மருத்துவர் ஜீவாவுடன் எனக்கு அறிமுகம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அவரது தந்தை எஸ்.பி. வெங்கடாசலம் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்ததன் மூலம் ஏற்பட்டது.
அதன்பிறகு மருத்துவர் ஜீவா பவானி ஆற்றைப் பாதுகாத்திட பள்ளிக் குழந்தைகளுடன் எங்களது ஊர் பெரியபுலியூர் வழியாக மிதிவண்டி விழிப்புணர்வுப் பயணம் சென்ற போது எங்களது பகுதியில் பயணக் குழுவை நிறுத்தி குழந்தைகளுக்கு குடிக்க மோரும், தண்ணீரும் கொடுத்த போது நெருக்கம் அதிகரித்தது.
அதன்பிறகு அவர் தொடர்ந்து செய்யும் பணிகளில் நாங்களும் பழங்குடியின மக்களுக்காக நாங்கள் செய்யும் பணியில் மருத்துவரும் ஈடுபடுத்திக் கொள்ளும் அரிய வாய்ப்பு ஏற்பட்டது.
பவானி நதி நீரைக் காக்க அவர் போராடிய போராட்டங்களிலும் எங்களது பங்களிப்பும் சிறிதளவில் இருந்ததை இப்போது நினைத்தாலும் அது பெருமையளிக்கக் கூடியதாகவே உள்ளது.
அவரது தொடர் போராட்டம் காரணமாக பவானி ஆற்றின் மாசுக்கு பெரிதும் காரணமாக இருந்த விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டது.
அதன்பிறகு பவானி சுத்தமான மாசில்லாத ஆறாக ஓடி அனைவருக்கும் நதியின் முழுப் பலனை வழங்கி வருவதைக் காணும் போது மருத்துவருடன் இணைந்து போராட்டத்தின் பங்களிப்பை நினைத்து மகிழ்வாகவே இருக்கிறது.
அதற்குப் பிறகு மலைவாழ் மக்களுக்காக மலைக் கிராமங்களுக்கு மருத்துவர்களை அழைத்து வந்து அவர்களுக்காக மருத்துவ முகாம்களைத் தொடங்கி வைத்த முதல் முனைப்பு மருத்துவர் ஜீவாவையே சேரும்.
மலைக்கிராமங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் மருத்துவராக முக்கியமாக தன்னை மனிதராக அடையாளப் படுத்திக் கொண்டு பழங்குடியினர் மீது உண்மையான கரிசனத்தைக் காட்டும் மருத்துவராக தனது சொரூபத்தை வெளிப்படுத்தியவர்.
முகாமில் மலைக்கிராம மக்களுக்கு அதிக அளவில் ரத்தச்சோகை இருப்பது கண்டறியப்பட்டதற்குப் பிறகு தொடர்ந்து அம்மக்களின் ரத்த விருத்திக்கான மருந்து மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பிக் கொண்டே இருந்தார்.
எங்களது முயற்சியின் பேரில் பழங்குடியின மக்களின் குழந்தைகள் தங்கிப் படிப்பதற்கான வசிப்பிடத்தை அமைக்க முற்பட்ட போது அதற்கான பெரும் உதவியை தானாக முன்வந்து வழங்கி அத்திட்டம் வெற்றியடைந்திட காரணமாக இருந்தவர் டாக்டர்.
தொடக்கக் காலத்தில் பழங்குடி மக்களுக்கான மருத்துவ முகாமென்றால் மருத்துவர் ஜீவா இல்லாமல் அந்த முகாம் நடந்ததில்லை.
அவர் ஆரம்பித்து வைத்த மருத்துவ முகாம்கள்தான் இன்றளவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன எனலாம்.
அப்படி தொடர்ந்து மலைக்கிராம மக்கள் நலனின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர், அதற்கு அவர் கூறிய காரணம்தான் எங்களையும் அதிசயத்தில் ஆழ்த்தியது.
மலைக்கிராம மக்கள் பூர்வக்குடி மக்கள், தொன்மையும், கலாச்சாரத்தையும் கொண்ட மக்கள் அவர்கள் நலமாக இருந்தால்தான் காடு நன்றாக இருக்கும், காடு நன்றாக இருந்தால்தான் காட்டை நம்பி வாழும் வனவிலங்குகள் நன்றாக இருக்குமென்று கூறினார்.
அவரது அக்கறையும், ஆர்வமும் எங்களுக்கு மேலும் வேலைகளைச் செய்வதற்கு உத்வேகமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக மலைக்கிராம மக்களின் குழந்தைகளின் கல்வியில் அதிக அக்கறை கொண்டவர்.
அக்குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்திட வேண்டுமென்கிற கனவு அவருக்கு அளவுக்கதிகமாகவே இருந்தது.
வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மலைக்கிராம மக்களுக்காக நடத்தப்பட்ட சதாசிவா கமிஷன் விசாரணையின் போது தொடர்ந்து தன்னளவில் எங்களது சங்கத்திற்கு உதவிக் கொண்டே இருந்தார்.
கோபிச்செட்டிப்பாளையம், மாதேஸ்வரன் மலை மற்றும் பெங்களூரில் நடைபெற்ற சதாசிவா கமிஷன் விசாரணைகளுக்கு நேரில் வந்தோ அல்லது மானசீகமாகவோ எதையாவது செய்து கொண்டே இருந்தார்.
யார் மூலமாகவோ பொருள் உதவியோ, நிதி உதவியோ மருத்துவர் ஜீவா சார்பில் எங்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருந்ததை எங்களால் இன்றும் மறக்க முடியவில்லை.
மாதேஸ்வரன் மலையில் நடைபெற்ற விசாரணையின் கடைசி நாளில் நேரில் வந்த அவர், என்ன நடக்கிறது?
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? என்று விசாரித்து விசாரணை முடியும் வரை எங்களுடனிருந்து எங்களில் சிலரை அவரது வாகனத்தில் பொறியாளர் மனோகருடன் பவானிக்கு அழைத்து வந்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
அவரது தொடர்பு மூலமாகவே தொண்டு நிறுவனத்தினர் பலரின் அறிமுகமும், தொடர்பும் கிடைத்து எங்களது வேலைகளுக்கு அது பெரும் உதவியாக அமைந்தது. இந்தத் தொடர்பால் நாங்கள் அடைந்த பயனும், பலனும் மிகவும் அதிகமே.
இது அத்தனையும் அவராலேயே சாத்தியப்பட்டது என்பதை அவர் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. பணக்காரனிடம் இருக்கும் பணம் யார் யாருக்கோ போகுது நல்ல வேலைக்கு வந்தா அவருக்கு ரொம்ப நல்லது. இத பெரிசா பேசாதிங்க' என்று எங்களைத் திட்டுவார்.
அவரிடம் நாங்கள் வாங்கிக் கட்டிக் கொண்ட வசவுகளும், செல்லத் திட்டுக்களுமே எங்களுக்கு பலராலும் ஏற்பட்ட அவமானத்தையும், அவமரியாதையும் தாண்டி வெற்றி பெறுவதற்கு பலத்தை வழங்கின.
அவர் செய்ததையோ அல்லது செய்வதற்கு காரணமாகவோ இருந்ததையோ எப்போதும் சொல்லிக் காட்டியதில்லை, அதைப் பெரிதாகவும் கருதியதில்லை. எங்களிடம் அவர் கடைசிவரை எடுத்துக் கொண்ட உரிமை எங்களுக்கு மிகவும் விருப்பமானதாகவே இருந்தது.
எங்களது சங்கத்தின் சாதாரண ஆட்களைக் கூட மிகவும் பிரியத்துடனும், அன்புடனும் அணுகும் விதம் தொடக்கத்தில் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது.
பின்னர் மருத்துவரின் பிரியமும், அன்பும் மிகவும் நேர்த்தியானது என்பதை உணர்ந்து கொண்டு அதனை விரும்பி ஏற்றுக் கொள்பவர்களாகவே மாறி நின்றனர்.
அந்த மாற்றத்திற்குப் பிறகு மருத்துவரைப் பார்த்திடவும், அவரது வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பவராகவே அவர்கள் காத்திருப்பதைக் கண்டு அதிசயித்திருக்கிறோம்.
மலைக்கிராமங்களுக்கு மருத்துவர்களை மட்டுமல்லாது எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என பலரையும் கூட்டி வந்து மலைக்கிராமங்களை புத்தம் புதிதாக அறிமுகப் படுத்தினார் மருத்துவர் ஜீவா.
அதன் மூலம் மலைக்கிராம மக்களின் பிரச்னைகளை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றதும் மருத்துவர் ஜீவாதான்.
தினமணியில் ஈரோடு மாவட்டச் செய்தியாளராக இருந்த எம். பாண்டியராஜனை மருத்துவ முகாம்களுக்குக் கூட்டி வந்து அவரது அவதானிப்பின் மூலம் பழங்குடியின மக்களின் பார்வையிழப்பு, ரத்தச் சோகை அதிகரிப்பு போன்றவை தினமணியில் செய்தியாக வந்ததன் மூலம் தமிழகம் முழுவதும் மலைக்கிராமங்களின் மீதான கூடுதல் முக்கியத்துவமும், மலைக்கிராம மக்களின் வாழ்க்கை மீது பார்வையும், கவனமும் அதிகரித்தது.
சுற்றுச்சூழல் மீதான அக்கறையை எங்களுக்கு அறிமுகப் படுத்தியதோடு நதிநீர்ப் பாதுகாப்பு, வாசிப்பு, பயண அனுபவம், இலக்கியக் கூட்டம், மத நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை, காந்தியம், மார்க்சியம், சோசலிஸம், எளிமை வாழ்வு என அனைத்தையும் போதித்த வாத்தியார் மருத்துவர் ஜீவாதான்.
எங்களுக்கு அவர் வாத்தியார் மட்டுமல்ல சகோதரனாகவும் இருந்தவர். எங்கள் மீது உரிமை கொண்டாடுவதில் அவருக்கு நிகர் அவர்தான். திடீரென்று ஒரு நாள் அவரிடமிருந்து அழைப்பு வரும்.
விசாரிப்புடன் ஆரம்பித்து அந்த வேலையைச் செய்யச் சொன்னேன் என்னாச்சு, அவர் பேசினாரா, அவர் வந்தாரா என 1 மணி நேரம் அவர் பேச்சு தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
அவரது பேச்சுக்குப் பிறகு செய்ய வேண்டிய வேலை எங்களுக்கு நிறைய இருக்கு என்பதை உணர்த்தும் விதமான தூண்டுதலாகவே அந்த உரையாடல் நீண்ட நாளுக்கு அமைந்திருக்கும்.
எங்களிடம் அவர் காட்டிய அன்புக்கு அவரது புன்னகையே சாட்சியாக அமைந்திருந்தது.
எங்களது புன்னகை மன்னன் மருத்துவர் ஜீவா. பல சமயங்களில் அவரை அதிகம் பயன்படுத்திக் கொள்வதாக குற்ற உணர்ச்சி ஏற்பட்டு இந்த முறை அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று முடிவெடுத்து அவரிடம் அந்த வேலை குறித்து எதுவும் சொல்ல மாட்டோம்.
ஆனால் நாங்கள் அவரைத் தவிர்ப்பதை அவர் எப்படி தெரிந்து கொள்கிறார் என்றே புரியாமல் அவரே எங்களை அழைப்பார். கடுமையான திட்டலுடன் எங்களை மருத்துவமனைக்கு வரச்சொல்லியோ அல்லது பொறியாளர் மனோகரனுடன் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தோ உதவிச் செல்வார்.
இந்த ஆச்சர்யங்கள்தான் எங்களுக்கு இதுவரை புரியாத அற்புதங்களாகவே இருந்து வருகிறது. பொறியாளர் மனோகரன் இறப்புக்குப் பிறகு அவரது பயணம் வெகுவாகக் குறைந்தது.
அவரது பாதியாகவே திகழ்ந்த பொறியாளர் மனோகரன் எங்களிடமும் நெருக்கமானவராகவே கடைசி வரை இருந்தார். இந்தக் கடைசி 8 மாதம் எங்களுடனான தொடர்பு வெகுவாகக் குறைந்திருந்தது.
எப்போதாவது அவர் அழைத்தால்தான் அவரிடம் பேச முடியும், நாங்களும் அவர் முழுமையாக குணமடைந்து வர வேண்டுமென்பதற்காக அவரைத் தொந்தரவு செய்திடவில்லை. ஆனால் ஒரு ஓய்வுப் பயணம் சட்டென நிறைவடைந்திருக்கிறது.
மருத்துவர் ஜீவா இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டதற்குப் பிறகு அதனை நம்ப முடியாமல் பலரிடமும் அவரது மரணத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியதாகவே இருந்தது.
மருத்துவர் ஜீவாவின் மரணம் ஒரு நெருங்கிய உறவினரின், உற்ற நண்பரின், ஒன்றுவிட்ட சகோதரனின் மரணமாகவே இருந்தது.
அவரது அருகாமையால் பாதிக்கப்பட்ட, அவரது இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களின் பட்டியல் அதிகமாகவே இருக்கிறது.
என்ன செய்வது, ஒருவரின் இழப்புதான் அவரது முக்கியத்துவத்தை உணர்த்தக் கூடிய தருணமாக இருக்கிறது.
மருத்துவர் ஜீவா எங்களின் வாத்தியாராக, சகோதரராக, நண்பராக, தோழராக, சில சமயங்களில் தந்தையாகவும் இருந்து கிருஷ்ணனைப் போல, கர்ணனைப் போல எங்களுக்குப் பாதுகாவலனாக, ஆத்மார்த்தமானவராக இருந்தவர்.
நாள்தோறும் அவரது பேராசையைக் கேட்டு ரசித்தவர் நாங்கள்... அதில் சிலவற்றையாவது நிறைவேற்றி அவருக்குச் சமர்ப்பிப்போம்.
போய்ட்டு வாங்க டாக்டர்! ரெட் சல்யூட்...
- வி.பி.குணசேகரன்