நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் உ.பியில் பி.ஜே.பி மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 312 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியமைத்து இருக்கின்றது. இதன் மூலம் உ.பியைக் கைப்பற்ற வேண்டும் என்ற தனது பெரும்கனவை அது நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றது. முதலமைச்சர் வேட்பாளராக பிரபல போர்னோகிராபி நடிகரும், சாமியாருமான யோகி ஆதித்யாநாத் தேர்வுசெய்யப்பட்டு இருக்கின்றார். இதன் மூலம் நாட்டில் உள்ள பிஜேபி கட்சியைச் சேர்ந்த போர்னோகிராபி நடிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெறும் காவி உடையணிந்து விபூதி கொடுக்கும் சாமியாராக மட்டும் இல்லாமல் காலித்தனம், சண்டித்தனம் செய்யும் சாமியாராகவும், அருள்வாக்கு வாங்கவரும் பெண்களிடம் ஆன்மீக ஆராய்ச்சி செய்யும் சாமியாராகவும் இருப்பது, பிஜேபியில் சீக்கிரமாக ஆட்சி அதிகாரத்துக்கு வரும் தகுதியாக பார்க்கப்படுகின்றது. அது போன்றவர்களை ஆர்.எஸ்.எஸ்சும், பிஜேபியும் எம்.பி, எம்.எல்.ஏ, ஆளுநர், முதலமைச்சர் போன்ற பதவிகளைக் கொடுத்து அதிகார பீடத்தில் அமர்த்தி அழகு பார்க்கின்றது. மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் தொடங்கி இன்று முதலமைச்சராக அரியணை ஏறியிருக்கும் யோகி ஆதித்யநாத் வரை அப்படி வந்தவர்கள் தான்.

modi adityanath

 உ.பியில் மிக வலுவாக இருந்த பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி போன்றவை இந்தத் தேர்தலில் பெரும்பின்னடைவை சந்தித்து இருக்கின்றன. மேலும் எங்கெல்லாம் முற்போக்கு இயக்கங்கள் பலவீனமாக இருக்கின்றதோ, அங்கெல்லாம் பிஜேபி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். உ.பியில் மட்டும் அல்லாமல் கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களிலும் பி.ஜே.பி அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கின்றது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அப்புறம் வந்த தேர்தல் என்பதால் நிச்சயம் பிஜேபி மண்ணைக் கவ்வும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களின் கனவுகளை பிஜேபி பொய்யாக்கி இருக்கின்றது. மாயாவதி போன்றவர்கள் வாக்குப் பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து பிஜேபி வெற்றிபெற்றுவிட்டதாக புலம்புகின்றார்கள். ஆனால் தோல்விக்கான நியாயமான காரணத்தைப் பற்றி பேச யாருமே தயாராக இல்லை.

 பிஜேபியின் வெற்றி என்பது மற்ற கட்சிகள் பெறும் வெற்றியில் இருந்து பிரித்துப் பார்க்கப்பட வேண்டும். மற்ற கட்சிகள் தரும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் போன்றவற்றை பிஜேபியும் தருகின்றது. எனவே மக்கள் பிஜேபியை மட்டும் ஆதரிப்பதற்கு அதை மட்டுமே நாம் அளவுகோலாக கொள்ள முடியாது. அதையும் தாண்டி, அவர்கள் மக்களிடம் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டுபோய் சேர்த்திருக்கின்றார்கள். எங்கெல்லாம் முற்போக்கு இயக்கங்கள் இல்லையோ அல்லது பலகீனமாக உள்ளதோ, அதை தமக்கான வாய்ப்பாக அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். பல வரலாற்றுப் பொய்களைக் கட்டவிழ்த்து விட்டு நடுத்தர வர்க்கத்தையும், தலித்துகளையும் தன்வசப்படுத்துகின்றார்கள். இந்துமதத்தில் உள்ள சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு இஸ்லாமியர்கள் தான் காரணம், இந்தியாவில் இஸ்லாமிய படையெடுப்புக்குப் பின்னால்தான் தொழில்ரீதியாக இருந்த வர்ண அமைப்பு சாதியாக மாறியது என பல வரலாற்று மோசடி பொய்களை சாமானிய மக்கள் மத்தியில் பரப்பி அவர்களை வென்றெடுக்கின்றார்கள். அவர்கள் எப்போதுமே ஆட்சி அதிகாரத்தை அவசர அவசரமாக கைப்பற்ற நினைப்பது கிடையாது. முதலில் தங்களுக்கான தளத்தை மெல்ல மெல்ல, ஆனால் மிக வலிமையாக நிறுவுகின்றார்கள். இது எல்லாம் மிக ரகசியமாக நடைபெறும். சாதாரணமாக இவர்கள் செய்யும் விஷம வேலைகளை நம்மால் கண்டுபிடிக்க முடியாது.

 தங்களுக்குப் பெரிய அளவில் அடித்தளம் இல்லாத உ.பியில் அவர்கள் இப்படித்தான் அடித்தளத்தை வலிமையாக அமைத்தார்கள். பாபர் மசூதி இடிப்பு, முஸாஃபர் நகர் கலவரம் என முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டுக் கலவரங்களை உருவாக்கி முஸ்லிம்கள் அனைவரும் பாகிஸ்தான் கைக்கூலிகள் என்ற பிம்பத்தை அவர்கள் உ.பி.இல் படித்த இந்து நடுத்தர வர்க்கத்திடமும், படிப்பறிவில்லாத இந்து சாமானிய மக்களிடமும் ஏற்படுத்திவிட்டார்கள். உ.பியைப் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கு இந்துக்களுக்காக உழைக்கும் பிஜேபியை ஆதரிப்பது மட்டுமே ஒரே வழி என்ற சிந்தனையையும் உருவாக்கி விட்டார்கள். மாயாவதியின் ஊழல்கரம் படிந்த தலித் பகுஜன் கூட்டணி உ.பி மக்களிடம் எப்போதோ செல்வாக்கு இழந்துவிட்டது. சமாஜ்வாதி கட்சியில் அப்பன் மகன் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி உ.பியைத் தாண்டி இந்தியாவே சிரிக்கும் அளவுக்கு நடந்தது. அதுமட்டும் அல்லாமல் இவர்கள் ஆட்சியில் தான் முஸாஃபர் நகர் கலவரம் வெடித்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால் அதை உடனடியாக ஒடுக்க திராணியில்லாமல் அகிலேஷ் யாதவ் அரசங்கம் மிக மோசமாக நடந்துகொண்டது. இதனால் உ.பியில் 19 சதவீதத்திற்கு மேல் உள்ள முஸ்லிம்கள் பேசாமல் பிஜேபிக்கு ஓட்டு போட்டு, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே சிறந்தது என்ற முடிவுக்கு வர நிர்பந்திக்கப்பட்டார்கள். மேலும் பிஜேபி உ.பியில் செய்யும் அனைத்து அயோக்கியத்தனங்களையும் அம்பலப்படுத்தி அதை தட்டிக்கேட்க முற்போக்கு அமைப்புகள் அங்கு வலிமையாக இல்லை.இப்படி எல்லாவித புறச்சூழ்நிலைகளும் நல்லபடியாக வாய்க்கவே இந்த அசாத்திய வெற்றியை பிஜேபியை அங்கு அடைந்திருக்கின்றது.

 சங் பரிவார கும்பல் நாடு முழுவதும் இதே உத்தியைத்தான் கடைபிடிக்கின்றது. அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அரசியலை கடைபிடிப்பது கிடையாது. யாரை எப்படி வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நன்கு திட்டமிட்டுச் செயல்படுகின்றார்கள். நடுத்தர வர்க்கம் பிஜேபியை எதிர்க்கின்றதா அவர்கள் முன்னால் வளர்ச்சி என்ற எலும்புத்துண்டு காட்டப்படும், தலித்துகள் பிஜேபியைப் பார்ப்பன மேலாண்மையைக் கடைபிடிக்கும் கட்சி என்று உறுதியாக நினைக்கின்றார்களா அவர்களுக்கு சாதி இந்துமத்தின் ஒரு கூறு கிடையாது. அது இஸ்லாமியர்களால் இந்தியாவில் உருவாக்கப்பட்டது என்ற வரலாற்றுப் பொய்யை நம்பவைப்பார்கள். முஸ்லிம்கள் பிஜேபியை தங்களின் பரம எதிரியாகப் பார்கின்றார்களா, நிச்சயமாக ஓட்டுபோட மாட்டார்களா, அப்படி என்றால் தான் எற்கெனவே சித்தாந்த ரீதியாக தயார்படுத்தி வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியின மக்கள், ஆதிக்க சாதி நபர்களை அவர்களுக்கு எதிராக தூண்டுவிட்டு, கலவரம் செய்யவைத்து அவர்களை வழிக்கு கொண்டு வருவார்கள். இதைத்தான் பிஜேபி எப்போதுமே எல்லா மாநிலங்களிலும் செய்துவருகின்றது.

 தமிழ்நாடு, கேரளா போன்ற முற்போக்கு சித்தாந்தத்தின் தாக்கம் அதிகமாக உள்ள மாநிலங்களில் அவர்களின் இந்த முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்படுவதால் அவர்களால் இந்த மாநிலங்களில் வலுவாகக் காலுன்ற முடியவில்லை. எனவே பிஜேபி முன்னெடுக்கும் அரசியலை மக்கள் முன் அம்பலப்படுத்தி, அவர்களைத் தனிமைப்படுத்த முற்போக்கு இயக்கங்கள் வலிமையாக செயலாற்ற வேண்டும். அவர்கள் முன்வைக்கும் வரலாற்றுப் புரட்டுகளை உடனுக்குடன் அம்பலப்படுத்தி அவர்களை மக்கள் முன் அசிங்கப்பட செய்யவேண்டும். அந்தப் பணியை இங்கிருக்கும் பெரியாரிய, மார்க்சிய அமைப்புகள் தொடர்ச்சியாக வீச்சாக செய்வதால் தான் நம்மால் இன்றும் தமிழ்நாட்டை காப்பாற்றி வைத்திருக்க முடிகின்றது. அந்தப் பணியை செய்யத் தவறிய மாநிலங்கள் தான் தற்போது பார்ப்பன பயங்கரவாதத்தின் பிடியில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக போன்ற பிழைப்புவாதக் கட்சிகள் தமிழ்நாடு நாசமாய் போனால் நமக்கென்ன, நமக்குப் பதவியும், அதுதரும் வளமும் தான் முக்கியம் என நினைத்து பிஜேபியுடன் கூட்டணி வைத்து கொட்டம் அடித்ததால்தான் இன்று சங்பரிவார கும்பல் இங்கு குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளது. சு.சாமி, எச்சிகலை ராஜா போன்ற பார்ப்பன விஷநாக்குப் பேர்வழிகள் தமிழர்களைத் தரம் தாழ்ந்து பேசவும் வைத்திருக்கின்றது.

 எனவே தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு இயக்கங்கள் பார்ப்பன எதிர்ப்பு என்பதை வெறும் பத்திரிக்கைகள், இணையதளங்களில் மட்டும் செய்யாமல் தங்களுக்கு இருக்கும் அமைப்பு பலத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் எடுத்துச் செல்ல வேண்டும். சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பார்ப்பன சடங்குகளுக்கு எதிரான எதிர்ப்பு, பெண் அடிமைத்தனத்திற்கு எதிரான எதிர்ப்பு என அனைத்தையும் தழுவியதாக அது இருக்க வேண்டும். இதில் எது குறைந்தாலும் அது நிச்சயமாக பார்ப்பனிய எதிர்ப்பாக இருக்காது. சில முற்போக்கு வேடமிடும் அமைப்புகள் தங்களுடைய பிழைப்புவாதத்திற்கு ஏற்றவாறு இதில் ஏதாவது ஒன்றை மட்டுமே செய்வது போல நாடகமாடும். சாதி ஒழிப்பைப் பற்றி பேசாமல் தீண்டாமை ஒழிப்பு பற்றி பேசுவது, பார்ப்பனியத்தை எதிர்க்கின்றேன் என்று சொல்லிவிட்டுப் பார்ப்பனியத்தின் அடிநாதமான அதன் சடங்குகளை எதிர்க்காமல் இருப்பது, இல்லை அதனுடன் சமரசம் செய்துகொள்வது என அவை தனது காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கின்றன. எனவே சாதி, மதம், மூடநம்பிக்கைகள், பார்ப்பன சடங்குகள், பெண்ணடிமைத்தனம் போன்றவற்றுக்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு அமைப்புகள் தீவிரமாக செயலாற்ற வேண்டும். இல்லை என்றால் நாளை தமிழ்நாட்டையும் பிஜேபியின் போர்னோகிராபி சாமியார்களிடம் நாம் இழந்துவிடுவோம்.

- செ.கார்கி

Pin It