மக்கள் கவிஞர் இன்குலாப்பின் மறைவு நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஒப்பற்ற கவிஞர் அவர். சிறந்த ஆசிரியரும், சிரந்த எழுத்தாளரும், நாடக ஆசிரியரும், ஆக மிகச்சிறந்த மனிதாபிமானியும் கூட. ஓயாது போராடிய களப்போராளி. அவர் கம்யூனிஸ்டா? இல்லை. தீவிர கம்யூனிஸ்ட். இளம் வயதில் தீவிர திமுக ஆதரவாளராக இருந்தவர். மாணவப் பருவத்திலிருந்தே தான் கம்யூனிஸ்ட்டாக இருந்திருந்தால் மிக்க நன்றாக இருந்திருக்குமே என்று வருத்தமும் அடைந்திருக்கிறார். மதுரை தியாகராயர் கல்லூரிப் பருவத்தில் நிகழ்ந்த மொழிப்போராட்டமும் அதில் அவருடைய அளப்பரிய பங்கேற்பும் அவருடைய போராட்ட வாழ்க்கையை அன்றே தீர்மானித்த காரணிகளாக விளங்கின.

ingulab 31965ம் ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் கனன்று எரிந்த நேரம் அது. மதுரை கல்லூரியில் இன்குலாப்பும், அவருடைய தோழர்களும் கருப்புத் தோரணங்கள் கட்டிக் கொண்டிருந்த நேரத்தில் காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதலைத் தொடங்கியது. தனது சக நண்பர்களின் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த இன்குலாப் முயன்றார். காவல்துறை இப்போது இன்குலாப் மீது பாய்ந்தது. தான் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூட இன்குலாப் பதிவு செய்கிறார். அச்சம் தவிர் என்னும் கட்டுரையில் அவர் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். உடல் வலிக்காகத்தான் நாம் அச்சம் கொள்கிறோமென்றால் இதைவிட பலமான வலிகளை எல்லாம் நாம் அச்சமின்றித் தாங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய சுயத்தைத் தாக்கும் வலிதான் மிகவும் வலுவானதாக இருக்கும். அது நம்முடைய ஆத்மாவை நேரடியாகத் தாக்கும். காவல்துறை தாக்கும்போது அம்மாவை இழுக்காமல் திட்டமாட்டான். அப்போது நம்முடைய சுயம் அடையக்கூடிய வலிக்கு அளவே இல்லை என்று கூறிவிட்டு இன்குலாப் இப்படி எழுதுகிறார்: " என் இருப்பு பற்றிய அகந்தை இருக்கு மட்டுக்கும் என் உடல் வலிக்கு அஞ்சத்தான் செய்வேன். இந்த உடல் நான் வாழும் சமூகத்துக்கும் உரியது என்று உண்மையாகவே நான் கருதுகிறபோது இந்த அச்சம் அகன்று விடுகிறது. தனிப்பட்ட சுகத்துக்காக அல்லாமல் பொதுத் தொண்டுக்குரிய சாதனமாக எப்பொழுது என் உடலைக் கருதுகிறேனோ அப்பொழுது பயம் தொலைந்து போகிறது. இவற்றை உணராத மட்டுக்கும் அச்சம் இருக்கும். அச்சம் இருக்கும் மட்டுக்கும் நியாயங்களைப் பலாத்காரத்தில் அடக்கிவிட முடியும் என்று ஆதிக்கச் சக்திகளும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும்".

அச்சத்தின் வேரினை அறிந்ததினால்தான் அவரால் அச்சமின்றி நக்சல்பாரி இயக்கத்தில் உலவ முடிந்திருக்கிறது. அவர் பிறந்த ஊர் கீழக்கரை. அவருக்கும் ஆறு தலைமுறை முந்தி ஒரு மரைக்காயரும், ஒரு இஸ்லாமிய நாவிதப் பெண்ணும் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களின் சந்ததி வழி வந்தவர்தான் இன்குலாப். அத்திருமணத்தின் விளைவாக நாவிதக்குடியான பெண்வீட்டார் மீது மட்டுமல்ல, அந்த சாதி மக்களின்மீது மரைக்காயர் சாதியினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல்களை நினைவுகூரும் இன்குலாப், இஸ்லாத்திற்குள் இருக்கும் சாதிய ஒடுக்குமுறைக் கூறுகளை அம்பலப்படுத்துகிறார். கீழக்கரைச் செல்வந்தர்களின் வருமானம் எப்படி வருகிறது என்பதில் தொடங்கி அச்சமுதாயத்தின் பணக்காரர்கள் நிகழ்த்தும் ஒவ்வொரு செயலையும் அவர் கேள்விக்கு உட்படுத்துகிறார். அவருடைய மாணவப் பருவத்து அனுபவங்களை அவர் காட்சிப்படுத்துகிறார். அதில் அவருடைய வேதனையின் விசும்பல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

வர்ணாசிரமத்தில் தோய்ந்து கிடக்கும் இந்து மதத்தின் சாதியப் படிநிலைக்கு பயந்து, அதன் மீது வெறுப்புகொண்டு பல்லாயிரக்கணக்கான இந்து தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாம் நோக்கியும், கிறித்துவம் நோக்கியும் மாறுதலை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் இக்காலத்தில் இன்குலாப்பின் எழுத்துகள் மதவாதிகளை கோபம் கொள்ளச் செய்கிறது. இன்குலாப் மிரட்டப்படுகிறார்.

ஷாபானுவை ஆதரித்ததன் மூலம் தான் யாரின் அரசியலைப் பேசுகிறேன் என்பதைத் தெளிவுப்படுத்தினார். "உன்னைப் பர்தாவில் புதைக்கும் கைகளை எதிர்த்து.... உன் கல்விக்கண்ணை மூடும் முல்லாக்களை எதிர்த்து.... உன் உழைப்பைச் சுரண்டும் ஆதிக்கச் சக்திகளை எதிர்த்து.... உன்னை ஒடுக்குபவர் எவராய் இருந்தாலும், அவருடன் உனக்குள்ள உறவுக்கு என்னதான் 'புனிதம்' கற்பிக்கப்பட்டாலும் அனைத்தையும் உடைத்தெறி" என்று அவர் இஸ்லாமியப் பெண்களை நோக்கி அறைகூவல் விடுக்கிறார்.

மற்ற தமிழ்நாட்டுக் கவிகளுக்கு இல்லாத பெருமை இன்குலாப்புக்கு உண்டு. கலகம் செய்யும் கவி அவர். நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னரான தமிழக சூழலில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் - விடுதலை குழுவில் இணைந்து பணியாற்றினாலும் ஏனைய குழுக்களோடும் நட்பு பாராட்டியவர், அவர்களுடைய மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கப் போராடியவர். அதனால்தான் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் குழுவின் தோழரான எஸ்.வி.ஆருடன் 35 ஆண்டுகால நட்பை அவரால் தொடர முடிந்தது. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் தீவிர கம்யூனிஸ்ட் குழுக்களின் வீச்சான செயல்பாடுகளுக்கு இன்குலாப்பின் காத்திரமான எழுச்சிக் கவிதைகள் தேவைப்பட்டன. அவருடைய வாழ்வின் பிற்பகுதியில் அவருக்கு ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டாலும் பெரும்பாலான விருதுகள் அவரை நீர்த்துப் போகச் செய்யவே வழங்கப்பட்டவை போல இருந்தது. சிலர் தங்களது தகுதியை உயர்த்திக் கொள்வதற்காக அவருக்கு விருதுகளை வழங்கினர். ஈழப்போராட்டம் உச்சக்கட்டத்தையும், ஈழத்தமிழ் மக்கள் இனப்படுகொலையின் விளிம்பிலும் இருந்த தருவாயில் தமிழ்நாடு அரசின் கையறுநிலையைக் கண்டித்து தமிழ்நாடு அரசு தனக்கு அளித்திருந்த கலைமாமணி விருதை அரசிடம் திருப்பி அளித்து தன்னுடைய எதிர்ப்பை அடையாளப்பூர்வமாக அவர் பதிவு செய்தார். அவர் விருதை திருப்பி அளிக்கவில்லை என்றால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும். தங்களுக்கு விருதுகள் கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கும் தமிழ் எழுத்துச் சூழலுக்கு மத்தியில் "அவ்வப்போது நடக்கும் என்னுடைய காவல்துறை விசாரிப்புகள்தான் அரசு எனக்குத் தரும் விருதுகள்" என்று மகளுக்கு மொழிவது போல ஒரு கவிதையை எழுதியிருப்பார்.

தமிழ்ச் சமுதாயத்திற்கு இன்குலாப்பின் பங்களிப்பாக எதைக் கொள்ள முடியும்? 1965ல் இந்திக்கு எதிராக போர் தொடுத்த மாணவ சமுதாயத்தின் தலைவர்களுள் ஒருவராக இருந்து போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று காவல்துறையின் கடுமையான தாக்குதலுக்கு மத்தியிலும் தமிழைக் காப்பாற்றிக் கொடுத்த தகைமையையா? தான் பிறந்த இஸ்லாம் சமுதாயத்தின் சாதியப் பாகுபாட்டை வன்மையாகக் கண்டனம் செய்து, எழுதி, அச்சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தினரால் கடுமையாக மிரட்டப்பட்ட பின்னரும் தான் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமல் போராடிய வீரத்தையா? 35 ஆண்டுகளுக்கும் மேலாக புதுக்கல்லூரியில் ஆசிரியப் பணியில் இருந்து ஆற்றல் மிக்க இளைஞர்களை உருவாக்கித் தந்த ஆசிரியப் பணியையா? கிட்டத்தட்ட அறுபது வயதில் முழுவதும் மலர்ந்து பரிணமித்த அவருடைய அற்புத நாடகாசிரியர் என்னும் படைப்புத் திறமையையா? அவருடைய வீரம் கொண்ட கவிதைகளையா? நக்சல்பாரி இயக்கத்தில் அவருடைய பணியையா? எதை? இவை எல்லாவற்றையும்தான்.

இன்குலாப் ஒரு சிறந்த திராவிட இயக்க சிந்தனையாளர்தான். சந்தேகமில்லை. ஆனால் கீழவெண்மணிக்குப் பிறகு திராவிட இயக்கத்தின் பெயரால் அதிகாரத்திற்கு வந்த திமுக வை விட்டு வெளியேறி தீவிர கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக மாறியவர். அவர் ஒரு தீவிர கம்யூனிஸ்ட்காரர். ஆனால் வறட்டு தத்துவவாதி கிடையாது. பெரும்பாலான கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களிடம் காணக் கிடைக்காத தனித்துவமான மோகனப் புன்னகையை இன்குலாப்பிடம் மட்டுமே நாம் காணமுடியும். தமிழின் மீது பக்தி கொண்டவர். தமிழ்த்தேசியவாதி. ஆனால் தமிழின வெறியர் அல்ல. "இதே இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினராகவும், சிங்களர் சிறுபான்மையினராகவும் இருந்து சிங்கள மக்கள் ஒடுக்கப்படுவார்களானால் நான் சிங்களவர்களின் பக்கத்தில்தான் நிற்பேன்" என்று முழங்கியவர். இப்படியாக இன்குலாப்பை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளமுடியும். அதுதான் இன்குலாப்.

இன்குலாப்பின் போராட்ட குணம் அவருடைய தந்தையிடமிருந்து வரிக்கப்பெற்றது. அவருடைய தந்தையின் பெயர் சீனிமுகமது வைத்தியர். வெறும் சித்த வைத்தியத்தோடு அவர் நின்றுகொள்ளவில்லை. ஊரில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக நடந்த இயக்கத்தில் அவர் முக்கியப்பங்கு வகித்தார். மதவெறி அவர் சிந்தனையில் நிழலாடியதே இல்லை.அவர் தனது இறுதிக்காலத்தில் கீழக்கரையை விட்டு நீங்கி திருஉத்திர கோசமங்கையில் மருத்துவமனையைத் தொடங்கி வாழ்ந்தவர். மாணிக்கவாசகர் பாடிய அவ்வூர்க்கோயிலில் சித்தர்களைப் பற்றி சொற்பொழிவும் செய்துள்ளார். அவர் இறந்தபோது உத்திரகோசமங்கை கிராமத்தினர் கதவடைப்பு செய்து அவருக்கு மரியாதை செய்தனர்.

ஒருமுறை பேராசிரியர் ந. சஞ்சீவி அவர்கள் இன்குலாப்பிடம் இருக்கும் அதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்ட மனநிலையைக் குறித்துக் கேட்கும்போது இப்படிச் சொன்னாராம்: "உங்கள் எதிர்ப்பு உணர்வை உங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் பெற்றுக் கொண்டுள்ளீர்கள். அவர் ஒரு சித்தர்....அதாவது எதிர்ப்புக்குரல் கொடுத்தவர். அந்தச் சித்தர் மரபின் ஒரு தளிர்தான் நீங்களும்…". ஒருகணம் இன்குலாப் திகைத்து விட்டாராம். அத்தகைய ஒரு புரிதல் அப்போதுதான் இன்குலாப்புக்கு வந்தது. சாதியும், சமயமும்,வேதமும், விதியும் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட புனிதமானவை என்ற நிலைமை இருந்த காலத்தில் சித்தர்கள் கேள்வி கேட்டார்கள். அனைத்தையும் கேள்வி கேட்டார்கள். இருந்த சமூக அமைப்புக்கு எதிராக இவர்கள் செய்த சிந்தனைக் கலகங்களைப் பாடலாக்கினார்கள். அப்பாடல்கள் மக்கள் மொழியில் அமைந்திருந்தன. அவர்கள் பாடிய சமுதாயப் பாடல்கள் ஏடுகளில் மட்டுமல்லாது மக்கள் இதயங்களிலும் இடம்பெற்றன. இன்குலாப்பின் தந்தை மட்டும் சித்தர் இல்லை. இன்குலாப்பும் சித்தர்தான் என்னும் முடிவுக்கே நாம் வர வேண்டியிருக்கிறது.

......இன்குலாப்பின் கடைசி சில ஆண்டுகளில் அவருடன் பல சந்திப்புகளை நான் நடத்தினேன். முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்புவிழா தஞ்சையில் நடைபெற்றபோது ஐயா வீ.அரசு அவர்களுடன் தோழர் இன்குலாப் அவர்களும் ஒரே அறையில் தங்கி இருந்தபோது அவர்களைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அந்த இரண்டு நாட்களும் நான் அவர்களுடனே இருந்தேன். சாப்பிட்ட பிறகு ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவை திறந்து நிறைய மாத்திரைகள் எடுப்பார். என்னுடைய சாப்பாட்டில் பாதி இதுதான் என்பார். முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற கவியரங்கத்திற்குத் தலைமை வகித்தார். அவை மிக அற்புதமான நாட்கள். பின்னர் நான் சென்னை செல்லும்போது ஊரப்பாக்கத்திற்குச் சென்றிருக்கிறேன். பாசமுடன் பேசிக்கொண்டிருப்பார். தமிழ்த்தேசியம் முதல் ஈழம் வரை பேசிக்கொண்டிருப்பார். அப்படி ஒரு சந்திப்பின்போதுதான் குமுதம் தீராநதிக்காக நானும் நண்பர் பாலுவும் அவரை பேட்டி எடுத்தோம். தீராத சர்க்கரை வியாதியினால் ஒரு காலை அவர் இழந்தபோது அவரைச் சந்திக்க அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். என்னை அவர் தேற்றினார். "கால் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இல்லாத காலின் விரல்களில் வலி கடுமையாக இருந்துகொண்டே இருக்கிறது. அதை நான் உணர்கிறேன்" என்று அவர் சொன்னபோது நான் உடைந்தேன்.

இன்குலாப் கடைசியாக எழுதிய கவிதை "கண்ணாமூச்சு" என்னும் தலைப்பில் உகரம் இதழில் வெளிவந்துள்ளது. உயிர்ப்பின்போதே காலத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது பற்றி குறிப்பிடும் இன்குலாப், காலத்தோடு தான் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து வருவது குறித்து தன் கவிதையில் எழுதி இருப்பதை வாசிக்கும்போது நமக்குள் வியப்பு கலந்த உணர்ச்சிப் பிரவாகம் வெள்ளமெனப் பாய்கிறது.

இதோ அந்தக் கவிதை:

"உயிர்ப்பின் போதே என்னுடன்
ஒப்பந்தம் செய்தது காலம்
தான் விரும்பும்போது தன்னோடு
கண்ணாமூச்சு ஆட வேண்டும்

கருவறைச் சுவரில்
கைச்சாத்திட்டோம்

தவழும்போதே ஆட்டம் தொடங்கியது.
நான்தான் ஜெயித்தேன்.

பிள்ளைப் பருவமும் இப்படியே
தொடர்ந்தது.
இளமையில் ஒப்பந்தம்
குறித்து
மறந்தே போனோம்.

என் கிளைகளில் பறவைகள்
பேசின.
கருங்குயிலும் வரிக்குயிலும்
இடையறாது கூவின.
செண்பகக் குயில்
கூடுகட்டிக்
குஞ்சும் பொரித்தது.

வெளியும் ஒளியும்
எமக்குச் சாட்சியமாயின.

காலம்
என் பற்கள் சிலவற்றைப்
பிடுங்கியது.
ஒரு கண்ணில் ஒளியைத்
திரையிட்டது.
மூக்குக்கு மணத்தை
மறைத்தது.
இதயத்தைக் கீறிப்பார்த்தது
ஒரு காலைப் பறித்து
ஊனமாக்கியது.
என் இளமை உதிர்ந்து
விட்டது

காலம் இன்னும் வேர்களைக்
குலுக்கி
விளையாடக் கூப்பிடுகிறது

இத்தனைக் காயங்களுக்குப்
பிறகும்
என் இருப்பு
என் திறமையாலா?
காலத்தின் கருணையாலா?

என் பற்களைப் பிடுங்கிச்
செல்லலாம்
என் சொற்கள் சிரிக்கும்

என் கண்ணொளியை
மறைக்கலாம்
என் சிந்தனை சுடரும்

என் இதயத்தை நிறுத்தலாம்
என் எழுத்துத் துடிக்கும்

என் ஒரு காலை வாங்கலாம்
என் சுவடுகள் தொடரும்

இறுதியாக ஆடிப் பார்க்கலாம்!"

(நன்றி: அம்ருதா ஜனவரி 2017 இதழ்)

- செ.சண்முகசுந்தரம்

Pin It