Jallikattu 625

தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தி, தீர்வு காண வேண்டிய தலையாய சிக்கல்கள் ஒன்றிரண்டு அல்ல. திங்களுக்கு ஒரு சிக்கல் தமிழ்நாட்டின் போராட்ட நிகழ்ச்சி நிரலில் இருந்துகொண்டே வருகின்றது. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நேர்மையான விசாரணை, தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட எழுவர் விடுதலை, முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி போன்ற நீர்ப் பங்கீட்டுச் சிக்கல்கள், அணு உலை, மீத்தேன், கெயில், நியூட்ரினோ ஆகிய திட்டங்களுக்கான எதிர்ப்புகள், ஆணவப் படுகொலை, சாதியக்கொடுமை இவற்றிற்கான எதிர்வினைகள், தற்போதைய புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான நிகழ்வுகள்… இப்படி, நாளொரு போராட்டம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டுதான் உள்ளன.

இவை எல்லாவற்றையும் திசை திருப்புவதற்காக திட்டமிட்டே உருவாக்கப்பட்ட புதிய நிகழ்ச்சி நிரல் தான் ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கும், அதற்கு நீதிமன்றம் வழங்கிய தடையும் இருக்கக் கூடும் என்றும் எண்ண வேண்டியுள்ளது. இத் தடையை நீக்க நடுவண் அரசு உறுதியான முடிவெடுக்காமல் கபட நாடகம் ஆடிவரும் செயல்களும் இந்த ஐயத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

ஜல்லிக்கட்டுத் தடையை நீக்குவதற்கு நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி போட்டியை நடத்துபவர்களும், போட்டியில் அதீத ஆர்வம் உள்ளவர்களும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் இப்படிப்பட்டவர்களின் போராட்டங்கள் மிகப் பெரிய வலிமையான போராட்டங்களாக கடந்த ஆண்டுகளில் உருவாகவில்லை. தற்போது தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டுள்ளன.

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழ்நாட்டு இளைஞர்கள் வலைதளங்கள், சமூக ஊடகங்கள் மூலமாக கருத்துகளைப் பகிர்வதும், ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்காத நகரங்களில் கூட ஆயிரக்கணக்கில் ஒன்று கூடுவதும் போராடுவதும் தன்னியல்பாக கடந்த ஒரு வாரமாக நடந்து வருவதைப் பார்க்க முடிகிறது. இதன் காரணமாக இதுவரையில் ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராகப் பேசாதவர்களும் கூட தற்போது ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வேண்டும் என்று பேசி வருகிறார்கள்.

மற்றொரு புறம் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை மதவாத எதிர்ப்பு, தலித் மற்றும் சிறுபான்மையினர் உரிமை, திராவிட இன அரசியல், தமிழ்த்தேசிய அரசியல் எதிர்ப்பு போன்ற கொள்கைகளைக் கொண்ட சிலர், ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை எதிர்மறைக் கண்ணோட்டத்தோடு விமர்சிப்பதும் நடக்கிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக மக்கள் அனைவருக்குமான பண்பாட்டு விளையாட்டாகவும், வீர விளையாட்டாகவும் ஏற்க முடியுமா? என்ற கேள்வி இவர்களால் எழுப்பப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாகத் தற்போது போராடிக் கொண்டிருப்பவர்கள் ஆணவக் கொலை, தலித் மக்கள் மீதான கொடுமைகள் போன்றவற்றிற்கு எதிராக ஏன் உறுதியுடன் போராடவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகளை இப்படிப்பட்ட அமைப்பினர் முன்வைக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சூழ்நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தவேண்டும் என்று போராடுவது தான் முதன்மையானதா? என்ற நியாயமான குரல்கள் ஒலிப்பதையும் கேட்க முடிகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியை ஆதரிப்பவர்களும் தமிழர்களின் வீரத்தை உலகிற்கு காட்டும் பண்பாட்டு அடையாளமாக ஜல்லிக்கட்டு விளையாட்டைப் போற்றுபவர்களும் இப்படிப்பட்ட விமர்சனங்களைக் கண்டு கொள்ளாமல் விட முடியாது.

இத்தகைய முரண்பாடுகளுக்கு நேர்மையான, ஆக்கப்பூர்வமான விடை காண வேண்டியது தமிழர் நலன், ஒற்றுமை, வாழ்வு, மொழி, பண்பாடு ஆகியவற்றைக் காப்பதில் உண்மையான அக்கறையும் செயலும் கொண்டவர்களின் தலையாய கடமையாகும். இந்தக் கடமையுணர்விலிருந்தும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஆதரவை தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமைக் குறியீடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் இருந்தும் தமிழர் என்ற பொதுநிலையில் இருந்தும் சில விமர்சனங்களுக்குப் நடுநிலையோடு பதில் அளிக்க வேண்டியுள்ளது.

சாதிக் கட்டமைப்பின் செல்வாக்கின் கீழ் உள்ள விவசாய சமூகத்தின் பண்பாடாக ஜல்லிக்கட்டு இருக்கிறது. வெவ்வேறு வடிவங்களில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் நடைபெறும் நிகழ்வு இது. எனவே, ஜல்லிக்கட்டை ஒட்டு மொத்தத் தமிழர்களின் பண்பாடு என்று பொதுமைப்படுத்துவது சரியானதல்ல என்று ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள் பேசுகிறார்கள். நுட்பமாக நோக்கும் பொழுது இந்த வாதங்களை ஜல்லிக்கட்டை எதிர்ப்பதற்கான வாதங்களாக மட்டும் பார்க்க முடியவில்லை. தமிழ் இனம், தமிழர் பண்பாடு, தமிழர் தேசியம் ஆகிய குறியீடுகளுக்கு எதிராக இருப்பவர்களின் வாதங்களாகவும் தமிழர் பண்பாடு என்ற பெயரில் பொதுமைத் தன்மை உருவாவதை விரும்பாதவர்களின் வாதங்களாகவும் இவற்றை உணர முடிகிறது.

தமிழ் இனம் என்ற பொதுமைத் தன்மைக்குள் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒன்றிணைவதற்கு மாறாக தமிழர்கள் பிரிந்து கிடக்க வேண்டும் என்ற உள்ளுணர்வின் வெளிப்பாடாக இது இருக்கும் என்றே கருத வேண்டியுள்ளது. எனவே தான் ஜல்லிக்கட்டு நிகழ்வானது சாதிய வட்டத்தைக் கடந்து, தமிழ்ப் பண்பாடு என்ற பொதுமை நிகழ்வாக இன்று உருவாவதை விரும்பாதவர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான தடையை ஆதரிக்கிறார்கள்.

திருவள்ளுவரின் அறிவு ஒட்டுமொத்த தமிழர்களின் பங்களிப்பாக உலகிற்கு வழங்கப்பட்டிருப்பதாகத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமிதத்தோடு போற்றுகிறோம். இதைப் போலவே ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டும் தமிழ்நாட்டில் எங்கோ இருக்கின்ற தமிழ் இளைஞர்கள் உலகிற்கு அளிக்கும் தமிழர் பண்பாட்டுக் கொடையாக நாம் போற்ற வேண்டும். தமிழர்களின் வீர விளையாட்டையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் கிரிக்கெட் விளையாட்டோடு ஒப்பிட்டு சிலர் பேசுவது முட்டாள்தனமானது

ஜல்லிக்கட்டு என்பது குறிப்பிட்ட சாதிய விவசாய சமூகத்தின் குறியீடு என்ற குறுகிய வட்டத்திற்குள் எல்லோரும் நின்று பார்க்க வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் விரும்புகிறார்கள். தமிழ்ப் பண்பாடு என்ற பொதுமைக் கலாச்சாரம் வளர வேண்டும் என்று விரும்புவர்கள் ஜல்லிக்கட்டை ஒட்டு மொத்த தமிழரின் வீர விளையாட்டாகப் பார்க்கிறார்கள். எனவே ஜல்லிக்கட்டில் உருவாகியுள்ள முரண்பாடு தமிழ்ப் பண்பாட்டுப் பொதுமை வளர வேண்டும் என்று கருதுபவர்களுக்கும், வளரக்கூடாது என்று கருதுபவர்களுக்குமான கருத்துமோதலாகப் பார்க்கப்பட வேண்டும்.

சாதியின் பிடி இருக்கும் எந்த ஒன்றையும் சாதி என்ற பண்டைய பிடியிலிருந்து விடுவிக்காமல், தமிழ் என்பது பொது அடையாளமாக, எல்லாத் தமிழருக்குமானதாக ஒரு நாளும் மாறாது என்று சொல்பவர்கள், ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு பொது அடையாளமாக இன்று மாறியிருப்பதை ஏற்க மறுப்பது முரண்பாடாக உள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு இன்று மிகப்பெரிய அளவிற்கு ஆதரவு எழுந்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் இளைஞர்களையும், அவர்களின் உணர்வுகளை வெளிக்கொணர்ந்த ஊடகங்களையும் சேர்த்தே வசைபாடுகிறார்கள். தமிழர் மானம், தன்மானம் போன்ற வெற்று முழக்கங்களில் அரசியல் புரிதல் அற்ற இளைஞர்களை நவீன உத்திகளின் மூலம் அணி திரட்டுகின்றனர், ஊடகங்களும் வணிகக் காரணங்களுக்காக அவற்றை ஊதிப் பெரிதாக்குகின்றன என்றெல்லாம் ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொள்வது வெட்கக்கேடாக உள்ளது. தமிழர் மானம், தன்மானம் என்று கூறுவது வெற்று முழக்கங்கள் என்றும், போராடிய இளைஞர்களை அரசியல் அற்ற இளைஞர்கள் என்றும் கொச்சைப்படுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விமர்சனங்கள் அல்ல. இளைஞர்களின் அரசியலை அளவீடு செய்யும் அளவிற்கு நாம் அரசியல் முதிர்ச்சி பெற்றுவிட்டோம் என்று நமக்கு நாமே தகுதிப் பட்டம் சூட்டிக்கொள்வதற்கு யாருக்கும் தகுதி இருக்க முடியாது.

தலித் உரிமை பேசும் திருமாவளவன் ஜல்லிக்கட்டை ஆதரிப்பதையும் ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் எதிர்க்கிறார்கள். திருமாவளவன் அனைத்து தமிழர்களின் தலைவர் என்ற தன் நிலையை எட்ட ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார் என்றும் குற்றம் சுமத்துகிறார்கள். ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் தலித் தலைவராக இருந்தாலும் தமிழர் தலைவர் என்ற நிலையை எட்ட முடியும் என்று ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் இங்கே மனதளவில் ஒப்புக்கொள்ளும் உண்மையை அவர்களை அறியாமல் வெளிப்படுத்தியுள்ளதை உணர முடிகிறது. தலித்துகள் தமிழ் உணர்வு, தமிழ்ப் பண்பாடு என்ற பொதுமைக்குள் எக்காரணத்தைக் கொண்டும் நுழைந்துவிடக் கூடாது என்ற சிலர் மனப்பால் குடிப்பது தமிழர் நலனுக்கும் ஒற்றுமைக்கும் எதிரானது.

ஜல்லிக்கட்டை கண்மூடித்தனமாக எல்லோரும் ஆதரிப்பதாகவும், சிலரின் வணிக - இலாப நோக்கம் மட்டுமே இதற்குள் அடங்கி இருப்பதாகவும், நமது உழைக்கும் மக்களின் இன்னுயிர்கள் வீரம் என்ற பெயரிலும், பாரம்பரியத் தமிழ்ப் பண்பாடு என்ற பெயரிலும் பலியிடப்படத்தான் வேண்டுமா? என்றும் ஜல்லிக்கட்டு தடை ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். தமிழர் என்ற பெயரில் எதுவெல்லாம் நடக்கிறதோ, அதையெல்லாம் கண்மூடித்தனமாக எதிர்க்கும் உள்ளுணர்வு நிலைக்கு ஆளானவர்கள் தமிழகத்தில் எப்போதும் இருந்துகொண்டு தான் இருக்கிறார்கள். தங்களையும் தமிழர்கள் என்ற பொதுமைக்குள் இணைத்துக் கொள்ள விரும்பாததன் காரணமாகவே இப்படிப்பட்ட நிலைக்கு இவர்கள் ஆளாகி இருக்கிறார்கள். இவர்களைப் பொருத்தவரை தமிழ் என்ற அடையாளமே ஒவ்வாமையாக மாறிவிட்டது. இந்த ஒவ்வாமை நோயிலிருந்து இவர்கள் விடுபடுவதற்கு முயற்சிக்க வேண்டும். இதை விட்டுவிட்டு சல்லிக்கட்டில் வர்க்கத்தன்மை மட்டும் இருக்கிறது, உடைமை வர்க்கங்களின் இலாப நோக்கம் இருக்கிறது என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

இன்றைக்கு ஜல்லிக்கட்டு சிக்கலை ஊடகங்கள் பெரிதுபடுத்தியதால் தான் விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத கார்ப்பரேட் இளைஞர்களெல்லாம் ஜல்லிக்கட்டை தமிழர் பண்பாடு என்று பேசிக்கொண்டு திரிகிறார்கள் என்றும் ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் தமிழ்நாட்டில் எழுந்துள்ள புதியதொரு உணர்வலையை கொச்சைப்படுத்துகிறார்கள். அலங்காநல்லூரும், பாலமேடும் ஒட்டுமொத்த தமிழர்களின் வீரத்தை உலகிற்கு காட்டிவிடுமா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். விவசாயம் என்றால் என்ன? என்பதை அறியாத இளைஞர்கள் அலங்காநல்லூரிலும் பாலமேட்டிலும் காளையை அடக்க களத்தில் நிற்கும் தமிழ் மறவர்களின் வீரத்தை தமிழர் வீரத்தின் ஒட்டுமொத்த அடையாளமாக உணர்கிறார்கள். இவ்வீரம் தமிழர்களின் மரபு சார்ந்த வீரமாக உலகத்திற்குக் காட்டப்படுகிறது. இதையும் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் கண்ணையும் காதையும் பொத்திக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவருக்கும் ஒரு முதன்மையான பொறுப்பு இருப்பதையும் உணர வேண்டும். ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராகக் களத்தில் நின்றதைப் போலவே, தமிழகத்தின் இன்ன பிற தலையாய சிக்கல்களுக்காகவும், கூட்டொருமையோடு, இன்னும் வலிமையாக செயலாற்றவும் போராடவும் முன்வரவேண்டும். இக் கடமையை முழுமையாக நிறைவேற்றுபவர்கள் மட்டுமே தமிழர் மண்ணோடும், மக்கள் நலனோடும் தங்களை உண்மையாகவே இணைத்துக் கொண்டவர்களாக இருக்க முடியும்.

- சு.மூர்த்தி, காங்கேயம்

Pin It