெரிக்காவில் பீட்டாவிடம் இல்லை. நகர வீதிகளில் உலவும் பிராணிகளை 15 நாட்கள் வரை அடைத்து வைத்துப் பராமரிப்பார்கள். யாரும் அந்தப் பிராணிகளுக்குப் பொறுப்பேற்கவில்லை என்றால் உடன் கொன்றுவிடுவார்கள். இப்படியாக இதுவரை 40,000 பிராணிகளைக் கொன்றுள்ளது பீட்டா.

 இந்திய மற்றும் அமெரிக்க வாழ் பிராமணக் குடும்பங்கள்தான் பீட்டாவை வழிநடத்துகிறார்கள். இந்தியாவிலும் இந்த அமைப்பு முழுவதும் பிராமணர்களே. அதிலும் பேட்டி ஒன்றில் ராதாராஜன் தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்தான் என்பதைப் பெருமிதமாகக் குறிப்பிடுகிறார். மிருக நலன் மட்டுமின்றி, உலகத்தையே சைவ உணவுப் பழக்கத்துக்கு மாற்றுவது இவர்களின் முதன்மை நோக்கங்களில் ஒன்று.

 இந்த சைவ விளம்பரங்களில் நடிக்க பல லட்சம் ரூபாயை விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்களுக்கு வாரி வழங்குகிறார்கள்.

இந்தியாவில் இயங்கி வந்த 21 சர்க்கஸ் நிறுவனங்களுக்குத் தடை வாங்கியிருக்கிறது பீட்டா. அதில் இருந்த மிருகங்கள் எல்லாம் சோறு தண்ணீர் இல்லாமல் நிர்கதியாய் நிற்கின்றன. மறுபுறம் இந்த மிருகங்களைக் காக்கிறோம் என்று வெளிநாட்டில் பெரும் தொகைகளைப் பெறுகிறார்கள்.

 அதே வேளையில் குதிரைப் பந்தயங்கள் குறித்து ராதாராஜன் எங்கும் பேசுவதில்லை. ஏன் என்றால் அது பணக்காரர்களின் விளையாட்டு.

பாரம்பரிய விதைகளை அழித்துச் சந்தையைப் பன்னாட்டு நிறுவனங்கள் தன் வசப்படுத்தியதுபோல் மாடு - பால் - இறைச்சி சந்தையைத் தன் வசப்படுத்த அந்த நிறுவனங்களுக்குக் களம் அமைத்து தருகிறது பீட்டா என்கிற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

மிருகங்களின் மீது பாசம் என்கிற பெயரில் நாங்கள் இந்த உலகையே சைவ உணவுப் பழக்கத்திற்கு கொண்டு வருவோம் என்ற முடிவுடன்தான் களத்தில் இறங்கி இருக்கிறார்கள். ‘இப்ப மாட்டை குறிவைத்திருக்கிறோம். அடுத்து ஆடு, கோழி என எல்லாம் எங்கள் அஜெண்டாவில் இருக்கு’ என ஒரு பேட்டியில் கூறுகிறார் பீட்டாவைச் சேர்ந்த ராதாராஜன். இவர்கள் 10 கோடி ரூபாய் செலவழித்து உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்குத் தடை வாங்கியிருக்கிறார்கள்’

(‘மக்கள் எழுச்சியின் தருணங்கள் - அ.முத்துக்கிருஷ்ணன் - உயிர்மை பிப்ரவரி 2017)

 ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்துவிட்டால் ஜல்லிக்கட்டுக்காக காளைகளை வளர்ப்பவர்கள் குறைந்துவிடுவார்கள். ஒரு கட்டத்தில் ஜல்லிக்கட்டு காளைகளே இல்லாமல் போய்விடும். நாட்டு மாடுகளின் இனப் பெருக்கத்துக்கு வாய்ப்பில்லாமல், நாட்டு மாடுகளின் இனமே அழிந்துவிடும். அதற்குப் பின்பு உலகம் முழுவதும் பன்னாட்டு நிறுவனங்கள் பால், மாடு, மாட்டுத் தீவனம், மருந்துகள், இறைச்சி வணிகம் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள். மிருக வதை தடை அமைப்புகளின் நடவடிக்கைகள் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்துக்காக இருப்பதால்தான் அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைக்கிறது. அப்படியானால் இந்த மிருகவதை தடை அமைப்புகளை எதிர்க்க வேண்டியது புரட்சிகர அமைப்புகளின் கடமை இல்லையா? அவற்றைத் தடை செய் என்று கோரிக்கை வைப்பது நியாயமான ஒன்றல்லவா? அப்படியிருக்க மிருகவதை தடை அமைப்புகளின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று பேசுவது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை.

மேலும் மிருகவதை தடை அமைப்புகளுடைய கருத்து வெறும் கருத்தாக இருக்கும் வரை அந்தச் சுதந்திரத்தைப் பாதுகாத்து, நாமும் கூட நமது எதிர்கருத்துகளை விவாதத்துக்கு வைக்கலாம். ஆனால் உலகம் முழுவதும் அவர்கள் செயலில் இறங்கி மிருக வதை என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு ஆதரவாகச் செயல்படும்போது, அதைத் தடை செய் என்று சொல்வது கருத்துச் சுதந்திரத்தை மறுப்பதா? அல்லது எதிரிகளை எதிர்த்த போராட்டத்தில் அது ஓர் அடி வைப்பா?

 ‘பன்மைத்துவத்தை நாம் எப்போதும் உயர்த்திப் பிடிக்க வேண்டும். பசு எனக்கு வழிபாட்டுக்குரியது என்று சொல்பவர்களுக்கு அக்கம்பக்கமாக பசு மாட்டி இறைச்சி எங்களுக்கு உணவு எனச் சொல்லும் பல கோடி பேரும் வாழ்ந்து வருகிறார்கள். இந்துத்துவா பசுவை முன்னிறுத்துவதைப் போல், தமிழ்ப் பண்பாடு என்று சொல்லி காளையை முன்னிறுத்துவது ஏற்கத் தக்கதல்ல’ என்கிறது மாலெ தீப்பொறி.

 பன்மைத்துவத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். சரி. பசு எனக்கு வழிபாட்டுக்குரியது என்று சொல்கிறார்கள். அதுவும் சரி. சொல்வது யார்? இந்துத்துவப் பண்பாட்டைத் தூக்கிப் பிடிப்பவர்கள். நாம் பன்மைத்துவத்துவத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதால் இந்துத்துவாவும் சரி. ஆனால், தமிழ் பண்பாடு என்று சொல்லி காளையை முன்னிறுத்துவது மட்டும் ஏற்கத் தக்கதல்ல. இந்தப் பன்மைத்துவத்தில் தமிழ் பண்பாட்டுக்கு மட்டும் இடம் இல்லை.

 மாலெ தீப்பொறி இந்தப் பிரச்னையில் யார் பின் நிற்கிறது? என்பதை வெளிப்படையாகத் தெரிகிறது. பிராமண, ஆர்.எஸ்.எஸ். ராதாராஜனின் பின்னால் நிற்கக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.

*********

 பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் பெரிய அளவுக்கு இந்தப் போராட்டத்துக்கு விளம்பரம் அளித்தன. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக பலர் நினைத்தார்கள். உண்மையில் ‘பரபரப்பான செய்திகளை’ தரும் நோக்கத்தில்தான், ஊடகங்கள் இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

 போராட்ட நிகழ்வின்போது ‘வேண்டும் வேண்டும்... ஜல்லிக்கட்டு வேண்டும்’, ‘பீட்டாவைத் தடை செய்’ போன்ற முழக்கங்களை மட்டுமே ஊடகங்கள் போராட்டக்களங்களில் இருந்து பரந்துபட்ட மக்களின் மீது வீசியெறிந்தன.

மத்திய, மாநில அரசுகளின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான முழக்கங்கள், பதாகைகள், நேர்காணல்கள் எதுவும் ஊடகங்களில் இடம் பெறவில்லை. இந்தப் போராட்டத்தை ஜல்லிக்கட்டு எல்லைக்குள்ளேயே நிறுத்திவிடுவதில் ஊடகங்கள் திட்டவட்டமாக இருந்தன. ஆளும் வர்க்க நலனுக்காக, ஆளும் வர்க்கத்தின் பெரும் முதலாளிகளால் நடத்தப்படும் ஊடகங்களில் இதைவிட நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

 அதேசமயம் முதலமைச்சர் பன்னீர் செல்வம் தில்லியில் அவசரச் சட்டம் ஒன்றைத் தயார் செய்து கொண்டு வந்ததும் ஊடகங்களின் நிலை தலை கீழாக மாறியது. அதுவரை அமைதியாக காந்திய வழியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தீவிரவாதிகள் புகுந்துவிட்டதாக ஊடகங்கள் சொல்ல ஆரம்பித்தன. அப்படிப்பட்ட கருத்துகளைச் சொல்பவர்களின் நேர்காணல்கள் இடம் பெற்றன.

போராட்ட இறுதிநாட்களின் போது வழக்கமான அவர்களின் ஆளும் வர்க்கச் சார்பு முழுமையாக வெளிப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் புகுந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது.

 தில்லியிலிருந்து முதலமைச்சர் பன்னீர்செல்வம் தயாரித்துக் கொண்டு வந்த அவசரச் சட்டம், சட்டமன்றத்தில் நிறைவேறிய விலங்கு வதை தடுப்புச் சட்டத் திருத்தங்கள் எல்லாம் தேவையான அளவுக்கு விளம்பரப்படுத்தப்பட்டன.

 போராடியவர்களின் மீதும், போராடியவர்களுக்கு உதவிய மீனவ மக்களின் மீதும் காவல்துறை கட்டவழித்துவிட்ட தாக்குதல்களை, அ.தி.மு.க. ஆட்சிக்கெதிரான தி.மு.க. தொலைக்காட்சிகளைத் தவிர, பிற தொலைக்காட்சிகள் போதிய அழுத்தத்துடன் காட்டவில்லை.

 ‘லேசான தடியடி நடத்தி’ போலீசார் கூட்டத்தைக் கலைத்ததாக தந்தி டிவி சொன்னது.

இன்னொன்றையும் பார்க்க வேண்டும்.

 தமிழ் நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் பற்றி மிகப் பெரிய அளவில் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த வேளையில், ஆங்கில நாளிதழ்கள் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டிலிருந்து வெளிவரக் கூடிய ஆங்கில வார இதழ்கள் உட்பட பல ஆங்கில வார இதழ்கள் இப்படி ஒரு விஷயம் உலகத்தில் நடந்திருப்பதாகச் சொல்லவில்லை.

 ஊடகங்கள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் கைகளில் இருப்பதினால், மக்களின் கருத்துகளை ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்குச் சாதகமாக அவர்கள் உருவாக்குகின்றனர். மக்களின் போராட்டங்களை அவர்கள் மூடி மறைக்கின்றனர். பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு அவற்றைத் தெரியவிடாமல் தடுத்துவிடுகின்றனர். ஆளும் வர்க்க நலனுக்கான கருத்துகளைத் திட்டமிட்டுப் பரப்புகின்றனர். இந்நிலையில் மக்களின் நலனுக்காகப் போராடுபவர்கள், கருத்துகளைப் பரப்புவதற்கு என்ன வழிமுறைகளைக் கையாளப் போகிறோம்? என்பது ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.

 சமூக ஊடகங்களை எல்லாரும் பயன்படுத்த முடியும் என்பதால், ஒவ்வொருவரும் தாம் நினைத்த எல்லாவற்றையும் சமூக ஊடகங்களில் கொட்டித் தீர்த்தனர். தீர்க்கின்றனர்.

 சமூக ஊடகங்களினால்தான் இந்த மாபெரும் எழுச்சி சாத்தியமானது என்று நாம் ஒருபுறம் சொல்லிக் கொண்டாலும், இந்த சமூக ஊடகங்கள் உலகு தழுவியுள்ள ஆளும் வர்க்கத்தின் கைகளில்தான் உள்ளன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

 அவர்கள் நினைத்தால் சமூக ஊடகங்களை ஒரு நொடியில் முடக்கிவிட முடியும்.

மேலும் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிடுபவர்களைப் பற்றிய விவரங்களை அவர்களால் திரட்ட முடியும். தேவையானால் சமூக ஊடகங்களில் பங்கேற்பவர்களின் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட முடியும் என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. புரட்சிகர சக்திகள் ஒருவித எச்சரிக்கை உணர்வுடனேயே இந்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும்.

******************

மாணவர்களின், இளைஞர்களின் தன்னெழுச்சியான இந்த ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தை மக்களுக்கான சமூக மாறுதலை விரும்புகிறவர்கள் எப்படிப் பார்க்க வேண்டும்? நாம் ஏற்கெனவே சொல்லியபடி, இது வெறும் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் மட்டுமில்லை. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்த போராட்டம். குமுறிக் கொண்டிருந்த மக்களின் எதிர்ப்பு, வெளிக்கிளம்ப இந்த ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் ஒரு வாய்ப்பு. இந்தப் போராட்டம் புரட்சியாளர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

 உலக அளவில், நாட்டு அளவில் சரியான புரட்சிகரக் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ள நிலையில், உலகெங்கும் உலகமய, தாராளமயத்தின் ஆதிக்கக் கொடுங்கரங்கள் மக்களை அடக்கி ஆளும் நிலையில், புரட்சியை நேசித்த அனைவரும் சோர்ந்திருந்த வேளையில், பொங்கிப் பிரவாகித்து புது ஒளிபாய்ச்சிய இந்தப் போராட்டம், நமது நம்பிக்கையின் ஊற்றுக்கண்களை அதிரடியாகத் திறந்துவிட்டது. கடந்த சில பத்தாண்டுகளில் நாம் காணாத மாபெரும் எழுச்சி இது. இந்த எழுச்சியைப் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

 எந்த வினைக்கும் எதிர்வினை உண்டு. தொடர்ந்து உழைக்கும் மக்களை ஆளும் வர்க்கம் அடக்கிக் கொண்டிருக்க முடியாது. மக்கள் அடக்குமுறையை எந்தவகையிலாவது எதிர்த்தே தீருவார்கள் என்ற உண்மையை உரத்துச் சொன்னது, இந்தப் போராட்டம்.

 ஆளும் வர்க்கத்தின் பல்வேறு கருத்தியல், பண்பாட்டு தாக்கங்களுக்கு உள்ளானவர்களாக மக்கள் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவற்றை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, பொதுப்பிரச்னைகளுக்காக ஒன்று திரள்வார்கள் என்பதை இந்தப் போராட்டம் எடுத்துக் காட்டியது.

 தமிழன உணர்வுள்ளவர்கள், இந்துத்துவா கொள்கையை எதிர்ப்பவர்கள், மத்திய - மாநில அரசுகளின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்கிற புரட்சியாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்கள். இயற்கை வேளாண்மை சிந்தனை உள்ளவர்கள், பக்தர்கள், கடவுளை நம்பாதவர்கள், நடிகர்களின் தீவிர ரசிகர்கள் என எல்லாரும் பொதுவெளியில் பொதுப் பிரச்னைகளுக்காக அணிதிரண்டார்கள்.

 இளைஞர்கள் என்றாலே பொறுப்பற்றவர்கள். பெண்களைக் கேலி செய்பவர்கள், குடித்துவிட்டு பைக்கை தாறுமாறாக ஒட்டுபவர்கள், சமூக அக்கறையற்றவர்கள் என்று பலரும் கருதிக் கொண்டிருந்த நிலைக்கு மாறாக, பொதுப் பிரச்னைக்காக அவர்கள் ஒன்றிணைந்து போராடுவார்கள், புதிய கலாசாரத்தை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கையை இந்தப் போராட்டம் ஏற்படுத்தியது.

 போராட்டத்தின்போது, போராடியவர்களின் உணவுத் தேவை, இதர தேவைகளை முறையாக, சிறப்பாக நிறைவேற்றப்பட்டன. போக்குவரத்து இளைஞர்களால் முறைப்படுத்தப்பட்டது. போராட்டக்களத்தைத் தூய்மையாக வைத்துக் கொண்டனர். எந்தவிதமான ஒழுங்கின்மையும் இல்லை. இவை எல்லாம் போராட்டச் சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப போராளிகள் தம்மை தகவமைத்துக் கொள்வார்கள் என்பதையே நமக்குச் சொன்னது.

 இந்தப் போராட்டத்தில் பெண்கள் கலந்து கொண்டது, ஆண்களுக்கு நிகராக அவர்கள் முழக்கமிட்டது, சிலம்பு சுற்றியது, காவலர்கள் போராட்டக்காரர்களைத் தாக்கியபோது எதிர்த்துச் சீறியது இவையெல்லாம் அண்மைக்காலங்களில் யாரும் பார்க்காதவை. புதுமைப்பெண், புரட்சிப் பெண் என்று அவர்களுக்குப் பட்டங்களைச் சூட்டி அவர்களை இன்னும் பெண்களாகப் பிரித்துப் பார்க்கும் பார்வையை இந்தப் போராட்டம் தூள் தூளாக்கிவிட்டது. போராட்டத்தின்போது பெண்கள், ஆண்கள் என்ற வேறுபாடில்லை. எல்லாரும் போராளிகளே என்ற நிலையை இந்தப் போராட்டம் உருவாக்கிவிட்டது.

 இளைஞர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் குடும்பம் குடும்பமாக முதியவர்கள் உட்பட எல்லாரும் கலந்து கொண்டது, போராட்டத் தீ பற்றிக் கொண்டால், அது சகல திசைகளிலும் பரவி ஆளும் வர்க்கத்தின் அடிப்படைகளை கருக்கிவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

 போராட்டத்தின் கடைசி நாட்களில் காவல்துறை போராடிய இளைஞர்களைத் தாக்கிய விரட்டிபோது சென்னையில் தாக்குதலுக்குள்ளான இளைஞர்களைப் பாதுகாத்தனர் ஏழை மீனவ மக்கள். அதனால் காவல்துறை அவர்களையும் தாக்கியது. வாகனங்களுக்கும், குடிசைகளுக்கும் தீ வைத்தது. காவல்துறை போராடிய இளைஞர்களை கடல் அலையருகே விரட்டியபோது, அவர்களுக்குத் தேவையான உணவு, நீர் போன்றவற்றைத் தடுத்தபோது, கடல்வழியாக உணவு, நீரைக் கொண்டு வந்து தந்து மீனவ மக்கள் உதவினார்கள். போராட்ட காலங்களில் மக்கள் பலவகையிலும் உதவுவார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

 எல்லாவற்றுக்கும் மேலாக, சரியான அரசியல் விழிப்புணர்வு இல்லாத போதிலும், பனியிலும் வெயிலிலும் போராடிய இந்த இளைஞர்களுக்கு, சரியான அரசியல் விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்துவது, அவர்களுடனான தொடர்புகளை எப்படி உருவாக்குவது? வலுப்படுத்துவது? தொடர்ந்த அரசியல் போராட்டங்களில் அவர்களை எப்படி பங்கேற்கச் செய்வது? என்பதெல்லாம், புரட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவையாகும்.

ஏனெனில், இந்தப் போராட்டம் நம்பிக்கையின் விதைகளை மிகவும் அற்புதமாக எல்லா இடங்களிலும், எல்லா மனதுகளிலும் விதைத்துவிட்டது. அவற்றை வளர்த்தெடுப்பது நமது கைகளில்தான் உள்ளது.